பீஷ்மர் தானறிந்த ஞானம் அனைத்தையும் அழிந்து போகாதவாறு யுதிஷ்டிரனிடம் கூறினார். பீஷ்மர் தான் அறிந்த அரிய ஞானத்தை யுதிஷ்டிரன் வாயிலாக உலகிற்கு எடுத்து வழங்கினார். யுதிஷ்டிரருக்கும் திருதராஷ்டிரருக்கும் பீஷ்மர் ஆறுதல் அளித்தார். மகாபாரத யுத்தம் முற்றுப் பெறும் வகையில் பீஷ்மர் ஆத்மா நிட்டையில் அமர்ந்த அவர் நிமிர்ந்திருந்த தியானத்தில் அமர்ந்தார். அவருடைய மேனியிலிருந்து அம்புகள் தானாக உதிர்ந்தது. இவ்வுலகை விட்டு வெளியேற பீஷ்மர் கிருஷ்ணனுடைய அனுக்கிரகத்தை நாடினார். கிருஷ்ணரும் அவரை ஆசிர்வதித்தார். பீஷ்மர் வடிவத்திலிருந்து ஆன்மா விண்ணுலகை நோக்கி மேலே சென்றது. அப்பொழுது விண்ணுலகிலிருந்து பூமாரி பொழிந்தது. அங்கு கிளம்பிய இசை மண்ணுலகுக்கு எட்டியது. குரு வம்ச தலைவர் பீஷ்மரை எண்ணி திருதராஷ்டிரரும் பாண்டவ சகோதரர்களும் கண்ணீர் சிந்தினர். அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து யுதிஷ்டிரன் வருந்தினான். அப்போது யுதிஷ்டிரரிடம் வியாசர் வருந்தாதே ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும் துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள் என்று ஆறுதல் சொன்னார். பின்பு தக்க முறையில் அவருடைய தேகத்தை தகனம் செய்தார்கள்.
பீஷமருடைய சாம்பலை அவர்கள் கங்கையில் கரைக்க கங்கைக்கு கொண்டு சென்றனர். கங்காதேவி மானிட வடிவெடுத்து வந்து அந்த சாம்பலை ஏற்றுக் கொண்டாள். அப்போது அவளுடைய முகத்தில் துயரம் தென்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு சொர்க்கத்தில் உள்ள அஷ்ட வசுக்களில் ஒருவனை சந்தனுவுக்காக மகனாக பெற்றேன். இவன் தலை சிறந்த தரமான பயிற்சிகள் பல பெற்று நிறை ஞானத்தை பெற்றான். யாராலும் தோற்கடிக்க முடியாத வல்லமையை பெற்றான். மானிடர்கள் எவராலும் சாதிக்க முடியாத அரும்பெரும் செயல்கள் சாதிப்பான் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் இவனோ தன் வாழ்க்கையை எளிமையாக முடிவுக்குக் கொண்டு வந்து விட்டான் என்று வருத்தத்துடன் கூறினாள்.
கிருஷ்ணன் கங்கையிடம் தாயே உன்னுடைய தமையன் தேவவிரதன் செயற்கரிய செயலை செய்து பீஷ்மர் என்னும் பெயர் பெற்றார். அவருடைய மண்ணுலக வாழ்வு ஒப்பு உயர்வு அற்றது. தர்மத்திற்கு விளக்கமாக அவர் திகழ்ந்தார். தீயவர்களை அழிக்க பரம்பொருளின் கையில் கருவியாக அமைந்திருந்தார். அம்முறையில் அவருடைய தியாகம் உச்சநிலையை அடைந்தது. அதன் பிறகு தன்னுடைய சந்ததிகளில் பொருத்தமான யுதிஷ்டிரரிடம் தம்முடைய ஞான பொக்கிஷத்தை அவர் ஒப்படைத்துள்ளார். யாவற்றுக்கும் மேலாக தர்மமே வடிவெடுத்துள்ள யுதிஷ்டிரனை அவர் சிம்மாசனத்தில் அமர்த்தி வைத்துள்ளார். இவருக்கு நிகரான மூர்த்தி மண்ணுலகிலும் விண்ணுலகிலும் இல்லை என்று கிருஷ்ணர் கங்கா தேவியிடம் கூறினார். தன் வீரச்செல்வனை பற்றிய இந்த விமர்சனத்தை கேள்விப்பட்ட கங்காதேவியும் மகிழ்வடைந்தாள். தன் செல்வனை பெருமை பாராட்டி அங்கிருந்து கிளம்பினாள்.
அனுசாஸன பருவம் முற்றியது. அடுத்து அஸ்வமேதிக பருவம்.