தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 14 சீர்காழி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 14 வது தேவாரத்தலம் சீர்காழி. புராணபெயர் திருக்காழி. மூலவர் சட்டைநாதர், பிரமபுரீஸ்வரர், தோணியப்பர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால் சுவாமித் இத்திருநாமத்தைக் கொண்டார். அம்பாள் பெரிய நாயகி, திருநிலைநாயகி. தலமரம் பாரிஜாதம், பவளமல்லி. தீர்த்தம் பிரம தீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், வைணவ தீர்த்தம், இராகு தீர்த்தம், ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்திய தீர்த்தம், கௌதம தீர்த்தம், வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேது தீர்த்தம், அண்ட தீர்த்தம், பதினெண்புராண தீர்த்தம், புறவ நதி, கழுமல நதி, விநாயக நதி என்று 22 தீர்த்தங்கள் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். இக்கோயிலுக்குள்ளேயே திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், வெளியே தனியாக உள்ளனர். சுவாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் நடுவே திருஞானசம்பந்தர் சன்னதி உள்ளது. மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இத்தல விநாயகர் ரொணம் தீர்த்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கணநாத நாயனார் அவதரித்த தலம். கோவில் வளாகத்தில் கணநாத நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது
இத்தலத்திற்குப் பன்னிரண்டுத் திருப்பெயர்கள் உண்டு.

1, பிரம்மபுரம் – பிரம்மன் வழிபட்டதால் இப்பெயர்.

2, வேணுபுரம் – இறைவன் மூங்கில் வடிவில் தோன்றினான்.

3, புகலி – சூரனுக்குப் பயந்த தேவர்களின் புகலிடமாய் விளங்கியது.

4, வெங்குரு – குரு பகவான் வழிபட்டது.

5, தோணிபுரம் – பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சி தந்ததால் இப்பெயர்.

6, பூந்தராய் – பூமியைப் பிளந்து சென்று இரணியாக்கதனைக் கொன்ற வராகமூர்த்தி (திருமால்) வழிபட்டது.

7, சிரபுரம் – சிரசின் (தலை) கூறாய் உள்ள இராகுக் கிரகம் பூசித்தது.

8, புறவம் – புறா வடிவத்தில் வந்த அக்கினியால் சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றது.

9, சண்பை – சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தம் குலத்தவர்களால் நேர்ந்த பழி தீரக் கண்ணபிரான் வழிபட்டது.

10, சீகாளி (ஸ்ரீகாளி) – காளிதேவி சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க வழிபட்டது.

11, கொச்சைவயம் – மச்சகந்தியைக் கூடிய பழிச்சொல் நீங்கப் பராசரர் வழிபட்டது.

12, கழுமலம் – மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டது.

சீர்காழியில் உள்ள இவ்வாலயம் மிகவும் பெரியதாக ஊரின் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அமைந்துள்ளது. கிழக்கு திசையிலுள்ள ராஜகோபுரம் தான் ஆலயத்தின் பிரதான வாயில். இத்தலத்தில் இறைவனுக்கு மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. கோவிலில் நுழைந்ததும் ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தினுள் சென்றால் பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதி கிழக்கு நோக்கி கோவிலின் குளத்தருகே அமைந்துள்ளது. இவருக்கு வலப்பக்கம் திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். சின்னஞ்சிறிய குழந்தை வடிவில் இடது கையில் சிறு கிண்ணம் இருக்கும். இறைவி ஞானத்தைப் பாலில் குழைத்து கிண்னத்தில் கொடுத்ததின் அடையாளமாக கிண்ணம் உள்ளது. கோவிலின் வடபகுதியில் திருநிலைநாயகியின் கோவிலும் இதன் முன்னே பிரம்மதீர்த்தமும் உள்ளன. இந்த பிரம்ம தீர்த்தக்கரையில் தான் இறைவி திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தருளினார். கோவிலின் உள்ளே ஒரு கட்டுமலை மீது தோணியப்பர் பெரியநாயகி சமேதராகக் காட்சி தருகின்றார். தோணியப்பர் மற்றும் பெரியநாயகியின் திரு உருவங்கள் சுதையாலானவை. இச்சந்நிதியின் மேல் தளத்திற்கு சில படிகள் ஏறிச் சென்றால் கட்டுமலை உச்சியில் தெற்கு நொக்கியவாறு சட்டைநாதர் சந்நிதி உள்ளது. சட்டைநாதர் பெயரிலேயே தேவஸ்தானம் விளங்குகிறது. குறுகலான வழியே நுழைந்து மரப்படிகளேறித் தரிசிக்க வேண்டும்.

ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாக தரித்து ஓம் என்ற பிரணவமந்திரத்தை தோணியாக்கி உமா மகேஸ்வரராக வருகையில் ஊழிக்காலத்திலும் அழியாத இந்த சீர்காழி தலத்தை பார்த்தார். மூல க்ஷேத்திரம் என்று தோணியுடன் இத்தலத்தில் எழுந்தருளி தோணியப்பர் என பெயர் பெற்றார். அம்பாள் திருநிலை நாயகி எனப்பட்டாள். இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக லிங்க வடிவிலும் ஆணவங்களை அழிப்பவராக சட்டை நாதராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். இவர்கள் திருஞானசம்பந்தருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்திருக்கின்றார்கள். இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக உள்ளது. உச்சியில் உள்ள அடுக்கில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். நடு அடுக்கில் உமாமகேஸ்வரர் உள்ளனர். இவரை தோணியப்பர் என அழைக்கிறார்கள். கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாக திகழ்கிறார். மகாபலி சக்கரவர்த்தியை அழித்த தோஷம் விஷ்ணுவிற்கு பிடித்து கொண்டது. விஷ்ணு வேறு தான் வேறு இல்லை என்பதால் அவரது தோலை சிவன் சட்டையாக அணிந்து கொண்டார். ஆனால் விஷ்ணுவை சிவன் அழித்து விட்டதாக நினைத்து மகாலட்சுமி தலையில் பூ வைத்து கொள்ளாமல் ஆழ்ந்த கவலையில் இருந்தாள். இப்போதும் கூட இவரது சன்னதிக்கு வரும் பெண்களை பூ வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. ஆண்கள் சட்டை அணியக்கூடாது. பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம். பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம். இத்தல அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார்.

காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம். இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி வடை மாலை அணிவித்து பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது. உரோமச முனிவர் கயிலை சென்று சிவனை நோக்கி தவம் செய்து இறைவா பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தரவேண்டும் என வேண்டினார்.

ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக்கொண்டார். வாயுவால் மலையை அசைக்க கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க வாயுவின் வேகத்தினால் சிறு பகுதி பெயர்ந்தது. இறைவனின் அருளால் இந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்த்தன. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான் பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.

சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும் இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர். திருஞானசம்பந்தர் பிறந்து நடந்து மொழி பயின்ற அவரது வீடு திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. தற்போது அது தேவாரப் பாடசாலையாக இயங்குகின்றது. பிற்கால சோழ, பல்லவ, விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் மொத்தம் நாற்பத்தாறு உள்ளன, இரண்டாம் மூன்றாம் குலோத்துங்கச் சோழன், வீரராஜேந்திரன், இராசகேசரி வர்மன், கிருஷ்ணதேவராயர் காலத்திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சீர்காழி அருணாச்சலக்கவிராயர் இத்திருக்கோயிலுக்கு தலபுராணம் பாடியுள்ளார். பிரமன், குருபகவான், திருமால், சிபிச்சக்கரவர்த்தி, காளி, பராசர முனிவர், உரோமசமுனிவர், இராகு, கேது, சூரியன், அக்னி, ஆதிசேடன், வியாசமுனிவர், முருகப் பெருமான் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தரின் நட்பைப் பெற்று அப்பர் எனப் பெயர் பெற்ற தலம். சுந்தரர் இங்கு வந்தபோது திருஞானசம்பந்தப்பெருமான் அவதரித்த இடம் என்று மிதிப்பதற்கு அஞ்சி ஊர் எல்லையில் நின்று பாட சுந்தரருக்கு அங்கேயே இறைவன் காட்சி தந்த தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #13 திருக்குருகாவூர் வெள்ளடை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 13 வது தேவாரத்தலம் திருக்குருகாவூர் வெள்ளடை. புராண பெயர் குருகாவூர். கோவிலின் பெயர் வெள்ளடை. தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருக்குருகாவூர் வெள்ளடை என்று அறியப்பட்ட இத்தலம் இப்போது திருக்கடாவூர் என்று அழைக்கப்படுகிறது. மூலவர் சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர். மூலஸ்தானத்தில் வெள்ளடைநாதர் சதுர பீடத்தில் சிறிய பாணலிங்கமாக சுயம்பு மூர்த்தியாக காட்சிதருகிறார். அம்பாள் நீலோத்பலவிசாலாட்சி, காவியங்கண்ணி. தீர்த்தம் பால் கிணறு. தலவிருட்சம் வில்வம். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு மேலே குடையும் இரண்டு சாமரங்களும் இருக்கிறது. முருகன் தெற்கு திசை நோக்கி வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென் திசையை பார்த்திருப்பதால் இவர் இங்கு குரு அம்சமாக வீற்றிருக்கின்றார். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோஷ்டத்தில் சட்டைநாதர் துர்க்கையம்மன் உள்ளனர். துர்க்கை எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள் . ஒரு பிரகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. நவக்கிரக சன்னதி கிடையாது. பிரகாரத்தில் துர்வாசர் சாந்த கோலத்தில் சிரித்தபடி காட்சி தருகிறார். இவர் இடது கையில் ஏடு வைத்து வலக்கையில் அருள் செய்தபடி காட்சி தருகிறார். சிவலோக நாதர், பூலோகநாதர், பைரவர், சூரியன், சந்திரன், மாவடி விநாயகர் ஆகியோரும் உள்ளனர்.

சுந்தரர் தனது தொண்டர் கூட்டத்துடன் சீர்காழியிலிருந்து யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. அவரால் இக்கோவிலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இத்தலத்து சிவனை தரிசிக்காமல் சென்றுவிட்டார். வழியில் அவருக்கும் அவர் தொண்டர் கூட்டத்தினருக்கும் பசியெடுத்தது. அப்போது ஒரு முதியவர் அவர் முன்பு சென்றார். சுந்தரரிடம் அவர் அருகில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி தான் அவ்விடத்தில் சிவனடியார்களுக்கு அன்னம் பரிமாறுவதாகவும் அங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்படியும் கூறினார். அதன்படி சுந்தரரும் அவருடன் சென்ற அடியார்களும் சாப்பிடச் சென்றனர். அவர்களை முதியவர் உபசரித்தார். அதன் பின்பு சாப்பிட்ட களைப்பில் அன்னப்பந்தலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் சுந்தரர். சற்றுநேரம் கழித்து அவர் விழித்தபோது அங்கு அன்னதான பந்தலோ சாப்பாடு பரிமாறியதற்கான தடமோ தெரியவில்லை. வியந்த சுந்தரர் தனக்கு அன்னம் பரிமாற வந்தது சிவன் தான் என அறிந்து கொண்டார். பின்பு சிவனை வேண்டவே அவர் இத்தலத்தை அடையாளம் காட்டினார். அதன்பின்பு இங்கு வந்த சுந்தரர் சிவனை வேண்டி பதிகம் பாடினார். சுந்தரருக்கு சிவன் அன்னம் பறிமாறிய விழா சித்ராபவுர்ணமியன்று நடக்கிறது. இங்குள்ள காவியங்கண்ணி அம்பிகைக்கு சுகப்பிரசவ நாயகி என்ற பெயர் உண்டு. அம்பிகைக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதையே பிரசாதமாக எடுத்துச்செல்கிறார்கள். இதனால் சுகப்பிரசவம் ஆகும்.

சைவ சமயம் தழைக்க பாடுபட்ட திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க திருஞானசம்பந்தர் காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். திருஞானசம்பந்தருக்கு காட்சி தந்த சிவன் அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும் இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த திருஞானசம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன் இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர் பாவம் நீங்கப்பெற்றார். இவ்வாலயத்தின் தீர்த்தமான இக்கிணறு பால்கிணறு என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தை அமாவாசை நாளன்று இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சமயத்தில் இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறுகிறது. திருஞானசம்பந்தருக்காக இங்கு தை மாத அமாவாசையன்று கங்கை நதி கிணற்றில் பொங்கியது. இதன் அடிப்படையில் தற்போதும் தை அமாவாசையன்று ஒருநாள் மட்டும் இந்த தீர்த்தம் திறக்கப்படுகிறது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது. பிற்காலத்தில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. கோயிலில் முதலாம் குலோத்துங்கன், முதலாம் இராசேந்திரன், விக்கிரமசோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. திருஞானசம்பந்தர். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #12 கீழைத்திருக்காட்டுப்பள்ளி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 12 வது தேவாரத்தலம் கீழைத்திருக்காட்டுப்பள்ளி. மூலவர் ஆரண்யேஸ்வரர், ஆரண்யசுந்தரர். அம்பாள் அகிலாண்டநாயகி. அம்பாள் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார். தலமரம் பன்னீர் மரம். தீர்த்தம் அமிர்த தீர்த்தம். இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காட்டழகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. மூலவர் மேல் உள்ள விமானம் துவைதளம் என்று அழைக்கப்படுகிறது. பிரகாரத்தில் தசலிங்கம் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் உள்ளது. இந்த அமைப்பை திருஞானசம்பந்தர் தன்னருகே தசலிங்கம் கொண்ட உடையார் என பாடியிருக்கின்றார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி கிடையாது. இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீபிரம்மேஸ்வர லிங்கத்தை வழி படுவோர் 100 அஸ்வமேத யாகங்கள் செய்த பலனைப் பெறுவார்கள் என்று புராண வரலாறு சொல்கிறது.

இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. சுப்பிரமணியர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பமுள்ளது. பிரகார வலம் முடித்து வாயில் நுழைந்தால் மண்டபத்தில் மேற்கு நோக்கிய சுவாமி சந்நிதியும் இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் ஒரு சேரத் தரிசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளனர். சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி ஆறு பேருடன் காட்சி தருகிறார். இவர் ராஜயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்ட இத்தலத்திலுள்ள விநாயகர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருக்கின்றது. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனம் இங்கு இல்லை. நண்டு இவருக்கு வாகனமாக இருப்பதால் மூசிக வாகனம் இல்லை. ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. அவரது பெயரால் சுவாமி ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாவும் வரலாறு உள்ளது. கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.

பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்ற இந்திரன் விருத்திராசுரன் அசுரனை அழித்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோக தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க குருவிடம் ஆலோசனை செய்தான். பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன் இத்தலம் வந்தான். அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன் சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன் சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன் அருள் செய்தார். இவரே இங்கு ஆரண்யேஸ்வரராக காட்சி தருகிறார். இக்கோயிலுள் பிரம்மேசர் முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. இந்திரன், நண்டு ஆகியோர் வழிபட்டுள்ளனர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #11 திருவெண்காடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 11 வது தேவாரத்தலம் திருவெண்காடு. மூலவர் சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர், திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் பிரமவித்யாநாயகி. மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து சுவேதாரண்யரை கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள். நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ வலது மேற்கரத்தில் அக்கமாலை உள்ளது. 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும். தலமரம் வடஆலமரம், கொன்றை, வில்வம். தீர்த்தம் சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள். நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் தல விருட்சத்தின் கீழ் உள்ளது. பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும் மெய்கண்டார் அவதரித்ததும் இங்கு தான்.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர் மெய்கண்டார் சன்னதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது. இத்தலத்தில் சந்திரன் வழிபட்ட லிங்கம் உள்ளது. கரையில் சூரிய தீர்த்த லிங்கம் உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சன்னதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சன்னதி தனிக் கோயிலாகவுள்ளது. இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் சுவேதாரண்யர், அகோரர், நடராசர் என 3 மூர்த்திகள் உள்ளனர். பிரம்மவித்யாநாயகி, துர்க்கை, காளி என 3 அம்பாள் உள்ளனர். சூரிய, சந்திர, அக்கினி என 3 தீர்த்தங்கள் உள்ளது. வடஆலமரம், கொன்றை, வில்வம் என 3 தலவிருட்சம் என்று எல்லாமே மூன்றாக உள்ளது.

சிவபெருமான் பக்தர்களுக்காக 64 வித உருவங்களில் காட்சியளித்துள்ளார். இவர் 43 வது உருவம் ஆகும். சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தி இத்தலத்தில் மட்டுமே உள்ளார். இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம். பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது. இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. இவர் இங்கு நவதாண்டவம் புரிந்தார். எனவே ஆதி சிதம்பரம் என்றும் பெயர் உள்ளது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை உள்ளது. ஸ்படிக லிங்கமும் சிதம்பர ரகசியம் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது. இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே என்பதால் அகோரமூர்த்தி எனப்படுகிறார். மூலவர் அகோரமூர்த்தியும் உற்சவ அகோரமூர்த்தியும் இருவருமே இடது காலை முன் வைத்து வலக்காலை அடியெடுத்து வைப்பது போல் தன் நடையழகைக் காட்டும் விதமாக சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஞாயிறு இரவு 12:00 மணிக்கும் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார். திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வமரம் உள்ளது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது. காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.

திருஞானசம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும் மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து அம்மா என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். திருஞானசம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்பாள் சன்னதியின் பிரகாரத்தில் உள்ளது. சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது. பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்த கோயில் இது.

பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று நந்தி தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்தது. நந்திதேவர் சிவனிடம் முறையிட சிவன் அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சுவேதாரண்யவரர் சன்னதி மண்டபத்தில் இருக்கும் நந்தியின் உடம்பில் அசுரன் தாக்கிய காயங்களாக ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. மூலவர் உட்புறச் சுவரில் தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், என்னும் முக்குளங்களிலும் முறையே நீராடி மூலவர் சுவேதாரண்யேஸ்வரை வழிபட்டால் பெரும் பலனும் நன்மக்கட்பேறும் இறைவன் அருளால் கிடைக்கும். பிரம்மா, விஷ்ணு, இந்திரன், ஐராவதம் வெள்ளையானை, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். இக்கோயிலில் சோழ,பாண்டிய,விஜய நகர அரசர்களின் கல்வெட்டுக்கள் நிறைய உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #10 திருப்பல்லவனீச்சுரம் (காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார்)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 10 வது தேவாரத்தலம் மூலவர் பல்லவனேஸ்வரர். சிவன் பெரிய லிங்கமாக காட்சி தருகிறார். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் சவுந்தர்யநாயகி. தலமரம் மல்லிகை, புன்னை (தற்போதில்லை). தீர்த்தம் காவிரி, ஜானவி, சங்கம தீர்த்தம். இங்கு தலவிநாயகராக அனுக்கை விநாயகர் அருள்புரிகிறார். ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்துடம் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு எதிரே வங்காளவிரிகுடா கடல் உள்ளது. சுவாமி கடலை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் சுவாமியை நோக்கி மேற்கு பார்த்தபடி உள்ளது. பிரகாரத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது. கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி நதி வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காவிரி கடலுக்குள் புகும் இடம் என்பதால் காவிரி புகும்பட்டினம் என்றழைக்கப்பட்ட இவ்வூர் காவிரிப்பூம்பட்டினம் என்று மருவி தற்போது பூம்புகார் என்றழைக்கப்படுகிறது.

பட்டினத்தார் தனிச்சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார் அவரது மனைவி அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது. இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காக விழா எடுக்கப்படுகிறது. விழாவிற்கு அடியார் உற்சவம் என்று பெயர். கொடிமரம் கிடையாது. ஆடி மாதத்தில் பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும். மருதவாணராக பிறந்த சிவன் அவரை வளர்த்த சிவசர்மா சுசீலை தம்பதியர், பட்டினத்தார், அவரது மனைவி சிவகலை, பட்டினத்தாரின் தாய் ஞானகலாம்பிகை, பட்டினத்தாரின் சீடர் பத்ரகிரியார், நாயடியார் மற்றும் முருகனை மடியில் அமர்த்தியபடி குகாம்பிகை ஆகியோர் இங்கு உற்சவ மூர்த்திகளாக இருக்கின்றனர்.

முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர் ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர் கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே திருவெண்காடர் சிவனை வழிபட்டார். இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன் அதே ஊரில் வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர் சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார். ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன் மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர் மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார். ஒருசமயம் வாணிபம் செய்து விட்டு திரும்பிய மருதவாணர் தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர் மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். திறந்தவருக்கோ அதிர்ச்சி அதில் தவிடு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்ப அவன் தவிட்டு எருவைக்கொண்டு வந்ததைக் கண்டவர் கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர் இங்கு சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார். தனது இல்லற வாழ்க்கையை முடித்து முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன் தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு சென்னை திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர் பட்டினத்தார் என்றழைக்கப்பட்டார். இவருக்கு அருள் செய்த சிவன் இத்தலத்தில் காட்சி தருகிறார்.

காலவ மகரிஷி, அகத்தியர், பல்லவ மன்னன் ஆகியோர் இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார். மாறவர்மன் திருபுவனச் சக்ரவர்த்தி சுந்தரபாண்டியனது 17-ஆம் ஆட்சியாண்டில் இராஜாதி ராஜ வளநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்துக் கோயிலுக்கு நிலம் வழங்கியதையும் மற்றும் சாலி வாகனசகம். கலி 4775 சகம் 1670 (கி. பி. 1757) ஜய வருடம் ராயரவுத்த மிண்ட நாயனார் முதலியோர் திருச்சாய்க்காட்டுச்சீனம் காவிரிப்பூம்பட்டினம் மாகாணம் பல்லவனீச்சரக் கோயிலுக்குத் திருப்பணிக்கும் வழிபாட்டிற்கும் நிலம் வழங்கிய செய்தியை இங்குள்ள இரு வெவ்வேறு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இக்கோவில் இறைவனை காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனேஸ்வரர் சிறப்புகளைப் குறிப்பிட்டு இறைவனை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள் தீ வினையும் நோயும் இல்லாதவராய் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர்கள் என்று குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #9 திருச்சாய்க்காடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 9 வது தேவாரத்தலம் திருச்சாய்க்காடு. புராண பெயர் மேலையூர். மூலவர் சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர், இந்திரேஸ்வரர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் குயிலினும் நன்மொழியம்மை. தலமரம் பைஞ்சாய், கோரை. தீர்த்தம் காவிரி, ஐராவத தீர்த்தம். பைஞ்சாய் எனும் கோரைப்புற் காடாக இருந்ததால் இத்தலம் இப்பெயர் பெய்ற்றது. காசிக்குச் சமமான சிறப்புள்ள ஆறு தலங்களுள் இக்கோவிலும் ஒன்று. மற்றவை 1. திருவெண்காடு 2. மயிலாடுதுறை 3. திருவிடைமருதூர் 4. திருவையாறு 5. திருவாஞ்சியம். கோயிலுக்கு தெற்கில் கோயில் குளம் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகைநாயனார் துணைவியாருடன் உள்ள சன்னதிகள் உள்ளன. விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சன்னதி உள்ளது. வெளவால் நெத்தி மண்டபத்தில் வலதுபக்கம் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சன்னதியும் உள்ளன.

இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். ஒரு திருமுகமும் நான்கு திருக்கரஙளும் கொண்டு அருகில் மயிலுடன் காட்சி தருகிறார். ஒரு கரத்தில் கோதண்டம் ஒரு கரத்தில் அம்பு ஒரு கரத்தில் வில் மற்றெரு கரத்தில் கொடியுடன் காட்சி தருகின்றார். இத்திருமேனியின் கீழ் திருசெந்திலாண்டவர் என்று பொறிக்கப்பட்டுள்ளது. கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டர மணியை அணிந்திருக்கிறார். எதிரிகளை அழிக்க சிக்கலில் அம்பாள் முருகனுக்கு வேல் கொடுத்தது போல் சிவன் இந்த வீர கண்டரமணி கொடுத்துள்ளார். கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டினான். அதில் மாடக்கோயில்கள் தான் அதிகம். மாடக்கோயில் என்றால் யானையால் புக முடியாத கோயில் என்பதாகும். இக்கோயிலும் ஓர் மாடக்கோயிலாகும்.

63 நாயன்மார்களில் ஒருவர் இயற்பகை நாயனார். இவர் பிறந்து முக்தியடைந்தது இத்தலத்தில் தான். இவரது மனைவியும் சிறந்த சிவ பக்தை. இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம் நீ கேட்டதையெல்லாம் இல்லை என்று கூறாமல் அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை என்றார். இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார். அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர் நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும் என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். சுற்றத்தார் அவர்களைத் தடுத்தனர். இயற்பகையார் அவர்களை எல்லாம் வென்றார். ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம் என்கிறார். இயற்பகையாரும் அதன்படி செய்தார். திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து வானத்தில் அன்னை உமையவளுடன் தோன்றி நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து என் திருவடி வந்து சேர்க எனக்கூறி மறைந்தார்.

இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன் அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில் இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். எனவே தான் அம்மனுக்கு குயிலினும் இனிமொழியம்மை என்ற திருநாமம் ஏற்பட்டது. உடனே சிவன் தோன்றி இந்திரா இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல் இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக என அருள்புரிந்தார். உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம், இந்திரனின் தாயார், ஆதிசேடன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சோழர் கால கல்வெட்டுகள் பத்தும் பாண்டியரது மூன்றும் ஆக பதிமூன்று கல்வெட்டுகள் உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #8 திருக்கலிக்காமூர் (அன்னப்பன் பேட்டை)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 8 வது தேவாரத்தலம் திருக்கலிக்காமூர். மூலவர் சுந்தரேஸ்வரர். இத்தல இறைவன் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் சுந்தராம்பாள், அழகுமுலையம்மை, அழகம்மை. தீர்த்தம் சந்திர தீர்த்தம், தலவிருட்சம் வில்வம். உப்பனாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. கொடிமரம் கிடையாது. சிறிய கோயில். பிரகாரத்தில் சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர மகரிஷி காட்சி தருகிறார். கோஷ்டத்திலுள்ள துர்க்கையம்மன் எட்டு கரங்களுடன் காட்சி தருகிறார். பிரகாரத்தில் விஸ்வநாதர், அகிலாண்டேஸ்வரி அம்பாளுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு சன்னதி உள்ளது. இத்தலவிநாயகர் செல்வசித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வில்வவனநாதர் சன்னதியும் உள்ளது. கலி (துன்பம்) நீக்கும் சிவன் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர் திருக்கலிக்காமூர் என்று அழைக்கப்படுகிறது. நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் வாகனமின்றி நின்ற கோலத்தில் உள்ளனர். இங்கு விநாயகர் சன்னதிக்கு முன்புறம் துவாரபாலர்கர்கள் போல இரண்டு விநாயகர் இருக்கின்றனர். கடற்கரை நதிக்கரைகளில் உள்ள சிவன் கோயில்களில் விழாவின் போது சிவன் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தநீராடுவார். ஆனால் இத்தலத்தில் மாசி மகத்தன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். முற்காலத்தில் இக்கோயிலில் சிவன் சன்னதி மட்டுமே இருந்தது.

வணிகன் ஒருவன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டான். திருமுல்லைவாயில் அடைந்து அத்தல இறைவனிடம் தன் வயிற்று வலியைப் போக்கி அருளுமாறு வேண்டினான். அவனூடைய வயிற்று வலியை தீர்க்காது வேறொரு தலத்திற்கு அவனுக்கு வழிகாட்டினார் இறைவன். கடற்கரை ஓரமாகவே நடந்து வந்த அவன் மீனவர் ஒருவன் வலையில் சிக்கிய ஒரு அழகிய அம்பாள் சிலையைக் கண்டான். சிலையை தூக்கி வந்த அவர் இத்தலம் அருகில் வந்தபோது வலி நின்றுவிட்டது. அதன் பின்பு இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்ததைக்கண்ட அவர் அம்பிகையையும் இங்கேயே பிரதிஷ்டை செய்தார். இந்த அம்பிகை கடலில் கிடைக்கப்பெற்றவள் என்பதால் வருடத்தில் ஒருமுறை இவளை பிறப்பிடமான கடலுக்கு கொண்டு சென்று தீர்த்த நீராட்டி வருகிறார்கள்.

சத்தி என்னும் முனிவர் தீவிர சிவபக்தர். இவர் திரசந்தி என்பவளை மணந்து கொண்டார். திரசந்தி கர்ப்பமுற்றபோது சத்தி முனிவரை உதிரன் என்னும் அசுரன் கொன்றுவிட்டான். திரசந்திக்கு ஒரு மகன் பிறந்தான். தாயின் மடியில் தவழ்ந்த குழந்தை தனது தாய் கணவனை இழந்த பெண் இருந்ததைக் கண்டு வருந்தியது. பராசரர் என்று அழைக்கப்பட்ட இக்குழந்தை வேதத்தில் புலமை பெற்று மகரிஷியானார். தன் தந்தையை கொன்ற அசுரன் உதிரனை அழிக்க பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். இந்த யாகத்தின் பலனைக்கொண்டு உதிரனை அழித்தார். அசுரனாக இருந்தாலும் உயிரைக் கொலை செய்ததால் இவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க அவர் பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார். பராசர மகரிஷிக்கு அழகு பொருந்தியவராக காட்சி தந்ததால் இவர் சுந்தரேஸ்வரர் என்று பெயர் பெற்றார். வில்வ வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் இவருக்கு வில்வவன நாதர் என்றும் பெயருண்டு. இங்கு உள்ள சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை நோய் நீங்கி செல்வம் பெருகும் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #7 தென்திருமுல்லைவாயில்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 7 வது தேவாரத்தலம் ஆகும். மூலவர் முல்லைவனநாதர், மாசிலாமணீசர், யூதிகாபரமேஸ்வரர். இறைவன் மூன்றரை அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம். அம்பாள் அணிகொண்ட கோதையம்மை. சத்தியானந்த சவுந்தரி. தலமரம் முல்லை தீர்த்தம் சக்கர பிரம்ம சந்திர தீர்த்தங்கள். எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும் இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் பள்ளியறை இல்லை பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்பாள் வழிபட்டதால் சிவபெருமான் குருவாக இருந்து அம்பாளுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். எனவே இங்கு பள்ளியறையும் பூஜையும் கிடையாது. இத்தலத்தின் வாயு திசையில் உள்ள கிணற்றில் கங்கை வாசம் செய்வகிறாள். திருமுல்லைவாசல் ஒரு கடற்கரைத் தலம். உப்பனாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு ராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தவுடன் நேரே பலிபீடம் கொடிமரம் நந்தி மண்டபம் உள்ளது. உள் பிராகரத்தில் வரசக்தி விநாயகர் வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முக சுப்பிரமணியர் தட்சிணாமூர்த்தி பைரவர் திருஞானசம்பந்தர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன் ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய வளவன் தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் ரிஷபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார். எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல் என்று பெயர் வந்தது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம். இத்தலம் 1300 வருடங்களுக்கு முன் கிள்ளி வளவனால் கட்டப்பட்டது. உமையம்மை இந்திரன் கார்கோடகன் ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். அக்னி திசையிலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சந்திரன் தனக்கிருந்த நோயைப் போக்கிக் கொண்டார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

34. தென்திருமுல்லைவாயில் (திருமுல்லை ...

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #6 மகேந்திரப்பள்ளி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 6 வது தேவாரத்தலம் திருமயேந்திரப்பள்ளி. புராணபெயர் திருமயேந்திரப்பள்ளி. மூலவர் திருமேனியழகர், சோமசுந்தரர். பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் வடிவாம்பாள், வடிவாம்பிகை, வடிவம்மை. தலமரம் கண்டமரம், தாழை, வில்வமரம். தீர்த்தம் மயேந்திர தீர்த்தம் என்கின்ற இந்திர தீர்த்தம். சிவன் அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி திருமேனியழகர் என்றும் அம்பாள் வடிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு வந்த திருஞானசம்பந்தர் சுவாமியை அழகர் என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். இராஜகோபுரம் வழியே உள்ளே சென்று வெளிப் பிரகாரம் வலம் வந்தால் விநாயகர், காசி விசுவநாதர், ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் திருமால், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் ஆகியோரைக் காணலாம். பிரகார வலம் முடித்து அடுத்துள்ள வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலது புறம் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் உள்ளே சென்றால் வலது புறம் நடராச சபையில் நடராஜருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனியாக மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். சிவன் சன்னதி சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார். பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், மனைவியுடன் இருக்கிறார். விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர். விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி இல்லை. முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மகேந்திரப் பள்ளி தலத்தில் சிவபெருமானை அழகர் என்று அழைக்கிறார்கள்.

இந்திரன் கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டதால் அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான். விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன் பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டான். அதில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும். இந்திரன் (மகா) வழிபட்டதால் மகேந்திரப்பள்ளி என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. பண்டை நாளில் மன்னன் ஆண்டு வந்த பகுதியான கோயிலடிப்பாளையத்தை ஆங்கிலேயர் ஆட்சியில் கிளைவ் குண்டு வைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுகிறது. தீவுகோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராஜர் திருமேனி தான் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இவ்விடத்தில் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. கோவில் கொள்ளிட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கிறது. சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் பூஜிக்கப்பட்டுள்ளனர். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #5 திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 5 வது தேவாரத்தலம் திருநல்லூர்ப்பெருமணம். மூலவர் சிவலோகத்தியாகர், சிவலோக தியாகேசர், உற்சவர் திருஞானசம்பந்தர், அம்பாள் திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதிநாயகி. ஆச்சாள், ஆயாள் அம்பிகையின் வேறு பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்பாளுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும் இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது. தலவிருட்சம் மாமரம். தீர்த்தம் பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம், இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் பிரகாரத்தில் ருணலிங்கேஸ்வரர் உள்ளார். கோயில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளுடைய ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ராஜ கோபுரத்தை அடுத்து நந்த மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் ஸ்தோத்திர பூராணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கிழக்கே பார்த்தபடி சிவலோகதியாகராஜர் சன்னதியும் திருவெண்ணீற்று உமையம்மையின் சன்னதியும் அமைந்துள்ளது.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேதநெறி தழைத்தோங்கவும் சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞானசம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம். இவரை உடலால் சிறியவர் உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார். சீர்காழியில் சிவபாதஇருதயரின் மகனாக அவதரித்தவர் திருஞானசம்பந்தர். இவருக்கு 16 வயது நடக்கும் போது இவரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த திருஞானசம்பந்தர் பின் இறைவனின் விளையாட்டு தான் இது என்று சம்மதித்தார். மயிலாப்பூரில் சிவநேச செட்டியாரின் மகளை பெண் பார்த்து முடித்தனர். அவள் திடீரென இறந்து போனாள். அவளுக்கு உயிர் கொடுத்த திருஞானசம்பந்தர் அவளை தன் மகளாக ஏற்றார். அப்பெண் இறைப்பணியில் மூழ்கி விட்டார். இதன்பிறகு நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாள் என்பவளை நிச்சயித்தார் சிவபாத இருதயர். திருஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். திருஞானசம்பந்தர் அக்னியை வலம் வரும் போது இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன் என்று கூறி கல்லூர்ப் பெருமணம் என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார். அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி, நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக என்று அருள்புரிந்தார். திருஞானசம்பந்தர் மணக்கோலத்துடன் இறை சோதியுள் கலந்தமையால் இத்தலத்திற்கு முத்தித்தலம் என்றும் பெயருண்டு.

பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். காகபுசுண்டரிஷி இத்தலத்தில் இறைவனுடன் ஐக்கியமானார், திருமால், காகமுனிவர், வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி, பிரமன், முருகன், அத்ரி, வியாசர், மிருகண்டு, அகத்தியர், ஜமதக்னி ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர், காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். திருஞானசம்பந்தர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர். உள்வாயிலில் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன. சோழ, பாண்டிய, மகாராட்டிர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டில் இறைவன் திருப்பெருமண முடைய மகாதேவர் என்று குறிக்கப்பட்டிருக்கின்றார். திருஞானசம்பந்தர் பாடல் பாடியுள்ளார்.