ஆபஸ்தம்பர்

பிரம்ம புராணத்தில் ஆபஸ்தம்பரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். வேதங்களை நன்கு கற்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் சிரார்த்த கர்மங்களில் சிரத்தை உடையவராக இருந்து அவற்றை நல்ல முறையில் அனுஷ்டித்து வந்தார். சிரார்த்த காலங்களில் வேதங்களை நன்கு உணர்ந்த உத்தமமான அந்தணர்களை மட்டுமே அவர் அழைப்பது வழக்கம். வேறு யாருக்கும் உணவு கொடுக்க மாட்டார். ஒரு சமயம் சிரார்த்தம் செய்யும் போது உணவு கொடுக்க அவர் எண்ணியபடி ஒரு அந்தணர் கூட அவருக்குக் கிடைக்கவில்லை. ஆகவே சகடம் என்று சொல்லப்பட்ட ஒரு விதியைக் கடைப்பிடிக்க எண்ணினார். அந்த விதியின் படி கூர்ச்சத்தில் அந்தணர்களை ஆவாஹனம் செய்து சிரார்த்தம் செய்ய எண்ணினார். கூர்ச்சம் என்பது தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் ஒரு பொருள். தர்ப்பைப் புல்லால் ஆன இந்த பொருளை அந்தணராக பாவித்து அந்த பொருள் மீது உணவை வைத்து தனது சிரார்த்ததை முடிக்க அவர் எண்ணினார். அவரது இந்த எண்ணத்தை மகரிஷி ஆபஸ்தம்பர் அறிந்தார். இந்த பிராமணர் வேதங்களைக் கற்று மிகுந்த அறிவைக் கொண்டிருந்தாலும் அதன் உட்பொருளை உணரவில்லையே என்று அவருக்கு உணர்த்த வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். தானே ஒரு அந்தணர் வேடம் பூண்டு பிராமணர் வீட்டுக்கு வந்தார்.

அந்தணரை அமர வைத்து தானே பரிமாறினார் பிராமணர். வந்தவர் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். நல்ல பசியோடு இருக்கிறார் என்று எண்ணி பிராமணரும் கேட்கக் கேட்க உணவை இலையில் வைத்துக் கொண்டே இருந்தார். உணவை வைத்த நொடியில் காலி செய்தார் துறவி. பிராமணரின் மனதில் முதலில் இருந்த கணிவு மறைந்து இப்போது ஏளனம் குடிகொண்டது. அதைத் தன் செயல்களில் காட்டினார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாத துறவி இன்னும் சாப்பாடு போடு இன்னும் போடு என்று கேட்டார். அபரிதமாக சாப்பிட்டும் திருப்தி அடையாதவரைப் பார்த்த பிராமணர் மனதில் இருந்த ஏளனம் மறைந்து தொல்லை கொடுக்கிறாரே என்று வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தார். சமைத்தவை எல்லாம் காலியாகிவிட்டன. இன்னும் வேண்டும் கொண்டு வா என்று துறவி கேட்கவே பிராமணரின் மனதில் இருந்த வெறுப்பு மறைந்து கோபம் தலை தூக்கியது. காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டுவந்து இலையின் மேல் கவிழ்த்து திருப்தி ஆயிற்றா என்று கேட்டார்.

உணவை தானம் செய்கின்றவர் எப்போதும் சாப்பிட்டு முடித்ததும் திருப்தியா என்று கேட்கவேண்டும். சாப்பிட்டவர் திருப்தி என்று மூன்று முறை சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் சிரார்த்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று பொருள். துறவி இப்போது ந என்ற ஒரு எழுத்தை சொன்னார். ந என்றால் பூர்ணமாகவில்லை என்று பொருள். பிராமணருக்கு கோபம் தலைக்கேறியது. நீங்கள் கேட்கக் கேட்க உணவை கொண்டுவந்து கொட்டினேனே. மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு பூர்ணமாகவில்லை என்று சொல்லி என்னை அவமானப்படுத்தி நான் செய்த சிரார்த்தத்தையும் கெடுத்து விட்டாரே என்று கோபத்துடன் கத்தினார். கோபத்தில் துறவிக்கு சாபம் கொடுக்க கையில் நீரை எடுத்து மந்திரத்தை சொன்ன பிராமணர் வந்தவரின் தலையில் அந்த தண்ணீரை எறிந்தார். வந்தவர் தன் கையை அசைக்க பிராமணர் மந்தரித்து எறிந்த நீரானது அந்தரத்தில் அப்படியே நின்றது. பிராமணர் இதைப் பார்த்து பிரமித்து நின்றார். தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல தன்னை விட உயர்ந்தவர் என்பதை அறிந்து சுவாமி நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்? என்று பயத்தோடு கேட்டார் பிராமணர்.

நான் ஒரு முனிவன். நான் அதிகம் உண்டதால் என்னை ஏளனம் செய்தாய். உன் பார்வைகளாலும் செயல்களாலும் என்னை அவமதித்தாய். ஒவ்வொரு முறை நீ சிரார்த்தம் செய்யும் போதும் அந்தணர்களுக்கு மட்டுமே உணவு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாய். அது தவறு. உணவு கொடுக்க நினைக்கும் போது யாராக இருந்தாலும் பசியோடு இருக்கிறார்களா என்று பார்த்து உணவு கொடுப்பதே சிறப்பு. சிரார்த்தத்திற்கு சாப்பிட வருபவர்களிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை சாப்பிட வருபவர்களிடன் வைத்து இறைவன் உன்னிடம் அனுப்புகிறான் என்பதை மறந்து நீ நடந்து கொள்கிறாய். உனக்குப் புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். சிரார்த்தத்தை பய பக்தியுடன் கோப தாபங்களை விட்டுச் செய்ய வேண்டும் அப்போதுதான் சிரார்த்தம் முழுமையாக பித்ருக்களுக்கும் சென்று சேரும். உனக்கும் பலனைத் தரும். அதனை விட்டு கடமைக்காக செய்தால் யாருக்கும் பலன் இல்லை. மாறாக உனக்கு பாவம் வந்து சேர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு என்பதைத் தெரிந்து கொள் என்றார். அதற்கு பிராமணர் சுவாமி என் தவறை நான் உணர்ந்து கொண்டேன் மன்னியுங்கள். இனி இம்மாதிரி தவறுகளைச் செய்யமாட்டேன். இப்போது நான் செய்த சிரார்த்தம் பூர்ணமாகவில்லையே அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு முனிவர் நான் ‘ந’ என்று மட்டும்தான் கூறினேன். அப்படி என்றால் சிரார்த்தம் பூர்ணமாகாமல் நிற்கிறது என்று மட்டுமே பொருள். பூர்ணமாகாமல் போய் விட்டது என்று பொருள் அல்ல. ஆகவே அடுத்து உணவிற்கு வருபவர்களை உனது முதாதையராக கருதி சேவை செய்து உணவு கொடு. அப்போது உனது சிரார்த்தம் பூரணமாகும் என்று சொல்லி அங்கிருந்து சென்றார். முனிவர் சொன்னபடியே உடனடியாக உணவு தயாரித்து வந்தவர்களுக்கு சிரத்தையும் உணவு பரிமாறி தனது சிரார்த்தத்தை முடித்தார் பிராமணர்.

நீரை அந்தரத்தில் நிறுத்தியதால் அதிதியாக வந்த முனிவர் ஆபஸ்தம்பர் என்று அழைக்கப்பட்டார். ஆப என்றால் நீர். நீரை அந்தரத்தில் நிற்க வைத்ததினால் அவர் ஆப ஸ்தம்பர் என்ற பெயரைப் பெற்றார். இவர் எழுதிய நூலுக்கு ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் என்று பெயர். இது கிருஷ்ண யசூர் வேதத்தின் தைத்திரியக் கிளையில் அமைந்த மூன்று தர்மசாத்திர நூல்களில் ஒன்றாகும். ஆபஸ்தம்ப தர்மசூத்திர நூலில் ஒரு பகுதியே கௌதம தர்ம சூத்திரம் ஆகும். இந்த நூல் ஆபஸ்தம்ப சிரௌதசூத்திரம் மற்றும் ஆபஸ்தம்ப கிரகாயசூத்திரம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது. தர்ம சாத்திர நூல்களில் ஆபஸ்தம்ப சூத்திரம் தற்போதும் இந்துக்களின் சமயம் மற்றும் திருமணச் சடங்குகளில் நடைமுறையில் உள்ளது.

ஹரிஹரன்

ஹரிஹரன் என்பது சைவ வைணவ நெறிகளுக்கிடையிலான ஒற்றுமைக்கு சான்றாக உள்ள இறைவனின் திருவுருவம். இந்தத் திருவுருவம் சங்கரநாராயணன் என்றும் அழைக்கப்படுகின்றது. வலப்புறம் சிவனின் அம்சங்களும் இடப்புறம் திருமாலின் அம்சங்களும் இத்திருமேனியில் காணப்படும். 4 அடி உயரமுள்ள இந்த சிற்பம் உள்ள இடம் கோவா ஸ்ரீ மஹாலசா நாராயணி கோயில்.

விபீஷணனின் தாய்

இராமரை விருந்தினராக இலங்கைக்குள் அழைக்க வேண்டும் என்று இலங்கைக்கு அரசனான பின் விபீஷணன் விரும்பினார். அப்போது அவருக்கு ஒரு சந்தேகமும் அவனுக்குள் எழுந்தது. தன்னையும் மனைவியையும் பிரித்த இராவணனின் நாட்டுக்குள் நுழைய இராமர் சம்மதிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இருந்தாலும் தன்னை மன்னனாக ஆக்கிய ஆற்றல் மிக்க தலைவனுக்கு மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். தயக்கத்துடன் தனது விருப்பத்தை இராமரிடம் தெரிவித்தார். எனக்கும் உன் நாட்டைப் பார்க்க விருப்பம் தான் விபீஷணா என்று இராமர் உடனே வர சம்மதித்தார். அனுமன் அங்கதன் இலட்சுமணன் ஆகியோர் உன் நாட்டின் வனப்பையும் எழிலையும் வர்ணித்தபோது எனக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது என்றார் ராமன். விபீஷணன் நெகிழ்ந்து இராமனுக்கு வழிகாட்டியபடி முன்னே சென்றார். இராமருடன் மற்றவர்களும் பின்தொடர்ந்தார்கள்.

இராமர் இலங்கையின் அவல நிலை கண்டு தன்னால்தானே இப்படி நேர்ந்தது என வருத்தத்துடன் நடந்து சென்றார். பிரமாண்டமான மாளிகைகள் பொலிவு குறைந்து காணப்பட்டன. ஆள் அரவம் இல்லாத அரண்மனைகள் வருத்தப்பட வைத்தன. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் சிலர் தம்மை கண்டதும் வணங்குவதை கவனித்த ராமர் சற்றுத் தொலைவில் யாரோ ஒரு பெண் ஓடி ஒளிவதையும் கண்டார். தன்னைக் கண்டதும் ஒருவர் மறைய முயற்சிப்பதைக் கண்டு திடுக்கிட்டான். இதனை கவனித்த விபீஷணன் இராமரிடம் இப்போது ஓடியது எங்கள் தாயார் என்றான். இதனைக் கேட்ட இராமர் அவர்கள் ஏன் பயந்தோட வேண்டும்? நான் அந்த அளவுக்கு இந்தப் போரில் உயிர்ச்சேதம் புரிந்து விட்டேனா? என்று குரல் தழுதழுத்தவாறு கூறினார். இதற்குள் விபீஷணனைச் சேர்ந்த சிலர் அவரது தாயாரை அழைத்து வந்து ராமன் முன் நிறுத்தினார்கள். அம்மா மன்னியுங்கள். போர் தர்மப்படி பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் உடல்குறை உள்ளவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். நிராயுதபாணியாக நின்ற இராவணனைத் தாக்குவதும் தர்மம் அல்ல என்று உணர்ந்து நாளை போரிட வருமாறு வாய்ப்பு கொடுத்தேன். அப்படிப்பட்ட நான் உங்களுக்குத் துன்பம் தரமாட்டேன் என்னை நம்புங்கள் என்றான் ராமர்.

இராமா உனக்கு அளவு கடந்த துன்பத்தைக் கொடுத்த இராவணனின் தாயார் என்ற குற்ற உணர்வால்தான் சந்திக்க முடியாமல் மறைந்து கொள்ள முயற்சித்தேன் என்பது ஒரு காரணம். உன் வீர தீரம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்ணாகப் பிறந்ததாலும் அரண்மனையிலிருந்து வெளியே வரமுடியாத பாரம்பரியம் கட்டுப்பாட்டாலும் உன் மகிமையை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனாலும் உன் வீரச்செயல்கள் என் காதுகளை எட்டத்தான் செய்தன. அதே சமயம் என் மகன் இராவணன் உனக்கு துன்பம் இழைத்ததையும் நன்கறிவேன். ஆணவம் மிகுந்த அவனைப் பெற்றதற்காக அவமானப்படுகிறேன். இது ஒரு புறம் இருந்தாலும் நான் உன்னுடைய அடுத்தடுத்த வீர தீர பராக்கிரமங்களை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் கேட்டாவது இன்புற வேண்டும் என்பதற்காக நான் நீடித்து வாழ விரும்பினேன். உன் போர் தர்மத்தைப் புரிந்து கொள்ளாத உன் படையினர் யாராவது என்னைக் கொன்றுவிடக் கூடாது அல்லவா? அதனால் ஓடி ஒளிந்தேன் என்றார். இவரது பதில் அனைவருக்கும் திகைப்பைத் தந்தது. இராமர் அவளுடைய கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றி விட்டு அம்மா விதி நிர்ணயித்த காலம்வரை நீங்கள் நிம்மதியாக வாழலாம். கவலை வேண்டாம் என ஆறுதல் கூறினார். விபீஷணா நீ ராவணனுக்கு அறிவுரை சொன்னபோது கேட்காத இராவணன் ஒருவேளை தாயார் சொல்லியிருந்தால் கேட்டிருக்கலாம். இவரை இனி நீதான் மிகுந்த பரிவு அக்கறையுடன் பாதுகாத்து வர வேண்டும் தாய்மையைப் போற்ற வேண்டும் என்றார் இராமர்.

இராமர் காலில் விழுந்த விபீஷணன் மாற்றாந்தாய் சொன்னார் என்பதற்காக காட்டுக்குப் புறப்பட்ட பண்பாளன் நீங்கள். தாய்க்கு உரிய மரியாதையையும் மதிப்பையும் அளிக்கத் தயங்காத அற்புத மகன் நீங்கள். உன்னுடன் இணைந்திருக்கும் நான் அந்த நற்பண்பை இழக்க மாட்டேன். இராவணனை எங்கள் தாயார் திருத்தவில்லையே என நான் இதுவரை ஆதங்கப்பட்டதில்லை. ஏனெனில் எனக்கு இராவணனின் முரட்டு குணம் தெரியும். என் தாயின் அன்புள்ளமும் தெரியும். அதனால் இராமா நீங்கள் எமது தாயாரைப் பற்றிய கவலை வேண்டாம். நான் அவரை கண்ணின் இமைபோலக் காப்பேன் என்றார். இராமரும் அவரைத் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.

யாருடைய துன்பம் அதிகம்

பாண்டவர்மார்கள் திரௌபதியுடன் வனவாச காலத்தில் காம்யகவனம் என்கிற வனத்தில் தங்கியிருந்தனர். பாண்டவர்களுக்கு தங்களப் போல் துன்பத்தை அனுபவித்தவர்கள் யாரும் இல்லை. துன்பத்தின் உச்சத்தை தாங்கள் அனுபவிக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். அப்போது சிவனிடம் வரம்பெற்று என்றும் சிரஞ்சீவி ஆக என்றென்றும் பதினாறு வயது என்ற வரத்தைப் பெற்ற பதினாறு வயதிலேயே இருக்கும் மார்கண்டேயர் அங்கே வந்தார். பாண்டவர்களை ஆசிர்வாதம் செய்தார். அப்போது யுதிஷ்டிரர் அவரை பார்த்து எங்களைபோல் இந்த உலகத்தில் துக்கங்களை அனுபவிப்பர்கள் யாராவது உண்டா? என்று கேட்டார். அதற்கு மார்கண்டேயரோ சிரித்துகொண்டே பேச ஆரம்பித்தார். ஒரு புறாவிற்காக தன்னுடைய உடல் பாகங்களை அறுத்தெடுத்து கொடுத்தவர் சிபிசக்கரவர்த்தி. அவரின் புத்திரன் அஜன் அவரின் புத்திரன் பத்து குதிரைகளையும் ஒரே நேரத்தில் பூட்டிகொண்டு தேரை செலுத்தும் அயோத்தி மகாராஜா தசரதன். அவரின் புத்திரனாகிய இராமர் தனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை பார்க்கும்போது உங்களின் துன்பங்கள் மிகவும் குறைவுதான் என்று சொல்லி முழு இராமயணத்தையும் பாண்டவர்களிடம் சொன்னார். இராமாயணம் முழுமையாக கேட்ட பாண்டவர்கள் முன்னோர்கள் அனுபவித்த துன்பத்தை பார்க்கும்போது தாங்கள் அனுபவிக்கும் துன்பமெல்லாம் ஒன்றும் இல்லை என்ற மனத் தெளிவில் துவைதவனம் என்கிற வனத்தில் வனவாசத்தை தொடர தங்களின் பயணத்தை தொடர்ந்தார்கள்.

முக தரிசனம்

சிதம்பரம் நடராஜருக்கு வருடத்திற்கு இரண்டு முறைதான் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அலங்காரத்தில் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். ஒருவர் நடனமாடிக் கொண்டே இருந்தால் அவரின் முகத்தை சரியாக பார்க்க முடியாது. சதாசர்வ காலமும் நிற்காமல் நடனமாடும் நடராஜரின் முகத்தை அனைவரும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அலங்காரமானது செய்யப்படுகிறது.

பஞ்சாட்சரம்

பஞ்ச அட்சரம் பஞ்சாட்சரம் ஆகும். பஞ்ச என்பதும் அட்சரம் என்பதும் சம்ஸ்கிருத சொல்லாகும். பஞ்சாட்சரம் இந்த சமஸ்கிருத வார்த்தையை தமிழில் ஐந்தெழுத்து மந்திரம் என்று சொல்கின்றோம்.

ஐந்தெழுத்து மந்திரம் என்பது என்ன?

நமசிவய ஐந்தெழுத்து மந்திரமாகும்.

உயிர்மெய் எழுத்துக்களை வல்லினம் மெல்லினம் இடையினம் என பிரிக்கலாம்.

கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்.

ந ம சி வ ய எழுத்துக்களில் முதல் இரண்டு எழுத்துக்கள் மெல்லினம். மத்தியில் உள்ள ஒரேழுத்து வல்லினம். இறுதி இரண்டு எழுத்தும் இடையினம். ஐந்து எழுத்துக்களும் ஐந்து பூதங்களை குறிக்கும்.

ந – நிலம்
ம – நீர்
சி – நெருப்பு
வ – காற்று
ய – வானம்

மண் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற இந்த ஐந்து பூதங்களின் ஆற்றலும் இந்த நமசிவய மந்திரத்தில் உள்ளது என்பதை ஞானிகள் அறிந்து கொண்டார்கள். அவ்வளவு எளிதில் யாராலும் உணர முடியாத இறைவனை நமசிவய என்று உணர்ந்து சொன்னால் இந்த ஒரு சொல் இறைவனை உணர வைப்பதை ஞானிகள் உணர்ந்து வெளிப்படுத்தினார்கள். இதனை ஆழ்ந்து தியானித்து கவனித்தால் புரியும். மேலும் இந்த ஐந்து எழுத்துக்களின் உயிர்த் தன்மையை இறைவனின் அருளால் உணர்ந்து கொண்ட ஞானிகள் நமசிவய எனும் திரு ஐந்தெழுத்து மந்திரத்தை தனது சீடர்களுக்கு உபதேசம் செய்தும் பல பாடல்களின் வழியாக மக்களுக்கும் உபதேசித்தார்கள்.

நிலமும் நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கிறது. வானமும் காற்றும் எப்போதும் ஒன்றாக இருக்கிறது. நெருப்பு இந்த நான்கின் நடுவிலும் இயற்கைக்கு ஏற்றவாறு தனித்தன்மையாக குறைந்த வெப்பமான குளிர்ச்சியாகவும் அதிகபட்ச வெப்பமாகவும் இருக்கிறது. ஆகாயம் காற்று நெருப்பு நீர் மண் இவைகளின் சக்தியை அளவிட முடியாது. இவைகள் தனித்தனியே இந்த உலகத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. ஐந்தும் ஒன்று சேர்ந்தால் அழிவின் விளைவை சொல்லவும் இயலாது. இதனை அறிந்த ஞானிகள் இதனை பஞ்ச பூதங்கள் என்று வகுத்து வைத்தார்கள்

மனிதர்கள் அனைவருக்குள்ளும் சரிவிகிதத்தில் பஞ்சபூதம் எனப்படும் இவை இருப்பதில்லை. மனிதர்களின் ஆசைகள் கர்மாக்களுக்கு ஏற்ப ஒன்று அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். இதனால்தான் மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான குணங்கள் இருப்பதில்லை. சிலர் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். சிலர் கோபத்தின் உச்சியிலேயே இருப்பார்கள். சிலர் மோசமான சிந்தனையாளராக இருப்பார்கள். சிலர் மிக உயர்ந்த ஞானத்தினை இயல்பாக பெற்றிருப்பார்கள். காரணம் இந்த பஞ்சபூதங்களின் சேர்க்கை விகிதாசாரம் கூட்டியோ குறைத்தோ சமமாகவோ அமையும் போது மனிதன் அதற்கேற்ப பிறக்கின்றான். அது மனிதனின் கர்மாவை பொறுத்தே அமைகின்றது

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கும் மனிதனின் மூலக்கூறுகளில் உள்ள குறைகள் நீங்குகிறது. அவனது உடம்பில் உள்ள பஞ்சபூத ஆற்றல் அதிகரிகிறது. பஞ்ச பூதங்களின் ஆற்றல் அதிகமான மனிதன் மிக ஆற்றல் மிக்க உணர்வுகளால் தூண்டப்பட்டு மேன்மை கொண்டவனாக மாற்றம் காணுகின்றான். அவனுக்கு உலகின் இயக்கமும் அந்த இயக்கத்தின் காரணமும் புரிகின்றது. தான் யார் என அறிகின்றான். தான் யார் என அறிந்தவன் இறைவனை அறிந்தவனாகின்றான். இறைவனை அறிந்தபின் உலகில் அறிவதற்கு ஏதுமில்லை. அவன் தாம் கண்டதை உலகிற்கு எடுத்து சொல்கின்றான். அவர்களைத்தான் சாதாரண மக்கள் ஞானிகள் என்கிறார்கள். ஆகவே நமசிவய மந்திரத்தை சொல்வோம். ஞானம் பெறுவோம். இறைவனை உணர்வோம்.

ஞான குரு

கேள்வி: ஒருவனுக்கு உண்மையான ஆன்மிக தேடல் இருந்தால் அதற்கான குரு நாதர் அவனைத் தேடி ஒரு நாள் வருவார் என்று சொல்வதெல்லாம் உண்மையா? ஆன்மிக தேடல் கொண்ட ஒருவனை வேறு ஒரு இடத்தில் இருக்கும் ஞான குருவால் உணர முடியுமா?

புத்தர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு

புத்தர் ஒரு கிராமத்திற்கு உபதேசம் கொடுக்க ஒருநாள் மாலை நேரத்தில் வந்திருந்தார். கிராமத்து மக்கள் அனைவரும் கூடி விட்டனர். புத்தர் அந்த சின்ன கிராமத்திற்கு வருவார் என்று அந்த கிராமத்து மக்கள் எவருமே எதிர்பார்க்கவில்லை. அதனால் கிராமத்தில் உள்ள அனைவரும் அங்கு கூடியிருந்தார்கள். இருப்பினும் புத்தர் யாருக்காகவோ காத்திருந்தார். அங்கிருந்த செல்வந்தர் ஒருவர் புத்தரின் அருகில் வந்து ஐயா நீங்கள் யாருக்காக காத்திருக்கிறீர்கள்? இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் இங்கு வந்து விட்டார்கள். இனி வருவதற்கு எவருமில்லை. உங்களது உபதேசத்தை ஆரம்பிக்கலாமே என்றார். புத்தர் புன்னகைத்தார். பிறகு அனைவருக்கும் கேட்கும்படி சொன்னார். இந்த இடத்திற்கு உபதேசம் செய்ய யாருக்காக வந்தேனோ அவர் இன்னும் வரவில்லை. நான் அவருக்காக காத்துக் கொண்டிருக்கத்தான் வேண்டும். எனக்கான கடமை இது. நீங்கள் அனைவரும் எனது உபதேசத்தை கேட்பீர்கள். ஆனால் அதில் உள்ள உண்மையை தேடுவீர்களா என்றால் அது கேள்விக் குறிதான். ஒரு ஜீவன் ஞானத்தேடலில் இந்த ஊரில் இருக்கிறது. அதன் உயிர் அலை இன்னும் இங்கு வரவில்லை ஆகவே காத்திருக்கிறேன் என்றார். அவர் சொன்னதை கேட்டதும் அங்கிருந்தோர் சங்கடப்பட்டனர். ஏனெனில் அந்த கிராமத்தில் உள்ள பணக்காரர்கள் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பக்திமான்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தாகள். பிறகு யாருக்காக புத்தர் காத்திருக்கிறார்? என்று வருபவரை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அவசர அவசரமாக ஒரு ஏழை குடும்பத்துப் பெண் வந்து அந்த கூட்டத்திற்குள் அமர்ந்து கொண்டாள். அவளது எஜமான் அந்த செல்வந்தர் கூட்டத்தின் முன் வரிசையில் தான் அமர்ந்திருந்தார். புத்தரை பார்க்க போக வேண்டும் என்று அவள் அவரிடம் அனுமதி கேட்டதும் நான் சொன்ன வேலையை முடித்து விட்டு பிறகு எங்கு வேண்டுமானாலும் போ என்று அலட்சியமாக சொல்லி விட்டார். வேலையை முடித்து விட்டு இப்போதுதான் வந்திருக்கிறாள். அந்தப் பெண்ணை பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு புத்தர் தனது உபதேசத்தை ஆரம்பித்தார். உடனே அந்த செல்வந்தர் புத்தரிடம் இவளுக்காகவா இத்தனை நேரம் காத்துக் கொண்டு இருந்தீர்கள்? இவள் எனது வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி என்றார் அலட்சியமாக. அதற்கு புத்தர் தனது புன்னகை மாறாமல் பதிலளித்தார். இவள் படிக்காதவள் ஒரு ஏழை கூலித் தொழிலாளி என்பதை யாம் அறிவோம். நான் பக்கத்து கிராமத்தில் இருக்கும்போது யாரோ என்னை அழைப்பதை போல உணர்ந்தேன். இனம் புரியாத ஒரு ஆன்மிகத் தேடல் அந்த அழைப்பில் மறைந்திருப்பதையும் உணர்ந்து கொண்டேன். இந்த கிராமத்தில் இவள் மட்டுமே எனது உபதேசத்தை கேட்டு கடைபிடித்து அதை உணர்ந்து கொள்ளும் தன்மையில் இருக்கிறாள். இவளுக்காகத்தான் நான் இந்த கிராமத்திற்கே வந்தேன். இந்த பெண்ணினுடைய ஞானத்தேடல் என்னை இங்கே வரவழைத்து விட்டது என்றார் புத்தர். பிறகு தனது உபதேசத்தை அந்த பெண்ணை பார்த்தபடியே ஆரம்பித்தார். அந்த பெண்ணும் கும்பிட்ட கரத்துடன் கண்கள் கசிய புத்தரை பார்த்தபடியே அவர் சொல்வதை கேட்டு அதன் ஆழ்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டாள்.

ஆன்மிக ஞானத்தேடலுக்கு ஆண் பெண் அல்லது உயர்வு தாழ்வு அல்லது வயது என்ற எந்த விதமான வேறுபாடுகளும் இல்லை. ஞானத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் திறந்த அமைதியான மன நிலையே வேண்டும். அவரே சிறந்த சீடர். ஞான குருநாதர் என்பவர் எப்போதுமே ஆன்மிக தேடல் உள்ளவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை தேடி அவர்களுக்குத் தேவையானதை கொடுத்துக் கொண்டே இருப்பார் அவரே ஞான குரு.

சிவலிங்கத்தை கார்க்கோடகன் பூஜிக்கும் சிற்பம்

அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீட்சித்து மகாராஜா ஒருமுறை வேட்டையாடக் காட்டுக்குச் சென்றபோது மரத்தடியில் தவம் புரிந்துகொண்டிருந்த முனிவரின் கழுத்தில் இறந்து கிடந்த பாம்பு ஒன்றை எடுத்துப் போட்டான். இதை ஆசிரமத்திலிருந்த முனிவரின் மகன் கண்டுவிட்டார். தன் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாகப் போட்ட பரீட்சித்திடம் கோபம் கொண்டு என் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாகப் போட்ட நீ இன்னும் ஏழுநாளில் பாம்பு கடித்து இறப்பாய் என்று சபித்துவிடுகிறார். அதன்படியே பரீட்சித்து மகாராஜா ஏழாவது நாளில் கார்க்கோடகன் என்னும் பாம்பு கடித்து இறந்து விட்டார். அஷ்ட நாகங்களில் ஒருவனும் நாகங்களின் தலைவனுமான கத்துருவின் மகன்தான் கார்க்கோடகன்.

முனிவரின் மகன் இட்ட சாபத்தின் காரணமாக தன் தந்தை இறந்துவிட்ட தகவல் பரீட்சித்து மகாராஜாவின் மகன் ஜனமேஜயனுக்குத் தெரிய வந்தது. எனவே அவன் ஒரு யாகம் செய்து உலகத்திலுள்ள அனைத்து வகைப் பாம்புகளும் யாக அக்னியில் விழுந்து பொசுங்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டான். அந்த யாக அக்னியில் விழாமல் கார்க்கோடகன் பாம்பு மட்டும் எப்படியோ தப்பித்து விட்டது. தப்பிச் சென்ற கார்க்கோடகனால் தனக்கு ஆபத்து எதுவும் வரக் கூடாது என்பதற்காக ஜனமேஜயன் மகா விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்தான். அவன் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாவிஷ்ணு சோழ மண்டலத்திலுள்ள காமரசவல்லி என்னும் தலத்தில் கார்க்கோடகனால் வழிபடப்பெற்ற அருள்மிகு பாலாம்பிகா சமேத அருள்மிகு சௌந்தரேஸ்வரரை வழிபட்டால் கார்க்கோடகனால் உனக்கு எந்த ஆபத்தும் வராது என்று கூறினார். அதன்படியே ஜனமேஜயன் காமரசவல்லிக்கு வந்து அருள்மிகு சௌந்தரேஸ்வரரை பக்தியுடன் வழிபட்டான். ஜனமேஜயனின் பக்தியில் மகிழ்ந்த ஈசன் இனி உன் வம்சத்துக்குக் கார்க்கோடகனால் எந்த ஆபத்தும் நேராது என்று வரம் கொடுத்ததுடன் அந்தத் தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு சகல விதமான சர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்றும் அருள்புரிந்தார். ஜனமேஜயன் பூஜித்த இந்த ஈசனை கார்க்கோடகனும் பூஜித்ததால் ஈசனுக்கு கார்க்கோடகன் என்ற திருப்பெயரும் பெற்றது. இந்த சிற்பம் உள்ள இடம் சௌந்தரேஸ்வரர் திருக்கோயில் காமரசவல்லி அரியலூர்.

அறிந்து கொள்வோம்

  1. சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டு அவை புண்ணியமும் பாவமுமாகும் ஆகும்.

ஒருவர் தான் செய்த தான தருமங்கள் தான் சேர்த்து வைத்திருக்கும் புண்ணியங்களை தானே அடுத்தவர்களிடம் எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும். ஒருவர் தான் செய்த பாவங்களை தானே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும். குறைய வேண்டியது பாவம் நிறைய வேண்டியது புண்ணியம். ஆகவே செய்த தானதர்மங்களை சொல்லக் கூடாது. பாவத்தைக் சொல்ல வேண்டும்.

  1. இறைவனுடைய கருணையையும் அன்பையும் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.

துன்பத்தில் துடிக்கிற உயிர்களிடம் அன்பு செய்து கருணையோடு அவற்றின் துன்பத்தை போக்குவதற்கான தன்னால் இயன்ற செயலை செய்தால் இறைவனும் அவர்களின் மேல் அன்பு செலுத்தி கருணையோடு இருப்பார். அன்பால் அன்பையும் கருணையால் கருணையையும் பெறலாம்.

  1. 1. மன அழுக்கு 2. வாயழுக்கு 3. மெய்யழுக்கு என்று அழுக்குகள் மூன்று வகைப்படும்

1 பொறாமை ஆசை கோபம் ஆகியவை மன அழுக்கு ஆகும். இந்த மன அழுக்கை தியானம் என்ற நீரால் கழுவி தூய்மை செய்யலாம்.

2 பொய் புறங்கூறல் அடுத்தவர் மனதை காயப்படுத்தும் வார்த்தைகள் பேசுதல் ஆகியவை வாயழுக்கு ஆகும். வாயால் இறைவனை போற்றித் துதித்துப் பாடி இந்த வாயழுக்கை சுத்தம் செய்து நீக்கலாம்.

3 மெய் என்றால் உடல் என்று பொருள். போதைப் பொருள்கள் உபயோகித்தல் கொலை புலால் உண்ணுதல் களவு ஆகிய இவை மெய்யழுக்கு ஆகும். இந்த மெய்யழுக்கை உடலால் இறைவனுக்கு உழவாரப்பணி செய்து அர்ச்சனை என்னும் நீரால் கழுவி சுத்தம் செய்யலாம்.

சீதா குண்டம்

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நைமிசாரண்யத்தில் சீதா குண்ட் என்று ஒரு பிரபலமான குளம் உள்ளது. சீதா தேவி நீராடிய இடம் என்று நம்பப்படுகிறது. புகழ்பெற்ற ஆன்மிக புனித தலமாக உள்ளது.