சுலோகம் -2

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #2

சஞ்ஜயன் திருதராஷ்டிரனிடம் பதில் கூறுகிறார். பாண்டவர்களின் அணிவகுத்து நின்ற படைகளை பார்த்ததும் துரியோதன ராஜா தனது குருவாகிய துரோணாச்சாரியாரிடம் சென்று பேச ஆரம்பிக்கின்றான்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: நாட்டின் அரசனாக திருதராஷ்டிரர் இருக்கும் போது சஞ்ஜயன் ஏன் துரியோதனனை ராஜா என்று அழைக்கிறார்.

பதில்: நாட்டின் அரசனாக திருதராஷ்டிரர் இருந்தாலும் அவரின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாட்டிற்கு துரியோதனனும் ராஜாவாகவே உள்ளான். தன்னுடைய மகன் ராஜா என்ற அடைமொழியுடன் மரியாதையாக குறிப்பிட்டு அழைக்கப்படுவதை எண்ணி திருதராஷ்டிரர் மகிழ்ச்சி அடைவார் என்று சஞ்ஜயன் அவ்வாறு அழைக்கிறார்.

இந்த சுலோகத்தின் 2 வது கேள்வி: பாண்டவர்களின் படைகளை கண்ட துரியோதனன் ஏன் துரோணரிடம் சென்றான்.

பதில்: பாண்டவர்களின் படைகள் கௌரவர்களின் படைகளை விட சிறிது குறைவாக இருந்தாலும் அவர்களின் அணிவகுப்பு விசித்திரமான முறையில் இருந்தது. இதனைப் பார்த்த துரியோதனன் வியப்படைந்தான். தனூர்வேதத்தில் சிறந்த அறிவு படைத்த துரோணரிடம் இதனைப் பற்றி கூறினால் அவர் படைத்தளபதியான பீஷ்மரிடம் இதனைப் பற்றி சொல்லி கௌரவர்களின் படைகளை இன்னும் சிறப்பாக அணிவகுக்க செய்வார் என்ற எண்ணத்தில் துரோணரிடம் துரியோதனன் சென்றான்.

இந்த சுலோகத்தின் 3 வது கேள்வி: ராஜாவான துரியோதனன் துரோணரை தான் இருக்குமிடம் வரவழைத்து செய்தியை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் இருக்குமிடத்திற்கு ஏன் துரியோதனன் சென்றான்.

பதில்: கௌரவப்படைகளுக்கு பிரதான படைத்தலைவராக பீஷ்மர் இருந்தாலும் ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் ஒரு உப தலைவர் இருப்பார். துரோணரும் ஒரு படைப்பிரிவுக்கு தலைவராகவே இருக்கிறார். படைகள் அணிவகுத்து நின்ற பிறகு அந்தந்த படைகளின் தலைவருக்கு என்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் இருந்து அவரை அழைத்தாலும் அகற்றினாலும் அந்த படையினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த யுத்தத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு துரோணரின் உதவி அவசியம் தேவை என்பது துரியோதனனுக்கு தெரியும் அவரின் அன்பைப் பெறுவதற்கும் பிறர் முன்பாக அவரை பெருமைப் படுத்துவதற்காகவும் அவர் இருக்குமிடம் துரியோதனன் சென்றான்.

திருமீயச்சூர் லலிதா தேவி

இறைவன் மேகநாதர் அம்பாள் லலிதாம்பிகை சவுந்திரநாயகி மேகலாம்பிகை. லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய வரத ஹஸ்த முத்திரையுடன் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. எல்லா சிவ ஸ்தலத்திலும் சிவனை வணங்கி பிறகு தான் அம்பிகை பரிவார மூர்த்திகளை வழிபடுவது மரபு. அரிதான சில சிவ ஸ்தலத்தில் மட்டுமே அம்பிகையை முதலில் வழிபாடு செய்வது சிறப்பானது அந்த அகரவரிசையில் இத்தல அம்பாளும் ஒருவர். சர்க்கரை பாவாடை என்று சொல்லும் நைவேத்தியம் இங்கு பிரசித்தமானது. சர்க்கரை பொங்கல் செய்து அம்மன் முன் வைத்து அதன் முன் நெய்யை குளம் போல் ஊற்றி வைப்பார்கள். அந்த நெய்யில் அம்பிகை உருவம் தெரியும். அது தான் சர்க்கரை பாவாடை நைவேத்தியம். லலிதாம்பிகை சகல ஆபரணங்களையும் அணிந்து பட்டத்தரசியாக ஜொலித்தாலும் காலில் கொலுசு அணியாமல் அலங்காரம் செய்து வந்தனர். 1999 ஆம் வருடம் ஒரு பக்தையின் கனவில் அம்பாள் தங்கக்கொலுசு கேட்டதால் அவர் திருமீயச்சூர் ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்பு கொண்டு கேட்கையில் அம்பிகையின் சிலாரூபத்தில் கொலுசு அணிவிக்கும் அமைப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அந்த பக்தை மீண்டும் வலியுறுத்திக் கேட்கையில் கவனத்துடன் தேடிப்பார்த்தனர். ஆண்டுக்கணக்கில் அபிஷேகம் செய்திருந்ததில் அபிஷேக பொருட்கள் கொலுசு அணிவிக்கக்கூடிய துவாரத்தை அடைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின் அம்பிகைக்கு பக்தை அம்பாளுக்கு தங்கக்கொலுசு செய்து அணிவித்தார். தற்போதும் பக்தர்கள் கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்.

லலிதாம்பிகையிடம் உபதேசம் பெற்றவர் ஹயக்கிரீவர். இவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்து ஹயக்ரீவர் சொல்ல லலிதா சகஸ்ர நாமத்தை அகத்தியர் எழுதினார். ஹயக்கிரீவரிடம் அகத்தியர் லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும் என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர் பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும் என்றார். அகத்தியர் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர் லலிதா நவரத்தின மாலை என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 27

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு

இறைவனின் அருள் கடாட்சத்தைக் கொண்டு இயம்புவது யாதென்றால் யாம் கலாகாலம் எம்மை நாடும் மாந்தர்களுக்கு இறைவன் கருணையை பெறுவதற்கு உண்டான வழிமுறைகளை இறைவனின் கருணையைக் இயம்பிக் கொண்டே இயம்பிக் கொண்டு இருக்கிறொம். ஒரு மாந்தன் இன்னொரு மாந்தனை எந்த வித பிரதிபலனும எதிர் பாராமல் விரும்புவதற்கு யாது காரணமாக இருக்க இயலும்? ஒரு மனிதன் சக மனிதனை விரும்புகிறான் அவனை கண்டால் சந்தோஷம் கொள்கிறான் என்றால் என்ன பொருள்? அந்த சந்தோஷத்தை தரக்கூடிய மனிதன் அவனுடைய மன எண்ணங்களிலிருந்து நல்ல அதிர்வலைகளை அனுப்புகிறான் என்பது பொருள்.

ஒரு விருட்சம்(மரம்) அல்லது செடி மலர்கின்ற இடத்தில் சென்று அந்த செடிகளை மிகவும் கொடூர பார்வை பார்த்து கொலைக் கருவிகளால் (கத்தி கோடாரி போன்ற) சேதப்படுத்தியும் அன்றாடம் பழகிக் கொண்டே இருந்தால் பிறகு அந்த மனிதன் சாதாரணமாகவே அந்த பகுதியில் நடந்து சென்றாலே செடிகளும் விருட்சங்களும் (மரங்களும்) உள்ளுக்குள் அஞ்சி நடுங்கும் வாடத் தொடங்கிவிடும். அதோடு மட்டுமல்லாமல் அந்த செடிகள் சரியான மலரை மலர்க்காமலும் காய்களை காய்க்காமலும் இருந்து விடும். இதை மனிதர்கள் எங்கு வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம். எனவே எந்த உயிராக இருந்தாலும் ஓரறிவோ ஈரறிவோ தேவர்களோ யாராக இருந்தாலும் முதலில் ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது சந்தோஷம் ஏற்படுகிறது என்றாலே அந்த மனிதன் எண்ணங்களின் ஆக்க பூர்வமான அலைகள் தான். அதை தான் யாங்கள் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும் என்று காலகாலம் இயம்பிக் கொண்டு இருக்கிறோம்.

சுலோகம் -1

  1. அர்ஜூன விஷாத யோகம் முன்னுரை

மகாபாரதம் குருசேத்திர யுத்தம் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடைபெற்றது. யுத்தம் ஆரம்பிக்கும் முன் அஸ்தினாபுரத்தின் அரசனான பார்வையற்ற திருதராஷ்டிரன் தன் அரண்மனையில் இருந்தபடியே யுத்தக் களத்தில் நடைபெறுவதை தெரிந்து கொள்வதற்காக சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமித்தார். வேதவியாசரால் ஞானதிருஷ்டியை பெற்ற சஞ்ஜயன் யுத்தக் களத்தில் நடந்தவைகளையும் கிருஷ்ணருக்கும் அர்ஜூனனுக்கும் நடைபெற்ற உரையாடலையும் தன் ஞானதிருஷ்டி வழியாக பார்த்து திருதராஷ்டிரருக்கு தெரிவித்தார். முதல் அத்தியாயத்தில் திருதராஷ்டிரன் சஞ்ஜயனிடம் கேள்வி கேட்பதும் அதற்கு சஞ்ஜயன் பதில் கொடுப்பதும் அர்ஜூனன் தன் உறவினர்களும் நண்பர்களும் எதிரிகளாக வந்ததை எண்ணி கவலையில் முழ்கி யுத்தம் செய்ய மாட்டேன் என்று கிருஷ்ணரிடம் சொல்லி தன் காண்டிப வில்லை கீழே வைத்து விட்டு யுத்த களத்தில் அமர்ந்து விடுவதும் இந்த தலைப்பில் உள்ளது. அர்ஜூன விஷாத யோகம் முதல் அத்தியாயத்தில் மொத்தம் 47 சுலோகங்கள் உள்ளது.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #1

சஞ்ஜயனிடம் திருதராஷ்டிரன் கேள்வி கேட்கிறார். தர்மம் நிறைந்த குருசேத்திர யுத்தகளத்திற்கு யுத்தம் செய்ய வந்த கௌரவர்களான எனது மகன்களும் பாண்டவர்களான எனது தம்பி மகன்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: யுத்த களத்தை திருதராஷ்டிரன் தர்மம் நிறைந்த குருசேத்திர யுத்தகளம் என்று ஏன் சொல்கிறார்.

பதில்: மகாபாரதம் வனபருவம் 83 வது அத்தியாத்திலும் சல்லியபருவம் 53 வது அத்தியாயத்திலும் குரு சேத்திர யுத்தகளத்தின் பெருமை சொல்லப்படுகிறது. சதபதப்ராஹ்மணம் என்னும் பழமையான நூலில் இதற்கான குறிப்பு உள்ளது. இந்த இடத்திற்கு சமந்த பஞ்சகம் என்ற பெயரும் உண்டு. இங்கு பிரம்மா இந்திரன் அக்னி முதலிய தேவர்கள் தவம் செய்திருக்கிறார்கள். குருமகாராஜன் என்பவர் கடுமையான உயர்ந்த தவத்தை செய்திருக்கிறார். இங்கே இறப்பவர்கள் உத்தம கதியைப் பெறுவார்கள். இதனால் இந்த இடத்தை திருதராஷ்டிரன் தர்மமும் புண்ணியமும் நிறைந்த குரு சேத்திர யுத்தகளம் என்று சொல்கிறார்.

வனபருவம் 83 வது அத்தியாத்தில் சொல்லப்படும் பெருமை: குருசேத்திரத்தில் வசிக்கும் யாவரும் சொர்க்கத்திலேயே வசிக்கிறார்கள் என்றே பழமையான நூல்களில் சொல்லப்படுகிறது. அங்கே இருக்கும் புனிதம் நிறைந்த பிரம்மசேத்திரத்திற்கு பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் சாரணர்களும் கந்தர்வர்களும் அப்சரஸ்களும் யட்சர்களும் நாகர்களும் அடிக்கடி வருவார்கள். குருசேத்திரத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஒருவன் தர்ம சிந்தனையுடன் மனதால் நினைத்தாலும் அவனது பாவங்கள் அனைத்தும் அழிந்து கடைசியாக அவன் பிரம்மனின் உலகத்தை அடைகிறான். பக்தியுடைய மனதுடன் குருசேத்திரத்திற்குச் செல்பவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான். நான் குருசேத்திரத்தில் வாழ்வேன் என்று தொடர்ச்சியாகச் சொல்லும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். காற்றால் அடித்துக் கொண்டு வரப்பட்ட குருசேத்திரத்தின் தூசி கூட ஒரு மனிதனை அடுத்த பிறவியில் அருள் வாழ்க்கை வாழ வைக்கும்.

சல்லியபருவம் 53 வது அத்தியாத்தில் சொல்லப்படும் பெருமை: குருசேத்திரத்தில் பெரும் வேள்விகளைச் செய்யும் மன்னர்கள் இந்தப் பூமி நீடித்திருக்கும் வரை சொர்க்கத்தில் வசித்திருப்பார்கள். தேவர்களின் தலைவனான இந்திரன் பாடிய ஒரு பாடலில் குருசேத்திரத்தில் இருந்து காற்றால் சுமந்து செல்லப்படும் புழுதியும் கூடத் தீயசெயல் புரிவோரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து அவர்களைச் சொர்க்கத்திற்குச் சுமந்து செல்லும் என்று பாடியுள்ளான். தேவர்களில் முதன்மையானவர்களும் பிராமணர்களில் முதன்மையானவர்களும் நிருகனைப் போன்ற பூமியின் மன்னர்களில் முதன்மையான பலரும் விலை மதிப்புமிக்க வேள்விகளை இங்கே செய்து தங்கள் உடல்களை விட்டபிறகு சொர்க்கத்திற்குச் சென்றனர்.

பகவத் கீதை முன்னுரை

பகவத் கீதை என்னும் ஞான அமுதத்தை தேரோட்டும் சாரதியாக வந்த கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசித்ததின் வழியாக இந்த உலகத்திற்கு வழங்கினார். மகாபாரதம் என்னும் இதிகாசத்தின் ஒரு பகுதி பகவத் கீதையாகும். கீதையை படிப்பவர்களும் அதன் உபதேசங்களைக் கேட்பவர்களும் தன்னை அர்ஜுனனாகவே உணர்ந்து கிருஷ்ணரை சரணடைந்து படிக்கும் போதும் கேட்கும் போதும் கீதையில் வரும் செய்திகள் புரிந்து கொள்ள முடியாத வார்த்தைகளாகவும் பொருளாகவும் இருந்தால் கிருஷ்ணரே அர்ஜூனனுக்கு உபதேசம் செய்து அவனுக்கு ஞானத்தை அருளி புரிய வைத்தது போல் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் கிருஷ்ணரே கற்பக விருட்சமாக வந்து ஞானத்தை அருளி அதனுடைய பொருளை புரிந்துகொள்ள வைப்பார்.

மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் யாருடன் சண்டையிடப் போகிறோம் என்பதை தெரிந்தகொள்ள விரும்பிய அர்ஜூனன் எதிரணியை சென்று பார்வையிட்டான். எதிரணியில் இருப்பவர்கள் அனைவரும் தன்னுடைய குரு ஆசிரியர் உறவினர்கள் நண்பர்கள் இருந்தார்கள். இதனால் பாசத்திற்கு கட்டுப்பட்ட அர்ஜூனன் போரிட மறுத்தார். இதைக் கண்ட கிருஷ்ணர் தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவு முறைகளை பார்த்து பாசத்திற்கு கட்டுப்படக்கூடாது என்று விளக்கினார். அவரது விளக்கத்தில் தத்துவங்கள் யோகங்கள் போன்ற பலவற்றை பற்றியும் விளக்கியுள்ளார். பாசத்திற்கு கட்டுப்பட்ட அர்ஜுனன் கேட்ட கேள்வியும் அதற்கு கிருஷ்ணர் கொடுத்த பதில்களும் பகவத் கீதையாகும். இதில் கர்மயோகம் பக்தியோகம் ஞானயோகம் என மூன்று விதமான யோகத்தை அர்ஜூனனுக்கு விவரித்து அருளியிருக்கிறார். யுத்தம் ஆரம்பிக்க இரண்டு தரப்புகளில் இருந்தும் சங்கு நாதம் செய்தால் மட்டுமே யுத்தம் ஆரம்பிக்கும் என்ற யுத்த தர்மப்படி பாண்டவர்களின் பக்கம் இருந்து சங்கு நாதம் செய்வதற்கு முன்பாக இந்த பகவத் கீதை அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்தார். கிருஷ்ணரின் உபதேசத்தைக் கேட்ட பின் அர்ஜூனன் யுத்தத்திற்கு தாயாரானான். அதன் பின்பாகவே பாண்டவர்களின் பக்கம் இருந்து சங்கு நாதம் செய்து நாங்களும் யுத்தத்திற்கு தயார் என்று அறிவிக்கப்பட்ட பின்பு யுத்தம் துவக்கப்பட்டது.

பகவத் கீதை18 அத்தியாயங்கள் கொண்டதாக உள்ளது. பகவத்கீதையில் புரிந்து கொள்ளக் கடினமான பகுதிகளும் உண்டு. மிக எளிதாக உதாரணங்களுடன் விளக்கப்படும் பகுதிகளும் உண்டு. பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் ராமானுஜர் மத்வர் போன்ற மகான்கள் வடமொழியில் உரை எழுதியுள்ளனர். இவர்களின் பின்னால் வந்த நிம்பர்க்கர் வல்லபர் ஞானேசுவரர் போன்றவர்கள் விளக்கங்கள் எழுதியுள்ளனர். இவர்களின் பின்னால் வந்த இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவாமி சின்மயானந்தா பக்திவேதாந்த சுவாமி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சுவாமி சிவானந்தர் சுவாமி அரவிந்தர் மகாத்மா காந்தி வினோபா பாவே அன்னி பெசண்ட் அம்மையார் சுவாமி சித்பவானந்தர் போன்றவர்களும் மேலும் சிலரும் உரைகளை எழுதியிருக்கின்றனர். பாரதியார் சமஸ்க்ருதத்தில் புலமை மிக்கவர். பகவத்கீதையின் சுலோகங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை சுருக்கமாக விளக்க உரை எழுதி உள்ளார்.

உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. பகவத்கீதை ஆங்கிலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. அம்மொழி பெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்தார். அதில் அவர் இங்கிலாந்து பின் வரும் காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டு வந்தால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும் என்று குறிப்பிட்டிருந்தார். பகவத் கீதையின் ரஷ்ய மொழி பெயர்ப்பு 1788 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் வெளியிடப்பட்டது.

பகவத்கீதையை முழுவதும் படித்து உணர்ந்து அதில் சொல்லும் தர்மத்தை கடைபிடிப்பவன் தனது பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று பிறவி இல்லாத நிலையை அடைவான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 26

கேள்வி: பிரம்மஹத்தி தோஷம் பற்றி

பாவத்தின் செயலை விட நோக்கத்தை வைத்து தான் இறைவன் பாவத்தின் அளவை நிர்ணயம் செய்வார். சுயநலத்திற்காக ஒரு மனிதன் பிற மனிதனை தாக்கி காயம் ஏற்படுத்தினாலோ அல்லது உயிர்சேதம் ஏற்படுத்தினாலோ அது பிரம்மஹத்தியில் சேரும். ஆனால் சமுதாயத்தை காக்க ஒரு சில மனிதர்களுக்கு தீங்கு செய்யும் மனிதர்களை விரட்டி அடிப்பதற்காக செய்யப்படும் போர் அல்லது தற்காப்பு நடவடிக்கைகளில் எதிர்பாராதவிதமாக ஒரு மனிதன் இறந்தால் அதுவும் பிரம்மஹத்தியில் வரும் என்றாலும் அது சுயநலத்திற்காக செய்யப்படவில்லை என்பதால் பெரிதளவு அது தாக்கம் ஏற்படுத்தாது. இருந்தாலும் அதற்கு பிராயச்சித்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் பிராய்ச்சித்தம் என்பது கடுமையாக இராது. எளிமையான முறையிலே அவனவனால் முடிந்த சிவவழிபாடோ அல்லது பஞ்சாட்சர ஜபம்(நமசிவய) செய்தால் கூட இந்த பாவம் குறைந்துவிடும். ஆனால் எந்த உயிரை கொன்றாலும் பிரம்மஹத்தியின் அளவு விகிதாசாரத்தில் வேறுபாடு இருக்குமே தவிர தோஷம் என்பது இருக்கத்தான் செய்யும். ஆனால் பாவம் என்பதை அந்தந்த செயலை மட்டும் பார்க்காமல் அந்த மனிதனின் சூழ்நிலை வாழும் நிலை பக்குவம் இவற்றை வைத்து பார்க்க வேண்டும்.

அதாவது சகல வேதங்களையும் முறையாக கற்று சகல கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று எல்லா வகையான ஞானக்கருத்தும் தெரிந்து இது தக்கது இது தகாதது இதை செய்யலாம் இதை செய்யக் கூடாது இதை செய்தால் பாவம் இதை செய்தால் புண்ணியம் என்றெல்லாம் அறிந்து ஓரளவு பக்குவம் பெற்ற மனிதன் யாருக்கு தெரியப் போகிறது என்று எந்த ஒரு சிறிய தவறையும் செய்தாலும் அது மிகப்பெரிய பாவமாக மாறும். ஆனால் அறியாத மனிதன் கல்வி கேள்வி கல்லாத மனிதன் எதுவும் தெரியாத மனிதன் ஏதோ உண்பதும் உழைப்பதும் வாழ்வதுமாக இருக்கின்ற மனிதன் வேறு வழியில்லாமல் மிருக உணர்ச்சிக்கு அடிமையாகி எதையாவது செய்து விட்டு பின்னர் தன் மனதால் வருந்தி வருந்தி அழுதால் அந்த பாவம் மன்னிக்கப்படும். வயிற்றுக்கு வழியில்லாமல் ஒருவன் எல்லா வகையான நேர்மையான வழிமுறைகளையும் தேடி தேடி தேடி தோற்றுப் போய் களவு தொழிலை மேற்கொண்டால் அவன் மன்னிக்கப்படுவான். ஆனால் இதை செய்வதற்கு தான் உனக்கு ஊதியம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு அந்த பணிக்காக ஒருவனுக்கு அரசாங்கமோ ஒரு நிறுவனமோ ஊதியம் வழங்குகிறது. ஆனாலும் அந்த பதவியைப் பயன்படுத்தி ஒருவன் ஒரு காரியம் சாதிப்பதற்கு எனக்கு கையூட்டாக(லஞ்சம்) இந்த தனம் வேண்டும் என்று கேட்டால் கட்டாயம் அது பல கோடி பிரம்மஹத்தி தோஷத்திற்கு சமமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 25

கேள்வி: பெண்கள் குங்குமம் வைப்பதன் அவசியம் மற்றும் தாத்பரியம் பற்றி கூறுங்கள்

இறைவன் அருளால் இடை காலத்தில் இந்த பழக்கம் ஏற்பட்டது. மங்கல சின்னம் என்று நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் உடலுக்கு தீங்கைத் தரும் இராசாயனங்களையெல்லாம் வைத்துக் கொள்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையப்பா. இன்னமும் கூறப் போனால் நீ கூறிய அந்த செந்நிற வண்ணத்தை விட நேரடியாக தூய்மையான சந்தனத்தை வைத்துக் கொள்ளலாம். நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட திருநீற்றை வைத்துக் கொள்ளலாம். பெண்கள் அப்படி செந்நிற வண்ணத்தை இட்டுக் கொள்ளாமல் மங்கலமான கஸ்தூரி மஞ்சள் பொடியை பொடித்து அவற்றை வைத்துக் கொள்ளலாம். அதுதான் சித்தர்கள் முறையாகும்.

கேள்வி: அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கும் பொழுது அது விதிப்படிதான் நடக்கிறதா ஐயனே?

அனைத்தும் விதிப்படிதான்.

கேள்வி: கோடி கோடியாக தர்மம் செய்ய வேண்டும்.

தர்மத்தின் தன்மை கொடுக்கின்ற பொருளின் அளவைப் பொருத்ததல்ல. கொடுக்கின்ற மனிதனின் மனதைப் பொறுத்தது. கோடி கோடியாக அள்ளித் தந்துவிட்டு தனிமையில் அமர்ந்து கொண்டு அவசரப்பட்டு விட்டாமோ? நமக்கென்று எடுத்து வைத்துக் கொள்ளாமல் கொடுத்து விட்டாமோ? என்று ஒரு தரம் வருத்தப்பட்டாலும் அவன் செய்த தர்மத்தின் பலன் வீணாகிவிடும். ஆனால் ஒரு சிறு தொகையை கூட மனமார செய்துவிட்டு மிகவும் மனம் திறந்து இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததே? என்று ஒருவன் மகிழ்ந்தால் அது கோடிக்கு சமம். எனவே இது குறித்து நீ வருந்த வேண்டாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 24

கேள்வி: வயதானவர்களிடம் ஆசி பெறுவது பற்றி

வெறும் வயது மட்டும் பெரியவர் என்ற தகுதியைத் தந்துவிடாது. மனதிலே தெளிவு உள்ளத்திலே உறுதி எண்ணத்திலே உறுதி வேண்டும். இச்சைகள் குறைந்திருக்க வேண்டும். மனதிலே சபலங்கள் இருக்கக் கூடாது. தேகத்தை யோகாசனம் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். ஆன்மாவை சுற்றியுள்ள அலைவரிசையானது மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அது போன்ற மனிதரிடம் ஆசி பெற்றால்தான் உண்மையாக பலிதமாகும். எனவே இறை நிலையிலே எமது நிலையிலே இருப்பவர்களின் காலில் விழுதல் தவறல்ல நன்மைகள் உண்டாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 23

மக்களுக்கு அகத்திய மாமுனிவர் அருளும் நல்லாசிகள்

உந்தனுக்கு கடை (கடைசி) வரையில் இறையருள் தொடர நல்லாசிகள். எது குறித்தும் கலக்கம் கொள்ள வேண்டாம். அன்றன்று காலம் விதிப்படி விதிப்பயனாக அவனவன் செய்த வினையின் எதிரொலியாக ஆண்டாண்டு காலம் சில கஷ்டங்களும் மன உலைச்சல்களும் தொடரத்தான் செய்யும். கஷ்டங்கள் தொடருகிறதே என்று இறை வழி விட்டு விலகக்கூடாது. சிறப்பில்லா வாழ்க்கையிலே சிறப்பில்லா சம்பவங்கள் எதிர்பட்டாலும் இறை வணங்க மறுத்தல் கூடாது. செய்கின்ற தர்மத்தை விடக் கூடாது. சிந்தை கொள். எம்மீது ஆர்வம் கொண்டு நீ செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் எமது அருளாசி உண்டப்பா. அப்பனே அது குறித்து மனிதர்கள் விமர்சனங்கள் செய்தாலும் மனம் சிதிலம் கொள்ளாதே. அவ்விடத்தில் அது குறித்து நீயும் விவரங்கள் ஆர்வத்தோடு கொடுத்தாலும் கூட உந்தனுக்கு தவறான நாமம் (பெயர்) தான் சூட்டப்படும். நல்ல எண்ணத்தில் நீ செய்தாலும் குதர்க்கமாகத்தான் பேசுவார்கள். அப்படி தொடர்ந்து பேசினால் நீயும் ஒதுங்கிக் கொள் என்பதே எமது அருள்வாக்கு ஆகும்.

ஒவ்வொரு மனிதனின் மனம் எப்படி? என்று எமக்குத் தெரியும். ஒவ்வொரு மனிதனையும் இறை சக்தியைக் கொண்டு பக்குவம் அடைந்த மனிதனாக மாற்ற முடியும் என்றாலும் கூட இறைக்கு வேலை அதுவல்ல. அன்னவனே உழன்று சிதிலப்பட்டு வேதனைப்பட்டு கவலைப்பட்டு கஷ்டப்பட்டு பக்குவப்பட்டு தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இறையின் எண்ணமாகும். அறிவிலே தெளிவும் மனதிலே உறுதியும் இருக்க வேண்டும். இது கிடைப்பதற்கு மனிதன் வாழ்விலே துன்பங்கள் பட வேண்டும். அதை அறிவிலே ஊடுருவி நாங்களே தெளிய வைப்போம். சதுரகிரியோ திருவண்ணாமலையோ இயன்ற போது சென்று வா. நல்லதோரு அனுபவங்களும் இறை அருளாசியும் உனக்குக் கிடைக்கும். தொடர்ந்து பூஜைகள் செய்ய முடியவில்லையே? என்று வருந்தாதே. அந்த ஏக்கமே ஒரு பூஜைதான். எந்த இடத்தில் அமைதி கிடைக்கிறதோ அங்கு அமர்ந்து பூஜை செய்யலாம். அங்குதான் இங்குதான் அதிகாலைதான் உச்சிப்பொழுதுதான் என்பது இல்லை. இறையை வணங்க காலம் நாழிகை சூழல் எதுவும் தேவையில்லை. மனம் ஒன்றி இருந்தால் மட்டும் போதும். எனவே இதனை எண்ணி அமைதியாக வாழ். நல்லதொரு வாழ்க்கை இறைவன் அருளால் உனக்கு கிடைக்கும் ஆசிகள்.

கார்க்கோடக நல்லூர்

மூலவர் கைலாசநாதர் கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத் திருவுருவில் அழகிய வடிவாக காட்சித் தருகிறார். இவருக்கு விசேஷ காலங்களில் நாகாபரணம் சாத்தி அலங்காரம் செய்யப்படும். அம்மை சிவகாமி தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் ஒரு கையில் மலர் ஏந்தியும் மறு கையை கீழே தொங்கவிட்ட படியும் இடை நெளித்தும் அழகிய புன்சிரிப்புடனும் காட்சித் தருகிறாள். கார்கோடகன் வழிபட்டதால் இந்த ஊர் கார்கோடக நல்லூர் என்று அழைக்கப்பட்டது. தற்போது பெயர் மருவி கோடக நல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தனி சன்னதியில் காட்சித் தரும் ஆனந்த கெளரி அம்மை ஐந்து தலை நாகம் குடைபிடித்த நிலையில் காட்சித் தருகிறாள். இவளுக்கு சர்ப்பயாட்சி நாகாம்பிகை என்ற பெயர்களும் உள்ளது. இக்கோவில் வினாயகருக்கு கல்யாண வினாயகர் என்று பெயர். இங்கு கல்யாண விநாயகரும் சுப்பிரமணியருமே துவார பாலகர்களாக காட்சித் தருகின்றார்கள். இங்கு நவக்கிரகங்களுள் அங்காரக பகவான் சிவனை வழிபட்டுள்ளார். இங்கு கொடி மரம் பலி பீடம் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதி இல்லை. இங்கு மாசி மாத சிவராத்திரி மார்கழி திருவாதிரை ஆகிய வருடாந்திர உற்சவங்களும் பிரதோஷம் மற்றும் செவ்வாய்கிழமை சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. கோடகநல்லூர் சிவன் கோவில் திருநெல்வேலி நகரம் சேரன் மகாதேவி சாலை வழியில் சுமார் 16 கி. மீ தொலைவில் உள்ளது.

தல வரலாறு: அடர்ந்த காடாக இருந்த பகுதியில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருந்தார். ஒரு நாள் அந்த முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அந்த முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்காக அந்த முனிவரின் மகன் காட்டிற்குள் சென்றிருந்தான். அப்போது அந்த நாட்டின் இளவரசனாக இருந்த பரிஷத் மகாராஜாவின் மகன் அந்த காட்டிற்குள் வேட்டையாட வந்திருந்தான். அவன் வேட்டையாடிக் கொண்டே முனிவர் அமர்ந்து தியானம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். நீண்ட நேரம் காட்டிற்குள் அலைந்து திரிந்து வேட்டையாடியதால் களைப்பும் சோர்வும் அடைந்த அந்த இளவரசனுக்கு தாகம் ஏற்பட்டிருந்து. அவன் குடிக்க நீர் வேண்டி முனிவரை அழைத்தான். ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த முனிவருக்கு அது காதுகளில் கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட இளவரசன் தன்னுடைய அழைப்பிற்கு செவி சாய்க்காமல் இருந்த முனிவரின் மீது ஆத்திரத்தில் அருகே கிடந்த இறந்த போன பாம்பின் சடலத்தை எடுத்து கழுத்தில் போட்டு விட்டு குதிரையில் ஏறி வந்த வழியே சென்று விட்டான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி அவர் எதுவும் அறிந்திருக்க வில்லை.

முனிவரின் மகன் தனது தந்தை யாகம் செய்வதற்கு தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். தனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன்னுடைய ஞான திருஷ்டியால் அங்கு நடந்தது என்ன என்பதை முனிவரின் மகன் அறிந்து கொண்டான். இதனால் அவனக்கு பெருங் கோபம் ஏற்பட தன் தந்தையும் குருவும் ஆனவரை அவமானப்படுத்திய இளவரசனின் தந்தை பரிஷத் மகாராஜா பாம்பு தீண்டி இறந்து போகட்டும் என்று சாபமிட்டான். இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து பரிஷத் மகாராஜாவின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள் அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அதனால் பாம்பு தீண்டி அவர் இறந்து விட நேரிடும் என்றும் மகாராஜாவிடம் தெரிவித்தனர். அதனைக் கேட்ட பரிஷத் மகாராஜா தனது உயிரை பாம்பிடம் இருந்து காத்துக் கொள்ள ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி கப்பலில் மண்டபம் ஒன்று கட்டி பாம்பு எளிதில் புக முடியாத இடத்தில் வசிக்கத் தொடங்கினார். அப்போது கார்கோடகன் என்ற பாம்பானது மகாராஜா சாப்பிடும் பழத்திற்குள் புழுவாக உருமாறி புகுந்து பரிஷத் மகாராஜாவை சாபப்படியும் கர்ம வினைப் படியும் தீண்டியது. இதனால் மகாராஜா இறந்து விட்டார். கார்கோடகன் பாம்பு தன்னுடைய இருப்பிடத்திற்கு வந்து வசிக்கத் தொடங்கியது.

கார்கோடகன் என்னும் அந்த பாம்பு தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும் சொத்தையும் இழந்த மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக் கொண்டதை பார்த்த நள மகாராஜா அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டு காப்பாற்றினார். தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்தமாக கார்கோடகன் பாம்பு நள மகாராஜாவை தீண்டியது. இந்த விஷம் அவரது உடலை உருமாற்றியது. இதனால் நள மகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறி வேறு ரூபத்திற்கு மாறினார். நள மகாராஜா உருமாறியதால் அவரது மனைவி தமயந்திக்கு கூட நள மகாராஜாவை அடையாளம் தெரியவில்லை. இதனால் நள மகாராஜா நாட்டை இழந்து எங்கோ சென்று விட்டார் என்று கருதிய நள மகாராஜாவின் மாமனார் வீமராஜா தனது மகள் தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார். அந்த சமயத்தில் தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நள மகாராஜா வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்ந்தார்.

நளன் வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் தனது கணவன் என்பதை உறுதி செய்து கொண்டாள். பின்னர் நளனும் தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனையும் தமயந்தியையும் மீண்டும் சேர்த்து வைத்தார். நளன் ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக் கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது. பரிஷத் மகாராஜாவையும் நளனையும் தீண்டிய செயலுக்காக கார்கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மகா விஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது. அப்போது கார்கோடகனின் முன் மகா விஷ்ணு தோன்றி தாமிரபரணிக்கரையில் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டு வந்தால் உனக்கு முக்தி கிடைக்கும் என்று கூறி அருள் புரிந்தார். அதன் படி கார்கோடகன் பாம்பு தாமிரபரணி கரைக்கு வந்து மண்ணையும் நீரையும் கலந்து பிசைந்து பிறகு தன் மூச்சுக் காற்றால் சிவலிங்கத்தை உருவாக்கி பூஜைகள் செய்து வழிபட்டு தவம் இருந்தது. அதன் தவத்தை மெச்சிய சிவபெருமான் அங்கு தோன்றி காட்சியளித்து கார்கோடகனுக்கு முக்தி அளித்தார்.