மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -7

பீஷ்மர் பேசினார். உங்களை நான் தப்பான வழியில் நடத்தலாகாது. நீங்கள் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே இருவரையில் கண்டிருக்கின்றீர்கள். அதுவும் பகடை விளையாட்டில். பாண்டவர்களை வஞ்சித்து பெற்றது மட்டுமே உங்களுடைய வெற்றி. அது ஒன்றே தவிர வேறு எந்த போராட்டத்திலும் நீங்கள் பாண்டவர்களை தோற்கடித்தது கிடையாது. வனத்திலே கந்தர்வர்கள் உங்கள் அனைவரையும் கைதிகளாக பிடித்து கூட்டிக்கொண்டு போனபொழுது வீராதி வீரனாகிய அர்ஜுனன் ஒருவன் தான் உங்கள் உயிரைக் காப்பாற்றினான். அவ்வேளையில் கர்ணன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓட்டம் பிடித்து தப்பித்துக் கொண்டான். அது தான் உங்களுடைய வீரியம். சில நாட்களுக்கு முன்பு விராட நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற பொழுது 6 அதிரர்களாகிய நாம் அனைவரையும் அர்ஜுனன் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு தோற்கடித்தான். அப்படி இருந்தும் உங்களுடைய வீரத்தைப் பற்றி நீங்களே பெருமை பேசிக்கொள்கிறீர்கள். வெற்றி உங்களுடையது என்ற இறுமாப்பில் இருக்கின்றீர்கள் என்று பீஷ்மர் பேசினார்.

கர்ணன் பேசினான். தோல்வி என்பது வரப்போகும் வெற்றிக்கான வழி என்பதை இந்த முதியவர் அறிந்து கொள்ளவில்லை வெவ்வேறு விதமான போர்த் திட்டங்களை தோல்விகள் என்று இவர் பொருள் சேராத வண்ணம் வியாக்கியானம் பண்ணுகிறார். தலைவிதி என்னும் கொள்கையை இவர் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் இவரோடு சேர்ந்திருந்து நான் போர் புரிய போவதில்லை. வீராதி வீரன் என்று இவர் கூறுகின்ற அர்ஜுனனால் இவர் தோல்வியடையும் வரை நான் ஆயுதம் தொடமாட்டேன். என்றைக்கு நான் ஆயுதத்தை எடுக்கிறானோ அன்றைக்கு அர்ஜுனன் அழிந்து போவது உறுதி. முதுமையால் ஆட்கொள்ளப்பட்டு வெற்றியில் நம்பிக்கை இழந்து இருக்கும் இந்த முதியவரின் கருத்து பிரகாரம் அர்ஜுனனை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று கூறிவிட்டு பீஷ்மரை எதிர்க்கும் பாங்கில் கர்ணன் சபையை விட்டு வெளியேறினான்.

திருதராஷ்டிரன் பேசினார். நம் குடும்பத் தலைவராகிய பீஷ்மர் கூறுவது முற்றிலும் மெய். போர் வேண்டாம் சமாதானத்தில் ஒன்றுபடுவோம் என்று பெரியவர்கள் அனைவரும் ஏகோபித்து கூறுகின்றனர். அதுதான் சரியான வழி என்று நானும் நம்புகின்றேன். ஆனால் முரட்டு பிடிவாதக்காரர்களாகிய இளைஞர்கள் தம் போக்கிலேயே சென்று கொண்டிருக்கின்றார்கள். நம்முடைய அறிவுரையை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை என்று திருதராஷ்டிரர் கூறினார்.

துரியோதனன் பேசினான். தந்தையே தயவு செய்து நான் சொல்வதை சிறிது கேளுங்கள். தாங்கள் நினைத்தபடி நான் அவசரக்காரன் இல்லை. இந்த பாண்டவர்களிடத்தில் சிறிதளவாவது க்ஷத்திரிய வீரீயம் இருந்திருந்தால் பகடை விளையாட்டில் நாங்கள் அவர்களை தோற்கடித்து அவமானப்படுத்திய பொழுது எங்கள் மீது அவர்கள் கோபப்பட்டு சீறி எழிந்து சண்டை போட்டிருக்க இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.