குருநாதர் கருத்துக்கள் #1.60

ஈசனைப் பல பெயர்கள் கூறி அழைக்கின்றனர். இவ்வாறு நாராயணனைப் பல பெயர்கள் கூறி அழைப்பதும் உண்டு. பலரும் எமது தெய்வம்தான் பெரிது மற்றவை சிறிது எனக் கூறுவதும் உண்டு. இது ரூபங்களை (உருவங்களை) வணங்கும் காலம் வரை தவறில்லை. அதனையும் தாண்டிச் செல்ல வேண்டுமானால் இத்தகைய ரூபங்களை மறத்தல் வேண்டும். குறிப்பாக ஜெகதீஸ்வரனே சிறப்பானவர் ஜம்புகேஸ்வரனே சிறப்பானவர் என்பதெல்லாம் ஆரம்ப காலங்களில் கூறுவது சரியாக இருக்கும். ஆனால் மேன்மை வேண்டும் ஞானம் வேண்டும் என்றால் பெயர்களை மறந்து ரூபமற்ற நிலையைத் தாண்டிச் செல்ல வேண்டும். எங்கும் அதே ஈஸ்வரன் அதே நாராயணன் என்று எண்ணிட வேண்டும். பின்பு எல்லாம் ஒன்றே என்ற நிலை பெற்றபின் சிவனும் விஷ்ணுவும் வேறில்லை என்கின்ற நிலை உணர்வீர். அதன் பின்பு அனைத்து நிலைகளிலும் மேன்மை அடைவீர்கள். அரியும் சிவனும் ஒன்றே அறியாதோர் வாயில் மண்ணே என்று இக்காலத்தில் ஓர் பழமொழி உண்டு. ஆனால் யாம் அரியும் சிவனும் ஒன்றே என்று அறியாதோர் அறிவு மண்ணே என்று கூறுவோம். இதனை உணர்ந்து நாமங்களிட்டு வழிபடுவதைக் குறைத்து வருவீர்களாக. எக்காலத்திலும் ஜம்புகேஸ்வரர் சுந்தரேஸ்வரரை விடச் சிறப்பானவராகவோ குறைந்தவராகவோ ஆக மாட்டார் என்பதை உணர வேண்டும். எல்லாம் ஒன்றே என்பதை மனதில் வைத்து வழிபடுவதே சிறப்பானதாகும்.

குருநாதர் கருத்துக்கள் #1.59

கேள்வி: ஆடி மாதம் நல்ல காரியங்கள் ஏதும் செய்யக்கூடாது என்று கூறுகின்றார்களே அது ஏன்?

ஆடி மாதம் என்பது தீய மாதம் அல்ல என்பதை அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக மானிடர் ஆடுவது நிறுத்தி தேவிகள் ஆடுவது வேண்டும் என்பதே விளக்கும் ஆகின்றது. உதாரணமாக மனிதர்கள் சுபகாரியங்களில் ஈடுபடாமல் தெய்வ காரியங்களில் குறிப்பாக தேவியின் காரியங்களை நடத்தி அவளை மகிழச் செய்திட அனைத்தும் பெருகும் என்கின்ற ஓர் நிலை உண்டு. இதற்கே ஆடிப் பெருக்கு என்கிற ஒரு விழாவும் இருப்பதாக யாம் காண்கன்றோம். இந்நிலையில் ஆடி ஆனந்தம் தரும். ஆடி ஆண்டாருக்கும் நல் நிலையில் ஆனந்தம் கொடுக்கும். மனிதர்கள் அவர்களை நன்றாக பூஜித்திட வேண்டும் என்பதே விளக்கமாகும். ஆண்டார் என்று இங்கே யாம் எப்பிறவியினரையும் சார்ந்து கூறவில்லை. அகிலத்தை (உலகத்தை) ஆண்டாள் என்பதே இதற்குப் பொருளாகும். இவ்விதம் இருக்க அனைவரும் மூன்று நாட்களில் குறிப்பாக ஆதித்ய நாளிலும் (ஞாயிற்றுக் கிழமை) மங்களவன் நாளிலும் (செவ்வாய்க் கிழமை) வெள்ளிக் கிழமையன்றும் மறக்காமல் தேவிதனைக் கண்டு வணங்கி ஏதாவது தோத்திர வழிபாடு (ஜெப வழிபாடு) செய்திட நலன்கள் உண்டாகும்.