யுதிஷ்டிரன் யுத்தத்திற்கு அழைத்ததும் துரியோதனன் பேசினான் என்னுடைய நண்பர்கள் அனைவரும் எனக்காக உயிரை கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் பட்டிருக்கும் கடனை நான் உங்கள் அனைவரையும் அழித்து அதன் வாயிலாக அவர்களுக்கு என் கடனை திருப்பி செலுத்துவேன். ஆனால் இப்பொழுது என்னிடம் ஆயுதம் ஏதுமில்லை. கவசம் எதுவும் இல்லை. ரதம் இல்லை. நீங்கள் அனைவரும் அறநெறி பிறழாத போர்வீரர்கள். ஆயுதம் இல்லாமல் இருக்கின்ற என்னை நீங்கள் தாக்குதல் பொருந்தாது என்றான். அதற்கு யுதிஷ்டிரர் அறநெறி இல்லாத முறையை கையாண்டு சிறுவனாகிய அபிமன்யுவை ஆயுதம் அற்றவனாக நீங்கள் செய்து வைத்தீர்கள். நிராயுதபாணியாக இருந்த பொழுது அவனை மகாவீரர்கள் ஒன்று கூடி அவனை கொன்றீர்கள். உன்னை அணுஅணுவாக சித்ரவதை செய்து கொன்றாலும் தகும். ஆனால் இது போன்று நாங்கள் செய்ய மாட்டோம். உனக்கு தேவையான ஆயுதங்கள் நாங்கள் தருகின்றோம். நாங்கள் அனைவரும் தனித்தனியாக உன்னுடன் யுத்தம் செய்கின்றோம். எங்களில் யாரேனும் ஒருவரை நீ கொன்றால் மற்றைய நான்கு பேரும் வனவாசத்தை நோக்கி செல்கின்றோம். அப்போது எதிரி இல்லாத சாம்ராஜ்யத்தை ஏற்று அனுபவிப்பாயாக என்று கூறினார்.
பீமன் இடையில் துரியோதனனிடம் பேசினான். உன்னுடைய சகோதரர்கள் அனைவரையும் நான் அழித்து விட்டேன். அதற்கெல்லாம் மேலாக உன்னையும் கொல்ல வேண்டும் என்று நான் உறுதி கொண்டிருக்கின்றேன். ஆகையால் தயவு செய்து என்னுடன் போர் புரிய வா என்றான். அதற்கு துரியோதனன் உன்னுடன் கதை யுத்தம் செய்ய வேண்டுமென்ற ஆசை நெடுநாளாக என்னிடம் இருக்கிறது. இப்போது கதை ஆயுதம் ஒன்று தான் என்னிடம் இருக்கிறது. உன்னிடத்தில் க்ஷத்திரனுக்குரிய பாங்கு இருக்குமாகில் நீ அணிந்திருக்கும் கவசங்களையும் ஏனைய ஆயுதங்களையும் புறக்கணித்துவிட்டு தரையில் நின்று என்னுடன் நீ சண்டை புரிவாயாக. ஏனென்றால் இப்பொழுது என்னிடத்தில் ரதம் ஏதும் இல்லை என்றான். இந்த நிபந்தனைக்கு இருவரும் ஒத்துக்கொண்டனர். இருவரும் குருஷேத்திரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள். யுத்தம் துவங்கியது.
யுத்த நியதிகளை இருவரும் கடைபிடித்தனர். அவரவர் திறமைகளை இருவரும் நன்கு வெளிப்படுத்தினர். பார்ப்பதற்கு ஒருவருக்கொருவர் பொருத்தமான எதிரியாகவே தென்பட்டார்கள். திறமையை காட்ட துவங்கிய சிறிது நேரத்தில் சண்டை உயிரை வாங்கும் விதமாக வடிவெடுத்தது. அத்தகைய சண்டையிலும் போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை. பீமன் வல்லமை வாய்ந்தவன். துரியோதனன் திறமைசாலி. இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது. கிருஷ்ணர் யுத்த நெறிக்கு மாறாகப் போர் செய்தால் தான் அவனை வீழ்த்தமுடியும் என்பதை உணர்ந்து அவன் தொடையைப் பிளக்க வேண்டும் என அர்ஜூனனிடம் குறிப்பால் தெரிவிக்க அர்ஜூனனும் பீமன் பார்க்குமாறு தன் தொடையை தட்டிக்காட்டினான்.