கஜேந்திர மோட்சம்

கஜேந்திர மோட்சத்தை விளக்கும் சிற்பம். எந்த நேரத்திலும் விஷ்ணு பகவானையும் தாயார் லட்சுமி தேவியையும் தாங்கி பறப்பதற்கு தயாராக இருக்கும் பெரிய திருவடி கருடாழ்வார். அவருக்கு கீழே கஜேந்திரனையும் (யானை) அவருக்கும் கீழே முதலையும் மிக நேர்த்தியாக செதுக்கியுள்ளனர். இந்த அரிய சிற்பம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தின் பெண்ணா நதிக்கரையில் உள்ள தக்குதேவாலயம் என்னும் விஷ்ணு கோவிலில் அமைந்துள்ளது.

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

ஒரு யானைப் பாகன் தனக்கு 100 ஏக்கர் நிலம் வேண்டும். 50 யானைகளுக்கு சொந்தக்காரனாக வேண்டும். சுற்று வட்டாரத்தில் இல்லாத அளவுக்கு பெரிய வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்காக இறைவனுக்கு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்ய ஆரம்பித்தான். பல நாட்கள் செய்த கடுமையான பூஜைகளின் பலனாக இறைவன் அவனுக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். அவன் தன்னுடைய நீண்ட நாள் ஆசைகளை வரிசைப்படுத்தி அனைத்தும் வேண்டும் என கேட்டான். இறைவனும் சிரித்தபடி 50 யானைகளை காட்டி இது போதுமா? என்றார். அவன் மகிழ்ச்சியாக தலையாட்டினான். 100 ஏக்கர் நிலத்தை காட்டி இது போதுமா? என்றார். அதற்கு அவன் நிலத்தில் இன்னும் நான்கு கிணறுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்றான். பெரிய மாளிகையை காட்டினார். வீடு முழுவதும் தங்கம் மற்றும் நவரத்தினங்களால் அலங்கரித்து வேண்டும் என்றான். அவன் கேட்ட அனைத்தையும் கொடுத்த இறைவன் நீ எனக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும் என கேட்டார்.

நீங்கள் கொடுத்த அளவுக்கதிகமான செல்வம் என்னிடம் இருக்கிறது. என்னால் செய்ய முடியாதது இப்போது எதுவும் இல்லை. என்ன உதவி வேண்டும் நீங்கள் சொல்வதை செய்து முடிக்கிறேன் என்றான். நீ இறந்த பின் மேலே வரும்போது உன்னிடம் இருக்கும் யானையின் வாலின் முடியில் ஒன்றை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் தர வேண்டும் என்றார். இதற்கு ஏன் சாகும்வரை காத்திருக்க வேண்டும் இப்போதே பிடுங்கித் தருகிறேன் என்றான். இல்லை இப்போது எனக்கு தேவையில்லை என்றார் இறைவன். அதற்கு அவன் இறந்த பின் ஒரு துரும்பை கூட எங்கும் கொண்டு போக முடியாதல்லவா என்றான். பிறகு ஏன் உனக்கு இவ்வளவு பேராசை? என்று இறைவன் கேட்க அவர் கொடுத்த அத்தனை சொத்துக்களையும் திருப்பி கடவுளிடமே கொடுத்துவிட்டு என்றும் அழியாத எங்கு சென்றாலும் தன்னுடன் வரக்கூடிய இறை அருளை சேர்க்க பூஜைகள் தானங்கள் தர்மங்கள் செய்வது எப்படி என்ற சிந்தனையுடன் நடக்க ஆரம்பித்தான் யானைப் பாகன்.