Year: 2024
கார்த்திகேயன்
எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கார்த்திகேயன் சிற்பம் உத்திரபிரதேச மாதிலத்தில் கன்னோஜ் நகரில் உள்ளது.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். மூலவர் சுப்பிரமணியர். உற்சவர் தண்டாயுதர். தீர்த்தம் வள்ளி தெய்வானை தீர்த்தம். ஊர் திண்டுக்கல் அருகில் சாணாா்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த திருமலைக்கேணி. புராண பெயர் மலைக்கிணறு. இக்கோயில் இரண்டு அடுக்காக அமைந்திருக்கிறது. மலை மீது ஒரு முருகரும் மலையின் கீழ் ஒரு முருகரும் அருள் பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் சக்தி விநாயகர் சன்னதி இருக்கிறது. கோயில் வளாகத்திலுள்ள மாமரத்தின் அடியில் அருணகிரியார் திருவுருவம் உள்ளது. இத்தலத்தில் மௌனகுரு சுவாமிகள் என்ற சித்தா் பல காலங்களுக்கு முன்னா் ஜீவசமாதி நிலை அடைந்துள்ளாா். அவருக்கென அருகில் தனிக் கோயில் உள்ளது.
ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன் முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினாா். ஒருசமயம் அவா் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தாா். இங்கிருந்த சுனையில் நீா் பருகியவா் சற்று நேரம் ஓய்வெடுத்தாா். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன் தீா்த்தத்திற்கு அருகிலேயே கோயில் எழுப்பும்படி கூறினாா். அதன்படி மன்னா் இங்கு கோயில் எழுப்பினாா்.
மூலஸ்தானத்தில் முருகன் பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி இடக்கையை இடுப்பில் வைத்தபடி நளினமாகக் காட்சி தருகிறார். இவருக்கு எப்போதும் கிரீடம் வைத்து ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. உடன் வள்ளி தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுகிறார்கள். கிணற்றில் வள்ளி தீர்த்தம் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம் மலைக்கேணி என்று பெயர் பெற்றது. கேணி என்றால் கிணறு என்று பொருள்.
மலையில் அடர் வனத்திற்கு மத்தியில் அமைந்த கோயில் இது. காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமாகியது. கோயிலும் சேதமடைந்ததால் முருகன் கோயில் ஒரு குடிசையின் கீழ் இருந்தது. முறையான பூஜைகளும் நின்று போனது. 1979ல் இங்கு வந்த கிருபானந்த வாரியார் கோயிலை மீண்டும் புனரமைக்கும் பணியைத் துவக்கினார். பிரதான மூலவர் சிலை பின்னமாகியிருந்ததால் வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால் பழைய சிலையை இங்கிருந்து எடுக்க முடியவில்லை. எனவே அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி அதற்கு மேலே புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு கீழே ஒரு முருகன் மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கீழ் அடுக்கிலுள்ள ஆதி முருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே ஒரு துளையும் உள்ளது.










அடிமுடிகாணா அண்ணாமலை
மேலே அன்னப் பறவையாக படைக்கும் கடவுள் பிரம்மா தாழம்பூவுடன் விவாதிக்க கீழே வராக ரூபத்தில் பூமியை பிளந்து ஈசனின் அடியைக்கான காக்கும் கடவுளான விஷ்ணு பயணிக்க தீர்ப்பினை கூற ஜோதி பிழம்பாக எம்பெருமான் ஈசன் காட்சியளிக்கும் தத்ரூபமாக தூணில் வடிக்கப்பட்டுள்ள சோதி வடிவான அடிமுடிகாணா அண்ணாமலை சிற்பம். இடம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படும் ஔஷதீஷ்வரர் கோயிலில் அமைந்துள்ளது.

முருடேஸ்வர் கோயில்
முருடேஸ்வர் கோவில் மிகவும் பழமையான கோயில். கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கலா தாலுகாவில் உள்ள கடற்கரையில் உள்ள ஒரு கோயில். இக்கோயில் அழகிய மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. மூன்று பக்கம் கடல் சூழ்ந்த கந்துக மலையின் மீது அமைந்துள்ளது. சாளுக்கிய மற்றும் கடம்ப சிற்பங்களைக் கொண்டுள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோயில் சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. முருதேஸ்வரா என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ மிருதேச லிங்கமே பிரதான மூல லிங்கமாகும். இந்த லிங்கமானது இறைவன் ராவணனுக்கு கொடுத்த ஆத்ம லிங்கத்தின் ஒரு பகுதி ஆகும். தரை மட்டத்தில் இருந்து சுமார் இரண்டு அடி கீழே இருப்பதாக கோயில் புராண வரலாறு சொல்கிறது. மூலஸ்தானத்தில் லிங்கத்தை விளக்கு வெளிச்சத்தில் மட்டுமே தற்போது தரிசிக்கலாம். மூலஸ்தானத்தை தவிர கோயில் முழுவதுமாக நவீனப் படுத்தப்பட்டுள்ளது. 1977ம் ஆண்டு கோவிலுக்கு அருகில் 5 கோடி செலவில் 123 அடிகள் / 37 மீட்டர்கள் உயரம் சிவன் சிலை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 20 அடுக்குகள் கொண்ட 249 அடிகள் உயரம் கொண்ட ராஜகோபுரம் 2008 இல் கட்டி முடிக்கப்பட்டது.
இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை 123 அடி உயரத்தில் இருக்கிறது. இதன் எதிரில் ராட்சத நந்தி உள்ளது. நேபாளத்தில் 143 அடி உயரத்தில் கைலாஷ்நாத் மகாதேவர் சிலை உலகிலேயே பெரிய சிவன் சிலை ஆகும். கணபதி ஆஞ்சநேயர் நாகர் சுப்பிரமணியர் நவக்கிரகம் தத்தாத்ரேயர் சன்னதிகள் உள்ளன. இங்கு சிவன் பார்வதியை ராமர் சீதா லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் பூஜிப்பது போன்று சிலை வடிக்கப்பட்டுள்ளது. சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. முருடேஸ்வர் சன்னதியில் அணையா விளக்கு உள்ளது. இதில் எண்ணெய் ஊற்றி காசு போட்டு பக்தர்கள் தங்கள் முகத்தை எண்ணெயில் பார்க்கின்றனர்.
இலங்கையை ஆட்சி செய்த அசுரர்களின் அரசன் ராவணன். சிவனின் சக்திகள் அனைத்தும் சேர்ந்த ஒரு ஆத்ம லிங்கம் வேண்டும் என்று ஆசைப்பட்டு அதன் மூலமாக அழியா வரம் பெற வேண்டும் என நினைத்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். அவரது தவம் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு ஆத்ம லிங்கத்தை கொடுத்து சென்று சேரும் இடம் வரை இந்த லிங்கத்தை எங்கும் கீழே வைக்க வேண்டாம் என்று கூறினார். ஆத்ம லிங்கத்தை பெற்றுக் கொண்ட ராவணன் இலங்கை திரும்பிக் கொண்டிருந்தான். இதனை அறிந்த நாரத முனிவர் ஆத்ம லிங்காத்தை வைத்து ராவணன் அழியா வரம் பெற்று விட்டால் ராவணனால் பூமிக்கு அழிவு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தார். எனவே விநாயகரை அணுகி ஆத்ம லிங்கத்தை ராவணன் இலங்கை கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இராவணன் தினமும் சூரியன் மறையும் நேரம் தவறாமல் பிரார்த்தனை செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார். இதனை அறிந்த விநாயகர் விஷ்ணுவை உதவிக்கு அழைத்தார். இராவணன் இலங்கை செல்லும் வழியில் விஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தை பயன்படுத்தி சூரிய ஒளியை மறைத்தார். மாலை வந்து விட்டது என்று நினைத்த இராவணன் மாலை வழிபாடு செய்ய நினைத்தார். அப்பொழுது விநாயகர் ஒரு சிறுவன் வேடத்தில் அங்கு தோன்றினார்.
இராவணன் தனது பூஜை முடித்து வரும் வரை ஆத்ம லிங்கத்தை வைத்து கொள்ள கேட்டார். விநாயகர் தான் சிறுவன் என்றும் இத்தனை எடை கொண்ட லிங்கத்தை நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது ஆகவே என்னால் இந்த எடையை தூக்க முடியாமல் இருக்கும் போது மூன்று முறை உங்களை அழைப்பேன். நீங்கள் வரவில்லை என்றால் ஆத்ம லிங்கத்தை தரையில் வைத்து விடுவேன் என்று கூறினார். இதற்கு சம்மதம் தெரிவித்த ராவணன் ஆத்ம லிங்கத்தை விநாயகரிடம் கொடுத்தார். ராவணன் பூஜை முடித்து மீண்டும் திரும்பி வருவதற்கு முன்பாகவே விநாயகர் மூன்று முறை அழைத்தார். ராவணன் வரவில்லை எனவே ஆத்ம லிங்கத்தை கீழே வைத்து விட்டார். பின்னர் விஷ்ணு அவரது சுதர்சன சக்கரத்தை அழைத்துக் கொள்ள இருள் நீங்கி மீண்டும் பகல் வந்தது. ராவணன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆத்ம லிங்கத்தை தனது வலிமையால் பிடுங்க முயற்சி செய்தார். அவரது முயற்சியில் ஆத்ம லிங்கம் ஐந்து துண்டுகளாக உடைத்தது. கோபத்தில் அதனை வீசினார். ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு இடத்தில் விழுந்தது. அதில் ஒரு துண்டு முருதேஸ்வர் கோயில் உள்ள இந்த இடத்தில் விழுந்தது. இந்த இடத்தில் முருடேஸ்வர் கோயில் கட்டப்பட்டது.
வினாயகரால் ஆத்ம லிங்கம் வைக்கப்பட்ட இடம் ஒன்றும் ஒரு துண்டு விழுந்த இடத்தில் முருடேஸ்வர் கோயிலும் ஒரு துண்டு விழுந்த இடத்தில் சஜ்ஜேஸ்வர் கோயிலும் ஒரு துண்டு விழுந்த இடத்தில் குணேஸ்வர் கோயிலும் ஒரு துண்டு விழுந்த இடத்தில் தாரேஸ்வர் கோயிலும் ஆக ஐந்து இடங்களில் இந்த லிங்கத்தின் ஐந்து துண்டுகள் இருந்தது. இந்த ஐந்து இடத்தையும் வாயு பகவான் பஞ்ச சேத்திரங்கள் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார்.











தட்சிணாமூர்த்தி
சாந்தமே உருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி. இடம் குடிமல்லூர் பூமீஸ்வரர் கோவில் வாலாஜாபேட்டை வேலூர் மாவட்டம்.

கோயிலில் அம்பாள் சன்னதி அமைப்பு
மதுரையில் மீனாட்சி சிவனுக்கு வலப்புறமாகவும் திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சிவனுக்கு இடப்புறமாகவும் நின்று அருள் பாலிக்கிறார்கள். ஏன்?
சிவன் கோயில்களில் மூன்று விதமாக அம்மன் சன்னிதியை அமைக்கலாம் என்று ஆகம சாத்திரங்கள் கூறுகின்றன.
ஒன்று: சிவன் சன்னதி எந்த திசை நோக்கி அமைந்துள்ளதோ அந்தத் திசை நோக்கி அம்மனையும் பிரதிஷ்டை செய்வது. அதாவது சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கி காட்சி தருவர். இதை சமான வீஷணம் என்பர். மதுரையிலும் திருவண்ணாமலையிலும் இந்த அமைப்பு உள்ளது. அதில் இரண்டு வேறுபாடுகள் உள்ளது. சுவாமிக்கு வலப்புறம் அம்பாள் சன்னதி இருப்பதற்கு கல்யாணக் கோலம் என்று பெயர். சுவாமிக்கு இடப்புறம் அம்பாள் சன்னதி இருப்பற்கு அர்த்தநாரீஸ்வர கோலம் என்று பெயர்.
இரண்டாவது: சிவன் சன்னிதி கிழக்கு அல்லது மேற்கு முகமாக இருந்தாலும் அம்பாள் சன்னிதி தெற்கு முகமாகவே அமைந்திருக்கும். இதற்கு அனுக்கிரஹ வீஷணம் என்று பெயர். சுவாமியை தரிசிக்கும் முறையில் அம்பாள் பிரதிஷ்டை அமைந்திருக்கும். சுவாமியின் அனுக்கிரகத்தைப் பெற்று அம்பாள் நமக்கு அருள்வதாகப் பொருள். இந்த நிலை அனேகம் கோயில்களில் உள்ளது.
மூன்றாவது: சுவாமி சன்னிதி மேற்கு நோக்கி இருந்தால் அம்மன் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கும். நேர் எதிராகப் பார்த்துக் கொள்ளும் அமைப்பு. இதற்கு அபிமுக வீஷணம் என்பர். இந்த அமைப்பு கொண்ட கோயில் அரிதாகவே இருக்கும். திருக்கடவூர் காளஹஸ்தி போன்ற தலங்களில் இந்த அமைப்பு உள்ளது.
இவ்வாறு சிவன் கோயில்களில் மூன்று திசைகளில் அம்பாள் அருள்பாலித்தாலும் அவளது அருளில் எந்த வேறுபாடும் கிடையாது. மூன்றுமே ஒன்றுதான்.

நர்த்தன கணபதி
பழமையான ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நர்த்தன கணபதி. இடம் விழுப்புரம் அருகில் மண்ணூர்.

கஞ்சமலை சித்தேசுவரசாமி கோவில்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். திருமூலரின் 7 சீடர்களில் ஒருவரான காலாங்கிநாதர் இங்கு சித்தேசுவரசாமியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் அலங்கார நுழைவு வாசலை கடந்ததும் விநாயகர் அருளுகிறார். இளம் யோகியின் உருவத்தில் சின்முத்திரையுடன் வீராசன நிலையில் காட்சயளிக்கிறார் சித்தேஸ்வர சுவாமி. இக்கோயிலில் காளியம்மன் செல்வ விநாயகர் சன்னதிகளும் அருகே சிறு குன்றில் ஞான சத்குரு பாலமுருகன் சன்னதியும் கஞ்சமலையின் மீது மேல்சித்தர் கன்னிமார் கோயிலும் உள்ளன. சித்தேசுவரர் கோவிலை சுற்றி 7 தீர்த்தக் குளங்கள் உள்ளன. கோவில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. கோவிலுக்கு அருகில் பொன்னி என்கிற ஒரு ஓடை ஓடுகிறது. இதன் அருகில் தான் தீர்த்தக் குளங்கள் உள்ளன. கஞ்சமலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளதால் மலைப் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஓடை வழியாக தீர்த்தக் குளங்களுக்கு வருகிறது. இதனால் மூலிகை கலந்த தண்ணீர் குளத்தில் நிறைகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் பக்திக்கு ஏற்ப சித்தேசுவரசாமி இந்த மூலிகைகளை காற்றில் பரவ விட்டும் குளத்து நீரின் வழியாகவும் மேலும் பல வகைகளின் வழியாகவும் தனது குரு திருமூலர் காட்டிய வழியில் நிவர்த்தி செய்து அருள் பாலிக்கிறார். திருமூலரின் சீடராக இந்த கஞ்சமலை காலாங்கிநாதர் விளங்குகிறார். இதனை திருமூலர் தனது திருமந்திர பாடல்கள் வழியாக உணர்த்துகிறார்.
பாடல் #69: பாயிரம் – குருபாரம்பரியம்
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.
காலாங்கி என்ற இவரது பெயருக்கு பல பெயர் காரணங்கள் சொல்லப்படுகிறது. கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார். மேலும் அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்று பொருள். திருமூலரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு அவர் காட்டிய பாதையில் சென்றார்.
முன் காலத்தில் கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. கைலாயத்தில் இறைவனால் தனக்கு சொல்லப்பட்ட மூலிகைகள் இந்த மலையில் இருப்பதை அறிந்து கொண்ட 18 சித்தர்களில் ஒருவரும் 63 நாயன்மார்களில் ஒருவருமான திருமூலர் அதனைக் காண இந்த மலைக்கு வந்தார். இங்கு உள்ள மூலிகைகள் வயது மூப்பும் மரணமும் இல்லாத நன்மையை அளிக்கக் கூடிய மூலிகைகள் ஆகும். இவர் தனது முதன்மை சீடரான கஞ்சமலை காலாங்கிநாதரை தன்னுடன் அழைத்துச் சென்றார். திருமூலரும் காலாங்கிநாதரும் மலை அடிவார பகுதியில் சில காலம் தங்கியிருந்தார்கள். இறைவனால் தனக்கு சொல்லப்பட்ட மூலிகைகளை தனது சீடரான காலாங்கி நாதருக்கு காட்டி அதனைப் பற்றிய ரகசியங்களை சொல்லிக் கொடுத்தார். தனது குருவான திருமூலர் சொல்லிக் கொடுத்தபடி அதனைப் பயன் படுத்திய காலாங்கிநாதர் என்றும் அழியாத இளமைத் தோற்றத்தை பெற்றார். காலாங்கிநாதருக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தபின் அங்கிருந்து கிளம்ப திருமூலர் முடிவு செய்தார். அவருடன் காலாங்கி நாதரும் கிளம்ப தயாரானார். அப்போது திருமூலர் காலாங்கிநாதரிடம் நீ இங்கேயே இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி விட்டு சென்றார்.
குருவின் உத்தரவின் படி காலாங்கிநாதர் அங்கேயே இருக்க முடிவு செய்தார். வயதான தோற்றத்தில் இருந்த தான் இளம் வயதுக்கு உருமாறியதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று நினைத்து ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றினார். அதன்படி அந்த பகுதியில் மாடு மேய்க்க வரும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவார். அப்போது ஒரு மாட்டின் பாலை மட்டும் தொடர்ந்து குடித்து வந்தார். பின்னர் தன்னுடன் விளையாடும் சிறுவர்களின் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பி விடுவார். இதனால் அவர்கள் நடந்ததை மறந்து வீட்டுக்கு சென்று விடுவார்கள். இந்த நிலையில் மேய்ச்சலுக்கு செல்லும் அனைத்து மாடுகளும் பால் அதிகமாக கறக்கும் போது ஒரு மாடு மட்டும் பால் தராதது மாட்டின் உரிமையாளருக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. எனவே சிறுவர்கள் மாடு மேய்க்க சென்ற போது அவர்களை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட மாட்டில் மட்டும் பாலை காலாங்கி நாதர் குடிப்பதை உரிமையாளர் பார்த்தார். இதுபற்றி ஊருக்குள் சென்று கூறி பொதுமக்களை அழைத்து வந்து காலாங்கிநாதரை தேடும் போது அருகில் இருந்த சங்கு இலை செடி புதருக்குள் காலாங்கி நாதர் தவக் கோலத்தில் காட்சி அளித்தார். அங்கிருந்த மக்களின் நோய்களை அங்கிருந்த மூலிகைகளை வைத்து சில வினாடிகளில் தீர்த்து வைத்தார். இதை கண்ட மக்கள் அவரை வணங்கி அவரை சித்தர் என்று அழைத்தனர். பிறகு சித்தரேசாமி என அழைக்கத் தொடங்கி நாளடைவில் அவர் சித்தேசுவரசாமியாக மாறினார். அவர் தவக்கோலத்தில் காட்சி அளித்த இடத்தில் பிற்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3 ஆவது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.
சுமார் 8000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலின் சிறப்புகள் குறித்து சிறுபாணாற்றுப்படை, கொங்கு மண்டல சதகம், கரபுரநாதர் புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கஞ்சமலை மிகுந்த மூலிகை வளம் கொண்டது. தங்கம் இரும்பு தாமிரம் ஆகியவற்றின் கலவை கஞ்சம். இங்கு உயர்தர இரும்பு படிவம் ஏராளமாக உள்ளது. எளிதில் துருப்பிடிக்காத கஞ்சமலை இரும்பைக் கொண்டுதான் மாவீரன் அலெக்ஸாண்டரின் வாள் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. இங்குள்ள பொன்னி ஓடையில் கிடைத்த பொன்னைக் கொண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொன் கூரை வேயப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசி என பல்வேறு மூலிகைகள் உள்ளன. அதியமானால் அவ்வைக்குத் தரப்பட்ட அரிய கருநெல்லிக்கனி கஞ்சமலையில்தான் கிடைத்துள்ளது.
சித்தேஸ்வர சுவாமி கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலையில் 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தர்கோவில் அமைந்துள்ளது.





அரங்கநாதர்
ஸ்ரீ கைலாஷ் வைகுண்ட மஹாக்ஷேத்ரா கோயில், ராஜாஜி நகர் 5வது பிளாக், பெங்களூர்