Month: April 2020
உத்திரகோசமங்கை மரகத நடராஜர்
ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்று பகுதி உண்டு. அந்தப் பகுதியில் மரைக்காயர் என்ற மீனவர் வறுமையின் பிடியில் நம்பிக்கையுடன் மங்களேஸ்வரரை தினமும் வழிபட்டு வந்தார். பாய்மரப்படகில் சென்று மீன் பிடித்துவந்து வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி இருந்தார். ஒரு சமயம் அவர் கடலில் மீன் பிடிக்கும்போது சூறாவளிக் காற்று அடித்து அவருடைய படகு நிலை குலைந்து எங்கேயோ அடித்து சென்று விட்டது. அப்படியே வெகுதூரம் போனபிறகு ஒரு பாசிபடிந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது. பாறை அப்படியே சரிந்து படகிலே விழுந்து விட்டது. ரெண்டு சின்ன பாறைகளும் ஒரு பெரிய பாறையுமாக இருந்துள்ளது. அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயலும் மழையும் சற்றேன்று நின்று விட்டது. மரைக்காயர் அதிர்ச்சியில் இருந்து மீண்டதும் மண்டபம் நோக்கித் திரும்பி வருவதற்கு பார்த்தால் அந்த இடத்தில் இருந்து திக்கும் திசையும் தெரியலை.
மங்களேஸ்வரரை நினைத்து படகை செலுத்தி மிகவும் கஷ்டப்பட்டுப் பலநாள் கடலில் திரிந்து அலைந்து ஒருவழியாக மண்டபம் வந்து சேர்ந்தார். கடலுக்குப் போன இவர் திரும்பிவரவில்லை என்று பலநாட்கள் கவலையோடு காத்திருந்த குடும்பத்திற்கு அப்போது தான் நிம்மதி கிடைத்தது. படகில் கொண்டு வந்த பாசிபடிந்த கற்களை என்ன என்று தெரியாமல் வீட்டுப் படிக்கல்லாக போட்டு வைத்தார் மரைக்காயர். அந்த கல் மீது வீட்டுக்குள் போக வர்ற ஆட்கள் நடந்து நடந்து மேலே ஒட்டி இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் பளபள வென்று மின்னி பச்சை நிறமாக காட்சியளித்தது.
மங்களேஸ்வரர் மரைக்காயரின் வறுமையான காலக் கட்டத்தில் இருந்து விடுபட அளித்த பரிசு என்பதை உணர்ந்து மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாகத் தந்தால் வறுமை நீங்கும் என்ற எண்ணத்தால் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். நடந்த அனைத்தையும் விவரித்து தன் வீட்டில் ஒரு பெரிய பச்சைக் கல் உள்ளது என்று சொன்னார். அரண்மனை ஆட்கள் பச்சைப் பாறையை வீட்டில் இருந்து எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள். கற்களைப் பற்றி விவரம் உள்ள ஒருவர் பச்சைப் பாறையை சோதித்து பார்த்தார். சோதித்தவர் ஆச்சரியத்துடன் இது விலை மதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று சொன்னார். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சைப் பாறைக்கு உரிய பொற்காசுகளை அளித்து வழி அனுப்பினார். இவ்வளவு அருமையான கல்லில் ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை. இந்த வேலைக்கு உகந்த சிற்பியைப் பல இடங்களில் தேடிக் கடைசியில் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தர் ரத்தின சபாபதியைப் பற்றிய விவரம் கிடைத்தது. அவரை அனுப்பி வைக்கும்படி பாண்டியன் ஓலை அனுப்பினார். சிற்பியும் வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகத கல்லை பார்த்த உடன் மயங்கியே விழுந்துவிட்டார் என்னால் மரகத நடராஜர் வடிக்க இயலாது மன்னா என்று கூறிவிட்டு இலங்கைக்கு சென்றார்.
மன்னன் மன வருத்தத்துடன் திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னதி முன் நின்று பிரத்தனை செய்துக் கொண்டிருந்தார். அப்போது நான் மரகத நடராஜர் வடித்து தருகிறேன் மன்னா என்ற குரல் வந்தது. குரல் வந்த திசை நோக்கி மன்னர் மற்றும் பிரஜைகள் அனைவரும் திரும்பியதும் ஆச்சரியத்துடன் ஒரு மாமனிதரை கண்டனர். அவர் சித்தர் சண்முக வடிவேலர். மன்னனின் கவலையும் நீங்கியது. மரகத நடராஜரை வடிக்கும் முழு பொறுப்பையும் சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். அந்த பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில் மிகவும் நுணுக்கமாக மரகத நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர். பால் அபிஷேகத்தின் போது நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பை காணலாம். பின்னர் மன்னரை அழைத்து முதலில் மரகத நடராஜ மூர்த்தியே நிறுவி பின்னர் ஆலயம் அமைக்கும் படி அறிவுறை கூறினார். மன்னர்கள், முகலாயர்கள், அன்னியர்கள் என பல படையைடுப்புகளை தாண்டி இன்று உத்திரகோசமங்கையில் மரகத நடராஜர் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் திருநடனம் புரிகிறார்.
மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -1
கிருபாச்சாரியார் துரியோதனனிடம் உன்னை நான் உள்ளன்போடு நேசிக்கிறேன். நீ நெடுநாள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இந்த யுத்தத்தை நீ தொடர்ந்து நடத்தினால் அழிந்து விடுவாய். பாண்டவர்கள் இப்பொழுதும் சமாதானத்திற்கு தயாராக இருக்கின்றனர். அவர்களோடு சமாதானம் செய்து கொண்டு அமைதியாக நீ நெடுங்காலம் வாழ்ந்து இருப்பாயாக என்று கூறினார். அதற்கு துரியோதனன் ஆச்சாரியாரே என் மீது தங்கள் அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. என் மீது அன்பு வைத்திருந்த அனைவரும் ராஜ்யத்தை எனக்காக வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு எனக்காக உயிர் கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது நான் பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டால் இறந்த என் நண்பர்களுக்கு நான் துரோகி ஆவேன். நானும் மடிந்து போய் அவர்களோடு சேர்வதே முறை. இரண்டாவதாக பாண்டவர்களுக்கு பின்னணியில் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். யுதிஷ்டிரன் யுவராஜாவாக இருந்த பொழுது அவன் என்னை விட மிக்கவனாக மிளிர்ந்தான். யுவராஜா பதவியில் இருந்து அவனை அப்புறப்படுத்தினேன். பிறகு அவன் இந்திரப்பிரஸ்தத்தை உருவாக்கினான். அங்கருந்தும் அவனை கீழே தள்ளி நான் வெற்றி பெற்றேன். பாண்டவர்களோடு சேர்ந்து இருப்பது என்பது ஒரு பொழுதும் ஆகாது என்று கூறினான்.
பதினெட்டாம் நாள் யுத்தத்திற்கு கௌரவ படைகளுக்கு சேனாதிபதியாக இருக்கும் படி துரியோதனன் அஸ்வத்தாமனை கேட்டுக்கொண்டான். அதற்கு அஸ்வத்தாமன் திறமை வாய்ந்த போர்வீரர்களுக்கு இடையில் சல்லியன் எல்லோருக்கும் மூத்தவர். அவரை சேனாதிபதியாக்கலாம் என்று கூறினான். துரியோதனன் சல்லியனிடம் சென்று சேனாதிபதியாக இருந்து எனக்கு வெற்றியை தேடி தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். துரியோதனின் வேண்டுகோளுக்கிணங்க சல்லியன் சேனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டு உனக்கு சேனாதிபதியாக இருந்து என் கடமையை நிறைவேற்றுகிறேன் என்று கூறினார்.
கௌரவ பாசறையில் நிகழ்ந்த இத்திட்டத்தை கேட்ட யுதிஷ்டிரன் பெரிதும் தயங்கினார். கௌரவ படைகளில் உயிரோடு இருப்பவர்களில் சல்லியனுக்கு நிகரானவர் யாருமில்லை. அவனை வெல்வதும் யாருக்கும் சாத்தியமில்லை. கிருஷ்ணரும் இதனை உண்மை என்று ஒத்துக் கொண்டார். சல்லியனை அழிக்க திட்டம் ஒன்றை கிருஷ்ணன் எடுத்துரைத்தான். யுதிஷ்டிரன் சல்லியனை எதிர்த்து போர் புரிய வேண்டும் அறநெறி பிறழாத சல்லியனை வெற்றிபெற அறநெறி பிறழாத யுதிஷ்டிரனே எதிர்க்க சரியானவன் என்றும் இதை தவிர வேறு எந்த வழியும் பலனளிக்காது என்றார் கிருஷ்ணர். யுதிஷ்டிரர் சல்லியனை எதிர்த்து போர் புரிய சம்மதித்தார்.
லக்ஷ்மனேஷ்வர்
சத்தீஸ்கர் மாநிலம் கரோட் நகரில் உள்ள லக்ஷ்மனேஷ்வர் கோயில் சிவலிங்கம்.
அருள்மிகு அமிர்தேஸ்வரர் கோவில்
அருள்மிகு அமிர்தேஸ்வரர் கோவில் ஹோய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளனின் படைத்தலைவரால் துங்கபத்திரை ஆற்றாங்கரையில் 1196ஆம் ஆண்டில் போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது. இக்கோவில் ஒரு விமானத்துடன் கூடியது. இது மூடப்பட்ட சிறிய மண்டபம். 29 தூண் இடைவெளிகள் இல்லாமல் மூடிய மண்டபமாக உள்ளது 9 தூண் இடைவெளிகளுடன் உள்ளது. இச்சிறிய மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அருகில் அமைந்துள்ள இன்னொரு சிறு கோயிலுக்குச் செல்வதற்கான வாயில் மண்டபம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை சதுர வடிவானது. சிற்ப வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்ட பழைய விமானம் இன்றும் உள்ளது.
இக்கோவில் கட்டிடத்தின் சிறப்பு மண்டபக் கூரையைத் தாங்கி நிற்கும் மினுமினுப்பான தூண்கள் ஆகும். மண்டபத்தின் கூரை கொடி வேலைப்பாடுகளுடன் கூடிய பல குழிந்த மாட அமைப்புக்களைக் கொண்டதாக உள்ளது. பெரிய மண்டபத்தின் வெளிப்புறத் தடுப்புச் சுவர்களில் 140 சிற்பப் பலகைகள் காணப்படுகின்றன. இவற்றில் இந்து இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. தென் புறச் சுவரில் 70 கற்பலகைகளில் இராமாயணத்தில் இருந்து காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறான முறையில் கதை நகர்வு வலமிருந்து இடமாக அமைந்துள்ளது. வடபுறச் சுவரில் கதைத் தொடர்ச்சி இடமிருந்து வலமாகவே உள்ளது. மீதமுள்ளவற்றில் 25 பலகைகளில் கிருஷ்ணனுடைய வாழ்க்கைக் காட்சிகளும் 25 பலகைகளில் மகாபாரதக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன.
மதுரா மன்னர் உக்கிரசேனரின் தம்பியான தேவகனின் மகள் தேவகி ஆவார். இவர் தேவர்களின் தாயான அதிதியின் பகுதி அவதாரம் ஆவார். உக்கிரசேனரின் மகன் கம்சன். கம்சன் தன் ஒன்று விட்ட தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் தேவகி வசுதேவர் இருவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்குக் குழந்தை பிறக்கும் சமயம் ஒரு கழுதையைச் சிறை வாயிலில் கட்டி வைத்தான். சிறைக்காவலர்களை அவன் நம்பவில்ல. கழுதையை நம்பினான் கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம். குழந்தை பிறந்ததும் கத்தத் துவங்கி விடும். கம்சன் வந்து குழந்தையைக் கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன.
எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் அவதரிக்கிறார். உடனே தேவகி கணவன் வசுதேவர் தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து வேண்டினார் .கழுதையும் கத்தவில்லை. கிருஷ்ணர் அவதாரமும் நிகழ்ந்தது. எனவே தான் காரியம் ஆகவேண்டுமா கழுதையானாலும் அதன் காலைப் பிடி என்ற பழமொழியும் வழக்கத்தில் வந்தது. இக்கோவிலின் வெளிச்சுவற்றில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது.
குல்பாஹர் சிவலிங்கம்
உத்தர பிரதேசத்தில் உள்ள குல்பாஹர் நகரில் அமையப்பெற்றுள்ள 10-ஆம் நூற்றாண்டு கிரானைட் சிவலிங்கம்
மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -11
கிருஷ்ணன் கர்ணனிடம் யாசகம் கேட்கும் அந்தணனாக சென்று யாசிக்கிறார். கர்ணனோ என்னிடம் இப்போது இருப்பது என் உயிர் மட்டுமே. இல்லை என்று என்னை கூற வைக்காமல் என் உயிரை யாசகமாக பெற்று என்னை பெருமை அடைய வையுங்கள் வேண்டாம் என்று சொல்லி என்னை சிறுமை படுத்திவிடாதீர்கள் என்று கூறினான். அதற்கு கிருஷ்ணன் கர்ணா நீ செய்த தர்மத்தின் பலனை எல்லாம் எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடு அதுபோதும் என்கிறார். கர்ணனும் மறு மொழியின்றி இறப்பிலும் இன்முகத்தோடு தான் செய்த தான தர்மத்தின் பலனை எல்லாம் தன் உதிரம் மூலம் கிருஷ்ணருக்கு தாரை வார்த்துக் கொடுத்தான். பின் கிருஷ்ணன் தன் விஸ்வரூபத்தை காட்டி அழியா புகழோடு நீ முக்தியையும் பெறுவாய் என்று வாழ்த்தினார். கர்ணன் தன் இரு கைகளை கூப்பி பரந்தாமனை வணங்க அப்போது அர்ஜூனன் எய்த அம்பு கர்ணனின் கழுத்தை துண்டித்தது. கர்ணனின் உடலில் இழுந்து ஒளி ஒன்று சொர்கத்தை நோக்கி சென்றது. கர்ணன் வீர மரணம் அடைகிறான். நட்புக்கு இலக்கணமாய் வீரத்திற்கு உதாரணமாய் கொடுத்த வாக்கிற்கு பீஷ்மமாய் வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளலாய் வாழ்ந்த கர்ணன் சரித்திர நாயகனாய் மண்ணில் சாய்ந்தான். சூரியன் மறைய பதினேழாம் நாள் யுத்தம் முடிவிற்கு வந்தது.
கர்ணன் மாண்ட நிமிடமே போர் தொண்ணூறு சதவிகிதம் முடிந்தது. பிறகு நடந்த போர் வெறும் சடங்குக்காகவே நடக்கிறது என்பதை துரியோதனன் உணர்ந்தான். தனது பிரியமான 99 தம்பியர்களை இழந்தான். பீஷ்மர் குரு துரோணரை இழந்தான். உயிரினும் மேலான நண்பன் கர்ணனை இழந்தான். மனம் வருந்தினான். செய்வதறியாமல் தவித்தான். இவ்வுலகவாழ்வில் இனி பயன் ஒன்றுமில்லை என்ற உணர்ச்சி அவனுக்கு உண்டாயிற்று. ஆதிக்கத்திலும் உலக ஆட்சியிலும் அவன் படைத்திருந்த பேராசை நிரந்தரமாக அவனைவிட்டு அகன்று போயிற்று. இவ்வுலகில் இனி வாழ்ந்து இருக்க அவன் விரும்பவில்லை. அதிவிரைவில் மறுமையை அடைந்து தன் தோழர்களோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். கௌரவர்கள் கூட்டத்தில் ஒரே துயரம். பாண்டவர்களுடைய கூட்டத்தில் ஒரே மகிழ்ச்சி பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்கு காரணம் கிருஷ்ணருடைய கிருபை என்று யுதிஷ்டிரர் அனைவரிடமும் கூறினார்.
கர்ண பருவம் முடிந்தது. அடுத்து சல்லிய பருவம்.
திருவடி தீட்சை
குரு அமர்ந்திருக்க அவர் முன் அமர்ந்திருந்தான் சீடன் விஸ்வநாத பிரம்மச்சாரி. சீடனது கண்கள் கலங்கி இருந்தன அவன் தன் கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேசினான். குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களுக்கு பணிவிடை செய்வதிலும் உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்கள் என்றான்.
அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கிய குரு அவனை தீர்க்கமாக பார்த்தார். விஸ்வநாதா சாஸ்திர ஞானத்தை மட்டும் தான் என்னால் உனக்கு வழங்க முடிந்தது. பிரம்ம ஞானத்தை வழங்க உனக்கு வேறு குரு ஒருவர் காத்திருக்கிர்றார். அந்த குரு காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக செல் சீடனே என்றார் குரு. பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி. காசியை அடைந்தான். அவன் அங்கு வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்தான். நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான். வழியில் தென்பட்ட தடாகம் ஒன்று கண்களுக்குத் தெரிய அதில் நீர் அருந்த குனிந்தான். அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அமைந்திருந்த கோயில் கோபுரம் நிழலாக நீரில் பிரதியாகத் தெரிந்தது. நிமிர்ந்து மேல் நோக்கி பார்த்தான். ஆலய கோபுரம் ஒன்று தெரிந்தது. நடு வனத்துக்குள் கோயிலா கோபுரத்தை வணங்கிவிட்டு ஆச்சரியத்துடன் அந்தக் கோயிலுக்குள் நுழைய அடியெடுத்து வைத்தான்.
கோயில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் வந்தது. வா விஸ்வநாதா உனக்காகத்தான் காத்திருக்கிறேன். உனது குரு என்னை பார்க்கத்தான் அனுப்பினார் என்று. தனது ஞான குருவை காணும் ஆவலில் கோயிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன். அங்கே அவன் கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது. பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார். இதைக் கண்ணுற்ற விசுவநாதனால் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. எனது குரு உங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். என கூறியவன் ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வையுங்கள என்றான். அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக் கொள்ளாமல் அவனை பார்த்து மேலும் கூறினார். நீ வேண்டுமானால் எனது கால்களை எடுத்து வேறு இடத்துப் பக்கம் திருப்பி வை. என்னால் கால்களை எடுக்க முடியாது என்றார். கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் அவரை நோக்கி வேகமாக வந்து அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்றி திருப்பி வைத்தான். காலை தூக்கி வைத்த இடத்தில் சிவ லிங்கம் தெரிய வெடுக்கென்று காலை மீண்டும் தூக்கி வேறொரு திசைக்கு மாற்றினான். அங்கும் அங்கும் சிவலிங்கம் காட்சி தெரிய காலை கீழே வைக்காது தூக்கிய வண்ணம் நின்றிருந்தான். கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தெழுகிறதே என செய்வதறியாது விழித்தான். பல இடங்களில் காலை மாற்றி மாற்றி தூக்கி வைத்தாலும் அனைத்து இடத்திலும் சிவலிங்கம் தோன்றுகிறதே என யோசித்தவன் தனது தலையில் அவரின் கால்களை வைத்து அழுத்தினான்.
அவனே சிவமானான்
அவனே சிவமானான்
அவனே சிவமானான்
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம்.
மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -10
கர்ணன் சல்லியனிடம் தேரை பூமியில் சிக்குண்ட இடத்தில் இருந்து மீட்குமாறு கூறினான். அதற்கு சல்லியன் எனது வேலை தேர் ஓட்டுவது மட்டும் தான். தேரை மீட்பது அல்ல. என்னை நீ அவமதித்து பேசினாலோ முறை தவறி பேசினாலோ நான் உன்னை விட்டு விலகி விடுவேன் என்று துரியோதனனிடம் போட்ட நிபந்தையின் பெயரில் தான் உனக்கு சாரதி ஆனேன். இப்போது நான் போகிறேன் என்று கூறிவிட்டு ரதத்தை விட்டு சென்றுவிட்டார். கர்ணன் தன் தேரில் இருந்து குதித்து தன் தேர் சக்கரங்களை வெளியே எடுக்க முயன்றான். இந்த சூழ்நிலையில் அர்ஜுனன் அவனை கொல்ல விரும்பவில்லை.
கிருஷ்ணர் அர்ஜுனனை நோக்கி ஏன் தயங்குகிறாய் அர்ஜுனா அவன் மீது உள்ள அணைத்து சாபங்களும் ஒன்றாக வேலை செய்கிறது. இது தான் சரியான தருணம். செலுத்து உன் அம்புகளை. கொன்றுவிடு அவனை என்றார். அர்ஜுனனும் தன் இலக்கை குறித்தான். பரசுராமர் அளித்த சாபம் இப்போது வேலை செய்தது. ஆபத்து வேளையில் கர்ணன் கற்ற வித்தைகள் அனைத்தும் அவனுக்கு மறந்து போனது. அர்ஜுனன் தன் மேல் போர் தொடுப்பதை கண்ட கர்ணன் நிராயுதபாணியாய் நிற்கின்ற என்னை தர்மத்தின் பெயரில் கேட்கிறேன் தேரை பூமியில் இருந்து மீட்டு எடுக்க சற்று அவகாசம் கொடு என கேட்டான்.
அப்போது கிருஷ்ணர் கர்ணா நீயா தர்மத்தைப் பற்றி பேசுகிறாய். துரியோதனன் சகுனியுடன் சேர்ந்து தீமைக்குத் துணைப்போனாய். அப்போது உன் தர்மம் என்ன ஆயிற்று. மன்னர் நிறைந்த அவையில் திரோபதியின் உடையைக் களைய நீயும் உடந்தைதானே அப்போது எங்கே போயிற்று உன் தர்மம். பாண்டவர்கள் பதின்மூன்று காலம் வன வாசம் முடித்து வந்ததும் தர்மப்படி நடந்துக் கொண்டாயா. அபிமன்யூவை தர்மத்திற்கு விரோதமாக பின்னால் இருந்து தாக்கினாயே அப்போது எங்கே போயிற்று உன் தர்மம் என கேட்டார். கர்ணன் பதில் பேச முடியாமல் நாணித் தலை குனிந்தான். தான் புரிந்த செயல்கள் சரியானவர்கள் என்று சமாதானம் சொல்ல அவனுக்கு இயலவில்லை
அர்ஜூனன் தன் சக்தி அஸ்திரத்தை எடுத்து நான் தர்மயுத்தம் செய்வது உண்மையென்றால் இது கர்ணனை அழிக்கட்டும் என கர்ணன் மீது செலுத்தினான். அஸ்திரங்களை ஏவும் மந்திரங்கள் மறந்து போக உதவி அற்ற நிலையில் புறமுதுகு காட்டாமல் அர்ஜுனனின் அஸ்திரங்களை மார்பிலே கர்ணன் ஏந்தினான். அம்பு மீது அம்பு விட்டான் அர்ஜுனன். ஆனாலும் கர்ணனின் உயிரை அவற்றால் தீண்டக் கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில் அர்ஜுனனின் மின்னல் வேக அம்புகள் அனைத்தும் மலர் மாலைகளாகி கர்ணனுக்கு விழத் துவங்கின. குழம்பினான் அர்ஜுனன்.
மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -9
அர்ஜூனனுடன் வீராவேசமாக போர் புரிந்த கர்ணன் இத்தருணத்தில் இந்திரன் தனக்கு கொடுத்திருந்த சக்தி ஆயுதம் தன் கைவசம் இல்லையே என்று வருந்தினான். வேறு வழியில்லாமல் சக்தி ஆயுதம் துரியோதனனின் வேண்டுகோளின் படி கடோத்கஜன் மீது ஏவப்பட்டது. சக்தி ஆயுதத்திற்கு அடுத்தபடியாக நாகாஸ்திரம் மிக பயங்கரமான ஆயுதம் கர்ணன் அதை எடுத்தான். அர்ஜுனனுடைய கழுத்தை இலக்காக வைத்தான். கர்ணனின் குறியைக் கண்ட சல்லியன் கர்ணனிடம் அவன் கழுத்துக்கு குறி வைக்காதே. மார்புக்கு குறி வை என்றான். கர்ணன் அர்ஜுனன் மாபெரும் வீரன் அவன் உயிர் சில நிமிடங்கள் ஆனாலும் துடித்து இறப்பதை நான் விரும்பவில்லை. ஒரே நொடியில் வேதனை இன்றி அவன் இறக்கட்டும். இதோ அவன் கழுத்துக்கு குறி வைத்து எய்கிறேன் அம்பை என்றான்.
சல்லியன் மீண்டும் வலியுறுத்தினான். சொல்வதை கேள் கர்ணா அர்ஜுனனிடம் நாகாஸ்திரத்துக்கு தகுந்த பதில் அஸ்திரம் கிடையாது. எனவே கிருஷ்ணன் நிச்சயம் ஏதாவது சூழ்ச்சி செய்வான். எனவே நீ அவன் மார்புக்கு குறி வை என்றான். கர்ணன் கேட்கவில்லை நாகாஸ்திரம் நெருப்பைக் கக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிப் பாய அர்ஜுனன் தன் முடிவு நெருங்கி விட்டது என கையைக் கட்டிக் கொண்டு காத்திருக்க அண்டசராசரங்கள் நடுநடுங்க போரை ஆவலாய் காணக் காத்திருந்த தேவர்கள் மனம் பதைபதைக்க நாகஸ்திரம் அர்ஜுனனை நெருங்கியது.
அந்த நேரத்தில் கிருஷ்ணன் தன் காலால் தேரை அழுத்த குதிரை மண்டியிட்டு அமர்ந்ததும் தேர் ஒன்னரை அடி மண்ணுக்குள் புதைந்தது. அர்ஜுனன் தலையைக் கொய்ய வந்த நாகாஸ்திரம் இந்திரனால் அர்ஜுனனுக்கு வழங்கப்பட்ட கிரீடத்தை சுக்குநூறாக உடைத்தது. அஸ்திரம் திரும்ப கர்ணனை வந்தடைந்தது. இந்த அதிசயத்தை கண்ட பாண்டவர்கள் கர்ஜித்து ஆரவாரம் செய்தார்கள். கோபம் கொண்ட சல்லியன் கர்ணனை மீண்டும் நாகாஸ்திரத்தை செலுத்துமாறு வற்புறுத்தினான். தான் குந்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் கர்ணன் அதை உபயோகிக்க மறுத்தான். சல்லியன் மீண்டும் மீண்டும் வற்புறுத்த கோபம் அடைந்த கர்ணன் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். உங்கள் வேலை ரதம் ஓட்டுவது மட்டும் தான். அதை மட்டும் செய்யுங்கள் என்றான். இருவருக்கும் அபிப்பராய பேதம் உருவானது.
மீண்டும் இரு வீரர்களும் உயிரைப் பறிக்கும் அஸ்திரங்களை இருவரும் ஒருவர் மீது ஒருவர் எய்து கொண்டு போரிடுகிறார்கள். அர்ஜுனன் எய்த அம்புகள் கர்ணனைத் தாக்க கர்ணன் சோர்ந்து போகிறான். அப்போது அவன் முடிவு அவன் கண்களில் தெரிகிறது. மரணம் தன்னை நெருங்கி வந்ததை கர்ணன் உள்மனதில் அறிகிறான். காளதேவன் அசிரீரியாக கர்ணா பூமாதேவி உன் ரதத்தை தன்னுளே பிடித்து வைக்கப் போகிறாள் கவனம் என எச்சரிக்கிறார். அதை உணர்ந்து செயல்படும் முன்னரே தேர் சக்கரம் மண்ணில் புதைகிறது.