சுலோகம் -147

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-28

சுலோகம் -147

நீண்ட புஜங்களை உடையவனே குணங்களின் பிரிவு கர்மங்களின் பிரிவு இவற்றின் தத்துவம் அறிந்த ஞானயோகி குணங்கள் அனைத்தும் குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து அவற்றில் பற்று கொள்ளாமல் இருக்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 146 இல் உள்ளபடி மூன்று குணங்களையும் அதன் பிரிவுச் செயல்களான கர்மங்களின் பிரிவுகளையும் அவை செயல்படும் விதத்தையும் அறிந்த ஞானத்தை பெற்ற யோகி தான் செய்யும் செயல்களில் பற்றுக்கள் இல்லாமல் செயல்படுவார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 260

கேள்வி: ஒவ்வொருவருக்கும் பொருளாதாரக் கல்வி ஆன்மீகக் கல்வி கிடைக்க வேண்டுமென்றால் என்ன பயிற்சி என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் எல்லோருக்கும் எல்லாம் கிட்ட வேண்டும் என்பது பொதுவாகவே நல்லவர்களின் பிராத்தனை ஞானியர்களின் பிராத்தனையாக இருந்தாலும் கூட கர்ம வினை என்ற ஒன்று இருக்கும் வரை இந்த ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். அதே தருணம் இன்னொருபுறம் மனிதன் சுயமாக சிந்தித்து ஏதோ செய்த புண்ணியமோ அல்லது இறைவன் அருளோ என்னை இறைவன் நன்றாக வைத்திருக்கிறான். எனக்கு நிறைய செல்வம் சேர்ந்திருக்கிறது. என்னால் முடிந்த ஒரு சில குடும்பத்தையாவது நான் காப்பாற்றுவேன் என்று ஒரு முடிவெடுத்து அவன் செயலில் இறங்கி விட்டால் எல்லோருக்கும் எல்லாம் என்கிற நிலை வந்துவிடும். ஆனால் இவையெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கும். நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றுதான் மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான். இருந்தாலும் கூட பிராத்தனை என்று வைத்துக் கொண்டால் இறைவனை அன்னப் பூரணியாக வணங்கினால் இந்த அன்ன பிரச்சனை தீர்வதற்கும் இதே ஹயக்ரீவரையும் அன்னை கலைவாணியையும் (அன்னை சரஸ்வதி) வணங்கி வணங்கி வந்தால் கூட்டு வழிபாட்டிலும் இது போல முக்கியத்துவம் தந்து வந்தால் நல்லதொரு ஞானமும் கல்வி என்றால் ஏதோ மனிதர்களால் கற்பிக்கப்படும் கல்வியை நாங்கள் கூறவில்லை. மனிதர்களால் கற்பிக்கப்படும் கல்வியை நாங்கள் கல்வி என்றே ஒத்துக் கொள்வதில்லை. எனவே மெய்யான ஞானத்தை உணர்வதற்கு அது வழிகாட்டுவதாக இருக்கும். எனவே இந்த பக்தி மார்க்கம் தவிர இக்காலத்தில் வேறு எளிய வழி மனிதர்களுக்கு இல்லை.

கேள்வி: தனி மனிதன் தன் மானசீக குருவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

அவனவன் கற்ற விஷய பொருள்களில் அல்லது கேள்விப்பட்ட ஆன்மீக விஷயங்களில் எந்த குரு மீது இயல்பாக ஈர்ப்பு வருகிறதோ அந்த குருவை மானசீக குருவாக ஏற்றுக் கொள்ளலாம்.

சுலோகம் -146

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-27

இந்த உலகில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ப்ரகிருதியின் ஸத்வ ரஜோ தமஸ ஆகிய மூன்று குணங்களால் நடைபெறுகின்றன. ஆனால் மனம் முழுவதும் அகங்காரம் நிரம்பிய ஒருவன் இந்த செயல்களை நான் செய்தேன் என்று நினைக்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சத்வ குணம் என்பது அமைதி தர்மச்செயல்கள் மற்றும் தன் செயல்களைப் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விடுவது பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது ஆகியவை ஆகும்.

ரஜோ குணம் என்பது ஊக்கம் ஞானம் வீரம் தருமம் தானம் கல்வி ஆசை முயற்சி இறுமாப்பு வேட்கை திமிர் தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது வேற்றுமை எண்ணம் புலனின்பப் பற்று சண்டைகளில் உற்சாகம் தன் புகழில் ஆசை மற்றவர்களை எள்ளி நகையாடுவது பராக்கிரமம் பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல் பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகியவை ஆகும்.

தமஸ குணம் என்பது காமம் வெகுளி மயக்கம் கலக்கம் கோபம் பேராசை பொய் பேசுதல் இம்சை யாசித்தல் வெளிவேசம் சிரமம் கலகம் வருத்தம் மோகம் கவலை தாழ்மை உறக்கம் அச்சம் சோம்பல் காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும் பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் ஆகியவை ஆகும்.

இந்த மூன்று குணங்களினால் இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் மனிதனிடம் நான் என்ற அகங்காரம் இருப்பதால் மனிதன் தான் செய்யும் செயல்கள் அனைத்தையும் நான் செய்தேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

குருவாயூரப்பன் அருள்

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு குருவாயூரப்பன் மிகவும் விருப்பமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. பண வசதியும் இல்லை. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும் அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் ஆசை இருந்தது. அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து நன்கு கழுவி துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள். ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் நடை பயணமாகவே புறப்பட்டாள். கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து கோவிலை அடைந்தாள்.

கோவிலை அடைந்த சமயம் கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன் தன் பக்தியை வெளிப்படுத்த கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அந்த நாளிலே இந்த வயதான பெண்மணியும் வந்திருந்தாள். கூட்டம் அதிகமாக இருந்த படியால் தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. வயதான பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது. அதே சமயம் கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் என்ன ஆயிற்று? என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் குருவாயூரப்பனிடமே ப்ரஸன்னம் கேட்டான். அப்பொழுது கர்ப்பக்கிரகத்தில் இருந்து நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும் என்று அசரீரி கேட்டது. உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டு மணிகளை பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயதான பெண்மணியிடம் கொடுத்த அரசர் அவளிடம் மன்னிப்பும் கேட்டான். அவளை சகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் குண்டு மணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 259

கேள்வி: பத்ரிநாத்தில் (உத்திராகண்ட் மாநிலம்) சிரார்த்தம் செய்தாலே போதுமானது. ஒவ்வொரு வருடமும் வந்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது பற்றி:

இறைவன் கருணையாலே சில ஆலயங்களில் குறிப்பை எழுதி வைத்து இருப்பார்கள். இங்கு வந்து வழிபட்டால் கோடி முறை ஆலயத்தை வணங்கியது போல என்று இங்கு ஒரு முறை பஞ்சாட்சரம் ஜெபித்தால் கோடி முறை ஜெபித்ததற்கு பலன் உண்டு என்று. இவையெல்லாம் அந்த ஆலயத்தின் சிறப்பையும் அப்படியாவது மனிதர்கள் வர வேண்டும் என்கிற நல்ல நோக்கில் கூறப்படுவது. அப்படியே ஒரு வாதத்திற்கு இது உண்மையென்று வைத்துக் கொள்வோம். அனைத்து நதிக்கரை ஸ்தலங்களிலும் இப்பொழுது நடக்கின்ற எல்லோரும் ஆத்ம சுத்தியோடு (யாம் செய்து வைக்கின்ற மறை (வேதம்) கற்றவனை மட்டும் கூறவில்லை அதிலே கலந்து கொள்ளக் கூடிய மனிதர்களையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்) உடல் சுத்தம் உள்ள சுத்தம் பரிசுத்தத்தோடு பூஜை செய்கிறார்களா? பிழையற வேத மந்திரங்களை ஓதுகிறார்களா? ஒருவனுக்கு ஒரு முறை சரியான முறையில் பித்ரு காரியங்களை செய்ய வேண்டுமென்றால் குறைந்தபட்சம் குறைந்தபட்சம் எமது நோக்கில் இந்தப் பூவுலகில் 48 தினங்கள் (ஒரு மண்டலம்) ஆகும். ஒரு குடும்பத்திற்கு 48 தினங்கள் சில மறையோதுபவர்கள் (வேதத்தை ஓதுபவர்கள்) முறையாக செய்து வைத்த பிறகு 48 நாட்கள் அவர்கள் உபவாசம் இருந்து உருவேற்ற வேண்டும் அவரவர்கள் இஷ்ட தெய்வத்தை. பிறகுதான் அடுத்த பணியை செய்ய வேண்டும். இதையெல்லாம் கூறினால் இந்த அவசர உலகத்தில் சாத்தியமில்லை என்பார்கள். எனவே ஒரு முறை செய்தால் போதும் என்றால் அந்த ஒரு முறை எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்கின்ற நிலை வந்தால் அது பொருந்தும். ஆனால் இப்பொழுது இருக்கின்ற நிலையிலே ஒன்றுக்குப் பலமுறை பலமாக செய்தாலும் வினைகள் குறைவதில்லை எனும் பொழுது தாராளமாக பல ஸ்தலங்கள் சென்று பலமுறை செய்யலாம். தவறொன்றுமில்லை.

கேள்வி: ஆலயம் செல்ல இயலாத பொழுது மானசீகமாக இறைவனை வணங்குவது ஏற்புடையதா?

தாராளமாக. ஒருவன் ஆலயம் சென்று வணங்குவதே பக்தி வளர வேண்டும் என்பதற்காகத்தான். ஆலயம் சென்று வேறு எங்கோ கவனம் இருப்பதை விட வேறு எங்கு இருந்தாலும் இறைவனிடம் கவனம் இருந்தால் அதும் வழிபாடுதானப்பா.

தச வாயுக்கள்

  1. உயிர் காற்று (பிராணன்) – மூக்கின் வழியே நடைபெறும் சுவாசம்.
  2. மலக் காற்று (அபானன்) – கழிவுகளை கீழ்நோக்கி தள்ளும்.
  3. தொழிற் காற்று (வியானன்) – நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை கொண்டுசெல்லும்
  4. ஒலிக் காற்று (உதானன்) – இரைப்பையிலிருந்து உணவின் சாரத்தை வெளிப்படுத்தும்
  5. நிரவுக் காற்று (சமானன்) – சத்துக்களை உடல் முழுதும் சம அளவில் கொண்டு சேர்ப்பது.
  6. விழிக் காற்று (நாகன்) – பார்வைத் திறன் அளிப்பது உணர்ச்சிகளை தூண்டக் கூடியது
  7. இமைக் காற்று (கூர்மன்) – கண்ணீரை வரவழைத்தல் சிரித்தல் போன்றவைகளுக்கு காரணமாக உள்ளது.
  8. தும்மல் காற்று (கிருகன்) – நாவில் சுரப்பையும் பசி தும்மலுக்கு காரணம்
  9. கொட்டாவிக் காற்று (தேவதத்தன்) – கொட்டாவி விடுதல் விக்கலுக்குக் காரணம்
  10. வீங்கக் காற்று (தனஞ்செயன்) – நினைவற்ற நிலையில் உடலை வீங்கச் செய்தல் (பெருக்க குறைக்க) போன்றவைகளுக்குக் காரணம்

உடலில் இந்த தச வாயுக்கள் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றன. இந்த பத்து வாயுக்களுடன் சில துணை வாயுக்களும் உடலில் செயலாற்றுகின்றன. அவை

முக்கியன் – உள் உறுப்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.
வைரவன் – கபத்தை உருவாக்கும்.
அந்திரியாமி – பிராணனை உருவாக்குதல்.
பிரவஞ்சனை – பிராண வாயுவின் நண்பன் இக்காற்றின் துணையுடன் தான் சுவாசம் நடக்கிறது.

இந்த பத்து காற்றுகளும் ஒரு மனிதன் இறக்கும் போது என்ன செய்து கொண்டிருக்கும்? முதலில் இவ்வுடலை விட்டு பிரிவது உயிர்க் காற்றும் நிரவுக் காற்றும் மட்டுமே. இவைகள் பிரிந்தவுடன் மனிதன் இறந்து விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. மற்ற காற்றுகள் உயிரில்லாத அந்த சவ உடலில் இருந்து கொண்டிருக்கும். ஒருவர் இறந்து விட்டால் உயிர் சக்தி முழுவதும் உடனே உடலை விட்டுப் பிரிந்து விடுவதில்லை. இரண்டு வாயுக்கள் தவிர மற்ற 8 வாயுக்களும் இறந்த உடலில் 11 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை இருக்கும். அது வரை நமது சவ உடலில் முடியும் நகமும் வளரும். ஒரு சிறிய அளவில் உயிர் சக்தி இன்னும் செயல் பட்டுக் கொண்டிருப்பதை ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உடலை விட்டு 8 காற்றுகளும் ஒவ்வொன்றாக மெதுவாகவே வெளியேறும். சவ உடலை விட்டு வெளியேறும் வரையில் சவ உடலை வீங்க வைப்பதும் கெட்டுக் போக வைப்பதும் நவ துவாரங்களில் நுரை நீர் வரச் செய்தல் உடம்பை துர் நாற்றம் எடுக்கச் செய்தல் ஆகிய வேலைகளைச் செய்கிறது. எப்போது இந்த வேலை முடிகிறதோ அது வரை சவ உடலில் இக்காற்றுகள் இருக்கும். இறுதியாக தனஞ்செயன் என்ற காற்று வெளியேறும். தலையின் உச்சிக் குழி வெடித்து இது வெளியேறும்.

வள்ளலார் இப்படி நடக்கக்கூடாது என்றுதான் இறந்த உடலை புதைக்க சொல்கிறார். புதைக்காமல் எரித்து விட்டால் முதலில் செல்லும் அந்த இரண்டு வாயுக்களைத் தவிற மற்ற வாயுக்களின் வேலையை செய்ய விடாமல் தடுப்பதுடன் அதனை நெருப்பின் வெப்பம் தாங்காமல் துன்பப்படுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றியது போலாகும். எரித்தல் நிகழ்வின் போது இறுதியாகச் செல்லக் கூடிய தனஞ்செயன் வாயு இடுகாட்டில் தீ மூட்டியவுடன் பாதி உடம்பு வெந்தப் பின்பு வெப்பம் தாங்காமல் டப் என்று சப்தத்துடன் வெடித்து வெளியேறும். இந்த தனஜய வாயுவின் உதவியுடன் பல ஞானிகள் யோகிகள் இறந்த நபரை மீண்டும் உயிருடன் வரச் செய்திருக்கிறார்கள்.

பல யோகிகள் ஞானிகள் உடலை விட்டு விட நினைக்கும் போது தங்களது யோக சாதனைகளால் தமது உடலில் உள்ள தனஞ்செயன் உட்பட அனைத்து வாயுக்களையும் முழுமையாக எடுத்துக் கொண்டு உடலை விட்டு விலகுவார்கள். தமது உடலில் எவ்வகையிலும் தாம் ஒட்டிக் கொண்டிருக்க விரும்பாமல் இப்படிச் செய்வார்கள். இதன் காரணமாகவே இவர்களது உடல் எத்தனை வருடங்களானாலும் கேட்டுப் போகாமல் இருக்கும்.

ஜீவ சமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்து வித வாயுக்களுமே வெளி வருவது இல்லை. காரணம் இவர்கள் விரும்பும் போது அல்லது உலக நன்மைக்காக இவர்கள் மீண்டும் இவ்வுலகில் அந்த உடலுடன் வெளி வருவார்கள். காற்றுடன் ஜீவ சமாதியில் இருப்பவர் யார் காற்றை எடுத்துக் கொண்டு உடலை விட்டுச் சென்ற ஞானிகள் யார் என்பதை சராசரி மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 258

கேள்வி: ஒருவருக்குப் பணியில் நல்ல சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எந்த இறையிடம் பிராத்தனை வைக்க வேண்டும்?

இறைவன் கருணையாலே இறை வழியில் நாங்கள் வழி முறைகளைக் கூறினால் அது மனிதர்களுக்கு ஏற்புடையதாக இராது. அந்தந்த நிறுவனத்திலே யார் அந்த அதிகாரம் பெற்று இருக்கிறானோ அவனைப் பார்த்து சரியாக கவனிக்க வேண்டியதைத் தவிர (பணியில் பொறுப்பாக இருந்து செயல்படும் செயல்கள்) வேறு வழி இருப்பதாக இத்தருணம் யாங்கள் நினைக்கவில்லை. எனவே இதற்கு ஒரே மார்க்கம் எனறு நாங்கள் கூறினால் அப்படியெல்லாம் அந்த மனிதன் (இருக்க வேண்டும்) என்றுதானே இருக்கிறது விதியில். அதை மாற்ற வேண்டுமானால் நவக்கிரகங்களிடம் இறை அருளாணையிட வேண்டும். ஆனால் இன்னொன்று பதவி உயர்வு என்பது உண்மையில் உயர்வு என்று மனிதன் எண்ணுகிறான். மனசாட்சி உள்ள மனிதனுக்கு நேர்மையான மனிதனுக்கு இந்தக் கலிகாலத்தில் பதவி உயர்வு என்பது ஒரு வகையான தண்டனை. இறைவன் அருளாலே குருவாரம் சனகாதி முனிவரோடு குரு தட்சிணா மூர்த்தியை மெளனமாக குரு தட்சிணா மூர்த்தியின் அஷ்டகத்தை ஓதி விரதமிருந்து வழிபட்டால் ஒரு வேளை இது வேண்டும் என்று எண்ணுகின்ற ஆத்மாக்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு ஆசிகள்.

கேள்வி: சித்தர் பெருமக்கள் கூறும் இரண்டும் எட்டும் யாது? இதன் மூலம் இறை நிலையை அடைய முடியுமா?

ஏதும் இல்லாத ஒன்றுக்குத்தான் அத்தனை வார்த்தைகளும் அத்தனை விதமான வாக்கியங்களும் பூட்டப்பட்டுள்ளன. ஏதுமே இல்லாத சூன்யத்தை அந்த சூன்யத்திற்கு ஏதாவது பெயரிட வேண்டுமே என்று பரம் பொருள் என்றும் அந்தப் பரம் பொருளிலிருந்து மனிதனுக்கு புரிந்துக் கொள்ளக் கூடிய வடிவங்களாகிய இறைவன் வடிவங்கள் அதற்கு நாமங்கள் என்று பெயரிடப்பட்டு இருக்கின்றன. எனவே ஒட்டு மொத்தமாக நீ ஏதிலிருந்து எதைக் கூறினாலும் அல்லது கூறிக் கொண்டே சென்றாலும் கூட அதன் பூர்த்தி அந்தம் முடிவு நீக்கமற நிறைந்துள்ள அந்தப் பரம் பொருளைதான் குறிக்கிறது. அதை நோக்கிச் செல் செல்வதற்குண்டான முயற்சியை செய் என்பதுதான் அனைத்திற்கு அடிப்படை ஆகுமப்பா.

சுலோகம் -145

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-26

ஆத்ம ஞானம் உள்ளவன் குறைவாக அறிவு கொண்டவர்களிடம் அவர்கள் கர்மம் இயற்றும் போது புத்தி பேதத்தை ஏற்படுத்தக் கூடாது. தானும் கர்மயோகத்தில் ஈடுபட்டு அவர்களையும் ஈடுபட வைத்தல் வேண்டும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆத்ம ஞானம் பெறாதவர்கள் இங்கு குறைவாக அறிவு கொண்டவர்கள் என்று குறிப்பிடப் படுகிறார்கள். இவர்கள் தங்களுக்கான செயலை நம்பிக்கையுடன் செய்யும் போது ஞானம் பெற்றவர்கள் அதனை சரி இல்லை என்றோ அவர்களின் நம்பிக்கையிலோ குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. ஞானம் பெற்றவர்கள் சரியான செயலை தொடர்ந்து செய்து கொண்டே இருந்து அதன் வழியாக ஞானம் பெறாதவர்களையும் சரியான வழியில் அவர்களுக்கு உண்டான செயலை செய்ய வைக்க வேண்டும்.

சுலோகம் -144

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-25

பாரத குலத்தில் தோன்றியவனே ஞானம் இல்லாதவர்கள் பற்றுடன் கர்மங்களை செய்வார்கள். அதுபோல ஆத்ம ஞானம் பெற்றவன் பற்றில்லாமல் உலக நன்மையை கருத்தில் கொண்டு கர்மம் இயற்ற வேண்டும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் ஆத்ம ஞானம் பெறாத அனைவரும் தனக்கு என்று பற்றுடன் ஏதேனும் ஒரு செயலை செய்து கொண்டே இருப்பார்கள். ஆத்ம ஞானம் பெற்றவர்கள் தனக்கு என்று பற்றில்லாமல் உலக நன்மைக்கு என்று செயலை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

மூன்று மார்பகங்கள் கொண்ட மீனாட்சி அம்மன்

சிவப் புராணத்தில் உள்ளபடி மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னன் மலையத்துவசன் காஞ்சனமாலை தம்பதியர் வேள்வி செய்து பெற்ற தவப்புதல்வி ஆவாள். இவளே சுந்தரேஸ்வரரின் மனைவியும் ஆவாள். மீனாட்சி அம்மனை தடாதகை பிராட்டி எனவும் அழைக்கப்பட்டதாக சில கூற்றுகள் இருக்கின்றன. பிறப்பில் மீனாட்சி அம்மனுக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன. தன்னை திருமணம் செய்துக் கொள்ள போகும் மணவாளனை பார்த்த பிறகு தனது மூன்றாவது மார்பகம் மறைந்து போகும் எனும் நிலை கொண்டிருந்தார். கயிலை மலையில் சிவனை கண்ட பிறகு மீனாட்சி அம்மனின் மூன்றாவது மார்பான நடுமார்பு மறைந்தது என சிவப்புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. மீனாட்சி அம்மன் மிகுந்த வீரம் கொண்ட பெண்ணாக இருந்துள்ளார். தனது தந்தை இறந்த பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படையுடன் கிளம்பி கயிலை மலை வரை சென்று வென்று வந்தார் என திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கயிலை மலையில் சிவனை கண்டு வெட்கம் கொண்ட பெண் நிலையை மீனாட்சி அம்மன் அடைந்த பிறகு மூன்றாவது மார்பான நடுமார்பு மறைந்தது. சிவனையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டார். இன்றளவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடந்த பிறகே சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடைப் பெற்று வருகின்றன.