குருநாதர் கருத்துக்கள் #29

கேள்வி: மகான்கள் புனிதர்கள் இவர்களுக்கு உள்ள வித்யாசம் என்ன? அவர்களை எவ்விதம் அறிவது?

விஷேசமாக மகான்களுக்கும் புனிதர்களுக்கும் பேதங்கள் இல்லை. சாதாரண மானிடர் போல் இருந்த போதிலும் மனநிலை ஒன்றே மாறும். சமதர்ஸனம் என்கின்ற ஓர் மகத்தான தகுதி ஒன்று உள்ளதே அதன் விளக்கம் என்னவென்றால் அவர்கள் மகான் என்னும் நிலையை அடைந்ததும் அனைவரையும் ஓரே விதமாகவே அன்பாகவே பார்க்கிறார்கள். இங்கு அவன் அன்பிற்கு எல்லையும் இல்லை அவர்களுக்கென தனியென நபரும் இல்லை. அனைவரையும் ஓர் நிலையில் பார்த்து அன்பளிக்கிறான் என்பது ஓர் சிறந்த நிலை. வெளியில் விஷேசமாக அறிகுறிகளும் இல்லை, கொம்புகளும் இல்லை, கீறும் நகங்களும் இல்லை, யாதுமில்லை இருப்பினும் பரிபூரணமாக இறை விசுவாசமும் இறை மீது உள்ள அன்பும் உண்டு. தானாக விசித்திரங்கள் அதிசயங்கள் செய்வதில்லை சமயங்களில் இறைவன் அவன் வழியாக சில அதிசயங்கள் புரிகிறான். இது ஒன்றை சாதாரண நிலைக்கும் மகான்களின் நிலைக்கும் வித்யாசமாகின்றது. குறிப்பாக கூறினால் இறைவன் அனைவர்க்குள் வசிக்கிறான் என்பது உண்மை நிலை. அவ்விறைவனை முழுமையாக உணர்ந்தவன் மகான் என்றும் இறைவன் உள் இருக்கின்றதை உணர்ந்து அவ்விறைவனை திருப்திப்படுத்தும் ஆனந்தப்படுத்தும் வேலையை இவன் வேலையை செய்கின்றான்.

மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரமர்த்தினி பதினெட்டு திருக்கரங்களுடன் வெவ்வேறு விதமான ஆயுதங்களை ஏந்தி போரில் வென்ற மகிஷன் மீது வலது ஊன்றி கம்பீரமாக காட்சியளிக்கின்றாள். இடம் மகாதேவ் கோவில். பட்டேஸ்வர் சட்டாரா மாவட்டம். மகாராஷ்டிர மாநிலம்.

குருநாதர் கருத்துக்கள் #28

யாம் இறைவனை நல்வழியில் நாடுகின்றோம் பூஜிக்கின்றோம் பல வழியில் சேவிக்கின்றோம். இருந்த போதிலும் இறைவன் எம்மைத் திரும்பிப் பார்ப்பதில்லை என்னும் மனக்குறை பலரிடம் உள்ளது. உண்மை என்னவென்றால் உண்மையாக நாம் இறைவனை நாடுவதில்லை. மண் படிந்த ஒரு குழந்தையை நீராட்ட வரும் தாயைக் கண்டு அந்தக் குழந்தை ஓடுகின்றதே அதுபோலவே நாமும் ஓடிக்கொண்டு இருக்கின்றோம். நமது லெளகீக (உலக) எதார்த்த பாசங்களை நாடி நாமும் பின் தொடர்ந்து செல்கின்றோம். அந்த தாயைப் போல் ஆண்டவன் என்றும் நம்மைத் தேடிக் கொண்டே இருக்கின்றான். நாம் ஒளிந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை மறவாது இருத்தல் வேண்டும். அந்தத் தாயிடம் சரணடைந்து நாமும் நமது அழுக்குகளை நீக்கிக் கொண்டால் எளிதாக இறைவனடி சேர்ந்திட இயலும்.

குருநாதர் கருத்துக்கள் #27

கேள்வி: மந்திரங்கள் ஜெபிக்கும் காலங்களில் எண்ணிக்கை வைப்பது அவசியம்தானா?

ஆன்மீக நிலையில் இவ்வித எண்ணிக்கை வைப்பது அவசியமற்றது ஆகும். எண்ணிக்கையை விட மன ஒரு நிலைப்பாடு முக்கியமாகின்றது. இருப்பினும் மந்திரங்கள் சித்தி (பயன்) பெற்று பிரயோகம் (செயல்படுத்த) காண விரும்பும் சிலர் எண்ணிக்கை வைப்பதும் உண்டு. குறிப்பாக ஒரு இலட்சம், இருபத்தி ஐந்தாயிரங்கள் ஜெபித்தால் சித்தி (பயன்) என கூறுவர். ஐம்பது இலட்சம் ஜெபித்தாலும் மன ஒரு நிலைப்பாடு இல்லையேல் சித்தி ஆகாது (பயன் தராது) என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும். எண்ணிக்கைதனை மன சிரத்தையுடன் மனதினை ஒரு நிலைப்படுத்தி ஜெபித்து வர சிறு நற்பலன் தரும்.

ஈசன்

ஈசனின் சிலை கர்நாடக மாநிலத்தில் ஒரு அடர்ந்த காட்டுக்கு நடுவில் அமைந்துள்ளது. இது காலஹஸ்தி அருவி என்றும் கல்லதிகிரி அருவி என்றும் கல்ஹட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அகத்திய முனிவர் தவம் இருந்துள்ளார். இடம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள கல்லத்திகிரியில் உள்ள கல்ஹட்டி நீர்வீழ்ச்சி.

குருநாதர் கருத்துக்கள் #26

கேள்வி: பயம் என்பது என்ன? அது எவ்விதம் உருவாகிறது? அதை எவ்விதம் வெல்வது?

பயம் என்பது ஒரு மனநிலை என்பதை முதலில் உணர வேண்டும். இது நாமாக உருவாக்கும் ஒரு மானசீக பூதமென்பதை அறிய வேண்டும். பொதுவாக மனிதன் பயப்பட வேண்டியது இல்லை. இப்பயம் எதனால் வருகின்றது என்பதை நன்கு சிந்தித்தோம் என்றால் பயம் என்பது நமது என்கின்ற அந்தச் சொல்லினால் அந்த மனத் தன்மையால் நமது சொத்து, நமது சொந்தம், நமது பிள்ளைகள், நமது உயிர் என்றெல்லாம் சிந்திக்கும் போது பயம் ஏற்படுகின்றது. இவை இழந்து விடுவோமோ என்கின்ற அந்தப் பயமானது நம்மை முழுமையாகக் கவர்ந்து ஒருவித கிலியை (அச்சத்தை) உண்டாக்குகின்றது. அதாவது ஓர் மனநிலை இழப்போமோ என்கின்ற பயமாக மாறுகின்றது. இந்தப் பயத்தை எவ்விதம் வெல்வது என்பது ஓர் விளக்கத்தில் உண்டு. கீதையின் சாரமதை நன்கு உணர்ந்து கொண்டால் பயத்தை எவ்விதம் நீக்குவது என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம். வரும்பொழுது ஒன்றுமில்லை செல்லும்பொழுதும் ஒன்றுமில்லை இடையிலிருப்பது அவன் அளித்தது என முழுமையாக உணர்ந்து கொண்டால் உயிரும் அவ்விதமே என உணர்ந்து கொண்டால் எதுவும் நஷ்டப்படுவதற்கில்லை. எதுவும் தொலைப்பதற்கில்லை. எதுவும் இழப்பதற்கும் இல்லை என்பதை நன்கு அறிந்த பின்பு பயமும் இல்லை அச்சமும் இல்லை. இந்நிலை மாறுவதற்கு மன உறுதி வேண்டும். பொதுவாக இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் தானாக தைரியம் உருவாகின்றது.

மூன்று அம்சங்களுடன் தட்சிணாமூர்த்தி

உட்குடிகாசனத்தில் அமர்ந்தபடி அருளுவதால் யோக தட்சிணாமூர்த்தி என்றும் கையில் வீணை வைத்திருப்பதால் வீணா தாரா தட்சிணாமூர்த்தி என்றும் கையில் வியாக்யான முத்திரையில் இருப்பதினால் வியாக்யான தட்சிணாமூர்த்தி என்றும் மூன்று அம்சங்களின் கலவையாக அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களில் முன் வலது கை வியாக்யான முத்திரையினையும் பின் வலது கை அக்ஷரமாலையும் முன் இடது கையில் ஏடுகளை ஏந்தியும் பின் இடது கையில் வீணை ஏந்தியுள்ளார். தலையில் சடாமுடி தரித்து சடையின் மீது ஊமத்தம் பூ அணிந்திருக்கிறார். இடது காதினில் சங்கபத்ர குண்டலமும் வலது காதினில் குண்டலமும் அணிந்துள்ளார். இடம் மைசூர் சாம்ராஜ் நகர் ஷம்புலிங்கேஸ்வரர் மலை. காலம் 9 ஆம் நூற்றாண்டு.

குருநாதர் கருத்துக்கள் #25

கேள்வி: வாழ்வுதனில் இறைநாட்டம் கொண்டும் இவ்வாழ்வில் இறைவனை அடையவும் சித்திகள் வேண்டுமா? இது உதவுமா?

சித்திகள் கிடைக்க ஓர் அளவிற்கு ஓரிரு படிகள் முன்னேற உதவும் என்பது மட்டுமல்லாது சித்திகள் மற்றொன்றிற்கும் ஆகாது என்றும் இங்கு முன்னதாக கூறியுள்ளோம். பறக்கும் திறன் இருந்தால் இறைவனை அடையலாம் என்று இருந்தால் பறவைகள் யாவும் முக்தி அடைந்திருக்க வேண்டும். நீரில் வாழ்ந்தால் இறைவனை அடையலாம் என்று இருந்தால் நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் முக்தி அடைந்திருக்கும். ஆடையில்லாமல் திரிந்தால் இறைவனை அடையலாம் என்று இருந்தால் காட்டில் வாழும் பிராணிகள் அனைத்தும் முக்தி அடைந்திருக்கும். இவையாவும் முக்தி அடையவில்லையே. இவையாவும் இறைவனை அடைய உதவாது. இறைவனை அடைய வேண்டுமென்றால் அசையாத நம்பிக்கையும் அன்றாட வழிபாடும் சதா அவன் நினைவும் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அர்ஜீனன் பெரும் பூஜைகள் செய்தும் ஓர் அளவிற்கு கர்வம் வந்த போது கிருஷ்ணன் அவனை கூட்டிச் சென்று பீமன் மானசீகமாக வில்வத்தை அளித்து உருவாக்கிய ஓர் வில்வ மலையை காட்டினார். இதன் வழியாக அர்ஜீனனின் அகந்தையை ஒழித்தான் என்பது மட்டுமல்லாது மானசீக பூஜையின் முக்கியத்துவத்தை இங்கு எடுத்துரைத்தோமே.