சுயம்பு வேலவன்

வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி நட்சத்திரக் குன்று என்று அழைக்கப்படும் ஊரில் மலை மேல் சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால் சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு லிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இங்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தல கருவறையில் நாகாபரணத்துடன் முருகரும் சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒன்றாக காட்சி தருகிறார்கள். இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சி புராணம் மற்றும் அருணாச்சல புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய புராண வரலாறு உள்ளது. 27 நட்சத்திரங்களும் சிவ சர்பமும் முருகப் பெருமானை வழிபடுகிறார்கள். வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப் பெருமான் அமர்ந்து நித்யம் சிவபூஜை செய்கிறார். 27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் அமைந்திருக்கிறது. எனவே நட்சத்திர கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. மலை மீது உள்ள இக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் 300 உள்ளது.

வேல் விளையாட்டில் வல்லவனான வேலவன் வாழைப் பந்தலில் இருந்து எய்த அம்பு பருவத மலை மீது பாய்ந்தது. அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடு த்து மலையில் இருந்து வழிந்தோடியது. உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி செய்நதி எனும் பெயரும் உண்டு. சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது. எனவே செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரை கண்டீஸ்வரரையும் இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாச நாதரையும் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தார். அதே போல் முருகப்பெருமான் செய்நதியின் வலது கரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி கடலாடி மாம்பாக்கம் மாதிமங்கலம் எலத்தூர் குருவிமலை பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும் இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு ஓரந்தவாடி நார்த்தாம்பூண்டி நெல்லிமேடு மோட்டுப்பாளையம் பழங்கோயில் மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.

முருகப்பெருமான் வழிபட்ட இந்த 14 சிவாலயங்களையும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்விருவரும் ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். ஒரு வருடம் ஆடிக் கிருத்திகைக்கு திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. அதனால் மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன் திருத்தணிக்கு செல்லவில்லை என வருந்த வேண்டாம் நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாக சிவசுப்ரமணிய ஐக்கியத்தில் குடியிருக்கிறேன். சூரியன் சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும் நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கின்றன. எனவே நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட என்னை வந்து சேருங்கள் என இருவர் கனவிலும் முருகர் அருள்புரிந்தார். திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது. குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால் நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது.

சுலோகம் -117

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-70

பல நதிகள் கடலில் வந்து கலந்த போதிலும் அந்த கடல் நீரானது எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது. அது போல உலகத்திலுள்ள போகங்கள் அனைத்தும் தன்னுடைய தன்மைக்கு ஏற்றார் போல புலன்களைத் தன் வசப்படுத்தியவனின் மனதில் வந்து சேர்ந்தாலும் அவனது மனமானது அமைதியுடன் இருக்கிறது. ஆனால் போகங்களை விரும்புபவனின் மனமானது அமைதியுடன் இருப்பதில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஒவ்வொரு நதியும் அது ஓடி வரும் வழியில் இருக்கும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப மாசு அடைந்து நிறம் மாறி கடலில் கலக்கிறது. ஆனாலும் கடல் நீரானது தனது தன்மையை மாற்றிக் கொள்ளாமல் தனது தன்மையிலேயே இருக்கிறது. அது போல உலகத்தில் உள்ள போகங்கள் அனைத்தும் அதனுடைய தன்மைக்கு ஏற்ப ஆசைகளை கொடுத்து மாயை ஏற்படுத்தி புலன்களைத் தன் வசப்படுத்தியவனின் மனதில் வந்து சேர்ந்தாலும் அவனது மனமானது அமைதி என்ற தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல் அமைதியுடன் இருக்கிறது. ஆனால் போகங்களை விரும்புபவனது மனமானது ஆசைகளின் வழியே சென்று அமைதி இல்லாமல் இருக்கிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 221

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனருளால் யாம் கூறவருவது யாதென்றால் உன் போல் எம் (அகத்திய மாமுனிவர்) மீது அவா (ஆவல்) கொண்டு இந்த ஓலை (ஜீவநாடி) வாயிலாக எமது வாக்கை மெய்யாக மெய்யாக மெய்யாக மெய்யாக நாடுகின்ற மெய்யன்பர்கள் அனைவருக்கும் பொருந்துவதாகும். ஆகுமப்பா அந்த லெளகீக வாழ்விலே துன்பங்களும் தோல்விகளும் துவண்டு விழ வைக்கும் நிகழ்வுகளும் வந்து கொண்டேயிருக்கும். அதற்கும் ஒரு மனிதன் இறைவன் திருவடியை உணர்வதற்கும் உண்டான முயற்சிக்கும் என்றுமே தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது. இறைவனை வணங்குகிறேனே? எனக்கு இப்படியொரு துன்பம் வரலாமா? இறைவனை வணங்கிக் கொண்டே இருந்தால் நல்லது நடக்கும் என்கிறார்களே? ஆனால் அன்றாடம் பதறிப் பதறி வாழவேண்டிய நிலை இருக்கிறதே? என்றெல்லாம் அறியாமையால் மனிதன் புலம்புவது இயல்பு என்றாலும் அங்ஙனம் புலம்புலது எம்மைப் பொருத்தவரை ஏற்புடையது அல்ல. இந்த இல் (இல்லறம்) ஆனாலும் உறவானாலும் நட்பானாலும் கர்மவினைகளின் காரணமாக பிறப்பெடுத்து குறிப்பிட்ட மனிதர்களோடு குறிப்பிட்ட உறவு என்ற பந்தத்திற்குள் இந்த ஜென்மத்திற்கு என்று அது அடைபட்டு இருக்கிறது. இது போல் ஜென்ம ஜென்மமாய் எத்தனை தாய்? எத்தனை தந்தை? எத்தனை தாரம்? எத்தனை பிள்ளைகள்? கடந்த ஜென்மத்து தாய் அவளை நினைத்து ஏங்குவதா? அழுவதா? கடந்த ஜென்மத்து பிள்ளைகளை எண்ணி ஏங்குவதா? அழுவதா? இனிவரும் ஜென்மத்து உறவுகளை எண்ணி அழுவதா? சிரிப்பதா? என்றெல்லாம் மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தொலை தூர பயணத்திற்காக வாகனத்தில் அமரும் மனிதன் அருகருகே அமரும் பிற மனிதர்களோடு எந்தளவில் தொடர்பு கொள்கிறானோ அப்படியொரு வாழ்க்கை பயணத்திலே தான் உறவுகளும். அதற்காக இவர்களையெல்லாம் விட்டுவிடு இவர்களையெல்லாம் வெறுத்துவிடு என்றெல்லாம் யாம் (அகத்திய மாமுனிவர்) கூறவில்லை. இந்த நிலையிலே அவர்களுக்கு செய்ய வேண்டிய நீதியான நியாயமான கடமைகளை செய்வதோடு மனதளவிலே எந்தவிதமான பற்றுக்கும் இடம் தராமல் வாழ கடினம் பாராது முயற்சி செய்ய வேண்டும். இந்த கருத்தை நன்றாக மனதிலே வைத்துக் கொண்டால் ஒவ்வொரு மனிதனும் செழுமையாக வாழ்ந்து இறைவனின் அருளை புரிந்து கொள்ளக் கூடிய அந்தவொரு சூழலுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளலாம்.

அடக்கத்தோடு ஒருவன் செய்கின்ற அறமானது (தர்மமானது) இருமடங்கு மும்மடங்கு பஞ்சமடங்கு (ஐந்து மடங்கு) என்று அதன் அடக்கம் காரணமாக உயர்ந்து கொண்டே செல்லும். அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்ல வேண்டுமென்றால் அதற்கேற்ற மனப் போராட்டங்களும் மனத்தாக்கங்களும் இருந்து கொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனொரீதியாக என்றும் நீ திடமாக இரு. இறைவன் அருளாலே இயன்ற பக்தியை செய்து கொண்டே தர்ம காரியங்களை செய்து கொண்டே இருக்க இருக்க அந்த பாவவினைகள் முன்ஜென்ம வினைகள் குறைய குறைய பக்குவமும் பரிபக்குவமும் புரிதலும் இறை நோக்கி செல்ல வேண்டும் என்கின்ற தீவிரமும் வருமப்பா. செய்கின்ற தர்மங்கள் எல்லாம் மேலும் இறைவனருளைக் கூட்டி வைக்கும் முன் ஜென்ம பாவத்தை கழித்து வைக்கும் புண்ணியத்தை பெருக்கி வைக்கும் தேவையற்றதை எல்லாம் அது வகுத்து வைக்கும். மனிதனுக்கு துக்கமோ துயரமோ இன்பமோ துன்பமோ அதற்கேற்ற சிந்தனையோ அல்லது நடைமுறை நிகழ்வுகளோ அனைத்தும் ஊழ்வினைகளின் எதிரொலிதானப்பா. மனதை தளரவிடாது செய்கின்ற இறை பக்தி தொண்டு தன்னலமற்ற தர்மகாரியங்கள் சாத்வீக வாழ்வு கடமைகளை சரியாக ஆற்றுதல் இவற்றை ஒரு மனிதன் கடைபிடித்தால் அவனுடைய தேவையற்ற குழப்பங்களும் ஐயங்களும் வேறு கலக்கங்களும் எழாமல் இருக்கும்.