கேள்வி: நல்ல காரியங்கள் துவங்கும் போது சுபமுகூர்த்தங்களில் துவங்க வேண்டுமா?
பொதுவாக சுபகாரியங்கள் சுபநேரங்களில் நடத்துவது வழக்கமாகி விட்டது. இதனைப் பின் தொடர்வது தவறாகாது. அக்காலங்களில் பொதுவாக குளிகனின் காலங்களில் (குளிகன் சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம்) சுபகாரியங்கள் தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும் இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. நாகனின் (இராகு) காலங்களில் தீயகாரியங்களும் சுபமற்ற காரியங்களும் செய்து கொண்டு இருந்தனர். இக்காலத்தில் அது மாறி நற்காலங்களுக்கு என சில முகூர்த்தங்களும் தீயவைகளுக்கு என சிலதும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எவ்விதம் இருந்த போதிலும் உறுதியாக தம் கர்மங்களை தொடர்ந்து ஓயாது செய்து கொண்டிருப்பவனுக்கு அனைத்தும் நலம் தரும் காலமாகும். இவர்களுக்கு எப்பொழுதும் நல்ல காலமே. ஏனெனில் அவர்கள் உழைப்பினை தெய்வமாகக் கண்டு கொண்டனர். ஓர் சுபகாரியம் நடத்தும் முன் சுபமுகூர்த்தமோ சுபகாலமோ முக்கியத்துவம் காண்பதில்லை. செய்கின்றவரின் மன நிலையைப் பார்த்தல் வேண்டும். எக்காரியத்திற்கு சுபகாரியம் நடைபெறுகிறது. அது சுயநலம் உள்ள காரியங்களா பொதுநலம் உள்ள காரியங்களா என்கின்ற மன நிலையைப் பார்த்துக் கொண்டால் அனைத்தும் நலமே. இருப்பினும் சம்பிரதாயம் என்கின்ற ஒன்றுக்குக் கட்டுப்பட்டு சுபகாரியங்கள் சுபமுகூர்த்தங்களில் செய்வது தவறாகாது.
சுபமுகூர்த்தங்களில் செய்யும் காரியங்கள் எப்பொழுதும் நலம் தருமா?
அவ்விதம் இருக்க வேண்டும் என்பதில்லை. இங்கு முன் கூறியபடி செல்பவனின் மன நிலையே முக்கியத்துவம் காண்கின்றது. நல்ல எண்ணங்களுடன் செய்த அனைத்தும் நல்ல முடிவுகளைத் தரும் என்பது இறைவன் வகுத்த நீதியாகும். இவ்விதம் இருக்க சுபகாரியங்களுக்குச் சமயங்களில் முகூர்த்தம் பார்த்தல் வேண்டும் என்பது தவறாகும். சம்பிரதாயம் என்பன ஒட்டி நல்காரியங்கள் நல்காலங்களில் செய்வது நன்று என்பதை மட்டும் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் உழைப்பை நாடுகின்றவனுக்கு இத்தகைய நேரங்கள் இல்லை. இறைவனை நம்புகிறவனுக்கு எக்காலமும் நலம் தரும் காலமாகும்.