அரச சிம்மாசனத்தில் அமர்ந்த யுதிஷ்டிரன் ராஜ தர்மங்களில் தன் மனதைச் செலுத்தினான். ஆட்சி முறையின் ஒரு பகுதியாக அஸ்வமேத யாகம் நிகழ்த்துவது அவசியமாக இருந்தது. வியாசர் அவன் முன்னிலையில் தோன்றி அதன் அவசியத்தை அவனுக்கு எடுத்து விளக்கினார். பல அரசர்கள் தேடி வைத்திருந்த செல்வத்தில் பயன்படாமல் இருந்ததை சிற்றரசர்களிடமிருந்து சேகரிக்க வேண்டியது இந்த யாகத்தின் ஒரு பகுதி ஆகும். சிற்றரசர்களிடமிருந்து செல்வத்தையும் யாகத்திற்கு தேவையான திரவியங்களை சேகரிக்கும் பணிக்கு அர்ஜுனன் நியமிக்கப்பட்டான். யுதிஷ்டிரன் செய்யும் அந்த யாகத்திற்கு அறிகுறியாக அவன் குதிரை ஒன்றை அக்கம் பக்கங்களில் இருந்த நாடுகளுக்கு அர்ஜுனன் ஓட்டிச் சென்றான். யாகம் செய்ய தடை கூறுபவர்கள் தங்கள் நாட்டிற்குள் குதிரையின் நடமாட்டத்திற்கு ஆட்சேபனே கூறலாம். அவர்களை வெல்லுவது அர்ஜுனனின் கடமையாக இருந்தது. ஆனால் அத்தகைய தடை யாரும் கூறவில்லை. அனைத்து அரசர்களும் தங்கள் தேவைக்கு மேலிருந்த செல்வத்தை அளித்தனர். யாகத்திற்கு தேவையான திரவியங்களையும் ஏனைய பொருட்களையும் அவன் பெரிதும் இமாசலப் பிரதேசத்திலிருந்து சேகரித்துக்கொண்டான்.
அஸ்வமேதயாகம் அரங்கில் சிறப்பாக நிகழ்ந்தது சிற்றரசர்களும் நாடாளும் மன்னர்கள் பலரும் அழைக்கப்பட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த அரசர்களும் நெடுந்தூரத்துக்கு அப்பால் இருந்த அரசர்களும் அந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள். சாஸ்திரங்களில் உள்ளபடியே நடைமுறைகள் அனைத்தும் ஒழுங்காக நிகழ்ந்தது. ஏழை எளியவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. சமுதாய முன்னேற்றத்திற்கு என புதிய திட்டங்களுக்கு தேவையான செல்வம் வழங்கப்பட்டது. பயன்படாமல் இருந்த செல்வங்களை எடுத்து நல்வழியில் பயன்படுத்துவது இந்த யாகத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. சான்றோர்கள் வகுத்து வைத்திருந்த முறைப்படி யாகம் நிறைவேறியது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். யுதிஷ்டிரன் செய்த அஸ்வமேயாகம் ஒப்புயர்வு அற்றது என்று அனைவரும் கூறினர்.
அப்பொழுது யாகசாலையில் கீரிப்பிள்ளை ஒன்று வந்து சேர்ந்தது. அதனுடைய மேல்பகுதி சாம்பல் நிறமாகவும் மற்ற பகுதிகள் பொன் நிறமாகவும் இருந்தது. இந்த அதிசயத்தை பார்த்து அனைவரின் கவனமும் அதன்மேல் சென்றது. கீரிப்பிள்ளை தரையில் படுத்து புரண்டது. பிறகு எழுந்து நின்று அங்கு கூடியிருந்த அனைவரிடமும் நீங்கள் அனைவரும் அறிந்தோ அறியாமலோ யாகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்று பொய் பேசினீர்கள் என்று அது குற்றம் சாட்டியது. தாங்கள் அறிந்து பொய் ஏதும் சொல்லவில்லை என்று அனைவரும் தெரிவித்தார்கள். மேலும் கீரிப்பிள்ளை சாட்டிய குற்றச்சாட்டை தெளிவு படுத்தும்படி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.