திரிபுராந்தகன்

அசுரன் தாரகனுக்கு தாரகாக்ஷா, கமலாக்ஷா மற்றும் வித்யுன்மாலி என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இந்த அசுர இளவரசர்கள் பிரம்மாவை நோக்கி கடுமையான தவம் செய்து மகத்தான சக்தியின் வரத்தைப் பெற்றனர். பிரம்மா அவர்கள் மீது மகிழ்ச்சியடைந்து மாயாசுரனால் கட்டப்பட்ட தங்கம் வெள்ளி மற்றும் இரும்பு என ஒவ்வொன்றும் வானத்தில் சுழலும் ஒரு வான் கோட்டையை அவர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கினார். அவர்கள் ஒரு ஆயிரமாண்டுகள் ஆட்சி செய்வார்கள் என்றும், மூன்று கோட்டைகளையும் ஒன்றாக இணைத்து, அவற்றை எரியூட்டக்கூடிய ஒரு அம்பு மூலம் மட்டுமே அழிக்க முடியும் என்றும் அந்த வரம் வழங்கினார். இந்த வரம் பெற்ற அசுரர்கள் உலகத்தில் பேரழிவை ஏற்படுத்தினார்கள். தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் சென்று காக்குமாறு வேண்டினர்கள்.

சிவபெருமான் ஆணைப்படி விஸ்வகர்மா தேரின் சக்கரங்கள் சூரியனையும் சந்திரனையும் வைத்து பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் மற்றும் கூறுகளுடன் நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாக்கி பிரம்மா சாரதியாக இயக்க ஒரு ரதம் ஒன்றை தயாரித்தார். மேருமலையை வில்லாகவும் வாசுகி பாம்பை நாணாகவும் வைத்துக் கொண்டு திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான். முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன் வெள்ளி இரும்பு கோட்டைகள் ஒரே இடத்தில் வந்து நிற்க மூன்று அசுரர்களும் சிவபெருமானுடன் போர் புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார். அப்போது தேவர்கள் அனைவரும் தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்பதால்தான் சிவபெருமானால் அசுரர்களை அழிக்க முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த சிவபெருமான் லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி ஒரு நொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது. ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லாமலேயே சிவபெருமான் அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலை கவிழ்ந்தனர். திரிபுரத்தையும் எரித்ததால் சிவபெருமான் திரிபுராந்தகன் என்று அழைக்கப்பட்டார். இக்காட்சி எண் 16 எல்லோலா குகைக் கோயில்களில் கைலாசா கோயிலில் சிற்பமாக உள்ளது.

குருநாதர் கருத்துக்கள் #38

காலமதன் முக்கியத்துவம் இங்கும் உணர்த்திட உள்ளோம்
காலத்தில் அனைத்தும் நடத்துதல் வேண்டும் என்றும்
காலமே அனைத்திற்கும் விதி என்றும்
காலமே பிறப்பிற்கும் இறப்பிற்கும் மத்தியத்தில் நிற்பதென்றும்
காலமே அனைத்திலும் முக்கியத்துவம் காண்பது என்பேன்
காலமதில் முக்கியம் என்றிட்ட போதிலும்
காலமதை எவரும் பொருட்படுத்துவதில்லை
காலத்தில் ஓர் இடம் செல்ல வேண்டுமென்றால்
காலத்திற்குள் செல்லுதல் வேண்டும்
காலம் கடந்து செல்லுதல் பெருமையென்ற நிலை நவீன நிலையாக உள்ளது
காலம் தவிர்த்து செல்லுதல் தவிர்த்தல் வேண்டும் நீங்களும்
காலத்தின் முக்கியத்துவத்தை பொதுவாக கூறினோம்
காலத்தின் முக்கியத்துவம் ஆன்மீக நிலையில் கூறிட
காலமது சென்றிட்டால் ஞானமும் சென்றிடுமே
காலமது சென்றிட்டால் பிராப்தங்கள் விலகிடுமே
காலமது சென்றிட்டால் கிடைக்கக் கூடிய பாக்கியமும் விலகிடுமே
காலமதன் முக்கியத்துவம் பூஜை விதிகள் என்கின்ற வகைகளில் பார்த்தால்
காலத்தில் வராதோர் பயனற்ற நிலையும் காண்பரே
காலம் காலம் காலம் காலம் ஒன்றே காக்கும் ஏனெனில்
காலமும் சிவனும் ஒன்றே
காலத்திற்கும் மதிப்பினை கொடுக்கா விட்டால்
சிவனை அவமதிக்கும் நிலையும் காண்போம்.
ஓர் நாள் ஊதியம் சென்று விடும் என்றால் காலத்திற்குள் வேலை செய்யும் இடத்திற்கு ஓடுவதை அனைவரும் காண்கிறோம். இருப்பினும் தெய்வத்தை காக்க வைப்பது சகஜ நிலை ஆயிற்று இவ்விதம் இருப்பது ஆன்மீக நிலைக்கும் சீரானதல்ல.

கஜலட்சுமி

தாமரை நிறைந்த குளத்தில் கஜலட்சுமி பெரிய தாமரையின் மீது அமர்ந்திருக்கிறாள். தாமரைகளை ஏந்திய இரண்டு கைகளுடன் தலையில் ஒரு அழகான கிரீடம் உள்ளது. அவளுடைய இரண்டு பக்கங்களிலும் கீழே இரண்டு யானைகள் நின்று கொண்டு தும்பிக்கையால் பானைகளில் தண்ணீர் நிரப்பி பானைகளை மேலே நிற்கும் யானைகளிடம் கொடுக்கிறது. மேலே உள்ள இரண்டு யானைகள் அந்த நீரை வாங்கி கஜலட்சுமியின் தலையில் அபிஷேகம் செய்கின்றன. சுற்றிலும் தேவர் தேவதைகள் நின்று இந்த நிகழ்வை கண்கிறார்கள். இந்த கஜலட்சுமியின் சிற்பம் சுமார் எட்டடி அகலமும் பன்னிரண்டு அடி உயரமும் கொண்டது. சிதிலமடைந்த நிலையில் தற்போது உள்ளது. இடம் அஜந்தா எல்லோரா குகைகள் அவுரங்காபாத் மகாராஷ்டிரா.

குருநாதர் கருத்துக்கள் #37

கேள்வி: மந்திரத்திற்கும் பலன் உண்டு என பலரும் அறிந்ததே. இறைவனின் நாமம் தனியென கூறினால் அதற்கு என்ன பலன்?

இறைவனும் அவன் நாமமும் தனியல்ல என்றும் இறைவனே நாமம் நாமமே இறைவனும் என்பதே விதியாகும். அவன் நாமத்தை எப்பொழுதும் கூறிக்கொண்டே இருக்க அவனே அருகில் இருக்கும் நிலையும் உண்டு. மந்திரங்கள் தந்திரங்கள் என்பதெல்லாம் அவசியமற்றதாகும். வெறும் நாமம் ஒன்றே ஜெபித்து வர அதிலிருந்து மாறாமல் இருந்தால் இறைவனை நாம் அங்கு சென்று வழிபட்ட பலன் உண்டாகி முக்திக்கும் வழி தானென உண்டாகும். பின்பு மந்திரம் தந்திரம் எல்லாம் என்பதெல்லாம் எதற்கு? மன சிரத்தை மனம் ஓர் நிலைப் படுத்தவே அனைத்தும். மாற்றாக சில காரியங்கள் சாதித்தல் வேண்டுமென்றால் இதற்கு மந்திரங்கள் தேவையானது. இறைவனை அடைதல் வேண்டும் என ஓர் நோக்கம் மட்டும் நிலைத்திருந்தால் தெய்வ நாமம் சதா (எப்பொழுதும்) உரைப்பது மட்டுமின்றி சதா தெய்வ எண்ணத்துடன் வாழ்வதே போதுமானது.

ராவணன் அனுகிரஹமூர்த்தி

கைலாயத்தில் சிவன் பார்வதி அவர்களின் பரிவாரங்களுடன் உள்ளார்கள். இராவணன் தனது இருபது கரங்களின் வலிமையுடன் கைலாச மலையை அசைக்க முயற்சி செய்கிறார். இராவணனின் செயலினால் கைலாசம் லேசாக நடுங்க பார்வதி பதற்றத்துடன் சிவனின் கரத்தைப் பற்றிக் கொண்டாள். சுற்றி இருக்கும் சிவனின் பரிவாரங்கள் இராவணனின் செயலினால் கோபத்துடன் காட்சியளிக்கின்றனர். சிவன் ஒன்றும் அறியதவர் போல் பேரின்ப நிலையில் இருக்கிறார். சிதிலமடைந்த நிலையில் தற்போது இந்த சிற்பம் உள்ளது. இடம் கைலாச கோவில் குகை எண் 16. எல்லோரா குகைகள்.

குருநாதர் கருத்துக்கள் #36

கேள்வி: சுகம் ஏன் நிலைப்பதில்லை?

சுகம் எது? துயரம் எது? என நாம் சிந்தித்தல் வேண்டும். சுகமது வந்து விட்டால் பின் துயரமும் வரும் என்பது உறுதி. ஏனெனில் இரண்டும் நம் சிருஷ்டியின் (உருவாக்கியது) விளைவே. சத்யத்தின் நிலையில் பார்த்திட்டால் சுகமும் இல்லை துயரமும் இல்லை. துயரமது நமது தோற்றத்தின் விளைவால் மேல் ஓங்கிட அதுவும் நம் தீமையை நீக்கிடவே வந்துள்ளது என கண்டு கொண்டால் துயரமும் சுக நிலையாகும். துயரம் என்பது நமது கர்ம விதிகளை நீக்கிட என்றென நன்கும் உணர்ந்திட அதிலும் சுகம் காணக்கூடும். இதற்கு உதாரணமாக குழந்தைகளின் சேஷ்டைகள் அனைத்தும் தாயவள் துயரமாக காண்பதுண்டா? அனைத்தும் அக்குழந்தைக்காக தியாகம் செய்து எவ்வித துயரமும் தாங்கி கொள்வதை எண்ணி பாருங்கள். இதுவே துயரத்தை சுகமாக ஏற்றுக் கொள்ளும் நிலை இவ்விதமே இறைவன் என அழைக்கும் தாய் நாம் அப்அப்பொழுது கேட்கும் வினாவிற்கும் சேஷ்டைகள் அனைத்தும் ஆனந்தமாகவே பொறுத்துக் கொள்கின்றாள். ஆண்டவன் என் மேல் கோபம் கொள்கின்றார் என கூறுவது தவறாகின்றது. ஆண்டவன் தண்டிப்பதில்லை என மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். அனைத்தும் நம்மை நாமே தண்டிக்கும் நிலையாகும் ஏனெனில் நாம் பயிரிட்டது நாம் உறுதியாக அறுவடை செய்திடல் வேண்டும் என்பதே இயற்கையின் விதி சுகம் வரும் காலங்களில் உறுதியாக பின்பு துயரம் வரும் என உறுதி காண்பீர். அத்துயரத்தை நல்வழியில் ஸ்விகரித்தல் (எடுத்துக்கொள்ள) வேண்டும் அதையே வாய்ப்பாக ஏற்று நம்முடைய கர்மவிதிகளை மாற்றிட ஓர் மார்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அஷ்ட புஜ சரஸ்வதி

கல்விக்கு தெய்வமான சரஸ்வதி எட்டு ஆயுதம் கொண்டு அருள்பாலிக்கிறாள். பிரம்மா ஒரு அரக்கனுக்கு கொடுத்த வரத்தின் சக்தியினால் அரக்கன் இந்த உலகத்தை கட்டி வைத்தான். உலகம் இயங்காமல் நின்றது. உலகை மீட்டெடுக்க விருப்பப்பட்ட தெய்வங்கள் சக்தி வாய்ந்த எட்டு தெய்வீக ஆயுதங்களை சரஸ்வதிக்கு கொடுத்தார்கள். ஒரு புலி மீது சென்ற சரஸ்வதி அரக்கனை தோற்கடித்து உலகத்தின் மீதிருந்த கட்டை அவிழ்த்து அரக்கனை அழித்தாள். இடம் கட்சபேஸ்வரர் கோவில், பெரிய காஞ்சிபுரம்.

குருநாதர் கருத்துக்கள் #35

கேள்வி: ஆன்மீகம் இல்லை தெய்வத்தை நாடி செல்லும் காலங்ளில் உடலை அடக்க வேண்டுமா?

ஆம் அடக்க வேண்டியது உடலே என்றும் கூற இயலும். ஏனெனில் உணர்ச்சிகள் பொதுவாக ருசி கண்கள் வழியே காணுதல் காது வழி கேட்டல் ஸ்பரிசம் (தொடு உணர்ச்சி) உணர்வுகள் அனைத்தும் அடக்குதல் வேண்டும். இருப்பினும் இவையாவும் அடங்குவதற்கு எது உபயோகம் என சிந்தித்தால் மனமே என நன்கு உணர்தல் வேண்டும். மனமதை முழுமையாக அடக்குதல் வேண்டும். ஓர் பொருள் உட்கொள்ள தகாது என உணர்ந்தும் நாக்கின் ருசிக்கு அடிமையாகி அதை சாப்பிடுகின்றோம். அதன் விளைவுகளை அனுபவிக்கின்றோம். குறிப்பாக கொழுப்பு சக்தி அதிகமா இருக்கும் நபர் இதை நன்கு உணர்வார். வேண்டாம் என மனம் கூறிய பின்பும் மீறி ருசிக்கு அடிமையாகி சாப்பிடுகின்றனர். மனதில் திடமிருந்தால் இது நேரிட்டிருக்காது இந்நிலை காண மனதை உறுதிப்படுத்த வேண்டும். மனதை திடப்படுத்த வேண்டும் மனம் நம் வசம் இருத்தல் வேண்டும் நம் மனம் கட்டுக்குள் அடங்கி விட்டால் உடல் நம் கட்டுக்குள் அடங்கி விடும்.

யோக தட்சிணாமூர்த்தி

சிவபெருமான் உத்கடாசன தோரணையில் குருவாக தட்சிணாமூர்த்தி வடிவில் வந்து மௌனத்தில் ஞானத்தை அளித்து அறியாமையை போக்கி அருள்பாலிக்கும் சிற்பம். ஆற்காடு காவிரிப்பாக்கத்தை சேர்ந்த சிற்பம் தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.

குருநாதர் கருத்துக்கள் #34

கேள்வி: ஏகன் என்றால் என்ன? ஏகனை அடைய என்ன வழி? அதாவது ஏகனுக்குள் செல்ல என்ன வழி?

இதற்கு விடையானது வினாவைப் போல் எளிதாகவும் கடினமாகவும் உள்ளதாம். ஏனெனில் ஏகன் என்னவென வினாவிட்டால் அதற்கு விடை எளிதாக ஒன்று கூறுவோம். இவ்வொன்று என்பது என்னவென்றால் இது கடினமான விடையும் ஆகின்றது. ஒன்று ஏகம் என்பது பரம்பொருள் பரம்பொருள் என்பது என்னவென வினாவிட்டால் அது சத்தியம் அதுவே தூய்மை அதுவே மாசற்றது என்பதெல்லாம் விளக்கிக் கொண்டே போக இயலும். இருப்பினும் கேள்வி இதல்ல. ஏகனை அடைய என்ன வழி என்பதேயாகின்றது.

ஏகன் எங்கு இருக்கின்றான் என்பதை முதன்மையில் உணர்தல் வேண்டும். ஏகன் அனைத்திலும் உள்ளான் என்பதை உணர்ந்து அத்தகைய ஏகன் நமக்குள்ளும் உள்ளான் என்பதை உறுதியாக நம்புதல் வேண்டும் என்பதே முதல் படியாகின்றது. அந்த உள்ளிருக்கும் ஏகனை அடைதல் வேண்டுமென்றால் நாம் எங்கு செல்ல வேண்டுமென சிந்தித்தால் உள்ளுக்குள் செல்லுதல் வேண்டும் என விடையும் எளிதாக கிடைக்கின்றது. இதுவரைக்கும் எளிதாகவே உள்ளது இதற்கும் மேலாகவே கடினம் எவ்விதம் அடைகின்றது என்பது இதற்கு எளிதான வழிகள் இல்லை என்பதும் இங்கு யாம் எடுத்துரைக்கின்றோம். உள் செல்லுதல் வேண்டும் மனம் முழுமையாக உள்தனில் நிலைத்தல் வேண்டுமென்றல் நம் எண்ணம் வெளியாக செல்லுதலாகாது என்பதே இதற்கு விளக்கமாகின்றது. எண்ணம் வெளியாக செல்லுதல் வேண்டாம் என்றால் கட்டுப்பாடு வேண்டும் என்றும் வெளியாக நாம் கண்பது அநித்யமானது (உண்மையில்லாதது) என்றும் நித்யமாக நிலைப்பது ஏகன் மட்டுமே என்றும் மனதில் உறுதியாக நிறுத்தி இயன்ற அளவிற்கு மனமதை உள் நிறுத்தல் வேண்டும் என்றும் விளக்கமாக இங்கு அளித்தோம்.