ரெணபலி முருகர்

இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் செல்லும் வழியில் பெருவயல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவ சுப்ரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோவில் உள்ளது. மூலவர் சிவ சுப்பிரமணியசுவாமி இவர் ரெணபலி முருகர் என்றும் அழைக்கப்படுகிறார். உற்சவர் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் இருக்கிறார். தலவிருட்சம் மகிழம் மரம். தீர்த்தம் சரவணப் பொய்கை. இக்கோயிலின் சிறப்பு முருகரின் வேல் ஆகும். இந்த வேல் பற்றி திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன் என்று சொல்லி தன் சொற்பொழிவுகளில் எல்லாம் இந்த வேலின் சிறப்பையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த அருள் வாசகம் கோயிலில் அவர் புகைப்படத்தோடு உள்ளது. இரணபலி முருகன் கோயிலானது கட்டயத்தேவர் என்ற குமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் (கிபி 1728-1735) முதலமைச்சரான வைரவன் சேர்வை என்பவரால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலுக்கு கிபி 1736 இல் குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி பெருவயல் கலையனூர் என்ற சிற்றூரை கொடையாக அளித்துள்ளார்.

ரெணபலி முருகர் கோயில் ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கி கிழக்கு நோக்கி உள்ளது. கோயிலின் நுழைவு வாயிலில் இரண்டு குதிரை சிலைகள் உள்ளது. ஒரு குதிரையில் பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்களும் இன்னொரு குதிரையில் பத்ரகாளி அம்மன் திருவுருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது. காலசந்தி மற்றும் சாயரட்சை பூஜையின் போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்கு செய்யப்படுகிறது. இராஜ கோபுரத்தைக் கடந்தால் ஜெயம் கொண்ட விநாயகள் உள்ளார். அவரைத் தாண்டினால் பலிபீடம், கொடிமரம், மயில் வாகனம், அர்த்த மண்டபம் தொடர்ந்து கருவறை உள்ளது. கருவறையில் வள்ளை தெய்வாணையுடன் ரெணபலி முருகர் உள்ளார். கோயில் பிரகாரத்தில் இராமநாதசுவாமி பர்வதவர்தினி சண்முக சக்கரம் நாகர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். கோயிலுக்கு வடக்கே தளவா வயிரவர் சேர்வைக்காரரின் சமாதிக் கோயில் உள்ளது. அங்கு சுப்பிரமணிய யந்திரமும் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது. உற்சவர்களாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேத சண்முகர் அருள்கிறார்கள். இவர்களையும் முருகன் உருவம் பொறித்த அதிசய வேலையும் பிரம்மோற்சவ நாட்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறும் நாள் மட்டுமே பக்தர்களால் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் பாதுகாப்பாக வேறு இடத்தில் இருக்கும் சத்ரு சம்ஹார வேலை சிறப்பு அனுமதியின் பேரில் கோயிலிற்கு கொண்டு வந்து அதற்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்வதும் உண்டு.

இராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் சேதுபதி ஆண்டு வந்த சமயம் அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியர் சாத்தப்பன் என்கிற காத்த  வீரதளவா வயிரவன் சேர்வை. முருக பக்தரான அவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு நாள் அவர் கனவில் முருகன் தோன்றி என்னை  வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிபட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணா முனை என்ற இடத்தில் மேலே  கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார். இதேபோன்ற கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால் இருவரும் மறுநாள் சந்தித்து கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள். பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் இரணத்துடன் (காயத்துடன்) திரும்பினார்கள். இறுதியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலைகளையும் வேலையும் எடுத்து வந்தார். செய்தியை அறிந்த மன்னர் தன் அரண்மனையில் இராமலிங்க விலாசம் என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக் கரையில் முருகனுக்கு கோயில் அமைக்க நிலங்களை கொடுத்தார். அதன்பின்னர் கோயிலிற்குப் பணிகள் விரைவாக நடைபெற்று கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டின் அடிப்படையில் பெருவயல் கோயிலிலும் பூஜைகளும் விழாக்களும்  நடைபெறுகின்றன. வயிரவன் சேர்வை இராமேஸ்வரம் இராமநாதசுவாமி மீதும் அதிக பக்தி வைத்திருந்ததால் இராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளும் பெருவயல்  தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் இரணம் (காயம்) ஏற்பட்டதால் மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி ரெணபலி முருகன் என்றே  அழைக்கப்படுகிறார்.

கோயிலில் மாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவமும், கந்த சஷ்டி விழாவும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. பதினாரு நாள் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவத்தில் 7 ஆம் நாள் திருச்செந்தூர் முருகரைப் போல் சிவசுப்ரமணிய சுவாமி சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மூன்று காலங்களில் எழுந்தருள்வார். இக்காட்சி இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களைக் குறிக்கும். 10 ஆம் நாள் தேரோட்டமும் 11 ஆம் நாள் கோயில் தீர்த்தமான சரவண பொய்கையில் தீர்த்தவாரியும் நடைபெறும். ஏழுநாள் உற்சவமாகக் கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழாவில் 6 ஆம் நாள் பிரசித்தி பெற்ற சூரசம்ஹாரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். அப்போது கடலில் கண்டெடுக்கப்பட்ட அரிய சத்ரு சம்ஹார வேலைக் கொண்டு சூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் அற்புதக் காட்சியை காணலாம். திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இவரை வழிபட்டால் கிடைக்கும் என்பது கோயில் வரலாறு. இக்கோயிலில் இராமநாதபுரம் மன்னர் குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டும் செப்பேடுகளும் உள்ளன. அவை இக்கிராமத்தின் பெயர் பெருவயல் கலையனூர் என்றும் மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி என்ற ரெணபலி முருகய்யா எனவும் குறிப்பிடுகிறது.