பதினேட்டாம் நாள் யுத்தம் துவங்கியது. சிறுசிறு கூட்டங்களை வைத்தே பொருத்தமான வியூகத்தை சல்லியன் அமைத்தான். பாண்டவர்களின் நிலையும் இவ்வாறே இருந்தது. அவர்களும் சிறு கூட்டத்தை வைத்து வியூகம் அமைத்துக்கொண்டனர். இரு படை வீரர்களும் போர்க்களம் வந்தனர். யுத்தம் துவங்கியது. கர்ணன் போர்க்களத்தில் இறந்ததால் தானே போர்க்களம் சென்று கிருஷ்ணரையும் அர்ஜூனனையும் கொல்வதாக கர்ணனினிடம் கூறிய உறுதிமொழியை மனதில் எண்ணிக்கொண்டான் சல்லியன். சல்லியனை எதிர்த்து போராட யுதிஷ்டிரர் முன் வந்தார். யுதிஷ்டிரருக்கும் சல்லியனுக்கும் விற்போர் நீண்ட நேரம் நடந்தது. சல்லியன் எய்த அம்புகள் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. யுதிஷ்டிரருக்கு உதவி புரிய பீமன் வந்தான். சல்லியனின் ரதத்தை உடைத்து தள்ளினான். வேறு ரதத்தில் வந்த சல்லியன் யுதிஷ்டிரரின் இருபக்கமும் இருந்த படைகளை அழித்து தள்ளினான். அவனை வெற்றி அடைவான் வெற்றி தங்களுக்கு உரியது என்று கௌரவ கூட்டத்தினர் எதிர்பார்த்தனர். அமைதியாக போர் புரிந்து வந்த யுதிஷ்டிரர் திடீரென்று எமதர்மனுக்கு நிகரான போர் வீரனாக தென்பட்டான்.
யுதிஷ்டிரர் தன் சிந்தையை கிருஷ்ணர் மீது செலுத்தினார். கிருஷ்ணர் புன்முறுவலுடன் பார்க்க யுதிஷ்டிரர் தன் சக்தி ஆயுதத்தை எடுத்து சல்லியனின் மீது வீசினார். சக்தி ஆயுதம் சல்லியனின் மார்பில் சரியாக சென்று தாக்கி சல்லியனை கொன்றது. கௌரவர்களின் கடைசி தளபதியும் வீழ்ந்தான்.
கௌரவ படைகளில் இப்போது குழப்பம் உண்டாகியது. நாலாபக்கமும் பீதியுடனும் அவர்கள் கலைந்து ஓடினர். இந்த நெருக்கடியில் துரியோதனன் உட்புகுந்து அவர்களுக்கிடையில் தைரியத்தையும் ஊட்டினான். பாண்டவர்களை எதிர்த்து அவன் வீராவேசத்துடன் போர்புரிந்தான். மீதம் இருந்த அவனுடைய சகோதரர்களும் தங்களுடைய முழு திறமையை கையாண்டனர். ஆயினும் அவர்கள் அனைவரையும் பீமன் அழித்தான். தான் செய்திருந்த சபதத்தை நிறைவேற்ற இந்த சந்தர்ப்பத்தை பீமன் நன்கு பயன்படுத்தி கொண்டு அவர்கள் அனைவரையும் அழித்தான். துரியோதனன் ஒருவன் நீங்கலாக ஏனைய 99 பேரும் மடிந்து போயினர்.
குருக்ஷேத்திர போருக்கு காரணமான சகுனி போருக்கு வந்தான். அவனைச் சகாதேவன் எதிர்த்து போரிட்டான். சகாதேவனை எதிர்த்து நீண்ட நேரம் அவனால் போரிட முடியவில்லை. அப்போது சகாதேவன் உன்னால் அல்லவா இந்தப் பேரழிவு. குல நாசம் புரிந்த கொடியவனே இது சூதாடும் களம் அல்ல போர்க்களம். இங்கு உன் வஞ்சம் பலிக்காது என்றபடியே சகுனியின் பகடை விளையாண்ட கையை முதலில் வெட்டினான். பின்பு சகுனியின் தலையை ஒரு அம்பினால் வீழ்த்தினான். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் சகாதேவன் செய்த சபதமும் நிறைவேறியது. பாண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். துரியோதனன் தனது படைகள் தளபதிகள் உடன் பிறந்தோர் என பலரை இழந்தான். போர்க்களத்தை உற்று நோக்கினான். தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான்.