கேள்வி: எடுப்பார் கைப்பிள்ளை என்கின்ற ஓர் வாக்கியத்திற்கு உண்மை அர்த்தம் என்ன?
அதன் உண்மையான அர்த்தம் யாருடைய குழந்தையையும் நாம் எடுத்துவிட்டால் நமது கைப்பிள்ளையாகின்றது என்பதல்ல அது களவாணித்தனமாகும். எடுப்பார் கைப்பிள்ளை என்றால் ஓர் குழந்தையின் அனைத்துப் பொறுப்புகளையும் நாம் ஏற்றுக் கொண்டால் அது கைப்பிள்ளையாகின்றது, நமது கைவசமுள்ள பிள்ளையாகின்றது என்பதே பொருளாகும். அது மட்டுமல்லாமல் இந்த வாக்கியத்திற்கு எடுப்பார் கசப்பில்லை என்கின்ற பொருளையும் உணர வேண்டும். தெய்வீக காரியங்களைப் பொறுப்பு ஏற்றால் அங்கு கசப்பு ஏற்படாது என்பதே பொருளாகும். பழமையான தமிழில் கைப்பில்லை (கைப்பு இல்லை) என்பது கசப்பில்லை (கசப்பு இல்லை) என்கிற பொருளாகும். அவ்விதம் பார்த்திட பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதால் எவ்வித கசப்புகளும் நேரிடாது என்பதும் பொருளாகின்றது. நாம் பொறுப்புகளை ஏற்றிட பல நஷ்டங்கள் ஏற்படுகின்றது என்ற எண்ணம் தோன்றினால் அது நமது கைப்பிள்ளை ஆகாது மாற்றார் கைப்பிள்ளையாக விடுதல் வேண்டும் என்பதே உண்மையான பொருளாகின்றது. அவ்விதமில்லாது நாம் ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டால் அது நமது கைப்பிள்ளை ஆகும் என்றால் அது பல பிரச்சினைகளில் முடியும்.
கேள்வி: தேவைக்கேற்ப பணம் வசிக்க வீடு அனைத்தும் இருந்தும் ஏன் அமைதி இல்லை?
அமைதி என்கிற வார்த்தையைத் தனியாக அ மை தீ என்று மூன்றாகப் பிரித்தால் தீயை அனைத்த பின்பே அமைதி கிட்டும் என்பதே விளக்கமாகின்றது. அனைவருக்கும் உள்ளே தீ எரிகின்றது. பலவற்றை சாதிக்க வேண்டும் என்கின்ற தீ. அவ்விதம் சாதிக்க முடியவில்லை என்றால் அமைதியில் குறை காண்கின்றனர். இதன் பொருள் என்னவென்றால் இருப்பதை வைத்து அமைதி காணுதல் வேண்டும் என்பதேயாகும். இல்லாதோர் பலர் இருக்க நமக்கு இந்த அளவிற்கு இறைவன் அளித்துள்ளானே என்கின்ற ஓர் அமைதியை அறிதல் வேண்டும். இவ்விதம் இல்லாமல் மேலும் மேலும் வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அந்த இடத்தில் அமைதி ஓர் துளி அளவிற்கும் இருக்காது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் நமது உடல் ஆரோக்கியத்தை நாம் சிந்தித்தல் வேண்டும். கைகள், கால்கள், கண்கள், உடம்பு ஆகிய அனைத்தும் நமக்கு நன்றாக உள்ளதே இது இல்லாதோர் எத்தனை பேர் உள்ளனர்? வசிக்க ஒரு வீடு நமக்கு உள்ளது. அப்படி வசிக்க ஒரு வீடு இல்லாமல் மழையிலும் வெயிலிலும் மரத்தடியிலும் வாழ்வோர் எத்தனை எத்தனை பேர் என சிந்தித்தல் வேண்டும். ஒரு வேளை உணவு உண்ண வழி இல்லாதோர் இருக்கின்றனர் என்பதை அறிதல் வேண்டும். இவ்விதம் பார்த்தால் நாம் பெரும் பாக்கியசாலியாக இருக்கின்றோம் என்பதை உறுதியாக உணரலாம். இந்த எண்ணத்தை மனதில் நன்கு வைத்தால் பின்பு அமைதியைக் காண்போம்.
தியானம் செய்ய முயற்சிக்கவில்லை என்பதே காரணம். தியானம் செய்யத் தெரியவில்லை என்று கூறினால் பிறவி முதல் இறப்பு வரை ஓர் தியான நிலைதான் என்பதை இங்கு உணர வேண்டும். ஏனெனில் எதேதோ சிந்தித்து வாழ்கின்றீர்கள் அதற்கு முழு சிரத்தையைக் கொடுக்கின்றீர்கள். அச்சிரத்தையில் சிறு பங்கை இறைவனுக்குச் செலுத்த வேண்டும். எளிதான வழி என்னவென்றால் சுவாசத்தை உள்ளே இழுக்கும்போது ஓம் என்றும் சுவாசத்தை வெளியே விடும்போது மானசீகமாக இஷ்ட தெய்வத்தின் பெயரையும் கூறி தியானம் செய்தால் விரைவில் தியான நிலைகள் கைவரக்கூடும். இதனை மட்டும் செய்தாலே சிறப்புகள் அடைவீர்கள். இக்காலத்தில் உள்ள மகா யோகியரும் இதனையே கூறுகின்றனர். சகஜ பிராணய நிலைகள் தியான நிலை அளிப்பது மட்டுமின்றி சர்வரோக நிவாரணி என்றும் கூறுகின்றனர். இத்தகைய நல்ல விசயத்தைச் செய்ய ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள் என்று புரியவில்லை. அனைவரும் இந்த வழியைக் கடைபிடித்தால் எளிதில் ஆன்மீகப் பாதையில் நல்ல நிலை அடைய முடியும்.
கேள்வி: கலிகாலத் தன்மையில் வாழ்க்கை கடினமாக இருக்கும் போது இடைவிடாமல் எப்படி தியானம் செய்வது? இறைவன் மீது எவ்விதம் சிந்தனை வைப்பது?
ஒவ்வொரு காரியங்களையும் செய்யும் முன்னதாக அதை இறைவனுக்கு அர்ப்பணித்தல் வேண்டும். இறைவன் என்பது அவரவர்களின் இஷ்ட தெய்வம் ஆகும். பின்பு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனது நாமங்களைக் கூறிக்கொண்டிருக்க ஒரு வினாடியும் அவன் எண்ணம் இல்லாமல் இருக்காது என்பது எமது கணக்கு. இக்கணக்கு தவறாகாது. ஏனெனில் இது அனுபவத்தின் வழியாக அடைந்த ஒரு உண்மை. எப்பொழுதும் எக்காலத்திலும் இறை சிந்தனையோடு செயல்படுங்கள். இவ்விதம் செய்திட இடைவிடாமல் இறை தியானம் கைகூடும்.
கேள்வி: மனமே அனைத்தும், மனதினால் அனைத்தையும் வென்று விடலாம் என்றால் இப்பூஜைகள் எதற்கு?
மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்றும் ஒரு வார்த்தை உள்ளதே? மனமது செம்மையாகும் வரை இப்பூஜைகள் உறுதியாக வேண்டும். ஏனெனில் பூஜைகளில் விதிமுறைகள் உண்டு விதிமுறைகளைக் கடைபிடிக்கும்போது நம்முடைய சிரத்தையும் கவனமும் மேலோங்குகிறது. படிப்படியாக இச் சிறுசிறு சாதனைகளால் மனம் சக்தி பெறுகிறது மனம் படிப்படியாக செம்மையாகிறது. அந்நிலை அடைந்து விட்டால் பூஜைகள் தேவையில்லை. வெளியில் செய்யும் பூஜைகளை விட மானசீகமாய் பூஜைகள் செய்திடுவது பிரம்மாண்டமாய் பலனை அளிக்கும். மானசீக பூஜைகள் செய்பவர்கள் ஒரு சிலரே இருக்கின்றார்கள். இதற்கென நேரம் ஒதுக்கிவிட முடியவில்லை என்பது பொது அபிப்பிராயமாகும். இதற்கு 24 மணிநேரத்தில் வேண்டியது 20 நிமிடங்களே. இறைவனுக்கு ஒதுக்கிவிடும் நேரம் நீண்டநேரம் என எண்ணி அதனை ஒதுக்கிவிடுகிறீர்கள். இதனைத் தவிர்த்து காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் இறைவனுக்கென மானசீகபூஜை செய்து மானசீகமாய்ப் பழகிக்கொள்ளுங்கள். இது பெருமளவிற்கு நன்மை தருவதாகும். பூஜைகள் அதன் விதிமுறைகள் உள்ளிருக்கும் கிரியைகள் கர்மங்கள் என்பதெல்லாம் மன வலிமைக்காகவே படைத்ததாகும்.
குருவின் மீது வைக்கும் விசுவாசமானது அனைத்திலும் எப்போதும் இருக்க வேண்டும். பின்பு நமக்கென ஒன்றும் இல்லை என்பதும் அறிந்து கொள்ள வேண்டும். உடல், பொருள், அனைத்தையும் குருவின் திருவடியில் வைத்து விட்டு நமக்கென ஒன்றும் இல்லை என்கிற எண்ணத்துடன் இருந்தால் சரணாகதி என்பது முழுமையாகும். இதுவே விசுவாசத்தின் எல்லை ஆகும். முதலில் குருவின் சுகசௌகர்யங்களையே முதலாகப் பார்க்க வேண்டும். இரண்டாவதே நம்முடையது என உணர்தல் வேண்டும். நம்முடையது அனைத்தும் இறைவனுடையது என்ற உண்மையான எண்ணத்துடன் இருந்தால் அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பது இறைவன் முடிவு. வீணாக குருநாதரிடம் சென்று என்ன செய்தல் வேண்டும் என கேள்விகள் கேட்பது தவறாகும். ஏனெனில் குருநாதரிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய விடையை நம்மால் கடைபிடிக்க முடியவில்லை என்றால் அது தவறாகும். மனதில் ஒரு முடிவு எடுத்து விட்டு பின்பு அந்த முடிவான பதிலைக் குருநாதர் கூற வேண்டும் என்று இரண்டாவதாக குருநாதரிடம் அபிப்பிராயம் கேட்பது தவறாகும். இதனை தவிர்த்தல் வேண்டும். குருநாதரிடம் கேள்வி கேட்டு அவர் பதில் கூறி விட்டால் அவர் கூறிய பதிலை தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு செயற்படுதல் வேண்டும். இல்லையென்றால் குருநாதருடன் உள்ள உறவு சீரில்லா உறவாகும். குருநாதர் எது செய்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் உண்டு காரணம் உண்டு சில கர்ம விதிகளை மாற்றிட சிலவற்றை செய்ய வைக்கின்றார் என்பதை மறக்காமல் செயல்பட வேண்டும்.
வீணாக எதுவும் நடப்பதில்லை என்பது உண்மை என்றால் குருநாதர் சொல்வது அனைத்தும் உண்மையே. இதனை மறக்காமல் மனதில் வைத்துச் செயல்படவேண்டும். வீணாக இதை செய்து கொடு அதை செய்து கொடு என்று கேட்பதும் தவறாகும். ஏனெனில் உமக்கு என்ன வேண்டும் என்பதை குருநாதர் நன்றாக அறிவார். சரியான நேரத்தில் அதை அவர் செய்து கொடுப்பார் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம். இந்நிலையில் இவையாவும் செய்திட முடியுமா என முழுமையாகச் சிந்தித்தபின் முடியும் என்றால் குருவை அணுகி ஏற்றுக் கொள்ளுங்கள். இது தான் உண்மையான நிலை. இவ்விதமே வாழ்வோம் என்று முடிவு எடுத்தால் அவர்களே உபதேசம் பெறத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இல்லையென்றால் வாழ்த்துக்கள் மட்டுமே பெறத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. வாழ்த்து பெறத் தகுதி பெற்றவர் என்று மட்டும் நினைத்தால் ஆனந்தமாக இருப்பீர்கள். ஏனெனில் எப்பொழுதும் வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள். இதில் எந்தவித குறையும் இருக்காது ஆசிகள் அருவி போல் கொட்டும். ஆனால் முழுமையாக சரணடைந்துவிட்டால் சமயங்களில் வாய் பேசாது கோலும் பேசும் (சொல்வதை செய்யவில்லையென்றால் தண்டனைகள் கிடைக்கும்) இதையும் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் முதலில் பக்தனாக இருந்தாய் வாழ்த்துக்கள் கிடைத்தது இரண்டாவது நிலையில் சிஷ்யனாகச் செல்கின்றாய் சிஷ்யன் தவறு செய்தால் சிகிச்சை (தண்டனை) உண்டு. இவை அனைத்தையும் மனதில் வைத்து நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் எவ்விதம் உங்களால் செயல்பட முடியும் என்றெல்லாம் சிந்தித்துப் பின்பு குருநாதரை அணுகுங்கள் இல்லையென்றால் மிகவும் கடினம்.
கேள்வி: நாம் காணும் துக்கங்களுக்கு மூல காரணம் என்ன?
இந்தக் கேள்விக்கு ஒரே வரியில் எதிர்பார்ப்புகள் என்று பதில் கூறினோம். எவ்விதம் என்றால் எவ்விதமான ஆசைகள், பாசங்கள், விகாரங்கள் ஆகியவை மனதில் தோன்றினாலும் அதற்கு மூல காரணம் தேடிப் பார்த்தால் நமது எதிர்பார்ப்புகள் என்று உணரலாம். எதிர்பார்ப்பின்றி துக்கம் இல்லை. எதிர்பார்ப்பின்றி தோல்வி இல்லை. எதிர்பார்ப்பின்றி மோசம் போவதில்லை. எதிர்பார்ப்பின்றி தீயது எதுவும் நடைபெறுவதில்லை என்பதை எளிதாக உணர முடியும். நாம் உறுதியாக எதிர்பார்ப்பின்றி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்பார்ப்பின்றி என்ன வருகிறதோ என்ன நடக்கின்றதோ அனைத்தும் அவன் செயல் அவன் அருள் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதன் இறைவனின் திருவடிகளை எளிதாக அடைந்திட முடியும். இது பெரும் சாதனை அல்ல, கடினமான சாதனை என்று கூறுகிறோம். எதிர்பார்ப்பின்றி வாழ்கின்றவன் எவன் என்று தேடினால் எளிதாகக் காண்பதில்லை. இத்தகைய மனிதர்கள் எதிர்பார்ப்புகள் வேண்டாம் என எண்ணிக் காடுகளிலும் குகைகளிலும் மறைந்து விடுகின்றனர். மக்கள் மத்தியில் வாழ்கின்றவனுக்கு எதிர்பார்ப்புகள் உறுதியாக இருக்கும். இதில் நல்ல எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு தீய எதிர்பார்ப்புகளை நீக்கி விட்டால் தெய்வ நிலை தெய்வ காட்சிகள் காணக்கூடும்.
கேள்வி: ஆசைகளையும் பாசத்தையும் முழுமையாக ஒழிக்க முடியவில்லையே அது ஏன்?
ஆசைகளை முழுமையாக ஒழிப்பது மிகவும் கடினம். ஆசைகளை அடக்கினாலும் மீண்டும் சில நேரங்களில் அந்த ஆசைகள் திரும்ப வரும். இதற்கு உதாரணமாக ஊசி என்பது மனம் போலவும் நூலானது ஆசைகள் போலவும் எடுத்துக்கொண்டால் ஊசியில் நூலைக் கோர்த்துவிட்டு நூலின் இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டால் ஊசியானது இரண்டு பக்கமும் அலைந்து கொண்டிருக்கும். ஆனால் ஊசியிலிருந்து நூலை எடுத்து விட்டால் ஊசியானது அலையாமல் தனியாக நிற்கும். ஆகவே ஆசைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்பது மிகக் கடினம் என்பதை அறிய வேண்டும். இதற்கு என்ன வழி என்று சிந்தித்தால் ஊசியிலிருந்து நூலைத் தூக்கி எறிவதே சரியான வழி. அதாவது ஆசைகளை நீக்கும் முன்பு அந்த ஆசைகளை உண்டாக்கும் காரணங்களை நீக்க வேண்டும். உதாரணமாக லகரி வஸ்துக்களை (சிகரெட் பாக்கு சாராயம் முதலிய போதைப் பொருட்கள்) உபயோகிப்பவர்கள் அதை எப்போதும் தன்னோடு வைத்திருக்கக் கூடாது. எப்பொழுதும் அவற்றைத் தன்னுடனே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் மனதில் இருந்து நீக்க வேண்டும். அத்தகைய லகரி வஸ்துக்களை உபயோகிக்கும் நபர்களுடன் சேரக்கூடாது என்பதை ஒரு விதியாக எடுத்துக் கொண்டால் முழுமையாக அந்த ஆசைகளில் இருந்து விடுபடலாம். சிறுது கடினம் என்கின்ற போதிலும் ஒவ்வொரு ஆசையாக இவ்வாறு நீக்கிவிட முடியும்.
இறைவனைத் தொடர்பு கொள்வதற்குப் பாவனைகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் பல வகையான பாவனைகள் இருக்கின்றது. நமக்கு எளிதான பாவனைகள் எவையோ அவைகளை உணர்ந்து ஏற்றுக் கொண்டு அதன் வழியாக செல்லுதல் வேண்டும். மற்றவர்கள் செல்லும் பாவனைகளை நாமும் ஏற்றுக்கொண்டு செல்வது தவறாகும். நமக்கு எந்த பாவனை எளிமையானது என்று சிந்தித்து அந்த பாவனையின் வழி தடுமாறாமல் செல்ல வேண்டும். இதற்கும் மேலாக தெய்வத்தின் பெயரை எப்பொழுதும் கூறிக்கொண்டு இருந்தால் ஓர் தொடர்பு உண்டாகி இறைவனின் சிந்தனை எப்பொழுதும் மனதில் இருக்கும். இவ்வாறு இறைவனின் பெயரைக் கூறிக்கொண்டு இருந்தால் என்னைப் பலர் கேலி செய்கின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்கள் கேலி செய்கின்றதை பொருட்படுத்தாமல் எப்பொழுதும் இறைவன் பெயரை மனதில் கூறிட தெய்வ சிந்தனை எப்பொழுதும் மனதை விட்டு நீங்காமல் செய்கின்ற எந்தக் காரியமும் தெய்வீகக் காரியமாகவே தோன்றும்.
கேள்வி: மனித வாழ்க்கையின் பொருள் என்ன? நோக்கம் என்ன?
இதற்கான விடை மிகவும் எளியது. ஆனால் அடையும் முயற்சிகள் மிகப் பெரியவை ஆகும். ஒவ்வொருவரின் பிறவியும் வாழ்கையில் தமக்குள் உள்ளிருக்கும் தெய்வ சக்தியை உணர்வது. நம் அனைவருக்குள்ளும் இறைவன் குடிகொண்டு இருக்கின்றான் என்பதை யாரும் உணர்வதில்லை. தெய்வீக சக்திக்கு மனிதன் ஒரு வீடாக இருக்கின்றான். அந்த வீட்டில் இறைவன் தங்கி உள்ளான். ஆனால் நாம் அதனை உணராமல் வெளியே தேடி அலைகின்றோம். இதற்குக் காரணம் என்ன என்று கேட்டால் நமது இந்திரியங்களும் ஐம்புலன்களும் ஆகும். இவை இரண்டும் நம்மைத் திசை திருப்பி மாயையின் பிடியில் தள்ளுவதால் மீண்டும் நம்மால் வெளியே வர முடியவில்லை. அனைவரும் தியானத்தின் மூலம் நமக்கு உள்ளே சென்று பார்த்தல் வேண்டும். தினந்தோறும் குறைந்த அளவில் ஒரு அரைமணி நேரமாவது தியானம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்பவர்களும் மந்திரஜபம் தொடர்சியாக செய்து வருபவர்களும் உறுதியாக தமக்குள் உள்ள இறைவனை உணர்வது மட்டும் இல்லாமல் உயர்ந்த நிலையும் அடையவார்கள்.