கேள்வி: ஆண் பிள்ளை இல்லாத நிலையில் ஒரு பெண் தன் முன்னோர்களுக்கு சிரார்த்தம் போன்றவற்றை செய்யும் முறை:
இறைவனின் கருணையால் முன்பே கூறியிருக்கிறோம். யாருக்கும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று. யாரை நினைத்து யார் வேண்டுமானாலும் இதுபோன்ற காரியங்களை செய்யலாம். அதோடு கூட தனக்குப் பின் வரும் வாரிசு செய்தால்தான் தன்னுடைய ஆத்மா கடைத்தேறும் என்ற நிலையில் ஒரு மனிதன் வாழக் கூடாது என்றும் நாங்கள் கூறுகிறோம். ஒரு பெண் தாராளமாக நடைமுறையில் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யலாம். சாஸ்திரம் அனுமதிக்கவில்லை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று யாராவது கூறினால் ஆத்மார்த்தமான வழிபாட்டை இல்லத்தில் செய்து நிறைய தர்மங்களை அந்தப் பெண் செய்தால் போதும்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம் ஐம்பத்தி எட்டாவது படலமாகும்.
மதுரைக்கு அருகில் திருவாதவூர் என்றொரு திருத்தலம் உள்ளது. அவ்வூரில் இறைவனின் அருளால் சுந்தரநாதர் என்பவருக்கு திருவாதவூரர் என்ற புதல்வன் பிறந்தான். அவர் தன்னுடைய பதினாறு வயதினிலேயே ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தெளிந்தார். வாதவூரடிகளின் கல்வித் திறமையைக் அறிந்த அரிமர்த்தன பாண்டியன் வாதவூராரை தன்னுடைய அவைக்கு வரவழைத்து மந்திரியாக்கினான். நாளடைவில் தன் திறமையின் காரணமாக மந்திரிகளுக்கு எல்லாம் முதன்மை மந்திரியாக வாதவூரார் விளங்கினார். ஆயினும் அவர் இம்மை மறுமைகளில் வெறுப்புக் கொண்டு இவ்வுலக வாழ்வில் தன்னை உய்விக்க தகுந்த குருவினை எதிர் நோக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒருசமயம் அரிமர்த்தன பாண்டியன் தன்னுடைய படைகளின் பலத்தினைப் பற்றி அவையோரிடம் விவாதித்துக் கொண்டிருந்தான். குதிரைப் படையில் குதிரைகளின் எண்ணிக்கை குறைவாகவும் வயதான குதிரைகளாவும் இருப்பதைக் கண்ட அரசன் வாதவூராரிடம் கருவூலத்தைத் திறந்து வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு கடல்துறையில் வந்திறங்கும் குதிரைகளில் சிறந்தவைகளை வாங்கி வருமாறு கூறினான். வாதவூரடிகளும் அரனின் ஆணையை ஏற்று கருவூலத்தைத் திறந்து வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு அரசனிடம் விடை பெற்று குதிரைகளை வாங்கப் புறப்பட்டார்.
திருக்கோவிலில் சென்று இறைவனாரை வழிபட்டு தந்தையே இப்பொருட்கள் யாவும் சரியான வழியில் பயன்படும்படி தாங்கள் எனக்கு அருளல் வேண்டும் என்று மனமுருக வழிபாடு மேற்கொண்டார். பின்னர் குதிரைகளை வாங்க புறப்பட்டார். இந்நிலையில் இறைவனார் வாதவூரடிகளுக்கு ஞானத்தை உபதேசிக்க எண்ணினார். எனவே அவர் அந்தண வடிவில் குருவாகி பல மாணவர்களோடு திருப்பெருந்துறையில் வாதவூரடியாரை எதிர்நோக்கி இருந்தார். திருப்பெருந்துறையை நெருங்கியதும் வாதவூரடிகளின் உள்ளம் மகிழ்ச்சி கொண்டது.
சிவபெருமான் குருவடிவில் பல மாணவர்களுக்கு வேதத்தின் உட்பொருளை ஞான முத்திரையால் விளக்கிக் கொண்டிருந்தார். குருநாதரை பார்த்த வாதவூரர் பிரமித்து ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றுவிட்டார். தன் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிய அவரை நோக்கிச் சென்றார். குருவின் வடிவிலிருந்த சிவபெருமான் கடைக்கண்ணால் வாதவூரரைப் பார்த்தார். வாதவூரர் அருகே சென்று குருவை வணங்க எம்பெருமான் வாதவூரர் சிரசில் கை வைத்து உட்கார் என்றார். எம்பெருமான் கைபட்டதும் தன் குடும்பத்தை தன் அலுவல் வேலை தான் வந்த காரியம் தான் இருக்கும் இடம் அனைத்தையும் மறந்து தன்னையே மறந்த நிலையில் இருந்தார் வாதவூரர். சூட்சும பஞ்சாட்சரத்தையும் ஸ்தூல பஞ்சாட்சரத்தையும் வேதத்தின் பொருளையும் கற்பித்தார். இறைவனாரின் அருட்பார்வையால் வாதவூராரின் மும்மலங்களும் நீங்கின. பின்னர் வாதவூராருக்கு ஞானத்தை வழங்கினார்.
இறைவனின் திருவருளால் வாதவூரடிகள் செந்தமிழ் பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டார். பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த இறைவனார் வாதவூரடிகளுக்கு மாணிக்கவாசகன் என்ற திருநாமத்தைச் சூட்டி நீ இங்கே சில காலம் தங்கி இருப்பாயாக. இங்கு நீ செய்ய வேண்டிய காரியங்கள் சில உள்ளன என்று திருவாய் மலர்ந்தருளினார். பின்னர் அவ்விடத்தை விட்டு மறைந்தார். இறைவனார் குருவாகி வந்து தனக்கு ஞானத்தை வழங்கிய இடத்தில் திருக்கோவிலைக் கட்ட எண்ணிய மாணிக்கவாசகர் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருட்களை அதற்குப் பயன்படுத்த திட்டமிட்டார். பின்னர் அரிமர்த்தன பாண்டியனுக்கு ஆடி மாதத்தில் குதிரைகளுடன் வந்து சேர்வதாக ஓலை அனுப்பிவிட்டு தன்னுடன் வந்த படைகளையும் திருப்பி அனுப்பினார். தான் எண்ணியவாறே திருக்கோவிலைக் கட்டி திருப்பணிகளை முடித்தார். ஆடி மாதமும் வந்தது. குதிரைகள் வராததைக் கண்ட அரிமர்த்தன பாண்டியன் குதிரைகள் இன்னும் ஏன் மதுரையை அடையவில்லை? என்று கேள்வி எழுப்பி ஓலை அனுப்பினான். பாண்டியனின் ஓலையைக் கண்டதும்தான் மாணிக்கவாசகருக்கு குதிரையைப் பற்றிய எண்ணம் வந்தது.
இறைவனிடம் ஐயனே பாண்டியன் குதிரை வாங்க கொடுத்த பணத்தை எல்லாம் கோவில் திருப்பணிகளுக்கு செலவிட்டுவிட்டேன். இனி நான் என்ன செய்வேன் மனமுருகி வழிபட்டார். அப்போது குதிரைகள் வரும் என்று பாண்டியனுக்கு செய்தி அனுப்பு என்று திருவாக்கு கேட்டது. மாணிக்கவாசகரும் இறைவனின் ஆணையின்படி மாணிக்கவாசகர் பாண்டியனுக்கு ஓலை அனுப்பினார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து யாம் குதிரைகளைக் கொண்டு வருகிறோம். நீ முன்னே சென்று மதுரையில் காத்திரு என்று மாணிக்கவாசகரின் கனவில் இறைவனார் அறிவுறுத்தினார். மாணிக்கவாசகரும் மதுரை சென்று பாண்டியனைச் சந்தித்து குதிரைகள் பின்னே வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். இறைவனாரின் வரவினை எதிர்நோக்கி மதுரையில் காத்திருந்தார்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
அன்பும் பக்தியும் நிறைந்து தகுதி பெற்றால் இறைவனே குருவாக வந்து ஆட்கொண்டு மும்மலங்களையும் நீக்கி உபதேசம் கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
சிவபெருமான் தட்சனின் மகள் சதிதேவிதை திருமணம் செய்ததைக் கண்டு வெகுண்ட தட்சன் சிவபெருமானுக்கும் சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் யாகம் ஒன்றை செய்தார். அங்கு அழைப்பின்றி வந்த தன்மகள் சதி தேவியின் முன்னால் சிவபெருமானை தட்சன் அவமானம் செய்தார். இதனால் சதி தேவியார் யாகத்தை அழிக்க யாககுண்டத்திலே விழுந்து மறைந்தார். அதனால் தட்சனை அழிக்கச் சிவபெருமான் தன் ஜடாமுடியிலிருந்து வீரபத்திரனை தோற்றுவித்தார். மேலும் வீரபத்திரன் மிகுந்த கோபம் கொண்டு பிரஜாபதி தட்சன் தலையைக் கொய்து பிரஜாபதி தட்சனின் யாகக் குண்டத்திலியே போட்டார். பின் தேவர்களின் மீது கோபம் கொண்டு அவரவர்க்கு உரிய தண்டனை தந்தார். ஈசன் தன் கருணையால் பிரஜாபதி தட்சன் தலைக்குப் பதில் அங்குள்ள ஒரு ஆட்டின் தலையை பொருத்தினார். பின் சதி தேவியின் உடலைச் சுமந்து பிரபஞ்சம் முழுதும் கோபத்துடன் சுற்றி திரிந்தார். அப்போது அவர் ஆடிய ருத்ரதாண்டவமே சதிதாண்டவமூர்த்தி எனப்படுகிறது. இதனைக் கண்ட மகாவிஷ்ணு தன் சுதர்சனத்தால் அன்னையின் உடலைப் பிரித்துச் சக்தி பீடங்களாக மாற்றினார்.
இந்த அரிய சோழர்கால சிற்பம் தற்போது கேரள மாநிலம் நேப்பியர் அருங்காட்சியகத்தில் உள்ளது.
இறைவன் இராவணனுக்கு அருளிய வடிவம் இராவண அனுக்கிரகமூர்த்தி. பத்து தலைகள் இருபது தோள்களுடன் விரிந்த மார்பை உடையவன் இலங்கை மன்னன் இராவணன். வானில் செல்லக் கூடிய தேரினை வைத்திருந்தான் இராவணன். ஒரு முறை கயிலை மலை வழியாக இராவணன் தேரில் சென்றபோது தேர் மேற்கொண்டு நகர தடையாக மலை இருப்பது கண்டு இறைவன் வீற்றிருக்கும் மலை என்று மதிக்காமல் மலையைப் பெயர்க்க எண்ணி மலையை அசைத்தான். மலை அசைவதைக் கண்ட உமையவள் அஞ்சினாள். இதை உணர்ந்த சிவபெருமான் தன் கால் விரலை ஊன்றி அழுத்த இராவணன் உடல் அதில் சிக்குண்டு இரத்தம் பெருக்கெடுத்தது. அவன் ஆணவம் ஒழிய தன் கையிலிருந்த நரம்பை வீணையாக்கி இறைவனை நோக்கி பண் நிறைந்த பாடல்களைப் பாடினான். அவன் பக்திக்கு மகிழ்ந்த பெருமான் காட்சியளித்து தேர் நீண்ட ஆயுள் வாள் ஆகியன அளித்து அருள் புரிந்தார். தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்த கயிலையை ஆணவத்தால் பெயர்த்தெடுக்க முனைந்த இராவணனை அவன் செருக்கு அழியும் வண்ணம் தண்டித்து அருள் புரிந்த வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி. இடம் மதுரை மீனாட்சிஅம்மன் கோவில்.