உறுதியாகச் சரி இல்லை என்கின்ற போதிலும் காரண சினம் என்று ஒன்று உண்டு. இந்தக் காரண சினம் தவறாகாது. மேலும் காரண சினத்திற்குக் காரணமாக இருப்பவர் செய்வது மாபெரும் தவறாகும். காரண சினம் என்பது ஓர் காரியத்திற்காகச் சினம் கொள்வது என்கிற போதிலும் இது சினம் போல் ஓர் தோற்றமாகும். காரணத்திற்காகச் சினம் கொள்வது போல் உள்ளது என்றும் கூறுவார்கள். இருப்பினும் அச்சினத்திற்குக் காரணமானவர் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் செல்லும் வழி கடினமாகும்.
ஆன்மீகப் பாதையில் செல்வோர் தெய்வீகக் காரியங்களில் பெருமளவில் நாணப்படுவது (வெட்கப்படுவது) சரியாகாது. தெய்வ நாமங்களைக் கூறுவதற்கோ பாடுவதற்கோ தயக்கம் காண்பது நலம் தருவது அல்ல. ஏனெனில் தெய்வ நாமங்களைச் சொல்ல சொல்ல நாம் கேட்பது மட்டுமல்ல மற்ற ஜீவராசிகளும் கேட்டுக் கொண்டு அவர்களுக்கும் முக்திக்கு வழி பிறக்கிறது. அன்பர்கள் பலரும் முணுமுணுத்தவாரே மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஜெபித்துக் கொண்டு இருக்கின்றனர். இவ்விதம் செய்வதை விட மனசுக்குள் (மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஜெபிப்பது) செய்வதே நலம் தரும். ஒன்று உரக்க (சத்தமாக) இல்லையேல் மௌனமாகச் செய்ய வேண்டும் என்பதே விதியாகும். இதற்குக் காரணம் உண்டு. ஆன்மிகத்தில் எவ்வாறு ரூபம் விட்டு அரூபம் செல்கின்றோமோ அவ்விதமே ஓசை (சத்தம்) விட்டு நிசப்தத்திற்கும் (மௌனம்) செல்லுதல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. இதற்கு இரண்டு பொருள்கள் (அர்த்தங்கள்) உண்டு. நமக்குள் வெறும் நிசப்தம் இருக்கும் போது வெளியில் எவ்விதம் ஓசை இருந்த போதிலும் காதில் விழாத நிலை ஏற்படும். இதுவே தியானத்தின் மிகையானது (எல்லை) ஆகும். எந்தக் காலத்திலும் எந்த ஸ்தலத்திலும் எந்த நிலையிலும் தியானம் செய்திடவோ ஜெபிக்கவோ கூச்சம் தேவையற்றது ஆகும். இறைவனின் நாமங்கள் என்பது இக்காலத் தந்தியைப் போல நமக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்கிறது. எவ்வளவு தியானம் செய்தாலும் சிறிது நேரமாவது தெய்வ நாமங்களை மனதிலாவது கூற வேண்டும்.
கேள்வி: சுத்தம் அசுத்தம் என்பது ஆன்மீகத்தில் உண்டா? சுத்தம் தேவையா? ஏனெனில் பல சித்தர்கள் அழுக்கிலும் அமர்ந்து இருக்கின்றனரே அவர் நிலையில் சுத்தம் தேவையில்லையா
முதலில் ஓர் பழஞ்சொல் ஒன்று உண்டு முதன்மையில் தூய்மை பின்பே இறையருள் என்போம். சித்தர்கள் அமர்ந்தாற்போல் பல வருடங்கள் நீ அமர்ந்திருந்தால் உடல் தூய்மை பார்க்க வேண்டாம். ஏனெனில் அசுத்தம் என்பது இல்லாமல் போகும். இருப்பினும் பல தலங்களில் (இடங்கள்) அலைந்து வருபவர்களுக்கு உடல் சுத்தம் உறுதியாக வேண்டும். இதற்கும் மேலாக இறைவனுக்குப் படைக்கும் காலத்தில் கை சுத்தம் வஸ்துக்கள் சுத்தம் (நைவேத்யம் வைக்கும் பொருள்கள்) என்பதெல்லாம் வேண்டும். சித்தர்கள் நிலை வேறு. ஏனெனில் அவர்கள் தன்னை மறந்த நிலையில் உள்ளார்கள். உடலுக்கு என்ன நேர்ந்திட்ட போதிலும் சிறிதும் அசைய மாட்டார்கள். உன்னால் அவ்வாறு இருக்க முடியாது அல்லவா? உடலுக்குச் சிறிது ஏதேனும் வந்தவுடன் வைத்தியரை நோக்கிச் செல்வீர்கள். உடலை மறந்தோருக்கு அசுத்தம் இல்லை என்கின்ற விதி உண்டு. மற்றவர்கள் அனைவரும் குறிப்பாக ஆன்மீகப் பாதையில் செல்கின்றவர்களுக்கு உறுதியாக சுத்தம் அசுத்தம் என்பதை அதிகமாகவே பார்த்தல் வேண்டும். குறிப்பாக வாக்கு சுத்தம் தன் வாக்குகளைப் (தான் கூறும் வார்த்தைகளைப்) பொய்யாக்குவதைத் தவிர்த்தல் வேண்டும். சிறு சிறு சம்பவங்களில் இருந்து தப்பிக்கச் சிறு சிறு பொய்கள் கூறுவதும் கூடாது. அவ்வாறு கூறினால் வாக்கு சுத்தமற்றதாகும். மேலும் இயன்ற அளவிற்குச் சுத்தமான பண்டங்களை உண்ணுதல் வேண்டும். ஏனெனில் ஆன்மீகப் பாதையில் செல்லச் செல்ல ஜீரண உறுப்புகளின் சக்தி குறையும். நலம் தரும் உணவை மட்டுமே ஜீரண உறுப்புகள் ஏற்றுக்கொள்ளும் என்கின்ற விதியும் உண்டு. இதனை மனதில் வைத்துச் சுத்தமான எரிவு தன்மை (அதிக அளவு எரிக்க/ஜீரணிக்க வேண்டியில்லாத) அளிக்கா உணவுகளை உண்ணக் கற்றுக் கொள்ள வேண்டும். நாக்கினை அடக்கா விட்டால் ஆன்மீக வளர்ச்சி மிகவும் குறைவாகவே காணப்படும். நாக்கு என்பது சொல் ருசி இரண்டையும் குறிக்கும். இதனை மனதில் வைக்க வேண்டும். மற்றவர்கள் சுத்தமாக இருக்கின்றார்களா இல்லையா என சிந்திக்க வேண்டாம். மற்றவர்களுக்கு வேறுபல தகுதிகள் உள்ளன அதை நீ கண்டாயா? இல்லையே. இதனால் மற்றவர்களின் நிலை எண்ணாமல் நம் நிலை என்ன நாம் எப்படி முன்னேற வேண்டும் என்று மனதில் வைத்துச் சான்றோர்கள் (ஞானம் பெற்ற பெரியவர்கள்) மகான்கள் கூறியதை மனதில் வைத்து முன்னேறுவாயாக.
கேள்வி: பிராப்த கர்மம் என்பதற்கு தீர்வு கிடையாது என்று கூறுகின்றனரே ஒரு இடத்தில் அத்தகைய கர்ம நிலைகளை அனுபவிக்கத் தயங்கி மற்றொரு இடத்திற்கு ஏன் கடல் கடந்து சென்ற போதிலும் அங்கும் அதன் பாக்கியை அனுபவித்துத் தீரவேண்டும் என்ற விதி உண்டா?
உறுதியாக அவ்விதம் உண்டு. உதாரணமாக ஒரு அலுவலகத்தில் பெரும் கடினங்கள் காணும் நேரத்தில் இந்தக் கர்ம நிலையை மாற்றிடும் வகையில் மற்றொரு பணிக்குப் போகும் காலத்தில் அங்கும் அத்தகைய கொடுமைகள் நேரிடும் என்பது விதியாகும். ஏனெனில் அனுபவிக்க வேண்டியதை முழுமையாக அனுபவித்துத் தீர்த்தல் வேண்டும். இதற்குப் பிராயச் சித்தங்கள் (பரிகாரம்) இல்லை என்றும் அறிதல் வேண்டும். கடினமான தவம் ஜெபம் என்கின்ற வழிகளால் அனைத்தையும் தாங்கும் மனப்பக்குவம் ஏற்படுகின்றது என்பதுதான் உண்மை. துறவிகளும் முனிவர்களும் இத்தகைய மனவலிமை உடையவர்கள் ஆவர். இதனால் எதையும் தாங்கிக்கொள்ளும் தன்மைகளையும் வளர்த்துள்ளனர். கலியுகம்தனில் மனிதர்கள் அவ்விதம் இல்லை என்பதை நன்கு உணர்தல் வேண்டும். கலியுகத்தில் இருப்போர் அக்கால முனிவர் ரிஷிகள் போன்ற மனவலிமை உடல் வலிமை அடைவது மிகவும் கடினம். சதா தெய்வ நாமம் உச்சரித்துக் கொண்டேயிருக்கும் காலத்தில் மனவலிமை ஓரளவிற்கு ஏற்பட்டு எதையும் தாங்கும் தன்மையும் வளர்கின்றது. ஓர் இடம் விட்டு மற்றோர் இடம் ஓடிவிட்டால் நாம் தப்பித்துவிட்டோம் என்ற எண்ணம் தவறாகும். ஏனெனில் பிராப்த கர்மம் என்பது உன்னுடையது அது உன்னைத் தொடர்ந்தே வரும் என்று நன்கு உணர்தல் வேண்டும். சக்தியைக் கொடு வலிமையைக் கொடு எதையும் தாங்கும் மனதைக் கொடு என எப்போதும் இறைவனை வேண்டி இறை நாமத்தை விடாது உச்சரித்து வந்தால் அனைத்தும் சீராகும்.
கேள்வி: இறையருள் பெரிதாக இருந்தால் மட்டுமே லெளகீக (உலகம் சார்ந்த) எண்ணங்கள் நீங்கும் என்றிருக்க, லெளகீக எண்ணங்கள் நீங்க வேண்டுமென்றால் இறையருள் வேண்டும் என்றும் கூற இது முரண்பாடாக உள்ளதே ஏன்?
எங்கு சுற்றிய போதிலும் கடைசியில் சரணாகதி என்னும் நிலையை நாம் நாட வேண்டி உள்ளது. உறுதியாக இறையருள் வேண்டுமென்றால் படிப்படியாக லெளகீகம்தனிலிருந்து விலகுதல் வேண்டும் என்பதுதான் விதி. ஏனெனில் தூய்மையான ஓர் பொருளுடன் சேர வேண்டும் என எண்ணம் கொண்டால் அத்தூய்மையான நிலையை நாமும் அடைதல் வேண்டும் என்பது விதியாகும். படிப்படியாக இந்த லெளகீக நிலையை விட வேண்டுமானால் இறையருள் வேண்டும் என்பது உறுதி. இதற்காக நாம் நித்யம் (எப்பொழுதும்) இறை சக்தியை நோக்கி வேண்டுதல் வேண்டும். அவன் பாதம் பணிய அவனருள் வேண்டும் என்பதை உணர்ந்தும் நாம் சிக்கிக் கொண்டோமே என சிறிது வருத்தம் கண்டு வேண்டிட அவன் கருணையில் படிப்படியாக தூய்மை அடைவோம். இதில் சிறு குழப்பமும் இல்லை. ஏனெனில் பல மகான்களும் ஞானிகளும் குடும்பத்திலிருந்து வந்தவர்களே ஆவார்கள். மனதில் உறுதி வேண்டும் உறுதியற்ற மனநிலையில் இறைவனை நாடினால் இறைவன் உறுதியாகத் தென்பட மாட்டான். முக்கியமாக வைராக்யம் பெரிதாக இருத்தல் வேண்டும். இறைவனின்றி வேறு யாரும் எனக்கு வேண்டாம் என்கின்ற பெரும் மனநிலை வர வேண்டும். இது ஒரு நாளில் வரக்கூடியது அல்ல படிப்படியாக வரக்கூடியது. மனதில் உறுதியுடன் நாடுங்கள் சொர்க்கம் அடையாவிட்டாலும் இறைவனை உறுதியாக அடையலாம்.
கேள்வி: பயம் எங்கிருந்து வருகின்றது? அதனை எவ்விதம் எதிர்ப்பது?
பொதுவாக நமக்குத் தெரியாத காரியங்களைக் கண்டு பயம் காண்கின்றோம் என்பதே உண்மை. இதற்கு உதாரணமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டக் கற்றுக் கொள்ளும் காலங்களில் செல்லும் வழியில் ஓர் கல்லைக் கண்டாலும் பயம் கொண்டு இறங்கி விடுகின்றோம் அல்லது விழுந்து விடுகின்றோம் அடிபடுகின்றோம். ஆனால் பழகிய பின்பு இவ்வளவு தானா என்கிற உணர்வு வந்துவிடப் பயம் போகின்றது. இவ்விதமே குழந்தைகள் நடக்க முயற்சிக்கும் காலங்களில் முதலில் பல முறைகள் விழுந்து எழுந்து பின்பு ஓட ஆரம்பிக்கின்றது. அப்படி ஓட ஆரம்பித்தபின் அது நடக்க முயற்சித்த காலத்தை மறந்து விடுகின்றது தான் விழுந்ததை எல்லாம் மறந்து விடுகின்றது அல்லவா? இவ்விதம் அறிந்த பின்பு பயம் விலகும் என்பதே உண்மையாகின்றது. அதனால் எதைக்கண்டு பயப்படுகின்றோமோ அக்காரியத்தை மீண்டும் மீண்டும் செய்தால் பயம் நீங்கும். சில நபர்கள் பயத்தால் ஓடி ஒளிகின்றனர். பயத்தால் பல காரியங்கள் செய்யாமல் இருக்கின்றனர். அவ்விதம் இருந்தால் நஷ்டப்படுவது நீங்களே என்பதை உணர வேண்டும். எது அச்சத்தைத் தருகின்றதோ அதனை மீண்டும் மீண்டும் செய்யுங்கள் பயத்தை வெல்லுங்கள். மேலும் எதிலும் நிதானம் வேண்டும். அதற்காக யாம் கூறிவிட்டோம் என்று நாகத்தைக் கையில் பிடிக்க முயற்சித்தல் கூடாது. சாதாரண நிலைகளில் பொதுவாக இளைஞர்களுக்கு நேரிடும் சில சம்பவங்கள், தேர்வுகள் (பரிட்சை) கணக்கு தொழிலுக்குச் செல்லும் போது நேர்முகத் தேர்ச்சிகள் இவையாவும் பயத்தைத் தரும். இதற்காக நாம் தொழிலுக்குச் செல்லவில்லை வீட்டிலேயே இருந்து விடுகின்றோம் என்கின்ற கருத்து தவறானதாகும். இவையாவும் நீக்கிக்கொண்டால் உங்கள் வாழ்வில் பயம் என்பது காணாமல் சென்று விடும். ஏனெனில் மற்ற ஒருவரால் நம்மிடமிருந்து பறிக்க இயன்றதில் உச்ச பட்சத்தில் இருப்பது நமது உயிர் மட்டுமே அந்த உயிரை இறைவனிடம் அர்ப்பணித்து விட்டால் பின்பு பயம் ஏது? இதை மனதில் வைத்து செயல்படுவீர்களாக.
பொதுவாக பிரார்த்திக்கும் காலத்தில் இறைவா எமக்கு இதைக் கொடு அதைக் கொடு அனைத்தும் வேண்டும் இது வேண்டாம் என்பதே பிரார்த்தனையாக இருக்கின்றது. இவ்விதம் இல்லாமல் இறைவா எமக்கு எது நலம் தருமோ அதையே நடத்தி வைப்பாய் என்பதே சிறப்பான பிரார்த்தனை ஆகும். இதைப் பலரும் மறந்துவிட்டு நித்யம் (எப்பொழுதும்) மேலும் சிறிது சிறப்பாக ஆண்டவா எமக்கு இதைச் செய் நான் உனக்கு அதைச் செய்கிறேன் என்று கூறுகின்றனர். இது மாபெரும் தவறாகும். ஏனெனில் இறை சக்திக்கு நாம் அளிப்பது எதுவும் தேவையற்றது. ஏன் என சிந்தித்தால் இவ்வுடலில் நம் ஆத்மாவை அடைத்து வைப்பதே அவன் அருள்தான் என்பதை உணர வேண்டும். இவ்வுடலிலிருந்து நமது ஆத்மாவானது பிரிந்து நல்ல நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் அவனருள் தேவைப்படுகின்றது. இந்நிலையில் ஆண்டவனிடம் எமக்கு எது நலம் தருவதோ அதனை அளிப்பாய் என்று மட்டும் வேண்டுதலே சிறந்ததாகும்.
கேள்வி: இறை சக்தி ஒன்று மட்டுமே இருக்கும் போது நான் ஏன் காலத்தை வீணாக்கி மனிதர்களை நாடி அவர்களிடமிருந்து ஆன்மிகம் கற்றுக்கொள்ள வேண்டும்?
தெய்வம் நேரடியாக வந்து யாதும் உபதேசிப்பதில்லை இதை நன்கு உணர்தல் வேண்டும். இறைவனிடம் நேரடியாக ஆன்மிகம் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் மகத்தான தியாகங்கள் மகத்தான சாதனைகள் (தியானம்) செய்தல் வேண்டும். கலியுகத்தில் தெய்வ சக்தியானது நாம் கேட்கும் வினாக்களுக்கு மனித ரூபம் இல்லையேல் வேறு ஏதேனும் வழியில் விளக்கங்களை உணர்த்துவார். உண்மையாக வழிபாட்டில் ஈடுபடும் மகான்கள் வழியிலும் விளக்கங்கள் கிடைக்கக்கூடும். இதற்கு ஒருவர் நமக்கு உகந்த ஓர் குருவை தேடிக்கொள்ளுதல் வேண்டும் என்பது விதியாகும். இத்தகைய நிலையில் நாம் சாதனைகளைத் தெய்வத்தை நோக்கிச் செய்திட்டால் பின்பு அத்தெய்வத்தின் அருளால் நமக்கு ஓர் நல்ல வழிகாட்டியும் (குரு) கிடைத்திடுவார்.
மேலான இடத்தை விட்டுக் கீழான இடத்தை நோக்கி ஓடும் மழை நீரானது யதார்த்த நிலையாகும். இதற்கு மாறாக கீழ் நிலையிலிருந்து மனம்தனை மேல் செலுத்துவது மட்டுமின்றி மேல் நிலையும் அடைதல் வேண்டும் என்பதே ஆன்மிக நெறி. இது யதார்த்த நிலைக்கு மாறுபட்டது என்கின்ற போதிலும் மனமது செம்மையானால் எந்தக் கடினமும் இல்லை. மேல் நோக்குவதே ஆன்மீகத்திற்கு நலம் தரும் வழி என்றும் மேல் என்பது இறைவனை மட்டுமல்ல நல்ல குணங்களையும் நல்ல செயல்களையும் நல்ல சிந்தனைகளையும் குறிப்பது ஆகும். எவர் ஒருவர் நல்ல செயல்களைச் செய்கின்றாரோ அதைப் பின்பற்றுதல் வேண்டும். நல்ல சிந்தனைகளை எவர் அளித்தாலும் உடனடியாக அதைப் பின்பற்ற முயற்சித்தல் வேண்டும். இதில் தவறினால் வாய்ப்பு ஒன்று இழந்ததாகக் கண்டு கொள்ளலாம். இவ்விதமே அனைத்தும் மேல் நோக்கிச் சிந்திக்க மேல் நோக்கித் தியானம் செய்ய சிறப்புகள் உண்டாகும் என்பதே எமது அறிவுரையாகும். எவ்விதம் தியானம் செய்வது எனக் கேட்டால் இதனைக் குருவிடம் நேர்முகமாகக் கற்றுக் கொள்வதே சிறந்தது. மூன்று நான்கு வகை தியானங்களில் நமக்கு எது சிறப்பாக அமைகின்றதோ அதனை ஏற்றுக் கொண்டு ஈடுபாட்டோடு செய்திட மேன்மைகள் தாமாக தொடரும்.
கேள்வி: கேடு நினைப்பவன் கெடுவான் என்கின்ற பழைய சொல்லிற்கு உள் அர்த்தம் என்ன?
பொதுவாக மற்றவர்களை கேடு நினைக்கின்றவன் கெடுவான் என்பது தான் பொருளாகின்றது. இருப்பினும் இதனை ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். கேடு நினைப்பவன் என்பது மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவன் மட்டுமல்ல. பொதுவாகவே தீயகாரியங்கள் சதா நினைக்கின்றவனும் கேடு நினைக்கின்றவன் ஆவான். இவ்விதம் நினைக்கின்றவன் தகாத காரியங்களை பற்றி சதா நினைக்கின்றவனும் கெடுவான். கெடுவான் என்பதற்கு வேறு அர்த்தம் அழிந்து விடுவான் என்பதாகும். கெட்டு போவான் என்பது மட்டுமில்லாது கெடும் இது பொதுவாக தீபம் அனைவதற்கும் ஓர் வாக்காகும் சதா தீய காரியங்கள் நினைத்து இருக்கின்றவன் சித்த பிரம்மம் கண்டு தீபம் அனைவது போல் அனைந்து விடுவான் தன்னை மாய்த்துக் கொள்வான் என்பதும் பொருளாகும். எப்பொழுதும் தீய எண்ணங்கள் மனதில் வரும் பொழுதும் கெட்ட எண்ணங்கள் மனதில் வரும் பொழுதும் அதனை சீர் (சரி) செய்யும் வகையில் உயர்ந்த எண்ணங்கள் உடனடியாக வளர்த்தல் வேண்டும். தெய்வீக எண்ணங்கள் உடனடியாக வளர்த்தல் வேண்டும் இவ்விதம் செய்தால் தீயவை உடனே மறையும். இதனை கடைபிடிப்போர் சிலரே. ஏன் இவ்வாறு தீய எண்ணங்கள் வருகிறது என எண்ணுவோர் மட்டுமே தெய்வீக எண்ணங்களையும் நல்ல எண்ணங்களையும் உடனடியாக வளர்க்கின்றனர். இரண்டாவதாக இக்காலத்தில் பலரும் பல உபதேசங்கள் பெற்று நல்வார்த்தைகள் கேட்டு முழுமையாக கிரகித்துக் கொண்டு பாண்டித்யம் (இறைஅருள் இல்லாத அறிவு) பெறுகின்றனர். இவர்கள் வாழ்க்கையின் தத்துவங்களை அவை சொல்லும் விளக்கங்களை அமுல்படுத்துவதில்லை. இது சிறு வருத்தத்திற்கு உரியதாகும் ஏனெனில் அவ்வழிகளை கடைபிடிக்கும போது மனதில் பெரும் அமைதி கிடைக்கும். இதனை பலர் மறந்து விடுகின்றனர் துன்பம் வந்தால் அத்துன்பத்தில் மூழ்கி மேலும் மேலும் ஆழமாக பதிந்து விடுகின்றனர். துன்பம் வரும் பொழுது சிரிக்க முடியாது என்கின்ற போதிலும் அத்துன்பத்திலிருந்து மனதை எடுத்து ஏற்கனவே மனதில் நடந்த ஆனந்த காலத்திற்கு மனதை இழுத்துச் செல்ல வேண்டும். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் விஷயங்களாகும். இன்பம் பெரிதாக வந்தால் மனதில் தீர்மானித்துக் கொள்ளுங்கள் பின் துன்பமும் வருகின்றது என்று. இதில் எந்த வித மாற்றமும் இல்லை பெரும் துன்பம் வந்தால் இத்துன்பத்திற்கு பிறகு மகிழ்ச்சியான காலம் வரும் என உறுதியாக எடுத்துக் கொள்ளலாம். இவை இயற்கையின் விதி மட்டுமல்லாது அவரவர்களின் கர்மவிதியும் கூட. கர்மம் இல்லாதவன் இவ்வுலகில் இருக்கமாட்டான் என்பது இதற்கு பெரும் விளக்கமாகும். இதனை நன்கு உணர்ந்து செயல்படுவீர்களாக.