கந்தபுராணம் பகுதி -20

அன்றிரவில் ஜெயந்தனின் கனவில் தோன்றிய வடிவேலன் ஜெயந்தா நீயும் தேவர்களும் கவலை கொள்ளத் தேவையில்லை. நான் விரைவில் வந்து உன்னை மீட்டு உனக்கு பெருமையும் தேடி தரப்போகிறேன். என் தூதன் வீரபாகு இப்போது நீங்கள் தங்கியிருக்கும் நகரில் புகுந்து விட்டான். அவன் பராக்கிரமசாலி. சூரனை நிச்சயம் சந்தித்து அவனை என்னிடம் சரணடையச் சொல்வான். அப்படி மறுத்தால் போர் பிரகடனம் செய்ய ஏற்பாடு செய்து விட்டேன். கொஞ்சம் பொறுத்திரு என்றார். ஜெயந்தன் மகிழ்ந்தான். அந்நேரத்தில் வீரபாகு பல கட்டுக்காவல்களை மீறி ஜெயந்தனும் தேவர்களும் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குள் வந்து குதித்தான். அங்கே பெரும் அதிர்வு ஏற்பட்டது. அவன் ஜெயந்தனிடம் இந்திரன் மகனே கவலைப்படாதே. நல்ல நேரம் பிறந்து விட்டது. மீண்டும் நீங்கள் அவரவருக்குரிய பதவியைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரப் போகிறீர்கள். சூரனின் சாம்ராஜ்யம் அழியும் என்று ஆறுதல் கூறி விடை பெற்றான்.

வீரமகேந்திர பட்டணத்தின் தெருக்களில் மற்றவர் கண்ணுக்கு தெரியா வண்ணம் தன் உடலை மறைத்துக் கொண்டு நடந்தான். சூரபத்மனின் கம்பீரமான அரண்மனையை நோட்டமிட்டான். அரண்மனை வாசலில் கோரைப்பற்களும் பார்த்தாலே பயந்து நடுங்கும் விதத்திலும் கோரத் தோற்றமும் உடைய இரண்டு காவலர்கள் ஆயுதங்களுடன் அங்குமிங்கும் உலா வந்தனர். உக்ரன் மயூரன் என்ற அந்தக் காவலர்களின் கண்ணுக்கு வீரபாகு அங்கே நிற்பது தெரியவில்லை. வீரபாகு இதைப் பயன்படுத்தி அரண்மனைக்குள் நுழைந்து சபாமண்டபத்தில் வந்து நின்றான். சூரபத்மன் மிக கம்பீரமாக ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். நெற்றியிலும் உடலிலும் மூன்று பட்டையாக திருநீறு ஒளி வீசும் ஆபரணங்கள் அணிந்து தலையில் கிரீடம் சூடி ஆடம்பரமாகவும் அமர்க்களமாகவும் வீற்றிருந்தான். வீரபாகு யோசித்தான். இவ்வளவு அமர்க்களம் செய்யும் இவன் முன்னால் நின்று கொண்டு பேசினால் நமக்கு அவமானம் எனக் கருதிய வீரபாகு. முருகப்பெருமானை துதித்தான் உடனே சூரன் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை விட மிக அற்புதமான சிம்மாசனம் அந்து வந்து இறங்கியது. வீரபாகு மகிழ்ச்சியுடன் தன் உருவத்தை திடீரென வெளிப்படுத்தினான். சிம்மாசனத்தை இழுத்துப் போட்டான். சூரனின் முன்னால் கால் மேல் கால்போட்டு அமர்ந்தான். இதைக் கண்டு சூரபத்மனும் அவையில் இருந்த மற்ற அசுரர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சூரன் அதட்டினான். யார் நீ என் இடத்துக்குள்ளேயே வந்து என் முன்னாலேயே கால் மேல் கால்போட்டு மரியாதையின்றி அமர்ந்திருக்கும் உன்னை எமலோகம் அனுப்பியிருப்பேன். இருப்பினும் இத்தனை கட்டுக்காவலையும் மீறி உள்ளே வந்த நீ மாயாஜாலத்தில் சிறந்தவன் என்பதை ஒப்புக்கொண்டு நீ வந்த காரியம் பற்றி கேட்கிறேன் அதை விரைவாக என்னிடம் சொல் என்றான். வீரபாகு தன்னைப் பற்றியும் தான் வந்த விஷயம் பற்றியும் தெளிவாகச் சொன்னான். சிவபெருமானின் உத்தரவுப்படி முருகன் தோன்றியுள்ளதையும் ஏற்கனவே தாரகனைக் கொன்றதையும் சுட்டிக்காட்டி திருச்செந்தூரில் தங்கியுள்ள முருகனிடம் சரணடையும்படியும் கூறினான். சூரபத்மனுக்கு மீசை துடித்தது. வீரபாகு தொடர்ந்தான். உனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கவும் முருகப்பெருமான் தயாராக இருக்கிறார். நீ உடனடியாக தேவேந்திரனின் மகன் ஜெயந்தனையும் மற்ற தேவர்களையும் விடுதலை செய்தால் அது சாத்தியமாகும் உன் ராஜ்யத்தையும் நீ காப்பாற்றிக் கொள்ளலாம். மறுத்தால் உன் தலை போய் விடும் முருகனின் சார்பில் எச்சரிக்கிறேன் என்றான்.

சூரபத்மன் கோபம் கொப்பளிக்க இருக்கையில் இருந்து எழுந்தான். அடேய் பொடியனுக்கு தூதுவனாய் வந்த பொடியனே நான் இருக்கையில் எழுந்த பிறகும் என் முன்னால் அமர்ந்திருக்கிறாயே திமிர் பிடித்தவனே நான் அந்த பொடியனிடம் சரணடைய வேண்டுமா என் தம்பியைக் கொன்ற அன்றைய தினமே அவனைக் கொல்ல முடிவெடுத்தேன். ஆனால் ஒரு குழந்தையைக் கொல்வது பாவம் என்பதால் கோபத்தை அடக்கிக் கொண்டேன். இப்போது அவன் என் ராஜாங்க காரியத்திலும் தலையிட ஆரம்பித்து விட்டான். சிவனிடம் பெற்ற வரத்தால் இந்த உலகையே என் பிடியில் வைத்துள்ள நான் ஒரு சிறுவனிடம் சரணடைவதா நாளையே என் படை அவனைச் சந்திக்கும். தூதராக வந்து என் முன்னால் சிம்மாசனத்தில் அமர்ந்த உன்னை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன். யார் அங்கே அவனைப் பிடியுங்கள் என்றான் சூரபத்மன். வீரபாகு ஆவேசமானான் இருந்த இடத்தை விட்டு எழாமலேயே ஏ சூரனே தூதுவனாக வந்த இடத்தில் உன்னை ஏதும் செய்யக்கூடாது என்பதால் உன்னை உயிரோடு விடுகிறேன். இல்லாவிட்டால் உன் தலையை இந்நேரம் நொறுக்கியிருப்பேன். என் தலைவன் முருகனை அவமானப்படுத்தும் வார்த்தைகளை இனியொரு முறை சொல்லாதே என கர்ஜித்தான். இதைக் கேட்டதும் சூரபத்மன் கைகால்கள் நடுங்குமளவுக்கும் முகம் சிவக்குமளவுக்கும் ஆவேசமாகி பிடியுங்கள் அவனைக் கட்டி வைத்து உதையுங்கள் என்றான்.

கந்தபுராணம் பகுதி -19

சூரபத்மனின் தூதர்கள் பல்வேறு உருவங்களில் முருகனைப் பற்றிய ரகசியங்களை அறியப் புறப்பட்ட வேளையில் முருகப்பெருமானும் தன் தம்பியருடன் சூரனை அழிப்பதற்கான மந்திராலோசனையில் ஈடுபட்டார். அவர் பல சிவத்தலங்களை தரிசித்த பிறகு திருச்செந்தூர் என்னும் தலத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஒரு பெரிய கடல் இருந்தது. அங்கே தான் தங்குவதற்கு ஒரு இருப்பிடத்தை உருவாக்கினார். ஐந்து லிங்கங்களை அமைத்து தந்தையையும் வழிபட்டு வந்தார். சூரனை அழிப்பதற்குரிய வழிவகைகளை ஆய்வு செய்யவும் சூரனின் மகன் பானுகோபனால் பிடித்துச் செல்லப்பட்ட இந்திரனின் மகன் ஜெயந்தன் மற்றும் சூரனால் சிறையில் அடைக்கப்பட்ட தேவாதிதேவர்களையும் அழைத்து வர ஒரு தூதனாக வீரபாகுவை அனுப்ப ஏற்பாடு செய்தார். வீரபாகு நீ உடனே சூரன் தங்கியிருக்கும் இடத்திற்கு செல். சூரனின் படை பலத்தை அறிந்து கொள். சூரனால் பிடித்துச் செல்லப்பட்ட ஜெயந்தன் மற்றும் தேவர்களை மீட்டுவிடு. பின்னர் சூரனிடம் எங்கள் தலைவர் முருகனிடம் சரணடைந்து விடு. இல்லாவிட்டால் தலையை இழப்பாய் என எச்சரித்து விட்டு வா என்றார்.

வீரபாகுவுக்கு ஏக சந்தோஷம். அவனைப் போல் வீரனை இனி புராண சரித்திரம் காணாது. வைணவத்தில் ஒரு அனுமானைப் போல் சைவத்தில் வீரபாகு பறக்கும் தன்மை கொண்டவன். முருகனின் உத்தரவை கேட்ட மாத்திரத்தில் அவரை மனதார வணங்கி விஸ்வரூபம் எடுத்தான். விண்ணில் பறந்தான். கந்தமான மலையில் வந்து இறங்கினான். அவன் வந்து இறங்கிய வேகத்தில் அந்த மலை பூமிக்குள் புதைந்து விட்டது. அந்த மலையில் தான் இறந்து போன தாரகாசுரனின் வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் பூமியில் அழுந்தி இறந்து விட்டனர். மீண்டும் அவன் பறந்து போய் இலங்கை பட்டணத்தை அடைந்தான். அங்கே யாளிமுகன் என்ற அசுரன் ஆண்டு வந்தான். அந்த அசுரனின் படைத்தளபதி வீரசிங்கன் பறந்து செல்லும் வீரபாகுவை பார்த்து விட்டான். நில் நீ யார் எங்கே போகிறாய் என்றான். வீரபாகு சற்றும் கலங்காமல் நான் வெற்றி வடிவேலனின் வீரத்தளபதி வீரபாகு. நான் சூரபத்மனின் அரண்மனை நோக்கி வடிவேலனின் தூதுவனாக சென்று கொண்டிருக்கிறேன். நீ உன் வழியில் போ என்றான். வீரபாகுவை அவன் தடுத்தான். எங்கள் அசுரகுல தலைவரைப் பார்க்க கேவலம் நீ செல்வதா உன்னை ஒழித்து விடுகிறேன் என் பாணங்களைத் தொடுத்தான். அத்தனை அஸ்திரங்களையும் பொடிப்பொடியாக்கிய வீரபாகு முதலில் வீரசிங்கனின் படைகளை ஒழித்தான். பின்னர் வீரசிங்கனின் இலங்கைப்பட்டிணத்தில் குதித்தான். அவன் குதித்த வேகத்தில் அந்த பட்டணமே பூமிக்குள் புதைந்து விட்டது. ஏராளமான அசுரர்கள் இறந்தனர்.

அங்கிருந்து தப்பித்த யாளிமுகனின் மகன் அதிவீரன் வீரபாகுவிடம் போர்புரிய ஓடி வந்தான். அவனது ஆயுதங்களையெல்லாம் சுக்குநூறாக்கிய வீரபாகு அதிவீரனைக் கொன்றான். பின்னர் சூரபத்மன் வசித்த வீரமகேந்திரபட்டணத்தை வந்தடைந்தான். நகர எல்லைக்குள் நுழைந்த போது நான்கு திசை வாசல்களிலும் பலத்த பாதுகாப்பு இருப்பதைப் பார்த்தான். இத்தனையையும் மீறி நகருக்குள் செல்லும் வழியை ஆலோசித்தான். அப்போது தெற்குவாசலைக் காவல் செய்த யானை முகம் கொண்ட கஜாமுகன் என்ற காவல்படை தலைவன் வீரபாகுவை பார்த்து விட்டான். ஏய் நீ யார் தேவர்களின் ஏவலாளி போல் தெரிகிறாயே பாதுகாப்பு மிக்க இந்த பட்டணத்துக்குள் எப்படி நுழைந்தாய் மாய வித்தைகளைக் கடைபிடித்து உள்ளே வந்தாயா என்று சொல்லிக் கொண்டே வீரபாகுவை நோக்கி ஒரு மலையைத் தூக்கி எறிந்தான். விஸ்வரூபம் எடுத்திருந்த வீரபாகுவின் மீது விழுந்த அந்த மலை நொறுங்கியது. பின்னர் அவன் ஆயிரம் ஆலமரங்களை பிடுங்கி மொத்தமாகச் சேர்த்து கட்டி வீரபாகு மீது வீசினான். அவற்றை வீரபாகு ஒரு அஸ்திரத்தை வீசி தூள்தூளாக்கி விட்டான். கோபம் தாளாத கஜாமுகன் ஆயிரம் மலைகளைப் பிடுங்கி அவன் மீது விசினான். அதுவும் பலனளிக்கவில்லை. அவற்றைத் தூளாக்கிய வீரபாகு வலிமை மிக்க அஸ்திரம் ஒன்றை எய்து கஜாமுகனை காலால் எட்டி உதைத்தான். வலி தாங்காமல் புரண்ட கஜாமுகன் உயிரை இழந்தான். பின்னர் தனது உருவத்தை சுருக்கி நிஜஉருவம் எடுத்த வீரபாகு ஒரு கோபுரத்தின் மீது ஏறி மகேந்திரபுரியை நோட்டமிட்டான்.

மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருந்த அந்த நகரின் அழகு அவனைக் கவர்ந்தது. ஓரிடத்தில் இருந்த சிறைச்சாலையில் ஒரு அறையில் தேவர்களும் ஒரு அறையில் தேவமாதர்களும் அடைக்கப்படிருந்ததைப் பார்த்தான். இவர்கள் சூரபத்மனால் தண்டிக்கப்பட்டவர்கள். தனக்கு பணியாத தேவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டினான் சூரபத்மன். அவை உடனே முளைத்து விட்டன. தேவர்கள் ஏற்கனவே அமிர்தம் பருகியவர்கள் என்பதால் இத்தகைய நிலை ஏற்பட்டது என்பதை புரிந்து கொண்ட சூரன் அங்கிருந்த சிறையில் அவர்களை அடைத்து விட்டான். அதுபோல் தன்னை மணக்க சம்மதித்த தேவமாதர்களைத் தவிர மற்றவர்களை சிறையில் அடைத்து வைத்திருந்தான். ஜெயந்தனும் தேவர்களும் தங்கியிருந்த அறைக்குச் சென்ற சில அசுரர்கள் உங்கள் தலைவன் இந்திரனும், இந்திராணியும் எங்கிருக்கிறார்கள் சொல்லாவிட்டால் சித்ரவதை செய்வோம் என்று கூறி அவர்களைச் சித்ரவதை செய்தனர். அவர்கள் சென்றதும் ஜெயந்தன் வேதனை தாளாமல் லோக நாயகரான சிவபெருமானே எங்களை ஏன் இப்படி வதைக்கிறீர்கள் எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா என் தாயும் தந்தையும் எங்கிருக்கிறார்களோ அவர்கள் என்னவெல்லாம் துன்பம் அனுபவிக்கிறார்களோ என்று புலம்பினான்.

கந்தபுராணம் பகுதி -18

அசுரேந்திரன் அரண்மனைக்குள் ஓடிச் சென்று பெரியப்பாவின் காலில் விழுந்தான். சூரபத்மனுக்கு அவனது கலவரத்திற்கான காரணம் புரியவில்லை. மேலும் முன்னறிவிப்பின்றி தம்பி மகன் இப்போது ஏன் இங்கு வந்தான் என்றும் ஆச்சரியப்பட்டான். அவனது பரபரப்பு கண்டு நடக்ககூடாத ஏதோ நடந்து விட்டதை உணர்ந்து கொண்டான். விக்கி விக்கி அழுத அசுரேந்திரன் வார்த்தைகள் வெளியே வராமல் தத்தளித்தான். தரையில் விழுந்த மீன்போல் அவன் துடிப்பது கண்டு சூரபத்மன் கலங்கி மகனே எந்தச் சூழலிலும் நாம் பதட்டம் கொள்ளக்கூடாது. மேலும் நாம் அசுரர்கள் நமக்கு தேவர்களிடம் பயமில்லை. சிவனின் பேரருள் நாம் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. மேலும் எதையும் நம்மிடமிருந்து பறிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இந்த அண்டத்தில் இல்லை என பெருமை பொங்க கூறினான். பறித்து விட்டார்கள் பெரியப்பா என் தந்தை உங்கள் தம்பி இப்போது இந்த பூமியில் இல்லை. ஒரு சிறுவன் அவரைக் கொன்று விட்டான். என் தாய்மார்கள் தந்தையோடு உடன்கட்டை ஏறி விட்டார்கள். இப்போது நான் அனாதை. எனக்கு என் நாட்டில் எந்த பாதுகாப்பும் இல்லை. அந்தச் சிறுவனைக் கண்டால் உள்ளம் நடுங்குகிறேன். அவனுக்கு பயந்து ஓடி வந்து விட்டேன் என்று நடுக்கத்துடன் சொன்னான் அசுரேந்திரன்.

சூரபத்மன் இடிஇடியென நகைத்தான். குழந்தாய் நீ எதைப் பார்த்து பயந்தாய். யாரைப் பார்த்து பயந்தாய். தந்தை இறந்தான் என்கிறாய். தாய்மார்கள் உடன்கட்டை ஏறினார்கள் என்கிறாய். என்ன உளறல் இது ஏதேனும் கனவு கண்டு வந்தாயோ கனவுகள் கூட நம் அனுமதி பெற்று தான் நம் கண்களில் தெரிய முடியும். அந்தளவு செல்வாக்கு பெற்றது நம் குலப்பெருமை. மகனே அழாதே. உள்ளே உன் பெரியம்மாக்கள் இருக்கிறார்கள். அங்கே செல். வேண்டியதை சாப்பிடு. அழகுக்கன்னியர் உனக்காக காத்துக் கிடக்கிறார்கள். அவர்களோடு கூடி மகிழ். போதை பானங்கள் அருந்து. துன்பத்தை மறந்து. இன்ப லோகத்திற்கு செல் என்றான் பரிவோடு. பெரியப்பா என் நிலைமை புரியாமல் பேசாதீர்கள். உங்கள் தம்பி மாண்டது உண்மை. அவருக்கு கொள்ளி வைத்த கையோடு இங்கே வந்திருக்கிறேன். அவரைக் கொன்றவன் முருகன். நம் குல தெய்வமான சிவபெருமானின் மைந்தன். நமக்கு அழிவு சிவனால் மட்டும் என்பதை நாம் அறிவோம். ஆனால் புது எதிரி ஒருவன் அதிலும் சின்னஞ்சிறு பாலகன். அவன் திடீரென விஸ்வரூபம் எடுக்கிறான். அவனது சக்திவேல் தந்தையை அழித்து விட்டது என்றான் கண்ணீர் வழிய. சூரபத்மன் நிலைமையைப் புரிந்து கொண்டான். தம்பி போய் விட்டாயா இந்த சிறுவன் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே யாராலும் நம் வம்சத்தை அழிக்க முடியாது என்று இறுமாப்பு கொண்டிருந்தேனே நீ இல்லாமல் எனக்கேது வாழ்வு அசுரகுலத்தின் ஒளி விளக்கே நீயின்றி நான் இந்த உலகை எப்படி கண்காணிப்பேன் என்று கதறினான்.

அந்த முருகன் யாருடைய மகனாயிருந்தால் எனக்கென்ன அவனைக் கொன்று கூறு போடுகிறேன். படை கிளம்பட்டும். முரசுகள் ஆர்ப்பரிக்கட்டும். உடனே செல்லுங்கள். அந்த முருகனை கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லுங்கள் என ஆர்ப்பரித்தான். கண்கள் ரத்தச் சிவப்பாயின. சபையிலே மன்னன் அழுது கொண்டிருக்கிறான் என்ற சேதியறிந்து. சூரபத்மனின் மனைவியர் ஓடிவந்தனர். அசுரேந்திரனுக்கு ஆறுதல் சொல்லி கண்ணீர் வடித்தனர். தாரகன் மீது அன்பு கொண்ட அசுர உள்ளங்கள் சோகமும் ஆத்திரமும் கொப்பளிக்க படையெடுப்புக்குத் தயாராயினர். சூரபத்மனின் இன்னொரு தம்பி சிங்கமுகன் தகவலறிந்து வந்தான். இடிதாக்கிய நாகம் போல் சோகத்தில் சுருண்டு போனான். பலமுறை மயக்கம் தெளிவித்தும் உணர்வற்று கிடந்தான். ஒரு வழியாக தன்னிலைக்கு திரும்பிய அசுரர்கள் தேரேறி மன்னா படையெடுப்பை நிறுத்துங்கள். ஒரு சிறுவனின் கையால் நம் மாமன்னர் மடிந்திருக்கிறார் என்றால் சற்று சிந்திக்க வேண்டும். தாரகனாரைக் கொன்றவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது என்ற குரல் கேட்டு திரும்பினார்கள் சூரபத்மனும், சிங்கமுகனும்.

அங்கு நின்றவர் சூரபத்மனின் அமைச்சரான அமோகன் அவன் தொடர்ந்தான். அரசே அந்த முருகனை பற்றி நான் சொல்வதைக் கேளுங்கள். அவன் சிறந்த பராக்கிரமசாலி சிவமைந்தன். சிவனோடு நமக்கு எந்த பகையும் இல்லை. அவர் உலகை ஆள்பவர். அந்த சர்வேஸ்வரனுக்கு கட்டுப்பட்டே நாம் இயங்குகிறோம். அது போல் அவருக்கு பிறந்த முருகனிடமும் நாம் பணிந்து தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் அறியாமை காரணமாக நம் தாரகனார் அவனோடு போரிட்டு இறந்து விட்டார். எதிரியின் வயது மட்டும் வெற்றிக்கு தகுதியானதாகி விடாது. அவனது பலத்தைப் பார்க்க வேண்டும். அவனுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் யார் அவனுக்கு ஆலோசனை சொல்பவர்கள் யார் எந்த தைரியத்தில் அவன் அசுரர்களோடு மோதுகிறான் என்ன காரணத்துக்காக மோதுகிறான். ஒருவேளை நம் நீண்ட கால ஆட்சி போதுமென கருதி சிவபெருமானே அவனைத் தூண்டியுள்ளாரா அல்லது நம் குல எதிரிகளான தேவர்களின் உந்துதலால் இப்ப செய்கிறானா எங்கிருந்து அவன் உந்தப்படுகிறானோ அவனை ஒழித்து விட்டால் வடிவேலன் நம்மை துன்புறுத்த மாட்டான் என்றான். அமோகனின் வார்த்தைக்கு மதிப்பளிப்பவன் சூரபத்மன். உடனடியாக கிளி, மயில், பருந்து ஆகிய வடிவங்களில் உருமாறும் அசுரர்களை அழைத்தான். நீங்கள் இதே உருவில் அலைந்து திரிந்து அந்த முருகனைப் பற்றி ரகசியங்களை அறிந்து வாருங்கள் என கட்டளையிட்டான். அந்த பறவை அசுரர்கள் உயரப் பறந்தனர்.

கந்தபுராணம் பகுதி -17

வடிவேலனைப் பார்த்து அதிசயித்து மெய்மறந்த தாரகன் அவரிடம் பேசினான். முருகா உன்னைப் பெற்றதால் அந்த பரமசிவனார் பாக்கியசாலி ஆகிறார் அன்பனே எங்கள் அசுர வம்சத்திற்கும் தேவ வம்சத்திற்கும் காலம் காலமாக தீராப்பகை இருந்து வருகிறது. அதை நான் தீர்த்துக் கொண்டிருக்கிறேன். உன் தந்தை பரமேஸ்வரனே எனக்கும் என் சகோதரர்களுக்கும் சகல சக்தியையும் அருளியிருக்கிறார். அவ்வகையில் உன்னையும் அவரைப் போலவே வழிபட காத்திருக்கிறேன். அதனால் எங்கள் விஷயத்தில் நீ தலையிடாதே என்றான் பணிவான வார்த்தைகளால். வடிவேலன் சிரித்தான். தாரகா நன்றாக இருக்கிறது உன் பேச்சு. உலகத்தை சிருஷ்டிக்கும் பரமசிவனாரின் கருணையே உன்னை அழிக்க வேண்டும் என்பது தான். ஏனெனில் பரமசிவானார் உனக்கு வரமளிக்கும் போது என்ன சொன்னாரோ அதை மீறி விட்டாய். இறைவன் வரம் தருவது உலகத்திற்கு நன்மை செய்வதற்காக நீயோ உலகத்தையே அழித்துக் கொண்டிருக்கிறாய். பிற உயிர்களைத் துன்புறுத்துகிறாய். பிறரை மதிக்காதவனுக்கும் கொடுமைப்படுத்துபவனுக்கும் இறைவன் கொடுத்த வரங்கள் பலிப்பதில்லை. சிவனார் இட்ட கட்டளைப்படி உன்னை ஒழிக்கவே வந்திருக்கிறேன். உன் மரண ஓலையைப் பிடி என்றார் கம்பீரமான குரலில்.

தாரகனுக்கு பொறுமை போய் அசுரகுணம் தலைக்கேறி விட்டது. சிறுவனே இங்கே நின்று என்ன உளறிக் கொண்டிருக்கிறாய் நான் விஷ்ணுவையும் பிரம்மனையும் இந்திரனையும் வென்றவன். விஷ்ணு அவரது சக்கரத்தை என் மீது ஏவிய போது அது என் நெஞ்சில் பட்டு பதக்கமாக ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார். அத்தகைய தைரியம் படைத்த என்னை ஒழித்து விடுவேன் என சாதாரணமாகச் சொல்கிறாயா என் முன் நிற்கும் தகுதி கூட உனக்கு இல்லை. ஓடி விடு. போய் தாய் தந்தையுடன் சுகமாக இரு என்றான் ஆணவத்துடன். கர்வம் பிடித்தவனே தன் சுயபலத்தை தம்பட்டம் அடிப்பவன் வீரனே அல்ல தைரியசாலிகள் செயலில் தான் எதையும் காட்டுவார்கள். அதை மற்றவர்கள் பார்த்து புரிந்து கொள்வார்கள் புகழ்ந்து தள்ளுவார்கள். உன்னை நீயே புகழ்ந்ததன் மூலம் இறைவனிடம் பெற்ற வரத்தை இழந்து விட்டாய். வா போருக்கு என்று அறைகூவல் விடுத்தார் முருகன். பொறுமையிழந்த தாரகன் முருகனின் மீது அம்பு மழை பொழிய அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார் கந்தப்பெருமான். அதிபயங்கர யுத்தம் நடந்தது. எல்லா அஸ்திரங்களையும் அடித்து நொறுக்கி தாரகனின் தும்பிக்கையை துண்டு துண்டாக்கினார் வடிவேலன். அது மீண்டும் முளைத்தது. பல மாயங்கள் செய்து மீண்டும் மீண்டும் பிழைத்த அவன் ஒரு கட்டத்தில் கிரவுஞ்ச மலைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். கந்தன் கிரவுஞ்ச மலை மீது தன் வேலை எறிந்தார். அதன் சக்தி தாளாமல் மலையாய் நின்ற கிரவுஞ்சன் என்ற அந்த அசுரன் தன் உயிரை விட்டான். உயிரற்று சாய்ந்த மலையை வேலால் கிழித்த வேலவன் உள்ளிருந்த வீரபாகு மற்றும் வீரர்களை மீட்டார்.

அவர்கள் ஆரவாரத்துடன் வெளியே வந்தனர். மறைந்திருந்த தாரகன் வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்ற பெயர்களில் மூன்று வடிவங்களை எடுத்தான். மூன்று நகரங்களை அமைத்து அதில் ஒளிந்து கொண்டான். முருகப்பெருமான் பரமசிவனார் போல் உருமாறி அந்த நகரங்களை எரித்தே அழித்தார். அங்கிருந்து தப்பிய தாரகனை வேலெறிந்து வீழ்த்தினார். சற்றும் எதிர்பாராத விதமாக தாரகன் போர்களத்தில் வீழ்ந்து மாண்டான். வானவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தாரகனின் படை சிதறியது. அவர்களை வீரபாகு தலைமையிலான தேவர் படை துவம்சம் செய்தது. போர்களத்தில் ஒரு அசுர உயிர் கூட மிஞ்சவில்லை தாரகன் மடிந்தான் என்ற செய்தியறிந்து அவனது மனைவி கவுரியும் மற்ற ஆசைநாயகியரும் ஓடோடி வந்தனர். அன்பரே விஷ்ணுவாலும் தேவவேந்திரனாலும் வெல்ல முடியாதவரும் பரமசிவானாரிடம் சாகாவரம் பெற்றவருமான உங்களுக்கா இந்தக்கதி நேர்ந்தது இனி நீங்கள் சென்றுள்ள உலகத்திற்கே வருவோம். ஒரு சிறுவனிடம் உங்கள் கணவன் தோற்றான் என்று பிறர் பேசுவது எங்கள் காதில் விழும்முன் உங்களை நாடி வந்து விடுகிறோம் என்று கதறினர். தன் தந்தை இறந்த செய்தியறிந்து தாரகனின் மகன் அசுரேந்திரன் ஓடிவந்தான். தந்தையின் உடலின் மீது விழுந்து கதறினான். அப்பா ஒரு சிறுவனிடம் தோற்று அசுர குலத்திற்கு தீராக்களங்கத்தை ஏற்படுத்தி விட்டீர்களே இது எப்படி சாத்தியமாயிற்று. உங்களுக்கு நேர்ந்த இழுக்கிற்கு பிராயச்சித்தம் செய்வேன் எந்த சிறுவன் உங்களைத் தோற்கடித்தானோ, அந்த சிறுவனுக்கு பாடம் புகட்டுவேன் இது சத்தியம் என்று சபதம் செய்தான். பின்னர் அகில் சந்தனக்கட்டைகளை அடுக்கி அதன் மீது தந்தையின் உடலை வைத்து சகல மரியாதைகளுடன் தகனம் செய்யச் சென்றான். அவனது தாய்மார்கள் தங்களையும் சிதையில் வைத்தும் தகனம் செய்யும்படி அடம்பிடிக்கவே. அவர்களையும் சிதையில் அமர வைத்து தீமூட்டினான். இறுதிக் கிரியைகளை முடித்த பின் கோபமும் வருத்தமும் பொங்க தன் பெரியப்பா சூரபத்மனின் நகரான வீரமகேந்திர பட்டணத்தை வந்தடைந்தான்.

கந்தபுராணம் பகுதி -16

வீரபத்திர அஸ்திரத்தைக் கண்டு நடுங்கிய தாரகன் அங்கிருந்து தப்பித்தால் போதுமென ஓட்டம் பிடித்தான். கிரவுஞ்சமலைக்குள் அவன் புகுந்து தன் வடிவத்தை சுருக்கிக் கொண்டு ஒரு குகையில் ஒளிந்திருந்தான். தேவப்படைகள் ஆராவாரம் செய்தன. இருப்பினும் அவனைக் கொன்றாக வேண்டும் என்ற முருகனின் கட்டளை வீரபாகுவை உந்தித்தள்ளவே அவன் கிரவுஞ்ச மலைக்குள் நுழைந்தான். உள்ளே சென்றதும் பொறியில் சிக்கியது போல மாட்டிக் கொண்டான். இவனுடைய வருகைக்காகவே காத்திருந்த கிரவுஞ்சமலை தன் வாசலை மூடிக் கொண்டது. அது தாரகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவ்வாறு நடந்து கொண்டது. ஒரே இருள் கண் தெரியாமல் திண்டாடினான் வீரபாகு. இருப்பினும் தட்டுத்தடுமாறி எங்காவது தாரகன் ஒளிந்திருக்கிறானா என தடவித்தடவி பார்த்தான். அங்கிருந்து வெளியே செல்லவும் முடியவில்லை. முருகா இதென்ன சோதனை. என் வீரச்சரிதம் அவ்வளவு தானா உன் கட்டளையை நிறைவேற்றாமல் தோற்று விடுவேனா உமா தேவியின் புத்திரனே என்ன செய்வது என புரியவில்லையே என முருகனைத் தியானித்தான். உள்ளே சென்ற வீரபாகு வெளியே வராதது கண்டு தேவப்படைகள் வெளியே வருந்தி நின்றனர்.

வீரகேசரியும் லட்சம் பூதகணங்களும் குகைக்குள் புகுந்து வீரபாகுவை மீட்கச் சென்றனர். படைகள் தன்னருகே வந்ததும் கிரவுஞ்ச மலை தன் வாசலை மிகப்பெரிய அளவில திறந்தது. அவர்கள் காற்றினும் வேகமாக உள்ளே புகுந்தனர். அவ்வளவு தான். லட்சம் பேரையும் உள்ளடக்கி வாயை மூடிவிட்டது. எங்கும் இருள். படைகள் திணறின. இதுதான் சமயமென வெளியே நின்ற தேவப் படைகளை அசுரர்கள் துவம்சம் செய்தனர். அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தாரகன் வேறொரு வாசல் வழியாக வெளியேறி விட்டான். அட்டகாசமாக சிரித்தான். வீரபாகுவை ஒழித்து விட்டேன் என ஆர்பரித்து சிரித்தான். அசுரப்படைகள் ஹோவென எழுப்பிய கூச்சல் அந்தப் பகுதியை நிலநடுக்கம் ஏற்பட்டால் போல் நடுங்கச் செய்தது. அப்போது நாரதர் அங்கு வந்தார். சிதறி ஓடிய படையைக் கண்டார். உடனடியாக முருகப்பெருமானைத் தஞ்சமடைந்தார். முருகா நீ இருந்தும் இப்படி நடக்கலாமா தாரகன் உன் தம்பி வீரபாகு வீரகேசரி ஆகியோரை கிரவுஞ்சனிடம் ஒப்படைத்து விட்டான். இப்போது அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியவில்லை. இன்னும் நீ அமைதியாய் இருந்தால் தேவர்களின் இனமே அழிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உன்னையே எந்நாளும் வணங்கும் உன் தொண்டர்களைக் கைவிடலாமா என்றார்.

முருகன் ஆவேசப்பட்டார். வாயுவை அழைத்தார். வாயு பகவானே நீர் உடனடியாக தேரில் குதிரைகளைப் பூட்டு தேர் கிரவுஞ்ச மலைக்கு செல்லட்டும் என்றார். நாரதர் மகிழ்ந்தார். கிரவுஞ்சமலை அடிவாரத்தில் அசுரப்படைகள் ஆர்பரித்துக் கொண்டிருந்தன. ஒளிந்திருந்த தேவர் படை முருகனின் தேரைக் கண்டதும் ஆரவாரம் செய்து வெளிப்பட்டனர். அவர்கள் மனதில் நம்பிக்கை பிறந்தது. தாரகன் ஒழிந்தான் என கூச்சலிட்டனர். தேவர் திடீரென வெளிப்பட்டதையும் சூரியனையும் மிஞ்சும் ஒளியையும் இதுவரை கண்டிராத சுந்தர வதனமும் கொண்ட இளைஞன் ஒருவன் தேரில் ஒய்யாரமாக அமர்ந்திருப்பதை தாரகனும் கவனித்தான். அந்த இளைஞனைப் பார்த்ததும் அவன் மனதில் தானாகவே ஒரு மரியாதை பிறந்தது. ஏனோ அவன் அருகில் சென்று அவனை பார்க்க வேண்டும் என தோன்றியது. அவன் தன் தூதனை அழைத்தான். தூதனே அந்த தேரில் நிற்கும் இளைஞன் இவ்வளவு தேஜசுடன் திகழ்கிறானே இது போன்ற அழகுள்ளவனை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லையே சிவபெருமானின் நெற்றியிலிருந்து கிளம்பும் தீப்பொறிகளை விட அதிக பிரகாசமாக இவன் முகம் விளங்குகிறதே இவனைப் பார்த்தால் கையெடுத்து வணங்க வேண்டும் போல் இருக்கிறதே அழகில் மன்மதன் கூட இவன் அருகே நிற்க முடியாது போல் தோன்றுகிறதே என்றான்.

தூதன் அவனிடம் எங்கள் மாமன்னரே தாங்கள் சொல்வது அனைத்தும் நிஜமே. இவ்வுலகில் இவரை யாரோ என நினைத்து விடாதீர்கள். ஆலகால விஷத்தை உண்டவரும் யாராலும் அணுக முடியாதவரும் மன்மதனை எரித்தவரும் எமனையே உதைத் தவருமான பரமேஸ்வரனின் இளைய புத்திரன். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து அவதாரம் செய்தவன். அவனை வடிவேலன் என்றும் முருகன் என்றும் குமரன் என்றும் கந்தன் என்றும் கடம்பன் என்றும் கார்த்திகேயன் என்றும் இன்னும் பல திருநாமங்களாலும் புகழ்வார்கள் அவனது பக்தர்கள். உடனே தனது தேரை முருகனின் தேர் அருகில் கொண்டு நிறுத்தும் படி சாரதிக்கு உத்தரவிட்டான். முருகனைக் கண்கொட்டாமல் பார்த்தான். ஆறு முகங்கள் 12 கரங்கள் அனைத்திலும் ஒளிரும் ஆயுதங்கள் கமலம் போல் முகம் இத்தனையும் தாரகனைக் கவர்ந்தன. மெய்மறந்து அப்படியே நின்றான்.

கந்தபுராணம் பகுதி -15

முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்தார். வீரபாகு நான் யாரையும் அழிக்க வேண்டும் என்று நினைப்பவன் அல்ல. என்னை தனிப்பட்ட முறையில் திட்டுபவர்களைக் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால் என் அடியார்களுக்கு ஒரு துன்பமென்றால் அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டேன். பத்மாசுரனின் சகோதரர்கள் அதைத் தான் செய்கிறார்கள். எனவ, அவர்களை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். முதலில் இந்த தாராகசுரனை ஒழிக்க வேண்டும். யானை முகம் கொண்ட அவனையும் அவனது படையையும் சாதாரணமாக எடை போட்டு விடாதே. எப்போதுமே எதிரிகள் நம்மை விட வலிமை வாய்ந்தவர்கள் என்பதை யாரொருவன் அலட்சியம் செய்கிறானோ அவனை வெற்றிதேவி நெருங்கமாட்டாள். இதை நீ மட்டுமல்ல இந்த உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீ உடனே தாரகனின் கோட்டைக்குள் செல். நமது படைத்தலைவர்கள் ஐம்பத்து நான்கு பேரை உடன் அழைத்துச் செல். அவர்களது தலைமையில் நம்மோடு வந்த படையில் பாதி பேரை அணிவகுக்கச் செய். ஒட்டுமொத்த தலைமை பொறுப்பு உன்னைச் சேரும். துணைப் படைத்தலைவராக தம்பி வீரகேசரியை நியமித்து விடு. சற்று கூட தாமதிக்க வேண்டாம். நான் பின்னாலேயே கிளம்பி வருகிறேன் என்றார்.

வீரபாகு படைகளை கணப்பொழுதில் ஆயத்தப்படுத்தி தாரகனின் கோட்டை நோக்கி புறப்பட்டான். இந்நேரத்தில் அசுரர்கள் வாழ்ந்த மகேந்திரபுரி பட்டினத்தில் அபசகுனங்கள் தோன்றின. கழுதைகள் கத்துவது போல மேகக்கூட்டங்கள் சப்தம் எழுப்பின. வானத்தில் இருந்து ரத்த மழை பெய்தது. நரிகள் காரணமின்றி ஊளையிட்டன. மேகம் சூழ்ந்ததால் சூரியனைக் காணவில்லை. அதிகாலை வேளையில் சூரியின் உதிக்காத நாள் ஒரு நாட்டுக்கு நல்லதைச் செய்யாது. மக்கள் துன்பப்படுவர். கடும் மழை காலத்தில் கூட சூரிய ஒளி அதிகாலைப் பொழுதில் தெரியாவிட்டால் ஆபத்து விளையும். அசுரர் வீட்டுப் பெண்கள் தங்களை கண்ணாடியில் பார்த்து அலங்கரிக்கச் சென்ற போது தங்கள் கணவன்மாரின் தலையற்ற உடல்கள் கண்ணாடியில் தெரிவது போல் கண்டு அலறினர். நீர் நிலையில் வானவில் தெரிந்தது. இவையெல்லாம் தங்கள் நாட்டுக்கு அழிவைக் கொண்டு வரப்போகிறது என்பதை உணர்ந்தனர் அசுரர்கள். அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

வீரபாகுவின் படைகள் கோட்டைக்குள் சென்று விட்டன. தடுத்த வாயிற் காவலர்களை தவிடு பொடியாக்கி விட்டன வீரபாகுவின் படைகள். கோட்டைக்குள் முருகனின் படை நுழைந்து விட்டது என்ற தகவல் தாரகனுக்கு பறந்தது. உடனடியாக அவன் போர் முரசறைந்தான். கையில் பல்வேறு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு தாரகனின் படைகள் தேவ படைகளுடன் மோதின. இருதரப்பிலும் பயங்கர சேதம். இருதரப்புமே சமநிலையில் தான் போரிட்டன. வீரபாகுவை ஒழித்துக் கட்ட தாரகனே நேரில் போர்களத்துக்கு வந்து விட்டான். அவனை துணைத்தளபதி வீரகேசரி எதிர்த்தான். இருவரும் அம்பு மழை பொழிந்தனர். தாரகன் விடுத்த அம்புகளை வீரகேசரி தன் அம்புகளால் அடித்து நொறுக்க பதிலுக்கு வீரகேசரி விடுத்த அம்புகளை தாரகன் தன் கதாயுதத்தால் அடித்து நொறுக்கி விட்டான். ஒரு கட்டத்தில் வீரகேசரி மீது அதிபயங்கர அம்புகளை ஏவினான். அவற்றை தடுக்க முடியாத கேசரி மயக்கமடைந்து கீழே விழுந்தான்.

நிலைமையைப் புரிந்துகொண்ட வீரபாகு தாரகனின் முன்னால் வந்தான். தாரகா மரியாதையாக சரணடைந்து விடு. என் கண்ணில் பட்ட எதிரிகள் உயிர் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என் காலில் விழு என எச்சரித்தான். தாரகன் நகைத்தான். உன் தலைவன் முருகனே எனக்கு தூசு அப்படியிருக்க நீயெல்லாம் ஒரு ஆளா நீ அனுப்பிய உன் துணைப்படைத்தளபதி என் அம்புகளின் தாக்கத்தால் மயங்கிக்கிடப்பதைப் பார்த்துமா உனக்கு புத்தி வரவில்லை. உன்னை என் ஒரே அம்பில் மாய்த்து விடுவேன். சிறுவன் என்பதால் விடுகிறேன். ஓடி விடு என எச்சரித்தான். வீரபாகு பயங்கரமாக சிரித்தான். அம்பு மழை பெய்யச் செய்தான். எதற்கும் கலங்காத தாரகன் தன் தும்பிக்கையாலேயே அத்தனையையும் நொறுக்கிவிட்டான். தாரகன் வீரபாகு மீது ஆக்னேயம் என்ற அஸ்திரத்தை எய்தான். இந்த அம்பு எய்யப்பட்டால் அந்த இடம் தீப்பிடித்து நாசமாகி விடும். பதிலுக்கு வீரபாகுவும் அதை விட சக்தி வாய்ந்த ஆக்னேய அஸ்திரத்தை எய்தான். தாரகன் விடுத்த அம்பால் எரிந்த தீயை வீரபாகுவின் அம்பு உருவாக்கிய தீ அணைத்து விட்டது. (வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் வெப்பத்துக்கே உண்டு என்று அறிவியல் ரீதியாகச் சொல்வார்கள். இதை நமது ஆன்மிகம் என்றோ கண்டு பிடித்திருக்கிறது.) இப்படியாக வாருணம், ஸெளரம், நாராயணாஸ்திரம் உள்ளிட்ட பல அஸ்திரங்களால் இருவரும் போரிட்டனர். எதற்கும் பணியாத தாரகனை நோக்கி தன்னிடமிருந்து கடைசி அஸ்திரமும் எப்பேர்ப்பட்ட இடத்தையும் பொடிப்பொடியாக்கும் வீரபத்திரம் என்ற அஸ்திரத்தை வீரபாகு எய்தான். நெருப்பு ஜூவாலையைக் கக்கிக் கொண்டு அது தாரகனை நோக்கிப் பாய்ந்தது. அதன் உக்கிரத்தை தாரகனால் தாங்க முடியவில்லை.

கந்தபுராணம் பகுதி -14

அனைத்தும் அறிந்த முருகன் அப்பெண்களைப் பற்றி ஏதுமறியாதவர் போல பெண்களே நீங்கள் யார் எதற்காக என்னை குறித்து தவமிருந்தீர்கள் என்றார். ஐயனே இந்த அண்டம் முழுவதும் தேடிப்பார்த்தாலும் தங்களைப் போல் கருணையுள்ளவரும் அழகானவருமாக யாருமில்லை. கருணைக்கடலே நாங்கள் கேட்கும் வரத்தை எங்களுக்கு மறுக்காமல் தர வேண்டும் என்றனர். அதற்கென்ன தருகிறேன் என்ற முருகனிடம் அவர்கள் ஏதும் கேட்கத் தோன்றாமல் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றனர். அப்பெண்களின் விருப்பத்தை அறிந்த முருகன் அவர்களை அணைத்துக் கொண்டார். கன்னியரே என் மீது நீங்கள் கொண்டுள்ள காதலை நானறிவேன். ஆனால் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். என் பிறப்பின் நோக்கம் உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்காக அல்ல சூரபத்மனை அழிப்பதற்காக என் தந்தை என்னைப் படைத்தார். மேலும் காதலுக்கு பெற்றவர்கள் அங்கீகாரம் தர வேண்டும். முதலில் பெற்றவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும். எனவே நம் காதல் கனிந்து திருமணம் ஆகும் வரை நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்றார். அந்தக் கன்னியர் அவரது திருவடிகளில் விழுந்து அவரது கட்டளைக்கு அடிபணிவதாகவும் அவரது பணி முடியும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

முருகன் அமிர்தவல்லியிடம் அமிர்தா நீ தேவலோகம் செல். தேவலோகத் தலைவன் இந்திரனின் மகளாக வளர்ந்து வா. உன் சகோதரி சவுந்தர்யா பூலோகம் சென்று அங்கே ஆஸ்ரமம் அமைந்திருக்கும் சிவமுனிவரின் மகளாக வளர்ந்து வரட்டும். சூரபத்மவதம் முடிந்த பிறகு உங்களை நான் மணந்து கொள்கிறேன் என்றதும் அப்பெண்கள் மகிழ்வுடன் தலையசைத்தனர். பின்னர் முருகன் தன்வடிவத்தை மாற்றிக் கொண்டு, பாலமுருகனாகி கைலாயம் சென்றார். அவரை அள்ளியெடுத்த பார்வதி, பரமேஸ்வரர் அவரைத் தங்கள் நடுவில் இருத்திக் கொண்டனர். இக்காட்சியைக் காண தேவர்களும் முனிவர்களும் ஓடோடி வந்தனர். காணக்கிடைக்காத சோமாஸ்கந்த வடிவத்தை கண்ணாரக்கண்டு மகிழ்ந்தனர். (இப்போது கூட சில கோயில்களில் முருகன் சன்னதி நடுவில் இருக்க சிவ பார்வதி சன்னதி இருபுறங்களிலும் இருப்பதைக் காணலாம். தமிழகத்தில் மிகப்பெரிய சோமாஸ்கந்த சன்னதி. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் உள்ளது)

இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள் சிவபெருமானிடம் ஐயனே முருகப்பெருமான் தங்களுக்கு பாலனாகவும் வெளியே வந்தால் சுப்பிரமணியராய் விஸ்வரூபம் எடுக்கும் அபார சக்தி கொண்டவராகவும் திகழ்கிறார். அவரைக் கொண்டு சூராதிசூரர்களை வேரறுக்க வேண்டும். தேவருலகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றனர். தேவர்களும் சமயம் பார்த்து கேட்ட கோரிக்கை உடனே ஏற்கப்பட்டது. சிவபெருமான் தன் மைந்தனிடம் முருகா உன் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் காலம் வந்து விட்டது. சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகியோரை அழிப்பது மட்டுமல்ல அவனது வம்சத்தில் ஒருவர் கூட இந்த பூமியில் வாழக்கூடாது. பல லட்சம் அசுரர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பிழைத்திருந்தால் கூட உலகிற்கு ஆபத்து. அவர்களை வேரறுத்து விட வேண்டும் என்றதுடன் அவரது 12 கைகளுக்கும் பொருந்தும் வகையில் 12 ஆயுதங்களையும் லட்சம் குதிரைகள் இணைந்து இழுக்கக்கூடிய தேரையும் கொடுத்தார்.

பார்வதிதேவி தன் மகனைத் தழுவி பாலகனே நீ பகைவர்களை அழித்து வெற்றி வேலனாக திரும்பி வா என ஆசியளித்தாள். முருகனின் மாமா விஷ்ணு சிவனால் வழங்கப்பட்ட தேர்களின் குதிரைகளை ஓட்ட சாரதியாக வாயுதேவனை நியமித்தார். காற்றை விட வேகமான செல்வது உலகில் வேறு ஏதுமில்லை. எனவே முருகனுக்கு வாயுவே சாரதியாக அமர்த்தப்பட்டான். பிரம்மரிஷி வசிஷ்டரும் தேவரிஷி நாரதரும் முருகனை மந்திரங்கள் சொல்லி ஆசிர்வதித்தனர். தேவதச்சனான துவஷ்டா முருகனின் படைத்தளபதி வீரபாகு உள்ளிட்ட மற்ற சேனாதிபதிகளுக்கு தேர்களை வழங்கினார். அவற்றை சிங்கங்கள் யானைகள் இழுத்துச் சென்றன. வெற்றிவேல் வீரவேல் என்ற கோஷம் எங்கும் முழங்க புழுதியைக் கிளப்பிக் கொண்டு படைகள் கிளம்பின. சூரர்கள் ஆட்சி செய்யும் மாயாபுரி பட்டணத்தை அடையும் முன்பாக ஒரு பெரிய மலையை படைகள் அடைந்தன.

கந்தபுராணம் பகுதி -13

மந்திரம் கற்றுக்கொடுத்த குருவை ஒருவன் பலர் முன்னிலையில் புகழ்ந்து பேசலாம். ஆனால் அவர் கற்றுத்தந்த மந்திரத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். முக்கிய மந்திரங்களை பிறர் அறிய வெளிப்படுத்துபவன் நரகத்தையே அடைவான். ஓம் என்பது சாதாரணமான மந்திரமல்ல. உலகம் உருவாவதற்குரிய ரகசியங்களை உள்ளடக்கிய மந்திரம். மகனே அதன் பொருள் எனக்கும் கூட தெரியாது. எனக்கு கூறுவாய என கேட்டார் சிவனால் உருவாக்கப்பட்டதும் அவருக்கே மட்டுமே பொருள் தெரிந்த ஓம் என்ற பிரணவத்தின் பொருளை தனக்குத் தெரியாதென்று அவர் ஏன் மறைத்தார் தன்னை விட தன் மகன் உயர்ந்தவன் என்பதை பக்தர்களுக்கு எடுத்துக்காட்ட வயதில் பெரியவராயினும் தன்னிலும் சிறியவர்களுக்கு சில விஷயங்கள் தெரியுமானால் அதைக் கேட்டறிவதில் தவறு இல்லை என்பதை உலகத்துக்குச் சொல்வதற்காக இதற்காக கைகட்டி வாய் பொத்தி முட்டுக்காலிட்டு முருகன் ஆசனத்தில் இருக்க மிகவும் பணிவாக அவரருகில் கீழே அமர்ந்து காதைக் கொடுத்தார்.

தேவர்களெல்லாம் பூமாரி பொழிந்தனர் எங்கும் நிசப்தம். இளைஞனாயிருந்த முருகன் பால முருகனாக மீண்டும் மாறினான். தந்தையின் காதில் மந்திரத்தின் பொருளைச் சொன்னான். ஆன்மிக உலகம் ஓம் என்ற பதத்திற்கு பல விளக்கங்களைச் சொல்கிறது. இதற்குரிய பொருளாக கணிக்கப்படுவது என்னவென்றால் இந்த உலகமே நான் தான் என்பதாகும். சிவன் தன் ஆத்மாவின் வடிவமாக முருகனைப் பிறப்பித்தார். முருகப்பெருமானின் புகழ் வைகுண்டத்திலும் பரவியது. அவனது ஆணையால் தான் திருமால் உலகத்திலுள்ள அரக்கர்களை அழித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் முருகனுக்கு மேலும் பெருமை தந்தது. இதற்காக அவர் தசாவதாரம் எடுத்து வருவதாக சிவனே பார்வதியிடம் சொன்னார். சூரபத்மனை அழிக்க வந்த தன் மருமகனுக்கு தன் சக்தியை வழங்கவேண்டும் என்று விரும்பினார் திருமால். பாற்கடலில் பையத்துயின்ற அந்த பரந்தாமன் ஒருமுறை விழித்துப் பார்த்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கொடிகளை ஒத்த இடையை உடைய அழகிய பெண்கள் வெளிப்பட்டனர். தந்தையே வணக்கம் என்ற அப்பெண்களில் முதலாவதாக வந்தவள் அமுதவல்லி அடுத்து வந்தவள் சவுந்தர்யவல்லி. இருவரையும் உச்சிமோந்த திருமால் என் அன்பு புத்திரிகளே நீங்கள் இருவரும் என் மருமகன் முருகனுக்காக பிறந்தவர்கள். அவனின் புகழ் எல்லையற்றது, என்று கூறி முருகனின் அருமை பெருமையை எடுத்துச் சொன்னார். இதைக் கேட்ட அந்த பெண்களின் உள்ளத்தில் முருகனைப் பார்க்காமலேயே காதல் பிறந்து விட்டது. தங்கள் அன்புக்காதலனை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவர்களுக்குள் இருந்தது.

ஒருநாள் அமுதவல்லி தன் தங்கையிடம் சவுந்தர்யா நாம் முருகப்பெருமானுக்காகவே பிறந்திருக்கிறோம். உலகில் வல்லவன் யாரோ அவனை அடைவதில் பெண்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். வீரம்மிக்க ஆண்கள் உலகில் ஆங்காங்கே தான் இருப்பார்கள். தன் பக்கத்தில் இருப்பவனுக்கும் நண்பனுக்கும் சக மனிதனுக்கும் துன்பமிழைப்பவன் வீரன் அல்ல. பிறரது நன்மைக்காக தன் உயிரைக் கொடுக்கத் துணிபவன் எவனோ அவனே சுத்த வீரன். முருகப்பெருமான் தனக்காக அல்லாமல் உலக நன்மை கருதி சூரபத்மனை அழிக்கப் பிறந்திருக்கிறார். அவர் நம் கணவரானால் நம்மைப் போல் கொடுத்து வைத்தவர்கள் யாருமிருக்க முடியாது. அமிர்த சவுந்தர்ய முருகன் என்று அவர் பெயர் பெறுவார். அமுதமாகிய நான் அவருடன் இணைந்தால் அழிவில்லாத புகழ் பெறுவேன். சவுந்தர்யமாகிய நீ அவருடன் இணைந்தால் அவர் இளமைப் பொலிவுடன் திகழ்வார் என்றாள். இருவரும் ஒருநாள் முருகன் தங்களைத் தேடி வருவான் என எதிர்பார்த்தனர். காலம் சென்றதே தவிர முருகன் வரவில்லை. எனவே இருவரும் தங்கள் அலங்காரங்களைக் களைந்து விட்டு வெள்ளை பட்டு உடுத்தி நாணல் காட்டுக்குச் சென்றனர். இடுப்பில் ஒட்டியாணத்துக்கு பதிலாக நாணல் புல்லை கயிறாகத் திரித்து கட்டிக் கொண்டனர். முருகனின் புகழ்பாடி தவத்தில் ஆழ்ந்தனர். நீண்ட நாட்களாக தவம் தொடர்ந்து. அந்த கன்னியரின் தவத்தை மெச்சிய முருகப் பெருமான் அவர்கள் முன் தோன்றினார். அப்பெண்கள் பேருவகை அடைந்தனர். என்ன செய்ய வேண்டுமென்பது புரியவில்லை. கைகூப்பி வணங்கினர். ஓடிவந்து ஆளுக்கொரு பக்கமாக நின்றனர்.

கந்தபுராணம் பகுதி -12

பிரம்மன் முருகனைப் பற்றி ஏற்கனவே அறிவார். அவன் தன்னால் உருவாக்கப்பட்டவன் அல்ல சாட்சாத் பரமசிவனின் நேரடி வடிவம் என்பதை உணர்ந்தவராதலால் மிகவும் பவ்வியமாக முருகன் முன் கை கட்டி நின்றார். வணக்கம் சிவமைந்தரே தாங்கள் அழைத்த காரணம் என்ன என்றார். முருகன் பவ்வியமாக பேச ஆரம்பித்தான். பிரம்மனே நீர் எங்கிருந்து வருகின்றீர்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்டார், அதற்கு பிரம்மர் முருகா நான் பரமனைத் தரிசிக்க வந்தேன். என்னுலகம் சத்தியலோகம். அங்கிருந்து தான் என்படைப்புத் தொழிலை நடத்துகிறேன். இவ்வுலகத்தில் இயக்கத்துக்கு காரணமானவனே நான் தான் என்று பெருமையடித்துக் கொண்டார் பிரம்மன். அப்படியானால் நீங்கள் பெருமைக்குரியவர் தான். சரி எந்த அடிப்படையில் நீங்கள் உயிர்களைப் படைக்கின்றீர்கள் என நான் தெரிந்து கொள்ளலாமா என்று ஒன்று மறியாதவன் போல் கேட்டான் முருகன். சிறுபிள்ளையான உனக்கு அதெல்லாம் புரியாது முருகா நான் வரட்டுமா என்றார் பிரம்மா. முருகனுக்கு கோபம் வந்து விட்டது. சற்றே அவரை அதட்டி நிறுத்திய முருகன் நான் கேட்டதற்கு பதில் சொல்லி விட்டு புறப்படுங்கள். உங்கள் இஷ்டத்துக்கு வந்தீர்கள். உங்கள் இஷ்டத்துக்குப் போவதாகச் சொல்கின்றீர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். என்றதும் நடுங்கிவிட்டார் பிரம்மா.

உலகத்தையே கலக்கிய ஆட்டை அடக்கியவன் முருகன். நாமெல்லாம் அவன் முன் எம்மாத்திரம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டு திரும்பவும் கை கட்டி நின்று, முருகப்பெருமானே எனையாளும் சிவ மைந்தனே படைப்பின் இலக்கணத்தைச் சொல்கிறேன் கேள். படைப்புகள் ஓம் என்ற பிரணவத்தின் அடிப்படையில் அமைகின்றன என்றார். ஓம் என்று சொன்னீர்களே அந்த மந்திரத்தின் பொருள் தெரிந்தால் தானே நான் படைப்பின் ரகசியத்தை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும் என்றான் முருகன். முருகா இது புரியவில்லையா உனக்கு ஓம் என்றால் பிரம்மன். அதாவது அந்த மந்திரத்துக்குரிய பொருளே நான் தான். நான் தான் எல்லாம் என்றார். இதைக்கேட்டு முருகன் ஏதும் சொல்லவில்லை. வீரபாகு ஓடி வந்தான். பிரம்மாவின் தலையில் ஓங்கிக் குட்டினான். பிரம்மா என்ன உளறுகிறாய். ஓம் என்ற பிரணவத்தின் பொருள் தெரியாத நீ படைக்கும் தகுதியை இழந்தாய். போதாக்குறைக்கு பொய்யும் சொல்கிறாய். நான்கு தலைகள் இருந்தும் உமக்கு அறிவு மட்டும் இல்லவே இல்லை என்றவன் அவரை இழுத்துப் போய் சிறையில் அடைத்து விட்டான். பிரம்மனுடன் வந்தவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பிரம்மாவை விடுவிக்க அவர்கள் நேராக சிவனிடம் ஓடினர்.

பிரம்ம லோகத்தினர் சொன்னதை சிவபெருமான் புன்னகையுடன் கேட்டார். நடந்ததை எல்லாம் நன்றாய் அறிந்த அந்த பரம்பொருள் இந்த உலகத்தை முருகனே படைத்துக் கொண்டிருப்பதை கண்டார். மகனின் அளப்பரிய அறிவாற்றலை நேரில் காணப் புறப்பட்டார் அவர். தன் குழந்தையின் சிருஷ்டியைப் பார்த்து பார்த்து பூரித்தார். வேலனை மார்போடு அணைத்து முத்த மழை பொழிந்தார். முருகா நீ செய்தது என்னவோ நியாயம் தான் அதற்காக உன்னை வயதில் பெரியவருக்கு மரியாதை தந்திருக்க வேண்டாமா பிரம்மனை விட்டு விடு என்றார். தந்தையே இதென்ன நீதி எனக்காக என் தம்பிகள் இணைந்து இந்த ஸ்கந்த கிரியை உருவாக்கியுள்ளனர். இதன் தலைவன் நான். உங்கள் லோகத்துக்கு வருபவர்கள். என்னையும் வணங்க வேண்டும் என்பது நீங்கள் வகுத்த நியதி. இதை மீறினார் பிரம்மா. அது மட்டுமல்ல ஒரு தொழிலைச் செய்பவன் அது பற்றி தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். படைப்புக்கு ஆதாரம் ஓம் என்ற பிரணவம். அதற்குரிய பொருளே அவருக்கு தெரியவில்லை. அப்படியிருக்க அந்த அஞ்ஞானி படைப்புத் தொழில் செய்ய அதிகாரமே இல்லையே. அதனால் அவரை சிறையில் அடைத்திருக்கிறேன். இது என் உள்நாட்டு விஷயம். இதில் தலையிடாதீர்கள் என்றான்.

சிவன் இது கேட்டு மகிழ்ந்தாலும் கோபமடைந்தார் போல் காட்டிக் கொண்டு முருகா பிரம்மனை விடுதலை செய் என்று சொல்வது உன் தந்தை. தகப்பனின் சொல்லை மீறுவது மகனுக்கு அழகல்ல என்றார். தந்தையின் கட்டளைக்கு அடிபணிந்த முருகன் அவரை விடுவித்து விட்டான். பிரம்மன் தலைகுனிந்து நின்றார். பிரம்மா கவலைப்படாதே ஓம் என்ற மந்திரத்தின் பொருளை இனியாவது அறிந்து கொள் தெரியாமல் ஒரு பணியைச் செய்யக் கூடாது என்ற முருகனின் வாதம் சரியே என்றார் சிவன். தேவர்கள் எல்லாம் பொருளைத் தெரிந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். அப்போது முருகன் சொன்னான் தந்தையே இது சாதாரண விஷயமல்ல மிகப்பெரிய ரகசியம் இதை உலகத்தினர் யாரும் அறியக் கூடாது. அதற்கு சில தகுதிகள் வேண்டும் என்பதை தாங்கள் தானே அறிவுறுத்தியிருக்கிறீர்கள். அந்தத் தகுதிகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றான்.

கந்தபுராணம் பகுதி -11

விஸ்வரூப முருகனிடம் தேவர்கள் சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களை விடுவிக்க வேண்டிக் கொண்டார்கள். அவன் மகிழ்வுடன் தேவர்களே கலங்க வேண்டாம். எனது அவதாரமே சூரவதத்தின் பொருட்டு உருவானது தான். தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன் என்றான். இந்நிலையில் தனக்கு ரிஷபம் வாகனமாக இருப்பது போல் தன் மகனுக்கு ஒரு வாகனம் வேண்டும் என்று சிவபெருமான். தேவகான பாவலர் நாரதர் மூலமாக இதற்கான ஏற்பாட்டைச் செய்தார். நாரதா நீ யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய் என்றார். என்ன காரணத்துக்காக யாகம் நடத்தச் சொல்கிறார் என்பது புரியாவிட்டாலும் ஏதோ ஒரு கலாட்டா செய்ய தனக்கு நேரம் வந்துவிட்டதாக கருதிய நாரதர் சிவனின் கட்டளையை பதிலேதும் பேசாமல் ஏற்றுக் கொண்டார். யாகத்திற்காக அதவாயு என்ற பசுவை யாகத்திற்கு கொண்டு வந்தனர் சிலர். யாகம் துவங்கியதும் அந்த பசு பயங்கரமாக சத்தமிட்டது. அனைவரும் ஆச்சரியமும் பயமும் கொள்ளும் வகையில் அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஒரு பயங்கர ஆடு தோன்றியது. அது யாகத்திற்கு வந்தவர்களை நாலாதிக்கிலும் விரட்டியடித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் வளர்ந்து கொண்டே போனது. யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. தேவர்கள் கதறினர். பார்த்தாயா சிவன் சொன்னதாகச் சொல்லி இந்த நாரதன் யாகத்தைத் துவங்கினான். யாகத்திற்கான காரணத்தையும் சொல்ல மறுத்தான். யாகத்தின் பலனை பெற்றுக் கொள்ள வந்த நம்மை துன்புறுத்தி பார்க்க அவனுக்கு ஆசை. மாட்டை ஆடாக்கினான். ஏதோ மாயாஜாலம் செய்து பெரிய கொம்புகளுடன் அது நம்மை முட்ட வருகிறது. இதென்ன கொடுமை. என்று திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர்.

எல்லாரையும் கலாட்ட செய்பவன் நான் தான் என்னையே கலக்கி விட்டாரே இந்த சிவபெருமான் என்று நாரதரும் அங்கிருங்து தப்பினால் போதும் என ஓடினார். அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகத்தில் எட்டு திசைகளையும் தாங்குகின்றன. அந்த ஆடு அந்த யானைகளையும் விரட்டியது. யானைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நகர்ந்ததால் உலகமே ஆடத் தொடங்கியது. தேவர்கள் நிலையில்லாமல் தவித்தனர். இதையெல்லாம் உணர்ந்தும் உணராதவர் போல் அயர்ந்திருந்தார் கண்ண பரமாத்மா. அந்த வைகுண்டத்திற்குள்ளும் புகுந்த ஆடு அட்டகாசம் செய்தது. இந்த தகவல் முருகப் பெருமானுக்கு சென்று விட்டது. அவர் தன் தலைமை தளபதி வீரபாகுவிடம் கண் ஜாடை காட்டினார். தலைவனின் கண்ணசைப்பிலேயே அனைத்தையும் புரிந்து கொண்ட வீரபாகு உடனடியாக புறப்பட்டான். வைகுண்டத்தை கணநேரத்தில் அடைந்ததுமே பலம் வாய்ந்த அவனை கண்டு ஆடு பின் வாங்கியது. இருப்பினும். அவனை முட்ட வருவது போல் பாசாங்கு செய்தது. வீரபாகு ஆட்டின் கழுத்தை ஒரே அழுத்தாக இழுத்து பிடித்தான். கொம்பை பிடித்து தரதரவென இழுத்து வந்து முருகனின் முன்னால் விட்டான். முருகப்பெருமானை பார்த்ததும் அந்த ஆடு அவர் பாதத்தில் பணிந்தது. முருகப்பெருமான் கருணைக் கடவுள். மிகப் பெரும் தவறு செய்தாலும் அவரிடம் பணிந்து விட்டால் கருணையுடன் மன்னித்து விடுவார். அவர் அந்த ஆட்டின் மீது ஏறி அமர்ந்தார். முருகப்பெருமானுக்கு அந்த ஆடே வாகனமாயிற்று. ஆடு அடங்கிப் போனதால் அவனுக்குரிய வாகனமாகும் பாக்கியம் பெற்றது. தேவர்கள் முருகனை மேஷ வாகனனே வாழ்க எனக்கூறி வாழ்த்தினர்.

யாகம் நடத்தி அதிர்ந்து போன நாரதர் முருகனிடம் ஓடோடி வந்தார். ஆடு முருகன் முன்னால் பெட்டிப்பாம்பாக நிற்பதைப் பார்த்து, சிவமைந்தனே இதென்ன அதிசயம். பசு ஆடானதும் அது உன்னைத் தேடி வந்ததும் எனக்கும் ஏதும் புரியவில்லையே என்றார். முருகன் சிரித்தான். நாரதரே தாங்கள் தவத்தில் உயர்ந்தவர். யாகத்தின் பலனை இந்த உலகுக்கு எடுத்துக் காட்டவே இத்தகைய நாடகம் ஒன்றை என் தந்தையில் ஏற்பாட்டால் நடத்தினேன். நீங்கள் யாகம் செய்த போது தோன்றிய இந்த ஆடு எனக்கு காணிக்கை ஆயிற்று. இதுபோன்ற சிறு காணிக்கையைக் கூட நான் பெரிய மனதுடன் ஏற்பேன். மனமார்ந்த பக்தி செய்ததாகக் கருதி ஒன்றுக்கு பத்தாக பலனளிப்பேன். தாங்கள் தொடர்ந்து இந்த யாகத்தை செய்யுங்கள். யாகத்தில் தோன்றிய இந்த ஆட்டை எனக்கு பரிசளித்ததால் உங்களுக்கு நூறு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்றார். நாரதர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார். இதன் பிறகு கைலாயம் திரும்பினார் முருகன். ஒருநாள் நான்முகனான பிரம்மா சிவதரிசனத்துக்கு வந்தார். இறைவனை வணங்கிவிட்டு புறப்பட்டார். அப்போது வழியில் முருகன் தன் தளபதிகளோடு உரையாடிக் கொண்டிருந்தான். பிரம்மன் அவனைப் பார்த்தும் கண்டு கொள்ளாமல் சென்றார். பிரம்மா இங்கே வாருங்கள் என்றான் முருகன்.