மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -4

துரோணர் யுதிஷ்டிரரை சிறைப்பிடித்து விடுவாரோ என்னும் பயம் பீமனுக்கு ஏற்பட யுதிஷ்டிரர் இருக்கும் இடத்திற்கு பீமன் வந்தான். அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன். அவைகளை பந்தாடினான் பீமன். அபிமன்யூவும் கௌரவர் படையை எதிர்த்து போராடினான். இன்றும் அவன் துரியோதனனின் ஐந்து தம்பிகளை கொன்று அர்ஜுனனை கௌரவித்தான். அவன் ஆற்றல் கண்டு அர்ஜுனன் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றான். துருபதன், சிகண்டி, கடோத்கஜன், சுவேதன், ஆகியோர் கர்ணனை கவனிக்கும் படி திருஷ்டத்துய்மன் வியூகம் வகுத்திருந்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். கர்ணன் ஒரு மாவீரன். அவன் ஆற்றல் சாதாரணமானதல்ல என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும் தங்கள் முழு திறனை கொண்டு அவனை எதிர்த்தனர். கடோத்கஜன் அரக்கியின் மகன் என்பதால் மாயங்கள் அறிந்தவன். அவன் செய்த மாயங்களை கர்ணன் சூரிய அஸ்திரம் கொண்டு சுலபமாய் தகர்த்தான். இவர்கள் நால்வரின் தாக்குதலையும் ஒருவனாய் நின்று எதிர்த்தான். இதை கண்ட அர்ஜுனனும் வியந்தான்.

பகதத்தன் எனும் மன்னன் சுப்ரதீபம் என்னும் யானையில் வந்து பீமனுடன் போரிட்டான். அந்த யானை பீமனின் தேரை தகர்த்தது. பின் பீமனை தன் துதிக்கையால் பற்றி தூக்கி எறிய முற்பட்டது. பீமன் அதன் பிடியிலிருந்து தப்பி அதன் மர்மஸ்தானத்தை தாக்கினான். அந்த வேதனையிலும் அது பீமனை மிதித்துத் தள்ளப் பார்த்தது. ஆயினும் பீமன் அதனிடமிருந்து தப்பினான். பின் அந்த யானை அபிமன்யூவின் தேரைத் தூள் தூளாக்கியது. சாத்யகியின் தேரும் அதே நிலையை எட்டியது. யானையின் அட்டகாசத்தை அறிந்த அர்ஜூனன் அதனைக் கொல்ல விரைந்து வந்தான் அர்ஜூனன் பகதத்துடன் கடும் போர் புரிந்தான். அர்ஜூனன் எய்த ஒரு அம்பு யானையின் கவசத்தைப் பிளந்து மார்பில் ஊடுருவியது. யானை வீழ்ந்து மாண்டது. ஆத்திரம் அடைந்த பகதத்தன் சக்தி ஆயுதத்தை அர்ஜுனன் மீது செலுத்தினான். கிருஷ்ணன் அதை தன் மார்பில் தாங்கியதால் அர்ஜுனன் உயிர் பிழைதான். பின் அர்ஜூனன் செலுத்திய அக்னி அஸ்திரம் மாவீரன் பகதத்தனைக் கொன்று வீழ்த்தியது.

பின்னர் அர்ஜூனன் திருதிராட்டிர மன்னனின் மைத்துனர்களான அசலன் விகுஷன் ஆகியோரைக் கொன்றான். சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான். அர்ஜூனன் ஒளிமய கணையால் அந்த இருளைப் போக்கினான். சகுனி பயந்து வேறிடத்திற்கு நகர்ந்தான். யுதிஷ்டிரரை பிடித்துவிடலாம் என்ற துரோணரின் கனவு தகர்ந்தது. கௌரவர்கள் கலங்க பாண்டவர்கள் மகிழ சூரியன் மறைய பன்னிரன்டாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

அன்றைய போரில் நடந்தவற்றை கண்டு சினம் கொண்ட துரியோதனன் துரோணரிடம் சென்று கடுமையாகப் பேசினான். யுதிஷ்டிரரைப் பிடிக்கும் வாய்ப்பை தவற விட்டீர்கள். எனக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டீர். நீர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றான். இதனால் கோபம் அடைந்த துரோணர் துரியோதனா உனக்கு பலமுறை சொல்லியுள்ளேன். அர்ஜூனனைப் போரில் வெல்ல முடியாது. போர்க்களத்தில் அவன் எப்படி யுதிஷ்டிரரைப் பாதுகாத்தான் என்று நீ பார்த்தாய். நாளை நான் உன்னதமான வேறு ஒரு போர் முறை ஒன்றைக் கையாளப் போகிறேன். அர்ஜூனனை நீ எப்படியாவது யுதிஷ்டிரனிடமிருந்து பிரித்து வெளியே கொண்டு செல் என்றார். துரோணரின் பேச்சில் துரியோதனனுக்கு நம்பிக்கை வர அங்கிருந்து சென்றான்.

தொடரும்………

அமர்நாத் குகை கோயில்

அமர்நாத் குகை கோயில் 5,000 ஆண்டு பழமையானது, அமர்நாத் குகையின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் சுயம்புவாக உருவாகிறது. இந்த லிங்கமானது சந்திரனின் வளர்பிறை நேரத்தில் வளர்ந்தும் தேய் பிறை காலத்தில் கரைந்தும் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுகிறது இக்குகை 3,888 மீட்டர் உயரத்தில் உள்ளது.

No photo description available.

பைஜிநாத் கோவில்

யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வு

1879 ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்திய இருந்தது. ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்தி கொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கர்னிலிடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை. கர்னலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார்.

ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவளின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது, அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவளை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களை கண்டாள். துயருற்ற முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கர்னலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர். கர்னலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தை புதுப்பித்துத் தருவதாக வேண்டி கொண்டு வீடு திரும்பினாள்.

ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி சரியாக பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர் கர்னலிடமிருந்து செய்தியை கொண்டு வருகிறார், அதில் எழுதி இருந்தது. போர்க்களத்தில் இருந்து தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பி கொண்டிருந்தேன் ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்து பக்கங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர், நாங்கள் தப்பிச்செல்ல இயலாதவாறு சிக்கி கொண்டோம். நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன். அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் வைத்திருந்தார். மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும் மேலும் அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் மகத்தான விதமாக இருந்தது, இந்த சிறந்த மனிதனை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர். அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய தருணம் நேர் எதிராக மாறி வெற்றியை பெற்றோம். இவைகள் எல்லாம் சாத்தியமானதன் கரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனை உடைய கூறிய ஆயுதமே. அந்த உன்னத துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுகொண்டதற்கு இணங்க காக்க வந்ததாகவும் கூறினார்.

இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கர்னலின் மனைவி கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தன. அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார். சில வாரங்களுக்கு பின் கர்னல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார். கர்னல் மற்றும் அவர் மனைவியும் அது முதல் சிவ பக்தர்களாக விளங்கினர். 1883 ஆம் ஆண்டு கர்னல் மற்றும் அவர் மனைவி 16000 ரூபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர். இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -3

யுதிஷ்டிரரை உயிருடன் பிடிக்க துரோணர் 11 வது நாளில் செய்த முயற்சிகள் அனைத்தும் அர்ஜூனன் கேடயம் போல் இருந்தமையால் பலனில்லாமல் போனது. யுதிஷ்டிரரை உயிருடன் பிடிக்க வெண்டுமெனில் அர்ஜூனனை அவர் அருகில் இருக்க விடக்கூடாது. யுதிஷ்டிரன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் அர்ஜூனனை இழுக்க வேண்டும் எனத்திட்டம் தீட்டினர் கௌரவர்கள். திரிகர்த்த மன்னன் சுசர்மனும் அவனது சகோதரர்கள் சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியகர்மன் மற்றும் அவர்களது மகன்கள் 35 பேரும் அர்ஜுனனை கொல்வோம் அல்லது போரிட்டு மடிவோம் என சபதம் செய்தனர். இதற்கு சம்சப்தக விரதம் என்று பெயர். 12 ம் நாள் யுத்தம் தொடங்கியது. தென்திசையிலிருந்து அர்ஜூனனுக்கு சவால் விட்டனர். அர்ஜூனனும் சவாலை ஏற்றுக்கொண்டான். தென் திசைக்கு அவர்களை எதிர்க்க செல்வதால் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் சகோதரன் சத்யஜித்திடம் யுதிஜ்டிரரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு திரிகர்த்த மன்னனையும் அவருடைய சகோதரர்களையும் எதிர்த்துச் சென்றான் அர்ஜூனன்.

கடுமையாக நடைபெற்ற போரில் கிருஷ்ணரின் திறமையால் அர்ஜூனன் தேர் எல்லா இடங்களிலும் சுழன்றது. கௌரவர்களும் அர்ஜுனனிடம் வெற்றி அல்லது வீரமரணம் என்று போரிட்டனர். திரிகர்த்த வேந்தனுக்குத் துணையாக அவன் சகோதரர்களையும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான வீரர்களும் சேர்ந்து போரிட்டனர். ஆயிரம் ஆயிரம் வீரர்களை திரிகர்த்த வேந்தனுக்கு துணையாக துரியோதனன் அனுப்பினான். யுதிஷ்டிரரோ அங்கு ஆபத்தில் இருக்கிறார். இங்கோ படை வீரர்கள் வந்த வண்ணமாகவே இருந்தனர். கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜூனன் வாயு அஸ்திரத்தை விடுத்து அனைவரையும் வீழ்த்தினான். சுசர்மன் மட்டும் தப்பினான்.

தென்திசைப்போரை முடித்துக் கொண்டு அர்ஜூனன் யுதிஷ்டிரரைக் காக்கும் பொருட்டுத் துரோணரை எதிர்த்தான். ஆனால் துரோணரோ யுதிஷ்டிரரை உயிருடன் பிடிப்பதில் குறியாய் இருந்தார். அன்றைய போரில் துரோணரின் திறைமை அனைவரையும் கவர்ந்தது. துரோணரை முறியடிக்க திருஷ்டத்துய்மன் முயன்றான். தனது மரணம் இவனால் தான் என்பதை அறிந்த துரோணர் அவனைத் தவிர்க்க முயற்சித்தார். அப்போது துரியோதனனின் தம்பியருள் ஒருவன் துர்முகன் திருஷ்டத்துய்மனைத் தாக்கி போரிட துரோணர் அங்கிருந்து நகர்ந்தார். துரோணரை அழித்து போர் செய்வதற்காகவே வேள்வியில் இருந்து தோன்றிய திருஷ்டத்துய்மன் துர்முகனின் வில்லை முறித்து தேரையும் தவிடுபொடி ஆக்கினான்.

அதே நேரத்தில் சத்யஜித் தன் திறமையைக் காட்டி யுதிஷ்டிரரைக் காக்க முற்பட்டான். அவனுக்கும் துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாய் இருந்தது. துரோணர் மீது பல அம்புகளைச் செலுத்தினான் அவன். அதனால் கோபமுற்ற துரோணர் விட்ட அம்பு அவன் தலையைக் கொய்தது. சத்யஜித் வீர மரணம் எய்தினான். சத்யஜித்தின் மரணம் கண்ட விராடனின் தம்பி சதானீகன் துரோணரை எதிர்க்க அவனையும் அவர் கொன்றார். இவர்கள் இருவரின் மரணம் பாண்டவர்களுக்கு பேரிழப்பாக இருந்தது.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -2

கர்ணன் திரும்பிய திசையெங்கும் பிணங்கள் குவிந்தன. அவன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு அது புறப்பட்டதா இல்லையா என்று தெரியும் முன் இலக்கை தாக்கியது. கர்ணனின் அம்புகள் எதிரணியை சல்லடையாக துளைத்தது. துரியோதனன் பூரிப்படைந்தான். கௌரவ படைகள் ஆர்பரித்தன. வீரியத்துடன் போர் புரிந்தன. கர்ணனின் வருகையால் கௌரவ படை சற்று ஓங்கியது. பாண்டவர்கள் திகைத்தனர். கிருஷ்ணர் அர்ஜூனனை பார்த்து பார்த்தாயா கர்ணனை தெரிந்து கொள் அவன் ஆற்றலை. கர்னணனை நேருக்கு நேர் சந்திக்கும் போது தான் நீ உன்னை நிரூபிக்க வேண்டிய சரியான தருணம் வரும் என்றார்.

மற்றறொரு முனையில் அர்ஜுனனின் மகனான அபிமன்யு போர்களத்தில் தன் பெயரை நிலைநாட்டி கொண்டிருந்தான். அன்றைய போரில் அபிமன்யூவின் கை ஓங்கியது. அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான். துரியோதனனின் தம்பிகள் ஆறு பேரை கொன்றான். இதனால் துரோணரின் வியூகம் உடைக்கப்பட்டது. ஐந்து யானை படைகளை அம்பெய்து கொன்றான். அபிமன்யூவின் போர்த்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவன் வெல்ல முடியாதவனாய் காட்சியளித்தான். தன் மகனின் வீரத்தை கண்டு அர்ஜுனன் மெய் சிலிர்த்தான்.

யுதிஷ்டிரனை பிடிக்க வேண்டுமென்று துரோணர் உறுதி பூண்டார். துரியோதனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் யுதிஷ்டிரர் மீதே குறியாக இருந்தார். அதற்காக அவர் யுதிஷ்டிரனை நோக்கி சென்ற பாய்ச்சல் பயங்கரமாக இருந்தது. தம்மை எதிர்த்த அனைவரையும் அழித்தார். துரோணருக்கு துணையாக துச்சாதனன் மற்றும் ஆறு தம்பிகள் இருந்தனர். யுதிஷ்டிரரை சுற்றி வளைத்து போர் செய்தனர். யுதிஷ்டிரன் அவர் கையில் அகப்பட்டுக் கொள்ளும் தருவாயில் இருந்தான். அவன் அகப்பட்டுக் கொண்டான் என்று யூகித்த கௌரவர்கள் வெற்றிக்கு அறிகுறியாக கூப்பாடு போட்டது. இதற்கிடையில் தக்க தருணத்தில் அர்ஜுனன் இப்போராட்டத்தில் கலந்து கொண்டான். பீமனும் யுதிஷ்டிரரை காப்பதில் ஈடுபட்டான். அர்ஜூனனின் தாக்குதலைத் துரோணரால் சமாளிக்க முடியவில்லை. ருத்ரமூர்த்தி போர்க்களத்தில் யுத்தம் செய்வது போல் அர்ஜுனன் காட்சியளித்தான். எல்லா பக்கங்களிலிருந்தும் எதிரிப்படைகளை அவன் அழித்தான். அர்ஜுனனின் அஸ்திரங்கள் யுதிஷ்டிரருக்கு கேடயமாக அமைந்து அவரை பாதுகாத்தது. ஆஞ்சநேயரின் அருள் பெற்ற பீமன் அனைவரையும் பந்தாடினான். அர்ஜுனன் பீமன் மற்றும் கடோட்கஜனின் போர் ஆற்றலை கண்ட கௌரவர்கள் நடுங்க ஆரம்பித்தனர். துரோணரும் சோர்ந்து போனார். யுதிஜ்டிரனை பிடிக்க முடியாமல் துரோணர் மிகவும் துயரம் அடைந்தார். மாலையில் சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது.

மால்ஷேஜ் காட் ஸ்தலம்

கேதாரேஷ்வர் மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டையிலுள்ள கேதாரேஷ்வர் குகையில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது. முழுவதுமாக நீரால் சூழப்பட்ட 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்து விட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

No photo description available.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -1

பத்தாம் நாள் போரில் பீஷ்மரின் வீழ்ச்சி கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போரில் பங்கு கொண்ட அணைத்து வீரர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. போர் வீரர்கள் அனைவரும் கர்ணன் சேனாதிபதியாவான் என்று எண்ணினர். ஆனால் கர்ணன் துரியோதனனுக்கு வேறு ஒரு ஆலோசனை கூறினார். துரோணாச்சாரியார் அனைத்து வேந்தர்களுக்கும் ஆச்சார்யாராக இருந்தவர். துரோணாச்சாரியரை சேனாதிபதியாக ஆக்கினால் வேந்தர்களுக்கு திருப்தி உண்டாகும். அனைத்து அரசர்களுக்குள் ஒருவரை மட்டும் சேனாதிபதியாக நியமித்தால் அது அவர்களுக்குள் அதிருப்தியை உண்டாக்கும். கர்ணன் இவ்வாறு கூறியது துரியோதனனுக்கு பெரும் திருப்தியை உண்டு பண்ணியது.

சேனாதிபதி பதவியை ஏற்றுக் கொள்ளும்படி துரோணரை துரியோதனன் கேட்டுக்கொண்டான். துரோணர் மிகவும் மகிழ்வுடன் சம்மதம் கொடுத்தார். தம்மை சேனாதிபதி ஆக்கியதன் மூலம் தமக்கு கிடைத்த வாய்ப்பை முன்னிட்டு துரோணர் பெருமகிழ்வு அடைந்தார். அதற்கு அறிகுறியாக தம்மிடம் ஏதாவது வரம் கேட்டு பெற்றுக்கொள்ளும்படி துரியோதனிடம் அவர் கூறினார். அதற்கு துரியோதனன் சூரியன் மறைவதற்கு முன்பு யுதிஷ்டிரனை கைதியாக பிடித்து தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் இதுவே தனக்கு வேண்டும் வரம் என்றும் கேட்டான். இதனை நிறைவேற்றுவது மிகவும் கடினம் என்று துரோணர் உணர்ந்தார். ஆயினும் அரைமனதுடன் சம்மதம் தெரிவித்தார்.

யுதிஷ்டிரரை உயிருடன் பிடித்து விட்டால் அவரை மீண்டும் சூதாட வைத்து தோற்கடித்து ஆயுட்காலம் முழுதும் வனவாசம் அனுப்பி விடலாம் என்று திட்டமிட்டான் துரியோதனன். சகுனியின் சூழ்ச்சி பின் இருந்தது. இந்த செய்தி ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களுக்கு எட்டியது. திருஷ்டத்துய்மன் அதை தடுக்க தன்னால் இயன்றதை செய்வேன் என்று சூளுரைத்து வியூகம் வகுத்தான். அதனால் யுதிஷ்டிரருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அன்று துரோணர் சகட வியூகம் வகுத்தார். வண்டி போன்ற வடிவம் என்பது அதன் பொருள். பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகம் வகுத்தனர்.

பீஷ்மர் இல்லாத நிலையில் கர்ணனை போர் செய்ய அனுமதிக்குமாறு துரோணரை வேண்டினான் துரியோதனன். துரோணரும் சம்மதம் தெரிவித்தார். செய்தி கர்ணனின் பாசறைக்கு சென்றது. துரியோதனா உனக்கு நன்றி செலுத்தும் நேரம் இது வருகிறேன் அர்ஜுனா என்று கர்ஜித்தான் கர்ணன். கௌரவ படைகள் முகத்தில் நம்பிக்கை ரேகை பரவியது. கர்ணன் தன் தந்தையாகிய சூரியனுக்கு வணக்கங்களையும் நட்பின் கடன் தீர்க்க வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றியையும் செலுத்திவிட்டு தன் ரத்தத்தில் ஏறி போர்க்களம் நோக்கி புறப்பட்டான். ஆயிரம் சூரியனின் பிரகாசம் கொண்டவனாய் காட்சியளித்தான். ஆகாயத்தை விட தெளிவான சிந்தனையுடன் போர்களத்தை கவனித்தான். நீரை போல் சுழன்று தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் அழித்தான். அவனது குறிக்கோள் ஒன்று மட்டுமே. அது துரியோதனனை அஸ்தினாபுரத்து அரியாசனத்தில் அமர வைத்து அர்ஜுனனை விட தான் சிறந்தவன் என்பதை இந்த உலகிற்கு காட்ட வேண்டும் என்ற நெருப்பு அவனுள் எரிந்து கொண்டே இருந்தது.

Image may contain: 3 people

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 245 தக்கோலம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 245 வது தேவாரத்தலம் தக்கோலம். புராணபெயர் திருவூறல். மூலவர் ஜலநாதேஸ்வரர், உமாபதீசர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவன் மணலால் ஆனாவர் தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாள் கிரிராஜ கன்னிகை, மோகனவல்லி. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுட்ன வடக்கு நோக்கி காட்சி தருகிறாள். இங்கு அம்பாளுக்கு தான் முதல் பூஜை. தலமரம் தக்கோலம். தீர்த்தம் நந்தி தீர்த்தம், கல்லாறு. குசஸ்தலை என்னும் கல்லாற்றின் கரையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரளவில் சுற்றிலும் மதிற்சுவருடன் கூடிய மேற்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளனர். கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும், வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது.

அருணகிரிநாதர் இத்தல முருகனை பாடியுள்ளார். சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன. உள் பிராகாரத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை திருமேனிகள் உள்ளன. இவற்றுள் துர்க்கை நீங்கலாக உள்ள மற்ற திருமேனிகள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே உள்ளன. தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு இடக்காலைக் குத்துக்காலிட்டு காட்சி தருகின்றார். லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் உள்ள மகாவிஷ்ணுவும் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபயமாகக் கொண்டு இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார். பிரம்மாவும் அமர்ந்த நிலையில் இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்து ஒன்றால் கீழேயுள்ள மகிஷத்தை காலூன்றி குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில் உள்ளார்.

தேவகுருவான பிரகஸ்பதியின் தம்பி உததி முனிவர் தன் நோய் நீங்க சிவனை வழிபட்டார். அப்போது நந்தி தேவர் தன் வாய் வழியாக கங்கையை வரவழைத்தர். அது இங்குள்ள சிவலிங்கத்தைச் சுற்றி வந்து மற்றொரு நந்தியின் வாயிலிருந்து வெளியேறியது. அதில் நீராடி சிவனை வழிபட்ட முனிவர் நோய் நீங்கப்பெற்றார். ஜலம் (தீர்த்தம்) சூழ்ந்து சென்றதால் சிவன் ஜலநாதீஸ்வரர் என பெயர் பெற்றார். சிறிமு நாட்களுக்கு முன்பு வரை தண்ணீர் வந்தது. தற்போது இதுபோல் தண்ணீர் வரவில்லை. தட்சன் நடத்திய யாகத்திற்கு அவனது மகள் தாட்சாயணி சென்ற போது அவளை அவன் அவமானப்படுத்தினான். சிவன் தட்சனின் தலையை அறுத்தார். அவனும் தன் சொல் மீறி சென்ற பார்வதியும் பூலோகத்திலுள்ள க்ஷீர நதிக்கரையில் தன்னை நினைத்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி தட்சன் சிவனை வழிபட்டு ஆட்டுத்தலை பொருத்தப் பெற்றான். தட்சன் தனக்கு தலை வேண்டி ஓலமிட்டு வழிபட்டதாலும் தலையிழந்த அவனுக்கு ஆட்டுத்தலை கொடுத்து தக்க கோலத்தை கொடுத்ததாலும் இவ்வூர் தக்கோலம் என்று பெயர் ஏற்பட்டது. தாட்சாயணி இங்கு வந்த போது பாலாற்றில் பெருவெள்ளம் சென்றது. அவள் நதிக்கரையில் உள்ள மணலை அள்ளி லிங்க வடிவமாக்கி வழிபட்டாள். தியானத்தில் இருந்தபோது வெள்ளம் லிங்கத்தை சூழ்ந்தது. லிங்கத்தை காப்பாற்றுவதற்காக அவள் அதனை அணைத்துக் கொண்டாள். இந்த லிங்கமே இப்போது இக்கோயிலில் இருக்கிறது. பார்வதி லிங்கத்தை காப்பாற்றியதன் அடையாளமாக லிங்கத்திருமேனியில் பள்ளம் இருப்பதையும் அதையும் தாண்டி வெள்ளம் அரித்தது போல் லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் வரிவரியாக மணல் கோடுகள் இருப்பதை இன்றும் காணலாம்.

பார்வதிதேவி இந்த லிங்கத்தை அணைத்திருந்ததால் இங்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் இந்த லிங்கத்தை தொடாமல் தான் இன்றும் கூட அபிஷேகம் செய்கிறார்கள். இன்னொரு அதிசயத்தையும் இந்த லிங்கத்தில் காணலாம். உத்தராயண காலத்தில் இந்த லிங்கம் செந்நிறமாக காட்சி தரும். அப்போது நல்ல மழை பொழிந்து பயிர் செழிக்கும். தட்சிணாயன காலத்தில் இதே லிங்கம் வெண்மையாக மாறும். அப்போது வறட்சி ஏற்பட்டு நிலம் காய்ந்து விடும். இத்தலத்தை திருவூறல் என நாவுக்கரசரும், சுந்தரரும் பாடியுள்ளனர். இவ்வூரில் ஏழு சிவாலயங்கள், ஏழு விநாயகர் கோயில்கள், ஏழு கிராம தேவதை கோயில்கள் உள்ளன. சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுள்ளார். இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால் இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக பெருகும் என தலபுராணம் கூறுகிறது. காமதேனு, இந்திரன், சந்திரன், எமன், திருமால், பாண்டவர்கள், சப்த கன்னியர், உததி முனிவர், தீர்க்கத முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

Image result for தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்