ராஜகுமாரர்கள் நான்கு பேரும் இனிது வளர்ந்தார்கள். குழந்தைகள் நால்வருக்கும் ஐந்து வயது ஆனதும் தசரதர் வசிஷ்டரிடம் சென்று நான்கு குமாரர்களுக்கும் வேதங்கள் மற்றும் எல்லாவிதமான கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நான்கு குழந்தைகளும் கல்வியுடன் யானை குதிரை தேர் பயிற்சிகளுடன் வில் பயிற்சியும் வசிஷ்டரிடம் பயின்றார்கள். ராமனும் லட்சுமணனும் ஒருவரையொருவர் பிரியாமல் காடு மலை நதி என எங்கு சென்றாலும் சேர்ந்தே இருந்தார்கள். அதுபோலவே பரதனும் சத்ருக்கனனும் சேர்ந்தே இருந்தார்கள். இக்காரணத்தால் மக்கள் அனைவரும் ராம லட்சுமணன் என்றும் பரதன் சத்ருக்கனன் என்றும் அழைக்க ஆரம்பித்தார்கள். நால்வரும் கௌசலை, கைகேயி, சுமித்ரை மூவரையும் பாகுபாடு பார்க்காமல் தங்கள் தாய்போல இஷ்ட தெய்வம் போல் வணங்கி வந்தார்கள். ராமர் தம்பிகள் மூவரிடமும் தந்தைக்கு நிகராக நடந்து கொண்டார். தம்பிகள் மூவரும் ராமனை தந்தைக்கு நிகராகயாகவே கருதி மரியாதை செய்தார்கள். ராமருக்கு 12 வயது முற்றுப்பெற்றது.
ஒருநாள் அரசவையில் தசரதர் இருக்கும் போது விசுவாமித்ர மகரிஷி வந்தார். அவரை வரவேற்ற தசரதர் அவருக்கு ஏற்ற சிம்மாசனத்தில் அமர வைத்து மரியாதை செய்து வணங்கினார். ராஜ்யத்தில் உள்ள அனைத்தையும் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தாங்கள் ஆணையிடுங்கள் அதனை நிறைவேற்ற காத்திருக்கின்றேன் என்று தசரதர் விஸ்வாமித்ரரிடம் கூறினார். அதற்கு விஸ்வாமித்ரர் உலக நன்மைக்காக உத்தமயாகம் ஒன்று செய்யப்போகின்றேன். யாகத்தில் மாமிசத்தையும் ரத்தத்தையும் போட்டு பாழ்படுத்த மாரீசன் சுபாகு என்னும் இரண்டு அரக்கர்கள் முடிவு செய்திருக்கின்றார்கள். என்னுடைய தவவலிமையால் அவர்களை என்னால் சுலபமாக அழிக்க முடியும் ஆனால் மேலான லட்சியம் ஒன்றின் காரணமாக என் தவவலிமையால் அவர்களை அழித்து தவவலிமையை இழக்க விரும்பவில்லை. யாகம் செய்யும் போது காவல் காக்க போர் வீரன் ஓருவன் தேவைப்படுகிறான். சாமான்ய வீரனால் காவல் காக்க முடியாது. யாகம் முடியும் வரை 10 நாட்கள் உன்னுடைய புதல்வர்களில் ராமனை அனுப்பிவைப்பாயாக ராமனுக்கு ஒன்றும் நேராதவாறு நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இதனை கேட்ட தசரதர் நிலைகுழைந்து போனார். சிறிது நேரம் அமைதியான அவர் தடுமாற்றத்துடன் விஸ்வாமித்ரருக்கு பதில் கூறினார்.
ராமர் மிகவும் சிறியவன். ராமனுக்கு போர் செய்த அனுபவம் ஒன்றும் இல்லை. பாலகனான அவன் அரக்கர்களை எவ்வாறு எதிர்க்க இயலும். ஆகவே நானே தங்களுடன் வந்து யாகம் முடியும் வரை காவல் காத்து அரக்கர்களை அழிக்கின்றேன் என்றார். இதனை கேட்ட வசிஷ்டர் இந்திரனுக்கு நீ உதவி செய்வதற்காக அசுரர்களை அழித்து அவர்களை வெற்றி கொண்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது இந்த அரக்கர்களை அழிக்க உன்னால் இயலாது தசரதா. இது ராமானால் மட்டுமே முடியும். உன்னுடைய புதல்வர்களுக்கு வரும் பெருமைகளையும் சிறப்புகளையும் தடுத்துவிடாதே. விஸ்வாமித்ரருடன் உன் புதல்வர்களை அனுப்புவை அவர்களுக்கு ஒன்றும் ஆகாது என்று கூறினார்.
கடவுள் ஏன் அனைவரையும் மகிழ்ச்சியாக வைக்கவில்லை என்று சீடர் ஒருவர் குருவிடம் கேட்டான். அதற்கு குரு கடவுள் எல்லோரையும் ஒரு குறையும் இல்லாமல் சந்தோஷமாகத்தான் வைத்திருக்கிறார். இருப்பதை விட்டு இல்லாததை நினைத்துக்கொண்டு எண்ணம்தான் மக்களை குழப்பிக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் மக்களுக்கு நிம்மதி இல்லை என்றார். சீடருக்கு புரியவில்லை விழித்தான்.
குரு அங்கிருக்கும் பாதி தண்ணீர் இருக்கும் டம்ளரைக் காட்டி இது என்ன என்று கேட்டார். பாதி டம்ளர் காலியாக இருக்கிறது என்று சீடர் பதில் சொன்னான். உடனே குரு பாதி டம்ளரில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்பவன் நிறையைக் காண்கிறேன். பாதி டம்ளர் காலியாக இருக்கிறது என்பவன் குறையைக் காண்கிறான். வாழ்க்கை என்பது கண்ணாடி மாதிரி. மக்கள் ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்களோ அதுதான் மக்களுடைய வாழ்க்கையாக பிரதிபலிக்கின்றது. இந்த வாழ்க்கையில் ஒன்றும் கிடையாது அனைத்தும் மாயை என விளக்கினார்.
பிராகசமூர்த்தியிடம் பெற்ற கலசத்தில் இருந்த அமிர்த நீரை மூன்று மனைவிகளுக்கும் கொடுக்குமாறு சிருங்கரிஷி தசரதரிடம் கட்டளையிட்டார். தசரதர் கலசத்தில் இருந்த அமிர்தத்தில் பாதியை முதல் மனைவி கௌசலைக்கும் மீதி இருந்த பாதியை கைகேயி, சுமத்ரைக்கும் பாதியாக பிரித்துக்கொடுத்தார். மூவரும் அருந்திய பிறகு பாத்திரத்தில் ஒட்டியிருந்த சிறிதளவு அமிர்தத்தை மீண்டும் கௌசலைக்கு கொடுத்தார். அப்போது சங்கு முரசுகள் முழங்க ஒரு வருடமாக நடைபெற்ற யாகம் இனிது நிறைவேறியது. யாகத்தில் ஈடுபட்ட அந்தணர்களுக்கும் வேதியர்களுக்கும் பொன் பொருள் பட்டாடைகள் கொடுத்து அனைவரையும் அனுப்பிவைத்தார். தசரதர் வசிஷ்டரையும் சிருங்கரிஷியையும் வணங்கி மரியாதை செய்து வழியனுப்பி வைத்தார்.
சில நாட்கள் கழித்து மகாராணிகள் மூவரும் கருத்தரித்தனர். அந்த நேரத்தில் மூவரும் இறைவனுக்கு வழிபாடுகள் செய்த வண்ணம் இருந்தனர். சில நாட்கள் சென்றது. சித்திரை மாதம் வளர்பிறை நவமி கடக ராசியில் புனர்பூச நடசத்திரத்தன்று கௌசலைக்கு குழந்தை பிறந்தது. அடுத்தநாள் பூச நட்சத்திரத்தில் கைகேயிக்கு குழந்தை பிறந்தது. அடுத்தநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் சுமத்ரா தேவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். தமக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் மகிழ்ந்த தசரதன் ஏழு ஆண்டுகளுக்கு குடிமக்கள் செலுத்தவேண்டிய வரிப்பணத்தை கட்ட வேண்டாம் என்று அறிவித்தார். நாட்டின் தானிய கிடங்குகளையும் கருவூலத்தையும் திறந்துவிட்டார். யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையானதை எடுத்துச்செல்லலாம் என்று அறிவித்தார். அரண்மனையில் அன்னதானமும் கோ தானமும் வஸ்திரதானமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது. 3 வேளைகளிலும் கோவில்களில் அலங்கார ஆராதனைகள் செய்ய தசரதர் உத்தரவிட்டார். இளவரசர்கள் பிறந்ததை நாட்டு மக்கள் 12 நாட்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
குழந்தைகளுக்கு பெயர் சூட்ட வசிஷ்ட முனிவரை தசரதர் அழைத்தார். ஓவியத்தின் அழகைப்போல் கரிய திருமேனியுடைய கௌசலையின் குழந்தைக்கு ராமன் என்று பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார். விரதத்தை கடைபிடித்து மெய்வழியைக்காட்டக்கூடிய கைகேயிக்கு பிறந்த குழந்தைக்கு பரதன் என்று பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார். சுமத்ரைக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை தேவர்கள் வாழவும் அசுரர்கள் அழியவும் யாராலும் வெல்ல முடியாத புகழுடைய இக்குழந்தைக்கு லக்குவனன் என்று பெயரிடுவதாக அறிவித்தார் வசிஷ்டர். முத்து பிராகசிப்பது போல முகத்துடனும் தீமையை அழிக்கும் தகுதி பெற்ற இரண்டாம் குழந்தைக்கு சத்ருக்கன் என்றும் பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார்.
கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி நழுவிப் போய் விட்டது. கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று வருத்தப்பட்டான்.
நடந்தவைகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த ஒரு துறவி அய்யா நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேன். இப்போது கைத்தடியை நழுவ விட்டதாக வருத்தப்படுகின்றீர்கள். உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. எங்கிருந்தோ ஒரு கைத்தடி கங்கையில் மிதந்து வந்தது. இப்போதும் அது எங்கோ மிதந்து போய்க்கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள். அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி அதை இழந்ததும் வருத்தப்படுகின்றீர்கள் என்றார்.
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.
புத்திர காமேஷ்டி யாகத்தை முறையாக செய்வது மிகவும் கடினமானது. கிரியா என்ற செயல்கள் அதில் அதிகமாக உள்ளது. இம்மியளவு யாகத்தில் தவறு செய்தாலும் யாகம் தனது பலனை தராது. அதற்குரிய நியதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றார் வசிஷ்டர். இதனை கேட்ட தசரதர் இந்த யாகத்தை முறையாக யாரால் செய்ய இயலும் என்று கேட்டார். காசிபர் என்னும் முனிவருக்கு விபண்டகர் என்னும் முனிவர் மகன். அவருக்கு சிவபெருமானே புகழும்படி சகலகலைகளிலும் கற்றுணர்ந்த புதல்வன் சிருங்கரிஷி என்பவர் உண்டு. அவரை இங்கு வரவழைத்து இந்த புத்திரகாமேஷ்டி யாகத்தை அவரது சொல்படி நடத்துவாயாக என்று வாழ்த்தினார் வசிஷ்டர்.
உரோமபதன் என்ற அரசனின் நாட்டில் சிருங்கரிஷி இருப்பதை அறைந்த தசரதன் அவரை முறையாக தன் நாட்டிற்கு அழைத்துவர தனது மந்திரி சுமத்திரனோடு சென்றார். தன் நாட்டிற்கு தசரதர் வருவதை அறிந்த உரோம்பதன் நாட்டின் எல்லைக்கே சென்று தசரதனை வரவேற்று விருந்தளித்தான். தசரதர் வந்த காரணத்தை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்ட உரோம்பதன் தானே சிருங்கரிஷியை அயோத்தி நகருக்கு அழைத்து வருவதாக வாக்களித்தார். தசரதர் சென்ற பின் சிருங்கரிஷி இருக்கும் இடத்திற்கு வந்த உரோமபதன் அவருக்கு உபசாரங்கள் செய்தான். இதனை கண்ட சிருங்கரிஷி வந்த நோக்கம் என்ன என்று கேட்டார். தாங்கள் தமக்கு ஒரு வரம் தர வேண்டும் என்று உரோமபதன் கேட்டுக்கொண்டான். தந்தோம் என்ன வேண்டும் கேள் என்றார். அசுரர்களால் துன்பப்பட்ட இந்திரனுக்கு உதவி செய்த தசரதரின் நாட்டிற்கு சென்று அவருக்கு புத்திர காமேஷ்டி யாகத்தை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான் உரோமபதன். வரம் தந்தோம் உடனே கிளம்புவோம் என்ற சிருங்கரிஷி உரோம்பதனுடன் அயோத்தி நோக்கி கிளம்கினார்.
உரோம்பதன் அனுப்பிய ஒற்றன் சிருங்கரிஷி அயோத்திநகர் வருவதை தசரதனுக்கு தெரியப்படுத்தினான். அதனை கேட்ட தசரதர் அயோத்தி நகருக்கு மூன்று யோசனை தூரம் (ஒரு யோசனை தூரம் என்பது தோராயமாக 15 கிமீ தூரம் ஆகும்) சென்று முரசு வாத்தியங்கள் ஒலிக்க மலர்கள் தூவி முனிவரின் அடிபணிந்து தனது வரவேற்றான். அரண்மணைக்கு வந்த சிருங்கரிஷி தசரதரை பார்த்து வசிஷ்டரை குலகுருவாக கொண்ட உன்னே போன்ற அரசர்கள் யாரும் இல்லை என்று வாழ்த்தி யாகத்திற்கு செய்ய வேண்டிய நியதிகளையும் ஒழுக்கங்களையும் விரதங்களையும் கூறினார். அவரின் ஆணைக்கு உப்பட்ட தசரதரும் அவரது மனைவியர்களும் அதற்கான விரதங்களையும் நியதிகளையும் கடைபிடிக்க ஆரம்பித்தனர்.
யாகம் செய்யும் யாக பூமியை உழுது விதிப்படி திருத்தியமைத்தார்கள். யாக சாலையில் ஆகவானீயம், தக்ஷ்ணாக்கினி, காருகபத்தியம் என மூன்று விதமான யாக குண்டங்கள் கட்டப்பட்டன. வேதம் ஓத யாக குண்டங்களில் புத்திர காமேஷ்டி யாகத்திற்கு தேவையான ஆகுதி பொருட்கள் அனைத்தும் நெய்யுடன் போடப்பட்டது. யாகம் தொடர்ந்து 12 மாதங்கள் நடந்தது. யாகம் உச்சநிலை அடைந்ததும் யாக நெருப்பில் இருந்து பிராகாசமூர்த்தி ஒருவர் மேலே கிளம்பி வந்தார். அவர் கையில் கலசம் ஒன்று இருந்தது. அதை அவர் தசரதரிடம் கொடுத்துவிட்டு மறைந்தார்.
பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருப்பது பஞ்ச பூதங்கள். இந்த பஞ்ச பூதங்களும் அசையும் சக்தி அசையா சக்தி என்கிற இரண்டு சக்தி மயங்களிலிருந்து உருவானவை. இந்த இரண்டு சக்தி மயங்களே ஆண் பெண் என்கிற இரண்டு பாலாகி உலகத்தின் அனைத்து இயக்கத்திற்கும் அடிப்படையாக இருக்கின்றது. ஆண் மற்றும் பெண்ணின் குறியீடுகளான பிராகிருதி மற்றும் புருஷ் ஆகிய இரண்டின் கூட்டாக அமைந்திருப்பது தான் சிவனின் லிங்க வடிவம். லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும். லிம் என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும். கம் என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும். உயிர்கள் தோன்றுவதற்கும் ஒடுங்குவதற்கும் உரிய இடமாக சிவன் உள்ளதால் லிங்க உருவம் சிவலிங்கம் என்ற பெயர் பெற்றது.
பிரம்மா விஷ்ணு உருத்திரன் மகேஸ்வரன் சதாசிவன் என்ற ஐந்து மூர்த்திகளையும் தனது பகுதிகளாக் கொண்டது சிவலிங்கம். இதில் மூன்று பகுதிகள் மட்டுமே கண்ணுக்கு தெரியும். அதன் அடிப்பகுதி படைக்கும் பிரம்மாவைக் குறிக்கிறது. மத்தியப் பகுதி காக்கும் விஷ்ணுவைக் குறிக்கிறது. மேல் பகுதி அழிக்கும் உருத்திரனைக் குறிக்கிறது. மறைத்தல் தொழிலை செய்யும் மகேஸ்வரனும் அருளும் தொழிலை செய்யும் சதாசிவனும் மீதி மூன்று தொழில்களோடு மறைமுகமாக கலந்திருக்கின்றார்கள். உருவமில்லாத சதாசிவ மூர்த்தியாகிய சிவம் தமது தோற்றமாக பஞ்ச பூதங்களை படைத்து அதை முறையே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற ஐந்து முகங்களாகவும் அந்த முகங்களை ஐந்து லிங்கங்களாகவும் தோற்றுவித்தார். இவையே பஞ்சபூத லிங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை முறையே:
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் – நிலம்
திருச்சி ஜம்புகேஸ்வரர் – நீர்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் – நெருப்பு
காளஹஸ்தி காளகத்தீஸ்வரர் – காற்று
சிதம்பரம் நடராஜர் – ஆகாயம்
அனைத்து லிங்கங்களையும் மொத்தம் எட்டு வகைகளாக பிரிக்கலாம். அவை முறையே:
சுயம்பு லிங்கம் – தானாய் தோன்றிய லிங்கம்.
தேவி லிங்கம் – தேவி சக்தியால் வழிபடப்பட்ட லிங்கம்.
காண லிங்கம் – சிவமைந்தர்களான விநாயகர் முருகர் இவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
தெய்வீக லிங்கம் – தேவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
ஆரிட லிங்கம் – அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.