தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 234 காஞ்சிபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 234 வது தேவாரத்தலம் காஞ்சிபுரம். பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. மூலவர் ஏகாம்பரநாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் காமாட்சி ஏலவார்குழலி. தீர்த்தம் சிவகங்கை(குளம்), கம்பாநதி. தலமரம் மாமரம். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மாமரத்திற்கு ஆம்ரம் என்பது வடசொல் அது தமிழில் வழங்கும்போது தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும் கம்பம் என்றும் மருவிற்று. மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் ஏகாம்பரநாதர் என்று இப்பெயர் பெற்றார். முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது இத்தலம்.

இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. ஏகம்பரநாதருக்கு திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது. காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது. இவரை பிருத்வி லிங்கம் என்று அழைப்பார்கள். இந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகங்கள் கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.

ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும் எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. பஞ்சபூத தலங்களில் இது நிலத்தைக் குறிக்கும். பஞ்சபூத தலங்களில் இதுமுதல் தலம் ஆகும். உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன் எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும் முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியன் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார்.

அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க இத்தலத்திற்கு அனுப்பினார். இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்து வர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்து விடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற பெயரும் இருக்கிறது. இக்கோவிலில் அம்பாளுக்கு தனி சன்னதி கிடையாது. ஆழ்வார்கள் பாசுரம் பாடிய திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி கோவிலுக்கு உள்ளேயே உள்ளது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.

கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை என்பவள் பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார். பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு வெண்பாக்கம் என்னும் ஊரில் ஊன்றுகோல் கொடுத்த சிவன் இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணம், கச்சியப்பமுனிவர் அருளிய இரண்டாம் காண்டம் காஞ்சிப்புராணம், கச்சியப்பமுனிவர் இயற்றிய ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, ஏகம்பரநாதர் அந்தாதி ஆகிய நூல்கள் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் கந்த புராணத்தை இயற்றினார். பின் குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்.

முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. இந்தக் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. கிழக்கு ராஜகோபுரத்தையும் தெற்கு வாயில் பெரிய இராஜ கோபுரத்தையும் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார். மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயர் கட்டியுள்ளார். இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்களான வராகமும் கட்கமும் இருக்கின்றன. இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன் நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும் அது பிற்காலச் சோழர்களால் திருத்தி கட்டப்பட்டதாகவும் தெரிகின்றது.

இக்கோயிலின் வெளியில் உள்ள மதில் சுவர் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. முன்மண்டபத்தில் ஆதித்த கரிகாலன் சிலை உருவம் உள்ளது. அதற்குத் தாடி இருக்கிறது. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி கி.பி.1250 சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், ராஜராஜன், விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் ஆகியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் கி.பி. 1406 கல்வெட்டு மூன்று இருக்கின்றன. ஆயிரங்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் கி.பி.1469 ஏகம்பரநாதர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி கி.பி.1250 காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது. காஞ்சிபுரத்தை அச்சுதராயன் கி.பி.1534 ஆண்டு படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி உள்ளது. விஜயநகரமல்லிகார்சுனனுடைய கி.பி.1456 கல்வெட்டு இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 233 திருவண்ணாமலை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 233 வது தேவாரத்தலம் திருவண்ணாமலை. புராணபெயர் திருண்ணாமலை. மூலவர் அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள். தலமரம் மகிழமரம். தீர்த்தம் பிரம்மதீர்த்தம், சிவகங்கை. காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.

கோவிலின் திசைக்கு ஒன்றாக நான்கு கோபுரங்கள் உள்ளது. 5-ம் பிரகாரத்தில் இருந்து 4-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள், 4-ம் பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் கிளி கோபுரம் என்று அழைக்கப்படும் கோபுரம் ஒன்று ஆக மொத்தம் 9 கோபுரங்களுடன் இவ்வாலயம் திகழ்கிறது. இவற்றில் கிழக்கு திசையிலுள்ள இராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். இது 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தெற்கு திசை கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்றும் மேற்கு திசை கோபுரத்திற்கு பேய் கோபுரம் என்றும் வடக்கு திசை கோபுரத்திற்கு அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் பெயர். மனித உடலைப் பொறுத்த வரை மணிபூரகம் என்பது வயிற்றைக் குறிக்கும். வயிற்றுக்காகத்தான் இந்த உலகமே இயங்குகிறது. எனவே ஒட்டு மொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம். ஆறு ஆதாலத் தலங்களில் திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது. லிங்கமே மலையாக அமைந்த மலை பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது.

உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம். பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம். அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம். எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். 9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம். ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம். கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்று பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார். முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் திருவண்ணாமலை கிரிவலம் வருகின்றார்கள். பௌவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார். இதனால் பௌவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் சிறப்பு. இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது. உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர். கிரிவலம் வரும் கிழமைகளும் அதன் பலன்களும் தலவரலாற்றின் படி ஞாயிறு கிரிவலம் வந்தால் சிவபதவிகள் கிடைக்கும். திங்கள் கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய் கிரிவலம் வந்தால் கடன் வறுமை நீங்கும். தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம். புதன் கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம். வியாழன் கிரிவலம் வந்தால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம். வெள்ளி கிரிவலம் வந்தால் விஷ்ணு பதம் அடையலாம். சனி கிரிவலம் வந்தால் நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அமாவாசை கிரிவலம் வந்தால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும்.

இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை) புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் உள்ளது. கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் அதிகம் உள்ள கோயில் இது. இக்கோயிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில். கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளில் தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இது ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் தத்துவம் ஆகும். பரம்பொருளான சிவனே பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் மலை உச்சியில் ஜோதி வடிவில் காட்சி தருவார். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை. இக்கோவிலில் உள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை விநாயகர் வதம் செய்த போது அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு விநாயகர் சதுர்த்தி திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கின்றது. இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

மாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜைகள் நடக்கும். அவ்வேளையில் அண்ணாமலையார் நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார். கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால் இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள்.

சம்பந்தாண்டான் என்னும் புலவன் அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவர் கம்பத்திளையனார் என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன் அவரை தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி மன்னன் மூலம் பணித்தான். அதன்படி தனது பூதவுடலை இக்கோயில் கோபுரத்தில் கிடத்திய அருணகிரியார் கிளியின் வடிவில் தேவலோகம் சென்றார். இவ்வேளையில் சம்பந்தாண்டான் அவரது உடலை எரித்து விட்டான். எனவே வருத்தமடைந்த அருணகிரியாரை அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் செய்தாள். கிளியாக வந்த அருணகிரியார் இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருகிறார். கிளி கோபுரம் என்றே இதற்கு பெயர். அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில் அருணகிரிநாதர் இரு கால்களையும் மடக்கி யோக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு அருணகிரி யோகேசர் என்று பெயர்.

இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் எந்தி கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. அருகில் பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு முகங்கள் உள்ளன. மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர் அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன் பாதாள லிங்கம் இருக்கிறது.

இக்கோவிலின் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன. அருணைநாயகி திருவண்ணாமலையில் வாசம் செய்ய வந்த கதை இது. திருப்புகழ் தந்த அருணகிரிநாத ர்மேல் சம்பந்தாண்டான் என்னும் மந்திரவாதி வஞ்சம் கொண்டிருந்தான். ஆறுமுகனின் அருளுக்குப் பாத்திரமான அருணகிரிநாதர் முருக தரிசனம் பெற்று வீடுபேறு அடையக்கூடாதென்பதில் குறியாய் இருந்தான் அவன். அவன் வழிபட்டுவந்த காளிதேவி தான் அருணை நாயகி. தன் பக்தனின் வேண்டுதலையேற்று முருகனைத் தன் மடியிலிருத்தி எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டாள் அன்னை. இதைத் தன் ஞானக்கண்ணால் அறிந்த அருணகிரிநாதர் அன்னையை வசப்படுத்த பாடல்களைப் பாடினார். பாடல்களில் அம்பிகை மெய்ம்மறந்திருக்கையில் மடியிறங்கி வந்த முருகன் அருணகிரிநாதருக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இதனால் கோபமடைந்த சம்பந்தாண்டான் அன்னையை நிந்தித்தான். அதுமுதற்கொண்டு சம்பந்தாண்டனின் வழிபாடுகளை ஏற்காமல் திருவண்ணாமலையிலேயே எழுந்தருளி விட்டாள் அருணைநாயகி. திருவண்ணாமலை கொசமடத் தெருவில் அன்னையின் கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயிலில் கருவறையில் காட்சி தருகிறாள் அன்னை நாயகி.

கார்த்திகை பௌர்ணமி தீபத்தன்று மாலை 6.00 மணிக்கு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்து வந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து இரண்டு நிமிட தரிசன காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்று விடுவார். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். மலை மீது இருப்பவர்கள் உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3000 கிலோ பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் கோயிலில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். இவர்கள் ஏற்றிய இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணலாம். கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால் சிவனின் அருளுடன் மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா. தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு. நெய் எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள் கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான் அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது மலையை இடதுபுறமாக சுற்றிவா என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு அத்தீபத்தை பெருமாளாகக் கருதி பிரகாரத்திலுள்ள வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால் பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுகின்ர். நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும். கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள் நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்து விடும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது. மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது. மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம். கோயிலுக்கு உள்ளே பேய் கோபுரத்துக்கு வலது புறத்தில் அடி முடி காணாத பரம் பொருள் அண்ணாமலையார் பாதம் உள்ளது. பாதத்தை சுற்றியுள்ள துண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.

திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி. இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். இது ஏகத்தை குறிக்கும். மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும். இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும். இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும். திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுவதால் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் பழக்கம் இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. ஒன்று இப்போது உள்ள சாலை வழி 2வது மலையை ஒட்டிச் செல்லும் பாறைகள் முட்கள் மிகுந்த கடினமான பாதை. மலையைச் சுற்றியுள்ள பாதை ஜடாவர்ம விக்கிரம பாண்டியனால் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது.

திருவண்ணாமலையில் மக்கள் கி.மு 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே நகரமைத்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்று என்பதற்கான குறிப்புகள் சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.

அம்மணி அம்மாள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார். இவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் வடக்கு கோபுரத்தினை கட்டிய பெருமை உடையவர். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. அம்மணியம்மாளின் இயற்பெயர் அருள்மொழியாகும். இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவக் கடவுளான சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். பெற்றோருடன் ஒரு முறை அண்ணாமலைக்கு வந்த போது மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப மறுத்து அண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு பருவம் வந்த போதும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார். திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு அதனைக் கட்ட எண்ணம் கொண்டார். இதற்காகப் பக்தர்கள் செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினைக் கட்டி முடித்தார். அதனால் திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது. இவர் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர். நமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு மனம் வருந்தினார். பின் தாமே முன்வந்து கோபுரத்தினைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான பொருட் செலவுகளை நன்கொடைகள் மூலம் பெற்றார். ஒரு முறை செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கோபுரத்தினைக் கட்ட பணம் கேட்ட பொழுது அச்செல்வந்தர் பணத்தினை வைத்துக் கொண்டு தன்னிடம் பணமே இல்லையென்றார். ஆனால் அண்ணாமலையாரின் அருள் பெற்ற அம்மணி அம்மாள் அச்செல்வந்தரிடம் இருக்கும் தொகையைச் சரியாகக் கூறி அப்பணத்தினை நன்கொடையாகக் கேட்டார். தன்னிடம் இருப்பதை அறிந்து சரியாகக் கூறும் அம்மாளை வணங்கி அச்செல்வந்தர் பணத்தினைக் கொடுத்தார்.

கோயில்களில் சுவாமியை அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வார்கள் இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம் (சுத்தமான தங்கத்தால் பந்தனம்) பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளார். எத்தனையோ மன்னர்கள் இக்கோவிலில் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் வல்லாள மகாராஜாவின் பக்தி காரணமாக பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்ததுதான். ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கி.பி 1291 -ல் தொடங்கி கி.பி. 1343 ஆம் ஆண்டு வரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு. இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை. திருவண்ணாமலை கோவில் புராணமான கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம் ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை வன்னி குலத்தினில் வருமன்னா என்று குறிப்பிடுகிறது.

வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிடையாலை நிகழ்த்தினார். திருவண்ணாமலையில் இருந்த எல்லா தேவதாசிகள் வீட்டுக்கும் சிவகணங்களை அனுப்பிய சிவபெருமான் வல்லாள மகாராஜாவிடம் சைவத் துறவி கோலத்தில் வந்து தனக்கு ஒரு தேவதாசி வேண்டும் என்று கேட்டார். வல்லாள மகாராஜாவும் தேவதாசியை அனுப்புவதாக வாக்களித்தார். ஆனால் ஊரில் உள்ள எல்லா தேவதாசிகளும் சிவகணங்களுடன் இருந்ததால் வல்லாள மகாராஜாவால் தேவதாசியை கொண்டுவர முடியவில்லை. மன்னனின் கவலை அறிந்த வல்லாள மகாராஜாவின் இளைய ராணி தானே தேவதாசியாக சிவனிடம் செல்ல முன்வந்தார். துறவி வேடத்தில் சிவன் இருந்த அறைக்குள் ராணி நுழைந்த போது குழந்தையாக சிவபெருமான் காட்சியளித்தார். ராணியும் மகாராஜாவும் சிவபெருமானை தமது குழந்தையாக ஏற்றனர். திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார் அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார். அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் இன்றும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார்.

திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இங்குள்ள முருகப்பெருமானுக்கு சார்த்திய வேல் இன்றுமுள்ளது. விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம். அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சி முனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள். வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.

அடி முடி காண முடியாதபடி ஆக்ரோஷமாக தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறிய போது அவரிடம் விஷ்ணுவும், பிரம்மாவும் இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன் மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாள் சந்நிதியில் திருஞானசம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் பாடல்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. திருவாசகத்துள் திருவெம்பாவை என்ற பனுவல் இத்தலத்துப் பெண்கள் ஒருவரை ஒருவர் வழிபாட்டுக்கு காலையில் எழுப்பிச் சென்றதை அடிப்டையாகக் கொண்டது.

இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இக்கோவில் தலபுராணம் அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார். அண்ணாமலை வெண்பா குருநமசிவாயர் பாடியது. சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், குருநமச்சிவாயர் எழுதிய அண்ணாமலை வெண்பா மற்றும் தேவாரம், திருவாசகம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம், கந்தபுராணம், திருப்புகழ், சோனசைலமாலை, திருவருணைக்கலம்பகம், அருணாசல புராணம், அருணாசல மகாத்மிய வசனம், அருணகிரி அந்தாதி, அண்ணாமலை வெண்பா, திருவருணை அந்தாதி, அண்ணாமலை சகதம், சாரப்பிரபந்தம், கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, சோணாசல சதகம், திருவருணைக்கலிவெண்பா, திருவருட்பதிகம், அருணாசலேசுவரர் பதிகம் -1, அருணாசலேசுவரர் பதிகம் – 2, உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேசர் நவகாரிகை மாலை, உண்ணாமுலையம்மன் வருகைப்பதிகம், அருணாசல சதகம், அருணாசல அட்சரமாலை, அண்ணாமலையார் வண்ணம், திருவண்ணாமலைப் பதிகங்கள், அண்ணாமலைப் பஞ்ச ரத்னம், திருவருணைத் தனி வெண்பா, அட்சரப் பாமாலை, அருணாச்சலேசுவரர் உயிர் வருக்கம் படைத்தற் பாமாலை, அருணசல அட்சரமாலை, அருணாசலநவ மணிமாலை, அருணாசல பதிகம், அருணாசல அஷ்டகம், அருணாசல பஞ்சபத்தனம் ஆகியவை இச்சிவாலயத்தின் புகழைப் பாடுகின்ற நூல்களாகும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள் ரகசியங்கள் வெளிவரும்.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4-ம் நூற்றாண்டில் கருவறை செங்கல்லால் கட்டப்பட்டது. 5-ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது. 6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. 6, 7, 8-ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது. 9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817-ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10-ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள் தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள். அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது. 11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின.

முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான். 1063-ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது. 12-ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13-ம் நூற்றாண்டில் சிறு சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா, கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி வழங்கினார்கள். 14-ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340-ம் ஆண்டு முதல் 1374-ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார். 15-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணா மலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில்தான்.

16-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு, திருவண்ணாமலை கோவில் மிக மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றினார். அவர் மற்ற மன்னர்கள் போல ஒன்றிரண்டு திருப்பணிகள் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். 217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் கிருஷ்ணராயன் என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில. 1529-ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர், கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார்.

குறுநில மன்னர்கள் பலரும் சிவனடியார்களும் சிறு சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரங்கள் அனைத்தும் 1370-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590-ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னர்கள் மட்டுமில்லாமல் மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். 14-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது.

கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும் சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179-ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12.06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்திருக்கின்றனர். மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும், பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. இன்று நாம் திருவண்ணாமலை ஆலயத்தை பார்க்கிறோம் என்றால் அதற்கு பல மன்னர்களிடம் இருந்த அண்ணாமலையார் மீதான பக்தியே காரணமாகும். சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது. அருகிலேயே அருணகிரிநாதரின் திருவெழுகூற்றிருக்கை கல்வெட்டில் உள்ளது. விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் மேலும் பல சித்தர்கள், முனிவர்கள், வழிபட்டுள்ளனர். சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

OLYMPUS DIGITAL CAMERA

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -7

அர்ஜூனன் கிருஷ்ணரின் செயலை கண்டு மனம் பதறினான். ஓடோடி கிருஷ்ணரின் காலைப் பிடித்துக் கொண்டு நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும். நீங்கள் ஆயுதம் ஏந்தி போரிட மாட்டேன் என்று சொல்லியிருக்கின்றீர்கள். என்னை உற்சாகப்படுத்த இச்செயலை செய்கின்றீர்கள் என்று எண்ணுகிறேன். என்னுடைய வல்லமை முழுவதையும் இப்போதே யுத்தத்தில் பயன்படுத்துகிறேன் என்று உறுதி கூறுகிறேன். சினம் வேண்டாம் என வேண்டினான். கிருஷ்ணரின் ஆவேசம் தணிந்தது. அர்ஜூனன் கிருஷ்ணரிடம் நீங்கள் தேரில் ஏறிக் கொள்ளுங்கள். என் கடமையை நான் செய்கிறேன் என்னை எதிர்ப்பவர்கள் இன்று மடிந்தார்கள் என்று கூறினான். கிருஷ்ணரும் தேரில் ஏறி மீண்டும் சாரதி உத்தியோகத்தை கையில் எடுத்துக்கொண்டார்.

அர்ஜூனன் கடுமையான போரை மேற்கொண்டான். அவனின் காண்டீபம் இடியென முழங்கியது. யானைகள் சாய்ந்தன. குதிரைகள் வீழ்ந்தன. காலாட் படையினர் சரிந்தனர். ஆவேசத்தோடு அர்ஜூனன் போர் புரிந்தான். அவனை எதிர்த்து நின்ற பாட்டனாருக்கு அவன் செயல் பரம திருப்தியை உண்டு பண்ணியது. போர் வீரர்கள் அர்ஜுனனுடைய வீரத்தை பார்த்து திகைத்து நின்றனர். அன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 16,000 தேர்ப் படை வீரர்கள் அர்ஜூனனால் துடைத்து தள்ளப்பட்டனர். இந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு யானைகளும் குதிரைகளும் காலாட்படை களைந்து ஒழிக்கப்பட்டன. சூரிய அஸ்தமனமாயிற்று. மூன்றாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது. அன்று இரவெல்லாம் இருகட்சிகாரர்களும் அர்ஜுனனுடைய வீரத்தை பற்றிய பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான்காவது நாள் பீஷ்மர் தம்முடைய சேனைகளை வியாளம் என்ற வியூகத்தில் அமைத்தார். ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் பீஷ்மர் போர் புரிந்தார். அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் அவ்வனுமானின் பேராற்றலுடன் அர்ஜுனன் போரிட்டான். பாண்டவர்கள் பக்கத்தில் அர்ஜுனனுடைய செல்வன் அபிமன்யுவுடன் பூரிசிரவசு, அஸ்வத்தாமா, சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர். அர்ஜூனனுக்கு ஏற்ற மகனாக அவன் போர் புரிந்ததை பார்த்த போர் வீரர்கள் பெரு வியப்படைந்தனர். பாண்டவர்களுக்கு சேனாதிபதியாக இருந்த திருஷ்டத்யும்னன் சால்வனுடைய மகனின் தலையை இரண்டாகப் பிளந்தான். அதை முன்னிட்டு எதிரியின் படைகளில் பெரும் குழப்பம் உண்டாயிற்று. பீஷ்மரும் அர்ஜுனனும் பராக்கிரத்துடன் போர் புரிந்தார்கள். மற்றோரிடத்தில் பீமனிடம் துரியோதனனும் அவனது தம்பிகளும் வீராவேசத்துடன் சண்டையிட்டனர். துரியோதனனுடைய தம்பிகள் 8 பேரை பீமன் கொன்றான். தன் கதையால் யானைகளை வீழ்த்தினான். பீமனுடைய மைந்தனாகிய கடோத்கஜன் சென்ற இடங்களில் எல்லாம் எதிரிகளின் படைகளை துடைந்நு தள்ளினான். அவன் புரிந்த பயங்கர போர் எதிரிகளை நடுங்கச் செய்தது. துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர். பலர் மாண்டனர். சூரிய அஸ்தமனமாயிற்று. நான்காம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -6

துரியோதனன் தெளிவு பெற்ற பின்பு அவனை பத்திரமாக வேறு இடத்திற்கு அனுப்ப பீஷ்மர் முற்பட்டார். அப்போது துரியோதனன் பீஷ்மரைப் பார்த்து பாட்டனாரே இது வரைக்கும் நடந்த யுத்தத்தை பார்த்தால் இன்னும் தங்களுடைய முழு பலத்தை கையாளாமல் இருக்கின்றீர்கள் என்று எனக்கு நன்கு தெரிகிறது. பாண்டவர்கள் பக்கம் நீங்கள் அதிக பாசம் வைத்து இருக்கின்றீர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அந்த பாசத்தினால் என்னை நட்டாற்றில் கைவிட்டு விட்டீர்கள். இதுபற்றிய உங்களுடைய கருத்தை உள்ளபடி எனக்கு முழுமையாக தெரிவியுங்கள் என்றான். அதற்கு பீஷ்மர் முதலிலேயே நான் உனக்கு எச்சரிக்கை செய்து இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். என்னுடைய ஆற்றல் முழுவதையும் உனக்காக பயன்படுத்துவேன். ஆனாலும் இந்த யுத்தத்தில் நீ வெற்றியடைய மாட்டாய் என்று கூறிவிட்டு ஊக்கம் படைத்தவராக பீஷ்மர் போர்க்களத்தில் பிரவேசித்தார். பாண்டவர் படைகள் முழுவதையும் துடைத்து அழிக்க அவர் எண்ணம் கொண்டார். அவர் புரிந்த உயிர்ச்சேதம் அளப்பரியதாக இருந்தது.

அர்ஜூனனிடனும் பீமனிடமும் போரைத் தொடர்ந்தார். பீஷ்மர் கோபத்துடன் செய்த விற்போரில் அர்ஜூனனும் பீமனும் அவரை எதிர்த்து சமாளிக்க முடியாமல் திணறினார்கள். பீஷ்மரை எதிர்த்துப் போர் செய்வதை மறந்த அர்ஜூனன் பீஷ்மரை பார்த்து வியப்பில் ஆழ்ந்தான். தன்னை மறந்து நின்ற அர்ஜூனனை பார்த்து கிருஷ்ணர் சினம் கொண்டார். பாட்டனாரை எதிர்த்து நீ உன்னுடைய முழு வல்லமையை காட்டி யுத்தம் செய்யவில்லை. அர்ஜூனா என்னவாயிற்று உனக்கு? பீஷ்மரையும் துரோணரையும் வெல்வேன் என்றாயே அதை மறந்து விட்டாயா என்றார். உற்சாகம் அடைந்த அர்ஜூனன் தனது ஒரு அம்பால் பீஷ்மரின் வில்லை முறித்தான். பீஷ்மர் வேறு அம்பை எடுத்து எட்டு திசைகளிலும் அர்ஜூனன் மீது அம்புகளைச் செலுத்தி மறைத்தார். பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன. ஆனால் அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கிருஷ்ணர் உணர்ந்தார்.

அர்ஜூனனைப் பார்த்து பாட்டனார் மீது வைத்த பாசத்தின் விளைவாக ஒருவேளை இப்படி செய்கிறாயா என்ற கிருஷ்ணன் அர்ஜூனனை தேரிலிருந்து கீழே இறங்கி விட்டார். கிருஷ்ணர் கையில் சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு தானே ஆயுதம் ஏந்தி பீஷ்மரை அழிக்க தீர்மானம் பண்ணினார். பேராற்றல் படைத்த சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணர் கையில் ஏந்தினார். பாண்டவப் படைகளை அழித்துக்கொண்டிருந்த கொண்டிருந்த பீஷ்மரை நோக்கி கிருஷ்ணர் விரைந்து சென்றார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அங்கு திடீரென்று காட்சி மாறியது. கிருஷ்ணருடைய சக்கரத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது. பீஷ்மர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. கிருஷ்ணரை பார்த்து பீஷ்மர் என்னை அழித்து தள்ளிவிடுங்கள். நான் உயிரோடு இருந்தால் பாண்டவப் படைகளில் ஒரு பகுதியும் மிஞ்சாது. அதுவே என் தீர்மானம். தாங்கள் என்னை அழித்தால் அது நான் செய்த பாக்கியம் ஆகும் என்ற பீஷ்மர் கிருஷ்ணனைப் பார்த்து வணங்கி புகழ்ந்து தோத்திரம் செய்து இறைஞ்சினார்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -5

பீஷ்மரை எதிர்த்து பீமன் போரிடத் தொடங்கினான். பீமனனுடன் சாத்யகியும் அபிமன்யுவும் பீஷ்மரை சேர்ந்து தாக்கினார்கள். இதைக் கண்ட துரியோதனன் பல வீரர்களை ஒன்று திரட்டி பீஷ்மருக்கு துணையாக அனுப்பினான். பீஷ்மருக்கு துணையாக இருந்த வீரர்கள் அனைவரும் பீமனையும் அபிமன்யுவையும் வளைத்துக் கொண்டார்கள். பீமனும் அபிமன்யுவும் ஆபத்தில் இருப்பதை அறிந்த அர்ஜூனன் அவர்களுக்கு உதவுவதற்காக வில்லோடு வந்தான். திடீரென்று அர்ஜூனன் வந்ததும் பீஷ்மரை சுற்றியுள்ள அவரது படைகள் நிலை தடுமாறி போயின. அர்ஜூனன் விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான்.

சாத்யகி பீஷ்மருடைய சாரதியை வெட்டித் தள்ளினான். அதன் விளைவாக பீஷ்மர் ஊர்ந்து சென்ற ரதத்தில் பூட்டியிருந்த குதிரைகள் போர்க்களத்திலிருந்து நெடுந்தூரத்திற்கு இழுத்துச் சென்றன. ஆகையால் அர்ஜுனனுக்கு தடையை ஏற்படுத்த யாருமில்லை. அவன் தன் விருப்பப்படி கௌரவப் படைகளை அழித்துத்தள்ளினான். கௌரவ சேனைகளுக்கிடையில் குழப்பம் ஏற்பட்டது. அதற்கிடையில் சூரியனும் அஸ்தமித்தது. இரண்டாம் நாள் போர் முடிவுக்கு வந்தது. இரண்டாம் நாள் போரில் அதிகமான நஷ்டம் தன் பக்கம்தான் என்று உணர்ந்த துரியோதனன் வருத்தம் அடைந்தான்.

இரண்டாம் நாள் போராட்டத்தில் கௌரவர்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு பண்ண பீஷ்மர் உறுதி பூண்டார் அதற்கு அவர் கௌரவர்களுடைய சேனையை கருட வியூகத்தை அமைத்தார். பார்ப்பதற்கு கருடன் சிறகுகளை விரித்துக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் இருந்தது. அந்த வியூகத்தில் ஆங்காங்கு பொருத்தமான இடங்களில் பெரிய பெரிய போர் வீரர்களை இடம் பெறச்செய்தார். அந்த வியூகத்தின் தலை ஸ்தானத்தில் பீஷ்மர் தாமே இடம் வகித்தார்.

கருட வியூகத்தின் வல்லமையை சிதறடிக்கச் செய்ய பாண்டவ சேனாதிபதியான திருஷ்டத்யும்னன் தன்னுடைய படைகளை சந்திர வியூகத்தில் அமைத்தான். அதன் இரண்டு முனைகளிலும் பீமனும் அர்ஜுனனும் இடம் பெற்றார்கள். பயங்கரமாக போர் துவங்கியது சாத்யகியும் அபிமன்யுவும் ஒன்றுகூடி சகுனியின் படைகளை அழித்து தள்ளினார்கள். பீஷ்மரும் துரோணரும் ஒன்றுகூடி யுதிஷ்டிரனுடைய சேனையை எதிர்த்தார்கள். பீமனும் அவனுடைய ராட்சச மைந்தன் கடோத்கஜனும் ஒன்று சேர்ந்து துரியோதனனுடைய சேனையை எதிர்த்தார்கள். பீமனை விட கடோத்கஜன் பன்மடங்கு அதிகமாக எதிரியின் படைகளை அழித்து தள்ளினான்.

பீமன் எய்த அம்பு ஒன்று துரியோதனனை தாக்கியது. துரியோதனன் மேல் பாய்ந்த அம்புகள் அவனது கவசத்தை பிளந்து அவன் மார்பை துளைத்தது. மார்பைப் பிளந்த அம்பின் வேகமும் வலியும் தாங்க முடியாமல் துரியோதனன் தேர்த்தட்டில் மயக்கமடைந்து விழுந்தான். அபிமன்யு துரியோதனனின் தேரோட்டியை அம்புகள் எய்து கீழே தள்ளி வீழ்ச்சியடையச் செய்தான். அந்நிகழ்ச்சி கௌரவ சேனையில் குழப்பத்தை உண்டு பண்ணாமல் இருக்க துரியோதனன் அங்கிருந்து விரைவாக அப்புறப்படுத்தப்பட்டான். துரியோதனன் மூர்ச்சையடைந்த செய்தி பீஷ்மருக்கு படைவீரர்கள் தெரிவித்தனர். பீஷ்மர் உடனே துரியோதனனின் உடலைத் தனியாக தேரின் மேல் வைத்து போர்க்களத்தின் ஓரமாக கொண்டு வந்து சிகிச்சை அளித்து துரியோதனனுக்கு சுய நினைவை வரவழைத்தார்.

Related image

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள் ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள் தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள் ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. இதுவரை ஆராயப்பட்ட 119 கல்வெட்டுகளில் இருந்து திருவண்ணாமலை ஆலயம் முதலில் எப்படி தோன்றியது எப்படி வளர்ச்சி பெற்றது, யார் யாரெல்லாம் கோவிலை கட்டினார்கள் என்ற உண்மை ஆதாரப்பூர்வமாக நமக்கு கிடைத்துள்ளது.

பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் அண்ணாமலையார் ஆலயத்தின் பழமை சிறப்புகள் நமக்கு மேலும் அதிக அளவில் துல்லியமாக கிடைத்திருக்கும். சங்கநாட்டு மன்னன், காலச்சூரி மன்னன் ஆகியோரும் திருவண்ணாமலையார் அருளை கேள்விப்பட்டு நிறைய பொன்னும் பொருட்களையும் தானமாக கொடுத்துள்ளனர். திருவண்ணாமலை ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால் இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார் என்று தெரிய வருகிறது. அதனால்தான் திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

அடி முடி காண முடியாதபடி ஆக்ரோஷமாக தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும் பிரம்மாவும் இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன் மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4 ம் நூற்றாண்டில் கருவறை செங்கல்லால் கட்டப்பட்டது. 5 ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது. 6, 7, 8 ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது. 9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817 ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10 ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள் தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள். அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது.

11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின. முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான். 1063 ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது.

12 ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13-ம் நூற்றாண்டில் சிறு, சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி வழங்கியுள்ளார்கள்.

14 ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340 ம் ஆண்டு முதல் 1374 ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார்.

15 ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணாமலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில் தான்.

16 ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு திருவண்ணாமலை கோவில் மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றி அமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர். அவர் மற்ற மன்னர்கள் போல ஏதோ ஒன்றிரண்டு திருப்பணிகள் மட்டும் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். அந்த திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும் திருவண்ணாமலையில் கிருஷ்ண தேவராயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. 217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம் சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள் கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் கிருஷ்ணராயன் என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.

1529 ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர் கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார். இதற்கிடையே குறுநில மன்னர்களும் சிவனடியார்களும் சிறு சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பே கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரங்கள் அனைத்தும் 1370 ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590 ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னர்கள் மட்டுமில்லாமல் மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள் போட்டி போட்டு செய்த திருப்பணிகள்தான் திருவண்ணாமலை தலத்தை நோக்கி மக்கள் வர உதவி செய்தது. 14 ம் நூற்றாண்டில் இருந்து 17 ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது. என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது. கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் மகத்தானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும் சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179 ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12-06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த புண்ணியமும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கே சாரும்.

மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும் பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்தது தான். திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார் அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார். அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார். ஒரு மகன் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அண்ணாமலையார் செய்து வருகிறார்.

No photo description available.
Image result for திருவண்ணாமலை கல்வெட்டுகள்

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -4

முதல் நாள் நடந்த யுத்தத்தில் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை கொண்டு இரண்டாம் நாள் பாண்டவர்கள் தங்கள் படைகளை அதற்கு ஏற்றார் போல் திருத்தி அமைத்தார்கள். இரண்டாம் நாள் யுத்தம் துவங்கியது. திருஷ்டத்யும்னன் தலைமை சேனாதிபதியாக இருந்து கண்ணனுடைய ஆலோசனையின்படி தங்களுடைய படைகளை கிரௌஞ்ச வியூகத்தில் அமைத்தான். வியூகம் வடிவத்தில் ஒரு பறவை போன்று தென்பட்டது. கிரௌஞ்ச வியூகத்திற்கு துருபத மன்னன் தலையாக நின்றான். யுதிஷ்டிரர் பின் புறத்தில் நின்றார். திருஷ்டத்துய்மனும் பீமனும் சிறகுகளாக இருந்தனர். பண்டை காலங்களில் வியூகம் அமைப்பது ஓர் அலாதியான கலையாக இருந்தது. கிரௌஞ்ச வியூகத்துக்கு பொருத்தமான எதிர்ப்பு வியூகத்தை கௌரவர்கள் அமைத்துக் கொண்டார்கள்.

யுத்தத்தில் பீஷ்மர் மிகச்சுலபமாக பாண்டவர்களின் கிரௌஞ்ச வியூகத்தில் பிளவை உண்டு பண்ணி உள்ளே நுழைந்து பாண்டவர்களை பெருவாரியாக அழித்து தள்ளினார். கிருஷ்ணன் தேரை ஓட்ட அர்ஜுனன் தன் பாட்டனார் பீஷ்மர் மீது பாய்ந்து தாக்கினான். பீஷ்மருக்கும் அர்ஜூனனுக்கும் இடையில் நிகழ்ந்த யுத்தம் பயங்கரமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் நெடுநேரம் நிகழ்ந்தது.

மற்றோரிடத்தில் துரோணரும் திருஷ்டத்யும்னனும் பயங்கரமாக போர் புரிந்தனர். மரணத்தின் இரண்டாவது கோலைப் போன்றதும் இந்திரனின் வஜ்ரத்தைப் போன்றதுமான ஒரு பயங்கரக் கணையை எடுத்து திருஷ்டத்யுன்மனின் அழிவுக்காக அவன் மீது குறி பார்த்தார் துரோணர். குறி பார்ப்பதைக் கண்ட போராளிகளுக்கு மத்தியில் ஓ என்னும் ஓலங்கள் எழுந்தன. வீரனான திருஷ்டத்யும்னன் அந்தப் போர்க்களத்தில் மலைபோல அசைவற்று நின்றான். மரணம் வருவதைப் போலத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்ததும் பயங்கரமான சுடர்விடும் அந்தக் கணையை திருஷ்டத்யும்னன் வெட்டினான். இச்சாதனையைச் செய்த திருஷ்டத்யும்னனைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் அப்போது மகிழ்ச்சியால் பேரொலியுடன் ஆரவாரம் செய்தனர். திருஷ்டத்யும்னன் சக்தி வாய்ந்த ஈட்டி ஒன்றை துரோணரின் மீது ஏவினான். சிரித்து நின்ற துரோணர் தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த ஈட்டியை மூன்று துண்டுகளாகத் துண்டித்து சிஷ்யனுக்கு மேம்பட்டவர் என்பதை நிரூபித்து திருஷ்டத்யும்னனைத் தனது கணைகளால் மறைத்து அம்புகளால் துளைத்து விட்டார். இதனால் படுகாயமடைந்த திருஷ்டத்துய்மனை பீமன் போர்க்களத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்ல முற்பட்டான்.

பீமன் திருஷ்டத்துய்மனுக்கு உதவி செய்ய வந்ததைக் கண்ட கலிங்க வேந்தன் எதிர்ப்பக்கத்தில் பீமனை எதிர்ப்பதற்காக வந்தான். கலிங்க வேந்தனின் படையில் யானைகள் அதிகமாக காணப்பட்டது. மனிதப் படைகளை அழிப்பதை விட யானைப் படைகளை அழிப்பதில் பீமனுக்கு அதிக மகிழ்ச்சி. பீமன் கலிங்க வேந்தனையும் அவன் யானைப் படைகளையும் அழித்துத் துவம்சம் செய்ய ஆரம்பித்தான். கலிங்க வேந்தன் பின் வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்று எண்ணி தன்னுடைய யானைகளுடன் பிறபடைகளிலும் பெரும் பகுதி அழிந்ததால் தோல்வியடைந்து விட்டேன் என்று கூறி ஓடினான். கலிங்கன் ஓடியதை பார்த்த பீஷ்மர் கலிங்க படைக்கு உதவி புரிய அங்கு வந்தார்.