சாளக்கிராமம்

ஒரு மன்னனின் மகள் துளசி மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார். என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக என்று சாபமிட்டாள். அந்த கல் தான் சாளக்கிராம கல். உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி. புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு. அஞ்சாதே துளசி எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது.

கிருஷ்ணஅவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ. என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன. என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான். என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும் துளசி செடியாகவும் மாறிவிடுவாய். என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால் நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன். நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா அதனால் நீ கண்டகி நதியாக ஓட நான் உன்னில் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன் என்றார். அந்த கற்களில் சங்கு சக்கர சின்னங்களும் உண்டாகும். சாளக்கிராமமாக நானே இருப்பதால் பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள். நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும் புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போற்றப்படுவாய். உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன். இங்கே வர முடியாதவர்கள் துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள் பாலிப்பேன் என்றார்.

யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ அந்த வீட்டில் வைக்கப்பட்டுஇருக்கும் சிறு இடத்தையே கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன். அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன். அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாளகிரமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம் சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன் என்றும் மஹாவிஷ்ணு கூறினார்.

மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ர கிரீடம் என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகிராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும் தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார். இவைதான் சாளகிராம மூர்த்திகள். எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். அவற்றுக்கு ஹிரண்ய கர்ப கற்கள் என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை. இந்த சாளகிராமங்கள் சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கிறன.

மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -5

பீமன் கொடுத்த ஒரு பயங்கரமான அடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு துரியோதனன் மேல் நோக்கி லாவகமாக குதித்தான். அவன் கால் கீழே படுவதற்குள் அவனுடைய இரண்டு தொடைகளையும் கதையால் ஓங்கி அடித்தான் பீமன். துரியோதனனின் இரண்டு தொடைகளும் உடைந்து அழிந்தன. துரியோதனன் நிற்க இயலாமல் கீழே வீழுந்தான்.

இடுப்புக்குக் கீழ் அடிப்பது பிழை. அது போர் நெறி ஆகாது. எந்த போர் வீரனும் இந்த அடாத செயலை ஆமோதிக்க மாட்டான். இது பீமனுக்கும் தெரியும். ஆனால் துரியோதனனின் கோபத்தை கிளப்புதல் பொருட்டே வேண்டுமென்றே பீமன் தொடையில் அடித்தான். அதன் பிறகு பீமன் துள்ளி குதித்தான் இக்காட்சியைப் பார்த்த துரியோதனன் ஆத்திரமும் சினமும் கொண்டான். பீமா இதுவா போர் முறை இதுவா சத்திரிய தர்மம் என்றான்.

துரியோதனனின் கூற்றைக் கேட்ட பீமன் துரியோதனா நீயா தர்மத்தைப் பற்றி பேசுகிறாய் அன்று ஒருநாள் எனக்கு விஷம் கொடுத்தாயே அது தர்மமா. கொடிகளால் கட்டி நதியில் வீசினாயே அது தர்மமா. அரக்கு மாளிகையில் எங்களைத் தங்கவைத்து தீயிட்டாயே அது தர்மமா. திரோபதியை சபையில் பலர் முன்னிலையில் துகில் உரிந்து மானபங்கம் செய்தாயே அது தர்மமா. எங்கள் குலக்கொழுந்தான அபிமன்யூவை நிராயுதபாணியாக்கி மூலைக்கு ஒருவராக நின்று கொன்றீர்களே அது தர்மமா. பாவத்தின் மொத்த வடிவமான நீயா தர்மத்தைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் பேசுகிறாய். நீ செய்த செயல்களின் வழியாக குரு வம்சத்திற்கு பேரழிவைக் கொண்டு வந்த பொல்லாத பாவி நீ. இந்த நெருக்கடியில் உன்னுடைய தொடைகளை நொறுக்கி தள்ளுவேன் என்று நான் சபதம் ஏற்று இருக்கிறேன். அதே வேளையில் உன் தலையின் மீது என் காலை வைப்பேன் என்று சபதம் ஏற்றேன். அதனை இப்போது நிறைவேற்றுகிறேன் என்று கூறிக்கொண்டு தரையில் கிடந்த துரியோதனனை காலால் உதைத்து காலை அவன் தலையின் மீது வைத்து அழுத்தினான்.

பீமனின் இச்செயலை யுதிஷ்டிரர் விரும்பவில்லை. வீழ்ந்து கிடப்பவன் தலையில் காலை வைத்து அழுத்துதல் தர்மம் இல்லை என பீமனைக் கண்டித்தார். பீமன் செய்த இச்செயலுக்காக துரியோதனிடம் யுதிஷ்டிரர் மன்னிப்பு கேட்டார். நடந்த இந்த துர்பாக்கியங்கள் அனைத்தும் துரியோதனன் தனக்குத்தானே தேடிக் கொண்டவைகள் என்று அவனுக்கு விளக்கிக் காட்டினார். அதற்கு துரியோதனன் உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆண்ட வீரமும் க்ஷத்திரிய தர்மத்தின்படி போர்க்களத்தில் போரிட்ட பெருமிதத்துடன் உயிர் துறந்து நண்பர்களுடன் சொர்கத்தில் இருப்பேன் என்றான். படுகாயம் அடைந்த துரியோதனன் மரணத்தின் வாயிலில் நிற்கவோ நடக்கவோ முடியாத சூழ்நிலையில் தரையில் வீழ்ந்து கிடந்தான். இதற்கு மேல் அவனை தாக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர் பாண்டவர்கள். தானாக இறந்து விடுவான் என்று கருதி அங்கிருந்து நகர்ந்தனர். ஆனால் அவன் உயிர் பிரியவில்லை. துரியோதனன் தன் தவறுகளுக்கு வருந்தவில்லை. பாண்டவர்கள் மீது இருத்த வஞ்சம் அவனை இன்னும் சாக விடாமல் உயிருக்கு உரமாகி கொண்டே இருந்தது.

மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -4

யுதிஷ்டிரன் யுத்தத்திற்கு அழைத்ததும் துரியோதனன் பேசினான் என்னுடைய நண்பர்கள் அனைவரும் எனக்காக உயிரை கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் பட்டிருக்கும் கடனை நான் உங்கள் அனைவரையும் அழித்து அதன் வாயிலாக அவர்களுக்கு என் கடனை திருப்பி செலுத்துவேன். ஆனால் இப்பொழுது என்னிடம் ஆயுதம் ஏதுமில்லை. கவசம் எதுவும் இல்லை. ரதம் இல்லை. நீங்கள் அனைவரும் அறநெறி பிறழாத போர்வீரர்கள். ஆயுதம் இல்லாமல் இருக்கின்ற என்னை நீங்கள் தாக்குதல் பொருந்தாது என்றான். அதற்கு யுதிஷ்டிரர் அறநெறி இல்லாத முறையை கையாண்டு சிறுவனாகிய அபிமன்யுவை ஆயுதம் அற்றவனாக நீங்கள் செய்து வைத்தீர்கள். நிராயுதபாணியாக இருந்த பொழுது அவனை மகாவீரர்கள் ஒன்று கூடி அவனை கொன்றீர்கள். உன்னை அணுஅணுவாக சித்ரவதை செய்து கொன்றாலும் தகும். ஆனால் இது போன்று நாங்கள் செய்ய மாட்டோம். உனக்கு தேவையான ஆயுதங்கள் நாங்கள் தருகின்றோம். நாங்கள் அனைவரும் தனித்தனியாக உன்னுடன் யுத்தம் செய்கின்றோம். எங்களில் யாரேனும் ஒருவரை நீ கொன்றால் மற்றைய நான்கு பேரும் வனவாசத்தை நோக்கி செல்கின்றோம். அப்போது எதிரி இல்லாத சாம்ராஜ்யத்தை ஏற்று அனுபவிப்பாயாக என்று கூறினார்.

பீமன் இடையில் துரியோதனனிடம் பேசினான். உன்னுடைய சகோதரர்கள் அனைவரையும் நான் அழித்து விட்டேன். அதற்கெல்லாம் மேலாக உன்னையும் கொல்ல வேண்டும் என்று நான் உறுதி கொண்டிருக்கின்றேன். ஆகையால் தயவு செய்து என்னுடன் போர் புரிய வா என்றான். அதற்கு துரியோதனன் உன்னுடன் கதை யுத்தம் செய்ய வேண்டுமென்ற ஆசை நெடுநாளாக என்னிடம் இருக்கிறது. இப்போது கதை ஆயுதம் ஒன்று தான் என்னிடம் இருக்கிறது. உன்னிடத்தில் க்ஷத்திரனுக்குரிய பாங்கு இருக்குமாகில் நீ அணிந்திருக்கும் கவசங்களையும் ஏனைய ஆயுதங்களையும் புறக்கணித்துவிட்டு தரையில் நின்று என்னுடன் நீ சண்டை புரிவாயாக. ஏனென்றால் இப்பொழுது என்னிடத்தில் ரதம் ஏதும் இல்லை என்றான். இந்த நிபந்தனைக்கு இருவரும் ஒத்துக்கொண்டனர். இருவரும் குருஷேத்திரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள். யுத்தம் துவங்கியது.

யுத்த நியதிகளை இருவரும் கடைபிடித்தனர். அவரவர் திறமைகளை இருவரும் நன்கு வெளிப்படுத்தினர். பார்ப்பதற்கு ஒருவருக்கொருவர் பொருத்தமான எதிரியாகவே தென்பட்டார்கள். திறமையை காட்ட துவங்கிய சிறிது நேரத்தில் சண்டை உயிரை வாங்கும் விதமாக வடிவெடுத்தது. அத்தகைய சண்டையிலும் போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை. பீமன் வல்லமை வாய்ந்தவன். துரியோதனன் திறமைசாலி. இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது. கிருஷ்ணர் யுத்த நெறிக்கு மாறாகப் போர் செய்தால் தான் அவனை வீழ்த்தமுடியும் என்பதை உணர்ந்து அவன் தொடையைப் பிளக்க வேண்டும் என அர்ஜூனனிடம் குறிப்பால் தெரிவிக்க அர்ஜூனனும் பீமன் பார்க்குமாறு தன் தொடையை தட்டிக்காட்டினான்.

நம்பிக்கை

ஒரு பக்தன் ஒருவன் நெடுங்காலமாக சிவனை வேண்டிக் கொண்டிருந்தான். காலங்கள் கடந்தும் சிவனின் தரிசனம் கிட்டவில்லை. அவனது வேண்டுதல்களும் ஏதும் நிறைவேறவில்லை. கோபம் கொண்ட அவன் சைவத்தில் இருந்து வைணவத்திற்கு மாறி விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தான். சிவன் சிலையை தூக்கி பரண் மேல் வைத்து விட்டு புதிய விஷ்ணு சிலையை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்து சாம்பிராணி ஊதுவத்தி ஏற்றினான். நறுமணம் அறை முழுவதும் பரவியது. நறுமணத்தை உணர்ந்த அவன் சிவன் அந்த நறுமணத்தை நுகரலாகாது என எண்ணி பரண் மீது ஏறி சிவன் சிலையின் மூக்கை துணியால் கட்டினான்.

துணியை கட்டிய அடுத்த நொடி சிவன் அவன் கண்முன் தரிசனம் தந்தார். வியந்து போன அவன் சிவனிடம் கேட்டான். இத்தனை நாட்கள் உன்னை பூஜித்த போது காட்சியளிக்காத நீ இப்பொழுது காட்சி தருவது ஏன் என கேட்டான். பக்தா இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் சிலையாக நினைத்தாய். இன்று தான் இந்த சிலையில் நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். நீ உணர்ந்த அந்த நொடி நான் உன் கண் முன் வந்து விட்டேன் என இறைவன் பதிலளித்தார்.

கிரிஸ்னேஸ்வரர் கோவில் ஔரங்கபாத்

மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் இக்கோவில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் கோவில் திருத்த வேலைகளைச் செய்வித்தார்.

மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -3

பாண்டவர்களில் சகாதேவன் சகுனியை கொல்வேன் என்ற தன் சபதத்தை நிறைவேற்றினான். பீமன் 100 கௌரவர்களையும் அழிப்பேன் என்ற சபதத்தில் துரியோதனை தவிர்த்து அனைவரையும் அழித்துவிட்டான். துரியோதனனையும் அழித்து தன் சபதத்தை முடிக்க துரியோதனனை தேடினான்.

துரியோதனன் யுத்தகளத்திலிருந்து நடந்த செல்ல ஆரம்பித்தான். இந்த வம்சம் முழுவதும் அழிந்து போவதற்கு நீயே காரணமாக இருப்பாய் என்று விதுரர் துரியோதனிடம் கூறியது அவனுக்கு அப்போது ஞாபகத்துக்கு வந்தது. தன்னுடைய தேகம் தீயினுள் போட்டு வெந்து கொண்டிருப்பது போன்று இருந்தது துரியோதனனுக்கு. தன்னுடைய கதையை தவிர அவன் கைவசம் வேறு எதுவும் இல்லை. தன் கதாயுதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நடந்து சென்ற அவன் அருகில் இருக்கும் துவைபாயன தடாகத்தை அடைந்தான். தன் உடலின் எரிச்சலை தணிப்பதற்கு தடாகத்திற்குள் அமர்ந்தான்.

துரியோதனன் மரணத்திலிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டு ஓடிவிட்டான் என்று கருதிய பாண்டவர்கள் ஏமாற்றமடைந்தனர். அவன் உயிர் பிழைத்திருத்தால் யுத்தம் இன்னும் பூர்த்தியடையவில்லை என்று பாண்டவர்கள் எண்ணினார்கள். வேட்டைக்காரர்கள் கூட்டமொன்று அவர்களை அணுகி துரியோதனன் துவைபாயன தடாகத்தில் அமர்ந்து இருப்பதாக தெரிவித்தார்கள். அது மாலை நேரம். பாண்டவர்களும் கிருஷ்ணன் விரைந்து சென்று துரியோதனனை கண்டுபிடித்தனர். துரியோதனனை கண்ட யுதிஷ்டிரர் நீ ஒரு க்ஷத்திரன் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நீ ஒரு பயந்தாங்கோலி போன்று உன் உயிரை காப்பாற்றுவதற்கு இங்கு வந்து ஒளிந்து கொண்டு இருக்கின்றாய். உனக்காக உயிர்த்தியாகம் செய்த கூட்டத்தாரை நீ மறந்து விட்டாய் என்றான். அதற்கு துரியோதனன் என் உடலுக்கு சிறிது ஓய்வு தருதல் பொருட்டே நான் எங்கே இருக்கின்றேன். என்னுடைய சகோதரர்கள் நண்பர்கள் அனைவரையும் இழந்தேன். இப்போது ராஜ்யத்தில் எனக்கு ஆசை ஏதும் இல்லை. ஆகையால் இந்த ராஜ்யத்தை உனக்கு தானமாக கொடுத்து விட்டு காட்டிற்குள் சென்று தவ வாழ்க்கை வாழ எண்ணியுள்ளேன் என்றான்.

அன்று முதியவர்கள் கொடுத்த புத்திமதியை நீ ஏற்கவில்லை. நாங்கள் சம்பாதித்த ராஜ்ஜியத்தில் ஐந்து ஊசிமுனை நிலம் கூட கொடுக்க மாட்டேன் என்று மறுத்தாய். இப்பொழுது யுத்தத்தில் தோற்கும் தருவாயில் தானமாக கொடுக்கின்றேன் என்கிறாய். உன்னுடைய பித்தலாட்டம் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிகிறது. இந்த ராஜ்யம் உன்னுடையது என்று நீ உரிமை கொண்டாடினால் உன்னை வென்று அந்த ராஜ்யத்தை பெற நான் விரும்புகின்றேன். நான் ஒரு க்ஷத்திரன் என்பதை தயவு செய்து நீ தெரிந்துகொள். யாரிடமிருந்தும் நான் தானமாக எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அப்படியிருக்க உன்னை போன்ற எதிரி ஒருவனிடம் இருந்து நான் எப்படி தானமாக ஏற்பது யுத்தத்திற்கு வா என்று யுதிஷ்டிரர் அழைத்தார்.