நரசிம்மர்

திருமால் தனது நரசிம்ம அவதாரத்தில் இரணியகசிபு அசுரனை அழித்தல். நடுவில் மட்டும் 10 இன்ச் அகலமும் 6 இன்ச் ஆழமும் கொண்டது. இடம் சென்னகேசவா கோயில் பேலூர் கர்நாடகா.

அஷ்டதிக் பாலகர்கள்

இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி பகவான், வருண பகவான், வாயு பகவான், குபேரன், ஈசானன் ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவார்கள். வலது கை கீழேயும் இடது கை மேலேயும் வைத்து நடுவில் வாஸ்து புருஷன் இருக்கிறார். இடம் ஹளேபிடு ஹொய்சலேஸ்வரர் கோவில் கர்நாடகா.

1. கிழக்கு திசை அதிபதி இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் தனது வாகனமான ஐராவத யானை மீது அமர்ந்திருக்கிறார்.

2. தென்கிழக்கு திசை அதிபதி அக்னி தனது மனைவி சுவாஹா தேவியுடன் தனது வாகனமான ஆட்டுகிடா மீது அமர்ந்திருக்கிறார்.

3. தெற்கு திசை அதிபதி எமன் தனது மனைவி குபேரஜாயையுடன் தனது வாகனமான எருமை மீது அமர்ந்திருக்கிறார்.

4. தென்மேற்கு திசை அதிபதி நிருதி தனது மனைவி கட்கியுடன் தனது வாகனமான பிரேதம் வாகன மீது அமர்ந்திருக்கிறார்.

5. மேற்கு திசை அதிபதி வருணன் தனது மனைவி வருணியுடன் தனது வாகனமான மகரத்தின் மீது அமர்ந்திருக்கிறார்.

6. வடமேற்கு திசை அதிபதி வாயு மனைவி வாயுஜாயையுடன் தனது வாகனமான மான் மீது அமர்ந்திருக்கிறார்.

7. வடக்கு திசை அதிபதி குபேரன் தனது மனைவி யட்சியுடன் தனது வாகனமான நரன் மீது அமர்ந்திருக்கிறார்.

8. வடகிழக்கு அதிபதி ஈசானம் மனைவி ஈசானஜாயையுடன் தனது வாகனமான காளை மீது அமர்ந்திருக்கிறார்.

சனிபகவான்

கொடுமுடி மகுடேசுவரர் கோயில் என்றும் திருப்பாண்டிக் கொடுமுடி கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற சிவன் கோயில் ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் கொடுமுடியில் உள்ளது. இத்தல சிவன் மீது திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மூவரும் பாடல்கள் பாடியுள்ளார்கள். இக்கோயிலில் சனிபகவான் காகத்தின் மேல் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த கோலத்தில் வலது கையில் திரிசூலத்தை ஏந்திய நிலையில் எழுந்தருளி அருள்கிறார்.

பஞ்ச பைரவர்கள்

கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. இந்த ஆலயத்தில் ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்கள் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் மற்றும் உன்மத்த பைரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இக்கோயிலும் ஒன்று.

பஞ்ச விருட்ச பஞ்ச முக விநாயகர்

மருதமலை முருகன் கோயில் அருகில் ஒரே இடத்தில் வளர்ந்துள்ள அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என பஞ்ச விருட்ச பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கின்றார். இவரது ஐந்து முகங்களும் ஒரே வரிசையில் உள்ளது.

சரஸ்வதி தேவி

பத்மாசனத்தில் தலையில் கிரீடத்துடன் காதில் வட்டமான குண்டலங்களுடன் கழுத்து மார்பு தோள்பட்டை கைகள் மற்றும் கால்களில் அலங்கார அணிகலன்களுடன் அமர்ந்திருந்து அருள்பாலிக்கிறாள். இடம் கங்கைகொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டம்.

ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி

பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடிக்கொண்டு அவரது தவத்தை விளையாட்டாக கலைத்தார். இதனால் உலகம் முழுவதும் இருளாக மாறியது மற்றும் உலகின் அனைத்து செயல்பாடுகளும் நின்றது. மிகவும் கோபமடைந்த சிவன் பார்வதிதேவியை பூமியில் பிறந்து மீண்டும் அடையும்படி சபித்தார். வேகவதி ஆற்றின் அருகே உள்ள ஒரு பழமையான மாமரத்தடியில் மணலில் ஒரு லிங்கம் அமைத்து சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி கடும் தவம் செய்து கொண்டிருந்தாள். அருகில் உள்ள வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிவலிங்கத்தை மூழ்கடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவனிடம் பக்தி கொண்ட பார்வதி தன் உயிரை விலையாகக் கொடுத்தும் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகத் தழுவினாள். பார்வதியின் இந்த சைகை சிவபெருமானைத் தொட்டது. அவர் நேரில் வந்து அவளை மணந்தார். இடம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம்.

சிறிய சிவன் சன்னதி

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் உள்ள கோயில் வளாகத்தின் வடக்குப் பகுதியில் நீரழி மண்டபம் போன்ற கிணறு போன்ற அமைப்பில் உள்ள சிறிய சிவன் சன்னதி. ரிஷபம் மீது சிவன் அமர்ந்திருக்கிறார். தரை மட்டத்தில் இருந்து சுமார் 4 அடிக்கு கீழே உள்ளது.