சிவனை வழிபடும் கிளி

திருவாருரில் உள்ள திருவீழிமிழலை சிவத்தலத்தில் இன்றும் கிளி சுவாமியை வழிபட்டு செல்வதற்காக அக்காலத்திலேயே தனியாக கட்டுமானத்தில் ஒரு ஓட்டை வைத்திருக்கிறார்கள். இப்பொதும் இந்த ஓட்டை வழியாக கிளி வந்து வழிபட்டு செல்கிறது.

இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள்

ஒரு சமயம் இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள் பிராமணர் அல்லாத ஒருவருக்கு ஈமக் கடன்களைச் செய்தார். அதனால் அவ்வூரில் இருந்த பிராமணர்களும் அவரது உறவினர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர். இதைக் கேட்ட இராமானுஜர் குரு காரணம் இல்லாமல் எதனையும் செய்ய மாட்டார். ஆகவே அந்த காரணத்தை தெரிந்து கொள்ள அவர் இல்லம் சென்றார். இராமானுஜர் வந்த காரணத்தை அறிந்து கொண்ட குரு பெரிய நம்பிகள் அதற்கான காரணத்தை கூறினார்.

பிராமணர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட முறைப்படி பிராமணன் ஒருவன் பிராமணன் அல்லாதவனுக்கு ஈமக் கடன்கள் செய்வது என்பது பொருத்தமற்ற செயல் தான். இதனை பிராமணர்கள் வகுத்த விதிகள் ஏற்றுக் கொண்டாலும் அதனை அற நூல்கள் ஏற்றுக் கொள்ளாது. அறம் என்பது என்ன என்று தெரியுமா? சான்றோர்கள் உலகியலில் எவ்வாறு தர்மத்திற்குக்கு ஏற்ப நடந்து கொண்டார்களோ அதுவேதான் அறம் எனப்படும். பறவை குலத்தில் பிறந்த ஜடாயுவுக்கு இராமன் இறுதிச் சடங்கினைச் செய்தான். சத்ரிய குலத்தில் பிறந்த தர்மர் நான்காம் வருணத்தில் பிறந்த விதுரரைப் போற்றி வழிபட்டார். உண்மை பக்தனுக்கு சாதி ஏது? மதம் ஏது? என்னால் ஈமக் கடன்கள் செய்து தீயில் இடப்பட்டவன் என்னை விட பக்தியில் பல மடங்கு சிறந்தவன். அவனுக்கு இறுதிக் கடன் செய்து நான் பெரிய பேற்றினை பெற்றுள்ளேன் என்றார். பெரிய நம்பிகளின் பதிலைக் கேட்டு இராமானுஜர் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று அவரை விழுந்து வணங்கினார்.

லலிதாசனத்தில் சிவனும் பார்வதியும்

புதுக்கோட்டை மாவட்டம் 7ஆம் நூற்றாண்டில் மன்னன் நந்திவா்ம பல்லவன் காலத்தில் குன்றாண்டார் கோவில் குடைவரைக் கோவிலாக கட்டப்பட்டது. இக்கோயில் திருக்குன்றக்குடி என்றும் அழைக்கப்படும். கோவிலின் வலதுபுறத்தில் உள்ள அடிவாரத்தில் சிவபெருமானும் உமையம்மையும் லலிதாசனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள்.

சிந்தித்து பேச வேண்டும்

அஸ்தினாபுரம் அரண்மனை மாடத்தில் இருந்து அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் திரௌபதி. ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர். விதவைகள் அதிகமாக இருந்தனர். அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்டாள் திரௌபதி. இவை அனைத்திற்கும் தானே காரணம் என்று அவளது மனம் சொல்லியது. அப்போது கிருஷ்ணர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் அழத் தொடங்கினாள். அவளிடம் என்ன நடந்தது? என்று கேட்டார் கிருஷ்ணர். திரௌபதி அமைதியுடன் இருந்தாள். அவளின் எண்ணத்தை அறிந்த கிருஷ்ணர் பேச ஆரம்பித்தார்.

திரௌபதி விதி மிகவும் கொடூரமானது. நாம் நினைப்பது போல் வேலை செய்யாது. நம்முடைய செயல்கள் பேச்சுகள் சிந்தனைகளுக்கு ஏற்ப அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது. முடிவுகளையும் மாற்றுகிறது. நீ பழிவாங்க நினைத்தாய் வெற்றி பெற்றாய். துரியோதனனும் துச்சாதனனும் மட்டுமல்ல. அவர்களை சார்ந்திருந்த கௌரவர்கள் அனைவரும் மடிந்து விட்டனர். இப்போது என் வருத்ததுடன் இருக்கிறாய். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார். அதற்கு திரௌபதி என் காயங்களைத் ஆற்ற வந்தீர்களா அல்லது அதன்மீது உப்பு தூவ வந்தீர்களா? என்றாள். அதற்கு கிருஷ்ணர் திரௌபதி உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன். உனது தொலை நோக்கு பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன் என்றார். இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பா என்று கேட்டாள். இல்லை திரௌபதி நீ மட்டுமே காரணம் என்று கருதாதே. ஆனால் நீயும் ஒரு காரணம் என்றார். உன் செயல்களில் நீ கொஞ்சம் தொலை நோக்கு பார்வையைக் கொண்டிருந்தால் நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய் என்றார்.

நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா என்று கேட்டாள். நீ நிறைய செய்திருக்க முடியும். உனது சுயம்வரம் நடந்த போது கர்ணனை அவமானப்படுத்தாமல் போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்க கூடும். அதற்குப் பிறகு குந்தி உன்னை ஐந்து கணவர்களுக்கு மனைவியாக்கும்படி கட்டளையிட்டதை அப்போது நீ ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். அதற்கு பிறகு உன் அரண்மனையில் பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று துரியோதனனை அவமானப்படுத்தினாய். அவ்வாறு நீ சொல்லாதிருந்திருந்தால் நீ மானபங்கப்பட்டிருக்க மாட்டாய். அப்போதும் ஒருவேளை சூழ்நிலைகள் வேறு விதமாக இருந்திருக்கும். நம் வார்த்தைகள் கூட பல நேரங்களில் பல விளைவுகளுக்கு காரணமாகி விடும் திரௌபதி. பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு யோசித்து சிந்தித்து யாருடைய மனமும் காயம் அடைந்து விடுகிறதா என்று பார்த்து பேசுதல் வேண்டும். இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டு மல்ல உனது சுற்றுப் புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும் என்றார். திரௌபதியின் மனம் தனது தவறை சிந்தித்தது. சிறிது ஆறுதல் அடைந்து அமைதியானாள்.

மனிதனின் பற்களில் விஷமில்லை. ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே. எனவே வார்த்தைகளை அறத்துடன் பயன்படுத்த வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தாதபடி சிந்தித்து பேச வேண்டும். நல்லதை நினைத்து நல்லதை பேசி நல்லதை செய்தால் விதி நல்லதை நடந்திக் கொடுக்கும். இந்த கருத்து மகாபாரதம் கதைக்குள் மறைந்திருக்கிறது.

வீராசன தட்சிணாமூர்த்தி

ஒரு காலை மடித்தும் மற்றொரு காலை தொங்கவிட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தி இந்த சிற்பத்தில் வலது காலை முயலகன் மீது ஊன்றி தனது இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். இக்கோலத்திற்கு வீராசன தட்சிணாமூர்த்தி என்று பெயர். வலது செவியில் மகர குண்டலமும் இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழே அமர்ந்துள்ள சீடர்கள் வழக்கமான அஞ்சலி முத்திரையுடன் அமர்ந்திருப்பார்கள். இந்த சிற்பத்தில் சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். இடம்: திரிசூலநாதர் கோவில். திரிசூலம் சென்னை.

ஏலவார்குழலி

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்சுவரர் கோவில் வரலாற்றை விளக்கும் தூணில் உள்ள சிற்பம். ஒரு முறை சிவபெருமான் கைலாசத்தில் யோகத்தில் இருந்த போது பார்வதி தேவி ஈசனின் இரண்டு கண்களை விளையாட்டாக மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியன் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. நிலைமையைக் கண்ட பார்வதிதேவி தான் பெரும் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு வேண்டினாள். ஈசனோ செய்த தவறுக்குத் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறி பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து தன்னை நோக்கிக் கடுந்தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தைக் கேட்க ஈசன் காஞ்சிபுரம் ஸ்தலத்திற்குப் பார்வதிதேவியை அனுப்பினார். ஏலவார்குழலி என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் வந்து மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தைப் பிடித்து வைத்து அக்னியின் நடுவில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தின் வலிமையைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் தன் தலையில் சூடிக் கொண்டிருக்கும் கங்கையை தேவி தவம் செய்யும் இடத்தில் பாயுமாறு செய்தார். கங்கை வெள்ளமாகப் பாய்ந்து வர தான் பிடித்து வைத்திருந்த லிங்கம் கரைந்து விடும் என்று அஞ்சிய தேவி லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவ பெருமான் தேவிக்குக் காட்சி தந்து அவள் பாவத்தை மன்னித்து அருளி திருமணம் செய்து கொண்டார். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்.

திரிசூலநாதர் கோயில்

மூலவர் திரிசூலநாதர் வேறு பெயர் திரிச்சுரமுடையார். உற்சவர் சந்திரசேகரர். அம்பாள் திரிபுரசுந்தரி. தல விருட்சம் மரமல்லி. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இத்தீர்த்தம் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டது. தீர்த்தம் கோயிலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இந்த கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரே இறைவனின் பூஜைகள் வழிபாட்டுக்கு பயன் படுத்தப் படுகிறது. ஆகமம் காரணாகமம். ஊர் திரிசூலம் சென்னை. புராண பெயர் திருச்சுரம். இந்த திருத்தலத்துக்கு பல்லவபுரமான வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும் பழைய பெயர் உண்டு. இந்த பல்லவபுரம்தான் மருவி அருகில் உள்ள பல்லாவரம் பகுதி ஆனது. இதன் அடிப்படையில் முற்காலத்தில் பல்லவ மன்னர் ஒருவர் இங்கு முதலில் கோயில் கட்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனை இப்பகுதியில் கடந்த 1901 ஆம் ஆண்டு தொல்பொருள் துறையினர் நடத்திய ஆய்வில் கிடைத்த 14 கல்வெட்டுகளில் மிகப் பழைமையான முதலாம் குலோத்துங்க சோழன் (கிபி 1070 – 1120) காலத்திய கல்வெட்டு உறுதி செய்கிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இக்கோயிலுக்கு கடந்த 1960 ஆம் ஆண்டு கவியோகி சுத்தானந்த பாரதியார் உள்ளிட்ட பெரியோர் அடங்கிய குழுவினரால் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோயில் சென்னை விமான நிலையம் அருகே உள்ள திரிசூலத்தில் நான்கு மலைக் குன்றுகளுக்கு நடுவே உள்ளது. இந்த நான்கு மலைகளும் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. வேதத்தின் உட்பொருளாக அதன் நடுவே சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். இந்த சிவ ஸ்தலத்தை தனது ஆணவம் அடங்கும் பொருட்டு பிரம்மா நிர்மாணித்து வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஆகையால் இந்த ஸ்தலத்துக்கு பிரம்மபுரி என்றும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடப்பதற்காக லிங்க பிரதிஷ்டை செய்து நான்கு வேதங்களையும் சுற்றிலும் வைத்து பூஜை செய்தார். சிவபெருமானும் அவ்வாறே அவருக்கு அருள் செய்தார். லிங்கத்தைச் சுற்றியிருந்த நான்கு வேதங்களும் மலைகளாக மாறின. மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை சுரம் என்பர். எனவே சிவன் திருச்சுரமுடைய நாயனார் என்றழைக்கப்பட்டு பிற்காலத்தில் திரிசூலநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படுகிறது. பிரகாரத்தில் விநாயகர் சீனிவாசப் பெருமாள் காட்சி தருகின்றனர். வைகுண்ட ஏகாதசியின் போது சீனிவாசர் முத்தங்கி சேவையில் காட்சி தருவார். தனி சன்னதியிலுள்ள மார்க்கண்டேஸ்வரர் சோடச லிங்க (பதினாறு பட்டை லிங்கம்) வடிவில் காட்சி தருகிறார். காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகன் மற்றும் ஐயப்பன் ஆதிசங்கரர் சன்னதிகளும் உள்ளன. கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த சன்னதிக்குள் சிவன் அருகில் சொர்ணாம்பிகை அருள்கிறார்கள். திரிசூலநாதர் கருவறையில் சொர்ணாம்பிகை எழுந்தருளி இருப்பதற்கு ஒரு வரலாறு உண்டு. ஆரம்பத்தில் பிரதான அம்பிகையாக இருந்த சொர்ணாம்பிகை அந்நியர் படையெடுப்பின் போது வலது கையில் கட்டை விரல் சேதமடைந்தது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக் கூடாது என்று கூறி தனியே வைத்து விட்டார்கள். அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரி செய்து மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு அம்பாள் அருள் கூற அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே சொர்ணாம்பிகையை பிரதிஷ்டை செய்தார்கள். திரிசூலநாதரின் அருகே இடது புறத்தில் அவரை பார்த்தபடி நின்றபடி இருக்கிறார் சௌந்தராம்பிகை. இதனால் நேர்பார்வையில் சௌந்தராம்பிகையை தரிசிக்க முடியாது. அன்னையை முழுமையாக தரிசிக்க வேண்டும் என்றால் ஆண்கள் மேல்சட்டையின்றி கருவறைக்கு முன் உள்ள அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தால் அன்னையின் தரிசனத்தை பெறலாம்.

பிரதான அம்பிகை திரிபுரசுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். அம்பாளின் திருக்கரங்களில் அட்சத மாலையும் தாமரைப் பூவும் திகழ்கின்றன. இதன் மூலம் ஞானத்தையும் செல்வத்தையும் ஒருசேர அருள் பிரசாதமாகத் தருகிறாள் அன்னை திரிபுரசுந்தரி. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரிபுரசுந்தரி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக் கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கருவறைச் சுற்று மாடத்தின் மேல் பகுதிச் சுற்றில் பூத கண வரிசையும் அவற்றின் நடுவே சிவலிங்கத்தை பிரம்மன் வழிபடுதல், கண்ணப்ப நாயனார் பக்தி, சிவலிங்கத்தை அனுமார் வழிபடுதல், லிங்கத்தின் மேல் பால் சொரியும் பசுவின் சிற்பங்கள் போன்றவை செதுக்கப்பட்டுள்ளன. கருவறையை சுற்றியுள்ள தேவகோட்டங்களுக்கு மேலே மகரதோரண சிற்பங்களிலும் வாலி சுக்ரீவன் யுத்தம் போன்ற புராணக் கதைகளும் சோமாஸ்கந்தர் ரிஷபாரூட மூர்த்தி போன்ற இறை வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத் தூண்களிலும் காலசம்ஹார மூர்த்தி இருமுகம் கொண்ட சரபேஸ்வரர் காமாட்சி அம்மன் தவம் காளிங்க நர்த்தனம் உள்ளிட்ட அற்புத சிற்பங்களைக் காணலாம்.

கருவறைச் சுற்றுப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியரிடமும் தனிச் சிறப்புகள் உள்ளன. வழக்கமாக முருகனின் வாகனமான மயில் வலப்புறம் நோக்கி இருக்கும். ஆனால் இங்கு இடப்புறத்தை நோக்கியுள்ளது. அதோடு ஒரு காலை சற்றே தூக்கி பறக்கத் தயாராகும் நிலையிலும் காணப்படுகிறது. சிவன் கோஷ்டத்திலுள்ள விநாயகர் நாக யக்ஞோபவீத கணபதி என்றழைக்கப்படுகிறார். உடலிலுள்ள ஆறு ஆதாரங்களில் மூலாதார சக்தியான குண்டலினி நாக வடிவில் இருக்கிறது. இவரது சிலை சுவரைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் வீராசன தட்சிணாமூர்த்தி ஒரு காலை மடித்தும் மற்றொரு காலை தொங்கவிட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தி இந்த சிற்பத்தில் வலது காலை முயலகன் மீது ஊன்றி தனது இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். இக்கோலத்திற்கு வீராசன தட்சிணாமூர்த்தி என்று பெயர். வலது செவியில் மகர குண்டலமும் இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழே அமர்ந்துள்ள சீடர்கள் வழக்கமான அஞ்சலி முத்திரையுடன் அமர்ந்திருப்பார்கள். இந்த சிற்பத்தில் சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். நரசிம்மரின் உக்கிரம் தணிக்க வந்த சரபேஸ்வரர் தன் சுயரூபத்துடன் ஒரு தூணில் காட்சி தருகிறார். சரபேஸ்வரருக்கு சரபம் என்ற பறவையின் இறக்கை இருக்கும். ஆனால் இங்கே இறக்கை இல்லை. இரண்டு முகங்கள் இரு கைகளில் மான் மழு ஏந்தியுள்ளார். மற்ற இரு கைகளாலும் நரசிம்மரை பிடித்த கோலத்தில் உள்ளார். இத்தகைய அமைப்பில் சரபேஸ்வரர் வேறு எங்கும் இல்லை.

நவராத்திரி விழாவின் போது விசேஷ ஹோமம் மற்றும் 18 சுமங்கலிகள் 18 குழந்தைகளை வைத்து சுமங்கலி கன்யா பூஜைகள் நடத்தப்படும். தை ஆடி வெள்ளி நாட்களில் பூப்பாவாடை என்னும் வைபவமும் நடக்கிறது. இக்கோயிலுக்கு திருப்பணி செய்து 41 வேலி நிலங்களை தேவதானமாக வழங்கிய பிற்காலச் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் இந்த ஊரின் பழைய பெயராகிய வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்பதனை தனது பெயரில் திருநீற்றுச் சோழநல்லூர் என்று மாற்றி ஆணையிட்டதாக இங்கு கிடைத்த கல்வெட்டு கூறுகிறது. பல சோழமன்னர்கள் இவ்வாலயத்துக்கு திருப்பணிகள் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இவ்வூர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் கோட்டத்து குலோத்துங்க சோழ வளநாட்டு சாத்தூர் நாட்டு திருச்சுரம் என்று இருந்ததையும் அறிந்து கொள்ளலாம். சுரம் என்றால் வளம் நிறைந்த மலை என்று பொருள். இந்த மலையில் இறைவன் வீற்றிருப்பதால் இறைவனுக்கு திருச்சுரமுடையார் என்றும் பெயர். இந்த திருச்சுரம் என்பது மருவி பின்னர் திரிசூலம் என்று மருவி விட்டது.

துர்கை

வேணுகோபாலன்

கிருஷ்ணரின் மிக நுட்பமான சிற்பம். கூர்ந்து கவனித்தால் தெரியும். பிரபாவளியில் விஷ்ணுவின் அனைத்து 10 அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளன. 1000 ஆண்டுகள் பழமையான சிற்பம். இடம் லட்சுமி நரசிம்மர் கோவில் ஹரனஹள்ளி ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

எட்டு திக்குகளை ஆளும் சக்திகள்

  1. கிழக்கு – பிராம்மி
  2. தென்கிழக்கு – கௌமாரி
  3. தெற்கு – வராஹி
  4. தென்மேற்கு – சியாமளா
  5. மேற்கு – வைஷ்ணவி
  6. வடமேற்கு – இந்திராணி
  7. வடக்கு – சாமுண்டி
  8. வடகிழக்கு – மகேஸ்வரி

பிராம்மி: பிரம்ம தேவரின் அம்சமும் சக்தி வடிவமே பிராம்மி என்று அழைக்கப்படுகிறாள். கிழக்கு திசையின் சக்தி வடிவம். பிராமி சக்தியை வணங்குவதால் குழந்தைப் பேறும் கலை ஞானமும் உண்டாகும்.

கௌமாரி: சரவணனின் அம்சமாக அவதரித்தவள் கௌமாரி என்று அழைக்கப் படுகிறாள். தென் கிழக்கு திசையின் சக்தி வடிவம். கௌமாரி தேவியை வழிபடுவதால் பதவி உயர்வும் மனதில் இருக்கும் பயமும் அகலும்.

வராஹி: விஷ்ணுவின் அவதாரமான வராக மூர்த்தியின் அம்சமாக இருப்பவர் வராஹி. தெற்கு திசையின் சக்தி வடிவம். வராஹி தேவியை வணங்கி வருவதால் எதிரிகளை அழித்து வெற்றி கொள்ளலாம். மனதில் தைரியம் பிறக்கும்.

சியாமளா: மீனாட்சி அம்மனின் அவதாரமாக திகழ்பவள் சியாமளா தேவி. தென் மேற்கு திசையின் சக்தி வடிவம். சியாமளா தேவியை வழிபடுவதால் சகல கலைகளிலும் தேர்ச்சி மற்றும் அறிவுக் கூர்மை உண்டாகும்.

வைஷ்ணவி: விஷ்ணுவின் அம்சமாக தோன்றியவர். நாராயணி என்றும் அழைக்கப் படுபவள். மேற்கு திசையின் சக்தி வடிவம். வைஷ்ணவியை வழிபடுவதால் உடல் ஆரோக்கியமும் எண்ணங்களில் மேன்மையும் உண்டாகும்.

இந்திராணி: தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் அம்சமாக தோன்றியவர் இந்திராணி. வடமேற்கு திசையின் சக்தி வடிவம். இந்திராணியை வழிபடுவதால் நல்ல வாழ்க்கை துணை அமைத்து தருவார். பணத் தட்டுப்பாடு குறையும்.

சாமுண்டி: ருத்தரனின் அம்சமாக தோன்றியவர். எந்த விதமான சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதவர். வடக்கு திசையும் சக்தி வடிவம். சாமுண்டியை வணங்கி வருவதால் எடுத்த செயலில் எவ்விதமான இன்னலும் இன்றி வெற்றியும் பாதுகாப்பும் உண்டாகும்.

மகேஸ்வரி: சிவபெருமானின் அம்சமாக திகழக்கூடியவர் மகேஸ்வரி. வடகிழக்கு திசையின் சக்தி வடிவம். மகேஸ்வரியை வழிபடுவதால் ஐயங்கள் மற்றும் கோபம் நீங்கும். சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடியவர்.