மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -2

பாண்டவர்கள் போருக்கு ஆயுத்தமான பணிகளை செய்ய ஆரம்பித்தனர். துரியோதனன் எதிர்பார்த்ததை விட அதிவிரைவில் துவங்கும் நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. துரியோதனனும் போருக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். தன்னுடைய நண்பர்கள் அனைவரின் உதவியை நாடி தூதுவர்களை அனுப்பி வைத்தான். அரசர்களும் அவர்களுடைய சேனைகளும் மிகப் பரபரப்புடன் ஆங்காங்கு போருக்கு ஆயத்தமாயினர்.

கிருஷ்ணனுடைய உதவியை நாடி துரியோதனன் தானே துவாரகைக்கு அவசரமாக புறப்பட்டு சென்றான். அதேபோல் கிருஷ்ணனுடைய உதவியை நாடி அர்ஜூனனும் அங்கு விரைந்து சென்றான். அப்போது கிருஷ்ணன் உறங்கி கொண்டிருந்தார். கிருஷ்ணனுடைய கட்டிலின் தலைமாட்டில் இருந்த ஒற்றை நாற்காலியின் மீது துரியோதனன் விரைந்து சென்று அமர்ந்து கொண்டான். அவனுக்கு பின் சென்ற அர்ஜுனன் கிருஷ்ணருடைய கால்மாட்டில் கைகட்டி நின்று கொண்டிருந்தான். கிருஷ்ணன் கண் விழித்து பார்த்ததும் கால்மாட்டில் நின்று கொண்டிருந்த அர்ஜுனன் தென்பட்டான். இருவருக்குமிடையில் நலத்தைப் பற்றி விசாரணை நிகழ்ந்தது. பின்பு கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தம்மை நாடிவந்ததன் நோக்கம் என்ன என்று கேட்டார். அர்ஜுனன் வந்த விஷயத்தை உள்ளபடி எடுத்து விளக்கினான். அர்ஜுனனுக்கு உதவி செய்ய கிருஷ்ணன் சம்மதம் தெரிவித்தார்.

அதன் பிறகு கிருஷ்ணரிடம் தலை மாட்டில் துரியோதனன் அமர்ந்து இருப்பதை அர்ஜுனன் எடுத்துரைத்தான். திரும்பிப் பார்த்து அவனுடன் சிறிது நேரம் கிருஷ்ணர் உரையாடினார். கிருஷ்ணனுடைய உதவியை நாடி வந்திருப்பதாக துரியோதனன் சொன்னான். தான் முதலில் வந்ததாகவும் ஆகையால் தர்மரீதியாக தனக்கே கிருஷ்ணன் உதவி செய்தாக வேண்டுமென்று அவன் வேண்டிக் கொண்டான். ஆனால் கிருஷ்ணனோ துரியோதனா என்னை நீ முதலில் நாடி வந்துள்ளாய். ஆகையால் என்னுடைய உதவியைப் பெறும் உரிமை உனக்கு உண்டு. ஆனால் நான் அர்ஜுனனை முதலில் பார்த்தேன். ஆகையால் அவனுக்கும் என் உதவி கிடைக்கும். உங்கள் இருவருக்கும் நான் உதவி செய்கின்றேன். என்னிடத்தில் இருக்கும் அனைத்தையும் இரண்டு பாகங்களாகப் பிரிக்கிறேன். ஆயுதம் இல்லாமல் தனியாக இருக்கும் நான் ஒரு பாகம். என்னுடைய சேனையும் சேனைத் தலைவர்களும் ஆயுத தளவாடங்களும் மற்றொரு பாகமாகும். இவ்விரண்டு பாகங்களில் உனக்கு ஒன்றும் அர்ஜுனனுக்கு ஒன்றும் கிடைக்கும். உங்கள் இருவரில் அர்ஜுனன் இளையவனாக இருப்பதால் அவனே முதலில் எந்த பாகம் வேண்டும் என்று தீர்மானிக்கட்டும். அடுத்த பாகத்தை நீ எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

பாகம் பிரித்து வைத்தது குறித்து துரியோதனனுக்கு சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் சேனைகளையும் ஆயுதங்களையும் அர்ஜூனன் முதலில் கேட்டு விடுவானே என்று அரை மனதுடன் அதற்கு சம்மதம் கொடுத்தான். அர்ஜூனன் சற்று சிந்தித்துப் பார்த்தான். போர்க்களத்தில் தனக்கு உதவி பண்ண நிராயுதபாணியாக இருக்கும் கிருஷ்ணனை தனக்கு வேண்டுமென்று அவன் வேண்டினான். அர்ஜூனன் கூறியதும் அதை கேட்ட துரியோதனன் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தான். ஆயுதங்களும் படைகளும் போருக்கு முற்றிலும் தேவையாக இருக்கும் என்பது துரியோதனனுடைய கருத்தாக இருந்தது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.