குருநாதர் கருத்துக்கள் #1.7

கேள்வி: எவ்வழியில் ஆண்டவனை அடைய முயற்சித்தல் வேண்டும்? யோக நிலையா பக்தி நிலையா இல்லையேல் ஞான நிலையா என்பதே கேள்விகள் ஆகின்றது.

எவர் எவர்க்கு எம் மார்க்கம் எளிதாக தோன்றுகிறதோ அதனை ஏற்றுக் கொள்ளலாம். பொதுவாக ஓர் கட்டிடம் என்றால் அதற்கு இரண்டு அல்லது மூன்று வழிகள் காணக்கூடும். எவ்வழியில் செல்கின்ற போதிலும் உள்ளே செல்ல முடியும். இருப்பினும் நமக்கு எளிதாக தொல்லை தராத வழியை நாடிப் பயன் படுத்துவதே நல்ல முறையாகின்றது. அனைவருக்கும் யோக நிலைகள் நலம் தருவதாகக் காணாது. ஏனெனில் உடல்கூறு மனநிலை என்பதெல்லாம் தடையாகக் காணலாம்.

பக்தி மார்க்கத்தில் மந்திரங்கள் ஜெபித்து எளிதாக சிலரால் இறைவனை அடைய இயலுகின்றது. இவ்விதமே இசையும் ஓர் பக்தியின் வழியாகவே யாம் காண்கின்றோம். இறைவனை நன்று துதித்துப் பாடினால் அவன் (இறைவன்) வராது இருக்க மாட்டான் என்பதே எமது கருத்தாகின்றது. இக்கலியுக தன்மையில் பெரும் யோகங்கள் யோக பயிற்சிகள் தவநிலைகள் என்பதெல்லாம் எளிதில் கடை பிடிக்க இயலாது என்கின்றதால் இக்காலத்திற்கு எளியவழி பக்தி மார்க்கமும் நாம கீர்த்தனமும் என்பதேயாகும் என்று இங்கு எடுத்துரைக்கின்றோம். இருப்பினும் திடமும் நம்பிக்கையும் உயர்ந்திருந்தால் யோக நிலையை கை கொள்வதில் தவறாகாது. எளிதான முறையைச் செப்பிவிட்டோம். இவைகளில் தேர்ச்சி செய்வீர்களாக.

ஞானமார்க்கம் என செப்பிக்கொண்டால் பல குழப்பங்கள் நேரிடல் காணக்கூடும். ஏனெனில் பலர் பலவிதத்தில் உபதேசிப்பர். எது சரி எது தவறு என்பதனை தேடிக் கண்டு பயன் அடைவதற்குமுன் இஜ் ஜென்மமும் மூடிவிடும் என்பதே நிலை. இந்நிலையில் யோகம் இல்லையேல் பக்தி மார்க்கங்களில் செல்வதே நலம்தரும் என்றும் செப்பினோமே.

குருநாதர் கருத்துக்கள் #1.6

கேள்வி: ஒரே சமயத்தில் ஒரு ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்தல் வேண்டும். இல்லையேல் சாதனை புரிதல் வேண்டும் என்பது விதியா? விதியாயிருந்தால் இது ஏன்?

இது ஓர் சிறப்பான வினாவாகிறது. உடல் சூட்சுமம் ஸ்தூலம் பின்பு ஆன்மா என பிரித்துப் பார்த்தால் எளிதாகும். ஸ்தூல உடலுக்கு நாம் உணவு அளிக்கின்றோம். குறிப்பிட்ட காலங்களில் அமர்ந்து உண்ணுகின்றோம். உண்ணும் காலம் நெருங்க வயிற்றினில் பசிக்கின்றது. உண்டபின் பசி மறைகின்றது. இதற்கு காரணம் நாட (தேட) அச்சமயத்தில் உடலுக்கு உணவு வேண்டும் என பழக்கம் ஏற்படுகின்றது. இவ்விதமே ஒரே சமயத்தில் ஓர் ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்திட சூட்சும உடலுக்கும் ஆன்மாவிற்கும் உணவு அளிப்பது போல் ஆகின்றது. இவ்விதமே பழகிட குறித்த காலங்களில் அமர்ந்தே ஆகுதல் வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் என்பது மட்டும் அல்லாது பழகிட்ட ஸ்தலத்தில் அமர்ந்திட்ட போதே மனம் ஒரு நிலைப்பாடு காணும். சதா தியானம் ஜபம் செய்கின்றவர்க்கு இது அவசியமில்லை. அவ்விதம் தியானம் செய்கின்றவர் குறைவே. இது கலியுகத் தன்மை பொதுவாக ஆன்மீக முன்னேற்றம் நாடுவோர் ஒரு ஸ்தலம் தேர்ந்து எடுத்து குறித்த சமயங்களில் தியானம் கூட நன்மைகள் ஏற்படும் என அறிவுரை அளித்தோம்.

சுவேதவன மகாபத்ரகாளியம்மன்

சுவேத வனத்தில் மகாசக்தியாக மகாபத்ரகாளியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்தபடி அருள்கிறாள். தனது எட்டு கரங்களில் பாசம் சக்கரம் வாள் உடுக்கை கேடயம் கபாலம் ஆகியவற்றை தாங்கி தீயவற்றை அழித்து அருள்பாலிக்கிறாள். உடல் சாய்ந்த நிலையில் வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். இடம் சுவேதாரண்யேஸ்வரர் பிரம்மவித்யாம்பிகை திருக்கோயில். திருவெண்காடு மயிலாடுதுறை மாவட்டம்.

குருநாதர் கருத்துக்கள் #1.5

பெற்றவர்கள் செய்திடும் குற்றங்களுக்குப் பின்பு அவர்கள் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது உண்மையான நிலையா என ஒருவர் வினாவக் கண்டோம்.

இதற்கு யாம் எளிதாக விடை அளித்திட இயலும். இக்காலத்தில் பெற்றவன் ஒருவன் கள்வனாக மாறி களவு செய்ததற்காக மகனை தண்டிக்க இயலாது. இவ்விதமே கர்ம நிலையும் அவரவர் கர்மங்கள் அவரவர் அனுபவித்துக் கழித்தல் வேண்டும் என்பதே விதி. இருப்பினும் கூட்டுக் குடும்பங்கள் என்கின்ற நிலையில் சில பிரச்சினைகள் உருவாகின்றது. உதாரணமாக பெற்றவர்கள் நோயுற்றவர்கள் எனக் கண்டு கொண்டால் இதன் விளைவாக மக்களும் சிறிது பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் என்னவென்றால் பந்தமே என்றும் இங்கு எடுத்துரைப்போமே. தனியாக அவதிப்படுவதில்லை. ஆனால் பந்தம் கொள்ள பாசம் கொள்ள சிறு வேதனைகள் உருவாகின்றது. இதுவும் தன்னுடைய கர்மங்கள் தீர்த்திடவே இத்தகைய பெற்றோரின் குடும்பத்தில் வந்து பிறக்கின்றான் என்பதே விதியாகின்றது. இதேபோல நல்ல பெற்றோர்கள் தீய புத்திரனை பெற்று அவதிப்படுகின்றனர் இதுவும் அதே காரணமாம். பெற்றவர்களின் கர்மங்களை தீர்க்க அத்தகைய மகன் அக்குடும்பத்தில் பிறக்கின்றான். இருப்பினும் பெற்றவர்களின் தீய கர்மத்தால் புத்திரர்கள் பிற்காலத்தில் அவதிப்படுவார்கள் என கூறுவது தவறாகும். அவரவர் கர்மங்கள் அவரவர் தீர்த்தல் வேண்டும் என்றும் விளக்கிட்டோமே.

நந்தி

நான்கு சிங்கங்கள் மீது வீற்றிருக்கும் பீடத்தில் அமர்ந்திருக்கும் நந்தி பகவான். இடம் ஐந்நூற்றீசுவரர் பெரியநாயகியம்மன் திருக்கோவில் மாத்தூர் காரைக்குடி.

குகன்

ராமாயணத்தில் குகனின் கதாபாத்திரம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கம்பராமாயணத்தில் மூன்று இடங்களில் குகனைப் பற்றி வருகிறது.

சிருங்கிபேரம் என்ற இடம் காடும் நதியும் சார்ந்த இடம். இங்கிருக்கும் மக்கள் காட்டையே நம்பி இருக்கும் வேடுவ இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் தலைவன் குகன். அயோத்தியின் இளவரசரான ராமரை பற்றி கேள்விப்பட்டு அவரின் மேல் மிகுந்த அன்புடன் இருந்தான். அவரை நேரில் சந்தித்ததில்லை. கம்பராமாயணத்தில் குகன் ராமன் மீது வைத்திருந்த பற்றை ஆண்டாள் கண்ணனின் மேல் வைத்திருந்த காதலுடன் ஒப்பிடுகிறார் கம்பர். தசரதனின் ஆணையின்படி ராமர் தன் மனைவி சீதை மற்றும் தமயன் லட்சுமணனுடன் வனவாசம் புறப்பட்டார். அயோத்தியிலிருந்து இவர்களை சுமந்திரன் தேரில் கொண்டுவந்து சிருங்கிபேரம் இடத்தில் விட்டான். அந்த இடத்தின் தலைவனான குகனுக்கு ராமன் தன் இடத்திற்கு வந்த செய்தி தெரிந்தவுடன் அவரை சந்திக்க மலைத் தேனை ஆசையுடன் கொண்டு வந்தான். குகன் ராமனை சந்தித்ததில்லை. லட்சுமணனை ராமர் என்று எண்ணி அவருடன் உரையாட ஆரம்பித்தான். நான் லட்சுமணன் அண்ணா குகைக்குள் என்று லட்சுமணன் கூறவே உள்சென்ற குகன் முதன்முதலாக ராமனை சந்தித்து தேனை கொடுத்தான். ராமனிடம் நீங்கள் என்னுடன் சிருங்கிபேரத்திலேயே தங்கிவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டான். குகனின் அன்பை உணர்ந்த ராமர் நால்வருடன் ஐவரானோம் என்று சொல்லி அங்கு தங்க மறுத்தார். தமயனே எங்கள் மூவரையும் அயோத்தி மக்களிடமிருந்து பிரித்து வனவாசம் செய்ய உதவ வேண்டும் என்றார். அதன்படி அயோத்தி மக்கள் யாரும் அறியாதபடி ராமர் சீதை லட்சுமணனை அடர் காட்டுக்குள் கொண்டு சென்று சேர்த்தான் குகன்.

பரதன் தனது தமயன் ராமர் சிருங்கிபேரத்தில் இருப்பதை அறிந்து அங்கே தேடிக்கொண்டு சிருங்கிபேரம் வந்தார். அதனை அறிந்த குகன் பரதன் ராமனுடன் போரிட்டு அவரை அழிக்க வந்திருக்கிறான் என்று நினைத்து பரதனை எதிர்க்க கிளம்பினான். அப்போது பரதன் குகனிடம் என் தமயனை நீங்கள் தான் பார்த்தீர்கள் என்றும் அவருடன் பேசினீர்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். அவரை அழைத்துக் கொண்டு அயோத்தி செல்லவே நான் வந்திருக்கிறேன். அவர் எங்கே என்று கேட்டான். பரதன் ராமனின் மேல் கொண்டிருந்த அன்பை பார்த்த குகன் நீ ஆயிரம் ராமனுக்கு சமம் என்று கூறியதாக கம்பர் பரதனை விவரித்துள்ளார்.

ராமாயணத்தின் நிறைவாக விடைக்கொடுத்த படலம் என்ற இடத்தில் ராமரின் பட்டாபிஷேகத்திற்கு குகன் வந்தான். அங்கு ராமரிடத்தில் தன்னை நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். ராமன் குகனுக்கு பரிசு பொருட்கள் ஆடை ஆபரணங்கள் அனைத்தையும் கொடுத்து அவனை கௌரவித்தார்.

சிற்பம் அமைந்துள்ள இடம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் சமேத ரங்கமன்னார் கோவில் விருதுநகர் மாவட்டம்.

குருநாதர் கருத்துக்கள் #1.4

கேள்வி: இந்து மதத் தெய்வங்களுக்கு மட்டும் ஏன் எட்டு கரங்கள் பத்து கரங்கள்? அக் கரங்களில் ஆயுதம் எதற்கு? என்ற வினா பொதுவாக கேட்கின்றோம்.

சிந்தித்தால் இதற்கு விடை எளிதாக கிட்டும் என்றும் இங்கு விளக்கிடுவோம். எட்டு திக்குகளும் காக்க வல்லவர்களாக இருப்பதால் எட்டு கரங்கள் அவர்களை சுற்றி இருக்கின்றன என்றும் ஒவ்வொரு கரங்களிலும் ஓர் ஆயுதம் காப்பை (பாதுகாப்பு) குறிக்கின்றது என்றும் இங்கு செப்பிட்டோமே. மற்ற இரண்டு கரங்கள் இருந்தால் அது நன்றாகப் பார்த்தால் மேலும் கீழும் இருக்கும். அது காக்க வல்லதாம் என்றும் இங்கு எடுத்துரைப்போமே. அது பொதுவாக அபயம் என்றும் கொடுத்தல் வாங்கல் என்றும் செப்புவார்கள். உண்மையான நிலை மேலும் கீழும் காக்குதல் என்பதேயாகும்.

இரண்டாவது கேள்வி: முக்கியத்துவம் காணும் ஒரு கேள்வியானது பெரும் அளவில் பெரிதான விநாயகர் சிறு எலி மேல் ஏன் அமர்ந்து கொள்கின்றார் என்பதேயாகின்றது.

இதற்கு விடை ஒன்று அகங்காரம்தனை சிறிதாக்கி அதற்கு மேல் அமர்ந்து நாமும் அதேபோல் செய்தல் வேண்டும் என முதல் தெய்வம் சுட்டிக் காட்டுகின்றார். ஆதியில் இதை செய்தால் ஒழிய ஞானத்தில் முன்னேற்றம் காணாது என எடுத்துரைக்கின்றார். இரண்டாவது யோக நெறியில் சிந்திக்க அஷ்டமா சித்திகள் கை கொண்டால் பெரிய உருவமும் சிறு உருவத்தின் மேல் லேசாக அமர இயலும் என்றும் ஓங்காரம் அதாவது பிராணமும் ஓங்காரமும் இணைந்து உள் அடக்க எதையும் சாதிக்க இயலும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். இதனை அனைவரும் நன்கு சிந்தித்து மேலும் இரண்டு விளக்கங்கள் கண்டு பிடிப்பீர்களாக.

குருநாதர் கருத்துக்கள் #1.3

இக்காலம் வரை ஜபம் தியானம் நற்பணிகள் திருப்பணிகள் அனைத்தும் செய்தும் யாம் இருக்கும் இடத்தில் இருக்கின்றோம் என்று சிலர் எண்ணுகின்றனர் இவர்களுக்கு யாம் ஒன்று செப்புவோம்.

அன்பர்களே யாமும் நீங்களும் ஓர் பாதையில் செல்கின்றோம். சிறிது முன் யாமும் பின்பு நீங்களும் என்பதே வித்தியாசம் என்றும் செப்பிட்டோமே. இறை பாதை நாடுவோர்கள் அனைவருக்கும் நல்முக்தி உண்டு என்றும் செப்பிட்டோமே. எப்பொழுது என்பதுதான் விதி. உதாரணமாக பயிரிட்டு செடி வளர அதனை இழுப்பதால் மேலும் வளர்வதில்லை அழிந்து போகும். இதை மனதில் நிறுத்தி காலங்கள் இதற்கு ஒதுக்கிட்டு தியான முறைகள் கர்ம யோக முறைகள் என்பதெல்லாம் செய்து வர அனைத்தும் கைகூடும் என்றும் செப்பிட்டோமே.

அவசரம் ஆன்மிகத்திற்கு ஆகாத ஓர் அவஸ்தை என்றும் இங்கு உங்களுக்கு எடுத்துரைத்தோம். ரோமாபுரி ஓர் நாளில் கட்டவில்லை என்று முன் செப்பியுள்ளோம். ஓர் கட்டிடத்திற்கு இந்நிலை என்றால் ஆன்மாவின் வளர்ச்சி, ஆன்மாவை முழுமையாக இறைவனிடம் சேர்க்க, எத்தனை காலங்கள், ஜன்மங்கள் எடுத்தல் வேண்டும் என்று சிந்தித்தால் போதும். நல் கர்மாக்கள் பலனால் இன்று நீங்கள் அனைவரும் இறை பாதையை நோக்கி அதில் ஏறி நடந்து கொண்டு இருக்கின்றீர்கள், இதுவே ஒரு பெரிய சாதனையாகும் என்று எடுத்துரைத்தோமே.

அச்சப்படுவதற்கோ, வேதனைப்படுவதற்கோ இங்கு எந்நிலையும் இல்லை. ரோகங்களும் கர்ம நிலைகள் மாறிட முழுமையாக நீங்கும் என்று எடுத்துரைத்தோமே. சிறு வேதனைகள் உண்டாகுதல் வேண்டும் என்கின்ற விதி உண்டு. அவ்விதம் இல்லையேல், கர்ம கழிப்புகள் இல்லை என்பதையும் உணர்தல் வேண்டும். ஏனெனில், உடலால் செய்த கர்ம வினைகள் உடலால் அநுபவித்து தீர்த்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு. இதுவே நடைபெறுகின்றது. இருப்பினும், அனைத்தும் எம்பிரான் திருவடியில் சமர்ப்பித்து செயல்பட முடிவு நன்மையே என்று செப்புகின்றோம்.