திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்றொரு வாசகம் தமிழில் உள்ளது. இந்த வாசகத்தின் மூலம் திருவாசகத்தின் பெருமையினை உணர்ந்து கொள்ளலாம். மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம். தெய்வம் மனிதனுக்கு கூறியது கீதை. மனிதன் மனிதனுக்கு கூறியது திருக்குறள். என்றொரு வாசகமும் தமிழில் உள்ளது. திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் திருவாதவூரார் என்கின்ற மாணிக்கவாசகர். இவர் 9 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார். சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர். இவர் பாடிய பாடல்கள் திருக்கோவை மற்றும் திருவாசகம் என அழைக்கப்படுகின்றன. ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் நடராஜருடன் கலந்தார். இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன், பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.
இந்நூல் மனிதனின் உள்ளத்தில் உள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களைய வேண்டிய வழிமுறைகள், இறைவனை தேடுகின்றவர்கள் பெற வேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், இறைவனின் அருள் பெற வேட்கை கொள்ளல், பக்தியைப் பெருக்குதல், அருளைப் பெறுதல், அதிலேயே ஆழ்ந்து இருத்தல், இறைவனைக் காணல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது. பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகம் 51 பதிகங்களையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. பன்னிரு திருமுறைகளில் 10ம் திருமுறையான திருமந்திரம் சிறப்புடையது. ஆனால் அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே என திருமுருக கிருபானந்த வாரியார் கூறியிருக்கிறார்.
கிருஸ்துவ மதப் பாதிரியாரான ஜி.யூ.போப் என்பவர் தமிழ் நாட்டிற்கு வந்து தனது கிருஸ்துவ மதத்தை பரப்ப தமிழ் கற்றார். தமிழ் கற்கும் போது திருவாசகம் நூலை படித்து பின்பு சிவனடியாரானார். அதற்குப் பின்பு திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவர் மாணிக்கவாசகரைப் பற்றி குறிப்பிடுகையில் உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறாமல் நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை என்று குறிப்பிடுகின்றார். மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கி.பி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன. பன்னிரு திருமுறைகளில் முதன் முதலில் அச்சில் வந்த திருமுறை திருவாசகமே. அதை அடுத்து வந்த நூல் திருச்சிற்றம்பலக் கோவையாரே. திருவாசகம் 1835 லும், திருக்கோவையார் 1841 லும் வெளிவந்தன. கோவையாரின் மூலம் பிலவ வருடம் ஆடி மாதம் வெளிவந்தது. இதன் பதிப்பாசிரியர் புதுவை நயநப்ப முதலியார். இந்நூலில் மாணிக்கவாசகரை வெள்ளியம்பலத் தம்பிரான் அரதனவாக்கிய அடிகள் என்று உள்ளது.
முதன் முதலில் திருக்கோவையாரை உரையோடு பதிப்பித்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர். இப்பதிப்பு வெளிவந்த ஆண்டு 1860 ஆகும். நூல் முகப்பில் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினிய உரையோடு இராமநாதபுர ஜமீந்தாரவர்களின் மேனேஜராகிய மஹராஜ ராஜஶ்ரீ பொன்னுச்சாமி தேவர் அவர்கள் கேட்டுக் கொண்டபடி யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரால் பலபிரதி பேதங்களைக் கொண்டு பரிசோதித்து சென்னப் பட்டணம் முத்தமிழ் விளக்க அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது என்று அச்சிடப்பட்டிருக்கிறது. வெளிவந்த ஆண்டு ரௌத்திரி என்றும் மாதம் ஐப்பசி என்றும் முகப்பில் குறிக்கப்பட்டிருக்கின்றன. இந்நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் முன்பாகப் பேரின்பக் கிளவி என்றும் சிற்றின்பக் கிளவி என்றும் சிறு விளக்கம் தரப்பட்டுள்ளன. நூலை இங்ஙனம் சுவடியில் அமைத்து வைத்தவர் யார் என்பது தெரியவில்லை என்று ஒரு குறிப்பும் இந்நூலில் உள்ளது. 2 ஆவதாக 1897இல் பேராசிரியர் உரையோடும் விசாகப் பெருமாள் ஐயர் எழுதிய விளக்கத்தோடும் திருக்கோவையார் சென்னையில் வெளிவந்ததை பிரிட்டிஷ் நூலகத் தமிழ்நூல் அட்டவணை அறிவிக்கின்றது. அபிதான சிந்தாமணி என்ற நூலின் மூலமாகவும் சேக்கிழாரின் பெரிய புராணம் மூலமாகவும் இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சராகப் பதவி அமர்த்தினார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வந்தான். தன் புலமையால் தென்னவன் பிரமராயன் எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான்.
மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையில் உள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே ஓரு மரத்தின் அடியில் சிவபெருமான் மானிட வடிவு எடுத்து கையில் ஏடுகள் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முன்பு சென்று மாணிக்கவாசகர் தங்கள் கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க அவர் சிவஞான போதம் என்றார். (இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல) சிவம் என்பதும் ஞானம் என்பதும், போதம் என்பதும் என்னவென்று அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர். பாண்டிய மன்னன் ஒற்றர்களிடம் அரசனின் ஆணை தாங்கிய ஓலை கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.
மாணிக்கவாசகரோ குருவின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி அந்த ஓலைச்சுவடியை குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குரு ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர இப்போது நல்ல நாளில்லை ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை ஒற்றர்கள் மூலம் பிடித்து சுட்டெரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றி விடுவித்தான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.
அன்றிரவு குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். மாணிக்கவாசகர் வெயிலில் நின்றதும் சிவபெருமான் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறிவிக்கிறான். ஊரில் உள்ள அனைவரும் வீட்டுக்கு ஒருவர் செல்கின்றனர். வந்திக் கிழவி எனும் ஒருவள் மட்டும் தன் வீட்டில் யாருமில்லாததால் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய் அதற்கு கூலியாக நான் விற்கும் பிட்டில் உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான்.
மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும் படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது மன்னவா வாதவூரரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்’ என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான். அவர் அரசவையை விட்டு திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் சிவபுராணம் திருச்சதகம் முதலிய பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திரு உத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன் பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் திருவெம்பாவை திருவம்மானை ஆகியவற்றைப் பாடினார். மேலும் பல சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்து கொண்டிருந்தார். அந்த பாடல்கள் அனைத்தும் திருக்கோவையார் என்ற பெயருடன் இருக்கிறது.
பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அப்போது இலங்கையில் புத்த மதம் மேலோங்கி இருந்தது. தில்லையம்பலத்தைப் பற்றி கேள்விப்பட்டு மன்னனும் புத்தபிட்சுக்களும் தில்லையில் தங்கள் மதத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தில்லைக்கு வந்தனர். அப்போது மன்னன் தனது ஊமை மகளையும் அழைத்து வந்தான். வந்தவர்கள் தில்லையில் தங்கி நாங்கள் சைவர்களோடு வாதம் செய்து புத்த மதத்தை நிலைநாட்ட வந்தோம் என்று தில்லை அந்தணர்களிடம் கூறினார்கள். அந்தணர்கள் கலக்கமுற்றார்கள். அன்று இரவு தில்லை நடராஜர் அந்தணர்கள் கனவில் வந்து தில்லைக்கு தற்போது வந்திருக்கும் திருவாதவூரனை அழைத்து வாதம் செய்ய சொல்லுங்கள் அவன் வெல்வான் என்று கூறினார். அந்தணர்கள் திருவாதவூரரிடம் சென்று இறைவன் கூறியதைக் கூறி வாதம் புரிய அழைத்து வந்தனர். வாதம் நடந்தது. புத்தபிட்சுக்கள் தோற்றனர். இதனைப் பொறுக்காத புத்தபிட்சுக்கள் திருவாதவூரரைத் திட்ட ஆரம்பித்தார்கள். இதனை கேட்ட திருவாதவூரர் சரஸ்வதியை வேண்ட புத்தபிட்சுக்கள் அனைவரும் ஊமைகளாயினர். அதனைக் கண்ட இலங்கை மன்னன் பேசுவோரை ஊமை ஆக்கும் ஆற்றல் இருந்தால் ஊமையைப் பேச வைக்கும் ஆற்றல் இருக்குமல்லவா என்று கூறித் தனது மகளை பேச வைக்கும் படி கூறினார். திருவாதவூரரும் இறைவனை வேண்ட மன்னனின் மகள் பேச ஆரம்பித்தாள். இதனைக்கண்ட அனைவரும் திருவாதவூரரிடம் பணிந்து சைவ மதத்திற்கு மாறினர். பின்பு அனைவருக்கும் பேசும் ஆற்றல் வந்தது. மதம் மாறிய புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விக்கு மன்னனின் மகளையே பதில் சொல்ல வைத்தார். புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்னனின் மகள் கூறிய விடைகளே திருச்சாழல் என்னும் பதிகமாக அமைந்தன.
சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி தாங்கள் யாரோ என்று வாதவூரார் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை எழுத வந்தேன், நீங்கள் பாடுங்கள் அவற்றை நான் எழுதுகிறேன் என்று கூறினார் வேதியர். அதற்கு ஒப்புக்கொண்ட மாணிக்கவாசகர் பாட பல செய்யுட்களை எழுதி முடித்தார் வேதியர். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும் ஓலைச்சுவடியின் முடிவில் “மாணிக்கவாசகன் ஓத சிற்றம்பலமுடையான் எழுதியது” என்று கையொப்பமிட்டு ஓலைச் சுவடிகளைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லை அந்தணர் ஒருவர் அவ்வோலைகளை எடுத்துப் பார்க்க அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடிகளாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த தில்லை அந்தணர்கள் இதன் பொருள் என்ன என்று வாதவூரரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜர் முன்பாக அழைத்துச் சென்ற வாதவூரர் “இந்தப் பாடல்களின் பொருள் இவரே” என்று கூறி நடராஜரைக் காட்டி விட்டு நடராஜர் இருக்கும் மூலஸ்தானத்தினுள் சென்று மறைந்தார்.