மகாபாரதம் 10. சௌப்தீக பருவம் பகுதி -2

பாஞ்சால நாட்டு இளவரசன் திருஷ்டத்யும்னனும் திரௌபதியின் செல்வர்கள் ஐவரும் பாண்டவர்களின் படைகளும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி யுதிஷ்டிரனிடன் எடுத்துச் செல்லப்பட்டது அதை கேட்டு அவன் ஸ்தப்பித்துப்போனான். பாண்டவ சகோதரர்களும் திகைத்துப் போயினர். இந்த மகாபாரதப் போரின் விளைவாக தோல்வியுற்றவர்களும் வெற்றி அடைந்தவர்களும் ஏறத்தாழ ஒரே பரிதாபகரமான நிலையில் இருந்தார்கள். இந்த விபத்து நடந்த இடத்திற்கு திரௌபதி அதிவிரைவில் அழைத்து வரப்பட்டாள். தன் செல்வர்கள் மடிந்த கிடந்ததை பார்த்த அவள் மயங்கி கீழே விழுந்து கதறி அழுதாள். அதே வேகத்துடன் அவள் பேச ஆரம்பித்தாள். அஸ்வத்தாமனை கொல்ல முடியாது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவனை வெட்டி தள்ள வேண்டும். இல்லையெனில் அவன் சிரசில் அணிந்திருக்கும் மணியை பிருங்கி அவனை அவமானப்படுத்த வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நிகழும் வரை நான் பட்டினி கிடப்பேன் என்றாள் அவனைத் தேடிப் பிடிக்க பீமன் உடனே கிளம்பினான்.

வல்லமை பெற்ற அஸ்வத்தாமனை எளிதில் பிடிக்க பீமனால் இயலாது என்பதை அறிந்த கிருஷ்ணரும் அர்ஜூனனும் பீமனோடு கிளம்பினார்கள். கங்கை கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் இருந்த அஸ்வத்தாமனை கண்டார்கள். பீமன் அவன் மீது பல அம்புகளை செலுத்தினான். அஸ்வத்தாமன் பாண்டவர்களின் வம்சம் அழிந்து போக வேண்டும் என்று எண்ணி பிரமாஸ்திரத்தை செலுத்தினான். பதிலுக்கு அர்ஜூனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமாயின் உலகம் அழியும் என அறிந்த வியாசரும் நாரதரும் உலகை காக்க நினைத்தனர். அர்ஜூனனிடம் பிரம்மாஸ்திரத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கட்டளை இட்டனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ஜூனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். அஸ்வத்தாமனுக்கு பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்து கொள்ளும் ஆற்றல் இல்லை.

பிரமாஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். அஸ்வத்தாமன் பாண்டவர் வம்சத்தையே பூண்டோடு ஒழிக்க எண்ணி பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும் என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். ஆனால் கிருஷ்ணரின் அருளால் உத்திரையின் கரு காப்பாற்றப்பட்டது. சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கிருஷ்ணர் பழித்தார். தலையில் இருந்த மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான். அறிவிலியே நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டு காட்டில் தன்னந்தனியாய் பல ஆயிரம் ஆண்டுகள் விலங்காகவும் மானுடாகவும் தவிப்பாயாக என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர். உத்தரையின் கருவில் உள்ள குழந்தை நல்லபடியே பிறந்து பரீட்சித் என்னும் பெயருடன் இந்நில உலகை ஆளுவான் என்று வியாசர் ஆசி கூறினார். சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்கு சென்றான்.

கிருஷ்ணர் அர்ஜுனன் பீமன் மூவரும் பாசறைக்கு திரும்பிச்சென்று தாங்கள் கைப்பற்றி வந்த அஸ்வத்தாமனின் மணியை திரௌபதியிடம் ஒப்படைத்தார்கள். துரியோதனன் அழிந்து விட்டான். உன்னுடைய சபதம் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது என்று தெரியப்படுத்தினார்கள் திரௌபதி ஒருவாறு மன அமைதி அடைந்தாள்.

சௌப்தீக பருவம் முடிந்தது அடுத்து ஸ்திரி பருவம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.