அஸ்தினாபுரம் அரண்மனை மாடத்தில் இருந்து அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் திரௌபதி. ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர். விதவைகள் அதிகமாக இருந்தனர். அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்டாள் திரௌபதி. இவை அனைத்திற்கும் தானே காரணம் என்று அவளது மனம் சொல்லியது. அப்போது கிருஷ்ணர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் அழத் தொடங்கினாள். அவளிடம் என்ன நடந்தது? என்று கேட்டார் கிருஷ்ணர். திரௌபதி அமைதியுடன் இருந்தாள். அவளின் எண்ணத்தை அறிந்த கிருஷ்ணர் பேச ஆரம்பித்தார்.
திரௌபதி விதி மிகவும் கொடூரமானது. நாம் நினைப்பது போல் வேலை செய்யாது. நம்முடைய செயல்கள் பேச்சுகள் சிந்தனைகளுக்கு ஏற்ப அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது. முடிவுகளையும் மாற்றுகிறது. நீ பழிவாங்க நினைத்தாய் வெற்றி பெற்றாய். துரியோதனனும் துச்சாதனனும் மட்டுமல்ல. அவர்களை சார்ந்திருந்த கௌரவர்கள் அனைவரும் மடிந்து விட்டனர். இப்போது என் வருத்ததுடன் இருக்கிறாய். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார். அதற்கு திரௌபதி என் காயங்களைத் ஆற்ற வந்தீர்களா அல்லது அதன்மீது உப்பு தூவ வந்தீர்களா? என்றாள். அதற்கு கிருஷ்ணர் திரௌபதி உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன். உனது தொலை நோக்கு பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன் என்றார். இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பா என்று கேட்டாள். இல்லை திரௌபதி நீ மட்டுமே காரணம் என்று கருதாதே. ஆனால் நீயும் ஒரு காரணம் என்றார். உன் செயல்களில் நீ கொஞ்சம் தொலை நோக்கு பார்வையைக் கொண்டிருந்தால் நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய் என்றார்.
நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா என்று கேட்டாள். நீ நிறைய செய்திருக்க முடியும். உனது சுயம்வரம் நடந்த போது கர்ணனை அவமானப்படுத்தாமல் போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்க கூடும். அதற்குப் பிறகு குந்தி உன்னை ஐந்து கணவர்களுக்கு மனைவியாக்கும்படி கட்டளையிட்டதை அப்போது நீ ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். அதற்கு பிறகு உன் அரண்மனையில் பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று துரியோதனனை அவமானப்படுத்தினாய். அவ்வாறு நீ சொல்லாதிருந்திருந்தால் நீ மானபங்கப்பட்டிருக்க மாட்டாய். அப்போதும் ஒருவேளை சூழ்நிலைகள் வேறு விதமாக இருந்திருக்கும். நம் வார்த்தைகள் கூட பல நேரங்களில் பல விளைவுகளுக்கு காரணமாகி விடும் திரௌபதி. பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு யோசித்து சிந்தித்து யாருடைய மனமும் காயம் அடைந்து விடுகிறதா என்று பார்த்து பேசுதல் வேண்டும். இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டு மல்ல உனது சுற்றுப் புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும் என்றார். திரௌபதியின் மனம் தனது தவறை சிந்தித்தது. சிறிது ஆறுதல் அடைந்து அமைதியானாள்.
மனிதனின் பற்களில் விஷமில்லை. ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே. எனவே வார்த்தைகளை அறத்துடன் பயன்படுத்த வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தாதபடி சிந்தித்து பேச வேண்டும். நல்லதை நினைத்து நல்லதை பேசி நல்லதை செய்தால் விதி நல்லதை நடந்திக் கொடுக்கும். இந்த கருத்து மகாபாரதம் கதைக்குள் மறைந்திருக்கிறது.