மகிஷாசுரமர்தினி

எருமை வடிவில் உள்ள அரக்கனை அழிக்கும் துர்கை. உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இச்சிலை தற்போது அமெரிக்காவில் பிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 8 ஆம் நூற்றாண்டு.

முரண்பாடான சம்பவங்களும் யுதிஷ்டிரரின் விளக்கமும்

யுதிஷ்டிரரின் நாட்டை ஆட்சி செய்யும் போது நாட்டு மக்களின் பிரச்சனைகளை பீமன் தீர்த்து வைத்தார். எவருக்கேனும் கேள்விகளோ பிரச்சனைகளோ இருந்தால் பீமனிடம் முதலில் உதவி நாடி வந்தனர். ஒரு நாள் விசித்திரமான சம்பவம் ஒன்றை கவனித்ததாக ஒரு மனிதன் கூறினான். அவன் வீட்டு வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்திருப்பதாகவும் அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினான். சாதாரணமாக அரக்கர்களின் தொல்லைகளால் அவதிப்பட்ட மக்களை காப்பாற்றுவது பீமனுக்கு அவனது வலிமையினால் சாதாரணமாக இருந்தது. இந்த புதிய சிக்கலான விஷயமாக இருப்பதினால் பீமன் அவனை யுதிஷ்டிரரிடம் செல் என்று கூறினார்.

அதே தினத்தில் இன்னொரு மனிதன் வந்து தன்னுடைய பிரச்சணையை சொன்னான். ஒரு பானை நிறைய தண்ணீர் இருந்தது. அதனை நான்கு சிறிய பானைகளில் நிரப்பினால் நிரம்புகிறது. மீண்டும் நான்கு சிறிய பானை தண்ணீரை பெரிய பானைக்குள் நிரப்பிய போது பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது பெரிய பானை நிரம்பவில்லை. இதற்கும் பதில் ஒன்றுமே தெரியாமல் தவித்த பீமன் அம்மனிதனையும் யுதிஷ்டிரரிடம் சென்று கேட்குமாறு அனுப்பினார். மூன்றாவதாக ஒரு மனிதன் மற்றொரு விசித்திரமான சம்பவத்துடன் பீமனிடம் வந்தான். ஒரு யானையின் பெரிய உடம்பு ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விட்டது என்று அந்த மனிதன் புகார் கூறினான். பீமன் மறுபடியும் அம்மனிதனை யுதிஷ்டிரரிடம் அனுப்பி வைத்தார். நான்காவதாக ஒரு மனிதன் அங்கு வந்து தெருவில் ஒரு பெரிய பாறையைப் பார்த்ததாகக் கூறினான். அப்பாறையை வலிமையுள்ள சில மனிதர்களால் நகர்த்த முடியவில்லை. ஆனால் ஒரு சாது கோல் ஒன்றை அசைத்து அப்பாறையை நகர்த்தினார். இது எப்படி என்று காரணத்தை கேட்டான். இந்த மனிதனையும் யுதிஷ்டிரரிடம் அனுப்பினார் பீமன். இப்போது இந்த நான்கு பிரச்சனைகளுக்கும் விடை தெரிந்துகொள்ள பீமனிடம் ஆர்வம் வந்தது. யுதிஸ்டிரர் என்ன பதில் கொடுக்க போகிறார் என்று தெரிந்து கொள்ள அவைக்கு சென்றார்.

நால்வரும் சேர்ந்து யுதிஷ்டிரரிடம் சென்று இந்த சந்தேகங்களைப் பற்றி விசாரித்தனர். அதற்கு அவர் இந்த சம்பவங்கள் அனைவற்றும் வரப் போகின்ற கலியுகத்தை குறிப்பிடுகின்றன என்று கூறி கீழ்கண்டவாறு விளக்கினார்.

ஒருவனின் வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்த முதலாவது சம்பவத்தில் மற்றவர்களின் உடைமைகளின் மீது ஆசைப்படுவதை குறிக்கின்றது. மன வேதனைகள் மற்றும் கோபம் போன்ற உணர்வுகளுக்கு வழி வகுத்து மற்றவர்களைப் போல நம்மிடம் இல்லையே என்ற எண்ணங்கள் இருப்பதனால் அதை அடைவதற்கு தகாத வழிகளை தேர்ந்தெடுத்தனர்.

பெரிய பானையிலிருந்து சிறிய பானைகளுக்கு தண்ணீரை ஊற்றி பிறகு சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்கு ஊற்றும் போது பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும் இரண்டாவது சம்பவத்தில் தாயானவள் தனது குழந்தைக்கு செலுத்தும் அன்பு கருணையை ஒப்பிடும் போது மகன்கள் பெரியவர்கள் ஆனதும் நால்வரும் சேர்ந்து தாயிடம் காட்டும் அன்பு தாய் காட்டும் அன்பிற்கு நிகரானதாக இல்லை. கலியுகத்தில் தாய் கொடுக்கும் அன்பு குழந்தைகளை நிரப்புகிறது. குழந்தைகளை காட்டும் அன்பு தாயின் அன்புக்கு நிகரானதாக இல்லை.

ஒரு யானையின் பெரிய உடம்பு ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது ஆனால் ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விடுகிறது என்ற மூன்றாவது சம்பவத்தில் மனிதர்கள் தங்களின் வருமானம் வலிமை வளம் போன்றவற்றை குடும்பம் நண்பர்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்காக யானையின் உடம்பின் அளவிற்கு செலவழிக்க தயாராக இருக்கின்றனர். ஆனால் கடவுளுக்கோ கடவுளின் சேவைகளுக்கோ தான தர்மத்திற்கோ யானையின் வாலலவு கூட செலவழிக்க மனம் வருவதில்லை என்றார்.

ஒரு பெரிய பாறையை வலிமை மிகுந்த மனிதர்களால் நகர்த்த முடியாத நிலைமையில் ஒரு சாது தன் கோலால் சுலபமாக நகர்த்தி விட்டார். இந்த சம்பவம் எவ்வளவு வலிமையான வினைகள் ஆனாலும் நாம சங்கீர்த்தனத்தின் மகிமையால் பாவங்களை நிவர்த்தி செய்ய முடியும் என்பதைக் குறிக்கின்றது என்றார்.

யுதிஷ்டிரரின் இந்த பதிலைக் கேட்ட நால்வரும் பீமனும் திருப்தியுடன் திரும்பினார்கள்.

ருத்ர பாஸ்கரன்

சூரியனின் மேல் இரண்டு கைகளும் ஈசனின் ஆயுதங்களான திரிசூலமும் வாசுகியும் கீழ் இரு கைகளிலும் இரண்டு தாமரை மலர்களை ஏந்தியுள்ளார். கவசம் மற்றும் காலணிகளை அணிந்துள்ளார். அருகில் தனது தேரோட்டியான அருணா கால்களுக்கு இடையில் அமர்ந்துள்ளார். அவரது வலதுபுறம் எழுதுகோல் மற்றும் புத்தகத்தை பிங்கலாவும் இடதுபுறத்தில் தண்டி தண்டாவும் உள்ளனர். இந்த வடிவ சிற்பம் கோவில்களில் காணப்படுவது மிக அரிது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த சிவபெருமான் ருத்ர பாஸ்கரன் என்று அழைக்கப்படுகிறார். இடம் போபால் மண்ட்சூர் பகுதியில் உள்ள மாநில தொல்பொருள் அருங்காட்சியகம்.

இறைவனின் விருப்பம்

ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் ஒரு குயவன் பானை செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள் சட்டிகள் குடங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த குயவனுக்கு அருகில் ஒரு ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தது. அது ஒரு நொடிகூட ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. துறவி அந்த குயவன் இருந்த இடத்திற்குச் சென்று தரையில் அமர்ந்தார். அவரைக் கண்டதும் அவருக்கு வணக்கம் தெரிவித்த குயவன் சிறிய மண் சட்டியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். அதை வாங்கிப் பருகிய துறவி இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா? என்று கேட்டார். இல்லை சுவாமி இது ஒரு காட்டாடு. வழி தவறி வந்தது. நான் பிடித்து கட்டிப் போட்டேன் என்றான் குயவன். எதற்காக? என்று துறவி கேட்டார். அதற்கு குயவன் பண்டிகை வரப்போகிறது. அந்த நாளில் இறைவனுக்கு பலி கொடுக்கலாம் என்று வைத்திருக்கிறேன் என்றான். துறவி வியப்பு மேலிட பலியா? என்றார். ஆமாம் சுவாமி தெய்வத்துக்கு திருவிழா வரும்போது பலி கொடுப்பது இறைவன் விரும்புவார். இதனால் இறைவன் மகிழ்ந்து வரம் கொடுப்பார் என்றான். குயவன் இப்படிச் சொன்னதும் துறவி தன் கையில் வைத்திருந்த தண்ணீர் மண் சட்டியை ஓங்கி தரையில் போட்டார். அது துண்டு துண்டாகச் சிதறியது. பின்னர் சிதறிய பாகங்களை எடுத்து குயவனிடம் கொடுத்தார். குயவன் கோபத்தில் என்ன சுவாமி இது என்றான். உனக்குப் பிடிக்குமே என்றுதான் இப்படி உடைத்துக் கொடுக்கிறேன் என்றார் துறவி. உங்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? இல்லை கேலி செய்கிறீர்களா? நான் செய்த பானையில் என் உழைப்பு இருக்கிறது. அதை உடைக்க நான் எப்படி சம்மதிப்பேன். இது எனக்கு பிடிக்கும் என்று யார் உங்களுக்குச் சென்னது? என்றான்.

துறவி மென்மையாக சிரித்தபடியே ஆண்டவன் படைத்த ஒரு உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு மட்டும் யார் சொன்னது? அதை ஏற்று மகிழ்ந்து இறைவன் வரம் தருவான் என்று எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதை விரும்புவாள்? எந்த தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? இறைவன் படைத்த உலகில் அவனால் படைக்கப்பட்ட நீ அவன் படைத்த பொருளையே அவனுக்கு படைப்பாயா? என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தார். அவரது வார்த்தைகளைக் கேட்ட குயவன் தெளிவு பெற்றவனாக ஆட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு துறவிக்கு தனது வணக்கத்தை செலுத்தினான்.

மண்டோதரியின் தத்துவம்

மண்டோதரி இலங்கையை ஆண்ட இராவணனின் மனைவி. இலங்கையின் இராணி. மண்டோதரி என்றால் மென்மையான இடையுடையவள் எனப் பொருள். மண்டோதரி மிகவும் அழகானவள். தூய பக்தியுடையவள் நேர்மையானவள். இலங்கைக்குச் சென்ற அனுமன் முதலில் இவளைப் பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். அந்த அளவிற்கு இவளது அழகும் குணமும் தன்மையும் இருந்தது. சதா சர்வ காலமும் தன் கணவனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி நல்வழிக்குக் கொண்டு வர மண்டோதரி அரும்பாடுபட்டாள். தன் மனைவியின் நல்புத்தியைக் கேட்காத இராவணன் தனக்கு தானே அழிவைத் தேடிக் கொண்டான்.

கஷ்யப்ப முனிவரின் மகன் மாயாசுரன். மாயாசுரனுக்கு துந்துபி மற்றும் மாயாவி என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த மாயாசுரனின் வளர்ப்பு மகள் மண்டோதரி ஆவாள். மாயாசுரனின் இல்லத்திற்கு வருகை புரிந்த இராவணன் மாயாசுரனின் வளர்ப்பு மகளான மண்டோதரியை திருமணம் புரிய விரும்பி வேதமுறைபடி அக்கினியை ஏழுமுறை வலம் வந்து திருமணம் புரிந்து கொண்டான்.

இராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்திருக்கும் மண்டூர் எனும் பட்டணம் மண்டோதரியின் பிறப்பிடமாகும். நெடுங்காலமாக இங்கு வாழும் குறிப்பிட்ட குலத்தை சேர்ந்த மக்கள் இராவணனை தங்களின் மருமகனாக பாவித்து வருகிறார்கள். இங்கு இராவணனுக்கு ஒரு கோயில் (நினைவிடம்) அமைந்துள்ளது. சீதையை அபகரித்து வந்த இராவணன் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளைத் தீண்டினால் தலை வெடித்து மரணமடைவான் என இராவணனுக்கு சாபம் இருந்தது. இதனால் சீதையை சம்மதிக்க வைக்க அவளை பலமுறை முயன்றான். எனினும் சீதை ஒரு போதும் இராவணனின் இச்சைக்கு இணங்கவில்லை. ஒரு சமயம் மிகுந்த கோபமடைந்த இராவணன் சீதையின் தலையைத் துண்டிக்க தன் வாளை உயர்த்தினான். அப்போது மண்டோதரி அங்கு ஓடிவந்து இராவணனின் கையைப் பிடித்து இராவணனைத் தடுத்தாள். ஓர் ஆணின் மீது விருப்பமில்லாத ஒரு பெண்ணை சம்மதிக்க வைப்பதற்காக அவளைத் துன்புறுத்துவதும் கொலை செய்ய முயற்சிப்பதும் மகா பாதகம். இத்தகைய செயல் உம்மை மட்டுமல்ல உம்மைச் சார்ந்த அத்தனை பேரையும் உன் சாம்ராஜ்யத்தையும் சேர்த்து அழித்திடும் என மண்டோதரி இராவணனுக்கு அறிவுரை செய்தாள். அதன் பின்னர் இராவணன் சீதையைக் கொலை செய்யும் எண்ணத்தை விட்டான்.

மண்டோதரி சீதையின் தாய் என வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், அத்பூத இராமாயணம் தேவி பாகவத புராணம் மற்றும் சமண இலக்கியங்கள் மண்டோதரியை சீதையின் தாய் என குறிப்பிடுகின்றன. இராமாணயத்தில் சுவாரஸ்யத்தை ஏற்றுவதற்காக அவ்வாறு கூடுதலான கதையை உருவாக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இராமாயணத்தில் மண்டோதரி ஒரு துணை கதாபாத்திரமாக அமைந்திருந்தாலும் அவளின் பாத்திரம் மிகவும் முக்கியமானது. அவள் தன் கணவன் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தாலும் ஒரு போதும் தன் கணவனின் தீய செயல்களுக்குத் துணை போகவில்லை. மாறாக இறுதி வரை அவள் நேர்மையானவளாகவே திகழ்ந்தாள்.

ஒரு பெண்ணின் அனுமதியும் சம்மதமும் இல்லாமல் எந்தவொரு ஆணும் அவளை நெருங்க கூடாது. ஒரு பெண்ணுக்கு சம்மதம் இல்லாவிட்டால் அவளை விட்டு விலகி விட வேண்டும் அவளைக் கட்டாயபடுத்தியோ மிரட்டியோ சம்மதிக்க வைப்பது மூடத்தனம். அன்புடைய மனைவியின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து கணவன் அவளின் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும். அனைவரும் நேர்மையின் உருவமாக திகழ்ந்து நேர்மையாக நடக்க வேண்டும் என்று உணர்த்தினாள். இதுவே மண்டோதரியின் பாத்திரம் உணர்த்தும் தத்துவம்.