கேள்வி: இக்கலியுகத்தில் பலத்தால் எதையும் அடையலாம் என்பது சரியா?
பலத்தால் காரியங்களை சாதிப்பவன் ஒருநாள் பலத்தால் தோல்வியும் காண்பான். வாளை எடுத்தவன் வாளால் அழிவான் என்றும் ஓர் பழஞ்சொல் உண்டு. இது உறுதியாக நடைபெறுகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எவரவர் வாழ்க்கையில் பலத்தின் அடிப்படையாலும் மற்றவர்களை அச்சுறுத்தி சீர்கெடுக்கின்றானோ அவன் ஒரு நாள் உறுதியாக அத்தகைய பலத்திற்கும் அடங்கி விடுதல் வேண்டும் என்பதே ஈசனின் விதியாகின்றது. ஆங்கலமதில் கூற Action Reaction என்பார்கள் இதிலிருந்து எவரும் தப்ப இயலாது.
கேள்வி: ஆன்மீக பாதை என்றால் சுகம் யாவும் அனுபவித்தல் கூடாது விரக்தியாக இருக்க வேண்டும் என்பதுதானா?
சுகம் என்பது என்ன என்றால் சாதாரண சுகங்கள் யாவும் நிலையற்றதாம். ஆன்மீக பாதையில் வந்தால் படிப்படியாக ஒவ்வொன்றாக விடுதல் என்பதே உண்மையான நிலையாகின்றது. இதனை உணர்தல் வேண்டும். தெய்வம் இவ்வுலகம் நமக்கென படைத்து அதிலுள்ள சுக போகங்களையும் நமக்காகவே படைத்துள்ளான் என்பது உண்மை. இருப்பினும் நாம் எங்கிருந்து வந்தோம் என நாம் தேடிட மீண்டும் அங்கு செல்லுதல் வேண்டும் என எண்ணம் படைத்தால் இங்கு விட்டு அங்கு செல்லுதல் வேண்டும் என்கின்றதே உண்மையான நிலை. இவ்விதமிருக்க இங்கிருக்கும் சுக போகங்கள் விடுதல் வேண்டும். இது பலராலும் இக்காலத்தில் யாத்திரை செய்ய இயலாது என்பதையும் மனமதில் நிறுத்தல் வேண்டும். இக்காலத்தில் நமக்கு முக்கியம் என்கின்றதெல்லாம் இங்கு விடுதல் வேண்டும் ஏன் இவ்வுடலையே விடுதல் வேண்டும் என்கின்றதே நிலையாய் நிற்க மற்றவையெல்லாம் விளையாட்டு பொருட்களாகவே கண்டு அதனையும் இங்கு விட்டு செல்லுதல் வேண்டும் என்பதே சத்திய நிலை.
எம்மதம் பெரிதுதான். உம்மதம் அல்ல என்கின்ற வீண் விவகாரங்கள் ஏன் என்றும் மதம் என்பதே மதம் பிடித்த யானையாம் என்று இங்கு கூறினோம். அவ்விதம் கூறுகின்றவர் மதம் பிடித்த யானை போல் என்றும் இங்கு விளக்கிடுவோம். மதம் பிடித்த யானை எதிரே வரும் அனைவரையும் எதிரி என அதற்கு தோன்றி தாக்குகிறது. அவ்விதமே இந்நிலை கண்டோர். இது தான் மதம் என்றும் மதம் தவறுகின்றோர் என்றும் இங்கு விளக்குவோம். மதம் என்பது ஓர் தேவையற்ற பிரச்சனையாம் என்று இங்கும் கூற மேலும் இவ்வித வினாக்கள் வேண்டாம் என்றும் இது எவர் மனதில் தோன்றியதோ அவரே அச்சிந்தனையை மனதிலிருந்து நீக்கவும் என்றும் இங்கு கூறினோம்.
கேள்வி: ஆலயம் பெரிதா? இல்லை அங்கே வீற்றிருக்கும் சக்திதான் பெரிதா?
ஆலயங்கள் தோன்றும் முன்னதாகவே தெய்வீக சக்தி இருந்தது. இவ்விதமிருக்க ஆலயம் பிரதானம் அல்ல. ஆலயங்கள் முன்பு கூறியவாறு ஆன்மீகக் குருடர்களுக்கு ஊன்று கோலாகவே விளங்குகின்றது. அங்கு நம் ஆத்மாவின் சக்தியையே மூர்த்தங்கள் (மூர்த்திகள்) பெறுகின்றது என்பதை யாம் இங்கு கூறுவோம். எவ்வித ஆழ்ந்த நிலையில் நாம் பிரார்த்திக்கின்றோமோ நம் உள்ளிருக்கும் அத்தெய்வீக சக்தியே அம்மூர்த்தங்களுக்குள் பாய்கின்றது என்பதே பொருள். இது எளிதாக நீங்களும் உணர இயலும். ஏனெனில் ஆலயத்தின் பெருமை வலிமை அங்கிருக்கும் சக்கர பிரதிஷ்டையே இது யார் பிரதிஷ்டை செய்தது எனக் கேட்டால் மனிதனே இவ்விதம் ஆலயத்திற்கு முன்னதாக தெய்வீக சக்தி என்கின்றதால் அச்சக்தியே பெரிதாகின்றது.
கேள்வி: சிறிது எட்ட நின்று பார் என்கிற வாக்கியத்திற்கு என்ன பொருள்?
இதற்கு சாட்சியாக நில் என்பது மறு விளக்கமாகின்றது. இது சிறிது கடினம் என்கின்ற போதிலும் முயற்சிக்க படிப்படியாக செய்ய இயலும். நமக்கு நான் இவ்வுடல் இல்லை என்பதை உணர்தல் வேண்டும். இரண்டாக எமக்கு எதுவும் நேரிடவில்லை என்பதை உறுதிப்படுத்தல் வேண்டும். ஏனெனில் ஆத்மாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது எளிதல்ல என்கின்ற போதிலும் சிறு சிறு காரியங்களில் துவங்கி பெரும் காரியங்களுக்குச் செல்லுதல் வேண்டும். நோயுற்ற நிலையிலும் எமக்கு எதுவும் நேரிடவில்லை என உரைக்கும் (கூறும்) சக்தியையும் பொறுமையையும் வளர்த்தல் வேண்டும். இது ஒன்றே ஆன்மிகத்தில் மேன்மையளிக்க வல்லதாம். என் செயலால் யாதும் இல்லை என்கின்றதையும் அனைத்தும் அவன் செயலே என்கின்ற மனப்பாண்மையும் முழுமையாக வளர்த்தல் வேண்டும். நான் பணி செய்கின்றேன் என் பணியால்தான் அனைத்தும் முன்னேறுகிறது என்கின்ற மனப்பான்மை நீக்குதல் வேண்டும். ஏனெனில் அவனன்றி ஓர் அணுவும் அசைவதில்லை என்கின்றது உண்மையான நிலை. இதை நன்கு உணர உணர ஆன்மிகத்தில் வளர்ச்சி பெறக் காண்பீர்கள். முக்கியமாக அனைத்தையும் சாட்சியாக நின்று பார்த்தல் வேண்டும். அனைத்திற்கும் சாட்சியமே நல்லது. வழக்கில் சாட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதால் அமைதி காண்பீர்கள். இதுவே வாழ்க்கையிலும் பெறுதல் வேண்டுமெனில் அனைத்தும் சாட்சியாக பார் எட்ட நின்று பார் எமக்கு இது நடைபெறவில்லை என்பது போல் எட்ட நின்று பார்த்தல் வேண்டும் என்பதே பொருளாகின்றது.
வளர்ச்சி வேண்டுமென்றால் ஓர் ரூபம் வேண்டும் என்கின்ற நிலை உண்டு. அது மட்டுமல்லாது யாதேனும் உருவமோ இல்லை அமைப்போ இருந்தால் தான் அதில் மற்றங்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக சுவற்றிற்கு அடிக்கின்ற சாயம் சில காலங்கள் சென்றால் அழிந்து விடுகிறது மறைந்து விடுகின்றது இல்லை மாற்றம் ஏற்படும். ஆத்மாவிற்கு அவ்விதம் எதுவுமில்லை வருகின்ற காலத்திலேயே (மனித உடலுக்குள் வரும் காலத்தில்) ஆத்மா தூய்மையான நிலையில் உள்ளதானால் அதற்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதை தாங்குகின்ற உடலில் தான் மாற்றங்கள் ஏற்படுகின்றது. ஆத்மாவிற்கு எவ்வித மாற்றங்களும் நேரிடுவதில்லை.
மக்களிடையே பலரும் தெய்வம் நமக்கு என்ன செய்து விட்டது என்று கூறுகின்றனர். அதுவும் பல வகை சௌகர்யங்கள் உள்ளவரே இவ்விதம் கூறுகின்றனர். இது சிறிது வருத்தம் தருகின்றது ஏனெனில் மறுபக்கம் பார்த்தால் எதுவும் இல்லாதவரே இருக்கின்றனர், இவர்கள் இவ்விதம் குறை கூறுவதில்லை தேவைக்கு ஏற்ப பணம் தங்குவதற்கு நல்வீடு என்பதெல்லாம் இருக்க என்றும் உணவிற்கு பஞ்சம் இல்லாத காலத்தில் இவ்விதம் கூறுவது மிகவும் கீழ்த்தரமானது. இத்தகையோர் அவ்விதம் தோன்றிட்டால் ஏன் ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் ஏன் வழிபடுதல் வேண்டும் அவருடைய பெருமையை காட்டுவதற்காகவே என்று கூறுகிறோம். இதனை தவிர்த்தல் வேண்டும். மனிதனை படைத்து நல்ல அங்கங்களை (உடல் உறுப்புகள்) கொடுத்து நடமாடும் சக்தியும் மற்றவர்களிடம் தம் குறைகளையும் நிறைகளையும் கூறக்கூடிய வல்லமையையும் அளித்துள்ளார். பின்பும் இறைவனைப் பற்றி குறை கூறினால் அடுத்த ஜென்மம் உறுதியாக மனித ஜென்மம் இருக்காது. இதனை மனமதில் நிறுத்த வேண்டும். இதனை யாம் கூறுகிறோம் என மன வருத்தம் வேண்டாம் வரும் ஜென்மங்களில் தீய நிலை நேரிடக்கூடாது என்பதற்காக ஓர் அறிவுரையாக கூறுகின்றோம்.
திருமால் தனது நரசிம்ம அவதாரத்தில் இரணியகசிபு அசுரனை அழித்தல். நடுவில் மட்டும் 10 இன்ச் அகலமும் 6 இன்ச் ஆழமும் கொண்டது. இடம் சென்னகேசவா கோயில் பேலூர் கர்நாடகா.
கேள்வி: ஆத்மா சுதந்திரமாக இருக்க வேண்டுமென கூறினால் ஆன்மீக பாதையில் செல்வோருக்கு ஏன் பல கட்டுப்படுகள் விதிக்கப்படுகிறது?
சுதந்திரம் என்பது அடக்கம் இல்லை. கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை என்பதே பொருள். ஆத்மா விடுதலை பெற வேண்டும் என்றால் ஐம்புலன்களின் பிடியிலிருந்து விடுதலை பெறுதல் வேண்டும் என்பதே பொருள். இத்தகைய நிலையில் ஆத்மா உண்மையாக சுதந்திரம் பெற வேண்டும் என்றால் தானாக சுயமாக சில கட்டுப்பாடுகள் விதித்து ஐம்புலன்களின் பிடியிலிருந்து ஆசாபாசங்களிலிருந்தும் தப்பித்து விடுதல் வேண்டும்.