பாண்டவர்கள் தங்களது பெரியம்மாவாகிய காந்தாரியை சமரசம் செய்து கொள்ள கடமைப்பட்டிருந்தார்கள். அது மிக கடினமான காரியம் ஏனென்றால் இந்த யுத்தத்தில் அவனுடைய நூறு புதல்வர்களையும் பாண்டவர்களால் இழந்து விட்டாள். பிரத்யேகமாக பீமன் மீது அவள் அதிகமாக கோபம் கொண்டிருந்தாள். பீமன் ஒருவனே அனைவரையும் அழித்தவன். அதை முன்னிட்டு பீமன் மீது காந்தாரி சாபமிடுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருந்தது. காந்தாரியின் சாபத்தை தடுத்தல் பொருட்டு வியாசர் முதலில் காந்தாரியிடம் சென்று அவளை சமாதானப்படுத்தினார். நிகழ்ந்த யுத்ததிற்கு காரணம் துரியோதனனும் அவனது சகோதரர்களும் என்பதை அவள் ஒத்துக்கொண்டாள். யுத்தத்தை கிளம்பியவர்கள் அந்த யுத்தத்தில் மடிந்து போனது முறையே என்று வியாசர் ஆறுதல் கூறி அங்கிருந்து கிளம்பினார்.
பீமன் கௌரவ சகோதரர்களை கொல்ல கையாண்ட முறையை ஆமோதிக்க அவளால் இயலவில்லை. துச்சாதனனுடைய ரத்தத்தை குடித்தான். கதையுத்தத்தில் முறையற்ற பாங்கில் துரியோதனனின் தொடையில் அடித்து அவனை வீழ்த்தினான். எனவே பீமன் மீது கோபம் மிகவும் கொண்டிருந்தாள். பெரியம்மாவாகிய காந்தாரியின் காலில் விழுந்து பீமன் வணங்கினான். தாயே தாங்கள் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் குற்றமாகவே நான் ஏற்றுக் கொள்கின்றேன். நான் செய்துள்ள குற்றங்களுக்கு என்னை மன்னிப்பார்களாக. மற்றும் ஒரு விஷயத்தை நான் உங்களிடம் கூறுகின்றேன். 13 வருடங்களுக்கு முன்பு இச்செயலை சபை நடுவே நான் செய்திருந்தால் அப்போது தாங்கள் ஆமோதித்து இருப்பீர்கள். அப்போது என் தமையன் யுதிஷ்டிரன் செய்த தடையால் நான் இத்தனை காலம் காத்திருந்தேன். அன்று அவமானப்படுத்தப்பட்ட திரௌபதிக்கு ஆறுதல் தரும் பொருட்டு நான் செய்திருந்த சபதத்தின்படி துச்சாதனனின் ரத்தத்தை குடித்துவிட்டு யாருக்கும் தெரியாத வண்ணம் துப்பிவிட்டேன்.
திரௌபதிக்கு துரியோதனன் தன் தொடையை காட்டி அவமானப்படுத்தினான். அப்போழுதே துரியோதனனின் தொடையை துண்டிப்பேன் என்று நான் தீர்மானம் பண்ணினேன். அத்தீர்மானத்தையும் அன்றே துரியோதனனிடம் அனைவர் முன்னிலையிலும் தெரிவித்துவிட்டேன். கதையுத்த போராட்டத்தில் துரியோதனனை யாரும் நேர்மையான முறையில் தோற்கடிக்க இயலாது. கதையுத்தத்தில் அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. நான் கொண்டிருந்த தீர்மானத்தை நிறைவேற்றுதல் பொருட்டு முறை தவறி துரியோதனனின் தொடையில் அடித்தேன். அந்த குற்றத்திற்காக தாங்கள் என்னை மன்னித்தருள்வீர்களாக என்று பீமன் கூறினான். பீமனின் பேச்சை கேட்டதும் காந்தாரியின் கோபம் பெரிதும் அடங்கியது. பீமனுடைய அறிவு திறமையை கிருஷ்ணர் பாராட்டினார். பாண்டவ சகோதரர்கள் தங்கள் பெரியம்மா காந்தாரியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.