முதல் படம்: அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் 400 ஆண்டுகளுக்கு முன்பு கையால் வரையப்பட்ட ஓவியம். அருகில் பிருங்கிரிஷி முனிவர். இரண்டாவது படம்: AI மூலம் உருவாக்கப்பட்ட படம்.
பிருங்கிரிஷி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபட மாட்டேன் என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அர்த்தநாரீஸ்வரராய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதை கண்ட சக்தி பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். சிவபெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்றார். அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்று அர்த்தநாரீஸ்வரர் கோலத்தை பிருங்கிரிஷி முனிவர் வழிபடும் காட்சி. ஊர் திருச்செங்கோடு.
விளக்கம்: உயிர்கள் அவரவர்கள் ஏற்றுக்கொண்ட சமய வழிகளின் நெறிமுறைகளின் படியும் ஒழுக்கத்தின் படியும் நடக்கத் தவறியவர்களை அனைத்து சமய வழிகளின் தலைவனாகவும் அனைத்து உயிர்களின் தந்தையாகவும் இருக்கும் சிவபெருமான் தாம் வழங்கிய சிவாகமத்தில் கொடுத்துள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப எந்தவித தண்டைனையானாலும் அவர்களின் ஆன்மாவிற்கு தண்டனைகளை தாங்கும் பக்குவத்தை கொடுத்து பின் தண்டனைகளையும் கொடுத்து மீண்டும் அவர்கள் அந்த தவறை செய்யாதபடி அவர்களை சீர் படுத்துவான். ஆனாலும் அவர்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவியில் இருக்கும் உடலுக்கு வேண்டிய தண்டனைகளைக் கொடுத்து அவர்களைத் திருத்துவது ஒரு நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.
விளக்கம்: குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அது நிகழாதவாறு தகுந்த தண்டனை வழங்குவதே அரசனின் கடமை ஆகும்ஆகும்
கோர்ட்டில் ஒரு திருடன் திருட்டு வழக்கிற்கான நிறுத்தப்பட்டான். அவனிடம் நீதிபதி திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வருகிறாயே நீ திருந்தவே மாட்டியா? என்று கேட்டார். எத்தனை தடவை திருடினாலும் அதே தண்டனையே கொடுக்கறீர்கள் நீங்கள் சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா? என்றான் திருடன். நீதிபதி யோசித்தார். அவனின் கேள்வி நியாயமாகப்பட்டது. திருடனை சிறைச்சாலைக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்த நீதிபதி அவருக்கு சில கட்டளைகளை கொடுத்தார்.
நீதிபதியின் கட்டளைப்படி ஜெயிலர் பிக்பாக்கெட் அடித்த பத்துப் பேரை திருடனின் ஜெயில் அறையில் வைத்தார். திருடனிடம் வந்த ஜெயிலர் இந்த அறையில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த அறைக்கு அருகில் ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு என்றார். திருடன் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். ஜெயிலர் மற்ற பத்து பேரைத் தனியாக அழைத்தார். திருடன் வேலை செய்துவிட்டு கூலியை வாங்கிக் கொண்டு சாப்பிட கேண்டின் செல்லும் வழியில் அவனிடம் உள்ள பணத்தை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினமும் இந்த வேலையைச் செய்யணும். யார் எப்ப எப்படி பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது என்றார். அவர்கள் ஜெயிலரின் கட்டளையை ஏற்றார்கள். முதல் நாளே திருடன் பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் உணவு தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் சிறிதளவு உணவு சாப்பிடக் கொடுத்தார்கள். அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டு பரிதாபப்பட்டாலும் வேறு வழியில்லை. அவனின் பணத்தை திருடா விட்டால் ஒன்பது பேருக்கும் உணவு கிடைக்காது. பத்து பேர் பட்டினியில் கிடப்பதை விட ஒருத்தன் பட்டினி கிடப்பது பரவாயில்லை என்று அனைவரும் அமைதியாக இருந்து விட்டார்கள். தினமும் இப்படியே நாள் கடந்தது. தினமும் அவர் எவ்வளவு வேலை பார்த்து சம்பாதித்தாலும் அவனுக்கு கிடைத்தது உயிர் வாழத் தேவையான ஒரு வேளை சிறிதளவு உணவு மட்டும். அவன் விடுதலை ஆகும் நாள் வந்தது.
நீதிபதி அன்று திருடன் இருக்குமிடம் வந்தார். நீ கேள்வி கேட்டபடி சட்டத்தையோ தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது? என்றார். ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு வினாடியில் திருடிக்கொண்டு செல்வது எவ்வளவு அக்கிரமம்னு இப்போது புரிகிறது. இனி திருட எனக்கு மனசு வராது என்றான் திருடன். மற்ற பத்து திருடர்களும் திருடன் பசியில துடிப்பதைப் பார்க்க சகிக்கவில்லை. செத்தாலும் இனிமேல் திருட மாட்டோம் என்றார்கள்
நீதிபதி திருமந்திரம் மற்றும் திருக்குறளில் வள்ளுவர் சொன்னதை இங்கு செய்தார்.
குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.
இராமர் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கோட்பாட்டை மேற்கொண்டு கானகம் செல்ல தயாரானார். கானகம் சென்று விடுவதால் தன்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் தேவைப்படுபவர்களுக்கு தானம் கொடுக்க முடிவு செய்து அனைத்தையும் தானமாக கொடுத்தார். யாத்திரை செல்வதற்கு முன்பு தன்னிடம் உள்ள பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பதினால் இதற்கு யாத்ரா தானம் என்று பெயர் வந்தது. அன்று முதல் வந்ததுதான் யாத்ராதானம். யாத்ரா என்ற வார்த்தை வடசொல். தமிழில் யாத்திரை என்று பெயர். யாத்திரை செல்லும் சமயம் நாம் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பயணம் செய்கிறோம். அப்போது பயணத்தில் தேவைப்படுகின்ற பொருட்களை மட்டுமே கொண்டு செல்கிறோம். மீதி பொருட்களை வீட்டில் பூட்டி விட்டுத்தான் செல்கிறோம். வீட்டில் பூட்டி வைத்திருக்கும் பொருட்கள் பயணத்திற்கு பயன்படாது. அது போலவே இறைவன் இருக்கும் இடத்திற்கு பயணம் செய்ய புண்ணியம் மட்டுமே தேவை. நம்மிடம் இருக்கும் எந்த பொருட்களும் இறைவன் இருக்கும் இடத்திற்கு செல்லும் பயணத்திற்கு உதவாது. நம்முடைய இறுதி காலத்திற்கு பின்னும் இந்த பொருட்கள் நம்முடன் வருவதுமில்லை. ஆகவே தானங்கள் செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொண்டல் அந்த புண்ணியம் நம்மை இறைவனிடத்தில் அழைத்துச் செல்லும்.
இராமர் தன்னை பார்க்க வரும் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களையும் தான் அணிந்திருந்த உடை உட்பட தன்னிடம் உள்ள எந்த பொருளை கேட்டாலும் அனைத்தையும் வாரி வழங்கினார். அயோத்தி வாசிகள் பலரும் தானம் பெற்றனர். தானத்தை முடிக்கும் தருவாயில் வயது முதிர்ந்த ஒரு அந்தணன் வந்தார். அவன் பெயர் திரிசடன். அவருக்கு ஒரு மனைவியும் சில பிள்ளைகளும் இருந்தனர். அன்றாடம் வயல்வெளியில் வரப்பில் சிந்தி இருக்கும் நெல் மணிகளை எடுத்து அதிலே ஜீவனம் செய்து வந்தார். இராமர் கானகம் செல்லும் முன் தனது உடைமைகளை எல்லாம் யாத்ரா தானம் செய்வதை கேள்விபட்ட அவரது மனைவி ஓடோடி கணவனிடம் சென்று இராமர் கானகம் செல்லும் முன் தனது பொருள்களை எல்லாம் யாத்ரா தானம் செய்கிறார். நீங்களும் அவர் இருக்குமிடம் என்று ஏதாவது பொருள் தானமாக வாங்கி வாருங்கள். நிச்சயம் தருமமே வடிவம் தாங்கி வந்திருக்கும் அந்த அண்ணல் நம் துன்பங்களை எல்லாம் தீர்ப்பார். ஆகவே சென்று வாருங்கள் என்றாள். அதற்கு அந்தணனும் ஒப்புக் கொண்டு வேக வேகமாக அரண்மனையை சென்றடைந்தான். அங்கே தான தர்மங்களை வழங்கிக் கொண்டிருந்த இராமரை கண்டார். இராமரை பணிந்து தங்களின் புகழ் இப்புவி முழுவதும் பரவியுள்ளது. நான் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவன். நானும் என் குடும்பமும் தங்களது ராஜ்ஜியத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் வயல் வரப்பில் தானே விழும் நெல்லை நம்பியே வாழ்ந்து வருகிறோம். என்மீது கருணைக் கொண்டு உதவ வேண்டும் என வேண்டி நின்றான். உடனே ராமர் அன்பரே சற்று முன் வந்திருக்க கூடாதா? என்னுடைய விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் அனேகருக்கு முதலிலேயே கொடுத்து விட்டேன். தற்பொழுது என்னிடம் மிஞ்சி இருப்பது இந்த பசுக்கள் மட்டுமே. உங்களுக்கு எவ்வளவு பசுக்கள் வேண்டும் என்று கேட்டார்.
இராமரின் கேட்டதும் நூறு பசுக்கள் கேட்கலாமா? இருநூறு பசுக்கள் கேட்கலாமா? அல்லது அதற்கும் மேலும் கேட்கலாமா? என்று அந்தணன் யோசித்தான். பின் புத்திசாலிதனமாக எனது வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியுடன் வாழ எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு நீங்களே கொடுங்கள் என்று இராமரின் விருப்பத்திற்கு விட்டு விட்டான். இரமரும் அந்தணரே உமது கையில் உள்ள கொம்பை வீசி எறியுங்கள். அது எவ்வளவு தூரம் செல்கின்றதோ அது வரை உள்ள பசுக்களை அனைத்தையும் உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள் என்றார். இதை கேட்ட அந்தணன் விழிகள் மலர்ந்தன. நடக்கவும் சக்தியற்ற நிலையிலிருந்த அவன் நிமிர்ந்து நின்றான். தன் இடுப்பில் இருந்த வஸ்திரத்தை அவிழ்த்து அதை வரிந்து கட்டிக் கொண்டான். தனது முழு பலத்தையும் திரட்டி ஒரு சுற்று சுற்றி தனது கையில் இருந்த கொம்பை வீசி எறிந்தான். அது சரயு நதி கரைக்கு அருகில் சென்று விழுந்தது. அவனுடைய பேராசையை எண்ணி இராமர் சிரித்துக் கொண்டார். பொருளாசை தான் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது? சக்தியற்ற மனிதனையும் பொருளானது எத்தகைய சக்தி வாய்ந்தவனாக மாற்றுகிறது என்பதை தெரிந்துக் கொண்டார். உமது கொம்பு விழுந்த இடம் வரை உள்ள பசுக்களை எல்லாம் உங்களுக்கே வழங்குகிறேன் பெற்று செல்லுங்கள் என்றார். அந்த திரிசடன் என்ற அந்தணன் ராமரை பலவாறாக போற்றி புகழ்ந்து பாராட்டினான். யாத்திரை இனிதே முடிய வாழ்த்தினான். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு இராமர் வழங்கிய பசு கூட்டங்களுடன் தனது வீட்டை அடைந்தான். பின் மனைவி மக்களுடன் சுகமாக வாழ்ந்தான்.
இதன் அடிப்படையில் நம் முன்னோர்கள் வெளியூர் பயணம் அல்லது கோயில்களுக்கான யாத்திரை அல்லது நல்ல காரியங்களுக்கோ செல்லும் முன் தங்களால் முடிந்த பொருள்களை பழ வகைகளை யாத்ரா தானம் செய்து விட்டு யாத்திரை மேற்கொள்வார்கள். அதனால் எந்த ஒரு துன்பமும் இல்லாமல் பயணம் இனிதே முடிந்து ஊர் திரும்புவர்கள். அந்தணரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் இவராக கேட்டிருந்தால் 100 அல்லது 200 பசுக்கள் மட்டுதே கேட்டிருப்பார். அவை மட்டுமே அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் இராமரிடமே எனக்கு என்ன வேண்டுமோ நீங்களே கொடுங்கள் என்று கேட்டதினால் அவனுடைய சக்திக்கு ஏற்றார்போல் அதிகமான பசுக்களையே கொடுத்தார். அதுபோல் நாமும் இறைவனிடம் பிரார்த்திக்கும் போது அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பதை விட எனக்கு மகிழ்ச்சி கொடுக்க கூடியது எதுவோ நன்மை கொடுக்க கூடியது எதுவோ அதனை எனக்கு கொடுங்கள் என்று பிரார்த்தனை செய்வது சிறப்பு. குழந்தைக்கு எது நல்லது என்று தாய்க்கு மட்டுமே தெரியும். அதுபோல் நமக்கு எது நன்மை தரும் எது மகிழ்ச்சி கொடுக்கக் கூடியது கூடியது அனைவருக்கும் தாயாக இருக்கும் இறைவனுக்கு மட்டுமே என்று தெரியும்.
முனிவர் ஒருவர் தனது கடும் தவத்தின் காரணமாக பல சித்திகள் கைவரப்பெற்றார். அதனால் அவருக்கு தன்னால் இயலாத காரியம் ஒன்றும் இல்லை என்ற கர்வம் வந்தது. நல்ல குணங்களும் தவ வலிமையும் கொண்ட முனிவரின் கர்வத்தை நீக்க திருவுள்ளம் கொண்டார் இறைவன். சன்னியாசி உருவத்தில் முனிவர் இருக்கும் இடத்திற்கு வந்தார் இறைவன். முனிவரிடம் சுவாமி தாங்கள் செய்த தவ வலிமையால் பல சித்திகளைப் பெற்றிருப்பதாக அறிந்தேன். அப்படிப்பட்ட தங்களை காண வேண்டியே இங்கு வந்துள்ளேன் என்றார் சன்னியாசி. சன்னியாசியை வரவேற்று அமரும்படி கேட்டுக் கொண்டார் முனிவர். அச்சமயத்தில் அந்த வழியாக ஒரு யானை சென்று கொண்டிருந்தது. சுவாமி தங்களால் இந்த யானையையும் கொல்ல முடியும் அல்லவா எனக் கேட்டார் சன்னியாசி. ஏன் முடியாது இப்போது பாருங்கள் என்று நீரை கையில் எடுத்து மந்திரித்து யானையை நோக்கி வீசினார் முனிவர். உடனே அந்த யானை அதே இடத்தில் துடிதுடித்து செத்து வீழ்ந்தது. என்ன ஆச்சரியம் உள்ளபடியே தங்கள் மந்திர சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் மந்திர பிரயோகத்தால் யானையை எளிதாக வீழ்த்தி விட்டீர்களே என பாராட்டினார் சன்னியாசி. சன்னியாசியின் புகழுரைகள் சாதுவுக்கு பெருமகிழ்ச்சியை உண்டாக்கியது. மீண்டும் சுவாமி இப்போது தங்களால் இறந்து போன யானையை மீண்டும் பிழைக்க வைக்க முடியுமா? எனக் கேட்டார் சன்னியாசி. என்னால் எதையும் செய்ய முடியும். இப்போது பாருங்கள் என்று முன் போலவே நீரை கையில் எடுத்து மந்திரித்து கீழே சாய்ந்து கிடந்த யானையின் மீது வீசினார் முனிவர். யானைக்கு உயிர் வந்தது.
முனிவரிடம் சுவாமி உங்கள் அபார சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் அனுமதித்தால் தங்களிடம் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். தாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்ன எனக் கேட்டார் சன்னியாசி. தாராளமாக கேட்கலாம். அதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்றார் முனிவர். சுவாமி தாங்கள் யானையை முதலில் கொன்றீர்கள். பின்பு அதை உயிர் பிழைக்க செய்தீர்கள். இதனால் தாங்கள் பெற்ற பலன் என்ன? இறைவனை கண்டீர்களா? தங்களுக்கு எப்படிப்பட்ட ஆன்மிக வளர்ச்சி கிடைத்தது? தங்களின் சித்து விளையாட்டு இறைவனை எளிதாக அடைய தங்களுக்கு உதவியக இருந்ததா? என்று கேட்டார் சன்னியாசி வடிவில் இருந்த இறைவன். இந்த சித்திகள் எதற்கும் பயன்படாது என்பதை உணர்ந்த முனிவர் கர்வம் அழிந்த நிலையில் சன்னியாசியின் கால்களில் விழுந்தார். இறைவன் அவருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.
இறைவனின் அருளை பெற்ற பக்தன் இறைவனிடம் விலை மதிக்க முடியாத ஞானம் வைராக்கியம் பக்தி இவைகளை மட்டுமே கேட்டு பெற்றால் ஆனந்தமாக வாழலாம். கர்மாக்கள் விரைவாக அழிந்து இறைவனிடம் செல்லலாம். அதனை விடுத்து இறைவனே விட சித்திகளே பெரிது சித்திகள் வேண்டும் என்று அதன் பின்னால் சென்றால் எந்த பலனும் இல்லை. கர்வம் மிகுந்து மேலும் பிறவிகளே அதிகரிக்கும்.
யுயுத்சு மகாபாரதத்தில் ஓர் குறிப்பிடத்தக்க வீரர். ஒரு சமயம் வியாச முனிவர் திருதராஷ்டிரன் அரண்மனைக்கு விஜயம் செய்தார். வியாச முனிவரை உபசரிக்கும் பொறுப்பை மனைவி காந்தாரியிடம் திருதராஷ்டிரர் ஒப்படைத்தார். அவளுடைய உபசரிப்பில் மகிழ்ந்த முனிவர் விடை பெற்றுச் செல்லும் முன் காந்தாரியின் வேண்டுகோளின் படி மக்கட் செல்வம் பெறும் வரத்தை அருளினார். பின் காந்தாரி கர்ப்பம் தரித்தாள். கர்ப்பகாலம் இரண்டு வருடங்கள் நீடித்தது. அவள் நிலை கண்டு அனைவரும் கவலையுற்றனர். காந்தாரி கர்ப்பமாக இருக்கும் போது திருதராஷ்டிரருக்குத் தேவையான பணிகளைச் செய்துக் கொடுக்க சுகதா என்னும் பணிப்பெண் நியமிக்கப்பட்டாள். அவள் காந்தாரியின் உற்ற தோழியும் ஆவாள். திருதிராஷ்டிரருக்கு காந்தாரி மூலம் 100 மகன்களும் துஷலா என்னும் பெண் குழந்தையும் பிறந்தனர். பணிப்பெண் சுகதா மூலம் ஒரு ஆண்மகன் பிறந்தான். அவன் தான் யுயுத்சு. துரியோதனன் பிறந்த அதே நாளில் யுயுத்சு பிறந்தார். துச்சாசனன் மற்றும் பிற கௌரவர்களை விட மூத்தவர்.
யுயுத்சுவின் குண நலன்கள் விதுரரை ஒத்திருந்தது. இருவருமே தாசியின் புத்திரர்கள். அறிவு மிகுந்த இவ்விருவரும் பாண்டவர்கள் மீது அன்பும் கிருஷ்ணரிடம் பக்தியும் உடையவர்களாக இருந்தனர். கெளரவர்கள் மனசாட்சிப்படி நடக்காவிட்டாலும் யுயுத்சு எப்போதும் மனசாட்சிப்படி நடந்தான். துரியோதனனின் சதித்திட்டங்களை தக்க சமயத்தில் பாண்டவர்க்கு எடுத்துரைத்து அவர்களைக் காப்பாற்றினான். குருசேத்ர யுத்தத்திற்காக தேர்ப் படை யானைப் படை குதிரைப் படை காலாட் படை எனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகள் ஒருபுறம் நிற்க எதிர்புறம் கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றிருந்தன. இருபுறமும் மாபெரும் வீரர்கள் கூட்டம் கையில் வாளோடும் வேலோடும் வில் அம்பு கதை முதலிய ஆயுதங்களோடும் போரிடத் தயாராய்த் துடிதுடிப்புடன் காத்திருந்தனர். அந்நேரத்தில் அர்ச்சுனன் கிருஷ்ணரை நோக்கி நூறு கௌரவர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள் தானே கண்ணா? என்றான். கண்ணன் கலகலவென நகைத்தான். ‘நூறு கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது சரியல்ல அர்ஜீனா கௌரவர்களில் நூறுபேர் அழிக்கப்படுவார்கள் என்பதே சரி என்று புதிராக பதில் சொன்னான். இவர்கள் இப்படி உரையாடிக் கொண்டிருந்த போது யுதிஷ்டிரர் யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து நின்றார். ஏதோ முக்கியமாக ஒன்றை அறிவிக்கும் நோக்கில் வந்திருக்கிறார் என்பதை அறிந்த இரு தரப்பு வீரர்களும் அமைதி காத்தனர். துரியோதனன் யுதிஷ்டிரரை வெறித்துப் பார்த்தவாறு அவரது அறிவிப்பைக் கேட்கக் காத்திருந்தான். யுதிஷ்டிரர் ஒரு அறிவிப்பை உரத்துச் சொல்ல ஆரம்பித்தார். வீரர்களே விரைவில் தர்மயுத்தம் தொடங்க இருக்கிறது. இப்போது இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. எங்கள் அணியிலிருந்து யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம். துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம். வீரர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டு உணர்ந்து அதன் பொருட்டுத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால் இது கடைசி சந்தர்ப்பம் என்றார். மேலும் அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கலாகாது. அப்படி அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பில் போரிடுவார்கள் என அறிவித்த யுதிஷ்டிரர் அமைதியாய் காத்திருந்தார்.
அர்ஜீனன் பீமன் நகுலன் சகாதேவன் நால்வரும் தர்மனின் அறிவிப்பைக் கேட்டு வியந்தார்கள். யுதிஷ்டிரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டை இரு அணியினருக்கும் புலப்படுத்தியது. கெளரவர் தரப்பிலிருந்து ஒரு தேர் பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது. அதில் இருந்தவன் யுயுத்சு என்பதை பீஷ்மர் அறிந்தார். யுயுத்சுவை நோக்கி துரியோதனன் வில்லை வளைத்தபோது பீஷ்மர் துரியோதனா சற்றுப் பொறு என்று குறுக்கிட்டார். அவனைப் போகவிடு. யுதிஷ்டிரர் கட்சி மாறுபவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கலாகாது என்றானே? அந்த வீரன் அவன் மனச்சாட்சிப்படி நடக்கிறான். நீ அவனை போகவிடு. நம் படை அவன் ஒருவனை இழப்பதால் எந்த வகையிலும் வலிமை குன்றப் போவதில்லை. நம்மிலிருந்து வேறுபட்டுப் பாண்டவர் அணியில் சேர்ந்த வீரனை போர் தொடங்கியதும் நம் வீரர்களில் ஒருவனாலேயே கொல்லப்படுவான். அதுவே அவனுக்கான நமது தண்டனை என்றார் பீஷ்மர். அவர் சொன்னதைக் கேட்ட துரியோதனன் அம்பைத் தன் அம்பறாத் தூணியில் செருகிக் கொண்டான். யுயுத்சு கெளரவர் படையில் ஓர் அதிரதி. அதிரதி என்பவன் ஒரே சமயத்தில் 60000 போர் வீரர்களை அழிக்கும் ஆற்றல் பெற்றவன்.
அர்ஜீனா யுயுத்சு சாதாரணப் படைவீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன் என்றார் கிருஷ்ணர். நம் அணிக்கு வரும் இவனை நீயும் அறிவாய். நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒருமுறை பீமனை கொல்ல துரியோதனன் நீரில் நஞ்சு கலந்து கொடுக்க முற்பட்டானே அப்போது அதை முன்கூட்டியே பீமனுக்குத் தெரிவித்து பீமன் உயிரைக் காத்தவன் இவன்தான். இவன் தர்ம நெறியிலிருந்து சிறிதும் மாறாமல் இருப்பவன். அவனைப்போல் தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு. இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன். இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய போர் முடிந்த பிறகு சாவகாசமாகச் சொல்கிறேன் என்றார் கிருஷ்ணர். முதல் நாள் போர் நடந்து முடிந்தது. மறுநாள் காலை போரில் மீண்டும் சந்திப்போம் என்று முழக்கமிட்டு கௌரவர்களும் பாண்டவர்களும் அவரவர் பாசறைக்குத் திரும்பினார்கள். பாண்டவர் அணியில் புதிதாய்ச் சேர்ந்த கௌரவ வீரனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பாண்டவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்திற்கு வந்த கிருஷ்ணரிடம் அர்ஜீனன் கண்ணா எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச் சொன்னதன் காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணர் யுயுத்சு தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான். அதோடு விதுரனைப்போல் தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும் கூட மற்ற கௌரவர்கள் இவனை வெறுக்கக் காரணமாயிற்று. தர்ம நெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு வந்துவிட்டான். போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும் அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும் காலமாவான். அவனுக்குக் பித்ரு கடன்களை செய்ய ஒரே ஒரு பிள்ளையாவது வேண்டும். இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்வான் எனக் கூறினார் கிருஷ்ணன். யுதிஷ்டிரர் யுயுத்சுவை இழுத்து அணைத்துக் கொள்ள பிற பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவனைத் தட்டிக்கொடுத்தார்கள். கிருஷ்ணரின் தயவால் தர்மம் வென்றது. குருசேத்திரப் போரின் இறுதியில் பாண்டவர்களில் உயிர் பிழைத்த பதினொரு வீரர்களில் ஒருவராக இருந்தார். போரில் வென்ற பின் இந்திரப்பிரஸ்த அரசானாக யுயுத்சுவிற்கு முடி சூட்டினார் யுதிஷ்டிரர். திருதராஷ்டிரன் மறைந்த பின் யுயுத்சு தன் தகப்பனாருக்கு பித்ருக் கடனை செய்தான். அர்ஜீனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீட்சித்திற்கு பாதுகாவலராக இருந்து அவனுக்கு தகுந்த வயது வரும் வரை அரசனாக நல்லாட்சி புரிந்து பின் அந்த அரசை பரீட்சித்திடம் ஒப்படைத்தார் யுயுத்சு.
தினமும் நான்கு காலப் பூஜைகளுக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடும் தீவிரமான சிவ பக்தன் ஒருவன் இருந்தான். சிலைகளையும் படங்களையும் எங்கு பார்த்தாலும் அப்படியே நின்று பக்தியில் உருகுவான். இப்படிச் சிலைகளிலும் ஓவியங்களிலுமே பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமானை நேரில் தரிசனம் செய்ய அவன் ஆசைப்பட்டான். ஒரு சிற்பியிடம் சொல்லி அற்புதமாகச் சிவபெருமான் சிலை ஒன்றைச் செய்து வாங்கி வந்தான். சிவனே உயிரோட்டமாக வந்திருப்பது போன்ற அற்புதமான சிலை அது. தன் வீட்டுப் பூஜையறையில் அந்தச் சிலையை வைத்துப் பூஜைகளை ஆரம்பித்தான். நீண்ட காலம் அவன் சிவபெருமானை நினைத்து பூஜை செய்தான். காலங்கள் கடந்தும் சிவ பெருமானின் தரிசனம் அவனுக்குக் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவன் தன்னுடைய பூஜையை நிறுத்தினார். சிவபெருமானை வழிபடுவதை நிறுத்தினான். தான் ஆசையாகச் செய்து வாங்கிய சிவன் சிலையைத் தூக்கிப் பரண் மேல் வைத்தான். இவ்வளவு நாட்களைச் சிவபூஜையில் வீணடித்ததற்குப் பதிலாக பெருமாளை வணங்கியிருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. உடனே இன்னொரு சிற்பியைத் தேடிப் பிடித்து பெருமாள் சிலை ஒன்றைச் செய்து வாங்கினான். தன் வீட்டுப் பூஜையறையில் பெருமாள் சிலையை வைத்து பூஜைகள் செய்ய ஆரம்பித்தான். பெருமாள் சிலையின் முன்பாக ஊதுவத்தி ஏற்றி வைத்தான். அதன் நறுமணம் அறை முழுவதும் பரவியது. அப்போதுதான் அவன் பரணில் இருந்த சிவபெருமான் சிலையைப் பார்த்தான். பெருமாளுக்கு ஏற்றிய ஊதுவத்தியின் நறுமணத்தைச் சிவன் சிலை நுகரக்கூடாது என்று அந்தச் சிலையின் மூக்கைத் துணியால் இறுக்கமாக மூடினான்.
சிவபெருமான் அடுத்த நொடியே அவன் கண்முன் தரிசனம் தந்தார். வியந்துபோன அவன் சிவபெருமானை வணங்கிவிட்டு இத்தனை நாட்கள் நான் பூஜித்தபோது காட்சியளிக்காத நீங்கள் இப்போது காட்சி தருவது ஏன்? என்று கேட்டான். நான் கல்லாகவும் மண்ணாகவும் மலையாகவும் நீராகவும் காற்றாகவும் ஆகாயமாகவும் இருப்பவன். இந்த கல்லே நான்தான். ஆனால் நீயோ வெளியே இருந்து ஏதோ ரூபம் சிலைக்குள் வந்து காட்சி கொடுக்க போகிறது என்று எண்ணி பூஜித்து வந்தாய். இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் கல் சிலையாக நினைத்தாய். இன்றுதான் இந்தச் சிலையாகவே நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். நீ அப்படி உணர்ந்த அந்த நொடி நான் உன் கண்முன் வந்துவிட்டேன் என்றார் இறைவன்.
இறைவனைக் காண வேண்டுமெனில் அனைத்தும் இறைவனே என்ற எண்ணமும் உறுதியான சரணாகதி மற்றும் நம்பிக்கையே முக்கியம்.
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் 16 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமாகறல். இறைவன் திருநாமம் திருமாகறலீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுவனநாயகி. இத்தலத்தில் முருகப்பெருமான் யானை மீது அமர்ந்து காட்சி அளிக்கிறார். திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப் பரிசாக தனது பட்டத்து யானையான ஐராவதம் என்ற வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத் தம்பதிகளை வெள்ளை யானையில் அமரச் செய்து அக்காட்சியை கண்ணார கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப முருகன் இத்தலத்தில் வெள்ளை யானை மீது அமர்ந்து காட்சி கொடுத்தார்.
கண்ணனும் பலராமரும் சாந்தீபனி என்ற குருவிடம் கல்வி கற்றார்கள். இருவரும் அறுபத்து நான்கே நாட்களில் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்று முடித்தார்கள். குருகுல வாசத்தைப் பூர்த்தி செய்து கொண்டு கிளம்பும்போது குருநாதரிடம் உங்களைக் குருவாக அடைந்ததை எங்கள் பாக்கியமாகக் கருதுகிறோம். உங்களுக்கு நாங்கள் குரு தட்சணையாக என்ன தர வேண்டும்? என்று இருவரும் கேட்டார்கள். அதற்கு குரு கண்ணா உங்களைப் போன்ற ஒரு மாணவன் கிடைக்க நானல்லவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்? நீயும் பலராமனும் மாணவர்களாகக் கிடைத்ததே எனக்குப் பெரிய தட்சணை என்று சாந்தீபனி பதிலளித்துக் கொண்டிருக்கையில் அவரது மனைவி சுவாமி ஒரு நிமிடம் என்று அவரை உள்ளே அழைத்தாள். அறைக்குள் வந்த அவரிடம் சுவாமி கண்ணனிடம் குரு தட்சணைை வேண்டாம் என்று சொல்லாதீர்கள் இந்தப் பலராமனும் கண்ணனும் அறுபத்து நான்கே நாட்களில் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றிருக்கிறார்கள். எனவே இவர்கள் அசாத்தியமான செயல்களையும் சாதிக்கும் வல்லமை பொருந்தியவர்கள். எனவே இறந்து போன நம் குழந்தையை மீட்டுத் தருமாறு அவர்களிடம் கேளுங்கள் என்றாள்.
கண்ணனால் இதனை செய்ய இயலுமோ இயலாதோ என்ற ஐயத்துடன் வெளியே வந்த சாந்தீபனி கண்ணா பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நான் என் குடும்பத்தோடு கடலில் குளிக்கச் சென்றிருந்த போது என்னுடைய ஒரே மகன் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். அவனை உன்னால் மீட்டுத்தர முடியுமா? என்று கேட்டார். மகா குருவே உங்களுக்காக இதைக் கூடச் செய்யமாட்டேனா? உங்கள் மகனுடன் திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கண்ணன் கடலரசனைக் காண புறப்பட்டான். கடல் அரசனிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கண்ணன் கேட்ட போது பஞ்சஜனன் என்ற ஓர் அசுரன் கடலுக்குள் இருக்கிறான். அவன்தான் அந்தச் சிறுவனை விழுங்கியிருப்பான் என்று கைகாட்டினான் கடலரசன். உடனே பஞ்சஜனனோடு யுத்தம் செய்து அவனை வீழ்த்தினான் கண்ணன். பஞ்சஜனனின் எலும்புகளால் உருவானதுதான் கண்ணன் கையில் ஏந்தியிருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு. அவனது வயிற்றுக்குள் கண்ணன் தேடினான். ஆனால் சாந்தீபனியின் மகன் அவன் வயிற்றில் இல்லை. அடுத்து வருணனிடம் சென்ற கண்ணன் சாந்தீபனியின் மகனைக் குறித்து வினவ அந்தச் சிறுவன் யமலோகத்தில் இருக்கிறான் என்றார் வருண பகவான். யமலோகத்துக்குச் சென்றான் கண்ணபிரான். தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துக் கண்ணன் சங்கநாதம் செய்தவுடன் யமன் கண்ணனின் திருவடிகளில் வந்து விழுந்தான். பரந்தாமா என்னைத் தேடி நீங்கள் வரவேண்டுமா? அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே என்றான். தன் குருவின் மகனைக் குறித்துக் கண்ணன் கேட்க இங்கு தான் இருக்கிறான் என்று சொன்ன யமன் அவனைக் கண்ணனிடம் ஒப்படைத்தான். அந்தச் சிறுவனைச் சாந்தீபனியிடம் அழைத்து வந்து குருதட்சணையாகச் சமர்ப்பித்தார் கண்ணன்.
இதை திருமங்கையாழ்வார் தன் திருவாய் மொழியில் பாடலாக பாடியுள்ளார்.
முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்த அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர் பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி நந்து வாரும் பைம் புனல் வாவி நறையூரே
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது சிங்கவரம் கிராமம். அங்கு பல்லவர் கால குடைவரைக் கோயிலாக அரங்கநாதர் கோயில் உள்ளது. அரங்கநாதருக்கு அருகாமையில் தனி சன்னதியில் அரங்கநாயகி தாயார் அமர்ந்து இருக்கிறார். இவர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஓர் அறை இருக்கிறது. தாயாருக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் ஆரத்தித் தட்டினை சிறிது அந்தப் பக்கம் காண்பிப்பார். சிறிய சாளரத்தின் வழியே தீப வெளிச்சத்தில் அங்கு வீற்றிருக்கும் அழகிய கொற்றவை காட்சித் தருவாள். கொற்றவைக்கு வழக்கமாக உள்ள 8 கரங்கள் ஆயுதங்கள் இங்கு இல்லை. நான்கு கரங்கள் மட்டுமே உள்ளது. பின்னிரு கரங்கள் சக்கரம் சங்கினை ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்கள் இடுப்பின் மீதும் தொடையின் மீதும் வைத்த நிலையில் சற்று சாய்ந்து ஒய்யாரமாக நிற்கிறாள். வழக்கமாகக் கொற்றவையின் இரண்டு கால்களும் எருமைத் தலைமீது வைத்த நிலையில் காணப்படும். ஆனால் இங்கு வலது காலை மட்டும் மகிஷனின் தலைமீதும் இடது காலை தரையிலும் ஊன்றி நிற்கின்றாள். இரண்டு பக்கமும் இரண்டு அடியவர்கள் உள்ளார்கள். வலப்பக்கத்தில் இருப்பவர் நீண்ட தலைமுடி மீசையுடன் வீரனுக்கே உரித்தான பாணியில் இருக்கிறார். தனது வலது கையில் உள்ள கத்தியால் இடது கால் தொடையின் சதையை அரிந்துகொள்வது போல் உள்ளது. இடது பக்கத்தில் இருப்பவர் தரையில் முழங்கால் மண்டியிட்டு பூஜை செய்யும் நிலையில் அமர்ந்து இருக்கிறார். தலை மழித்து காணப்படுகிறது. மீசையும் இல்லை.
அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கு பொருளானது தற்போது வசதியின் அடிப்படையில் பார்க்கப்படுகிறது. பொருள் செல்வம் இல்லாதவன் மற்றும் திறமை அற்றவன் ஆகியோர் அதிஷ்டம் இல்லாதவனாக பார்க்கப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது.
உண்மை பொருள்:
அதிர்ஷ்டம் என்பற்கு பார்க்கக் கூடிய அல்லது பார்ப்பதைக் குறிக்கிறது. யாராலும் பார்க்க முடியாததை பார்ப்பவனே அதிர்ஷ்டசாலி ஆகின்றான். திருஷ்டி என்ற வார்த்தை உண்டு. பார்ப்பதை குறிப்பதால் தான் திருஷ்டி பட்டுவிடப் போகிறது என்கிறார்கள். பார்த்த விஷயங்களையே பார்த்துப் பார்த்து அது நம் நினைவுகளில் சுவடுகளாக பதிவாகிவிடும். இந்த பதிவு அழியும் வரை அது அழியாத திருஷ்டியாக அப்படியே இருக்கும். கண்கள் பார்த்ததை மட்டுமே நம்புவதால் தன்னிடம் இல்லாத பொருள் இன்னொருவரிடம் இருப்பதை பார்க்கும் போது அது தன்னிடம் இல்லையே என்ற ஏக்கமும் வைத்திருப்பவர் மீது பொறாமையும் ஏற்படுகிறது. ஆகவே இதன் பொருள் திருஷ்டி ஆகும். இதன் பொருள் அதிஷ்டம் கிடையாது.
அதிர்ஷ்டம் என்றால் இதுவரை பார்க்காத பார்வைக்கு புலனாகாத விஷயம் என்று பொருள்படும். அப்படியொன்று ஒருவனுடைய வாழ்வில் கண்களுக்கு புலப்பட்டால் அனுபவமாக உணரப்படுமானால் கேட்கப்படுமானால் அவன் அதிர்ஷ்டமுடையவன் ஆகின்றன். இந்த அதிஷ்டம் ஒருவனுக்கு வாய்க்க வேண்டுமானால் ஞான குருவின் வழிகாட்டுதலின் மூலமாகவே கிடைக்கும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஞான குருவைப் பெற்றவன் மட்டுமே அதிர்ஷ்டசாலி ஆவான்.
அனாதை
அனாதை என்ற வார்த்தைக்கு தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் இல்லாதவர்கள் ஆகியோர்களை உலக ரீதியாக அனாதை என்ற சொல்லைப் பயன்படுத்ததி பார்க்கப்படுகிறது.
உண்மைப் பொருள்:
குருவை அடையாத ஒருவனை அனாதை ஆவான். அனாதை என்பதற்கு சமஸ்கிருத மொழியில் குருவை அடையாதவன் என்று பொருள். குரு சீடனுக்கு வழிகாட்டி அறிவை வழங்குவதோடு மட்டும் அல்லாமல் தீட்சை வழங்கி ஆத்ம ஞானத்தை ஊட்டி முக்தியடைய வழிகாட்டுபவராகவும் இறைவனை உணர வைப்பவராகவும் இருக்கிறார். எத்தனை உறவு முறைகள் சொந்த பந்தங்கள் இருந்தாலும் குருவை அடையாதவனே அனாதை ஆவான். ஏனெனில் எந்தனை சொந்த பந்தங்கள் இருந்தாலும் ஒரு நாள் அனைத்து சொந்த பந்தங்களும் பிரிந்து அழிந்து போகும். சொந்த பந்தங்கள் நிலையற்றது ஆகும். ஆனால் ஞான குருவை பெற்றவன் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இறைவனை சென்று அடையும் வரை நிலையாக இந்த குரு சீடன் உறவு இருந்து கொண்டே இருக்கும். குருவானவர் சீடனுக்கு வழிகாட்டிக் கொண்டே இருப்பார்.