மகாராஷ்டிர மாநிலம் புனே நகரிலுள்ள பாடாலேஷ்வரர் கோயிலின் சிவலிங்கம்.
Month: April 2020
மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -1
விதுரரும் சஞ்சயனும் திருதராஷ்டிரனை சமாதானப்படுத்த பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். அஸ்தினாபுரம் துக்கத்தில் மூழ்கி இருந்தது. உற்றார் உறவினர் என அனைவரையும் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மடிந்து போனதை குறித்து பெண்கள் அழுது கொண்டிருந்தனர். போரில் எண்ணிக்கையில் அடங்காத வீரர்கள் அழிந்து போனதற்கு திருதராஷ்டிரன் தான் காரணம் என்று சஞ்சயன் எடுத்துரைத்தான் இதைக் குறித்து பெரியோர்கள் எச்சரிக்கை செய்தபொழுது திருதராஷ்டிரன் அதை ஏற்கவில்லை. பின்பு அதன் விளைவை அனுபவித்தே ஆகவேண்டும் என்று விதுரர் கூறினார். அப்போது வியாச பகவான் அங்கு பிரசன்னமாகி திருதராஷ்டிரருக்கு ஓரளவு ஆறுதலும் உறுதிப்பாடும் கூறினார். அம்மன்னன் போர்க்களத்திற்குச் சென்று தன்னுடைய புதல்வர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என்றும் அழிந்து போனவர்களுக்கு ஈமக் கடன்களைச் செய்து முடிக்க வேண்டும் என்றும் வியாசர் புத்திமதி புகட்டினார். திருதராஷ்டிரன் தன் தம்பியின் பிள்ளைகளாகிய பாண்டவர்களை தன் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார் வியாசர்.
அஸ்தினாபுரத்தில் இருந்தவர்கள் கும்பல் கும்பலாக புறப்பட்டு போர்க்களம் நடந்த இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் நடந்து போன அதே பாதையில் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரௌபதி அழுது கொண்டு வனத்திற்குச் சென்றான். தமக்கு வந்த துயரம் நாளடைவில் அஸ்தினாபுரத்து மகளிருக்கு வந்தமையும் என்று கூறி இருந்தாள். திரௌபதி அப்பொழுது கூறியது இப்போது நடந்தது.
பதிமூன்று வருடத்திற்கு முன்பு வனவாசம் போன பாண்டவர்கள் இப்போது தங்களுக்கூறிய ராஜ்யத்தை மீட்டெடுத்து வெற்றி வீரர்களாக அஸ்தினாபுரத்திற்கு திரும்பி வந்தார்கள். அஸ்தினாபுரம் நுழைந்த உடனேயே பெரியப்பா திருதராஷ்டிரரோடு இணைந்து இருக்க பாண்டவர்கள் முயன்றனர். பாண்டவர்கள் மீது கோபத்திலும் சோகத்திலும் மூழ்கிக் கிடந்தான் திருதராஷ்டிரன்.
அரண்மனைக்கு வந்த பாண்டவர்களில் யுதிஷ்டிரனை கிருஷ்ணன் முதலில் திருதராஷ்டிரருக்கு அறிமுகப்படுத்தினார். அவனை அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டார். இரண்டாவது பீமனை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. பீமன் பெயரை கேட்டதும் திருதராஷ்டிரனுக்கு கோபம் அதிகமாக வரும் என்று கிருஷ்ணர் எதிர்பார்த்தார். அதை சமாளிக்க பீமனுக்கு பதிலாக அவனைப் போன்றே செய்யப்பட்ட பொம்மை ஒன்றை திருதராஷ்டிரன் முன் நிறுத்தி பீமன் என்று அறிமுகப்படுத்தினான். துரியோதனனையும் ஏனேய அனைத்து புதல்வர்களையும் கொன்றதை எண்ணிய திருதராஷ்டிரர் சினத்தை வளர்த்து அதை வெளிப்படுத்தும் வழியாக வெறுப்புடன் இறுகத் தழுவினான். அதன் விளைவாக அந்த பொம்மை நொறுங்கிப்போனது. திருதராஷ்டிரனும் மயங்கி தரையில் விழுந்தான். திருதராஷ்டிரனை சஞ்சயன் தேற்றுவித்தார். தெளிந்து எழுந்த மன்னன் தன் செயலை குறித்து வருந்தினார். பீமனை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய முறையை கிருஷ்ணன் எடுத்துரைத்தார். பீமன் மீது இருந்த வெறுப்பு தற்பொழுது திருதராஷ்டிரருக்கு விறுப்பாக மாறி அமைந்தது. அன்பு படைத்தவனாக திருந்தி தன் தம்பியின் பிள்ளைகள் ஐவரையும் தனக்கு உரியவர்கள் என அன்புடன் ஏற்றுக்கொண்டான்.
பஞ்சநதன நடராஜர்
1.ஆலிங்க நதனம் 2.பஞ்சநதனம் 3.சிங்க நதனம் 4.யானை நதனம் 5.யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்று சிற்பக்கலை வல்லுனர்களால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன. அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அந்த கற்களுக்கு பஞ்சநதன பாறை என்று பெயர். அந்த வகை பாறையில் செய்தவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால் சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இந்த நடராஜருக்கு உண்டு. காலையில் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கும். இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது. சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள சிறுநீரகம் மற்றும் சிறுநீரக கல் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.
சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு திருச்சி அருகில் ஊட்டத்தூரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவிலில் அருள்பாலிக்கிறார். நடராஜர் சிலைக்கு அருகில் இறைவி சிவகாம சுந்தரி முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இயற்கையிலேயே நன்னீர் ஊற்று இருந்த ஊர் என்பதனால் ஊற்றத்தூர் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் ஊட்டத்தூர் என பெயர் மருவி மாறியது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளார். ஆகையால் கோவிலின் நடுவில் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியே ஊரில் உள்ள மற்றொரு கோவிலான பெருமாள் கோவிலுக்கு பிரம்ம தீர்த்தம் எடுத்து சென்றதாக வரலாறு கூறுகிறது. திருநாவுக்கரசர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம் அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடலூர் என அழைக்கப்பட்டது. இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்
இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது. ராஜராஜசோழன் உடல் நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு குணம் அடைந்து ஆயுட்காலம் நீட்டிக்கப்பெற்றார் என்றும் கர்ண பரம்பரை செவிவழிச்செய்தி புராண வரலாறு உள்ளது. இந்த அபூர்வ நடராஜர் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பாடலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.
மகாபாரதம் 10. சௌப்தீக பருவம் பகுதி -2
பாஞ்சால நாட்டு இளவரசன் திருஷ்டத்யும்னனும் திரௌபதியின் செல்வர்கள் ஐவரும் பாண்டவர்களின் படைகளும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி யுதிஷ்டிரனிடன் எடுத்துச் செல்லப்பட்டது அதை கேட்டு அவன் ஸ்தப்பித்துப்போனான். பாண்டவ சகோதரர்களும் திகைத்துப் போயினர். இந்த மகாபாரதப் போரின் விளைவாக தோல்வியுற்றவர்களும் வெற்றி அடைந்தவர்களும் ஏறத்தாழ ஒரே பரிதாபகரமான நிலையில் இருந்தார்கள். இந்த விபத்து நடந்த இடத்திற்கு திரௌபதி அதிவிரைவில் அழைத்து வரப்பட்டாள். தன் செல்வர்கள் மடிந்த கிடந்ததை பார்த்த அவள் மயங்கி கீழே விழுந்து கதறி அழுதாள். அதே வேகத்துடன் அவள் பேச ஆரம்பித்தாள். அஸ்வத்தாமனை கொல்ல முடியாது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவனை வெட்டி தள்ள வேண்டும். இல்லையெனில் அவன் சிரசில் அணிந்திருக்கும் மணியை பிருங்கி அவனை அவமானப்படுத்த வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நிகழும் வரை நான் பட்டினி கிடப்பேன் என்றாள் அவனைத் தேடிப் பிடிக்க பீமன் உடனே கிளம்பினான்.
வல்லமை பெற்ற அஸ்வத்தாமனை எளிதில் பிடிக்க பீமனால் இயலாது என்பதை அறிந்த கிருஷ்ணரும் அர்ஜூனனும் பீமனோடு கிளம்பினார்கள். கங்கை கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் இருந்த அஸ்வத்தாமனை கண்டார்கள். பீமன் அவன் மீது பல அம்புகளை செலுத்தினான். அஸ்வத்தாமன் பாண்டவர்களின் வம்சம் அழிந்து போக வேண்டும் என்று எண்ணி பிரமாஸ்திரத்தை செலுத்தினான். பதிலுக்கு அர்ஜூனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமாயின் உலகம் அழியும் என அறிந்த வியாசரும் நாரதரும் உலகை காக்க நினைத்தனர். அர்ஜூனனிடம் பிரம்மாஸ்திரத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கட்டளை இட்டனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ஜூனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். அஸ்வத்தாமனுக்கு பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்து கொள்ளும் ஆற்றல் இல்லை.
பிரமாஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். அஸ்வத்தாமன் பாண்டவர் வம்சத்தையே பூண்டோடு ஒழிக்க எண்ணி பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும் என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். ஆனால் கிருஷ்ணரின் அருளால் உத்திரையின் கரு காப்பாற்றப்பட்டது. சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கிருஷ்ணர் பழித்தார். தலையில் இருந்த மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான். அறிவிலியே நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டு காட்டில் தன்னந்தனியாய் பல ஆயிரம் ஆண்டுகள் விலங்காகவும் மானுடாகவும் தவிப்பாயாக என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர். உத்தரையின் கருவில் உள்ள குழந்தை நல்லபடியே பிறந்து பரீட்சித் என்னும் பெயருடன் இந்நில உலகை ஆளுவான் என்று வியாசர் ஆசி கூறினார். சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்கு சென்றான்.
கிருஷ்ணர் அர்ஜுனன் பீமன் மூவரும் பாசறைக்கு திரும்பிச்சென்று தாங்கள் கைப்பற்றி வந்த அஸ்வத்தாமனின் மணியை திரௌபதியிடம் ஒப்படைத்தார்கள். துரியோதனன் அழிந்து விட்டான். உன்னுடைய சபதம் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது என்று தெரியப்படுத்தினார்கள் திரௌபதி ஒருவாறு மன அமைதி அடைந்தாள்.
சௌப்தீக பருவம் முடிந்தது அடுத்து ஸ்திரி பருவம்.
மதுரா சிவலிங்கம்
உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள சனி பகவான் கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம்.
மகாபாரதம் 10. சௌப்தீக பருவம் பகுதி -1
பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், கிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள் படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகியோர் துரியோதனைக் கண்டு வேதனைப்பட்டனர். துரியோதனன் வாழ்ந்திருந்த காலத்தில் வல்லமை மிக்க பேரரசனாக இருந்தான். சிற்றரசர்களும் மந்திரிகளும் அவனுடைய ஆணையை நிறைவேற்ற காத்திருந்தனர். அல்லும் பகலும் அவனுக்கு பணிபுரிய பாணியாளர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இப்பொழுது துரியோதனன் கவனிப்பார் யாரும் இல்லாமல் அடிபட்டு வெறும் தரையில் தன்னந்தனியாக படுத்து தவித்துக் கொண்டிருந்தான். தொடைகள் முறிந்ததால் நகர முடியாதமல் துயரமுற்றான். தான் அணு அணுவாக செத்து கொண்டிருப்பதை அறிந்தான் துரியோதனன்.
தன் வேந்தனின் நிலையை பார்த்த அஸ்வத்தாமன் வருந்தினான். விதியை வெல்ல முடியவில்லையே என்று அஸ்வத்தாமனிடம் வருந்தினான் துரியோதனன். அஸ்வத்தாமனுக்கு கோபம் மூண்டது. இல்லாத பொய்யை சொல்லி பாண்டவர்கள் என் தந்தையை தோற்கடித்து அவரைக் கொன்று விட்டனர். அடாத முறையை கையாண்டு உங்களை இந்நிலைக்கு கொண்டுவந்து விட்டனர். இப்பொழுது நான் சபதம் மேற்கொள்கிறேன். பாண்டவர்களே நான் கொல்வேன். அவர்களை ஒழித்துத் தள்ளும் வரை நான் ஓய மாட்டேன் என்று அசுவதாமன் துரியோதனனிடம் கூறினான். அஸ்வத்தாமனின் சபதம் துரியோதனனுக்கு மகிழ்ச்சியை ஊட்டியது அஸ்வத்தாமன் மீது நீர் தெளித்து அவனை சேனாதிபதி ஆக்கினான் துரியோதனன். இப்போது கௌரவர்களிடம் சேனே ஒன்றும் இல்லை. கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா மூவரும் பாண்டவர்கள் தங்கியிருந்த பாசறைக்கு அருகில் சென்று நள்ளிரவு வரை காத்திருந்தனர்.
உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும் திரௌபதியையும் கொல்ல வேண்டும் என அஸ்வத்தாமன் கருதினான். கிருபர் அத்திட்டத்தை ஏற்கவில்லை. கிருபரின் எதிர்ப்பை மீறி அன்று இரவு அஸ்வத்தாமன் பாண்டவர்கள் பாசறைக்குள் நுழைந்தான். அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். அவன் திரௌபதியின் புதல்வர்களான உபபாண்டவர்களை பாண்டவர்கள் என்று எண்ணி தலையை கொய்து கொன்றான். தன் தந்தையை கொன்ற திருஷ்டத்துய்மனை சித்ரவதை செய்து கொன்றான். சிகண்டியையும் கொன்றான். அப்போது பாண்டவர்கள் கிருஷ்ணரின் அறிவுறைப்படி அங்கு இல்லை.
அஸ்வத்தாமன் செயல் அறிந்த துரியோதனன் மகிழ்ந்தான். அஸ்வத்தாமன் தான் கொய்த தலைகளை துரியோதனன் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு கொண்டு சென்று காண்பித்தான். அதை பார்த்த துரியோதனன் மூடனே இவர்களின் இளகிய முகத்தை பார்த்துமா உனக்கு தெரியவில்லை இவர்கள் பாண்டவர்கள் இல்லை என்று என்ன காரியம் செய்தாய் நீ என்று திட்டி விட்டு இறுதிவரை பாண்டவர்களை ஒழிக்க முடியவில்லையே என்று கூறி தன் விழிகளை மூடினான். துரியோதனன் உயிர் பிரிந்தது. வாழ்நாளில் ஒரு கணம் கூட அவன் தன் செயலுக்கு வருந்தவில்லை. மரணித்த ஒவ்வொரு வீரனின் இறப்பிற்கு பலரின் பூர்வ ஜென்ம கதை, சாபங்கள், பாவங்கள், புண்ணியங்கள், சூழ்ச்சி, கடன் என அனைத்தும் இருந்தது. ஆயிரம் ஆயிரம் வீரர்களை பலிக்கொண்டு சடலங்களை மலையாக குவித்து குருதியை ஆராய் பெருக்கெடுக்க செய்த குருக்ஷேத்திர போர் முடிவிற்கு வந்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தி
முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர். அதை பார்த்த அரசன் நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்? அதற்கு அவர்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம் என்றனர். அதற்கு அரசன் உங்கள் அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச் சொல் என்று கூறி வெட்டிவிட்டான்.
ஐவரும் பதறி அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக்கொண்டிருக்கிறான் அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள் என்றார். உடனே அங்கு சென்ற ஐவரும் அந்த இடத்தில் 15 வயது பாலகனை கண்டனர். ஐவரும் இச்சிறு பாலகனா பக்தன் என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது. அச்சிறுபாலகன் தான் புலியை நமசிவாய மந்திரம் கூறி வென்று அவர்களை காப்பாற்றினான். ஐவரும் நடந்ததை பாலகனிடம் கூறி அச்சிறுபாலகனை அழைத்து சென்றனர்.
அண்ணாமலையார் கோவில் வந்தடைந்த அவர்கள் அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான். அண்ணாமலையார் முலஸ்தானம் சென்று நமசிவாய மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச் செய்தான் அந்த பாலகன்.. அதை நம்ப மறுத்த முகலாய அரசன் நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய் எனக் கூறி நம்ப மறுத்தான். சரி மற்றொரு வாய்ப்பு இதில் நீ வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நான் வென்றால் இடித்து விடுவேன் என கூறினான். அச்சிவபாலகன் அண்ணாமலையான் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான். அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள் அவருக்கு சக்தி இருந்தால் பூவாக மாற்றட்டும் எனக் கூறினான். அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர். அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது. அதில் பல ரக பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனை கண்ட ஐவரும் பாலகனும் ஓம் நமசிவாய அண்ணாமலைக்கு அரோகரா எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர்.
இதனையும் நம்பாத அரசன் கடைசியாக ஒரு போட்டி. நம் பெரிய நந்தியை பார்த்து இந்த உயிரில்லாத இந்த நந்திக்கு உயிர் கொடுத்து காலை மாற்றி மடித்து வைத்து உட்கார்ந்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியையும் கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான். உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் நம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். அண்ணாமலையார் உடனே பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து கால் மாற்றி மடக்கி வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார். அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான். சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும். அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும்.
அன்று அங்கு வந்த பாலகன் வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார். அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம். இக்கிராமம் வடக்கே இருப்பதாலேயே நந்தியும் வடக்கு பக்கம் முகம் லேசாக திரும்பி காணப்படுகிறது. அவர் நினைவாக இங்கு இவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது.
மவுண்ட் அபு சிவலிங்கம்
ராஐஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு ஸ்தலத்தில் அமைந்துள்ள சிவலிங்கம்
அரங்கனின் மந்திர மரக்கால்
திருமங்கையாழ்வார் அரங்கனுக்கு கோவில் கட்டும் பணியில் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த திவ்ய திருத்தொண்டில் ஈடுபட்டு வந்தனர். கூலிக்கு பலர் வேலை செய்து வந்தாலும் சிலர் நாம் செய்துகொண்டிருப்பது ஒரு திருத்தொண்டு என்கிற எண்ணத்துடனும் சிலர் அதை வெறும் கூலி வேலையாகவும் சிலர் அதை வேண்டா வெறுப்பாகவும் செய்துவந்தனர். சிலர் அதைக் கூட செய்யாமல் வேலை செய்வது போல பாசாங்கு செய்தனர். நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வெகு ஜோராக நடைபெற்று வந்த அந்த பணியில் ஒரு கட்டத்தில் பொருள் வசதி இன்றி தொய்வு ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்தார் திருமங்கையாழ்வார். கணக்குப் பிள்ளையை அழைத்து பேசினார். இன்றைய பணிக்கு கூலி தரக்கூட பணம் இல்லை என்றார் அவர். அவ்வளவு தான் திருமங்கையாழ்வார் தவித்துப் போனார். கணக்குபிள்ளையிடம் இன்று ஒரு நாள் சமாளித்துவிடுங்கள். பணத்திற்கு பதில் ஏதேனும் பொருள் கொடுத்து அனுப்பமுடியுமா பாருங்கள். நாளைக்கு ஏதாவது செய்யலாம் என்று கூறி கணக்குப் பிள்ளையை அனுப்பிவிட்டு தனியே யோசிக்கிறார்.
நடப்பது அவன் பணி. அது வெற்றிகரமாக நிறைவேற வேண்டியது அவனிடத்தில் உள்ளது. நாம் எதற்கு கவலைப்படுவானேன் என்று மனதை தேற்றிக்கொண்டார். கோவிலுக்கு சென்று அரங்கனை வணங்கி தனது மனக்குறையை எடுத்து சொல்லி உன் ஆலயத் திருப்பணியை நீ தான் மேற்கொண்டு தொடர உதவவேண்டும். நீ அறியாதது எதுவும் இல்லை என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அரங்கன் அன்பனே கவலை வேண்டாம். நாளை கொள்ளிடக் கரைக்கு வாருங்கள். கொள்ளும் அளவிற்கு பொருள் தருகிறேன் என்று கூறிவிட்டு மறைந்தான். மறுநாள் எழுந்ததும் அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் திசையை நோக்கி வணங்கியவர் நித்யகர்மானுஷ்டானங்களை முடித்துவிட்டு கொள்ளிடக்கரைக்கு விரைந்தார். ஆனால் கொள்ளிடக்கரையில் யாரும் இல்லை. நிமிடங்கள் நாழிகையானது. நாழிகைகள் கரைந்து நாளானது. யாரும் வரவில்லை. ஒருவேளை அரங்கன் கனவில் வந்தது பிரம்மையோ. அரங்கன் வந்து எதுவும் சொல்லவில்லையோ… எப்போதும் கோவில் கட்டும் நினைவிலேயே இருப்பதால் நமக்கு தான் அப்படி ஒரு கனவு வந்ததோ என சிந்தித்துக்கொண்டிருந்தார் ஆழ்வார்.அரங்கன் வருவான் வருவான் என்று நாள் முழுக்க காத்திருந்தது தான் மிச்சம். யாரும் வரவில்லை.
சரி புறப்படலாம் என்று அவர் தீர்மானித்த நேரம் தொலைவில் யாரோ வருவது போலிருந்தது. யாரோ ஒருவர் பார்க்க ஒரு வணிகர் போல இருந்தார். தலையில் தலைப்பாகை. கையில் ஒரு சுவாதியும் எழுத்தாணியும். இன்னொரு கையில் மரக்காலுடன் வந்துகொண்டிருந்தார். ஐயா நான் உங்களை பார்க்க தான் வந்துகொண்டிருக்கிறேன். இருங்கள் போய்விடாதீர்கள் என்று சற்று தொலைவில் வரும்போது ஆழ்வாரின் காதுகளில் விழுமாறு சொன்னார். ஆழ்வாருக்கு ஆச்சரியம். என்னைப் பார்க்கவா? ஆமாம் ஐயா உங்களுக்கு ஏதோ பொருள் தேவையாமே. மிகவும் சிரமப்படுகிறீர்கள் என்று ரங்கநாதர் என்னை இங்கே அனுப்பிவைத்தார். மிக்க மகிழ்ச்சி ஐயா என்று கூறிவிட்டு அவரை சற்று ஆராய்வது போல பார்த்தார் திருமங்கையாழ்வார். பொருள் தர வந்திருப்பதாக சொல்கிறீர்கள். உங்களிடம் இந்த காலி மரக்காலை தவிர வேறு எதுவும் இல்லையே என்று கேட்டார். இந்த மரக்கால் தான் அந்தப் பணியை செய்யப்போகிறது இது நெல் அளக்கும் மரக்கால் என்று நினைத்து விட்டீர்கள். இது பொன் அளக்கும் மரக்கால் மந்திர மரக்கால் அரங்கன் திருப்பெயரை பக்தியுடன் உச்ச்சரித்து இதில் மண்ணை போட்டாலும் அது பொன்னாகிவிடும் என்று கூறி சிரித்தான் அந்த வணிகர்.
அப்படியானால் வாருங்கள் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்திற்கே செல்வோம் என்று கூறி வணிகனை அழைத்துக்கொண்டு திருவரங்கம் விரைந்தார் திருமங்கையாழ்வார். இவர்கள் சென்ற நேரம் கூலி கொடுக்கும் நேரம். வணிகரை பார்த்து ஐயா மரக்காலில் மண்ணை போட்டு அளக்கலாமா நேரமாகிறது. தொழிலார்களுக்கு கூலி கொடுக்கவேண்டும் என்றார் திருமங்கையாழ்வார்.. இதோ உடனே ஆரம்பிப்போம். இது மந்திர மரக்கால். யார் உண்மையில் உழைத்தார்களோ அவர்களுக்கு தான் இதில் பொன் கிடைக்கும். மற்றவர்களுக்கு மண் தான் கிடைக்கும். பொன் கிடைக்காது. ஒவ்வொருவருமாக வரிசையாக வந்து நின்றனர். வணிகர் மண்ணை அள்ளி மரக்காலில் போட அவரவர் உழைப்புக்கு தகுந்தவாறு மண் அனைத்தும் பொன்னாக மாறியது. பணி செய்யாமல் ஏய்த்துவந்தவர்களுக்கு மண் தான் கிடைத்தது. அவர்கள் திருதிருவென விழித்தனர். மரக்கால் பொய் சொல்லாது போங்கள் இங்கே இருந்து என்று அவர்களை விரட்டினார் திருமங்கையாழ்வார். மண் கிடைத்தவர்கள் அனைவரும் வெகுண்டெழுந்தனர். தங்களுக்குள் கூடிப் பேசி திருமங்கையாழ்வார் செய்தது சரில்லை. உழைப்பை வாங்கிவிட்டு கூலி கொடுக்காமல் ஏமாற்றுகிறார். அதற்கு இந்த வணிகன் வேறு உடந்தை. அந்த வணிகன் நம்மை மோசம் செய்துவிட்டான் என்று குமுறினர்.
வணிகனை பார்த்து நீ மந்திரவாதி தானே உனக்கு நாங்கள் பாடம் புகட்டுகிறோம் என்று அவனை அடிக்கப் பாய்ந்தனர். ஆனால் அந்த வணிகனோ அவர்கள் பிடியில் அகப்படாமல் ஓட்டமெடுத்தான். அனைவரும் வணிகரை துரத்த திருமங்கையாழ்வார் குதிரை மீது ஏறி அவ்வணிகரை பின் தொடர்ந்தார். வணிகர் அப்படி இப்படி போக்குகாட்டிவிட்டு ஒரு இடத்தில் வந்து அமர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீமன்நாராயணனாக காட்சி தந்தார். அந்த இடமே ஆதனூர் என்னும் தலம். 108 திவ்யதேசத்தில் இது 11 வது திவ்யதேசம். தன்னை காக்கவந்து பொன் தந்து படியளந்தது சாட்சாத் அரங்கனே என்பதை அறிந்த திருமங்கையாழ்வார் கண்ணீர் மல்க அரங்கனின் துதித்தார். பாமாலைகள் பாடினார். வணிகனாக வந்தது அரங்கன் என்பதை அறிந்த ஏனையவரும் மனம் திருந்தினர். ஆழ்வார் அவர்களிடம் திருக்கோவிலில் பணி செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. எனவே அதை ஈடுபாட்டுடன் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவதே அரங்கன் இந்த விளையாட்டை நிகழ்த்தினார். இனியாவது சிரத்தையுடன் பணி செய்யுங்கள் என்றார்.அவர்களும் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு திருமங்கையாழ்வார் கால்களில் விழுந்தனர். இன்றும் ஆதனூரில் சுவாமி மரக்காலை தலையில் வைத்துப் சயனித்திருப்பார். இடது கையில் எழுத்தாணி ஏடு இருக்கும். இங்கே சுவாமிக்கு படியளக்கும் பெருமாள் என்று பெயர்.
மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -6
பாண்டவர்கள் கௌரவர்களுடைய பாசறைக்கு சென்று அதை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். அப்படி செய்தது கௌரவர்களை வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக இருந்தது. கிருஷ்ணர் அர்ஜூனனை தேரில் உள்ள கருவிகளை எடுத்துக் கொண்டு தேரில் இருந்து இறங்க சொன்னார். கொடியில் வீற்றிருந்த மஹா பலசாலியான அனுமாரையும் இறங்குமாறு வேண்டினார். அவர்கள் இறங்கியதுமே அர்ஜுனனின் தேர் பற்றியெரிந்தது. சுக்கு நூறாக வெடித்து சிதறியது. அதிர்ச்சி அடைந்த அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்து இது என்ன விபரீதம் என்று வினவினான். அதற்கு கிருஷ்ணர் பீஷ்மர் துரோணர் கர்ணன் ஆகியோர் செலுத்திய அம்புகளால் முன்னமே தேர் எரிந்திருக்கும். நானும் சிரஞ்சீவி அனுமாரும் அதில் இருந்ததால் அழிவு ஏற்படவில்லை. நான் இறங்கியதும் அம்பு தாக்கிய வெப்பத்தால் தேர் எரிந்து விட்டது என்றார். பாண்டவர்கள் கிருஷ்ணரை வணங்கி நன்றி கூறினர். தர்மத்தை காக்க நடத்திய நாடகத்தில் அனுமாரின் பங்கு முடிந்தது என்று கூறி அவருக்கு விடை கொடுத்தார் கிருஷ்ணர். அனுமாரும் கிருஷ்ணரை வணங்கி பாண்டவர்களுக்கு ஆசி கூறி விடை பெற்றார்.
யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். உடனடியாக அஸ்தினாபுரம் சென்று பெரியப்பா திருதராஷ்டிரருக்கும் பெரிய தாய் காந்தாரிக்கும் ஆறுதல் சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணர் அன்று இரவு பாண்டவர்கள் ஐவரும் பாசறைக்குள் தங்காமல் வெளியில் தங்கி உறங்குமாறு கேட்டுக்கொண்டார். கிருஷ்ணர் கூறியதை பாண்டவர்கள் ஏற்றக்கொண்டனர்.
திருதராஷ்டிரருக்கும் காந்தாரிக்கும் கிருஷ்ணர் ஆறுதல் கூறினார். உங்கள் துயரத்திற்கு துரியோதனனே காரணம். அவன் சன்றோர்களின் அறிவுரையை ஏற்கவில்லை. தான் என்னும் ஆணவத்தால் அழிந்தான். அவனால் பாண்டவர்கள் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது. காந்தாரி ஒருமுறை உன் மகன் துரியோதனனிடம் நீ என்ன கூறி ஆசி வழங்கினாய் என்று நினைவு இருக்கிறதா மகனே தர்மம் எங்கு உண்டோ அங்கு வெற்றி உண்டு என்றாயே அது அப்படியே நிறைவேறியது. எல்லாம் விதி. எனவே பாண்டவர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம் என்ற கிருஷ்ணரரின் அறிவுரையைக் கேட்ட காந்தாரி சற்று ஆறுதல் அடைந்தாள்.
சல்லிய பருவம் முடிந்தது. அடுத்தது சௌப்தீக பருவம்.