கட உபநிஷதம்.

இறைவனைத் தவிர வேறு எதன்மூலம் கிடைக்கின்ற அமைதியும் மகிழ்ச்சியும் நிலையானதல்ல. சில புறக் காரணங்களின் வாயிலாகக் கிடைக்கின்ற அமைதியும் மகிழ்ச்சியும் அந்தக் காரணம் விலகியதும் குலைந்துவிடும். ஆனால் இறைவனைப் பெறுவதால் கிடைக்கின்ற அமைதி எதனாலும் குலையாது.

கட உபநிஷதம்.

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்

யானையை அடக்கிய கோழி

யானை அளவு எதிரியின் பலம் இருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் எதிரியை வென்றிடலாம்

சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும் மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன் சிவனே தன்னையும் மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றிய இறைவனுக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான். பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது யானையை கோழி அடக்கியது போல அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார்.

திருச்சி உறையூரில் உள்ள பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் கல்தூணில் இந்த இந்த சிற்பம் உள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு. கிட்டத்தட்ட 1300 வருடங்களுக்கு முன் இந்த மிதிவண்டி படத்தை தூணில் சிற்பமாக வடித்துள்ளார்கள் நமது முன்னோர்கள். மிதிவண்டி தயாரிக்கப்பட்டது ஒரு 200 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்ததாக தற்போதைய வரலாறு உள்ளது.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -4

பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியும் 12 வருடகாலம் வனவாசத்தை நல்விதத்தில் பயன்படுத்திக் கொண்டதை முன்னிட்டு பக்குவப்பட்ட மனநிலையில் தாங்கள் வாழ்ந்து வந்திருந்த ராஜ வாழ்க்கைக்கு எதிரான வேலைகளை ஏற்றத்தாழ்வு இல்லாமல் அரண்மனையில் செய்தனர். தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். விராட நகரத்தில் சூத்திர தர்மம் வைசிய தர்மம் ஆகியவற்றை அமைதியாகவும் ஆர்வத்துடனும் நிறைவேற்றினர்.

விராட நகரத்தில் அப்பொழுது விழாக்கள் பல நிகழ்ந்தது. அவைகளில் சிவராத்திரியையொட்டி நடந்த விழாவானது சிறப்புற்று விளங்கியது சுமார் 10 நாட்கள் நடந்த விழாவில் விதவிதமான போட்டி விளையாட்டுகள் நடைபெற்றது. அதற்கு ஏராளமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்திலிருந்தும் தூரத்தில் இருந்தும் போட்டி போடுபவர்கள் பலர் வந்து வந்து சேர்ந்தனர். எங்கிருந்தோ வந்திருந்த மற்போர் வீரன் ஒருவன் மற்றவர்களை எல்லாம் எளிதில் தோற்கடித்தான். விராட நகரத்தில் வசிக்கும் போர் வீரர்கள் வெறும் குழந்தைகளுக்கு நிகர் என்றும் தன்னை தோற்கடிக்க யாருக்கும் இயலாது என்றும் அவன் தன்னை குறித்து பெருமை அடித்துக்கொண்டான். அவ்வாறு அவன் கூறியது விராட மன்னனுக்கு மிகச் சங்கடமாக இருந்தது. அரசனுடைய மனநிலையை அவனுடைய தோழனாக புதிதாக வந்திருந்த கனகன் அறிந்து கொண்டான். அரசனிடம் சென்று தங்களுடைய புதிய சமையல்காரன் வல்லாளன் என்பவன் பல தடவை விளையாட்டிற்காக மல்யுத்தம் புரிவதை பார்த்திருக்கின்றேன். கர்வமே வடிவெடுத்திருக்கின்ற இந்த வீரனுடன் போட்டியிடும்படி வல்லாளனுக்கு ஆணையிட்டு பாருங்கள். ஒரு வேளை இவனை தோற்கடிக்க அவனுக்கு சாத்தியமாகலாம் என்றான்.

அக்கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வல்லாளனை வேந்தன் தன் முன்னிலைக்கு வரவழைத்தான். நீ மற்போர் புரிவதில் திறமைசாலி என்று என்னுடைய தோழன் கூறுகின்றான். கர்வமே வடிவெடுத்திருக்கின்ற அந்த வீரனை மற்போர் செய்து வெல்ல முடியுமா என்று முயற்சி பண்ணிப்பார் என்று கூறினான். இத்தகைய நல்ல சந்தர்ப்பம் தனக்கு வந்து வாய்க்கும் என்று வல்லாளன் எதிர்பார்க்கவில்லை. என் நாட்டின் மன்னனுடைய பெருமையின் பொருட்டு என்னால் இயன்றதை செய்கிறேன் என்று கூறிக்கொண்டு மறுப்போர் மேடைக்கு ஓடினான். அன்றைய விளையாட்டில் வெற்றி வீரனாக விளங்கியவனிடம் தன்னோடு மற்போர் புரியும்படி மரியாதையுடன் வல்லாளன் வேண்டினான். இருவருக்கும் இடையில் யுத்தம் துவங்கியது. இரண்டு சிங்கங்கள் ஒன்றோடொன்று சண்டை போடுவது போன்ற காட்சி தென்பட்டது. வேண்டுமென்றே வல்லாளன் தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தவில்லை. ஆகையால் மற்போர் சிறிது நேரம் தொடர்ந்து நிகழ்வதாயிற்று. தன்னுடைய திறமைகளை விதவிதமான பங்குகளில் காட்டிய பிறகு வல்லாளன் கர்வமே வடிவெடுத்த வீரனை தோற்கடித்தான். மன்னனுக்கு இந்நிகழ்ச்சி மட்டில்லா மகிழ்வை உண்டாக்கியது. நகரவாசிகள் ஆரவாரத்துடன் வல்லாளனுடைய வெற்றியை புகழ்ந்து பாராட்டினார்கள்.

மகாபாரதப் போர் தத்துவம்

மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அதில் இருக்கும் தத்துவம் உண்மை. அதை அனைவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்கள் தான் பஞ்சபாண்டவர்கள். ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள். எண்ணிக்கையில் பெரிதான கௌரவர்களை எதிர்த்து கிருஷ்ண பரமாத்மா என்னும் மனசாட்சியின் படி சத்தியத்தை கடைபிடித்து சத்தியத்தின் படி வாழ்க்கையை வாழ்ந்து ஐம்புலன்களால் போரிட தீமைகளை வெற்றி பெறலாம். கர்ணன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை மோகம். அவன் இந்திரியங்களின் ஒரு பகுதி. கூடவே பிறந்தவன். ஆனால் தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் அவனது விருப்பம் ஆசை போல ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி தவறு செய்வான். அவனையும் வெற்றி பெற்றால் இறைவனை அடையலாம்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -3

காலையிலும் மாலையிலும் அரண்மனையில் பசுக்கள் இருக்கும் பண்ணையை சென்று பார்வையிடுவது மன்னனுடைய வழக்கமாக இருந்தது. ஒருநாள் அரசன் பசுக்களை பார்வையிடும் பொழுது பசுக்களை பற்றி சில கேள்விகள் பசுக்களை பார்த்துக்கொள்பவர்களிடம் கேட்டான். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவன் பசுக்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை தெரிவித்தான். அவன் தெரிவித்த விவரங்கள் பசுக்களை பார்த்துக்கொள்பவர்களுக்கு புரியாதவகைகளாக இருந்தது. பசுக்களை பற்றி அனைத்தும் அறிந்தவனாக தென்பட்டவனிடம் யார் என்று மன்னர் விசாரித்தார். தன் பெயர் தந்திரிபாலன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த பண்ணையில் தனக்கு ஏதேனும் வேலை வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வந்தவனுடைய நடை பாவனைகளை பார்த்து இவன் ஒரு பிராமணன் அல்லது க்ஷத்திரனாக இருக்க வேண்டும் என்று அரசன் எண்ணிக்கொண்டு அவனை மாட்டுப் பண்ணையில் வேலைக்கு நியமித்தார். மாட்டுப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தவன் சகாதேவன்.

சைரந்திரி என்னும் பதத்தின் பொருள் வேலைக்காரி என்பதாகும். சைரந்திரி என்னும் பெயர் கொண்டவளாக திரௌபதி விராட நகரின் வீதிகளில் நடந்து சென்றாள். அவள் கந்தல் துணிகளை அணிந்து கொண்டிருந்தாள். அப்படி இருந்தும் இயல்பாகவே அவளுடைய அழகு மேன்மையானதாக இருந்தது. பாதையில் போய்க் கொண்டிருந்த மக்கள் அவளின் உடைகளை பார்த்து பரிகாசம் பண்ணினார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் அவளைச் சூழ்ந்து வேடிக்கை செய்து கொண்டே பின் தொடர்ந்தனர். அரண்மனை மாடியில் மேல்தட்டில் இருந்த அரசியான சுதேனா வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது சைரந்திரியின் இக்கட்டான சூழல் அரசியின் கண்ணில் தென்பட்டது. தன்னந்தனியாய் போய்க் கொண்டிருந்த பெண்ணின் பரிதாப பரிதாபகரமான நிலை அவருடைய உள்ளத்தை தொட்டது. தாதிமார்கள் சிலரை அனுப்பி அவளை அரண்மனைக்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டான்.

இந்தப் பெண்ணின் பரிதாபகரமான பாங்கும் அவளுடைய கண்களிலிருந்து வந்த கண்ணீரும் அரசியின் உள்ளத்தை தொட்டது. அவள் யாரென்று அரசி விசாரித்தாள். தன்னுடைய பெயர் சைரந்திரி என்றும் தனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவர்களாக இருக்கின்றார்கள் என்றும் ஒரு சாபத்தை முன்னிட்டு ஒர் வருட காலம் நான் அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றேன். ஓர் வருடத்திற்கு பிறகு அந்த சாபத்திலிருந்து நான் விடுதலை பெறுவேன். அதுவரையில் தங்களிடம் நான் எனது பாதுகாப்பை வேண்டுகிறேன் என்றாள். தங்களுக்கு பூ மாலைகள் அழகாக தொடுக்க எனக்கு தெரியும். மிகவும் நேர்த்தியாக தங்களுடைய மேனியை அலங்கரிக்கவும் நான் வல்லவள் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அரசி சிறிது சிந்தித்துப் பார்த்துவிட்டு ஓராண்டுக்கு உனக்கு ஆதரவு தருவதில் எனக்கு சிரமம் ஏதும் இல்லை. ஆனால் உன்னுடைய பேரழகு தான் அதற்கு இடைஞ்சலாக இருக்கின்றது. பருவத்தில் இருக்கும் ஆண்மகன் உன்னுடைய மேனி அழகில் மயங்கிவிடுவான். இங்கிருப்பதால் ஆண்களால் உனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணுகிறேன் என்றாள். தாயே நான் வெளியில் எங்கும் செல்லாமல் தங்களுடைய அந்தப்புரத்திலேயே தங்கி ஆண்களின் கண்களில் முடிந்தவரை படாமல் இருந்து கொள்கிறேன். மற்றொரு விஷயம் என்னுடைய கந்தர்வக் கணவர்கள் வெளித்தோற்றத்தில் இல்லாமல் என்னை காப்பாற்றி வருகிறார்கள். என்னிடம் யாராவது முறை தவறி தீண்டினால் அவனை என் கணவன்மார்கள் கொன்றுவிடுவார்கள் என்றாள். அனைத்தையும் கேட்ட அரசி அந்தப்புரத்தில் அடைக்கலம் புகுந்த அப்பெண் வாசித்திருக்க அனுமதி வழங்கினாள்.

தானம்வேறு தர்மம்வேறு

சூரியபகவான் சிவ பெருமானிடம் கேட்டார். பரம்பொருளே பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்தவன் கர்ணன். தான் பெற்ற புண்ணியங்கள் அனைத்தையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது. என கேட்டார் சூரியபகவான்.

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்த பின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஆனால் தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இது தான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன் தான். ஆனால் மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது என்றார்.

கேட்டு கொடுப்பது தானம்
கேட்காமல் அளிப்பது தர்மம்

Image result for சிவபெருமான் சூரிய பகவான்

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -2

அரண்மனைக்கு சென்ற யுதிஷ்டிரன் தன்னுடைய பெயர் கணகன் என்று சொல்லி விராட நகர மன்னனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தான் ஒரு பாண்டித்தியம் பெற்ற பிராமணன் என்றும் பகடை விளையாட்டில் வல்லவன் என்றும் தன்னைப் பற்றி கூறிக்கொண்டு தனக்கு ஏதேனும் வேலை வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் உன்னுடைய நடை உடை பாவனை ஆகியவை நீ ஒரு மேன்மகன் என்பதைத் தெரிவிக்கின்றன. நீ கற்றறிந்தவனாகவே தென்படுகிறாய். ஆகவே என்னுடைய தோழனாக உன்னை என்னோடு வைத்துக் கொள்கின்றேன். அரிய பெரிய விஷயங்களை நீ எனக்கு தெரிவிப்பாய். ஓய்வு வேளைகளில் நீ என்னோடு பகடை விளையாடு என்றான்.

சில நாட்கள் கழித்து பீமன் விராட மன்னனின் முன் தோன்றி தன்னுடைய பெயர் வல்லாளன் என்றும் தனக்கு சமையல் தொழில் நன்கு தெரியும் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தன்னுடைய தொழிலுக்கு அறிகுறியாக தன் கையில் அவன் கரண்டி ஒன்றை வைத்திருந்தான். விதமான பட்சணங்கள் சமைத்து மன்னரை திருப்திப்படுத்த முடியும் என்று அவன் உறுதி கூறினான். மற்றும் நன்றாக மற்போர் புரிந்து மன்னனை மகிழ்விக்க முடியுமென்றும் தெரிவித்து தனக்கு வேலை வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். புதிதாக வந்தவனுடைய கம்பீரமான உடல் அமைப்பை பார்த்து மன்னன் வியப்பு அடைந்தான். இவன் சேனைப்படை ஒன்றுக்கு தலைமை வகிக்கும் தகுதி வாய்ந்தவன் என்று அரசன் எண்ணினான். அரண்மனை மடைப்பள்ளியில் தலைமை சமையல்காரனாக நியமிக்கப்பட்டான்.

தாறுமாறாக உடை அணிந்த பேடு ஒருத்தி அங்கு நின்று கொண்டிருந்தவர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு விராட மன்னன் முன்னிலையில் வந்தாள். பிருஹன் நளா தனது பெயர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். இந்திர லோகத்தில் வசித்த பொழுது அர்ஜுனன் ஒர் வருட காலம் பேடுவாக இருக்கவேண்டுமென்று ஊர்வசி சாபமிட்டாள். அந்த சாபத்தை ஒரு வருட காலம் மறைந்திருந்து வாழும் காலத்தில் பயன்படுத்திக் கொண்டான் அர்ஜுனன். தான் பாடல்கள் பாடுவதிலும் நாட்டியத்திலும் இசைக்கருவிகள் மீட்டுவதிலும் வல்லவள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். உத்திரை என்பவள் விராட மன்னனின் மகளாவாள். அந்த ராஜகுமாரிக்கு லலித கலைகளையும் சொல்லித்தருவதாக கூறினான். சாபத்தினால் பேடு வேடத்தில் இருக்கும் அர்ஜுனனை கண்ட மன்னன் ஆண்மையோடு கூடிய ஆற்றல் மிகப் படைத்தவளாக இவள் தென்படுகிறாள். ஆகையால் இவளை மிகவும் ஜாக்கிரதையாக கவனித்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவள் கேட்ட உத்தியோகத்தை அவளுக்கு அளித்தான்.

விராட மன்னன் தன் அரண்மனை லாயத்திலிருந்த குதிரைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அழகு வாய்ந்த மனிதன் ஒருவன் தன் பெயர் தமக்ரந்தி என்றும் தான் குதிரைகளை பழக்குவதில் மிக வல்லவன் என்று தன்னை அறிமுகப் படுத்தினார். தனக்கு உணவும் உடையும் தங்க இடமும் கொடுத்தால் போதும் என்றும் குதிரையை பார்த்துக்கொள்ளும் வேலை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். வந்தவனின் நேர்த்தியான பாங்கை பார்த்து மன்னன் அவன் கேட்ட வேலையில் அமர்த்திக் கொண்டான். குதிரை லாயத்தில் வேலைக்கு சேர்ந்தவன் நகுலன்.

குரு எதற்கு

துறவி ஒருவர் குடில் ஒன்று அமைத்து பல சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். சாஸ்திரங்களை நன்றாக கற்றிருந்த அந்த குருவால் வாழ்க்கைத் தத்துவங்களை புரிந்து கொண்ட சீடர்கள் ஆன்மிகப் பாதையில் சென்றனர். அந்த துறவியிடம் ஒரு சீடனுக்கு பிடிப்பு இல்லாமல் போனது. சாஸ்திரங்களைப் படித்து அதில் இருப்பதைத்தானே குரு நமக்கு கற்றுத்தருகிறார். சாஸ்திரங்களைப் படித்து நாமே அதைக் கற்றுக்கொள்ளலாமே இடையில் குரு எதற்கு என்ற எண்ணம் அந்த சீடனுக்குத் தோன்றியது. அவனது எண்ணத்தை மறுநாளே செயல்படுத்தினான். குருகுலத்தை விட்டு வெளியேறினான். தனியாக குடில் அமைத்து சாஸ்திர நூல்களைப் படிக்கத் தொடங்கினான். பசிக்கும்போது துறவிகளைப் போலவே கிராமத்திற்குள் சென்று யாசகம் பெற்று உணவு உண்பான்.

ஒரு நாள் சீடன் சாஸ்திர நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான். அந்த நூலில் எச்சில் பரிசுத்தம். வாந்தி பண்ணினது பரிசுத்தம் இறந்தவன் போர்வை பரிசுத்தம் என்ற வாசகங்கள் இருந்தது. அதை அப்படியே மனதில் பதிய வைத்துக்கொண்டான். ஒரு நாள் அவன் யாசகம் பெறுவதற்காக கிராமத்திற்குள் சென்றான். அப்போது அங்கு ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு உணவு விருந்து அளிக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட அனைவரும் எச்சில் இலைகளை கொண்டு போய் குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டுப் போனார்கள். இதைக் கண்ட சீடன் கோபமுற்றான். சாஸ்திரம் தெரியாத முட்டாள்கள் என்று மனதுக்குள் திட்டியபடியே ஓடோடிச் சென்று குப்பையில் கிடந்த எச்சில் இலைகளை கையில் எடுக்க முற்பட்டான். அப்போது அவனை ஒரு பெரியவர் தடுத்து நிறுத்தினார். ஏனப்பா பார்ப்பதற்கு ஒரு தபஸ்வி போல் இருக்கிறாய். நீ போய் எச்சில் இலைகளை எடுக்க முயற்சிக்கிறாயே என்று விசாரித்தார்.

உங்களுக்கு சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று தெரியாது. அதனால்தான் என்னைத் தடுக்கிறீர்கள். எச்சில் பரிசுத்தம் என்று சாஸ்திரம் சொல்கிறது தெரியுமா என்று தனக்கு எல்லாம் தெரிந்தது போல் கூறினான் சீடன். முதியவர் குழம்பிப் போனார். அதன் பிறகு அவனிடம் முழுமையாக விசாரித்தார். அப்போது சாஸ்திரத்தில் தான் படித்த வார்த்தைகளை அவன் தெரிவித்தான். இப்போது அந்த முதியவருக்கு புரிந்து விட்டது இவன் ஒரு அரைகுறை என்று. சீடன் படித்த வாக்கியங்களுக்கான முழு அர்த்தத்தையும் அவனுக்கு எடுத்துச் சொன்னார். எச்சில் பரிசுத்தம் என்பது நீ நினைப்பது போன்று இல்லை. கன்று வாய் வைத்து பால் குடித்த பிறகே பசுவின் மடியில் பால் கறப்பார்கள். ஆனாலும் கூட அந்தப் பால் பரிசுத்தமானது. அதைத்தான் இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். அதனால்தான் எச்சில் பரிசுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று விளக்கினார்.

சீடனின் மனதில் பெரிய குழப்பம். அப்படியானால் வாந்தி பண்ணினது பரிசுத்தம். இறந்தவன் போர்வை பரிசுத்தம் என்பதற்கு என்ன பொருள் என்று வினவினான். முதியவர் புன்னகைத்துக் கொண்டே அவனுக்கு பதிலளித்தார். தேனீக்களின் வாயில் இருந்து சுரக்கும் தேனைத்தான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். கடவுளுக்கு தேனைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். அதனால்தான் அப்படி கூறப்பட்டிருக்கிறது. பட்டுப்பூச்சிகள் இறந்ததும் அதிலிருந்து பட்டு நூலைப் பிரித்தெடுத்து ஆடை தயாரிப்பார்கள். அந்தப் பட்டாடைகளையும் பரிசுத்தமாகக் கருதி இறைவனுக்குச் சாத்தி வழிபடுவோம். அதையே இறந்தவன் போர்வை பரிசுத்தம் எனச் சொல்லியிருக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார். சீடனுக்கு சாஸ்திரத்தில் கூறியிருந்ததன் அர்த்தம் இப்போது தான் முழுமையாக புரிந்து குருவை தேடிச்சென்றான்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -1

பாண்டவர்கள் யார் கண்ணிலும் படாமல் ஒருவருடம் அக்ஞாத வாசத்தை எப்படி பூர்த்தி செய்வது என்று தங்களுக்குள் ஆலோசனை செய்தார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் ஒரு முடிவு எடுத்தனர். விராட வேந்தன் ஆண்டு வந்த மத்சிய நாட்டுக்குச் சென்று அங்குள்ள விராட நகரில் அரண்மனையில் மாறுவேடம் பூண்டு வாழ்ந்திருக்க அவர்கள் தீர்மானித்தார்கள் அந்நாடு செழிப்புடனும் ஆரவாரம் ஏதும் இன்றியும் அமைதியாக இருந்தது. அந்நாட்டு மன்னனும் அறிவு மிக படைத்தவன். பாண்டவர்களை அவன் மிகவும் நேசித்தான். கௌரவர்கள் மீது அவனுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆகையால் அவனுடைய நாடு பாண்டவர்கள் மறைந்து இருப்பதற்கு பொருத்தமானது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

அர்ஜுனன் தனக்கு தோன்றிய ஒரு அபிப்பிராயத்தை தெரிவித்தான். சகோதரர்கள் நால்வரும் எந்த ஒரு கீழ்த்தரமான பணிவிடைகளை செய்யும் சூழ்நிலை வந்தாலும் செய்யலாம். யுதிஷ்டிரன் மட்டும் தகுதிவாய்ந்த மேலான பதவி ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். ராஜசூய யாக்ஞம் செய்து வேந்தர்களுக்கெல்லாம் வேந்தனான யுதிஷ்டிரன் எந்த நெருக்கடியை முன்னிட்டும் தன்னுடைய தகைமைக்கு கீழான பணிகள் எதையும் செய்யலாகாது என்றான் அனைவரும் அர்ஜூனனின் கருத்தை ஏற்றுக்கொண்டனர். திரௌபதியை பற்றிய விஷயமோ மிகக் கடினமானது. அழகு வாய்ந்த இளம் மாது ஒருத்தி அரண்மனை ஒன்றில் வேலைக்காரியாக அமர்கின்ற பொழுது நினைக்க முடியாத சில நெருக்கடிகளை அவள் சந்திக்கக்கூடும். ஆகையால் ரகசியமாக பீமனும் அர்ஜுனனும் அவளை பாதுகாத்து வரவேண்டும் என தீர்மானித்தார்கள். பிறகு யார் கண்ணுக்கும் புலப்படாமல் பெரும்பாலும் இரவில் அவர்கள் பயணம் செய்து விராட நாட்டு எல்லையை அடைந்தார்கள்.

விராட நகரத்தின் எல்லைப்பகுதியில் இடுகாடு ஒன்று இருந்தது. அங்கு பாண்டவர்கள் போக்குவரத்து இல்லாத இடம் ஒன்றில் தென்பட்ட பழுத்த மரத்தின் மேல்பகுதியில் ஒரு பொந்தை கண்டார்கள். தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் பாண்டவ சகோதரர்கள் அப்பொந்தில் ஒளித்து வைத்தார்கள். பிறகு அம்மரத்தின் மீது பிணம் ஒன்று தொங்க விட்டனர். அதைப் பார்ப்பவர்களுக்கு அங்கு செல்ல பயமும் அருவருப்பும் அடைந்து மரத்தின் அருகில் யாரும் வரக்கூடாது என்று இந்த ஏற்பாட்டை செய்தனர். அதன்பிறகு அவர்கள் தனித்தனியாக பிரிந்து சென்றனர். ஒவ்வொருவரும் தனித்தனியாக அரண்மனைக்குச் சென்று வெவ்வேறு பணிவிடைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டனர். முதலில் யுதிஷ்டிரன் அரண்மனை நோக்கி சென்றான். நடந்து போய்க் கொண்டிருந்த போது தங்களை பாதுகாக்க வேண்டும் என்று துர்காதேவியை பிரார்த்தனை பண்ணி கொண்டான். அவனுடைய பிரார்த்தனைக்கு இணங்கி துர்காதேவி யுதிஷ்டிரனுக்கு காட்சி கொடுத்தாள். ஒரு வருடத்தின் அக்ஞாத வாசத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வீர்கள் என்றும் பிறகு யுத்தத்தில் வெற்றி பெறுவீர்கள் என்றும் ஆசிர்வாதம் செய்தாள்.

துளசி வரலாறு

துளசித்தாய் பூமியில் பிருந்தை என்ற பெயரில் பிறந்து ஜலந்தரன் என்ற அரக்கனை திருமணம் செய்து இருந்தாள். ஜலந்தரன் கடும் தவம் செய்து அதனால் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் தங்களை காப்பாற்றும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து ஜலந்தரன் சிவனிடம் போரிட வேண்டி கயிலைக்கு சென்று கொண்டு இருந்தான். அவன் முன் ஒரு அந்தணர் வேடத்தில் தோன்றிய சிவன் அவனிடம் பேசினார். அப்போது ஜலந்தரன் தன்னால் எதையும் செய்ய முடியும். என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று இறுமாப்புடன் கூறினான். உடனே அந்தணர் வடிவில் இருந்த சிவபெருமான் தன் கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து தலை மீது வைக்கவேண்டும் என்று கூறினார். ஜலந்தரன் அந்த வட்டத்தை பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். இருகரங்களாலும் அதனைப் பெயர்த்து தலைக்கு மேல் தூக்கி தாங்கினான். உடனே அந்த வட்ட சக்கரம் அவன் உடலை இரு கூறுகளாக பிளந்து மீண்டும் அனல் கக்கும் தீப்பிழம்பாக மாறி சிவனின் திருக்கரத்தை சென்றடைந்தது.

கயிலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததை கண்ட பிருந்தை கவலை அடைந்தாள். அவளது கற்பு என்று அழிகிறதோ அன்று தான் ஜலந்திரன் அழிவான் என்ற வரம் இருந்தது. இதைத் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிருந்தையின் கற்பைச் சோதிக்க ஒரு தவ முனிவர் வடிவில் பிருந்தை முன் சென்றார். அப்போது அவர் ஜலந்தரன் இருகூறாகி இறந்து விட்டதை கூறி அவள் முன் அந்த இருகூறுகளும் மாயையினால் வரும்படி செய்தார். பிருந்தை தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொண்டாள். உடனே திருமால் ஜலந்தரனின் உடற்கூறுகளை ஒன்றாகச் சேர்த்து தான் அந்த உடலில் புகுந்து ஜலந்தரனே மீண்டும் வந்து விட்டதாக நம்பும்படி செய்தார்.

தன்னுடன் இருப்பவர் தன் கணவன் இல்லை. மாயையில் வந்தவர் என்பதை அறிந்து கொண்ட பிருந்தை தீயில் புகுந்து உயிர் துறந்தாள். இதனால் மிகவும் மனம் வருந்திய திருமால் பிருந்தை தீக்குளித்த இடத்திலேயே அமர்ந்து இருக்க இதை பார்த்த பார்வதி தேவி தனது இடது கை சிறு விரலில் இருந்து ஒரு விதையை உண்டாக்கி சிவபெருமானிடம் கொடுக்க அதை பிரம்மா பெற்று பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி தண்ணீர் வார்த்தார். அங்கே துளசி செடி உண்டாயிற்று. திருமால் அந்தத் துளசியை எடுத்து தன்மேல் அணிந்து மீண்டும் சகஜ நிலையை அடைந்தார். இந்தச் சம்பவம் நடந்த இடம் திருவிற்குடி என்றத் திருத்தலமாகும்.