குருநாதர் கருத்துக்கள் #66

கேள்வி: இறந்து சென்றவர்கள் பல பிறவி எடுக்கின்றனர் என்கின்ற நிலையில் ஐந்து ஆண்டுகள் சென்ற பிறகும் அவர்களுக்கு ஏன் ஸ்ரார்த்தம் தவசம் என்றெல்லாம் நடத்துதல் வேண்டும்?

இது உங்கள் மன திருப்திக்காக நடத்துகின்றீர்கள். ஓராண்டு உங்கள் திருப்திக்கு செய்தபின் வருகின்ற ஆண்டுகளில் அந்நாளில் அன்னம் பாலித்து (அன்னதானம் செய்து) அந்த அன்னதான புண்ணியத்தை அந்த ஆத்மாவிற்கு எங்கு இருந்த போதிலும் அங்கு சமர்ப்பணம் செய்வதே சிறந்த வழியாகின்றது. பசியுள்ளவனுக்கு அன்னதானம் செய்து அவன் உண்டு வாழ்த்துதல் வேண்டும். இங்கு உயர் குலத்தோன் கீழ் குலத்தோன் என்பது எதுவுமில்லை. ஆண் பெண் பேதமில்லை. பசி என்பது யாவர்கும் ஒன்றே. நன்றாக பசித்து பசி தீர்ந்த பின் வாழ்த்தும் வாழ்த்தே சிறந்த வாழ்த்தாகும். இவ்வழி செய்வதே நலம் தருவதாகும். மற்றவர்கள் ஆச்சாரம் அடிப்படையில் இவ்விதம் அவ்விதம் என்று கூறுவார்கள். இழவு வீட்டில் உள்ளோர் ஓராண்டு காலம் ஆலயம் செல்லுதல் வேண்டாம் என்றும் கூறுவது உண்டு. இதுவும் எமது அபிப்பிராயத்தில் மடமையாகின்றது. விதி முடிவதற்கும் ஆண்டவனுக்கும் என்ன சம்பந்தம். சைவ நெறியில் உட்பட்டதாக ஒருவர் மாண்டுவிட்டால் காரியங்கள் அன்று முடிந்த பின்பே ஆலயத்திற்கு செல்லுதல் வேண்டும் என்பதே விதியாகும். இதில் சைவ சித்தாந்தத்தில் வழியுண்டு என்று கூறுகிறோம். மற்றவர்கள் கூறுவது ஆச்சார்ய முறைகளாகும். மதத்தை சார்ந்ததாகும் உண்மையான ஆன்மீகம் மதம் எங்கு முடிகின்றதோ அங்கு தான் துவங்கும். இங்கு வருபவர்கள் ஆன்மீகத்தை நாடுகின்றனர் என்கின்ற ஓர் கருத்தின் அடிப்படையில் இவ்விதம் கூறினோம்.

கேள்வி: மானசீக பூஜையில் ஆலய விதிமுறைகளின் படி பூஜை செய்ய முடியுமா?

உள்ளம் ஓர் ஆலயம் எனக் கணக்கிட்டால் நமது ஸ்வரமானது (மூச்சுக் காற்றானது) நாதஸ்வரமாகவும் இதயத் துடிப்பு மிருதங்க வாத்தியமாகவும் பல நாடிகளின் துடிப்புகள் உபகரணங்களாகவும் கண்களில் காணும் மின் ஒளியை ஆரத்தியாகவும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை வளர்த்தல் வேண்டும். இவ்விதம் செய்திட்டால் உள்ளமானது ஓர் உத்தமமான ஆலயமாகின்றது. அவ்விதம் ஆகிய பின் மற்ற தலங்களில் (ஆலயங்களில்) அலைய மனதிற்குத் தோன்றாது.

குருநாதர் கருத்துக்கள் #65

கேள்வி: தினந்தோறும் வீட்டில் தீபம் ஏற்றுதல் வேண்டுமா?

பலருக்கும் இதில் மனக்குழப்பங்கள் உள்ளது. வெள்ளிக்கிழமையன்று இல்லை சப்தமத்திற்கு (15நாட்களுக்கு ஒரு நாள்) ஏதேனும் ஒரு நாள் தீபம் ஏற்றினால் போதாதா என மனதில் தோன்றுகிறது. ஏனெனில் விளக்கேற்றுவதும் கிரியை (வேலை) அன்றோ? என கூறுகின்றனர். இது ஓர் தவறான அபிப்பிராயமாகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஈடானது தீபம் என்றும் அது வீட்டில் தினந்தோறும் காலை மாலை ஏற்றுதல் வேண்டும். காலையில் சூரியன் உதயமாகும் காலங்களிலும் பின்பு மாலை சந்திரன் வரும் காலங்களிலும் இதனை செய்தல் வேண்டும். அவர்களின் வருகையை போற்றும் வழியாக இதனை செய்கின்றோம். இதனை மறக்க வேண்டாம். மேலும் தீபத்தின் முழு அர்த்தங்கள் என்னவென்றால் எவருக்கும் இருட்டில் இருப்பது பிடிப்பதில்லை ஏனெனில் இருட்டில் காண்பதெல்லாம் மாறி காண்கின்றோம். சிறிது அச்சம் தோன்றுகிறது. வெளிச்சம் வந்தவுடன் உண்மை விளங்குகிறது இதனால் அச்சம் தீருகின்றது அல்லவா? இது போல வாழ்க்கையிலும் நமக்கு தோன்றும் அச்சங்கள் விரட்டுவதற்கு தினந்தோறும் தீபங்கள் ஏற்றுதல் வேண்டும். இதற்கு நம்பிக்கை இல்லை என்பது ஒரு பெரும் காரியமல்ல தீபம் வெளிச்சம் கொடுக்கின்றது வெளிச்சம் என்பது அறிவு எனக்கு வெள்ளிக்கிழமையன்று மட்டும் அறிவு போதும் வெளிச்சம் போதும் என்பது சிறிது மடமையாக தோன்றுகிறது அல்லவா? இதுபோல் என்றும் அறிவு வேண்டும் வெளிச்சம் வேண்டும் என்றும் பயம் அகல வேண்டும் என்றும் ஆனந்தம் பெறுதல் வேண்டும் என்றால் காலை மாலை இரு முறையாவது ஓரு மணி நேரத்திற்காவது தீபத்தை ஏற்றுதல் வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #64

கேள்வி: இக்கலியுகத்தில் பலத்தால் எதையும் அடையலாம் என்பது சரியா?

பலத்தால் காரியங்களை சாதிப்பவன் ஒருநாள் பலத்தால் தோல்வியும் காண்பான். வாளை எடுத்தவன் வாளால் அழிவான் என்றும் ஓர் பழஞ்சொல் உண்டு. இது உறுதியாக நடைபெறுகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எவரவர் வாழ்க்கையில் பலத்தின் அடிப்படையாலும் மற்றவர்களை அச்சுறுத்தி சீர்கெடுக்கின்றானோ அவன் ஒரு நாள் உறுதியாக அத்தகைய பலத்திற்கும் அடங்கி விடுதல் வேண்டும் என்பதே ஈசனின் விதியாகின்றது. ஆங்கலமதில் கூற Action Reaction என்பார்கள் இதிலிருந்து எவரும் தப்ப இயலாது.

குருநாதர் கருத்துக்கள் #63

கேள்வி: ஆன்மீக பாதை என்றால் சுகம் யாவும் அனுபவித்தல் கூடாது விரக்தியாக இருக்க வேண்டும் என்பதுதானா?

சுகம் என்பது என்ன என்றால் சாதாரண சுகங்கள் யாவும் நிலையற்றதாம். ஆன்மீக பாதையில் வந்தால் படிப்படியாக ஒவ்வொன்றாக விடுதல் என்பதே உண்மையான நிலையாகின்றது. இதனை உணர்தல் வேண்டும். தெய்வம் இவ்வுலகம் நமக்கென படைத்து அதிலுள்ள சுக போகங்களையும் நமக்காகவே படைத்துள்ளான் என்பது உண்மை. இருப்பினும் நாம் எங்கிருந்து வந்தோம் என நாம் தேடிட மீண்டும் அங்கு செல்லுதல் வேண்டும் என எண்ணம் படைத்தால் இங்கு விட்டு அங்கு செல்லுதல் வேண்டும் என்கின்றதே உண்மையான நிலை. இவ்விதமிருக்க இங்கிருக்கும் சுக போகங்கள் விடுதல் வேண்டும். இது பலராலும் இக்காலத்தில் யாத்திரை செய்ய இயலாது என்பதையும் மனமதில் நிறுத்தல் வேண்டும். இக்காலத்தில் நமக்கு முக்கியம் என்கின்றதெல்லாம் இங்கு விடுதல் வேண்டும் ஏன் இவ்வுடலையே விடுதல் வேண்டும் என்கின்றதே நிலையாய் நிற்க மற்றவையெல்லாம் விளையாட்டு பொருட்களாகவே கண்டு அதனையும் இங்கு விட்டு செல்லுதல் வேண்டும் என்பதே சத்திய நிலை.

குருநாதர் கருத்துக்கள் #62

எம்மதம் பெரிதுதான். உம்மதம் அல்ல என்கின்ற வீண் விவகாரங்கள் ஏன் என்றும் மதம் என்பதே மதம் பிடித்த யானையாம் என்று இங்கு கூறினோம். அவ்விதம் கூறுகின்றவர் மதம் பிடித்த யானை போல் என்றும் இங்கு விளக்கிடுவோம். மதம் பிடித்த யானை எதிரே வரும் அனைவரையும் எதிரி என அதற்கு தோன்றி தாக்குகிறது. அவ்விதமே இந்நிலை கண்டோர். இது தான் மதம் என்றும் மதம் தவறுகின்றோர் என்றும் இங்கு விளக்குவோம். மதம் என்பது ஓர் தேவையற்ற பிரச்சனையாம் என்று இங்கும் கூற மேலும் இவ்வித வினாக்கள் வேண்டாம் என்றும் இது எவர் மனதில் தோன்றியதோ அவரே அச்சிந்தனையை மனதிலிருந்து நீக்கவும் என்றும் இங்கு கூறினோம்.

குருநாதர் கருத்துக்கள் #61

கேள்வி: ஆலயம் பெரிதா? இல்லை அங்கே வீற்றிருக்கும் சக்திதான் பெரிதா?

ஆலயங்கள் தோன்றும் முன்னதாகவே தெய்வீக சக்தி இருந்தது. இவ்விதமிருக்க ஆலயம் பிரதானம் அல்ல. ஆலயங்கள் முன்பு கூறியவாறு ஆன்மீகக் குருடர்களுக்கு ஊன்று கோலாகவே விளங்குகின்றது. அங்கு நம் ஆத்மாவின் சக்தியையே மூர்த்தங்கள் (மூர்த்திகள்) பெறுகின்றது என்பதை யாம் இங்கு கூறுவோம். எவ்வித ஆழ்ந்த நிலையில் நாம் பிரார்த்திக்கின்றோமோ நம் உள்ளிருக்கும் அத்தெய்வீக சக்தியே அம்மூர்த்தங்களுக்குள் பாய்கின்றது என்பதே பொருள். இது எளிதாக நீங்களும் உணர இயலும். ஏனெனில் ஆலயத்தின் பெருமை வலிமை அங்கிருக்கும் சக்கர பிரதிஷ்டையே இது யார் பிரதிஷ்டை செய்தது எனக் கேட்டால் மனிதனே இவ்விதம் ஆலயத்திற்கு முன்னதாக தெய்வீக சக்தி என்கின்றதால் அச்சக்தியே பெரிதாகின்றது.

இறையவர்கள் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும் உபதேசித்த இறைவனும்

  1. ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
  2. உத்திரகோசமங்கை – பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
  3. இன்னம்பர் – அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
  4. திருவுசாத்தானம் – இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
  5. ஆலங்குடி – சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
  6. திருவான்மியூர் – அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
  7. திருவாவடுதுறை – அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
  8. சிதம்பரம் – பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
  9. திருப்பூவாளியூர் – நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
  10. திருமங்களம் – சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
  11. திருக்கழு குன்றம் – சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
  12. திருமயிலை – 1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
  13. செய்யாறு – வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
  14. திருவெண்காடு – நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
  15. திருப்பனந்தாள் – அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
  16. திருக்கடவூர் – பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
  17. திருவானைக்கா – அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
  18. மயிலாடுதுறை – குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
  19. திருவாவடுதுறை – அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
  20. தென்மருதூர் – 1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
  21. விருத்தாசலம் – இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
  22. திருப்பெருந்துறை – மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
  23. உத்தரமாயூரம் – ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
  24. காஞ்சி – ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
  25. திருப்புறம்பயம் – சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
  26. விளநகர் – அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
  27. திருத்துருத்தி – சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
  28. கரூர் – ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
  29. திருவோத்தூர் – ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

குருநாதர் கருத்துக்கள் #60

கேள்வி: சிறிது எட்ட நின்று பார் என்கிற வாக்கியத்திற்கு என்ன பொருள்?

இதற்கு சாட்சியாக நில் என்பது மறு விளக்கமாகின்றது. இது சிறிது கடினம் என்கின்ற போதிலும் முயற்சிக்க படிப்படியாக செய்ய இயலும். நமக்கு நான் இவ்வுடல் இல்லை என்பதை உணர்தல் வேண்டும். இரண்டாக எமக்கு எதுவும் நேரிடவில்லை என்பதை உறுதிப்படுத்தல் வேண்டும். ஏனெனில் ஆத்மாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது எளிதல்ல என்கின்ற போதிலும் சிறு சிறு காரியங்களில் துவங்கி பெரும் காரியங்களுக்குச் செல்லுதல் வேண்டும். நோயுற்ற நிலையிலும் எமக்கு எதுவும் நேரிடவில்லை என உரைக்கும் (கூறும்) சக்தியையும் பொறுமையையும் வளர்த்தல் வேண்டும். இது ஒன்றே ஆன்மிகத்தில் மேன்மையளிக்க வல்லதாம். என் செயலால் யாதும் இல்லை என்கின்றதையும் அனைத்தும் அவன் செயலே என்கின்ற மனப்பாண்மையும் முழுமையாக வளர்த்தல் வேண்டும். நான் பணி செய்கின்றேன் என் பணியால்தான் அனைத்தும் முன்னேறுகிறது என்கின்ற மனப்பான்மை நீக்குதல் வேண்டும். ஏனெனில் அவனன்றி ஓர் அணுவும் அசைவதில்லை என்கின்றது உண்மையான நிலை. இதை நன்கு உணர உணர ஆன்மிகத்தில் வளர்ச்சி பெறக் காண்பீர்கள். முக்கியமாக அனைத்தையும் சாட்சியாக நின்று பார்த்தல் வேண்டும். அனைத்திற்கும் சாட்சியமே நல்லது. வழக்கில் சாட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதால் அமைதி காண்பீர்கள். இதுவே வாழ்க்கையிலும் பெறுதல் வேண்டுமெனில் அனைத்தும் சாட்சியாக பார் எட்ட நின்று பார் எமக்கு இது நடைபெறவில்லை என்பது போல் எட்ட நின்று பார்த்தல் வேண்டும் என்பதே பொருளாகின்றது.

குருநாதர் கருத்துக்கள் #59

கேள்வி: ஆத்மாவிற்கு வளர்ச்சி உண்டா?

வளர்ச்சி வேண்டுமென்றால் ஓர் ரூபம் வேண்டும் என்கின்ற நிலை உண்டு. அது மட்டுமல்லாது யாதேனும் உருவமோ இல்லை அமைப்போ இருந்தால் தான் அதில் மற்றங்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக சுவற்றிற்கு அடிக்கின்ற சாயம் சில காலங்கள் சென்றால் அழிந்து விடுகிறது மறைந்து விடுகின்றது இல்லை மாற்றம் ஏற்படும். ஆத்மாவிற்கு அவ்விதம் எதுவுமில்லை வருகின்ற காலத்திலேயே (மனித உடலுக்குள் வரும் காலத்தில்) ஆத்மா தூய்மையான நிலையில் உள்ளதானால் அதற்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதை தாங்குகின்ற உடலில் தான் மாற்றங்கள் ஏற்படுகின்றது. ஆத்மாவிற்கு எவ்வித மாற்றங்களும் நேரிடுவதில்லை.

மக்களிடையே பலரும் தெய்வம் நமக்கு என்ன செய்து விட்டது என்று கூறுகின்றனர். அதுவும் பல வகை சௌகர்யங்கள் உள்ளவரே இவ்விதம் கூறுகின்றனர். இது சிறிது வருத்தம் தருகின்றது ஏனெனில் மறுபக்கம் பார்த்தால் எதுவும் இல்லாதவரே இருக்கின்றனர், இவர்கள் இவ்விதம் குறை கூறுவதில்லை தேவைக்கு ஏற்ப பணம் தங்குவதற்கு நல்வீடு என்பதெல்லாம் இருக்க என்றும் உணவிற்கு பஞ்சம் இல்லாத காலத்தில் இவ்விதம் கூறுவது மிகவும் கீழ்த்தரமானது. இத்தகையோர் அவ்விதம் தோன்றிட்டால் ஏன் ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் ஏன் வழிபடுதல் வேண்டும் அவருடைய பெருமையை காட்டுவதற்காகவே என்று கூறுகிறோம். இதனை தவிர்த்தல் வேண்டும். மனிதனை படைத்து நல்ல அங்கங்களை (உடல் உறுப்புகள்) கொடுத்து நடமாடும் சக்தியும் மற்றவர்களிடம் தம் குறைகளையும் நிறைகளையும் கூறக்கூடிய வல்லமையையும் அளித்துள்ளார். பின்பும் இறைவனைப் பற்றி குறை கூறினால் அடுத்த ஜென்மம் உறுதியாக மனித ஜென்மம் இருக்காது. இதனை மனமதில் நிறுத்த வேண்டும். இதனை யாம் கூறுகிறோம் என மன வருத்தம் வேண்டாம் வரும் ஜென்மங்களில் தீய நிலை நேரிடக்கூடாது என்பதற்காக ஓர் அறிவுரையாக கூறுகின்றோம்.