மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -8

கிருஷ்ணனுடைய உதவியை நாடி அவனை முதலில் சந்தித்தவன் நான். கிருஷ்ணனுடைய உதவியை பெற்றுக்கொள்ளும் உரிமை முதலில் எனக்கே இருந்தது. அப்படி இருக்கும்போது அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் ஒரு சலுகை காட்டினான். கிருஷ்ணன் ஆயுதம் இல்லாத தன்னை ஒற்றை ஆளாக ஒருபக்கமும் தளவாடங்கள் நிரம்பப்பெற்றிருந்த சேனைகள் மற்றொரு பக்கமும் பிரித்து வைத்து பங்கு போட்டான். இரண்டில் ஒன்று விருப்பப்பட்ட பாகத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று அனுதாபம் காட்டினான். அசடு ஆகிய அவனோ வல்லமை வாய்ந்த சேனையை புறக்கணித்துவிட்டு ஆயுதம் எடுத்து போர் புரிவது இல்லை என்று கூறிய கிருஷ்ணனை தன் பக்கம் சேர்த்துக் கொண்டான். யுத்தத்துக்கு தேவையாக இருக்கின்ற கிருஷ்ணனுடைய சேனையை நான் பெற்றுள்ளேன். இப்பொழுது என் வசம் 11 அக்ஷௌஹினி படைகள் இருக்கின்றன. ஆனால் பாண்டவர்கள் வசம் 6 அக்ஷௌஹினி படைகள் மட்டுமே உள்ளது. ஆகையால் அவர்கள் தோற்றுப் போவார்கள். தோற்று விடுவோம் என்று பாண்டவர்கள் அஞ்சுகிறார்கள் ஆகையால் தான் அவர்களுடைய வாழ்க்கை ஆதாரத்திற்கு வெறும் ஐந்து கிராமங்கள் கிடைத்தால் போதும் என்று அவர்கள் கெஞ்சுகின்றார்கள் என்று துரியோதனன் பேசினான்

திருதராஷ்டிரன் பேசினார். துரியோதனா நீ தாராள மனம் படைத்தவனாக இரு. அவர்களுடைய ராஜ்யம் முழுவதையும் அவர்களிடம் திருப்பி ஒப்படைத்து விடு. நீ இப்படி நடந்து கொள்வது உன்னுடைய பரந்த மனப்பான்மையை வெளிக்காட்டுவதாக இருக்கும். ஒருவரை ஒருவர் நேசிக்கின்ற சகோதரர்களாக நீங்கள் வாழ்ந்திருங்கள். நீங்கள் இவ்வாறு வாழ்வது எனக்கு பெருமையை உண்டு பண்ணும் என்றார். அதற்கு துரியோதனன் தந்தையே அவர்கள் கேட்பது ஐந்து கிராமங்கள். நான் ஐந்து ஊசி முனை அளவு நிலம் கூட அவர்களுக்கு தரப்போவதில்லை. அவர்கள் மீண்டும் வனதிற்கு சென்று தொலைந்து போகட்டும் என்று கூறிவிட்டு அக்கணமே சபையில் இருந்து வெளியேறினான்.

சஞ்சயன் திரும்பிச்சென்ற பிறகு பாண்டவர்கள் இடையே மீண்டும் ஆலோசனை நடந்தது. கௌரவர்கள் அபகரித்துக் கொண்ட ராஜ்யத்தின் எந்த ஒரு பகுதியையும் அவர்கள் திருப்பித் தரப் போவதில்லை என்று யுதிஷ்டிரன் தெரிவித்து விட்டு இந்த நெருக்கடியான நேரத்தில் கிருஷ்ணனுடைய அபிப்பிராயத்தை அவன் நாடி நின்றான். இவ்வளவு நாள் போர்புரிய பொங்கிக்கொண்டிருந்த பீமனுக்கு ஏதேனும் ஒரு போக்கில் சமாதானம் செய்து கொள்வதே நலம் என்னும் சாந்த மனப்பான்மை இப்பொழுது வடிவெடுத்தது. போர் நிகழ்ந்தால் என்னென்ன கேடுகள் எப்படியெல்லாம் அமையக் கூடும் என்பதை அர்ஜுனன் யோசித்தான். சமாதானத்தை நாடி அஸ்தினாபுரத்திற்கு செல்லப்போவதாக கிருஷ்ணன் தெரிவித்தான். அப்படி போவது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று யுதிஷ்டிரன் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தான். ஆனால் கிருஷ்ணனோ தன்னை யாரும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று உறுதி கூறினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.