குருநாதர் கருத்துக்கள் #75

கேள்வி: தெய்வங்களை பெருமளவில் நம்பிட காரியங்கள் தடையாகி வீணாக சங்கடம் தருவதேன்?

தெய்வத்தின் கருணை பெரியதாம். சமயங்களில் நாம் ஏற்படுத்திக் கொண்ட ஏற்பாடுகள் நமக்கு தகாததாகவும் சங்கடப் படுத்துவதாகவும் பிற்காலத்தில் துன்பத்தை விளைவிக்க கூடியதாகவும் இருக்க இதனை தவிர்த்திடவே இறைவன் கருணையால் தற்காலிக வருத்தம் தந்தும் பிற்காலம் சிறப்பாக அமைக்கவும் வழி வகுக்கின்றான். மாறாக சிலருக்கு பல வகையில் வாய்ப்புகள் அளித்த போதிலும் அதனை சீராக உபயோகிக்காமல் தாம் நினைப்பதே நடத்தல் வேண்டும் என்கின்ற மனப்பான்மை நிலைத்திட பெரும் வருத்தத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய நிலையில் எது நடந்த போதிலும் அது இறையருள் என்று எடுத்துக் கொண்டால் சிறப்பாகவே அனைத்தும் நடைபெறும்.

உயிரோட்டமுள்ள நந்தி

சிவசைலம் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில் திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது.

ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன் தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று அங்கிருந்து செல்ல எழ முயற்சித்தது. மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியது. இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருக்கிறது. உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது பார்க்க முடியும். இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும் அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும் அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன.

குருநாதர் கருத்துக்கள் #74

கேள்வி: ஆன்மீக பாதையில் செல்ல குருவிடம் சரணாகதி ஆன பின்பும் ஏன் வெறுமை நிலை ஏற்படுகிறது?

பொதுவாக சரணாகதி நிலையும் குரு அருளும் குருவின் மீது விடா சிந்தனையும் நிலைத்திட அங்கு வெறுமைக்கு இடமில்லை. ஏனென்றால் அத்தகைய நிலை பேரானந்தம் கொடுக்க வேண்டும். இவ்விதம் ஆனந்தம் கொடுக்கும் நிலையில் வெறுமைக்கு அங்கு இடம் இல்லை. அவ்விதம் வெறுமை கொண்டு விட்டால் தவறு உன்னுடையதே. ஏனெனில் இன்னும் முழுமையாக ஆசாபாசங்களை விடாநிலையில் இமயம் ஏறுதல் வேண்டும் என எண்ணம் படைத்தாய். இதனை மாற்றிக் கொண்டு சரணாகதி முழுவதாகவும் பக்திதனை வளர்த்தல் வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #73

கேள்வி: காலம் என்பது என்ன?

இதனை கூறுவது மிகவும் கடினமாகும். மானிட அளவில் ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள் என்றெல்லாம் பிரித்து வைத்துள்ளனர். இருப்பினும் எக்காரியம் எக்காலத்தில் சாதித்தல் வேண்டும் என்பது ஓர் கேள்விக்குறியாகவே எப்பொழுதும் உண்டு. இந்நிலையில் கால வரம்பினை நாம் நிர்ணயிக்க இயலாது. இக்கால வழிகளில் இப்பணிகள் அப்பணிகள் என்று பிரித்து குறிப்பிட்ட காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கணக்கிடுகின்றார்கள். இக்குறிப்பிட்ட காலத்தில் இப் பணி புரிதல் செய்ய வேண்டும் என்றால் அக்காலத்திற்கு ஓர் சக்தி தானாக பெறுதல் வேண்டும். அச்சக்தி இறையருள் ஆகும். இத்தகைய நிலையில் காலத்தை வீணாக்குதல் என்பது ஓர் மாபெரும் குற்றமாகும். குறிப்பாக ஆன்மீக பாதையில் செல்வோர் அங்கும் இங்கும் அலைந்து இருக்கும் இடத்தை விட்டும் ஓடி அலைந்தும் காலத்தை வீணாக்கிட்டால் அப்பொன் போன்ற காலங்கள் மீண்டும் கிடைக்காது என்பதை உணர வேண்டும். இதை யாம் மட்டும் கூறுவது அல்ல. ஆன்மீக நிலையில் உயர்ந்தோரின் கருத்தும் ஆகும். இதனை மனமதில் வைத்து செயல்படுவது நன்றே.

குருநாதர் கருத்துக்கள் #72

கேள்வி: ஆன்மீகத்தில் செல்லும் போது எதில் ஒழுக்கம் வேண்டும்?

ஆன்மீக பாதையில் ஒழுக்கமே அச்சாணி என்பதை மறந்து விட்டீர்கள். ஒழுக்கம் என்பது மன அளவில் வாக்கு அளவில் செயல் அளவில் சிந்தனையில் என்பதெல்லாம் உண்டு என்பதனால் அதிக அளவில் அசையாது அதிக அளவில் பேசாது அதிக அளவில் தகாதோர் உறவு இல்லாமல் இயன்ற அளவில் தனிமை காண மனசுத்தி தானாக ஆகும். மற்ற சுத்திகள் தொடர்ந்து வரும் இருப்பினும் இதற்கு மேலான அர்த்தம் உண்டு. ஒழுக்கம் என்பதற்கு மறு அர்த்தம் என்னவென்றால் ஒழுகி வருவது என்பதும் அர்த்தமாகின்றது. இதனை ஆங்கிலமதில் கூறினால் UNINTERRUPTED FLOW என்றும் கூறுவர். மனமதில் இடைவிடாது இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இது முடியுமா என்று கேட்டால் இதற்கு உதவியாக மந்திரங்கள் சதா மனமதில் உச்சாடனம் (ஜெபிக்க) செய்ய இறை சிந்தனை எக்காலமும் நம்மை விட்டு நீங்காது. அவ்விதம் மனமதில் இறைவனை நீக்கி விட்டால் மனசுத்தம் இல்லை என்பதே பொருளாகின்றது.

குருநாதர் கருத்துக்கள் #71

கேள்வி: நவகிரகங்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க வழி என்ன?

பரிபூரண சரணாகதி அடைந்தோர்க்கு கிரகங்களை விட்டு செல்ல இயலும். (நவகிரகங்களின் பாதிப்பு வராது) அனைத்து தியானம் ஜபம் என்கின்றவை செய்தலோடு சரணாகதியும் காண எவ்வித பாதிப்புகளும் வராது.

குருநாதர் கருத்துக்கள் #70

கேள்வி: தந்திரம், மந்திரம் எந்த முறை பூஜை சிறப்பானது?

பூஜைகள் மூன்று வகை உண்டு. மந்திரம், தந்திரம் இதற்கு மேலானது மானசீக பூஜை. மனதிற்குள் சொல்லும் மந்திரம் சிறந்தது என்றும் அவ்வழியில் பூஜைகளும் மானசீகமாய் செய்வதே சிறந்தது. இரண்டாவது வழி தாந்திரிக பூஜை. இது மந்திரமது மனதிற்குள்ளும் முத்திரை வழி அதாவது செய்கையின் வழி உணர்த்தும் பூஜையாம். மூன்றாவது மந்திர உச்சாடனம் இரண்டாவது கற்பது சிறிது கடினம் என்றும் செய்யும் முத்திரைகள் சீரில்லையேல் பலனும் குறையும் இந்நிலையில் ஆரம்ப காலத்தில் மந்திரம் பின்பு தந்திரம் பின்பும் மானசீகம் என்ற விதிமுறையே வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #69

கேள்வி: மனிதனுக்கு விடுதலை கிட்டாமல் தடுப்பது எப்பொருள்?

இதில் பெரும் சிந்தனை தேவையற்றதாகின்றது. ஏனெனில் பெரும் சொத்தானது மனிதனுக்கு தன் உயிர் ஒன்றே. இதற்கு பின்பே மற்றவை அனைத்தும் ஏனெனில் வெள்ளி (பணம்) செல்வங்கள் உண்ண இயலாது எதற்கும் உதவாது. கடினமான காலங்கள் தோன்றும் போது உயிர் என்பதே கடைசியாக பிரியும் சொத்தாக இருக்கின்றதால் அதற்கு மேல்தான் மனிதனுக்கு பற்று. அப்பற்றினை நீக்கிட முயற்சிகள் செய்திட வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #68

கேள்வி: பல மகாகவிகள் பல மகான்கள் செய்யுள்கள், பாடல்கள், தேவாரங்கள் என்றெல்லாம் எழுதிய போதிலும் விகடகவிகளுக்கு ஏன் முக்கியத்துவம் உள்ளது?

விகடகவிகள் என்றால் லேசாக எடையிடுதல் ஆகாது. ஏனெனில் பாமர மக்களுக்கும் எளிதாக புரியும் வகையில் நகைச்சுவையுடன் பல பல முக்கியமான பொருள்களும் எடுத்துரைத்துள்ளார்கள். இதை மனமதில் நிறுத்த வேண்டும். இன்று ஓர் திருமந்திர செய்யுளை எளிதாக உணர முடியாத பொழுதும் அதனின் பொருளை எடுத்து எளிதாக நகைச்சுவை மூலமாக மக்களுக்கும் எடுத்துரைத்துள்ளார்கள். இத்தகைய நிலையில் அவர்கள் பணி மகத்தானது மேலும் விகடத்தை மட்டும் காணாது உட்பொருட்களை சிரத்தையோடு காணுதல் வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகிறது.

குருநாதர் கருத்துக்கள் #67

ஆன்மீகம் என்கின்ற பாதையில் ஒருவன் செல்லும் போது முதன்மையில் பல பல ரூபங்கள் வழிபட்டும் மேல் செல்ல செல்ல எப்படி நம்மிடமுள்ள பழக்கங்கள் உதிருகின்றதோ அவ்விதம் ஒவ்வொரு ரூபமும் உதிர்ந்து விடும். முடிவில் ஓரிரு ரூபங்கள் இருக்கும் காலத்தில் இதனையும் தாண்டி செல்லுதல் வேண்டும் என எண்ணினால் மிகவும் ஓர் வெறுமை தோன்றும். இவ்விதம் வெறுமை தோன்றுவது சீரில்லை. ஏனெனில் சீராக சாதனைகள் செய்து கொண்டால் ரூபம் விட்டு அரூப நிலைக்கு செல்லும் போது ஆனந்தமே பெருகுதல் வேண்டும். அவ்விதம் ஆனந்தம் கிடைக்கவில்லை என்றால் இந்நிலைக்கு இன்னும் தகுதி பெறவில்லை என்றே பொருளாகும். இதனை மனதில் நிறுத்த வேண்டும். இந்நிலை அடைய முயற்சிகள் பெருக்கிடல் வேண்டும். ஏனெனில் நாம் பட்டப்படிப்புக்கு செல்லும் போது கீழ் வகுப்பு புத்தகங்களை உபயோகித்தலாகாது என்கின்ற விதியும் உண்டு. இத்தகைய நிலையில் மேல் நிலை அடையுங்கால் மீண்டும் எமக்கு விளையாட்டுத்தனமாக சாதனைகள் வேண்டும் என்பதே சரியில்லை. இது கடினமாக சொல்லவில்லை என்கின்ற போதிலும் இது ஆன்மீக பாதையில் செல்வோருக்கு ஓர் வழிகாட்டியாக இருக்கட்டும் என்றும் எண்ணிட்டோமே.