மகாபாரதம் 16. மௌசல பருவம் பகுதி -1

கிருஷ்ணனுடைய விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை மற்றவர்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்று அவர்களை அவர்களே பெருமை பாராட்டிக் கொண்டனர். அவர்களிடத்தில் கர்வம் வரம்பு கடந்து காணப்பட்டது. துவாரகைக்கு விருந்தினராக மூன்று ரிஷிகள் வந்தார்கள். வந்தவர்களை முறைப்படி வரவேற்க வேண்டும். ஆனால் விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை வரவேற்பற்குப் பதிலாக இவர்களுக்கு நாம் தான் பொருள் உதவி செய்து ஆதரிக்கின்றோம் என்ற மனப்பான்மையுடன் இருந்தனர். மேலும் அங்கு வந்த ரிஷிகளின் திறமையை சோதிக்க அவர்கள் எண்ணம் கொண்டனர்.

ஆடவன் ஒருவனுக்கு கருத்தரித்தது போல் பெண்பால் வேஷம் போட்டு அவனை ரிஷிகள் முன்னிலையில் நிறுத்தினர். இப்பெண்ணுக்கு ஆண் பிள்ளை பிறக்குமா அல்லது பெண் பிள்ளை பிறக்குமா என்று கேட்டார்கள். அதற்கு ரிஷிகள் இவனுடைய வயிற்றில் இருக்கும் இரும்பு துண்டு ஒன்று உங்களுடைய குலம் அழிந்து போவதற்கு காரணமாக இருக்கும் என்று சபித்தார்கள். அதிருப்தி அடைந்திருந்த ரிஷிகள் அக்கணமே அந்த இடத்தை விட்டு வெளியேறினர். குதுகலத்துடன் இருந்த இளைஞர்கள் இப்போது மனம் கலங்கினர். கர்ப்பிணி வேஷம் போட்ட ஆணின் வயிற்றில் கட்டியிருந்த துணி மூட்டையில் இரும்புத் துண்டு ஒன்று இருந்ததை பார்த்தார்கள். அதை பார்த்த பின் அந்த இளைஞர்களிடம் பயம் பன்மடங்கு அதிகரித்தது. அவர்கள் அக்கணமே கிருஷ்ணனையும் பலராமனையும் நாடிச் சென்றனர். தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தை அவர்கள் இருவரிடமும் தெரிவித்தனர். இந்த இரும்புத் துண்டை தூளாக்கி சமுத்திரத்தில் போட்டுவிடும் படி பலராமன் அவர்களுக்கு தெரிவித்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். ஆனால் தற்செயலாக தூளாகத இரும்பு துண்டு ஒன்றும் சிறிதளவு இரும்புத்தூளும் கடற்கரை ஓரத்தில் விழுந்தது. இதனை அவர்கள் கவனிக்கவில்லை. இரும்பை கடலில் போட்டபின்பு தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை தடுத்து விட்டதாக இளைஞர்கள் எண்ணினார்கள். பிறகு இந்த நிகழ்ச்சியும் அவர்கள் அறவே மறந்து விட்டனர். ஆனால் கிருஷ்ணன் அதன் விளைவை அவன் நன்கு அறிந்திருந்தான்

யாதவ குலத்தைச் சேர்ந்த விருஷ்ணிகள் தங்களுடைய வாழ்வியல் முறையில் சீர்கேடு அடைந்து வந்தனர். இந்திரிய சுகபோகங்களில் அவர்கள் வரம்பு கடந்து ஈடுபட்டனர். சுகஜீவனமும் பெருமிதமான வாழ்வும் பரம்பொருளால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் என அவர்கள் எண்ணி மதுவிலும் காமத்திலும் விருஷ்ணிகள் உச்ச நிலையை அடைந்தனர். சிறிது காலத்திற்கு முன்பு விருஷ்ணிகள் மீது மூன்று ரிஷிகள் விட்ட சாபம் இப்போது வடிவெடுத்து வந்தது. கடலுக்குள் போடப்பட்ட இரும்புத் தூள்கள் நாணல்களாக வடிவெடுத்து உயர வளர்ந்திருந்தன. கடற்கரையில் இருந்த ஒரு இரும்புத் துண்டை வேடன் ஒருவன் கண்டெடுத்தான். அதை அவன் தனது அம்புக்கு கூறாக அமைத்துக்கொண்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.