ராமாயணம் முன்னுரை

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே.

தர்மம் எப்பொழுதெல்லாம் அழிந்து அதர்மம் தலையெடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம்.

தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுத்த போது பகவான் அவதரித்த வரலாற்றை கூறுபவை இதிகாசங்களாகும். இதிகாசம் என்பது கதை அல்ல. சமஸ்கிருதத்தில் இதி என்பதற்கு இப்படி என்றும் காசம் என்பதற்கு நடந்தது என்றும் அர்த்தம். இதிகாசம் என்றால் மரபுவழி வரலாற்று கதை என்றும் பெரும்காவியம் என்றும் பொருள் உண்டு. இதிகாசங்கள் இரண்டு 1. ராமாயணம் 2. மகாபாரதம். ராமாயணம் என்னும் பெயர் ராமன் மற்றும் அயணம் என்னும் சொற்களின் கூட்டாகும். அயணம் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயணம் அல்லது வழித்தடம் என்னும் பொருளுடையது. இதனால் ராமாயணம் என்பது ராமனின் பயணம் அல்லது அவன் வாழ்ந்த வழி என்னும் பொருளைக் குறிக்கிறது. மூல நூலான வால்மீகி ராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும் பிற நாடுகளின் மொழிகளிலும் ராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. வடமொழியில் வால்மீகி இயற்றிய ராமாயணத்தை பின்பற்றி யோக வசிஷ்டர் எழுதிய வசிஷ்ட ராமாயணம், ராமசர்மர் எழுதிய அத்யாத்ம ராமாயணம் மற்றும் வால்மீகி பெயரால் அழைக்கப்படும் அற்புத ராமாயணம் ஆனந்த ராமாயணம் என நிறைய நூல்கள் உள்ளது. தமிழில் கம்பர் எழுதினார். இது கம்ப ராமாயணம் எனப்படுகின்றது. இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர். கம்போடியாவின் கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய்லாந்தின் தாய் மொழியில் உள்ள ராமாக்கியென் (ராமகீர்த்தி) தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியில் எழுதப்பட்ட இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் ராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

இந்தியாவில் வால்மீகி, கம்பன், துளசிதாஸ், எழுத்தச்சன், அஸ்ஸாமிய, வங்காள, சமண ராமாயணங்கள் பல கிடைக்கின்றன. இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளில் ராமாயணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. திரு. ஏ.கே. இராமானுஜம் 1991 இல் எழுதிய ஆங்கில கட்டுரை 300 ராமாயணங்கள் என்பதில் குறிப்பிடப்பட்டவை தவிர மேலும் பல ராமாயண நூல்கள் பிற்காலத்தில் பழைய நூலகங்களிலிருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன. ராமாயணம் மொத்தம் எத்தனை உள்ளது என்று முழுமையாகச் சொல்லிவிடமுடியாது. இதற்கு காரணமாக ஏன் ராமாயணத்தில் இத்தனை வகைகள் தோன்றியது என்று எண்ணினால் அக்காலத்தில் புராணங்களும் இதிகாசங்களும் தலைமுறை தலைமுறையாக செவிவழிச் செய்தியாகவே பரிமாறப்பட்டிருக்கின்றன. யோகிகள் மகான்கள் எழுதிய நூல்கள் தவிர்த்து மற்ற அனைத்து ராமாயணங்களும் அவரவர்களுக்கு புரிந்தவைகளை அவரவர்கள் விருப்பம் போல் எழுதியிருக்கலாம். ஆகவே தான் யோகிகள் மகான்கள் எழுதிய ராமாயண காவியத்திற்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை. மற்றவர்கள் எழுதியதிற்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் ஓர் காலகட்டத்தில் சமணர்கள் சைவம் வைணவத்தை அழித்து தங்கள் சமண மதத்தை பரப்புவதற்காக வரலாற்று காவியங்கள் சிலவற்றை வேண்டுமென்றே திரித்து மொழி பெயர்த்திருக்கின்றார்கள் என்றும் வரலாறு உள்ளது. அதன்படியும் பல ராமாயண கதைகள் உருவாகியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

ராமாயணம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. ராமாயண நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகளும் விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைகள் அரசுகள் போன்றவற்றையும் ஆய்வுநோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தை வால்மீகியால் படைத்திருக்க முடியாது என்பது தெரிகிறது. ராமாயண இதிகாசம் வாழ்வியல் நன்நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன் தலைவனாக எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதையும் தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு நிலைகளையும் ஒன்றுபோல எதிர்கொண்டு சமயத்துக்குத் தக்கபடி நடந்து தனது சொந்த இன்ப துன்பங்களுக்கு அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு கட்டத்தில் இது தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்ட மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் அவதார வரலாறும் ஆகும். மகாபாரத காவியத்தின் வன பருவத்தில் ராமாயண நிகழ்வுகளை மார்க்கண்டேய முனிவர் யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்திருக்கின்றார். வால்மீகி ராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவையாவன பின்வருமாறு:

  1. பால காண்டம்: ராமன் மற்றும் அவரின் உடன்பிறந்தோரின் பிறப்பு, கல்வி, திருமண காலத்துப் பகுதி.
  2. அயோத்தியா காண்டம்: ராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துப் பகுதி.
  3. ஆரண்ய காண்டம்: ராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்த காலத்துப் பகுதி.
  4. கிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் ராமனது வாழ்க்கை காலத்துப் பகுதி.
  5. சுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய காலத்துப் பகுதி.
  6. யுத்த காண்டம்: ராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய காலத்துப் பகுதி.
  7. உத்தர காண்டம்: ராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.

இந்த ராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளிலிருக்கும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர்.

கம்பன் சோழ நாட்டில் கும்பகோணத்தில் உள்ள தேரெழுந்தூரில் கி.பி. 1180 ஆம் ஆண்டு ஆதித்தன் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரின் குடும்பத்தின் வறுமை காரணமாக பணக்கார விவசாயி ஒருவருக்கு தத்து கொடுக்கப்பட்டார். இவர் சிறு வயதில் காளி கோவில் கம்பத்தின் கீழ் கிடந்ததால் கம்பர் எனவும் இவரது குருவின் கம்பங்கொல்லையை காவல் காத்தமையால் கம்பர் எனவும் அழைக்கப்பட்டார். கம்பர் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மிகவும் புலமை பெற்ற மாபெரும் கவிஞன். கம்பனின் வறுமை நிலையில் ஆதரவுக்கரம் நீட்டியவர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். தனது புலமையை மெய்பித்து இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னரின் அவைத் தலைவராக உயர்வு பெற்றார். குலோத்துங்க சோழ அரசன் கம்பரிடம் ராமாயணத்தை தமிழில் மொழி பெயர்க்குமாறு ஆணையிட்டார். கம்பர் வால்மீகி ராமாயணத்தை எப்படி தமிழில் தொடங்குவது என்ற குழப்பத்தில் இறைவனை நோக்கித் தியானித்திருந்த போது இறைவனே அவருக்கு அசீரரியாக உலகம் யாவையும் என்று முதலடி எடுத்துக் கொடுத்து பாடச் சொன்னார். அதை வைத்துக்கொண்டு

உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடையா ரவர்
ஆண்டவ ரன்னவர்க் கேசர ணாங்களே.

விளக்கம்: உலகங்கள் எல்லாவற்றையும் தாமே இருக்கும்படியாக உருவாக்கியும் காலம் வரும்வரை அது நிலைத்து நிற்கும்படி காப்பாற்றியும் காலம் முடிந்ததும் அழித்தும் என்று எப்போதும் முடியாத திருவிளையாடலை மீண்டும் மீண்டும் அளவில்லாமல் விளையாடிக்கொண்டே இருக்கிறவர்தான் ஆண்டவர் அவரை நாங்கள் சரணடைகிறோம். என்று முதல் பாடலை இறை வணக்கமாகப் பாடி ஆரம்பித்து கம்பர் ராமாயணத்தை தமிழில் எழுதி முடித்தார்.

வால்மீகி முனிவரின் ராமாயணத்தை தமிழில் எழுதிய கம்பர் இதனை வடமொழியில் ஸ்ரீராமர் கதையை வகுத்து வான்புகழ் கொண்ட வால்மீகி முனிவரின் நூலை நான் தமிழ்ப் பாவினால் பாடியிருக்கின்றேன் என்று தனது பாடலின் வழியே கூறுகின்றார். தாம் இயற்றிய இந்நூலிற்கு கம்பர் முதலில் ராமகாதை என்றே பெயரிட்டிருந்தார். பிற்காலத்தில் ராமாயணம் பலரால் தொகுக்கப்பட்டதால் கம்பரின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது. கம்பர் இந்த நூலை இயற்றிய பிறகு எண்ணற்ற ராமாயண நூல்கள் படைக்கப்பட்டன. தமிழில் பலவித ராமாயண நூல்கள் தோன்றுவதற்கு கம்பராமாயணம் தூண்டுதலாக இருந்தது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தக்க ராமாயணம், குயில் ராமாயணம், ராமாயண அகவல், கோகில ராமாயணம், அமர்த ராமாயணம், ராமாயணக் கீர்த்தைகள், பால ராமாயணம் என்று பல நூல்கள் பிற்காலத்தில் தோன்றியது.

கம்பர் தனது ராமகாதையை தொல்காப்பிய நெறிப்படி வல்லினம் மெல்லினம் இடையினம் என்று காட்சிக்கு ஏற்ப தனித்தனியாக பிரித்து சந்தத்தோடு பாடல்களில் தமிழை பயன்படுத்திய பெருமைக்குரியவர் ஆவார். உதாரணமாக அரக்கி ஒருத்தி நடந்து வரும் காட்சியில் வல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அழகான பெண் நடந்து வரும் காட்சியில் மெல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். குதிரை வரும் காட்சிகளில் குதிரையின் காலடி சத்தம் வருவது போல வார்த்தைகள் வைத்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அதனை படிக்கும் போது குதிரை சத்தம் ரிதத்துடன் வருவது போலவே இருக்கும். கம்பரின் காவியத்தை படித்த 14 மொழிகளில் அறிஞரான மகாகவி பாரதியார் தான் கண்ட கவிஞர்களில் கம்பரைப்போல் வள்ளுவரைப்போல் இளங்கோவைப்போல் வேறு யாரையும் கண்டதில்லை என்று இந்த மூன்று தலைசிறந்த கவிஞர்களில் கம்பரை முதலாவதாகக் குறிப்பிட்டு கூறுகிறார்.

கம்பர் ஒரு நரசிம்ம உபாசகர். நரசிங்க பெருமாளின் தீவிர பக்தர். தான் எழுதிய ராமகாவியத்தை ஸ்ரீரங்கம் கோவிலில் நரசிம்மர் சன்னதி முன்னிலையில் அரங்கேற்ற நினைத்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் பண்டிதர்கள் மற்றும் புலவர்களிடம் தன் வேண்டுதலை முன் வைத்தார். அதற்கு அவர்கள் தில்லையில் இருக்கும் மூவாயிரம் தீட்சிதர்களிடம் அனுமதி பெற்று சான்று ஓலையை வாங்கி வந்தால் இங்கு அரங்கேற்ற அனுமதிக்கிறோம் என்றார்கள். தில்லை சென்ற கம்பர் அங்கிருந்த தீட்சிதர்களிடம் ஸ்ரீரங்கம் கோவிலைச் சேர்ந்தவர்களின் வேண்டுகோளைக் கூறி தாம் இயற்றிய ராமகாவியத்தைச் சரிபார்த்து சான்று தர வேண்டும் என்று கேட்கிறார். அவர்களோ நாங்கள் மூவாயிரம் தீட்சிதர்களும் ஒன்றாகக் கூடுவது அவ்வளவு எளிதானது அல்ல. பலர் பல இடங்களில் இருப்பார்கள் ஒருவர் குறைந்தாலும் ஓலையில் முத்திரை பதிக்கப்படாது. ஆகவே வீண் முயற்சி செய்யாதீர்கள். உமது ஊருக்கே சென்றுவிடுங்கள் என்றனர். கம்பர் மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். தன்னுடைய ராமகாதையை அரங்கேற்ற முடியவில்லையே என்று வருத்தப்பட்டு பாடல்கள் சில அந்தாதிகளாக எழுதினார்.

ஒருநாள் இரவு நித்திரையில் கம்பனின் கனவில் இறைவன் தோன்றி உடனே தில்லை செல்க என்றார். விழித்த கம்பர் உடனே தில்லை விரைந்து செல்கிறார். அங்கு மூவாயிரம் தீட்சிதர்களும் ஓர் இடத்தில் ஒன்று கூடி இருப்பதை கண்டார் கம்பர். ஆச்சரியத்துடன் அருகில் சென்ற போது ஒரு தீட்சிதரின் மகன் பாம்பு தீண்டி இறந்ததால் துக்கம் விசாரிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டார். இறைவனின் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்து தாம் எழுதிய ராமகாதையின் ஓலைக் கட்டிலிருந்து நாகபடலம் பாடல்களின் ஒரு ஓலைச் சுவடியை எடுத்து இறந்து கிடந்த அச்சிறுவனின் நெஞ்சில் வைத்து அப்பாடலை இறைவனை நினைத்துக் கொண்டு பாடினார். உடனே அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். கூடியிருந்த தில்லை அந்தணர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இவர் பாடலின் ஆற்றலைக் கண்ட அனைவரும் ஒரே முகமாக ஒப்புக்கொண்டு அரங்கேற்றத்திற்கான ஒப்புதல் ஓலை அளித்தனர். அதை வாங்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பிய கம்பர் ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் வீற்றிருக்கும் தனது இஷ்ட தெய்வமான நரசிம்மர் பெருமாள் முன்பு தனது ராமகாவியத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.

ராமகாதையைக் கேட்ட ஸ்ரீரங்கத்துப் புலவர்கள் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் இரண்ய வதைப் படலம் இல்லை ஆனால் நீங்கள் எழுதி இருக்கின்றீர்கள். ஆகவே இது ராமாயணத்தோடு சேராது என்பதால் இங்கே அரங்கேற்றம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு கம்பர் தமக்கு இறைவனே அடி எடுத்து கொடுத்து எழுத வைத்திருப்பதால் அதைத் தன்னால் மாற்ற இயலாது என்றும் உங்களுடைய சந்தேகத்திற்கு இறைவன்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். அதற்கு அவர்கள் அப்படி என்றால் இரண்ய வதைப் படலத்தை மட்டும் முதலில் அரங்கேற்றுங்கள் இறைவன் அடியெடுத்துக் கொடுத்தது உண்மையாக இருந்தால் இறைவனே வந்து சாட்சி சொல்லட்டும் அதன்பிறகு நாங்கள் முழு ராமகாதையை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். உடனே கம்பர் ஸ்ரீநரசிம்ம பெருமானை மனதில் வைத்து வேண்டிக்கொண்டு இரண்ய வதைப் படலத்தை ஆரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார். பாடலின் நடுவே இரண்யன் ஆரடா சிரித்தார் என்ற கேட்பது போலக் காட்சி வரும் போது மண்டபத்தின் தூணில் இருந்த நரசிம்மர் கடகடவென பெரிய சிரிப்பொலியுடன் கர்ஜனை செய்து கம்பரின் கூற்று உண்மை என ஆமோதித்து தலையாட்டினார். இந்த அதிசயத்தை பயத்தோடு கண்ட புலவர்கள் அனைவரும் கம்பரின் ராமகாதையை ஏற்றுக்கொண்டனர். அங்கு சிரித்த நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பார்கள். இவர் தாயார் சன்னிதி அருகில் தனி சன்னிதியில் இப்போதும் இருக்கிறார். இவரது கையில் சங்கு மட்டும் இருக்கிறது சக்கரம் இல்லை. இன்றும் ராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடமான இம்மண்டப மேடையைக் காணலாம்.

வால்மீகி ராமாயணம் கம்பராமாயணத்தின் மூலமாக இருந்தாலும் கம்பர் அவற்றை வரிக்குவரி மொழி பெயர்ப்பு செய்யவில்லை. அந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் அப்படியே இருந்தாலும் முழுமையாக வால்மீகி ராமாயணம் போல் கம்ப ராமாயணத்தை இயற்றவில்லை. வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ராமரின் உணவு பழக்கமும் ராவணனின் திறமையும் ராவணன் சீதையைத் தொடாமல் இருந்த நெறியையும் கம்பராமாயணத்தில் காணலாம். கம்பர் தனக்கே உரித்தான பாணியில் வால்மீகி ராமாயணத்தின் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச் சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர் தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.

கம்பராமாயணம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களில் 123 படலங்களுடன் ஏறத்தாழ 22000 பாடல்களையும் உடையது. காண்டம் என்பது பெரும் பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய உத்திர காண்டம் என்னும் பகுதியை கம்பரின் சீடராகிய ஒட்டக்கூத்தர் இயற்றியுள்ளார்.

கம்பர் தம் ராமாயணத்தைப் பால காண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில் விடை கொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன், விபீஷணன் மற்றும் வானரர் முதலியோர்க்கு பரிசுகள் கொடுத்து ராமர் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு ராமர் பல்லாண்டு மனுநெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி ராமாயணத்தைக் கம்பர் நிறைவு செய்து விட்டார். அதன்பின் நிகழ்வுகளாக சீதையைக் குறித்து சந்தேகமாகப் பேசிய ஒரு குடிமகனின் ஆதங்கத்தைத் தீர்க்க வேண்டிய அரச தர்மத்தினால் ஐந்து மாத கர்ப்பிணியான சீதையை ராமன் லக்குமணனைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிடும்படி கூறுவது காட்டில் சீதைக்கு வால்மீகி ஆசிரமத்தில் லவன் மற்றும் குசன் எனும் இரட்டைக் குழுந்தைகள் பிறப்பது ராமர் செய்த அசுவமேத யாகத்தில் உபயோகிக்க வேண்டிய குதிரைகளை லவ-குசர்கள் கட்டி வைத்தது சத்துருக்கனன், பரதன் மற்றும் லக்குமணராலும் வெல்ல முடியாத லவ-குசர்களை ராமரே நேரில் வந்து பார்த்து போரிடுவது பின்னர் தம்மக்கள் என்பதைத் தெரிந்து கொண்டு லவ-குசர்களை அயோத்திக்கு அழைத்து செல்வது சீதை பூமாதேவியை வேண்டிக் கொள்ள பூமி பிளந்து பூமாதேவியுடன் அவள் சேர்வது போன்ற செய்திகளை தான் எழுதிய உத்தர காண்டம் மூலம் ஒட்டக்கூத்தர் விளக்கிக் கொடுத்துள்ளார்.

அருணாசல கவிராயர் என்பவர் ராமாயணம் சராசரி மனிதருக்கும் புரிய வேண்டும் என்று ராமகாவியத்தை தெருக்கூத்து நாடகம் போல் இயற்றினார். தான் எழுதிய ராம நாடகத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அங்கு உள்ள புலவர்களிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு அவர்கள் இக்கோவில் ரங்கநாதர் கோவில் ஆகையால் நீங்கள் ரங்கநாதரை பற்றி பாடினால் அனுமதி தருகிறோம் என்று கூறுகிறார்கள். அதற்கு அருணாசல கவிராயர் ஒத்துக்கொண்டு பாட ஆரம்பிக்கின்றார். ஏன் பள்ளி கொண்டீரய்யா என்று ரங்கநாதர் பள்ளி கொண்டிருப்பதை பாடலின் முதல் வார்தையாக ஆரம்பித்து பின்பு ராமரைப் பற்றியே பாடுகிறார். விஸ்வாமித்திரர் தங்களை காட்டுக்கு அழைத்துச் சென்றாரே அங்கு பட்ட கஷ்டங்களை நினைத்து படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? பெண்ணாக இருக்கும் தாடகை என்னும் அரக்கியை அம்பு விட்டு கொன்று விட்டோமே என்று வருத்தப்பட்டு படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? ஜனகர் கொடுத்த சிவதனுசை முறித்து விட்டோமே என்ற வருத்தத்தில் படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? பரசுராமர் வில்லோடு வந்த போது அதனை உடைத்தீர்களே அதனை நினைத்து படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? சீதையுடன் காட்டில் நடந்து சென்றீர்களே அந்தக் களைப்பில் படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? கங்கையில் குகனுடன் ஓடத்தில் சென்றீர்களே அந்த உடல் அசதியில் படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? என்று முதல் இரண்டு அடியை மட்டும் ரங்கராதரை பற்றி பாடி மீதி அனைத்தும் ராமரைப் பற்றியே பாடித் தனது ராம நாடகத்தை அரங்கேற்றம் செய்தார் அருணாசல கவிராயர்.

விஷ்ணு புராணம், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரலாற்று உண்மை உள்ளதா என்ற இந்து பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் பதில் கூறியுள்ளார். ஒரு வரலாற்று உண்மை புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம். ராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி அவை ராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியது இல்லை. ஆனால் அவை உயர்ந்த கருத்துக்களை மனித இனத்தின் முன் வைப்பதால் அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்களாகக் கருத வேண்டும். எந்தப் புராணமானாலும் அதிலுள்ள தத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும். அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா கற்பனையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை. மனித இனத்திற்கு தர்மத்தை போதிப்பதே புராணங்களின் நோக்கம். ராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு அவன் மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் ராமாயணம் படித்தால் மனம் பக்குவப்பட்டு உடன் பிறந்தோர்களிடம் வேற்றுமை மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும் அதனால் உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுக்கும் தன்மை அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று சொல்லியிருக்கின்றார். முப்பதே வினாடிகளில் சொல்லி ராமாயணத்தை முழுவதுமாக சொல்லி முடிக்கிற மாதிரி அழகான ஒன்பதே வரிகளில் அருளியிருக்கிறார் மஹா பெரியவர்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்

அனைவரும் ராமாயணம் படித்து ராம காவியத்தை அறிந்து ஆனந்தத்துடன் இருப்போம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.