சிவன் பார்வதி

கயிலையில் சிவன் தனது துணைவி பார்வதி தேவியுடன் அமர்ந்திருக்கிறார். ஒடிசாவில் இருந்த சிற்பம் தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.

குருநாதர் கருத்துக்கள் #18

தெய்வங்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர் மனிதர்கள் செய்யும் தவறுகளை அறிவார்கள். ஏனெனில் அவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். அவர்கள் மௌனம் சாதிப்பதை அறியாமை என எண்ணுதல் வேண்டாம். முதன் முறையாக செய்திடும் தவறுகளை மன்னிப்பர். இரண்டாம் முறையாக தவறுகள் செய்தால் பணவிரயம், உடல் நலக்குறைவு, இவற்றால் அவதியுற வேண்டி இருக்கும். இதனை உணராமல் மேலும் தவறுகள் செய்தால் அது சிவ தண்டனையாக பெருமளவிற்கு இருக்கும். இதனை அறிந்து மனிதர்கள் செயலாற்ற வேண்டும். குறிப்பாக தெய்வீக பணிகளில் ஈடுபடுவோர் பெரும் சிரத்தையுடன் செயல்படுவதுடன் தெரிந்து தவறுகள் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #17

பலர் தேவையற்று கோபம் கொள்கின்றனர். நடப்பது வாழ்வது கூறுவது செயல்படுவது அனைத்தும் கர்ம விதிகளின் பலனாக கண்டு கொண்டால் கோபம் என்பது ஓர் தேவையற்ற மனநிலை ஆகின்றது அல்லவா? அடுத்ததாக கோபத்தால் நீங்கள் சாதிக்கப் போவது என்ன என்று வினாவக் கண்டால் சாதிப்பது ஒன்றுமில்லை. அடைவது நஷ்ட நிலைகளே என்றும் உணர முடியும். இந்நிலையில் எப்பொழுதும் அமைதி ஆனந்தம் கொள்ள வேண்டிய மனதில் நாமாக கோபத்தை கொடுத்து கஷ்டப்படுத்துகின்றோம். இவ்விதம் கஷ்டப்படும் மனதால் இறைவனை தொழ முடியாது என்ற உண்மையை உணர வேண்டும். அன்று மாகாளி அவள் காளிதாசனை கண்டு உரைத்த வாக்குகள் என்னவென்றால் ஊருக்கு கதை சொல்லும் மனமது வதை கண்டால் அந்த தெய்வத்தின் முகம் வாடுமே. அதாவது மனம் ஒர் நிலையில் அமைதி இல்லாமல் இருந்தால் தெய்வத்தின் முகம் சுருங்குமாம் இவ்விதமிருக்க வீணாக சிறு சிறு காரியங்களுக்கு கோபம் கொள்ள வேண்டாம். அதற்கு ஈடாக எது கோபத்தை கொடுக்கிறதோ அதனை எளிதாக பேசி தீர்த்து விடலாம் என்கின்ற ஓர் நிலையைக் காண வேண்டும். இல்லையேல் மன அமைதி குறையும். உலகத்தில் இன்று உள்ள பெரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம் கோபமே இந்த கோபத்தை நீக்கிட அகங்காரம் என்பது நீங்கி விடும் மனதில் அமைதி நிலவும் மனதில் இறைவனும் அமர்வான்.

சிவன் பார்வதி

சிவன் தனது துணைவி பார்வதி தேவியுடன் நந்தி பகவான் மீது அமர்ந்திருக்கிறார். 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட சிற்பம். இடம் கர்நாடக மாநிலம் லக்ஷ்மேஷ்வர் என்னும் ஊரிலுள்ள சோமேஷ்வரர் கோயில். காலம் 10 ஆம் நூற்றாண்டு.

குருநாதர் கருத்துக்கள் #16

கேள்வி: நான் என்பது அகங்காரம் என்றால் எதார்த்தத்தில் எவ்விதம் நடப்பது? அதாவது நான் என்ற சொல் இல்லாமல் தன்னை அறிமுகப்படுத்தும் போது என்பெயர் இது நான் இது என்று ஆரம்பிக்கின்றோம் எதார்த்த நிலையில் நான் இல்லாமல் வாழ முடியாது அப்படியானால் எப்படி வாழ்வது?

நான் என்ற வார்த்தையில் தவறில்லை நான் என்கின்றதை இயற்கையிடம் கோர்த்திடவே பிழை ஆகின்றது. நான் என்பது மற்றவர்களிடம் ஒப்பிட்டு நான் சிறப்பானவன் எனவும் மற்றவர்கள் இதில் எளியோர் என காண்பது தவறாகும். இவ்விதமே அகங்காரம் பிறவி காண்கிறது. மற்ற உயிர்கள் அனைத்திலும் இறை நிலையை கண்டால் இவ்விதம் அகங்காரம் வளர்வதில்லை. பின்பு நான் என்பதில் பிழையும் இல்லை. நான் பெரியவன் மற்றவர் எல்லாம் தாழ்ந்த நிலையில் உள்ளனர். நான் சிறப்பானவன் மற்றவர் எளியோர். நான் செல்வந்தன் மற்றவர்கள் ஏழைகள். நான் கல்வியில் சிறந்தவன் மற்றவர்கள் மூடர்கள் என்பதெல்லாம் எண்ணத் துவங்கினால் அகங்காரம் வளரும். வார்த்தையில் பிழையில்லை நாம் அதை உபயோகிக்கும் மனநிலையில் தவறாகும்.

குருநாதர் கருத்துக்கள் #15

கேள்வி: எண்ணம் போல் வாழ்க என்ற சொல்லின் பொருள் என்ன? நாம் தீவிரமாக எண்ணியது யாவும் நடைபெருமா?

எண்ணம் உறுதியாக இருக்குமாயின் அதன் பின் செயலும் தொடரும் அவ்விதம் செயல் தொடர வெற்றி உண்டாகும். வெறும் எண்ணத்தால் யாதும் சாதிக்க இயலாது என்கின்றதை உறுதியாக அறிதல் வேண்டும். எண்ணம் தீவிரமடைய செயல்கள் உருவாகும் என்பதே பொருளாகும். இதற்கு மற்றோர் அர்த்தமும் முக்கியமான அர்த்தமும் உண்டு நாம் எவ்விதம் எண்ணுகின்றோமோ நமது எண்ணங்கள் எவ்விதம் இருக்கின்றதோ அவ்விதமே வாழ்வும் அமையும் உதாரணமாக தீய எண்ணம் படைத்தவனுக்கு காலம் செல்ல செல்ல தீய விளைவுகளே உண்டாகும். நல் எண்ணம் மற்றவர் நலம் வாழ்தல் வேண்டும் என எண்ணுதல் கடினம் காண்போர்க்கு உதவுதல் என எண்ணம் படைத்தவன் நல்வாழ்வே காண்பான். பின்பு ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்ற வினாவும் பின் தொடரும் அவரவர் கர்ம நிலைகள் உண்டு என்கின்றதை மீண்டும் எடுத்துரைக்கின்றோம். தெய்வங்கள் இருக்க கர்மங்களை நீக்க இயலாதா என்கின்ற மறு வினாவும் எழுகின்றது, இதற்கு யாம் ஒன்றை கூறுவோம். இறை விசுவாசத்துடன் செயல்பட சுமை தாங்கிகள் அப்அப்பொழுது தோன்றிட நமது சுமைகளை குறைக்குமேயன்றி கர்ம வினைகளை நாமே அனுபவித்தல் வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #14

கேள்வி: குடும்பத்தில் இருந்தவாரே எவ்விதம் ஆன்மீகம் தொடருதல் வேண்டும்?

என்றும் போல் வாழ்க என எளிதாக யாம் கூறி விடுவோம். பெரிதாக மாற்றங்கள் ஏற்படுத்துதல் அனைத்தும் விடுதல் என்கின்றதால் ஆன்மீக உச்சம் அடைய இயலாது. நாம் ஆன்மீக நாட்டம் உள்ளதால் மற்றவர்களும் ஆன்மீக பாதையில் வருதல் வேண்டும் என எண்ணுவது தவறாகும். இதற்கு அவர்களும் ஆன்மீகத்திற்கு வர வேண்டும் என ஆண்டவனிடம் வேண்டுவது தவறில்லை. இருப்பினும் அவரவர் கர்ம நிலையை தொட்டே அவர்களின் முன்னேற்றம் உண்டாகும். பின்பு எவ்விதம் ஓர் குடும்பத்தில் செல்வது என்றால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களை ஆனந்தப்படுத்த வேண்டும். விசித்திரமாக உள்ளதால்லவா! நாம் மற்றவர்களுக்கு ஆனந்தம் கொடுக்க சந்தோசத்தை கொடுக்க நாம் நாடுவது நமக்கு எளிதாக கிடைக்கும் என்பது ஓர் விதியாகும். இதில் மற்றவர்களின் குணாதிசயங்களை ஆராய்தல் வேண்டாம். ஏனெனில் ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை. இருப்பினும் ஐந்தும் சேர்ந்தாலே கை அசையும்.

இவ்விதமே குடும்பத்தில் அனைத்து அங்கங்களும் தானாக இயங்கி ஓர் கையாக மாறுதல் வேண்டும் என ஆண்டவனை வேண்டிட அவர் கருணையால் அருளால் குடும்பம் ஆன்மீக நிலை அடையும். தீயவர்களாக உள்ளோரும் நல்லவர்களாக மாறி இறையருள் பெறுவர். வால்மீகி என்கின்றவர் எவ்விதம் இராமாயணம் என்கின்ற நூலை எழுதினார் என்பதை சிந்திக்க வேண்டும். வேடம் கட்டி திரிந்த பலர் உண்மையாக துறவம் கண்டனர் என்கின்ற பல கதையும் புராணங்களில் உண்டு. தன்னை ஆக்கிரமிக்க வந்தது சிங்கம் என வில்வ மரத்தின் மீது அமர்ந்து காலை வரை வில்வ இலைகளை கீழே போட்டு விடிந்ததும் நாம் போட்டது சிங்கம் மீது அல்ல சிவலிங்கம் என உணர்ந்தார். அத்தகைய நபருக்கும் இறையருளால் முக்தி கிடைத்தது ஆண்டவனின் அருள் கருணையானது பெரிது. அனைத்தையும் சீராக்க அவரால் முடியும். வேண்டியது பொறுமை ஒன்றும் நமக்கென எதுவும் வேண்டாம் என்ற மனப்பான்மையை வளர்த்திட அனைத்தும் நம்மை வந்து சேரும். அவரவர் வாழ்க்கையில் இக்கொள்கைகள் இவ்விதமுறைகளை கடைபிடித்து வர எங்கும் நலம் அனைத்தும் நலமே.

குருநாதர் கருத்துக்கள் #13

பலருக்கும் பெரும் தொகையை அளித்து அன்னம் (சாதம்) மற்றவர்களுக்கு அளித்திட இயலவில்லை என்கின்ற குறையும் உள்ளது. இதற்கு ஓர் நல்லதோர் மார்க்கம் (வழி) யாம் இங்கு கூறுகிறோம். காஞ்சிக்கு புகழளித்த மகானும் (மகா பெரியவா) இதனை முன்பே கூறியிருக்கிறார். நித்யம் (தினந்தோறும்) ஓர் பிடி அரிசியானதை தானத்திற்கென எடுத்து வைக்கவும். அதிகமாக அரிசி சேரும் பொழுது பலர் கூட்டாகவோ தனியாகவோ இதனை அன்னமாக மாற்றி தானம் செய்து வர ஆர்வமும் பூர்த்தியாவதோடு மற்றவர்களின் பசியை ஆற்றிய நலனும் கிட்டக்கூடும்.

குருநாதர் கருத்துக்கள் #12

ஆன்மீக வழியில் செல்கின்றவர்க்கு உணவில் முக்கியமாக தவிர்க்க வேண்டியது என்ன?

ஆன்மீக வழியில் செல்வோர்க்கு சில பொருட்களை நீக்குமாறு குருக்கள் கூறுவதுண்டு. உதாரணமாக பூண்டு வெங்காயம் வகைகள் இருப்பினும் அனைத்திற்கும் மேலாக ஒதுக்க வேண்டியது புலால் வகைகள் அதாவது உயிருள்ள நடமாடும் ஜீவன்களை நாம் சாப்பிடுவதால் அவ்வுயிரின் சில கர்ம பாக்கிகளை நாமும் பெறுகின்றோம். இதன் வழியாக முன்னேற்றங்கள் தடைபெறுகிறது மேலும் மற்றோர் உயிரை நீக்கி நாம் வாழ்வது என்பது மட்டுமல்லாது ருசித்து உண்பது ஆகாது என்கின்ற ஒன்றும் உண்டு. இது நாம் கர்ம வினைகளை ஏற்றுக் கொள்கின்றோம் என்றும் அதனை நீக்கிட மறுபிறவி எடுத்திடல் வேண்டும் என்கின்ற ஓர் விதியுமுண்டு. மற்றவை நிச்சயம் நீக்க வேண்டும் என விதி இல்லை ஏனெனில் மரக்கறி வகைகள் உட்கொள்ளும் காலத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை என்கின்ற போதிலும் கார வகைகளை எருவு வகைகள் அதிக புளி என்பதெல்லாம் தவிர்த்தல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. ஆன்மீக பாதையில் சென்று தியானம் ஜபம் என படிப்படியாக முன்னேறுவோர்க்கு ஜீரண உறுப்புகள் பலவீனம் அடையும். இவ்விதம் இருக்க சிறிது மாற்றங்கள் ஏற்பட்டாலே உடல் அசௌகர்யங்கள் காணக்கூடும் என்கின்றதால் தவிர்க்கச் சொல்கின்றோம். இது புலால் உண்பவர்களுக்கும் எடுத்துக் காட்டாக இருக்கும். ஏனெனில் அத்தகைய உணவுகள் ஜீரணிக்க அதிகசக்தி வேண்டும் என்கின்ற ஓர் நிலையும் உண்டு என்பதுமட்டுமல்லாது உஷ்ண தன்மைகள் (உடல் சூடு) வளர்க்கும் என்பதுமாகும். தவிர்ப்பது நல்லது என கூறிவிட்டோம் பொதுவாக கடின விதிகள் இல்லாப் போதிலும் அவரவர்க்கு ஏற்றவாறும் உடல் நிலைக்கு எற்றவாறும் விதிகள் அமைப்பது நன்று.