குருநாதர் கருத்துக்கள் #1.58

கேள்வி: இடுக்கன் வருங்கால் நகுக எனும் பழமொழியின்படி கடின காலங்களில் எவ்வாறு சிரிப்பு வரும்?

நல்லவைகள் நடக்கும்போதும் கடினங்கள் நடக்கும்போதும் நாம் சமமான மனநிலையில் இருத்தல் வேண்டும். நல்லவை நடக்கும்போது பெரிய அளவில் சிரிக்காமல் இருக்கப் பழகிக் கொண்டால் கடினம் வரும் காலத்தில் சிரிப்பும் தோன்றும். ஏனெனில் அனைத்தும் அவன் திருவிளையாடல் என அறிந்துகொண்டால் அந்தத் திருவிளையாடலின் அருமையை உணர்ந்து சிரிப்பே தோன்றும் கோபமும் குறையும் வேறொன்றும் தோனாது. ஒன்றை மனதில் நன்றாக நினைத்திட சென்ற ஜென்ம வினைகள் எல்லாம் நம்மைப் பற்றிக் கொள்வதன் விளைவால் இந்த ஜென்மத்தில் அந்த வினைகளைத் தீர்க்கும் வாய்ப்பும் இறைவன் அளித்திட அவ்வாய்ப்புகளில் துக்கமும் கலந்து நிற்கும் என்பதை உணர்தல் வேண்டும். இதில் தீமையைக் காணாமல் நல்ல வாய்ப்பு என எண்ணிக்கொண்டால் துக்கம் வரும் நிலை இல்லை. இருப்பினும் மனித இயல்பு ஒன்று உண்டு. நன்றாக இருக்கும் காலங்களில் சிரிப்பையும் தீயது என்று எண்ணும்போது துயரமும் அதிகமாக இருக்கும் என்கின்ற நிலையைக் காணுகின்றோம். இதற்கு முழுமையான காரணம் சரணாகதி இல்லாத நிலை. அனைவரும் இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டும். முழுமையான சரணாகதி அடைந்தால் என்றும் ஆனந்தமே துயரம் என்னும் நிலைக்கு இடமில்லை. இதற்கெனவே பெரியோர்கள் சிவனே எனக் கிட என்று கூறுவதும் உண்டு. அனைத்தையும் அவன் பொறுப்பில் விட்டுவிட நமக்குத் துயரமும் இல்லை பெரும் ஆனந்தமும் இல்லை அனைத்தும் சமம் ஆகின்றன. இவ்விதம் அனைத்தையும் தாண்டி சாட்சியாக நின்று காணும் நிலை அடைதல் வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #1.57

ஆண்டவன் இவ்வுலகை படைத்தான் நன்றாக

ஆண்டவன் இவ்வுலகை படைத்தான் அவன் கருணையால்

ஆண்டவன் படைத்த மனிதருக்கும் கருணை என்பதும் குறையாமே

கருணைதனை அனைவரும் வளர்த்தல் வேண்டும்

கருணைதனை காட்டிடக் கருணையும் திரும்பக் கிடைக்கும்

கருணையற்ற உலகம் வெறுமையாகக் காண்பீர்கள்

கருணையே இறைவன் வாக்காகுமே

இக்கால நிலைகளைச் சிந்தித்துப் பார்த்தால் செயல்கள் யாவும் கருணையற்ற செயல்களாக இருக்கிறது

வளர்ப்பீர்கள் நன்றாக கருணைகளை ஜீவராசிகள் அனைத்தும் பெற்றிட வேண்டும் என்று

வளர்ப்பீர்கள் நன்றாக கருணைகளை சர்வதேசங்கள் பெற்றிட வேண்டும் என்று

வளர்ப்பீர்கள் நன்றாக கருணையுடன் பிரார்த்திக்கும் தன்மையை

நன்றாகத் தலை சாய்த்தும் நன்றாகக் கேட்டும் நன்றாகச் செயல்பட்டும் நன்றாகத் தலை வணங்கியும்

இறை சேவையில் ஈடுபட இறைவனிடம் சரணாகதி அடைந்தால் அனைத்தும் சுபிட்சம் (நல்லதாகும்).

குருநாதர் கருத்துக்கள் #1.56

கேள்வி: இறைவனுக்குப் படைப்பது (நைவேத்யம்) அவசியமா?

இறைவன் நம்முடன் வாழ்கின்றான் என்கிற எண்ணம் கொண்டால் நாம் உட்கொள்ளும் அனைத்தையும் இறைவனுக்குப் படைத்து வந்தால் விசேஷமாக படையல் தேவையற்றது. அந்த நிலை அடையும் வரை இறைவன் வேறு நாம் வேறு என்கின்ற எண்ணம் இருக்கும் வரை இறைவனுக்கு நாம் யாதேனும் படைத்து நம் ஆன்மிகப் பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முன்பு கூறியவாறு அனைத்தும் இறைவனுடையதே. அவன் நமக்குத் தருவதை நாம் மீண்டும் திருப்பிக் கொடுக்கின்றோம். ரூபம் சிறிது மாறுகின்றது என்பது ஒன்றே வித்தியாசமாகின்றது (நமக்குக் கிடைக்கும் அனைத்தும் இறைவன் கொடுப்பது நாம் அதிலிருந்து சிறிதளவே திருப்பிக் கொடுக்கின்றோம்). இறைவனுக்கு நாம் பொதுவாகப் படைக்க வேண்டியது தூய்மையான உள்ளம் ஆகும். அந்த தூய்மையான உள்ளம் இருக்கும் நிலை அடைவது சிறிது சிரமம் என்கின்ற போதிலும் முயற்சிகள் செய்து தூய்மையான நிலையை உணர்ந்து அந்த உள்ளத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதே சிறந்த படைப்பாகும்.

குருநாதர் கருத்துக்கள் #1.55

நமது கண்கள் அனைத்தையும் காண்கின்றன ஆனால் தன்னை காண்பதில்லை. அதுபோலவே மற்றவர்களின் நலன்களை முதலில் எண்ணிய பின்பே நமது நலன்களை நாட வேண்டும். ஆனால் இந்தக் கலியுகத்தில் அவ்வாறு நடப்பதில்லை. அனைவரும் சுயநலத்தில் மூழ்கி அதிலிருந்து வெளிவர முடியாமல் இருக்கின்றனர். ஏன் இப்படி என்று எண்ணிப் பார்த்தால் மற்றவர் போல் நாமும் இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்று நினைக்கின்றனர். இந்த மனப்பான்மையை சிறிது மாற்றி சுயநலத்திலிருந்து சிறிது நீங்கி மற்றவர்களின் நலத்தையும் எண்ணுதல் வேண்டும். இதன் முதல்படியாக சிறிதேனும் அன்னதானம் அளித்திடல் வேண்டும். பசியாற்றும் காரியமானது மிகவும் நல்ல கர்மம் ஆகும். இந்த அன்னதானத்தைப் படிப்படியாகப் பெரிதாக்கிக் கொண்டு மற்ற நல்ல காரியங்களையும் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி செய்தல் வேண்டும். பொதுவாக நல்ல காரியங்கள் செய்யும் போது வேறு விதமான எண்ணங்கள் இல்லை என்றாலும் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம் மேலோங்குகின்றது இதனைத் தவிர்த்தல் வேண்டும். இறைவன் அளிக்கின்றான் நமது என ஒன்றுமில்லை என்பதை மனதில் வைக்க வேண்டும். இதனை மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். ஏனெனில் பலரின் மனதில் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம் மேலோங்குவதை கண்கின்றோம் இதனை உறுதியாக நீக்க வேண்டும்.

தியானங்கள் மற்ற பிரார்த்தனைகள் செய்யாதவர்களும் இக்காலத்தில் ஆரம்பியுங்கள். ஏனெனில் உடலுக்கு உணவுபோல ஆத்மாவிற்கு சில நல்ல பிரார்த்தனைகளும் மந்திரங்களும் உணவாகின்றது என்பதை மறக்காதீர்கள்.

குருநாதர் கருத்துக்கள் #1.54

ஆன்மிகம் என்பது ஆத்மாவை மிகையாக (அதிகமாக) நாடுவது என்று பொருளாகும். இவ்விதம் இருக்க பலரும் இக்காலத்தில் அமைதி கிடைக்காத நிலையில் ஆண்டவனை நாடுகின்றனர். ஆண்டவன் உடனடியாக நிவர்த்தி (கேட்டதைக் கொடுப்பது) செய்தல் வேண்டும் என்ற எண்ணத்தோடும் அங்கு செல்கின்றனர். ஆனால் அது அவ்விதம் நடக்காது. ஏனெனில் கர்மவிதிகள் கர்ம பாக்கிகளைத் தீர்த்தல் வேண்டும் என்கின்ற ஓர் கணக்கு உண்டு. திடீர் மாற்றங்களை எதிர் பார்ப்பதும் ஓர் குற்றமாகின்றது. மேலும் ஆன்மீகப் பாதையில் செல்லும் முன்னதாக தெய்வ நிலைகளை அடைவதில் நாட்டம் (ஆர்வம்) காணும் முன்னதாக நல்ல மனிதனாக மாறுதல் வேண்டும். நல்ல மனிதன் என்றால் என்ன எனப் பலரும் எண்ணுவர். நல்ல மனிதன் என்பவன் முதலில் மற்றவர்களை எண்ணுபவனாக இருக்க வேண்டும். அதாவது சுயநலமில்லாமல் மற்றவர்களின் சௌகர்யங்களைப் (சுகங்களைப்) பார்ப்பதே முதலில் இருக்க வேண்டும். நம் நாட்டில் இது இல்லை என்பதற்குப் பெரும் ஆதாரமாக நம் சாலைகள் இருக்கின்றது. மற்றவர்களுக்கு வழி விடுவது என்றால் அது பலகீனம் என எண்ணுவார்கள் போல் இருக்கிறது. இந்த இடத்தில் முதலில் மற்றவர்களின் சௌகர்யங்களை எண்ணுங்கள்.

இரண்டாவதாக அகங்காரத்தை நீக்குதல் வேண்டும். நாம் பெரியவன் என்பதில்லை வல்லவனுக்கு வல்லவன் உண்டு என்பதை மறக்காமல் செயல்படுங்கள். பாசம் காட்டுவது பலகீனம் என்று பலர் எண்ணுகின்றனர் இந்த எண்ணத்தையும் நீக்குதல் வேண்டும். இறைவன் நம் தந்தை என்றால் நாம் அனைவரும் அவர் மக்களே என்கின்ற எண்ணத்தை வளர்த்திடல் வேண்டும். இல்லை என்றால் ஆன்மிகப் பாதையில் செல்வதில் அர்த்தமில்லை. எதிர்பார்ப்புகள் என்பதையும் மனதிலிருந்து அகற்ற வேண்டும். ஏனெனில் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் தேவையில்லாத கோபம் உண்டாகும். கோபத்தினால் வரும் நஷ்டங்கள் மற்றவர்களுக்கு அல்ல உங்களுக்கே என்பதை மனதில் நன்றாக நினைத்து செயல்படுதல் வேண்டும். ஏனெனில் கோபம் வரும் நேரத்தில் எங்கு எந்த இடத்தில் யாரிடம் கோபம் காட்டுகின்றோம் என்பதை நாம் எண்ணுவதில்லை சீறிப் பாய்கின்றோம். விளைவாக சிறு கர்மாக்களையும் சேர்த்துக் கொள்கின்றோம். ஆதலால் தான் ஆன்மீகப் பாதைக்கு செல்லுவது நன்றாய் இருப்பினும் அதில் காலடி வைக்கும் முன்னதாக உன்னையே நீ திருத்திக்கொள் மனிதா என்று பல மகான்கள் கூறி உள்ளனர். இதனைக் கடைபிடித்து நல்வழியில் நல்மாற்றங்கள் ஏற்படுத்துவீர்களாக. மற்றவர்களிடம் நல்ல குணங்களைப் பார்த்தால் நம்மிடம் அது இருக்கின்றதா என எண்ணிப்பார்க்க வேண்டும் இல்லை என்றால் அதை சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் தீய குணங்களைக் கண்டால் நம்மிடம் உள்ளதா என்று பார்த்து இருந்தால் அதை நீக்க வேண்டும். இதையே முதல் படியாக எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் ஆன்மிகப் பாதையில் சிறு அளவிற்குச் சென்று அங்கேயே நல்மரத்தின் கீழ் நித்திரை காணுதல் வேண்டும் என்கின்ற நிலை உண்டாகும் (ஆன்மிகப் பாதையில் செல்லும் போது மேல் நிலைக்குச் செல்லாமல் சில காலங்கள் அதே இடத்தில் இருப்பது). சிறிது சிந்தியுங்கள் மாற்றங்கள் நீங்களாக ஏற்படுத்த வேண்டும். இதற்கும் இறைவனுடைய உதவியை நாடுதல் வேண்டும் இருப்பினும் முயற்சிகள் உங்களுடையதாக இருக்க வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #1.53

கேள்வி: போகி பொங்கல் மாட்டுப் பொங்கல் ஆகிய பண்டிகைகளின் விளக்கங்கள் என்ன?

போகிப் பண்டிகை அன்று பழமையான பொருட்களையும் உடைந்ததையும் வீதியில் போட்டு எரித்து விடுகின்றனர். புதிய பொருட்களை அகம் தனில் (வீட்டின் உள்ளே) வைத்து விடுகின்றனர். இதன் தாத்பரியம் (பொருள்) என்ன என்று சிறிது சிந்தித்தல் வேண்டும். இந்நாளில் நம்மிடம் இருக்கும் தீயவைகளையும் தீய பழக்கங்களையும் உறுதியாக எரித்து விட வேண்டும். இது பொருட்களைக் குறிப்பதல்ல என உணர்தல் வேண்டும். குறிப்பாக நம்மிடமிருக்கும் தீய பழக்கங்கள் தீய குணங்கள் தீய தன்மைகள் ஆகியவற்றை எரித்துவிட்டு அனைத்தும் நல்வழியில் மாறுதல் வேண்டும் என்பதை உணர்த்திடவே இந்நாள் கொண்டாடப்படுகின்றது. அடுத்து வருகின்ற பொங்கல் மாட்டுப் பொங்கல் என்பதையெல்லாம் கொண்டாடுகின்றீர்கள். நியாயமாகக் கண்டால் சிறு அளவிற்கே விவசாயம் என்பது தற்போது உண்டு. இதற்குப் பல காரணங்கள் கண்டு கொள்ளலாம். ஆயினும் முக்கியமான காரணம் நமது சுயநலத்திற்காக இயற்கை வளங்களை அழிக்கும் விருப்பம். பொங்கல் பண்டிகை பூமி விளைவதற்காக அதற்கு உணவளிக்கும் பூமாதேவிக்கும் பூமியில் உணவை வழங்கும் அன்னபூரணி தேவிக்கும் நன்றி செலுத்தக்கூடிய நாளாகும். இதனைக் குறித்திடவே புதிய பானையில் பொங்கல் வைத்து ஆனந்தம் காண்கின்றனர். இக்காரணத்தை வைத்து விசேஷமாக உணவுகள் படைத்தும் தெய்வத்தை சாந்திப்படுத்துகின்றனர் நன்றி செலுத்துகின்றனர். அடுத்ததாக மாட்டுப் பொங்கல் என்கின்ற ஒன்று உண்டு. இந்நாளில் இதற்குப் பெரிய அர்த்தம் எதுவும் இல்லை என்றே கூறுவோம். ஏனெனில் இக்காலத்தில் நிலத்தை உழுவதற்கு வாகனங்கள் மற்றும் நவீன கருவிகள் உபயோகப்படுத்துகின்றனர். இருப்பினும் விவசாயத்தில் அறுவடை செய்தவை அனைத்தையும் மாடுகள் பூட்டிய வண்டியில் சந்தைக்கு எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில் அம்மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வழியாக அவைகளுக்கும் நல்காரியங்கள் அன்று நடைபெறுகிறது. மேலும் பால் சுரந்து தரும் பசுக்களுக்கும் நன்றி செலுத்தும் நாளாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகமொத்தம் கணக்கிட்டுப் பார்த்தால் அன்ன பூரணியை நாம் தலை வணங்கி நன்றி செலுத்தும் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும். போகியில் தீயவற்றை நீக்கி நல் மார்க்கங்களை நாடி பின்பு இக்காலத்தில் இதுவரை கிடைத்த அனைத்திற்கும் நன்றி செலுத்தவே இம்மூன்று நாட்கள் கொண்டாடப்படுகின்றன. இதனை உணராமல் ஆனந்தக் கோஷங்களில் (பொங்கலோ பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று பண்டிகை அன்று கூச்சலிடுவது) ஈடுபடுவது அர்த்தமற்றது.

குருநாதர் கருத்துக்கள் #1.52

கேள்வி: மனம் என்பது என்ன?

உடலைச் சுற்றியிருக்கும் கோசங்களில் (மூடியிருக்கும் உறை) ஒன்று மனோமய கோசமாகும். இது மனதின் எண்ணங்களால் செய்யப்பட்ட ஒரு கோசம். மனம் என்பது எண்ணங்கள், சிந்தனைகள், ஜென்மாந்திர வாசனைகள் (முன் ஜென்மங்களின் நினைவுகள்) ஆகியவற்றின் கோர்வையாகும். ஜென்மாந்திர வாசனைகள் நம்மைத் தொடர்ந்து வரும். இது தீவிரம் அடைந்து சிந்தனைகளாக மாறி வெறியாக மாறி மனமாக மாறுகிறது. இந்த ஜென்மத்தில் நாம் சிந்திக்கும் எண்ணங்கள் அனைத்தும் மனமாக மாறுகிறது. மனம் என்று தனி வஸ்து (பொருள்) இல்லை. அத்தகைய மனம் பரிசுத்தம் அடைய வேண்டுமென்றால் நல்ல எண்ணங்கள் இருத்தல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. பலர் நல்வழியில் முயற்சிக்கின்றனர். இருப்பினும் அவ்வப்போது ஒரு பழமொழி கூறுவது போல் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல மனமும் கெட்ட எண்ணங்களை நோக்கி ஏறும். ஏறட்டும் அதனை மீண்டும் இறக்குவீர்களாக. இவ்விதமே மனதைப் பரிசுத்தம் செய்ய முடியும். பரிசுத்த ஆவி என்று மற்ற மதங்களில் கூறுவது பரிசுத்த மனநிலை என்பதேயாகும். இதை உணராது மனது வேறு பொருளாக எண்ணுவது தவறாகும். மனதினில் வலிமை இல்லையென்றால் மனத்தின் வலிமை குறைந்துவிடும். இதுவே ஒரு மனிதனின் குணத்தையும், வெற்றி தோல்வியையும் தீர்மானிக்கிறது. இந்நிலையில் மனதைச் சீர்படுத்துவதே ஓவ்வொருவரின் முதல் கடமையாகும். மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்கின்ற ஓர் பழமொழி உண்டு. மனதால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை. மனதில் ஒரு எண்ணத்தை நிறுத்தி அந்த எண்ணத்திற்குத் தீவிரத்தைக் கொடுத்தால் அக்காரியம் உறுதியாக நடைபெறும் என்பது விதி. அத்தகைய மன வலிமையை முதலில் வளர்த்தல் வேண்டும். மனதைத் தேட வேண்டாம். எனெனில் மனம் நம் சிந்தனைகளே நம் எண்ணங்களே நமது ஜென்மாந்திர வாசனைகளே. மனது கஷ்டப்படுகிறது மனவேதனை கொள்கிறது என்று கூறுவோர் அந்த மனம் எங்கிருக்கிறது என எண்ணுதல் வேண்டும். இதனைத் தேடினாலும் கிடைக்காது என்கின்ற நிலையில் நம் எண்ணங்களே நமக்கு வேதனை அளிக்கிறது என உணர்தல் வேண்டும். அத்தகைய எண்ணங்களை மாற்றி இறைவனின் திசையில் திருப்பிட மனமது செம்மையாகும்.

குருநாதர் கருத்துக்கள் #1.51

கேள்வி: பக்திமான் என்பது யார்?

எவனொருவன் ஒரு தெய்வத்தின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அத்தெய்வத்தின் பூஜைகளில் அதிக நேரம் செயல்படுகிறானோ அவனே பக்திமான் என்று அறியப்படுவான். அதாவது வெறுமனே நானும் பக்தன் என்று கூறிக்கொண்டவர்களெல்லாம் பக்திமான்கள் ஆகிவிடுவதில்லை. எவன் ஒருவன் ஒரு குறிப்பிட்ட மூர்த்தியின் (இஷ்ட தெய்வத்தின்) மீது மனதை வைத்துக் கொள்கின்றானோ அவனை பக்தன் என்று உரைக்கலாம். அந்த பக்தியின் விளைவாக எப்போதும் கிரியைகளிலும் சதா பக்திமயமான எண்ணத்தோடும் இருக்கின்றவன் பக்திமான் ஆகின்றான். இதைத் தமிழில் பக்தன் என்றால் எமக்கு பக்தி உள்ளது என்று கூறுகின்றவன் (பக்தி உள்ளவன்) பக்தன் என எளிதாக கூறலாம். இப்பக்தியின் விளைவாக கிரியைகளிலும் தியானம் ஜபம் என ஆழ்ந்து இருப்பவன் பக்திமான் ஆகின்றான். தமிழில் இதற்கு ஒரு சிறப்பான வார்த்தை உண்டு. அடிகள் என்று கூறுவார்கள். எந்த நேரமும் இறைவனின் சேவையில் முழுமையாக ஈடுபடுகின்றவன் ஓர் அடிகள் ஆகின்றான். பக்தன் பக்தி உண்டு என்பது ஓர் நிலை. அப்பக்தியின் விளைவாக இறை சேவையில் முழுமையாக ஈடுபடுவது அடிகள் என்னும் நிலை. இச்சிறு வேறுபாடே இதற்குப் பொருளாகின்றது. பக்தன் அடிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தன் எண்ணத்தாலும், உடலாலும் ஆன்மாவாலும் எப்போதும் இறைவனை வழிபடுபவரே அடிகள் ஆகலாம். இவ்வாறு கிரியைகள் செய்து ஒரு பக்தன் அடிகளாக மாறுவதே சிறப்பான பக்திமார்க்கம். இப்போது உங்களுக்குப் புரியும்படி விளக்கியுள்ளோம் என்று நம்புகின்றோம்.

குருநாதர் கருத்துக்கள் #1.50

கேள்வி: மகான்கள் பிறந்த நாளை ஆனந்தத்துடன் ஜெயந்தி என்று சிறப்பாக கொண்டாடுகின்றோம். ஆனால் அவர்கள் முக்தி அடைந்த நாளையும் அவ்வாறு சிறப்பாக கொண்டாடுவது ஏன்? அதனால் யாருக்கு நன்மை?

பொதுவாக ஜனன காலம் (குழந்தை பிறக்கும் நேரம்) அதன் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆனந்தம் கொடுக்கின்றது. ஆனால் குழந்தைக்கு அது பிறந்த நாள் முதல் வேதனைகள் துவங்குகின்றது. மாறாக முக்தி, இறப்பு என்பது அந்தக் குழந்தைக்கு அதன் வேதனைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் நேரமாகும். ஆதலால் அதுவும் கொண்டாடப்பட வேண்டியது என்று ஞான வழியில் கூறுவோம். அடுத்ததாக பலருக்கும் பலவழிகளில் ஞானிகள் உதவுகின்றனர். இது தெரிந்தும் தெரியாமலும் பல வழிகளில் நடைபெறுகின்றது. எனவே அவர்கள் விடுதலை பெற்ற நன்நாளில் அவர்களைப் போற்றி நன்றி செலுத்துவது ஓர் மகத்தான காரியமாகின்றது. அதுமட்டுமின்றி முக்தி பெற்றபின் சூட்சும வடிவில் அந்த மகான்கள் சஞ்சரிக்கும் காலங்களில் சில மலங்கள் அவர்களின் சூட்சும வடிவோடு ஒட்டிக்கொள்கின்றன. அவர்கள் முக்தி பெற்ற காலங்களில் பல பூஜைகள், மந்திரங்கள், செய்து ஆரத்தி காண்பிப்பதன் மூலம் அந்த மலங்கள் அவர்களின் சூட்சும வடிவை விட்டு நீங்குவதற்கு நாம் உதவுகின்றோம். இது அந்த மகான்களுக்கு நாம் செய்யும் மிகவும் புனிதமான காரியமாகும்.

குருநாதர் கருத்துக்கள் #1.49

கேள்வி: மகான்களை வணங்கி வருவதின் மூலம் தங்களுக்கு உடல் பாதிப்புகள் கடினங்கள் ஏதும் வராது என்று சிலர் நம்புகின்றனர். இது சரியா?

அவ்வாறு நம்புவது சரியானது இல்லை. அவரவர் கர்ம நிலைகளால் உடல் பாதிப்புகளும் சில கடினங்களும் வந்தே தீரும். இதற்கு விதி விலக்கு இல்லை. மகான்களும் இவ்விதம் தங்களின் கர்மங்களைத் தீர்த்திடவே நோய்களைத் தாங்கிக்கொண்டனர். இது அனைவரும் அறிந்ததே. இவ்விதமே அவர்களுக்கும் கடின காலங்கள் வந்து செல்லும். பின்பு மகான்களுக்கும் சாதாரன மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் அத்தகைய கடினங்கள் மகான்களை பாதித்ததில்லை. ஏனெனில் அவர்களின் மனநிலைகள் உடலை விட்டு மேல் நிலையில் இருந்தது. இவ்விதம் மாறிட முயற்சிகள் வேண்டும். மகான்களை பின்பற்றினால் கடினங்கள் வரக்கூடாது என்றும் உடல் உபாதைகள் நேரிடக்கூடாது என்றும் குடும்பத்தில் அசுபங்கள் (கெட்ட நிகழ்வுகள்) நேரிடக்கூடாது என்றும் எண்ணுவது பெரும் தவறாகும். இயற்கை எப்போதும் இயற்கையாகவே இருக்கும். அதற்கு விதி விலக்கு இல்லை என்பதை நன்கு அறிதல் வேண்டும். மகான்களை பின்பற்றுவது பின்பற்றுவோர்களது நிலையை உயர்த்தி எவ்வித பாதிப்பும் இல்லாத அளவில் மனநிலை வேண்டும் என்ற நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கே.