கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் கோயில்

தேனி மாவட்டத்தில் கம்பம் என்னும் ஊரில் கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாத கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு தனியாக சன்னதியும் சிவனுக்கு தனியாக சன்னதியும் சிவன் பெருமாள் கோயில்கள் ஒரே வளாகத்தில் தனித்தனி கொடிமரங்களுடன் உள்ளது. பிரம்மா வன்னி மர வடிவில் அருள்பாலிக்கிறார். ஆக மும்மூர்த்திகளும் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்கள். பெருமாள் மூலவர் கம்பராயப்பெருமாள். தாயார் அலமேலு மங்கை நாச்சியார் தனிச்சன்னதியில் இருக்கிறாள். விமானத்துடன் தரிசிக்கும் வகையில் இவளது சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறமுள்ள நரசிம்மர் நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் காட்சி தருகிறார். சிவன் மூலவர் காசி விஸ்வநாதர். அம்பாள் காசிவிசாலாட்சி. ஆஞ்சநேயர் தட்சணாமூர்த்தி கௌமாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் சுரபி. மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திரிதள விமானம் எனப்படும். இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். காசி விநாயகர் காவல் தெய்வம் வடமலை மொட்டையாண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள முருகப்பெருமான் சண்முகநாதர் என்றழைக்கப்படுகிறார். ஆறுமுகங்களைக் கொண்ட இவருக்கு முன்புறம் ஐந்து முகங்களும் பின்புறம் ஒரு முகமும் கொண்டு வித்தியாசமான அமைப்பில் அருள்பாலிக்கிறார். சிவன் கோயிலில் காசி விஸ்வநாதர் சதுர வடிவ ஆவுடையாருடன் காட்சி தருகிறார். காசி விசாலாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி கமண்டலத்துடன் யோக நிலையில் காட்சி தருகிறார். யோக பட்டை அணிந்திருக்கிறார். சீடர்கள் இல்லாமல் இவரது தலைக்கு மேலே கல்லால மரம் இல்லாமல் இவரது காலுக்கு கீழ் முயலகன் இல்லாமல் இருக்கிறார். காலின் கீழ் நாகம் மட்டும் இருக்கிறது.

அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவருக்கு சிவனுக்கும் பெருமாளுக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. எப்படி இக்கோயிலை கட்டுவது என்று அவருக்கு தெரியவில்லை. ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பெருமாள் மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் ஒரு கல் கம்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதை உணர்த்தினார். அவரது கனவில் பெருமாள் சொன்னபடி சிலையை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். கம்பம் அருகில் கிடைத்தவர் என்பதால் சுவாமிக்கு கம்பராயப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டினார். அந்த ஊருக்கும் கம்பம் என்று பெயர் வைத்தார். பின்னர் காசியிலிருந்து லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து இருவருக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்வித்தார்.
 
சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு கலியன் என்று பெற்றோர்கள் பெயர் வைத்தார்கள். இவரை நீலன் என்றும் அழைத்தார்கள். இவர் சோழ மன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க் களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவரை சோழ தேசத்தின் ஒரு பகுதியான திருமங்கை என்னும் நாட்டின் மன்னனாக்கினான். அன்று முதல் இவர் திருமங்கை மன்னன் என அழைக்கப்பட்டார். இவர் குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் பெருமாளை வணங்கி வழிபட ஆரம்பித்தார். மங்கையின் விருப்பப்படி திருமங்கை மன்னன் அடியார்களுக்குத் தினமும் அன்னதானம் செய்வதையும் திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்து வந்தார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும் அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தார். இறை சேவைக்காக யாசகம் செய்ய ஆரம்பித்தார். அதுவும் போதவில்லை. எனவே திருட ஆரம்பித்து அதில் கிடைக்கும் பொருளை வைத்து அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும் திருவரங்கத் திருக்கோயிலுக்கு கைங்கரியங்களையும் செய்து வந்தார். ஒரு நாள் இவர் திருட காத்திருக்கும் இடத்தில் பெருமாள் தன் உருவத்தை மாற்றி இலட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். திருமங்கை மன்னன் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக் கொண்டார். தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் பெருமாள் கழட்டவில்லை. திருமங்கை மன்னன் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் பெருமாள். அதேபோல் திருமங்கை மன்னன் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது பெருமாள் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த திருமங்கை மன்னன் மண்டியிட்டு பெருமாிடம் சரணடைந்தார். அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி திருமங்கையாழ்வார் என்று பெயர் பெற்றார்.

திருமங்கையாழ்வாரின் பக்தியையும் அவரது வாழ்க்கையையும் சிறப்பிக்கும் விதமாக இக்கோயிலில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில் திருமங்கையாழ்வார் திருடிய வைபவம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்று திருமங்கையாழ்வார் திருடுவது போல பாவனை செய்து காவலர்கள் அவரை பிடித்துச் சென்று சுவாமி முன்பு நிறுத்துகின்றனர். அவ்வேளையில் அவர் திருடிய பொருட்களின் பட்டியல் வாசிக்கப்படும். இந்த நிகழ்வுக்கு பட்டோலை வாசித்தல் என்று பெயர். அதன்பின் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு காட்சி தரும் நிகழ்வு நடைபெறும். திருவோண நட்சத்திர நாட்களில் பெருமாள் சன்னதியில் ஓண தீபம் ஏற்றப்படும். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்ததால் திருவல்லிக்கேணியில் பார்த்த சாரதி கோயில் பெருமாள் மீசையுடன் காட்சி தருகிறார். அது போல் இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று ஒருநாள் மட்டும் சுவாமிக்கு மீசையுடன் அலங்காரம் செய்யப்படுகிறது. திருவிழா நாட்களில் பெருமாள் சிலை கிடைக்கப்பெற்ற இடத்திலுள்ள கம்பத்திற்கு முதல் பூஜை செய்யப்படுகிறது. இவ்வூரில் தேரோட்டம் மூன்று நாட்கள் நடக்கும். ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ ஹோமத்துடன் பூஜை நடக்கிறது. பெருமாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி நவராத்திரி அனுமன் ஜெயந்தி ராமநவமி ஆகிய விழாக்களும் சிவனுக்கு சிவராத்திரி ஆடிப்பெருக்கு ஐப்பசி அன்னாபிஷேகம் ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் நடைபெறுகிறது. இந்த கோயிலை விஜயநகரப் பேரரசு காலத்தில் விஸ்வநாத நாயக்கர் புதுப்பித்து கட்டியிருக்கிறார்.