மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -7

பீஷ்மர் பேசினார். உங்களை நான் தப்பான வழியில் நடத்தலாகாது. நீங்கள் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே இருவரையில் கண்டிருக்கின்றீர்கள். அதுவும் பகடை விளையாட்டில். பாண்டவர்களை வஞ்சித்து பெற்றது மட்டுமே உங்களுடைய வெற்றி. அது ஒன்றே தவிர வேறு எந்த போராட்டத்திலும் நீங்கள் பாண்டவர்களை தோற்கடித்தது கிடையாது. வனத்திலே கந்தர்வர்கள் உங்கள் அனைவரையும் கைதிகளாக பிடித்து கூட்டிக்கொண்டு போனபொழுது வீராதி வீரனாகிய அர்ஜுனன் ஒருவன் தான் உங்கள் உயிரைக் காப்பாற்றினான். அவ்வேளையில் கர்ணன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓட்டம் பிடித்து தப்பித்துக் கொண்டான். அது தான் உங்களுடைய வீரியம். சில நாட்களுக்கு முன்பு விராட நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற பொழுது 6 அதிரர்களாகிய நாம் அனைவரையும் அர்ஜுனன் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு தோற்கடித்தான். அப்படி இருந்தும் உங்களுடைய வீரத்தைப் பற்றி நீங்களே பெருமை பேசிக்கொள்கிறீர்கள். வெற்றி உங்களுடையது என்ற இறுமாப்பில் இருக்கின்றீர்கள் என்று பீஷ்மர் பேசினார்.

கர்ணன் பேசினான். தோல்வி என்பது வரப்போகும் வெற்றிக்கான வழி என்பதை இந்த முதியவர் அறிந்து கொள்ளவில்லை வெவ்வேறு விதமான போர்த் திட்டங்களை தோல்விகள் என்று இவர் பொருள் சேராத வண்ணம் வியாக்கியானம் பண்ணுகிறார். தலைவிதி என்னும் கொள்கையை இவர் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் இவரோடு சேர்ந்திருந்து நான் போர் புரிய போவதில்லை. வீராதி வீரன் என்று இவர் கூறுகின்ற அர்ஜுனனால் இவர் தோல்வியடையும் வரை நான் ஆயுதம் தொடமாட்டேன். என்றைக்கு நான் ஆயுதத்தை எடுக்கிறானோ அன்றைக்கு அர்ஜுனன் அழிந்து போவது உறுதி. முதுமையால் ஆட்கொள்ளப்பட்டு வெற்றியில் நம்பிக்கை இழந்து இருக்கும் இந்த முதியவரின் கருத்து பிரகாரம் அர்ஜுனனை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று கூறிவிட்டு பீஷ்மரை எதிர்க்கும் பாங்கில் கர்ணன் சபையை விட்டு வெளியேறினான்.

திருதராஷ்டிரன் பேசினார். நம் குடும்பத் தலைவராகிய பீஷ்மர் கூறுவது முற்றிலும் மெய். போர் வேண்டாம் சமாதானத்தில் ஒன்றுபடுவோம் என்று பெரியவர்கள் அனைவரும் ஏகோபித்து கூறுகின்றனர். அதுதான் சரியான வழி என்று நானும் நம்புகின்றேன். ஆனால் முரட்டு பிடிவாதக்காரர்களாகிய இளைஞர்கள் தம் போக்கிலேயே சென்று கொண்டிருக்கின்றார்கள். நம்முடைய அறிவுரையை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை என்று திருதராஷ்டிரர் கூறினார்.

துரியோதனன் பேசினான். தந்தையே தயவு செய்து நான் சொல்வதை சிறிது கேளுங்கள். தாங்கள் நினைத்தபடி நான் அவசரக்காரன் இல்லை. இந்த பாண்டவர்களிடத்தில் சிறிதளவாவது க்ஷத்திரிய வீரீயம் இருந்திருந்தால் பகடை விளையாட்டில் நாங்கள் அவர்களை தோற்கடித்து அவமானப்படுத்திய பொழுது எங்கள் மீது அவர்கள் கோபப்பட்டு சீறி எழிந்து சண்டை போட்டிருக்க இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -6

சஞ்சயன் கூறியவற்றை கேட்ட திருதராஷ்டிரனின் மனசாட்சி அவனை துன்புறுத்தியது. இரவு முழுவதும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. விதுரனை வரவழைத்து தனக்கு அமைதி இல்லை என்றும் தனக்கு அமைதி வேண்டும் என்றும் ஏன் இப்படி நடக்கிறது உன்னுடைய புத்திமதி என்ன என்று கேட்டான். அறிஞனாகிய விதுரர் அன்று இரவு முழுவதும் திருதராஷ்டிரனிடம் நீதி நெறிகளை விளக்கினார். தர்மநெறி தவறுபவர்களுக்கு அமைதி கிடைக்காது. கபடமாக பாண்டவர்கள் கொள்ளையடிக்கப்பட்டார்கள். அப்படி இருந்தும் அவர்கள் சௌபாக்கியமாகவே வாழ்ந்து வருகின்றார்கள். தர்மத்திலிருந்து அவர்கள் பிசகாது இருந்ததே அதற்கு காரணமாக இருந்தது. ஆனால் கௌரவர்களுக்கு சொத்து ஏராளமாக இருந்தும் மனஅமைதி இல்லை. அதற்கு அவர்களது அக்கிரமமே காரணமாய் இருக்கிறது என்று இரவு முழுவதும் திருதராஷ்டிரனுக்கு ஏராளமாக தர்மத்தை போதித்து விதுரர் விடைபெற்றார்.

விதுரர் கூறிய அனைத்தையும் கேட்ட திருதராஷ்டிரன் கவலையில் ஆழ்ந்தான். மைந்தான் மகாபாவியாகி விட்டான். தன்னுடைய போக்கை நல்வழிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திருதராஷ்டிரன் இடையிடையே உணர்ந்தான். ஆனால் அவன் உள்ளத்தில் ஊறிக்கிடந்த சிற்றியல்பு அதற்கு இடம் தரவில்லை. மற்றொரு பக்கம் புத்திர வாஞ்சையும் பொல்லாங்கிலேயே அவனை எடுத்துச் சென்றது.

காலையில் சஞ்சயன் கௌரவர்களுடைய சபா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான். பாண்டவர்கள் எப்படி சமாதானம் பண்ணிக் கொள்வதற்கு ஆயத்தமாய் இருக்கின்றார்களோ அதே போல் அவர்கள் போர் செய்வதற்கும் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று சஞ்சயன் கூறியது கௌரவர்களை விவாதத்தில் இழுத்துச் சென்றது. அப்போது அவர்களுக்கு இடையில் கருத்து வேற்றுமை வளர்ந்தது.

பீஷ்மர் திருதராஷ்டிரனிடம் கூறினார். அர்ஜுனனும் கிருஷ்ணரும் பழங்காலத்து நரன் நாராயணாகிய ரிஷிகள். அவர்கள் இப்பொழுது மனித ரூபத்தில் தோன்றி வந்திருக்கின்றனர். மண்ணுலகத்தில் உள்ள அக்கிரமங்களை ஒழிப்பதற்கும் நேர்மையை நிலைநாட்டுவதற்கும் அவர்கள் வந்திருக்கிறார்கள். போர் புரிய அவர்கள் தீர்மானித்தால் அவருடைய எதிரிகள் அனைவரும் துடைத்துத் தள்ளப்படுவார்கள். ஆகையினால் அவர்களோடு நாம் சமாதானம் பண்ணிக் கொள்வது சரியானதாக இருக்கும் என்று பீஷ்மர் கூறினார். அதைக் கேட்ட கர்ணன் இந்த முதியவர் மிகவும் படுபாவி. இவருடைய உடல் நம்மோடும் அவருடைய உள்ளம் நம்முடைய எதிரிகளிடமும் இருக்கிறது. நம்முடைய எதிரிகளை போற்றுவதும் நம்மை தூற்றுவதும் இவருடைய தொழிலாகும் என்றான் கர்ணன்.

யார் சாத்தான்

மாணவன்- உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா?

ஆசிரியர்- ஆமாம்.

மாணவன்- அப்படியெனில் சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?

ஆசிரியர்- உன்னிடம் சில கேள்விகள் கேட்கின்றேன் பதில் சொல். குளிர்நிலை என்று ஏதேனும் இருக்கிறதா?

மாணவன்- ஆமாம் இருக்கிறது.

ஆசிரியர்- குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம். சரி தானே

மாணவன்- ஆமாம்

ஆசிரியர்- இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

மாணவன்- ஆம் இருக்கிறது.

ஆசிரியர்- மீண்டும் தவறு. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் குளிரும் இருளும் எங்கும் உருவாகுவதில்லை. வெப்பம் இல்லாத இடத்தை குளிர் என்றும் ஒளி இல்லாத இடத்தை இருள் என்றும் அழைக்கின்றோம். அதே போல் சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் நம்பிக்கையின் பற்றாக்குறை. கடவுள் மீது எங்கு நம்பிக்கை இல்லையோ அன்பு இல்லையோ அந்த வெற்றிடமே சாத்தான் என்று அழைக்கப்படுகிறது.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -5

சஞ்சயன் சில நாட்களுக்குப் பிறகு கௌரவர்களுடைய தூதுவனாக உபப்பிளவிய நகரத்திற்கு வந்து சேர்ந்தான் தன்னுடைய வாழ்த்துக்களை ஏராளமாக எடுத்து வழங்கினான். ஆனால் இந்திரப்பிரஸ்தத்தை பாண்டவர்களுக்கு திருப்பித் தருவதை பற்றிய பேச்சு ஏதும் பேசவில்லை. துரியோதனன் ஒரு முரடன் கையகல நிலத்தைக்கூட அவன் திருப்பி தரமாட்டான். இதை முன்னிட்டு குருவம்சத்தினரான பாண்டவர்களும் கௌரவர்களும் பரஸ்பரம் போர் புரிந்து தங்களைத் தாங்களே பாழ்படுத்திக் கொள்ளல் ஆகாது. தவவாழ்வு மேலானது என்று தர்ம சாஸ்திரம் பாராட்டுகின்றது. மற்றும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் யுத்தம் சரியானது அல்ல என்று அதே தர்மசாஸ்திரம் எச்சரிக்கை பண்ணுகின்றது. இந்த விஷயத்தை யுதிஷ்டிரன் யோசித்துப்பார்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

யுதிஷ்டிரனுக்கு யுத்தத்தில் விருப்பம் இல்லை. ஆனால் தர்மயுத்தம் ஒன்று அவன் மீது திணிக்கப்படும் போது அந்த யுத்தத்திலிருந்து அவன் பின் வாங்க மாட்டான். போராட்டத்திற்கும் சமாதானத்திற்கும் அவன் முற்றிலும் தயாராய் இருந்தான். சமாதானம் என்பது கௌரவமான முறையில் வந்து அமையவேண்டும். பாண்டவர்கள் தங்களுக்குத்தானே சம்பாதித்துக் கொண்ட ராஜ்யம் அவர்களுக்கு உரியதாக வேண்டும். அதற்கெல்லாம் மேலாக கிருஷ்ணனுடைய தீர்மானப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று யுதிஷ்டிரன் ஆயத்தமாய் இருந்தான்.

சகோதரர்களாகிய கௌரவர்கள் பாண்டவர்கள் இரு தரப்பினரின் நலன் மேல் தனக்கு அக்கரை இருப்பதாக கிருஷ்ணன் தெரிவித்தான். மேலும் தானே அஸ்தினாபுரம் சென்று இரு கட்சிக்காரர்களுக்கும் நலன் ஏற்படும் வகையில் சமாதானம் செய்து வைக்க முயல்வதாகவும் தெரிவித்தான். தன்னுடைய முயற்சி புறக்கணிக்கப்படுமானால் அதனால் வரும் சேதங்கள் அளவிடமுடியாத அளவில் இருக்கும் என்று சஞ்சயனிடம் கூறி அவன் திரும்பி செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டான்.

சஞ்சயின் அஸ்தினாபுரம் திரும்பிச்சென்று திருதராஷ்டிரனை தனியாக முதலில் சந்தித்தான். நிலைமையை உள்ளபடி அவன் தெரிவித்தான். பாண்டு மன்னன் உயிரோடு இருந்திருந்தால் அவர் சொற்படி யுதிஷ்டிரன் நடந்திருப்பான். அதன்படியே தனது பெரியப்பாவாகிய திருதராஷ்டிரர் எடுக்கும் முடிவுக்கு அடிபணிந்து நடந்து கொண்டான். யுதிஷ்டிரனுடைய இந்த அடக்கத்தை முறைதவறி கையாண்டு கெடுத்துவிட்டார்கள். அப்படி செய்த தீமையையும் யுதிஷ்டிரன் சமாளித்துக் கொண்டான். துரியோதனனுடைய துஷ்ட தனமான போக்குக்கு இணங்கி வரும்படி தன் தந்தையை வற்புறுத்துகின்றான். தந்தையின் சொற்படி நடக்க துரியோதனன் எந்த விதத்திலும் தயாராய் இல்லை. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடுநிலை வகிக்கவில்லை தன் மகன் சார்பிலேயே அவன் நடந்து கொண்டான். இவ்விஷயத்தை உள்ளபடி திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் தெரிவித்தான். மேலும் மற்றவர்கள் அனைவருக்கும் அடுத்தநாள் சபை நடுவே வைத்து தான் பாண்டவர்களிடம் சென்றதன் விளைவே தெரிவிப்பதாக சஞ்சையன் எடுத்துச் சொல்லி விட்டு அங்கிருந்து விடை பெற்றான்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -4

பாண்டவர்களுக்கு உதவ வந்த சல்லியனை துரியோதனன் கட்டுப்படுத்தி விட்டான். துரியோதனனிடம் அகப்பட்டுக்கொண்ட சல்லியன் ஸ்தப்பித்துப் போய் நின்றான். சல்லியன் துரியோதனனுக்கு கொடுத்த வாக்கிலிருந்து இனி பின்வாங்குவது பொருந்தாது. துரியோதனைப் பார்த்து சல்லியன் நான் கொடுத்த உறுதிமொழிப்படி உனக்காக நான் போர் புரிகின்றேன். ஆனால் அதற்கு எனக்கு சிறிது அவகாசம் கொடு. என்னுடைய சகோதரியின் செல்வந்தர்கள் எத்தனையோ துயரங்களுக்கு பின் அவைகளை சமாளித்துக் கொண்டு வெளியே வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுவது என் முதல் கடமை ஆகும். அந்த கடமையை நிறைவேற்றிய பிறகு நான் உனக்கு உரியவன் ஆவேன் என்று கூறினான். துரியோதனனும் சம்மதித்தான்.

சல்லியன் உபப்பிளவிய நகருக்கு சென்று பாண்டவர்களை சந்தித்தான். அந்த சந்திப்பு நெகிழ்ச்சி உண்டு பண்ணக் கூடியதாக இருந்தது. பாண்டவர்கள் 13 வருட காலம் நடந்த நன்மைகள் தீமைகள் அனைத்தையும் சல்லியனிடம் எடுத்து விளக்கி தற்போது அந்த கடினமான காலத்திருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதையும் விளக்கினார்கள். அனைத்தையும் உள்ளன்போடு கேட்ட சல்லியன் அவர்களுக்கு ஆறுதல் அளித்தான். சல்லியன் நடந்து கொண்டது பாண்டவர்களுக்கு மன அமைதியை உண்டு பண்ணியது. இனி வரப்போகும் யுத்தத்தில் தங்களுக்கு மாமாவும் அவருடைய சேனேயும் போரில் உதவி செய்வார்கள் என்ற மனக் கோட்டையில் பாண்டவர்கள் இருந்தார்கள். ஆனால் சல்லியன் தனக்கு வழியில் நிகழ்ந்த இக்கட்டையும் தர்ம சங்கடத்தையும் எடுத்து விளக்கினான். பாண்டவர்கள் பெரிதும் திகைத்துப் போயினர். இடி விழுந்தது போல் இருந்தது அவர்களுக்கு இந்த செய்தி. எதிர்பாராத வண்ணம் துரியோதனனுக்கும் சல்லியனுக்கும் நிகழ்ந்த யுத்த ஒப்பந்தத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய சங்கடத்தில் இருந்தார்கள். இதைக் குறித்து யுதிஷ்டிரன் ஆழ்ந்து எண்ணிப் பார்த்தான். அதன் பிறகு தன்னுடைய மாமாவிடம் தன்னுடைய வேண்டுதலை தெரிவித்தான். எப்பொழுதாவது கர்ணனுக்கு சல்லியன் சாரதியாக அமைய வேண்டிய நெருக்கடி யுத்தத்தில் வந்து அமைந்தால் அப்போது அர்ஜூனனுடைய பராக்கிரமத்தை கர்ணனிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த உபகாரம் அவர்கள் அடைந்துள்ள நஷ்டத்துக்கு ஈடு செய்யும். சல்லியனும் இதற்கு சம்மதம் தெரிவித்தான்.

பாண்டவர்களுடைய பிரதிநிதியாக துருபத மன்னனுடைய புரோகிதன் ஒருவன் அஸ்தினாபுரத்திற்கு வந்து பாண்டவர்களுக்கு நியாயமாக உள்ள ராஜ்யத்தை திருப்பி கொடுத்து விடும்படி முறையாக கேட்டான். பாண்டவர்களுக்கு உரிய அஸ்தினாபுரத்து ராஜ்யத்தை துரியோதனன் முறைதவறி கைப்பற்றிக் கொண்டான். அதன்பிறகு அவர்கள் சொந்த முயற்சியால் தேடிக் கொண்ட இந்திரப்பிரஸ்தம் ராஜ்யத்தையும் அக்கிரமமான முறையில் துரியோதனன் அபகரித்துக் கொண்டான். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் உள்ள ஒப்பந்தப்படி துரியோதனன் கொடுத்த வாக்குப்படியே பாண்டவர்களுக்கு உரிய ராஜ்யத்தை திருப்பி ஒப்படைப்பதே சரியான முறையாகும். அப்படித் தராவிட்டால் வரும் யுத்தம் பெரும் கேட்டை விளைவிக்கும் என்று தூதுவன் விளக்கினான். இதனை பீஷ்மர் முற்றிலும் ஆமோதித்தார். ஆனால் கர்ணன் அதனை முற்றிலும் எதிர்த்தான். திருதராஷ்டிர மன்னனோ பாண்டவர்களின் பிரதிநிதியை திரும்பிப் போகும்படி வேண்டிக்கொண்டான். பாண்டவர்களுக்கு தங்ளுடைய தரப்பை எடுத்து விளக்குவதற்கு சஞ்சயனை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

Image result for சல்லியன் துரியோதனன்

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -3

கிருஷ்ணருடைய பாதுகாப்புக்கு நிகராக வேறு ஏதும் இல்லை என்பது அர்ஜூனனுடைய கொள்கையாக இருந்தது. அர்ஜுனன் கிருஷ்ணனுடைய அருளை நம்பி இருந்தான். துரியோதனன் கிருஷ்ணனுடைய சேனைப் படைகளையும் ஆயுதங்களையும் நம்பி இருந்தான். அடுத்தபடியாக பலராமனுடைய உதவியை துரியோதனன் நாடிச் சென்றான். பலராமன் துரியோதனனிடம் விராட நகரிலேயே தீவிரமாக அனைத்தையும் எடுத்து விளக்கினேன். ஆனால் கிருஷ்ணனோ முற்றிலும் பாண்டவர்களுக்கு சகாயம் பண்ணுவதில் தீவிரமாக இருக்கின்றான். என் சகோதரனை எதிர்த்து போர் புரியும் எண்ணம் எனக்கு இல்லை. ஆகையால் இரண்டு கட்சிகளுக்கும் நான் நடுநிலை வகிப்பவனாக இருந்து கொள்கிறேன் என்றார். துவாரகைக்கு வந்து முற்றிலும் பயன்பட்டது என்று துரியோதனன் உறுதியாக நம்பினான்.

நகுலனுக்கும் சகாதேவனுக்கும் தாயாக இருந்தவள் காலம் சென்ற மாத்ரி. அவளுடைய சகோதரன் சல்லியன் மத்ர தேசத்தை ஆண்டு வந்தான். வரப்போகும் யுத்தத்தில் தங்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று சல்லியனை பாண்டவர்கள் வேண்டிக் கொண்டனர். தன்னுடைய சகோதரியின் செல்வர்களுக்கு தக்க முறையில் உதவி தர வேண்டும் என்று சல்லியன் தீர்மானித்தான். ஒரு பெரிய சேனையை திரட்டிக்கொண்டு அவன் பாண்டவர்கள் முகாம் அமைத்து இருந்த உபப்பிளவிய நகரை நோக்கி விரைந்து போய்க்கொண்டிருந்தான். சல்லியனின் தீர்மானத்தையும் போக்கையும் அறிந்த துரியோதனன் சூழ்ச்சி ஒன்றை கையாண்டான். சல்லியன் பெரும் படையுடன் வரும் பாதையில் தங்கப் போகும் இடங்கள் அனைத்திலும் அவர்கள் வருவதற்கு முன்பே துரியோதனன் அருமையான கொட்டகைகளை அமைத்து வைத்திருந்தான். சல்லியனுக்கு வழிநெடுக உபசாரங்களும் உணவும் வழங்கப்பட்டது. இத்தகைய அரிய பெரிய ஏற்பாடுகள் வசதிகள் எல்லாம் தன்னுடைய சகோதரியின் செல்வன் யுதிஷ்டிரன் செய்து வைத்திருந்தான் என்று சல்லியன் எண்ணினான்.

பணிவிடை செய்தவர்களிடம் எனக்கு பணிவிடை செய்வதில் எத்தனை சிரமம் எடுத்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் தக்க முறையில் சன்மானம் செய்தாக வேண்டும். இதற்கான அனுமதியை உங்களுடைய அரசரிடம் தயவுசெய்து பெற்று வாருங்கள் என்றான். வேலையாட்கள் ஓடிச்சென்று துரியோதனனிடம் எடுத்துரைத்தார்கள். இத்தகைய சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்று துரியோதனன் ஏற்கனவே திட்டம் போட்டிருந்தான். அவனுடைய திட்டப்படியே நடந்தமையால் மகிழ்ந்த துரியோதனன் சல்லியனை அணுகி என்னுடைய உபசாரத்தை நீங்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டதே முன்னிட்டு நான் பெருமகிழ்வு அடைகிறேன் உங்களால் நான் கண்ணியப்படுத்தப்பட்டவன் ஆகின்றேன்என்றான். இத்தகைய அரிய பெரிய உபசாரங்கள் எல்லாம் எதிர்க்கட்சி மன்னனிடம் இருந்து வந்தது என்று அவன் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு கைமாறாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்து சொல் துரியோதனனிடம் சல்லியன் கேட்டான். துரியோதனனுடைய சூழ்ச்சி முற்றிலும் வெற்றிபெற்றது. அக்கணமே நீங்களும் உங்களுடைய பெரிய சேனையும் இனி வரப்போகும் யுத்தத்தில் தயவு பண்ணி என்னுடன் சேர்ந்து யுத்தம் செய்ய வேண்டும் இதுவே தங்களிடம் வேண்டுகின்ற சன்மானம் ஆகும் என்று துரியோதனன் சல்லியனிடம் கூறினான்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -2

பாண்டவர்கள் போருக்கு ஆயுத்தமான பணிகளை செய்ய ஆரம்பித்தனர். துரியோதனன் எதிர்பார்த்ததை விட அதிவிரைவில் துவங்கும் நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. துரியோதனனும் போருக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். தன்னுடைய நண்பர்கள் அனைவரின் உதவியை நாடி தூதுவர்களை அனுப்பி வைத்தான். அரசர்களும் அவர்களுடைய சேனைகளும் மிகப் பரபரப்புடன் ஆங்காங்கு போருக்கு ஆயத்தமாயினர்.

கிருஷ்ணனுடைய உதவியை நாடி துரியோதனன் தானே துவாரகைக்கு அவசரமாக புறப்பட்டு சென்றான். அதேபோல் கிருஷ்ணனுடைய உதவியை நாடி அர்ஜூனனும் அங்கு விரைந்து சென்றான். அப்போது கிருஷ்ணன் உறங்கி கொண்டிருந்தார். கிருஷ்ணனுடைய கட்டிலின் தலைமாட்டில் இருந்த ஒற்றை நாற்காலியின் மீது துரியோதனன் விரைந்து சென்று அமர்ந்து கொண்டான். அவனுக்கு பின் சென்ற அர்ஜுனன் கிருஷ்ணருடைய கால்மாட்டில் கைகட்டி நின்று கொண்டிருந்தான். கிருஷ்ணன் கண் விழித்து பார்த்ததும் கால்மாட்டில் நின்று கொண்டிருந்த அர்ஜுனன் தென்பட்டான். இருவருக்குமிடையில் நலத்தைப் பற்றி விசாரணை நிகழ்ந்தது. பின்பு கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தம்மை நாடிவந்ததன் நோக்கம் என்ன என்று கேட்டார். அர்ஜுனன் வந்த விஷயத்தை உள்ளபடி எடுத்து விளக்கினான். அர்ஜுனனுக்கு உதவி செய்ய கிருஷ்ணன் சம்மதம் தெரிவித்தார்.

அதன் பிறகு கிருஷ்ணரிடம் தலை மாட்டில் துரியோதனன் அமர்ந்து இருப்பதை அர்ஜுனன் எடுத்துரைத்தான். திரும்பிப் பார்த்து அவனுடன் சிறிது நேரம் கிருஷ்ணர் உரையாடினார். கிருஷ்ணனுடைய உதவியை நாடி வந்திருப்பதாக துரியோதனன் சொன்னான். தான் முதலில் வந்ததாகவும் ஆகையால் தர்மரீதியாக தனக்கே கிருஷ்ணன் உதவி செய்தாக வேண்டுமென்று அவன் வேண்டிக் கொண்டான். ஆனால் கிருஷ்ணனோ துரியோதனா என்னை நீ முதலில் நாடி வந்துள்ளாய். ஆகையால் என்னுடைய உதவியைப் பெறும் உரிமை உனக்கு உண்டு. ஆனால் நான் அர்ஜுனனை முதலில் பார்த்தேன். ஆகையால் அவனுக்கும் என் உதவி கிடைக்கும். உங்கள் இருவருக்கும் நான் உதவி செய்கின்றேன். என்னிடத்தில் இருக்கும் அனைத்தையும் இரண்டு பாகங்களாகப் பிரிக்கிறேன். ஆயுதம் இல்லாமல் தனியாக இருக்கும் நான் ஒரு பாகம். என்னுடைய சேனையும் சேனைத் தலைவர்களும் ஆயுத தளவாடங்களும் மற்றொரு பாகமாகும். இவ்விரண்டு பாகங்களில் உனக்கு ஒன்றும் அர்ஜுனனுக்கு ஒன்றும் கிடைக்கும். உங்கள் இருவரில் அர்ஜுனன் இளையவனாக இருப்பதால் அவனே முதலில் எந்த பாகம் வேண்டும் என்று தீர்மானிக்கட்டும். அடுத்த பாகத்தை நீ எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

பாகம் பிரித்து வைத்தது குறித்து துரியோதனனுக்கு சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் சேனைகளையும் ஆயுதங்களையும் அர்ஜூனன் முதலில் கேட்டு விடுவானே என்று அரை மனதுடன் அதற்கு சம்மதம் கொடுத்தான். அர்ஜூனன் சற்று சிந்தித்துப் பார்த்தான். போர்க்களத்தில் தனக்கு உதவி பண்ண நிராயுதபாணியாக இருக்கும் கிருஷ்ணனை தனக்கு வேண்டுமென்று அவன் வேண்டினான். அர்ஜூனன் கூறியதும் அதை கேட்ட துரியோதனன் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தான். ஆயுதங்களும் படைகளும் போருக்கு முற்றிலும் தேவையாக இருக்கும் என்பது துரியோதனனுடைய கருத்தாக இருந்தது.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -1

பாண்டவர்களின் எதிர்கால வாழ்வைப் பற்றி ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் அதற்காகவே அழைக்கப்பட்டிருந்த அரசர்கள் எல்லோரும் விராட நகர சபா மண்டபத்தில் கூடினார்கள். இது குறித்து கிருஷ்ணன் சபை நடுவே எழுந்து நின்று பேச ஆரம்பித்தான். பொருத்தமான பிரதிநிதி ஒருவன் அஸ்தினாபுரத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று அவன் ஆலோசனை சொன்னார். செல்பவன் யுதிஷ்டிரனுடைய நிலைமையை உள்ளபடி எடுத்து விளக்கி அவனுக்கு சேரக்கூடிய ராஜ்யத்தை அவனுக்கு கண்ணியமாக திருப்பித் தரும்படி கேட்டுக் கொள்ளவேண்டும். அடுத்தபடியாக கிருஷ்ணனுக்கு மூத்தவன் பலராமன் பேசினான். சகுனியுடன் சூதாடியதன் வாயிலாக யுதிஷ்டிரன் தவறு செய்து விட்டான். சூதாட்டத்தில் இழந்ததை திருப்பி கேட்பது முறை இல்லை. எனினும் பிரதிநிதியாக செல்பவன் ஏதேனும் ஒருவிதத்தில் பாண்டவர்களுக்கு கௌரவர்கள் சகாயம் பண்ண வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம் என்றான்.

பலராமனை தொடர்ந்து யாதவ வீரனான சத்யகி பேசினான். பலராமனுடைய கருத்தை அவன் முற்றிலும் எதிர்த்துப் பேசினான். யுதிஷ்டிரன் விரும்பி சூதாட செல்லவில்லை. அவனுடைய பெரியப்பா திருதராஷ்டிரன் பலவந்தமாக சூதாட்டத்திற்கு அழைத்துள்ளார். சகுனியோடு சூதாடி ஆகவேண்டும் என்று அவனுடைய கௌரவ சகோதரர்களும் வற்புறுத்தினார்கள். கொள்ளையடிக்கும் பாங்கில் யுதிஷ்டிரனுடைய ராஜ்யத்தையும் சொத்துக்களையும் அவர்கள் அபகரித்துக் கொண்டனர். பாண்டவர்களுக்கு உரிய ராஜ்யத்தை கண்ணியமான முறையில் அவர்கள் திருப்பித் தந்தாக வேண்டும். அப்படித் தராவிட்டால் தர்ம யுத்தத்தின் வாயிலாக திருப்பி எடுத்துக் கொள்ளப்படும். கெஞ்சிக் கேட்பதற்கு இங்கு இடம் இல்லை என்று சத்யகி கூறினான்.

சத்யகியின் பேச்சை துருபத மன்னன் முற்றிலும் ஆமோதித்தான். தன்னுடைய ராஜ்யத்திலிருந்து தகுதிவாய்ந்த துதூவன் ஒருவனே அஸ்தினாபுரத்திற்கு அனுப்ப வேண்டும். ராஜ்யத்தையும் அது சம்பந்தமான விசயங்கள் அனைத்தையும் அவன் அறிந்தவனாக இருப்பான். இது ஒருபுறமிருக்க யுத்தம் வந்தால் தங்களுக்கு உதவி பண்ணக் கூடியவர்களை அதிவிரைவில் அணுகி அவர்களை தங்கள் பக்கம் சேர்த்துக்கொள்ள வேண்டும். முதலில் போய் கேட்பவர்களுக்கு சம்மதம் கொடுப்பது அரசர்களுக்கு அன்றைய நடைமுறையில் இருந்தது.
இந்த விசயத்தில் பாண்டவர்கள் பிந்தலாகாது. நிச்சயமாக முதலில் துரியோதனன் ஓடோடி தன் பக்கம் யுத்தம் செய்ய அரசர்களை அழைப்பான். ஆகையால் யுதிஷ்டிரன் அதிவிரைவில் அரசர்களிடம் சென்று அவர்களின் உதவியை நாடுதல் அவசியம் என்று துருபதன் கூறினான். துருபதன் கூறியவற்றை கிருஷ்ணன் ஆமோதிக்கவும் பாராட்டவும் செய்தான். அங்கு குழுமியிருந்த அரசர்களும் அதே முடிவிற்கு வந்தனர். இப்போது இருக்கும் நெருக்கடியில் யுத்தம் கண்டிப்பாக நடைபெறும் ஆகவே அவரவர்களுக்குரிய சேனைகளை அதிவிரைவில் தயார் படுத்தும் நோக்கில் அவர் அவர்கள் பிரிந்து சென்றார்கள்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -18

விராட மன்னனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் உறவு நன்கு வளர்ந்து வருகையில் துரியோதனனுடைய ஒப்பந்தம் ஒன்றை எடுத்துக் கொண்டு தூதுவன் ஒருவன் வந்தான். அந்த ஒப்பந்தத்தின் படி 13 ஆண்டுகள் பூர்த்தி ஆவதற்கு முன்பே அர்ஜுனனை நாங்கள் பார்த்துவிட்டோம். ஆகையால் நீங்கள் மீண்டும் 12 ஆண்டுகளுக்கு வனவாசம் செல்ல வேண்டும். நமக்கிடையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்துக் கொண்டுள்ள ஒப்பந்தத்தில் இருந்து நீங்கள் பிசகுவீர்காளாகில் உங்களுக்கு சொந்தமான தர்மத்திலிருந்து பிசகிப்போனவர்கள் ஆவீர்கள் என்று தூதுவன் கூறினான். அதைக் கேட்ட யுதிஷ்டிரன் வாய்விட்டு கடகடவென்று சிரித்தான். நாம் இருவருக்கும் போற்றத்தக்க பாட்டனாராக இருக்கின்ற பீஷ்மர் 13 ஆண்டுகளை நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினோமா இல்லையா என்பதை கூறட்டும். அவருக்கேற்ற பேரப்பிள்ளைகளான நாம் இருவரும் அவருடைய தீர்மானத்திற்கு உட்பட்டு நடந்து கொள்வோம். அப்படி நாம் நடந்து கொள்வது நம்முடைய குடும்பத்தின் கௌரவத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும் என்று அதற்கு மறுமொழியாக ஒற்றனிடம் செய்தி சொல்லி அனுப்பினான்.

விராட மன்னனுக்கு சொந்தமாக இருந்த உபப் பிளவ்வியா என்னும் பட்டணத்திலே பாண்டவர்கள் வசித்து வரலாயினர். வனவாசத்திலிருந்து பாண்டவர்கள் வெளியே வந்து விட்டார்கள் என்ற செய்தி அதிவிரைவில் எங்கும் பரவியது. அதைக் கேள்வியுற்ற நண்பர்களும் அபிமானிகளும் பாண்டவர்களை பார்ப்பதற்கு கும்பல் கும்பலாக வந்தனர். வந்தவர்களில் கிருஷ்ணனும் துருபத மன்னனும் முதன்மை வகித்தார்கள். பாண்டவர்களும் கிருஷ்ணனுக்கு சந்திக்கும் நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சி மிக்கதாக இருந்தது.

கிருஷ்ணா உன்னுடைய அனுக்கிரஹத்தால் பதிமூன்று ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டவர்களாக இருந்து நாங்கள் திரும்பி வந்திருக்கிறோம். உன்னுடைய எண்ணப்படி நடந்து கொள்ள நாங்கள் இப்போது ஆயத்தமாக இருக்கின்றோம் என்றார்கள். திரௌபதி அழுதபடி ஸ்தப்பித்து நின்று கொண்டிருந்தாள். அவள் கண்ணீரை துடைத்த கிருஷ்ணன் பெண்பால் ஒருத்தியுடைய புனிதத்திற்கு பங்கம் பண்ணுகின்ற பாதகன் தண்டனையிலிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள மாட்டான். நீ பட்டுள்ள மானபங்கத்திற்கு ஈடு செய்வேன் என்று பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு காம்யக வனத்தில் உனக்கு வாக்கு கொடுத்திருக்கின்றேன். அதிவிரைவில் நீ மகிழ்வுற்றிருக்கும் நாள் வரப்போகிறது. என்றார்.

சுபத்திரையும் அவளுடைய மகன் அபிமன்யுவும் விராட நகரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அபிமன்யு அவனுடைய தந்தை அர்ஜுனனை போன்றே ஆற்றல் மிகப்படைத்தவனாக இருந்தான். சில கூறுகளில் அவன் தந்தைக்கு மிக்கானாக இருப்பான் என்னும் அறிகுறிகள் அவனிடம் தெரிந்தன. வந்தவர்களை விராட நகரத்தின் மகாராணி சுதேசனை மகிழ்வுடன் வரவேற்றாள். மற்ற உறவினர்களும் அதிவிரையில் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தனர். அவர்கள் எல்லோருடைய முகங்களிலும் மகிழ்வு ததும்பிக் கொண்டிருந்தது. ராஜகுமாரி உத்தரையை அபிமன்யுவிற்கு திருமணம் செய்து முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் அதிவிரைவில் ஆயத்தமாகி பெருமகிழ்வுடன் இனிதாக திருமணம் நடந்தது. யுதிஷ்டிரனை பார்க்க வந்த வேந்தர்கள் பலர் இந்த விவாகத்தில் கலந்து கொண்டனர்

விராட பருவம் இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்து உத்தியோக பருவம்