33. அட்டமாசித்தி உபதேசித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் அட்டமாசித்தி உபதேசித்த படலம் முப்பத்தி மூன்றாவது படலமாகும்.

இறைவனான சிவபெருமான் கயிலாயத்தில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது உமையம்மை அவர் பக்கத்திலேயே அமர்ந்து இறைவனாருக்கு வெற்றிலைச் சுருளை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இறைவனார் சிவகணங்களுக்கும் பெருந்தவ முனிவர்களுக்கும் போக மூர்த்தியாய் அமர்ந்து சிவ கதையினை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திகைப் பெண்கள் அறுவரும் கயிலாய மலைக்கு வந்தனர். இறைவனாரிடம் எம்பெருமானே தாங்கள் எங்களுக்கு அட்டமா சித்தியை உபதேசித்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். கார்த்திகைப் பெண்களின் வேண்டுதலைக் கேட்ட இறைவனார் உமையம்மைச் சுட்டிக் காட்டி உலகத்தின் அன்னையான இவ்வம்மை தன்னுடைய பூரணத் தன்மையால் உலகெங்கும் பராசக்தியாகவும் மகேஸ்வரியாகவும் எங்கும் நிறைந்திருக்கிறாள். அட்டாமா சித்திகள் இவளைப் பணிந்து வழிபட்டு பணிவிடைகள் செய்யுங்கள். நீங்கள் இவ்வம்மையை வழிபட வழிபட அட்டமா சித்திகளை இவள் உங்களுக்கு அருளுவாள் என்று சொல்லி அட்டமா சித்திகள் பெரும் வழியை சொல்லிக் கொண்டிருந்தார். இறைவன் சொல்வதை அவர்கள் கவனக் குறைவாக கேட்டுக் கொண்டிருப்பதை இருப்பதை இறைவன் கண்டு கொண்டார். இந்த கவனக் குறைவால் ஏற்பட்ட வினையால் கார்த்திகைப் பெண்கள் உமையம்மையை வழிபட மறந்தார்கள். இதனைக் கண்ட இறைவனார் நீங்கள் கவனக்குறைவாக இருந்ததாலும் உமையம்மையை அலட்சியப்படுத்தியதாலும் பட்டமங்கை என்னும் தலத்தில் கற்பாறைகளாகக் கிடக்கப் பெறுவீர்கள் என்று சாபம் அளித்தார். இதனைக் கேட்டதும் கார்த்திகைப் பெண்கள் தங்களின் சாபம் எவ்வாறு நீங்கும் என்று இறைவனாரை கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அவர் ஆயிரம் ஆண்டுகள் கழித்து யாம் மதுரையிலிருந்து வந்து உங்களுக்கு சாபம் நீக்கி அட்டமா சித்தியை உபதேசிக்கிறேன் என்று கூறினார்.

கார்த்திகைப் பெண்கள் பட்டமங்கலம் என்னும் தலத்தில் கற்பாறைகளாகக் கிடந்தார்கள். இந்த ஆயிரம் வருடத்தில் கற்பாறைகளாக கிடந்த கார்த்திகைப் பெண்கள் உமையம்மையை முறைப்படி தியானித்து வழிபட்டு அட்டமா சித்திகள் அடையும் தகுதி பெற்றார்கள். ஆயிரம் வருடங்கள் கழித்து சொக்கநாதர் ஞானாசிரியராக வடிவம் கொண்டு பட்டமங்கலத்திற்கு வந்தார். இறைவனாரின் கடைக்கண் பார்வை பட்டதும் கற்பாறைகள் கார்த்திகைப் பெண்களாக மாறினார்கள். இறைவனார் அப்பெண்களின் தலைமீது தன்னுடைய கையினை வைத்து அணிமா மகிமா இலகிமா கரிமா பிராப்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் ஆகியஅட்டாமா சித்தியை உபதேசித்தார். பின்னர் திருகையிலாய மலையை அடைந்து சிவப்பேறு பெற்றனர்.

  1. அணிமா என்பது மிகச்சிறிய உயிரினத்திலும் சிறுமையாகச் சென்று தங்குவது அணிமா ஆகும்.
  2. மண் முதல் சிவதத்துவம் வரையிலான முப்பத்தாறு தத்துவங்களிலும் உள்ளும் புறமும் நீங்காமல் நிறைந்திருப்பது மகிமா ஆகும்.
  3. மேருமலையைப் போல கனத்திருக்கும் யோகி இலேசான பரமாணுவைப் போல் கனமற்று இருப்பது இலகிமா ஆகும்.
  4. லேசான பரமாணுவைப் போல் மெலிந்திருக்கும் யோகி மேருமலையின் பாரம் போல் கனப்பது கரிமா ஆகும்.
  5. பாதாளத்தில் இருக்கும் ஒருவன் நினைத்த மாத்திரத்தில் பிரம்மலோகம் சென்று மீண்டும் பாதாளத்தை அடைவது பிராத்தி ஆகும்.
  6. வேறு உடலிற் புகுதலும் விண்ணில் சஞ்சரித்தலும் தான் விரும்பிய இன்பங்கள் அனைத்தையும் தான் இருக்கும் இடத்திற்கு வரவழைத்தல் பிராகமியம் ஆகும்.
  7. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் தம் இச்சைப்படி இயற்றி சூரியன் முதல் ஒன்பது கோள்களும் ஏவல் கேட்க வீற்றிருப்பது ஈசத்துவம் ஆகும்.
  8. எல்லாவகை உயிர்களையும் இந்திரன் உள்ளிட்ட திக்பாலர்களையும் தன் வசமாகக் கொள்வது வசித்துவம் ஆகும்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எதிலும் கவனக்குறைவாக இருப்பதும் அலட்சியமாக இருப்பதும் கேட்டை விளைவிக்கும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 454

கேள்வி: செய்வினை பில்லி சூனியம் சாத்தியமானதா?

இறைவன் அருளால் எப்படி மனிதர்கள் விஞ்ஞானத்தை வைத்து தவறான செயல்களை செய்ய கற்றுக் கொள்கிறார்களோ அதைப்போல மந்திரங்களை வைத்துக் கொண்டு கெடுதி செய்யவும் மனிதன் கற்றுக் கொண்டிருக்கிறான். இவையனைத்தும் சாத்தியமே. ஆனால் இவைகளில் உள்ள நுட்பத்தை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் செய்வினைதான் என்று அச்சப்பட தேவையில்லை. இன்னொன்று செய்வினையால் ஒரு மனிதன் பாதிக்கப்பட வேண்டுமென்றால் அதுவும் ஜாதகப்படிதான் நடக்கும். அடுத்ததாக இதைப்பற்றி அறிந்த மனிதர்கள் இந்த ஆற்றல் பெற்ற மனிதர்கள் மிகக் குறைவு. மற்றபடி தெரிந்ததாகக் கூறி தனம் பறிக்கும் மனிதர்களே அதிகம். எனவே இது குறித்து மனிதன் குழப்பம் அடைய வேண்டாம். ஆலயம் சென்று வழிபாடு செய்வதும் தர்மங்களை செய்வதும் சித்தர்களிடம் வந்தால் மீண்டும் மீண்டும் தர்மத்தைதானே கூறுகிறார்கள் என்று மனிதன் சலிப்படையலாம். மனிதர்கள் எத்தனைதான் சலிப்படைந்தாலும் விரக்தியடைந்தாலும் யாங்கள் மீண்டும் மீண்டும் எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் எல்லா உயிர்களுக்கும் நல்லதும் வேண்டிய உதவிகளும் செய்ய வேண்டும் தர்மத்தை செய்ய வேண்டும் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்றுதான் கூறுவோம். இப்படி செய்து கொண்டே இருந்தால் எந்த செய்வினையும் யாரையும் பாதிக்காது.

32. வளையல் விற்ற படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வளையல் விற்ற படலம் முப்பத்தியிரண்டாவது படலமாகும்.

முன்னொரு காலத்தில் தாருகாவனத்தில் இருந்த முனிவர்களின் மனைவியர்கள் தங்களைப் போன்று அழகிலும் கற்பிலும் சிறந்த பெண்கள் வேறு எங்கும் இல்லை என்று கர்வம் கொண்டிருந்திருந்தார்கள். இறைவனான சிவபெருமான் அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணினார். எனவே அவர் பிட்சாடனார் வடிவம் கொண்டு அழகில் மன்மதனைப் போல கையில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி தாருகாவனத்திற்குச் சென்றார். தாருகாவனத்து முனிவர்களின் மனைவியர்கள் பிட்சாடனாரின் அழகில் மயங்கி செய்வதறியாது மயக்கத்தில் அவரைத் தொட வேண்டுமென்று அவரின் அருகில் சென்றார்கள். ஆனால் சிவபெருமான் அவர்களின் கைக்கு எட்டாமல் எட்டி எட்டிப் போனார்.  தவசியே நில்லுங்கள் நில்லுங்கள் எனக் கூவியபடி சிலர் பின் தொடர்ந்தார்கள்.  சிலர் பிட்சையாக பால் நெய் தயிர் தேன் சர்க்கரை என்று கொடுக்க சென்றார்கள். பிட்சாடனார் தாருகாவனத்தை விட்டுச் சென்ற பின்னும் பெண்கள் மதி மயக்கத்திலிருந்தனர். தாருகாவனத்து முனிவர்கள் தங்கள் மனைவியர்களின் செயல்களைக் கண்டு ஆச்சரியமடைந்து மயக்கத்திற்கான காரணத்தை தங்களின் தவ வலிமையால் கண்டறிந்தார்கள். பெண்களின் இந்நிலைக்கு காரணம் மதுரை சொக்கநாதர் என்பதை அறிந்த அவர்கள் அப்பெண்களை மதுரையில் அழகு வாய்ந்த வணிக மகளிர்களாய் பிறக்குமாறு சாபம் அளித்தனர். அப்பெண்கள் தங்களின் சாபம் எவ்வாறு விலகும் என்று முனிவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள் யாருடைய ஸ்பரிசத்துக்காக அலைந்தீர்களோ அந்த சொக்கநாதர் வளையல் வியாபாரியாக வந்து உங்களுக்கு வளையல்கள் அணிவித்ததும் நீங்கும் என்று கூறினர். தாருகாவனத்து முனிவர்களின் சாபத்தினால் அவர்களுடைய மனைவியர்கள் மதுரையில் வணிகப் பெண்களாக அவதரித்தனர். அவர்கள் வளர்ந்து பேரழகுடன் மணப் பருவம் எய்தினர்.

ஒரு நாள் சொக்கநாதர் வளையல் வியாபாரியாக பட்டு நூலில் வளையல்களைக் கோர்த்துக் கொண்டு வணிக வீதிக்கு எழுந்தருளினார். வளையல் வாங்குங்கள் வளையல் வாங்குங்கள் என்று வளையல் வியாபாரி கூறினார். வளையல் வியாபாரின் குரலால் ஈர்க்கப்பட்ட வணிகப் பெண்கள் வீதிக்கு வந்தனர். வளையல் வியாபாரியின் மேல் ஈர்ப்பு கொண்டு அவரிடம் தங்களுக்கு வளையல்கள் அணிவிக்கும்படி கூறினார்கள். வளையல் வியாபாரியாக வந்த சொக்கநாதர் அவர்களுக்கு வளையல்களை அணிவித்தார். வணிகப் பெண்கள் வளையல்களை உடைத்துவிட்டு மீண்டும் வளையல்களை அணிவிக்க வியாபாரியைக் கேட்டுக் கொண்டார்கள். சொக்கநாதரும் அவர்களுக்கு வளையல்களை அணிவித்தார். வணிகப் பெண்கள் தாங்கள் அணிந்து கொண்ட வளையல்களுக்கு உரிய விலையைப் பெற்றுச் செல்லுமாறு கூறினர். அதற்கு இறைவனார் நாளைப் பெற்றுக் கொள்வதாகக் கூறி திருக்கோவிலுக்குள் சென்று சிவலிங்கத்துள் மறைந்தருளினார். வளையல் வியாபாரியின் பின் சென்ற பெண்கள் நடந்தவற்றைக் கண்டு அதிசயித்தனர். தங்களின் சாபம் நீங்கப் பெற்று மதுரையில் நீண்ட நாட்கள் வசித்து பேறு பெற்றார்கள். இன்றைக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வளையல் விற்கும் திருவிழா மிகவும் பிரசித்தமானது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

கர்வம் தண்டனையைப் பெற்றுத் தரும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 453

கேள்வி: எலுமிச்சையை வேலின் மீது குத்துவது நல்லதா?

வேலை எடுத்து மனிதன் மீது குத்தலாம் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது. இறைவனின் அருளாலே கூறவருவது என்னவென்றால் அரசக்கனி எனப்படும் எலுமிச்சம் பழத்தின் ஆற்றல் எத்தனையோ இருக்கிறது. இறைவனை பூஜை செய்யும் பொழுது கனி வகைகளில் புஷ்பங்களில் பதார்த்தங்களில் அரசக்கனி அவசியம் வைக்கப்பட வேண்டும். இறைவனுக்கு பரிபூரண பூஜையை செய்யும் பொழுது ஏராளமான அரசக்கனியை இறைவன் திருவடிகளில் வைத்து ஆரமாக கோர்த்து இறைவனுக்கு அணிவிப்பதும் நல்லதொரு பலனைத் தரும். அதோடு மட்டுமல்லாமல் இல்லத்தில் தோஷம் வாஸ்து குறைபாடு அதர்வண குற்றம் செய்வினை தோஷம் பிரச்சினை சண்டை மனஸ்தாபம் உடல் பிணி என்றெல்லாம் மனிதன் வருந்துகிறானே? இவர்கள் அதிக அளவு அரசக்கனியால் இறைவனை ஆராதனை செய்து எத்தனை கனிகள் கொண்டு இறைவனை வணங்குகிறானோ அதில் பாதி கனிகளை இறைவனின் திருவடியில் வைத்துவிட்டு மீதி கனிகளை இல்லத்தில் வைத்து தூப தீபங்கள் காட்டி வழிபாடு செய்தால் மேற்கூறிய தோஷங்கள் குறையும். அந்தளவில் அரசக்கனியை ஏற்றுக்கொள்ளலாம். எங்கு சென்றாலும் பூஜை செய்து அருகம்புல் எடுத்து செல்வது போல அரசக்கனியையும் உடன் எடுத்து செல்வது ஆக்கபூர்வமான ஒரு பாதுகாப்பு வளையத்தை தரும். எனவே அதிக இறையாற்றலை பெற்றுத் தரக்கூடிய கனிகளில் அரசக்கனியும் ஒன்று.

அரசக்கனி வைத்திருந்தால் நல்ல பலன்கள் உடன் நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசக்கனியை வலது உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டு அதிக அளவு மந்திர ஜபத்தை உருவேற்றினால் அந்த அரசக்கனியினால் மனிதனுக்கு நற்பலன்கள் ஏற்படும். அதைப்போல இறைவனின் பிரசாதமான அரசக்கனியை காய்ந்த பிறகு தூக்கி எறிவதா? அல்லது அதனை உட்கொள்ளலாமா? என்றால் கனிச்சாறாக தாராளமாக உட்கொள்ளலாம். தவறொன்றுமில்லை. சில அரசக்கனிகளை மட்டும் பூஜைக்கு வைத்துக் கொள்ளலாம். எனவே இந்த அடிப்படையில் அரசக்கனியை ஆதரிக்கிறோம் வேறு அடிப்படையில் அல்ல.

31. உலவாக்கிழி அருளிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உலவாக்கிழி அருளிய படலம் முப்பத்தி ஒன்றாவது படலமாகும்.

குலபூஷண பாண்டியன் சிவபக்தியில் சிறந்தவனாக இருந்தான். தன்நாட்டு மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தான். இதனால் அவனுக்கு தன்னை விடச் சிறந்தவன் யாரும் இல்லை என்ற அகந்தை உருவானது. இதனால் இறைவனார் குலபூஷண பாண்டியனின் அகந்தை அளித்து அவனுக்கு நற்கதி அளிக்க எண்ணினார். குலபூஷண பாண்டியனின் அகந்தை காரணமாக மதுரையில் மழை பொய்த்தது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் சரிவர விளைச்சலைத் தரவில்லை. இதனால் மதுரை மக்களுக்கு உணவு தட்டுப்பாடு வந்தது. மக்களை பசித்துயர் வாட்டியது. இதனைக் கண்ட குலபூஷண பாண்டியன் திருக்கோவிலை அடைந்து இறைவனிடம் நான் தவறாது சிவவழிபாட்டினை மேற்கொண்டு வருகிறேன். மக்களையும் நல்ல முறையில் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறேன். ஆனால் மதுரையில் மழை பொழிவு குறைந்ததால் பயிர்கள் சரிவர விளையவில்லை. மக்கள் பசியால் வருந்துகின்றனர். படைகளை அழைத்து வருகிறேன் என்று சுந்தர சாமந்தன் கஜானாவில் இருந்த பொன்னையும் கோவிலை புதுப்பிக்கவும் மக்களுக்கு சேவை செய்யவும் பயன் படுத்தி விட்டான். அரசின் பணம் அனைத்தும் உனக்காகவும் உன் அடியார்க்காகவும் தானே செலவழிந்திருக்கிறது. ஆகையால் தாங்கள் எங்களுக்கு நல்வழி காட்டுங்கள் என்று மனமுருக வேண்டினான். பின் அரண்மனையை அடைந்து பணிகளைக் கவனித்து இரவில் தூங்கச் சென்றான்.  தூக்கத்திலும் குலபூஷண பாண்டியன் இறைவனை வேண்டினான். அவனது கனவில் தோன்றிய இறைவனார் குலபூஷண பாண்டியா இதோ இந்த உலவாக்கிழியைப் (பொற்கிழி) பெற்றுக் கொள். இதிலிருந்து அள்ள அள்ளக் குறையாத பொற்காசுகளை எடுத்து மதுரை மக்களின் துயரினைப் போக்கு என்று அருளினார்.

குலபூஷண பாண்டியன் கண் விழித்துப் பார்த்தான். தன் கையில் உலவாக்கிழி (பொற்கிழி) இருப்பதைக் கண்டான். உலவாக்கிழியை பார்த்ததும் குலபூஷண பாண்டியனின் மனதில் சொக்கநாதர் நம்மீது இத்தனை கருனையுடன் இருக்கிறார். ஆனாலும் மிகவும் மழை இல்லாமல் போனதற்கான காரணம் மற்றும் மக்களுக்கு துயர் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி ஏற்பட்டது. பின்னர் களைப்பில் மீண்டும் தூங்கினான். அப்போது அவன் கனவில் தோன்றி சொக்கநாதர் குலபூஷண பாண்டியா நீ என்னை காலம் தவறாமல் வழிபடுகிறாய். உன் மக்களை நன்கு பாதுகாக்கிறாய். ஆனால் உனக்கு உன்னைவிட சிறந்த பக்தன் உலகில் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அந்த அகந்தையே மதுரையில் மழை இல்லாமல் போனதற்கும் மக்களின் துயருக்கும் காரணம் ஆகும். உன்னுடைய அகந்தையால் உன்னுடைய மக்களும் துன்பமடைந்தனர் என்று கூறினார். குலபூஷண பாண்டியன் கண்விழித்து தன்னுடைய தவறிற்கான காரணத்தை அறிந்ததும் அவனுடைய அகந்தை அழிந்தது. உலவாக்கிழியில் இருந்த பொற்காசுகளை எல்லோருக்கும் வழங்கினான். பின்னர் மதுரையில் மழை பொழிந்து மக்களின் துயர் நீங்கியது. இறுதியில் குலபூஷண பாண்டியன் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

அகந்தை எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். அதனால் தானே சிறந்தவன் என்ற அகந்தை யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 452

கேள்வி: வீட்டில் குழலூதும் கிருஷ்ணன் ராதை பழனியாண்டி படங்களை வைத்து வணங்கலாமா?

யார் யாரோ படங்களை வைத்து வணங்குகிறார்களே அப்பனே அவற்றையெல்லாம் வணங்கும்போது வராத ஐயம் இவர்களை வைத்து வணங்கினால் ஏதோ அனாச்சாரம் வந்துவிடுமோ? என்று எண்ணுகிறார்களே? முதலில் இந்த பழக்கம் எதனால் ஏற்பட்டது தெரியுமா? மனிதர்களின் அச்சம் காரணமாக. ஆஞ்சனேயரை ஐயப்பனை வீட்டில் வைத்து வணங்காதே என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் இதில் வேறு உண்மை ஒன்று இருக்கிறது. கர்ப்பமான பெண்களின் மனோநிலை பதட்டமாகவும் மென்மையாகவும் இருக்கும். யாங்கள் கூறுவது உண்மையான பெண்களுக்கு. அந்த கர்ப்பமான பெண்களின் குழந்தையின் ஆரோக்யம் முக்கியம். வீட்டை சுற்றி சுகமான நறுமண சூழலும் சாத்வீக வாசகங்களும் சாத்வீக தெய்வ காட்சிகளும் இருந்தால் அந்தப் பெண்ணின் மனதில் பதிந்து குழந்தைக்கு ஆக்கபூர்வமான சிந்தனையைத் தரும். அதிபயங்கரமான காளி போன்ற ரூபங்களை வைத்தால் தேவையற்ற பயமும் அந்த பயத்தினால் சொப்பனமும் ஏற்படும். அது அந்தக் குழந்தையை பாதிக்கும். அந்த அடிப்படையில் பயங்கரமான தெய்வ ரூபங்களை வைக்காமல் இருந்தால் நல்லதே தவிர மற்றபடி இறைவனை எந்த வடிவத்தில் வணங்க எந்த மனிதனுக்கு பிடித்திருக்கிறதோ அந்த வடிவத்தை வீட்டில் வைத்து ஆத்மார்த்தமாக வணங்கலாம் தவறேதுமில்லை.