இறையவர்கள் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும் உபதேசித்த இறைவனும்

  1. ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
  2. உத்திரகோசமங்கை – பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
  3. இன்னம்பர் – அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
  4. திருவுசாத்தானம் – இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
  5. ஆலங்குடி – சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
  6. திருவான்மியூர் – அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
  7. திருவாவடுதுறை – அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
  8. சிதம்பரம் – பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
  9. திருப்பூவாளியூர் – நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
  10. திருமங்களம் – சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
  11. திருக்கழு குன்றம் – சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
  12. திருமயிலை – 1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
  13. செய்யாறு – வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
  14. திருவெண்காடு – நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
  15. திருப்பனந்தாள் – அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
  16. திருக்கடவூர் – பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
  17. திருவானைக்கா – அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
  18. மயிலாடுதுறை – குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
  19. திருவாவடுதுறை – அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
  20. தென்மருதூர் – 1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
  21. விருத்தாசலம் – இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
  22. திருப்பெருந்துறை – மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
  23. உத்தரமாயூரம் – ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
  24. காஞ்சி – ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
  25. திருப்புறம்பயம் – சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
  26. விளநகர் – அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
  27. திருத்துருத்தி – சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
  28. கரூர் – ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
  29. திருவோத்தூர் – ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

குருநாதர் கருத்துக்கள் #60

கேள்வி: சிறிது எட்ட நின்று பார் என்கிற வாக்கியத்திற்கு என்ன பொருள்?

இதற்கு சாட்சியாக நில் என்பது மறு விளக்கமாகின்றது. இது சிறிது கடினம் என்கின்ற போதிலும் முயற்சிக்க படிப்படியாக செய்ய இயலும். நமக்கு நான் இவ்வுடல் இல்லை என்பதை உணர்தல் வேண்டும். இரண்டாக எமக்கு எதுவும் நேரிடவில்லை என்பதை உறுதிப்படுத்தல் வேண்டும். ஏனெனில் ஆத்மாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது எளிதல்ல என்கின்ற போதிலும் சிறு சிறு காரியங்களில் துவங்கி பெரும் காரியங்களுக்குச் செல்லுதல் வேண்டும். நோயுற்ற நிலையிலும் எமக்கு எதுவும் நேரிடவில்லை என உரைக்கும் (கூறும்) சக்தியையும் பொறுமையையும் வளர்த்தல் வேண்டும். இது ஒன்றே ஆன்மிகத்தில் மேன்மையளிக்க வல்லதாம். என் செயலால் யாதும் இல்லை என்கின்றதையும் அனைத்தும் அவன் செயலே என்கின்ற மனப்பாண்மையும் முழுமையாக வளர்த்தல் வேண்டும். நான் பணி செய்கின்றேன் என் பணியால்தான் அனைத்தும் முன்னேறுகிறது என்கின்ற மனப்பான்மை நீக்குதல் வேண்டும். ஏனெனில் அவனன்றி ஓர் அணுவும் அசைவதில்லை என்கின்றது உண்மையான நிலை. இதை நன்கு உணர உணர ஆன்மிகத்தில் வளர்ச்சி பெறக் காண்பீர்கள். முக்கியமாக அனைத்தையும் சாட்சியாக நின்று பார்த்தல் வேண்டும். அனைத்திற்கும் சாட்சியமே நல்லது. வழக்கில் சாட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதால் அமைதி காண்பீர்கள். இதுவே வாழ்க்கையிலும் பெறுதல் வேண்டுமெனில் அனைத்தும் சாட்சியாக பார் எட்ட நின்று பார் எமக்கு இது நடைபெறவில்லை என்பது போல் எட்ட நின்று பார்த்தல் வேண்டும் என்பதே பொருளாகின்றது.

குருநாதர் கருத்துக்கள் #59

கேள்வி: ஆத்மாவிற்கு வளர்ச்சி உண்டா?

வளர்ச்சி வேண்டுமென்றால் ஓர் ரூபம் வேண்டும் என்கின்ற நிலை உண்டு. அது மட்டுமல்லாது யாதேனும் உருவமோ இல்லை அமைப்போ இருந்தால் தான் அதில் மற்றங்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக சுவற்றிற்கு அடிக்கின்ற சாயம் சில காலங்கள் சென்றால் அழிந்து விடுகிறது மறைந்து விடுகின்றது இல்லை மாற்றம் ஏற்படும். ஆத்மாவிற்கு அவ்விதம் எதுவுமில்லை வருகின்ற காலத்திலேயே (மனித உடலுக்குள் வரும் காலத்தில்) ஆத்மா தூய்மையான நிலையில் உள்ளதானால் அதற்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதை தாங்குகின்ற உடலில் தான் மாற்றங்கள் ஏற்படுகின்றது. ஆத்மாவிற்கு எவ்வித மாற்றங்களும் நேரிடுவதில்லை.

மக்களிடையே பலரும் தெய்வம் நமக்கு என்ன செய்து விட்டது என்று கூறுகின்றனர். அதுவும் பல வகை சௌகர்யங்கள் உள்ளவரே இவ்விதம் கூறுகின்றனர். இது சிறிது வருத்தம் தருகின்றது ஏனெனில் மறுபக்கம் பார்த்தால் எதுவும் இல்லாதவரே இருக்கின்றனர், இவர்கள் இவ்விதம் குறை கூறுவதில்லை தேவைக்கு ஏற்ப பணம் தங்குவதற்கு நல்வீடு என்பதெல்லாம் இருக்க என்றும் உணவிற்கு பஞ்சம் இல்லாத காலத்தில் இவ்விதம் கூறுவது மிகவும் கீழ்த்தரமானது. இத்தகையோர் அவ்விதம் தோன்றிட்டால் ஏன் ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் ஏன் வழிபடுதல் வேண்டும் அவருடைய பெருமையை காட்டுவதற்காகவே என்று கூறுகிறோம். இதனை தவிர்த்தல் வேண்டும். மனிதனை படைத்து நல்ல அங்கங்களை (உடல் உறுப்புகள்) கொடுத்து நடமாடும் சக்தியும் மற்றவர்களிடம் தம் குறைகளையும் நிறைகளையும் கூறக்கூடிய வல்லமையையும் அளித்துள்ளார். பின்பும் இறைவனைப் பற்றி குறை கூறினால் அடுத்த ஜென்மம் உறுதியாக மனித ஜென்மம் இருக்காது. இதனை மனமதில் நிறுத்த வேண்டும். இதனை யாம் கூறுகிறோம் என மன வருத்தம் வேண்டாம் வரும் ஜென்மங்களில் தீய நிலை நேரிடக்கூடாது என்பதற்காக ஓர் அறிவுரையாக கூறுகின்றோம்.

நரசிம்மர்

திருமால் தனது நரசிம்ம அவதாரத்தில் இரணியகசிபு அசுரனை அழித்தல். நடுவில் மட்டும் 10 இன்ச் அகலமும் 6 இன்ச் ஆழமும் கொண்டது. இடம் சென்னகேசவா கோயில் பேலூர் கர்நாடகா.

குருநாதர் கருத்துக்கள் #58

கேள்வி: ஆத்மா சுதந்திரமாக இருக்க வேண்டுமென கூறினால் ஆன்மீக பாதையில் செல்வோருக்கு ஏன் பல கட்டுப்படுகள் விதிக்கப்படுகிறது?

சுதந்திரம் என்பது அடக்கம் இல்லை. கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை என்பதே பொருள். ஆத்மா விடுதலை பெற வேண்டும் என்றால் ஐம்புலன்களின் பிடியிலிருந்து விடுதலை பெறுதல் வேண்டும் என்பதே பொருள். இத்தகைய நிலையில் ஆத்மா உண்மையாக சுதந்திரம் பெற வேண்டும் என்றால் தானாக சுயமாக சில கட்டுப்பாடுகள் விதித்து ஐம்புலன்களின் பிடியிலிருந்து ஆசாபாசங்களிலிருந்தும் தப்பித்து விடுதல் வேண்டும்.

அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது ஏன்?

ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் காஞ்சி மகா பெரியவாளிடம் ஒரு கேள்வி கேட்டார். அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது? என்று கேட்டார், ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.

பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால் வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து அதோ பார் நிலா என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும். சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும். சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள். அது போல ராம தூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு. அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த போது வானத்தில் செக்கச் செவேல் என்று ஒரு பழம் போல் தோற்றமளித்த சூரியன் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயு புத்திரன் அல்லவா? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங் குழந்தை சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. ராகு பகவான் அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த போட்டியில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவாக அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும் தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். உளுந்து தானியம் இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதன்படி உளுத்தம் பருப்பை மாவாக்கி பாம்பு போல் வடை தயாரித்து அதனை மாலைகளாக கோர்த்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது. (தற்போது இதனை அறிந்து கொள்ளாமல் சிலர் அரிசியிலும் செய்து மாலை கோர்த்து சாற்றுகிறார்கள். உளுந்தில் செய்தாலும் பாம்பின் உடல் போல் வளைந்து செய்யாமல் தட்டையாக வடைகளை சுட்டு பாலை கட்டி சார்த்துகிறார்கள்) வடையாகட்டும் ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான்.

தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு. இனிப்பு ஜாங்கிரி வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும் அவர்களுக்குக் காலை உணவு வேளையில் இனிப்புப் பண்டங்களையும் சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான் அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சார்த்தி வழிபடுகிறார்கள். அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன சர்க்கரையாக இருந்தால் என்ன? மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி என்று சொல்லி விட்டு சிரித்தார் மஹா பெரியவா.

குருநாதர் கருத்துக்கள் #57

கேள்வி: இந்து மதத்தில் தெய்வங்களின் வடிவம் செய்யும் போது அனைத்திலும் நாகங்கள் உள்ளனவே இதற்கு காரணங்கள் உண்டா?

இந்த நாகமானது உடலுக்குள் மூலாதாரத்தில் சுருண்டிருக்கும் குண்டலினி சக்தியாகின்றது. தெய்வநிலை அடைய வேண்டும் என்ற எண்ணம் படைத்தால் அந்த சக்தியினை உச்சந் தலைக்கு கொண்டு வந்து நாம் அடக்க வேண்டும் என்பது பொருள். தெய்வ வடிவங்களில் உள்ள நாகங்களை நன்றாக பார்த்தால் ஒவ்வொரு ஸ்ததியில் (இடத்தில்) இருக்கும். ஒன்று மாலவன் ஆசனத்திலும் மற்றொன்று ஈஸ்வரன் மாலையாகவும் அணிந்திருப்பார். பிள்ளையாரோ தன் துண்டுகள் விழாதிருக்க இடுப்பில் இறுக்கி கட்டி கொண்டிருப்பார். இவ்விதம் பல பல வடிவங்களில் நாகங்களை காணக்கூடும். இதற்கு தெய்வங்களுக்கு நாகங்கள் அடங்கி இருக்கின்றது என்பதே பொருளாகின்றது. இவ்விதம் தெய்வ நிலைகளை அடைதல் வேண்டும் இல்லை அந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற மனம் படைத்தால் நம்முள்ளிருக்கும் அச்சக்தியை எழுப்பி மேல் நிறுத்தி அடக்குதல் வேண்டும் என்பதே பொருளாகின்றது.

அஷ்டதிக் பாலகர்கள்

இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி பகவான், வருண பகவான், வாயு பகவான், குபேரன், ஈசானன் ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவார்கள். வலது கை கீழேயும் இடது கை மேலேயும் வைத்து நடுவில் வாஸ்து புருஷன் இருக்கிறார். இடம் ஹளேபிடு ஹொய்சலேஸ்வரர் கோவில் கர்நாடகா.

1. கிழக்கு திசை அதிபதி இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் தனது வாகனமான ஐராவத யானை மீது அமர்ந்திருக்கிறார்.

2. தென்கிழக்கு திசை அதிபதி அக்னி தனது மனைவி சுவாஹா தேவியுடன் தனது வாகனமான ஆட்டுகிடா மீது அமர்ந்திருக்கிறார்.

3. தெற்கு திசை அதிபதி எமன் தனது மனைவி குபேரஜாயையுடன் தனது வாகனமான எருமை மீது அமர்ந்திருக்கிறார்.

4. தென்மேற்கு திசை அதிபதி நிருதி தனது மனைவி கட்கியுடன் தனது வாகனமான பிரேதம் வாகன மீது அமர்ந்திருக்கிறார்.

5. மேற்கு திசை அதிபதி வருணன் தனது மனைவி வருணியுடன் தனது வாகனமான மகரத்தின் மீது அமர்ந்திருக்கிறார்.

6. வடமேற்கு திசை அதிபதி வாயு மனைவி வாயுஜாயையுடன் தனது வாகனமான மான் மீது அமர்ந்திருக்கிறார்.

7. வடக்கு திசை அதிபதி குபேரன் தனது மனைவி யட்சியுடன் தனது வாகனமான நரன் மீது அமர்ந்திருக்கிறார்.

8. வடகிழக்கு அதிபதி ஈசானம் மனைவி ஈசானஜாயையுடன் தனது வாகனமான காளை மீது அமர்ந்திருக்கிறார்.

குருநாதர் கருத்துக்கள் #56

கேள்வி: பல இடங்களில் பலர் சித்தர்களை நாடி அவர்களை பல கேள்விகளைக் கேட்டு அதற்கு அவர்கள் அளித்த விடை தெளிவாகப் புரிவதில்லையே ஏன்?

பொதுவாக சித்தர்களின் பரிபாஷை (பேசும் மொழி) என்பது வேறு ஒரு அகராதியாகின்றது (மொழி இலக்கணம்). பொதுவாக மக்களின் குறை தீர்க்கவோ தவம் செய்யவோ சித்தர்கள் கீழ் இறங்கவில்லை என்பதேயாகும். அவரவர் தம் சுய மார்க்கம் அதாவது இறைவனை அடைவது அவர் நோக்கமாகும். சித்தர்களைக் கண்டு குறை கூறுவோர் தங்களுக்குச் சாதகமாக விடைகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். இத்தகைய நிலையில் தொட்டும் தொடாது பட்டும் படாத ஓர் பாஷையில் விடையளிக்கின்றனர். இவ்விடை புரிந்து கொள்கின்றவர்களின் திறமையை பொருத்ததாகின்றதால் இதனை யாம் நம்பிக் கெட்டோம் என்கின்ற மனப்பான்மை வேண்டாம் அன்பர்களே. ஏனெனில் இதில் ஓர் பெரிய அர்த்தம் அடங்கியுள்ளது. சித்தர்கள் கூறுகின்றதில் வருத்தம் காணாது சித்தர்களும் துறவிகளும் ஜோதிடர்கள் அல்ல என்கின்றதை நீங்கள் உணர வேண்டும். சித்தர்கள் ஜோதிடத்தை அறிந்தவர்கள் என்பதில் குழப்பம் வேண்டாம். அதற்கும் மேலான காரியங்களை அறிந்தவர்கள் என்பதிலும் குழப்பம் இல்லை. முற்பிறவி, கர்ம நிலைகள், கர்ம பாக்கிகள், ஜென்மாந்திர பாவங்கள், தோஷங்கள், சாபங்கள், என்பதெல்லாம் அறிந்தவர் ஆவர். இருப்பினும் அவர் அளிக்கக்கூடியது தகுந்த பாத்திரத்தினர்களுக்கே (தகுதி உள்ளவர்களுக்கே). இதுவே உண்மை நிலையாகும். இருப்பினும் விடாது அவர்களை வேண்டிவர தமது நிலைகளை உணர சக்தி உண்டாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அதன்வழி பல நல்காரியங்கள் நடைபெறும் என்பதிலும் குழப்பம் இல்லை. கற்றோர்கள் அருகாமையில் நாம் அமர்ந்திருக்க நாமும் சிறிது கற்றுக் கொள்ளலாம் அல்லவா? இத்தகைய நிலையில் சித்தர்களுடன் பழகும் காலத்தில் நாம் பெறுவது ஞானமாகும் அறிவாகும் அதன்வழி அமைதியும் முன்னேற்றமும் ஆகும்.